Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueதிரையின்றி அமையாது உலகு
 

தமிழர்களை இன்று மூன்று திரைகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று நாம் திட்டமிட்டுp பார்க்கும் திரையரங்கின் பெரிய வெண் திரை. மற்றொன்று நாம் தேடிச் செல்ல வேண்டாத நம் வீட்டிற்குள் வீற்றிருந்து நாம் சாப்பிடும்போதும், ஒய்வெடுக்கும் போகும், பிற வேலைகளை செய்யும் போதும் நம் அக்கம் பக்கமாக இருந்து நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சிப் பெட்டியின் சிறிய திரை. இறுதியானது இருபத்து நான்கு மணி நேரமும் நம்மை விட்டுப் பிரியாத நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே மாறிப்போய்விட்ட, கழிவறைக்கும் கூட வரும் செல்பேசியின் மிகச்சிறிய கையடக்கத்திரை.

இம்மூன்று திரைகளுக்குள்ளும் மிக நெருக்கமான உறவு இருக்கிறது. ஆயினும் பெரிய வெள்ளித்திரையே மற்ற இரு திரைகள் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது எனலாம். அதே சமயம் மூன்று திரைகளுமே தங்களது வளர்ச்சிக்கு ஒன்றுக்கொன்று உதவிக் கொள்கின்றன.

திரைப்படம் தொடர்பான செய்திகளும், திரைப்பட நடிகர், நடிகையர் பற்றிய காட்சிகளும், திரைப்படக் காட்சிகளுமே தொலைக்காட்சியின் பெரும்பான்மை நேரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருப்பதையும் நாமறிவோம். அதே போல திரைப்படம், திரைப்பட நடிகர்கள் தொடர்பான குறுஞ்செய்திகள் செல்பேசியில் வந்து குவிவதையும் நாம் பார்க்கிறோம். அதுபோக, திரைப்படப் பாடல்களையோ, நகைச்சுவைக் காட்சிகளையோ அல்லது முழுப்படத்தையுமோ செல்பேசியில் பதிவு செய்து வைத்துக் கொண்டு தேவையான நேரங்களில் மீண்டும் மீண்டும் பார்த்துக் களிக்கும் போக்கையும் நாம் பார்க்கிறோம்.

பேருந்துப் பயணத்தின் போது தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமாக் காட்சிகளை ஒலி ஒளி பரப்பி பயணிகளது கவனத்தை அக்கம் பக்கம் சிதறாமல் தனக்குள் ஈர்த்து சிறைவைத்ததை நாம் பார்த்து வந்தோம். தற்போது ஒவ்வொரு மனிதனும் தன் கையில் வைத்துள்ள செல்பேசித்திரைக்குள் மூழ்கிப்போய் விடுவதைப் பார்க்கிறோம்.

திரையரங்கின் நல்ல அம்சங்களில் ஒன்று சாதி, மத, பால், வர்க்க வேறுபாடு இன்றி அனைவரையும் ஓரிடத்தில் ஒன்று குவித்ததுதான் இந்த ஒன்று குவித்தலின் காரணமாக சாதி, மத, வர்க்க முரண்பாடுகள் சண்டையாக வெளிப்பட்டதும் உண்டு. ஆனாலும் சமத்துவத்திற்கு வாய்ப்பளிக்கும் இடமாக சினிமாக் கொட்டகை இருந்தது. ஆனால் தொலைக்காட்சி அதிலிருந்து மாறுபட்டு ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனித் தீவாக மாற்றியது. செல்பேசி மேலும் ஒருபடி கீழே சென்று மனிதர்கள் ஒவ்வொருவரையுமே தனித்தனித் தீவாக மாற்றிவிட்டது.

விளைவு ரயில் சினேகம், பேருந்து சினேகம் என்பது எல்லாம் மறைந்து வருகிறது எனலாம்.

அதுபோலவே முடிதிருத்தும் சலூன்கள் எல்லாம் ஓர்காலத்தில் அரசியல் பிரச்சாரக் கூடாrangகளாக இருந்துள்ளதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இன்று அங்கும் தொலைக்காட்சிப் பெட்டி வந்து காத்திருப்போர் எல்லாம் டி.வி. பெட்டியில் சவமாகிப் போவதைக் காண்கிறோம்.

மக்கள் காத்திருக்கும் எல்லா இடங்களிலும் டி.வி.பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இரயில் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை என மக்கள் கூடுமிடங்கள் எல்லாவற்றிலும் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகள், பாடல் காட்சிகள் என ஏதாவது ஒன்று ஒலி ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் அக்கம் பக்கம் கவனிப்பது உரையாடுவது, தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கவனிப்பது அதனுடன் கலந்துறவாடுவது அதுபற்றி சிந்திப்பது, செயல்படுவது குறைக்கப்படுகிறது.

