Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபச்சை இரத்தம்
விவரணப் படம்
 

(வார்த்தைகளால் ஒரு முன்னோட்டம்)

உலக வரலாறு உழைப்பினால்தான் எழுதப்படுகிறது. உழைப்பாளியினால் தான் எழுதப்பட வேண்டும். மாறாக, மன்னர்களின் படையெடுப்பாகவும் பயணிகளின் வருகையாகவும் கண்டுபிடிப்புகளாலும், தனி மனித வீரமாகவும், சுருக்கமாக கூறினால் மேன்மக்களின் வரலாறாகவே வரலாறு புனையப்பட்டிருக்கிறது. உண்மைகள் ஓரிரு வரிகளிலும் பொய்கள் ஓராயிரம் அழகியல் சொற்களாலும் எழுதப்படும்போது உண்மையைத் தேடி எல்லோராலும் பயணிப்பது கடினம்.

உலகத்தின் உதடுகளில் உற்சாக பானமாய் பருகப்படுகிற தேநீரில் சாயமாய் கலந்திருக்கிற தாயகம் திரும்பிய மக்களின் உழைப்பின் சோக வரலாறும் அப்படித்தான்.

1800...... களில் மழையின்மை, பொருளாதார நெருக்கடி, பசி, பட்டினி போன்றவை தோற்றுவித்த 'நாடும் வேலையும் தேட' நினைத்தவர்களுக்கு வெள்ளைக்காரரின் நடமாடும் வெலை வாய்ப்பு ஏஜென்சி காங்காணிகளிடம் ஆள் சேர்த்தது.
 

கால்நடையாய் ராமேஸ்வரம் - பிறகு கொழும்பு மன்னார் வழியாக மலையை நோக்கிய நடைபயணம், கமிஷனுக்காக ஆசைப்பட்டு கங்காணியால் ஏற்றப்பட்ட அதிகமான ஆட்களை இடையிலேயே மூழ்கி குறைத்ததும் உண்டு.
 

பாதைகள் புதிதாய் செப்பனிட்டு, விலங்குகளுக்கு உணவாக பலரை பலியிட்டு, எஞ்சியவர்கள் தன் உயிரையே சிறுக சிறுக உரமிட்டு பசுமை படர்ந்து இருக்கிர இடங்கள் தான் இலங்கையின் இன்றைய மலையகம்.

புராணத்தில் எரிந்து போன ஒரு தேசத்தை மனிதர்களுக்கான பசுமையாய், வார்த்தெடுத்து மலைய மக்களே! நகரின் உயர்ந்த கட்டிடங்கள், தொடர் வண்டியின் பாதைகள், சுரங்கப் பாதைகள், பாலங்கள், இவற்றின் அடித்தளமாய் புதைக்கப்பட்டிருக்கிறது மலைய மக்களின் ஆயிரக்கனக்கானவர்களின் உயிர்கள்.
 

ஆனால் கிடைத்ததோ, தோட்டக்காட்டான், கள்ளத்தோணி, கப்பல்காரன் என்கிற ஏளனப் பட்டங்களே!

வாக்குரிமை, வாழ்வுரிமை என உரிமைக்குரல்கள் உயர்ந்தபோதெல்லாம் சிங்களக் காடையர்களால் குரல் நெறிக்கப்பட்டனர். மலையகத் தலைவர்கள், தொண்டைமான் வகையறாக்களும் பதவிகளில் சுகபோகத்தில் விலைபோயினர். தேசிய உற்பத்தியில் மூன்றில் இரண்டு பகுதியை ஈட்டிக் கொடுத்த மலையக மக்கள்தான். 1948ல் பிரஜா உரிமை மறுக்கப்பட்டதால் நாடற்றவர்கள் ஆயினர். பூர்வீக இலங்கை தமிழரின் மெளனமும், சிங்களப் பேரினவாதிகளின் வன்செயல்களும் கொஞ்சம் கொஞ்சமாய் எஞ்சியவர்களை நடைபிணமாக்கியது.

இறுதியாய், 1964ல் கையெழுத்தான் சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தமோ ஐந்தரை இலட்சம் தமிழர்களை நாடு கடத்த வழி கோரியது. எந்த கடற்கரையிலிருந்து கட்டிய துணிமணிகளுடன் புறப்பட்டார்களோ அதே கரையில் நாடற்றவர்களாக இலங்கையின் கப்பல்கள் இறக்கவிபட்டன.

மீண்டும் தாயகத்திற்கே வந்தனர். வந்த இடத்தில் சொந்த நிலங்கள் சொந்தங்களின் வசமாயிருந்தது. விருந்தும் மருந்தும் மூன்று நாட்களைக் கூட பொறுக்கவில்லை. கண்டிக்காரன், சிலோன்காரன், கள்ளத்தோணி என சொந்தங்களாலேயே, தமிழர்களாலேயே அவமானப்படுத்தப்பட்டனர்.