ஒருவழிப்பாதையாக மக்கள் பார்க்கவும் கேட்கவும் மட்டுமே செய்கிறார்கள். டி.வி. யோடு கட்டப்பட்ட மூளையின் சுய சிந்தனையும் குறைக்கப்படுகிறது. டி.வி. பார்த்து அழுகவும், சிரிக்கவும் முழு நாளும் செய்யும் மக்கள் ரோபாட்டுக்களாக மாற்றப்படுகிறார்கள். மக்கள் பேசினால் பிரச்சனைதானே!

இன்று 40 வயதைத் தாண்டியவர்களாக இருப்போருக்கு சில வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். தங்களது சிறுவயதுப் பருவத்தில் தாங்கள் அனுபவித்தவைகளை டி.விப் பெட்டி வந்த பிறகு பிறந்த குழந்தைகள், சிறுவர் சிறுமியர் அனுபவிக்க முடியாமல் போய்விட்டதை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

பள்ளி விட்டு வரும் சிறுவர் சிறுமியர் தம் வயதொத்தவர்களுடன் இணைந்து தெருக்களில் மாலை முழுதும் பல்வேறுவிதமான விளையாட்டுக்களில் ஈடுபட்டதையும், தங்களுக்குள் பல்வேறுவிதமான கறபனைக் கதைகளை தாங்களாக இட்டுக் கட்டிக் கூறி மற்றவர்களைக் களிப்படைய வைத்ததையும், மழைக்காலம்,பனிக்காலம், கோடைக்காலம் என ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவிதமான மணல் வீடு கட்டுதல், தேர் செய்தல், சிலை செய்தல்,வண்டி செய்தல் போன்ற கைவினைத்திறனை வளர்த்துக் கொள்வதையும் கூட்டு முயற்சியாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டத்தையும் நினைவு கூற முடியும்.

மற்றும் சிலர் தாங்கள் குடும்பச்சூழல் சார்ந்து ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளைப் பராமரித்தல், அவைகளுக்கு இரை வைத்தல், அவற்றோடு கனிவோடு உறவாடுதல் என வளர்ந்து வந்ததையும் கூறலாம்.

அன்றைக்க்கு ஒரு தாய் தன் குழந்தையை, சிறுவர் சிறுமியை வயதான அப்பத்தா, அம்மாச்சி அல்லது பாட்டியிடம் விட்டு விட்டு வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்குள் அழும் குழந்தையை சமதானம் செய்ய அந்த வயதான மனுசிகள் கூறும் கதைகள் என்பவை இன்றைய குழந்தைகள் அல்லது சிறுவர் சிறுமியர் அறியாதவொன்றாகும்.

அதேபோல் அம்மாக்கள் கதை கூறி தம், பிள்ளைகளைத் தூங்கச் செய்வது என்பதும், இன்று வழக்கொழிந்துவிட்டது எனலாம். மேலும் 'அம்மா கதை சொல்லு' என்ற கோரிக்கையை இன்று குழந்தைகள் வைப்பதுமில்லை. எல்லோருக்கும் சேர்த்து இன்று தொலைக்காட்சிப்பெட்டி கதை சொல்லிக் கொண்டிருக்கிறது. தாயின், குழந்தையின் தனித்தன்மை என்பவையும் கதை சொல்லியின் பன்முகத்தையும் அழிந்துபோய் உலகுமுழுதும் ஒரே கதை ஒரே குரலில் இன்று கூறப்படுகிறது.

மூன்று வயதுக் குழந்தை தம் பெற்றொருக்கு முன்பாக அதிகாலையில் எழுந்துவிட்டால் பெற்றோரை எழுப்புவதில்லை. டி.வி. யைத்தான் எழுப்புகிறது. டி.விக்கு முன் படுத்துக் கொண்டு கால்களை ஆட்டிக் கொண்டு டி.வி. சொல்லும் கதைகளை கேட்கிறது. பெற்றோருக்கும் சிரமம் குறைந்து விட்டதாகத் தோன்றலாம். உண்மையைக் கூறுவதென்றால் இன்று நம் குழந்தைகளை வளர்ப்பது நாமல்ல, டி.வி.ப் பெட்டியே!

டி.வி.ப்பெட்டி என்றால் டி.வி.யின் ஒலி, ஒளி பரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களின் முதலாளிகளும், பல்வேறு அலைவரிசையின் (சேனல்களின்) முதலாளிகளும் தான் நம் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் பிள்ளைகள் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ உருவாக்கும் பொறுப்பை நாம் கைகழுவி ஊடக முதலாளிகளிடம் அவர்களை ஒப்படைத்து வெகுநாட்களாயாச்சு. இந்த ஊடக முதலாளிகள் என்ப்போரில் சினிமா நடிக நடிகையர் அரசியல்வாதிகள் என்போரும் அடங்குவர்.

இவர்கள் தங்களுக்கான கண்களையும், காதுகளையும் கொண்ட சுய சிந்தனையற்ற மனிதப்பிண்டங்களை ஒரே நொடியில் பல கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து கொண்டுள்ளனர். ஊடகம் என்பது மக்களுக்கு உலக நடபுகளை உடனுக்குடன் தரும் ஓர் செய்தி பரிமாறும் கருவி என்ற நிலையைத் தாண்டி உலக முதலாளியத்திற்கான மனிதத் தன்னிலைகளை உருவாக்கும் ஓர் பண்பட்டுத் தொழிற்சாலையாக மாறி பல பத்தாண்டுகள் கடந்துவிட்டது. தற்போது நாம் இந்த பண்பாட்டுத் தொழிற்சாலையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நம் குழந்தைகளை, வருங்கால சந்ததியினரைப் பாதுகாப்பது எப்படி என்று சிந்திக்க, செயல்பட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.

இப்போதுகூட டி.வி.ப்பெட்டியே வேண்டாம் என்று முடிவெடுத்து நம் வீட்டிலிருந்து தூக்கியெறிந்துவிடவோ அல்லது இனி வாங்காமல் இருந்துவிடவோ வேண்டியதுதானே என்று சிலர் கருதலாம். ஆனால் அப்படிச் செய்வது அவ்வளவு எளிதா என்று சிந்தித்துப்பாருங்கள். டி.வி. நம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாறிவிட்டது என்று கூறுவதைவிட குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் தலைவராகி வெகுகாலாமாயிற்று என்றே கூற வேண்டும்.

நலம் இப்படிக்கூறுவது வியப்பாக இருக்கலாம். உண்மையில் நமது உணவுப் பழக்கத்தை உடையை, இருப்பிடத்தை, கல்வியை, அழகு சாதனங்களை, வீட்டு உபயோகப் பொருட்களை, நம் உடல் அமைப்பை, நமது நண்பர்களை, உறவுகளை, விளையாட்டுகளை மட்டுமல்லாமல் நம் கால் நகம் முதல் தலைமயிர் வரையிலானவற்றின் மீதும் ஆதிக்கம் செய்யும் ஒன்றாக டி.வி.ப்பெட்டி மாறிப்போய்விட்ட பிறகு குடும்பத்தலைவர் என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவீர்கள்.

இனி டி.வி.யின்றி வாழ்வது எளிதல்ல. அதாவது திரையின் தொடர்பின்றி வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. குறிப்பாக எந்த ஓர் மனிதரும் இன்று மூன்று திரைகளில் ஒன்றைக் கூட ஓர் நாளின் 24-மணி நேரத்தில் ஒருமுறைகூட பயன்படுத்துவதில்லை என்று கூறிவிட முடியாது.

இப்போது நமக்கொரு கேள்வி எழுகிறது. சினிமா, தொலைக்காட்சி, செல்பேசி போன்றவை வேண்டுமா? வேண்டாமா? வேண்டும். ஆனால் அவை பற்றிய இரண்டு எச்சரிக்கைகளும் வேண்டும். ஒன்று பல்வேறு துறைகளைப் போலவே அதாவது கல்வித்துறை, காவல்துறை, நிர்வாகத்துறை போன்றவற்றைப் போலவே திரைத்துறைகளும் ஆலும் வர்க்க, சாதிய நலனுக்கான ஓர் கருவி என்ற புரிதல் வேண்டும்.

மற்றொன்று இத்திரைகளை நாம் எந்த அளவுக்கு மற்றும் எந்த வகையில் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு வேண்டும். எந்த ஒரு நவீனக் கண்டுபிடிப்பையும், வரவையும் நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால் அதனிடம் நம்மை அப்படியே ஒப்புக் கொடுக்கவும் கூடாது. அனைத்து அறிவியல் வளர்ச்சியும் மக்களுக்காகத்தானே தவிர அறிவியல் வளர்ச்சிக்காக மக்களது நலன் பலியிடப்படக்கூடாது.

இன்றைய கல்விமுறை மக்கள் விரோதமாக இருக்கிறது அது மாற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டாலும் சில நல்லாசிரியர்களால் சமூக அக்கரையோடும் மாணவமாணவியரின் எதிர்கால நலனைக் காக்கும் நோக்கோடும் கல்வி கற்பிக்கப்படுவதைப் போலவே திரைத்துறைக்குள்ளும் காலம் தோறும் அங்கொன்று இங்கொன்று என சில தனிமனிதர்கள் நல்ல திரைப்பட முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறர்கள்.

அது போதுமானதாக இல்லை என்று கூறலாமே தவிர முற்றிலும் சினிமா + தொலைக்காட்சி சாதனமே முற்றிலும் மக்களுக்கானதாக (மக்கள் நலனுக்கானதாக) மாற்றி விடுவதும் இன்று சாத்தியம் இல்லை.