மீண்டும் தன் தாய் நிலப்பகுதிக்கே (நீலகிரி) இடம் பெயர்வு. அகதி, புலையர் என்கிற பெயரோடு பல ஆண்டுகள் கொத்தடிமை வாழ்க்கை. மாட்டுத் தொழுவத்தில் பலருக்கு வீடு. சொந்தமாக ஒரு குடிசை அடிக்க முற்பட்டபோது இரவோடு இரவாக குடிசைகள் பிரித்தெடுக்கப்பட்டன. இருப்பினும் புறம்போக்கில் நீரடி நிலங்கள் கசங்கிய கைக்குட்டையாய் ஆங்காங்கே விரிந்து கிடக்கின்றன காலனிகள். பிளாட்பார பிச்சைக்காரன் போலிருந்த தேயிலைத் தோட்டங்களை தங்கள் உதிரத்தால் உரமிட்டு வளர்த்தவை தான் பசுமை போர்த்தியிருக்கிற இன்றைய நீலகிரியின் தேயிலைத் தோட்டங்கள். எதிரே வெண்பட்டு துணிகளாய் ஜொலிக்கிற ஹட்டிகள், தேயிலை உற்பத்தியின் நூற்றாண்டு கால அனுபவமும், கடின உழைப்பையும் கட்டியம் கூறுபவைகளாக மலைகள் பசுமை போர்த்தி நிற்கின்றன.

தாயகம் திரும்பிய மக்களோ புலையர், காலனிக்காரன் என்கிற ஏளனப் பெயரோடு.... குடிசைக்கும் ஒரு பட்டா இன்றி.... ஆரோக்கியமான சுகாதாரமின்றி... முறையான கல்வியின்றி... மலையின் மடிப்புகளில் அமிழ்ந்து கிடக்கின்றனர். பெரும்பாலானவர்கள் வாழ்க்கை அப்படித்தான் உள்ளது. தேயிலைத்தோட்ட வேலைக்கு சிலோன்காரன்தான் லாயக்கு என்று துவேசம் கொள்கிறவன் கூட மறுக்க முடியாத உழைப்பின் முகவரியைத் தவிர.

தாயகம் திரும்பியவர்கள் அவர்களின் நிதியிலேயே உருவாக்கப்பட்ட அரசு தேயிலைத் தோட்டம் அவர்கள் கையைவிட்டு போய்க்கொண்டிருக்கிறது. ரெப்கோ வங்கி முழுமையான வணிக வங்கியாகிவிட்டது. தொண்டு செய்ய முன்வந்த நிறுவனங்கள்()முன்னணியாளர்கள் ஒரு சிலர் மட்டும் வசதி வாய்ப்பை பெருக்கிக் கொண்டு 'பண்டுக்காக' இன்றளவும் இம்மக்களின் வறுமையை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கின்றனர். என்னதான் அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தினாலும் இம்மலை மாவட்டத்தை பொறுத்தவரை செயல்படுத்துவது அதிகாரிகளின் கையில்தான் உள்ளது. இம்மக்களின் விண்ணப்பங்கள் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டாலே பெரிய விஷயம்.

சுருக்கமாகச் சொன்னால் உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு உணவு, உடை, இருப்பிடம் என்கிற மனித இருப்பின் அடிப்படை கூட நிறைவேறாமல் மூன்று நூற்றாண்டுகள் தொடர்கிறது என்பது பேரவலம் தானே?

வெள்ளை ஏகாதிபத்தியம் தங்களின் வேலைக்காக உலகம் முழுவதும் இரண்டு விதமானவர்களை பிடித்துச் சென்றது. முதலில் கருப்பர், இரண்டாவது தமிழர்.

கருப்பர்கள் கூட ஆட்சியிலும் அதிகாரத்திலும், கருப்பு இலக்கியத்திலும் தங்களை பதிவு செய்துவிட்டனர்.

இம்மக்களுக்கு? தமிழகத்தைப் பொறுத்த வரை இன்னும் பெரும்பாலானவர்களின் உளவியல் கண்ணோட்டத்தில் நாடற்றவர்களே!

பசுமை படர்ந்த மலைகளும், வளைந்தோடுகிற சாலைகளும் விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும் பலருக்கு மகிழ்ச்சியை, உற்சாகத்தை பரவசத்தை தரலாம்.!

உலகத்து உதடுகளை தேநீர் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கலாம்! அது எங்கள் வியர்வை! வாழ்க்கையே எட்டாமல் மூன்று நூற்றாண்டுகளாய் தேயிலைத் தோட்டத்தின் தென்படாத குறுக்குப்பாதையைப் போல உழைப்பின் முகவரியற்றுப் போன தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதே இப்படத்தின் மையப்புள்ளி.

இயக்குநர்
தவமுதல்வன்
Cell: 98658 80160
E-Mail ID: davamudhalvan@yahoo.in
 

 
Related News
 • இணையதளப் படைப்புகளும் மலேசியத் தமிழரும்
  - சே. சுதா

 • பன்னாட்டுத் தமிழ் புதினங்கள்
  - தெ. வெற்றிச்செல்வன்

 • பெரியாரின் ரஷ்ய பயணமும் அரசியல் மாற்றமும் - இர. சாம்ராஜா

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World