நிலவுகின்ற சமூகப் பொருளாதார அரசியல் அதிகாரத்தில் இவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கான சினிமா என்பது மீறலாக வெளிவருபவையே ஆகும். இந்த மீறல் என்பது திரைத் துறைக்குள் (சி+பெ-திரை) இருந்து வந்துள்ள சில தனிமனித முயற்சி என்ற வகையிலேயே அமைகிறது. அதே சமயம் புறநிலையில் சமூக அரங்கில் வளர்ந்து வருகின்ற இயக்கங்களின் தாக்கம் என்பது பின்புலமாக அமைகிறது. கடந்த காலத்தில் தேச விடுதலை இயக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் போன்றவௌ இவ்வாறு பின்புலமாக அமைந்தன.

ஆனால் இன்று ஒவ்வொரு தேர்தல் கட்சியும் ஓர் சின்னத்திரையை தோற்றுவித்தும், தங்களது கருத்தைப் பிரசசாரம் செய்யும் சினிமாக்களைத் தயாரித்தும் அதையே அய்ந்து நிமிடத்திற்கு ஒரு முறை என்ற அளவில் சின்னத்திரையில் விளம்பரம் செய்து வருவதையும் நாம் பார்க்கிறோம். ஆக நிலவும் சமூகப் பொருளாதார அரசியலையும், பண்பாட்டையும் மாற்ற விரும்பாதவர்கள் (சி+பெ) திரைகளைக் கைப்பற்றிக் கொண்டுவிட்ட நிலையில் சமூக மாற்றத்தை விரும்பும் (அம்பேத்கர்+பெரியார்+மார்க்ஸ்) இயக்கத்தினர் மட்டும் தங்களுக்கென்று திரைகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது அவலமேயாகும்.

இது எளிதல்ல என்றாலும் அவசியமானது என்பதோடு இன்றைக்கு வேறு வழியே இல்லை என்று கூறவேண்டும். ஏனென்றால் சமூக மாற்ற இயக்கத்திலுள்ள திரைக்கு மாறாக இன்றும் எழுத்துக்களை மட்டும் நம்பி அதாவது நிகழ்கால கருவிக்கு முன் கடந்த காலக் கருவியோடு நிற்கின்றார்கள்.

ஆனால் எழுத்துக்களின் அதிகாரம் முடிந்துபோய் அதாவது இரு பரிமாணங்களின் அதிகாரம் முடிந்துபோய் முப்பரிமாணங்களின் அதிகாரம் துவங்கி பலபத்தாண்டுகள் கடந்துவிட்டன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் பார்ப்பனர்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். இன்று தொலைக்காட்சி சேனல்கள் பலவற்றிலும் இடம் பெற்றுள்ள பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதிகம். சோராமசாமி துக்ளக் இதலுடன் நின்றுவிடவில்லை என்பதையும் ஜெயா டி.வி.யில் அவருக்கு வழங்கப்படும் நேரத்தையும் நினைத்துப் பாருங்கள். அதுபோல பெரியார் தொண்டர்கள் தொலைக்காட்சியின் இடம் பெறுகிறார்களா என்பதையும் ஒப்பிடுப் பாருங்கள்.

தமிழ்த் திரைப்படத்துறையைப் பொருத்தவரை அது அரசியல் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்பது புதிதல்ல. திராவிட இயக்கத்தவரும், பொதுவுடைமை இயக்கத்தவரும் தம் கொள்கைகளை திரைப்படத்தின் மூலம் பிரச்சாரம் செய்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதிலும் குறிப்பாக திராவிட இயக்கத்தின் சி.என். அண்ணதுரை துவங்கி, கலைஞர் மு. கருணாநிதி வரையிலும் கவிஞர்களில் பாவேந்தர் பாரதிதாசன் துவங்கி கவிஞர் முடியரசன் வரை பலரும் தங்களது பாடல்கள், வசனத்தின் வாயிலாக திராவிட இயக்க கொள்கைப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்ததாகும் அதேபோல் நடிகர்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.எ. மதுரம் முதல் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வரை திராவிட இயக்க அரசியல் பிரச்சாரம் செய்ததும் நாம் அறிந்ததே.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திரு. எம்.ஜி.ஆர் ஆகியவர்கள் முதலில் ஓர் அரசியல் இயக்கத்தவர்கள். அவர்கள் கலை இயக்கியத்துறையை, தமது இயக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பயன்படுத்தினார்கள் எனலாம். அதாவது (கட்சி) அரசியலுடன் சினிமாவை நெருக்கமாகப் பிணைத்தார்கள்.

இந்தப் பிணைப்பைக் கண்ட இன்றைய நடிகர்கள், (சினிமாவுக்கு வெளியே) சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எந்த ஒரு இயக்க நடவடிக்கையும் இல்லாதிருந்தவர்கள் சினிமாவில் இடம்பிடிப்பதையே தம் முழுமூச்சகக் கொண்டிருந்தவர்கள் அச்சினிமாவில் இடம் பிடித்து ஓரளவுக்குமேல் பணமும் புகழும் சேர்த்த பின்பு அடுத்த கட்டமாக சினிமாவுடன் ஏற்கனவே தம் முன்னோர்களால் பிணைக்கப்பட்டுவிட்ட அரசியலுக்குள் நுழைய முயல்கிறார்கள். சினிமா அரசியலுக்கான கள்ள வழியாக அவர்களுக்குத் தெரிகிறது. எம்.ஜி.ஆர் என்ற ஓர் முன்னுதாரணம், இன்று அதிகபட்சம் 100 படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டால் ஓர் நடிகருக்கு தமிழ்நாட்டின் முதல்வர் பதவி தனக்கு வழங்கப்பட்டே தீரவேண்டும் என்ற வேட்கையும் தமிழக மக்களை தான் ஆள்வதற்கான என்ற மமதையும் வந்து விடுகிறது. என்ன செய்வது தமிழக மக்களது நிலையும், தமிழக அரசியலும் அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து கிடக்கிறது.

இதன் பொருள் நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வரக்கூடாது நாட்டை ஆளக்கூடாது என்பதல்ல. இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமக்களுக்கும் அரசியலின் ஈடுபடவும் ஆட்சி செய்யவும் உரிமை இருக்க வேண்டும். சாதி, மதம், பால், வர்க்க, தொழில், வேறுபாடு அதில் தடையாக அமையக்கூடாது என்பதே சரியானது. ஆனால் நோகாமல் நொங்கு தின்பது என்பார்களே அதுதான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது.

நீருக்குள் இறாங்கமலே நீச்சல் அடிப்பதைப் போல, உண்மையில் ஓர் கட்சி கட்டாமல், மக்களுக்காக, அவர்களை வாட்டி வதைக்கும் கொடுமைகளைப் போக்க எந்த ஒரு சிறு துரும்பையும் இதுவரை அசைக்காமல் குறைந்த பட்சம் நமது நாட்டின், மக்களின் அடிப்படை பிரச்சனைகளே இன்ன தென்று தெரியாதவர்களாக வாழ்பவர்கள் திரையில் எவரோ எழுதிக் கொடுத்த வசனத்தை பக்கம் பக்கமா பேசிய ஒரே காரணத்திறகாக தமிழ்நாட்டின் முதல்வர் பதவி தனக்கு வழங்கப்படவேண்டும் என்று கூறினால் அதையும் ஏற்றுக் கொண்டு, திரையில் கண்டதே உண்மை என்று நம்பும் தமிழர்கள் நிறைந்த சூழலில் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

மற்றொரு இளைய நடிகரது கொள்கை 'உன் அம்மா அப்பா பேச்சை கேளு' அவ்வளவுதான். இவருக்கு பின்னால் பல இலட்சம் இளைஞர்கள் எனவே இவருக்கும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கனவு. மானமுள்ள எவரும் இனித் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் வாழ முடியாது. மற்றொரு நடிகர் மிக நீண்ட காலமாக வானத்தை நோக்கி சுட்டுவிரலைக் காட்டி அங்கிருந்து செய்தி வரவில்லை வந்தால் அடுத்த வினாடி, தான் தான் தமிழக முதல்வர் என்கிறார்.

தமிழினம்போல் பாரமத்தனமான ஓர் இனம் உலகில் வேறு எங்கும் இருக்குமா? என்று தெரியவில்லை. இந்த இழிவுகளுக்கெல்லாம் காரணம் தமிழக அரசியலுக்கும் தமிழ்ச் சினிமாவுக்கும் அன்று 1950களில் போடப்பட்ட பிணைப்புத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே தான் தமிழ் மக்கள் தனது எதிர்காலத்தை வெண்திரையில் தேடிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழ் சமூக முன்னேற்றத்தில் அக்கரை கொண்டிருக்கும் இடதுசாரி முற்போக்கு சனநாயக இயக்கங்கள் உடனடியாக திரையை (சி+பெ) கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் தமிழர்கள் புறந்தள்ளி விடுவார்கள்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு சமீபத்தில் கட்சி ஆரமித்து தான் தான் அடுத்த முதல்வர் என்று பிதற்றித் திரியும் ஓர் நடிகர் தனது பட்டப் பெயரில் சின்னத்திரை துவங்கி தனது பித்தலாட்ட அரசியலை முழுநாளும் ஒளி ஒலிபரப்பி கொண்டிருப்பதை பார்த்திரிப்பீர்கள். அந்த சின்னத்திரை என்பது அவருக்கு மேலும் வளர்ச்சியை கொடுக்கும் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஏனென்றால் சின்னத்திரை என்பதெ பெண்களை குறி வைத்து நடத்தப்படுவதுதான். பெண்களை சென்றைந்துவிட்டால் அது தடையில்லா வளர்ச்சியடையும் என்பதே இங்கு வரலாறு. வரலாற்றை சற்று திருப்பிப் பாருங்கள் தேச விடுதலை இயக்கம், பொதுவுடைமை இயக்கம், பெரியாரது தன்மான இயக்கம், தலீத் இயக்கம் போன்றவை பெண்களை மையமிட்ட பின்பே வளர்ச்சியடைந்தது. ஆண்கள் மட்டும் பங்கு பெறும் எதுவும் வளர்ச்சியடையாது. அந்த ஆண்களுக்கு எதிராக குடும்பமும், பெண்களும் இயல்பாகவே வந்து குறுக்கே நின்றுவிடுவார்கள்.

இன்று அனைத்து தொலைக்காட்சியிலும் சாமியார்களும், பார்ப்பன சோதிடர்களும், ராசி கற்கள் விற்போரும், பெயர் சோதிடம், எண் சோதிடம் பார்ப்போரும் தினந்தோறும் தோன்றி யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எல்லாம் பெண்களிடம் தான். இதை தினமும் பார்க்கும்,கேட்கும் வீட்டில் உள்ள பெண்கள் பெரியார் இயக்கத்தில் ஈடுபடும் தம் கணவனை, மகனை, சகோதரனை ஏற்று அவர்களுடன் பெரியார் இயக்கத்திற்கு வருவார்களா? அல்லது முரண்படுவார்களா சற்று சிந்தியுங்கள்.

இன்று வீட்டிற்குள் மதவாதிகளும், ஆன்மீகவாதிகளும், கழிசடை அரசியல்வாதிகளும், சினிமா பொறுக்கிகளும், ஆணாதிக்க சாதிவெறி நடிகர்களும், தம் சரக்கை கடைபரப்பி நிமிடம் தோறும் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முற்போக்கு இயக்கத்தவர் என்போர் வீதியில் வீட்டுக்கு வெளியில் நின்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். தோழர்களே யுத்தம் வேறொரு இடத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பின்றி நம் பெண்களும், குழந்தைகளும் எதிரிகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரியார் இயக்கம் துவங்கி 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. பெரியார் வாழ்ந்த காலத்தைவிட இன்று பெரியார் வழி இயக்கம் பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு திரையைத் தனக்காக உருவாக்கிக் கொள்ளவில்லை. நேற்று வந்த நடிகன் தனக்கென்று ஒரு திரையை உருவாக்கி பிரச்சாரம் செய்ய முடிகிறது. இதுபோல்தான் அம்பேத்கர் வழி, பொதுவுடைமை வழி இயக்கங்களும் பிந்தங்கி இருக்கின்றன.

விளைவு சினிமாக் கழிசடைகள் அரசியல் செல்வாக்குப் பெறுகிறார்கள். மறுபுறம் தமிழ்மக்கள் வெண்திரையில் தங்களுக்கான தேவதூதர்களை எதிர்பார்த்து இருட்டில் காத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு ஊடக முதலாளியம் ஒரு குறிப்பிடத்தகுந்த சக்தியாக வளர்ந்துள்ளது. மற்ற சரக்குகளை உற்பத்தி செய்பவர்களைவிட காட்சிகளையும் கருத்துகளையும் உற்பத்தி செய்பவர்கள் பெரியளவில் வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் எனலாம். மேலும் பல்வேறு உபயோகப் பொருள்களை உற்பத்தி செய்வோரும் காட்சி ஊடகத்தினரையே இன்று பெரிதும் நம்பி உள்ளனர் எனலாம். பல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களையும் ஒரே ஒரு தொலைக்காட்சி அலைவரிசையே(சேனல்) மக்களிடம் கொண்டுவந்து சேர்த்து அதற்கு விளம்பரக் கட்டண்மாக ஒவ்வொரு நிமிடமும் பல கோடி ரூபாயை சம்பாதிக்கும் நிலை இன்றுள்ளது.

அதாவது இந்த விளம்பரச் செலவும் பொருட்களின் அடக்க விலையில் சேர்க்கப்பட்டு அதையும் மக்களே கொடுக்கின்றனர். ஆகவே மக்கள் தங்கள் பணத்தைப் போட்டு டி.வி.பெட்டியை வாங்கி அதற்கு கேபிள் இணைப்புக்கும் பணம் கட்டி தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செலவு செய்கிறார்கள்.

இவ்வாறு உற்பத்தித்துறை சார்ந்த பன்னாட்டு முதலாளிகளின் துணையோடு பல்வேறு மாநிலங்களிலும் கிளைபரப்பி பலகோடி ரசிகர்களைப் பெற்று அவர்களது சிந்தனையில் எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய முன் அபிப்ராயங்களை கட்டமைத்துவிட்ட நிலையில் சமூக மாற்ற இயக்கத்தினர்.

இனி புதுதாக தொலைக்காட்சி அலைவரிசையை துவங்கும்போது பல்வேறு விதமான போட்டிகளைச் சந்திக்க வேண்டிவரும்.

சினிமா தொடர்பான எந்தஒரு நிகழ்ச்சியும் இன்றியோ சினிமாப்பாடல்கள், காட்சிகள் இன்றியோ ஓர் அலைவரிசை பார்வையாளர்களைத் தன்பக்கம் வெற்றிகரமாக ஈர்த்துவிட முடியாது. எனவே எத்தகைய பாடல்காட்சிகள், எத்தகைய சினிமாக் காட்சிகளை எந்த அளவுக்குத் தொலைக்காட்சியில் பயன்படுத்துவது என்பது பற்றியும் மெகா தொடர்கள் இன்று பெண்கள் மற்றும் குழந்தை கண் மத்தியில் பெற்றுள்ள செல்வாக்கைக் கணக்கில் கொண்டு பெரியார் அம்பேத்கர் கொள்கைக்கு விரோதமில்லாத யதார்த்தவாத மெகாத் தொடர்களைத் தயாரிப்பது பற்றியும் வேறு புதுவிதமான நிகழ்ச்சிகள் தயாரிப்புப் பற்றியும் அறிஞர் குழுவை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்.

[இடையீடு: நாம், முற்போக்கு இயக்கங்கள் தங்களுக்கான திரையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தப் புரிதல் இல்லாதது ஒருபுறமிருக்க ஏற்கனவே உள்ள திரையில் அத்திபூத்தாற்போல அதிசயமாக வெளிவந்துவிட்ட அம்பேத்கர் திரைப்படத்தை இந்த இயக்கங்கள் கண்டு கொள்ளாமல் விட்டதைப் பார்க்கும் போது மிகுந்த மனவேதனையாக இருக்கிறது. தமிழகத் திரையரங்க உரிமையாளர்களில் 99.9 சதவீதம் சாதி இந்துக்களாகவே இருப்பர் அவர்களுக்கு அண்ணலின் படத்தைத் திரையிட வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் போகலாம். ஆனால் இந்த இயக்கங்களுக்கு, தமிழகக் கிராமங்கள் தோறும் அண்ணலின் திரைப்படத்தை எடுத்துச் சென்று திரையிட்டு விழிஅப்புணர்வு ஏற்படச் செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தடுத்தது ஏன்?

ஒரு சிலத்தனிமனிதர்கள் இதனைச் செய்துள்ளனர். அவர்களையும், அம்பேத்கர் திரைப்பட விமர்சனத்தை வெளியிட்ட இதழ்களாஇயும் நாம் பாராட்ட வேண்டும்.]

அடுத்து கட்டணத்திற்காக மக்கள் நலனுக்கு கேடுவிளைவிக்கும் எப்பொருளையும் விளம்பரப்படுத்தக்கூடாது. சிறுவர் சிறுமியரை மேம்படுத்தும் மந்திரமா தந்திரமா போன்ற நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்த வேண்டும். எக் காரணம் கொண்டும் கொள்கைப் பிரச்சாரத்தை வறட்டுத்தனமாக நிகழ்த்தக் கூடாது. ஈர்ப்பான வடிவங்களைக் கண்டடைந்து அதன்வழி புகட்ட வேண்டும். இது ஓர் தொடர் பணியாகும்.

இப்பணியாளர் கடந்த நூறாண்டுகளில் நாம் அடைந்த வளர்ச்சியை ஒரு பத்தாண்டு காலத்திலேயே நாம் பெற முடியும். மேலும் சமீப காலமாக தமிழர்கள் மத்தியில் வளர்ந்து வரும் பக்தி, மூடநம்பிக்கைகள், கோயில், கடவுள்களின் பெருக்கம், சாமியார்களின் பெருக்கம், ராசிக்கற்கள், டாலர்கள், மோதிரங்கள், இன்னும் பிற பொருட்களை விற்கும் ஏமாற்றுக்காரர்களின் பெருக்கம் போன்றவை கணிசமாகக் குறைக்கப்படவும், மக்களது விழிப்புணர்வு அதிகப்படவும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல் நடிகர் நடிகைகளுக்கு நடிப்பு என்பது ஒரு தொழில் திரையைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஹீரோ உண்மை வாழ்வில் வில்லனாகவும், ஒரு வில்லன் நடிகர் உண்மை வாழ்வில் ஒரு ஹீரோவாகவும் இருக்க முடியும் என்பதைத் தெளிவு படுத்தும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலி ஒளி பரப்ப வேண்டும்.

நடிகர்கள் சூப்பர் ஸ்டார்களாக உருப்பெருக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் திரையில் பேசுவது, நிகழ்த்தும் சாகசங்கள் எல்லாம் பொய் என்பதை விளாங்கச் செய்ய வேண்டும். மக்கள் தலையில், நடிகர்களை சூப்பர் ஸ்டார்களாக்கி ஏற்றும் கழிசடை இயக்குநர்களை சமூக விரோதிகள், மக்கள் நலனுக்கு எதிரான கயவர்கள் என்று அம்பலப்படுத்த வேண்டும். இந்த சூப்பர் ஹீரோக்களையும், மாஸ் ஹீரோக்களால் தமிழ்ச் சமூகம் அடைந்த நன்மை என்ன என்று மக்கள் மனத்தில் கேள்வி எழும்படிச் செய்ய வேண்டும்.

குறைந்த பட்சம் கேரளத்து நடிகர்களிடம் காணப்படும் போலித்தனமற்ற நேர்மையையும் தமிழ்நடிகர்களது போலித்தனங்களையும் ஒப்பிட்டு விமர்சிக்க வேண்டும்.

பெரியார் கூறினாரே தமிழ்ச் சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமூகமாக மாற்றப் பாடுபட வேண்டும் என்று அந்த மானமும் அறிவும் பெறச் செய்தால் என் பதில் இந்த மேற்காணும் எல்லாச் செயற்பாடுகளும் அடங்கும்.

தமிழ்ச் சினிமாத்துறையில் போலித்தனமில்லாத சிறந்த மனிதர்களே இல்லை என்பதல்ல நம் கருத்து. அவர்கள் பின் தள்ளப்பட்டு பகட்டுக்காரர்கள் முன்னுக்கு கொண்டுவரப்படுகிறார்கள் என்பதே நம் கவலை. இந்த சூழலுக்கு நம் தமிழ் மக்களின் ரசிக மனோபாவமும் ஒரு காரணம். இந்த ரசிக மனோபாவம் என்பது ஏதோ ஆகாயத்தில் இருந்து வந்ததில்லை. கடந்த 80 ஆண்டு காலச் சின்மாவும், கடந்த காலத் தமிழ் மக்களின் மரபுவழிச் சிந்தைனையும் இணைந்து உருவான ஒன்றுதான்.

எனவே இந்தச் சிந்தனை மரபையும், ரசிக மனோபாவத்தையும் மாற்ற நாம் முயலவேண்டும், அதே சமயம் திரைத்துறைகளுக்குள் உள்ள சிறந்த நடிகர் நடிகைகளை, இயக்குநர்களை, தொழில் நுட்பக் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.

அதாவது மக்களுக்கு மேலானவர்கள், மக்கள் நலனைவிட மேலானது எவரும், எதுவும் இல்லை என்று ஏற்றுக் கொண்டவர்களை வளர்க்கவும் பாராட்டவும் வேண்டும்...

எனவே மக்களுக்கான மாற்றுத் திரை என்பதே இன்றைய உடனடித்தேவை என்பதை அனைவர்க்கும் கூறுவோம். அதற்காகவே இக்கட்டுரை.

பின்குறிப்புகள்:
1. மக்கள் சாதியாகவும் வர்க்கமாகவும் படிநிலைப் படுத்தப்பட்டுள்ள தமிழ்ச்சமூகத்தில் திரைகளின் தாக்கம் என்பது சாதியவர்க்க படிநிலைக்கேற்பவே அமையுமே அல்லாது அனைவர் மீது ஒன்று போல் வினைபுரிய முடியாது என்ற புரிதலுடன் ககட்டுரையை வாசிக்க வேண்டும்.

2. மூன்று திரைகள் மட்டுமே இக்கட்டுரையில் கவனம் கொள்ளப்பட்டுள்ளது வளர்ந்து வரும் நான்காவது திரையான கணிணி + இணையத்திரை கவனத்தில் கொள்ளப்படவில்லை. அது பற்றி விரிவாக தனியே பார்க்கப்பட வேண்டும்.

 
Related News
 • காட்சிமொழியில் ஒரு கலக வரலாறு

 • செம்போவாங் கப்பல்துறை

 • தமிழில் வில்லன்களும் சமீப இனவரைவு படங்களும்- ஒருபார்வை

 • திரையில் விரியும் நிகழ் தளம்

 • மாற்றுத்திரை
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
    Name பாக்க  
    Comments
  கட்டுரை - மிக அருமை - ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி சிந்தனையை கூர்மைப்படுத்துகிறது - ஏதாவது செய்தாகனும்.. ?
   
    Email Id pakkiyarajaa@gmail.com  
       
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World