Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueகாட்சிமொழியில் ஒரு கலக வரலாறு
 

கவிஞர் கலியமூர்த்தி
திருச்சி.

NFDCயின் "பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படத்தை முன்வைத்து...

இந்தியாவில் தாமதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவரும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவருமான தலைவர் அம்பேத்கர் மட்டுமே.

அதற்குப் பல கருத்தியல்கள்/அரசியல் சக்திகள் காரணம் என்பது நாடறிந்த உண்மை என்றே நான் நம்புகிறேன்.

முதலில்,
ஜாபர் பட்டேல் இயக்கியுள்ள இந்த 140 நிமிடத் திரைப்படம், தன்னளவிலும், ஒப்பீட்டு ரீதியாகவும் ஒரு மகத்தான திரைச்சாதனை என்பதைக் குறிப்பிட வேண்டும்.

ஏனெனில், வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் (அவை விவரணப்படமாயினும், கதை வடிவப் படமாயினும்)பற்றி இந்திய, தமிழகப் பொதுப்புத்தி நாம் அறிந்த ஒன்றே". மகாத்மா காந்தியின் வாழ்வை டாக்குமெண்டரி படமாக எடுக்க தன் வாழ்வை அரிப்பணித்த, A.K. செட்டியார்

"சென்னையிலுள்ள பல படமுதலாளிகள் எனது திட்டத்தைப் பார்த்து நகைத்தனர். சிலரால் அதனை அறிந்து கொள்ளக் கூட முடியவில்லை. ஒரு பிரபல பிளம் கம்பெனி மானேஜர் என் எதிரிலேயே தன் முதலாளிடம் வாழ்க்கைச் சித்திரப்படம் (டாக்குமெண்டரி பிளம்) இலவசமாக காண்பித்தால் கூட ஜனங்கள் பார்க்க வரமாட்டார்கள் எனக் கூறினார்.

என எழுதியிருப்பதை அவரது நூலின்படி அறிகிறோம். தமிழ்நாட்டில் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தனியார் சேனல் நிர்வாகிகள் ஆகியோர் இன்றைக்கும் இவ்வாறு தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்"
என்கிறார் அம்ஷன் குமார் தனது "பேசும்பொற்சித்திரம்" நூலின் கட்டுரையில்

இது எத்தனை பெரிய உண்மை என்பதை திருச்சியில் அம்பேத்கர் படத்தை திரையிட்டபோது த.மு.எ.க.ச தோழர்கள் உணர்ந்தனர்.
தியேட்டர் பிடிப்பதற்கு அலையாய் அலைந்து, கடைசியில் ஒரு தியேட்டரைப் பிடித்து (அதன் உரிமையாளரைப் பாராட்ட வேண்டும்) படம் திரையிட ஏற்பாடுகளைச் செய்யும் போது, நான்கு ஷோக்கள் திரையிட வேண்டும் என்று கூறியபோது, "முதலில் ஒரு ஷோ போடுவோம் பார்க்கலாம்" என்றுதான் பதில் கிடைத்தது.

ஆனால், திருச்சியில் 4 காட்சிகள் அரங்கு நிறைந்தும் ஒரு வெகுஜன சூப்பர் ஸ்டார் படத்துக்குக் கிடைப்பதை விட பலத்த இடைவிடாத கைதட்டல்களோடும் (காட்சிக்குக் காட்சி - வசனத்துக்கு வசனம்) படம் வெற்றியடைந்தபோது, இப் பொதுபுத்தியின் தர்க்கம் ஆதாரமற்ற பொய்மைகளினால் கட்டப்பட்டது என்பதைப் பெருமிதத்துடன் உணர முடிந்தது. இதற்காகவே இயக்குநர் ஜாபர் பட்டேலையும், அவரது குழுவினரையும் பாராட்ட வேண்டியுள்ளது.

இப்படம் திருச்சி திரையிடலின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஒருங்கிணைப்பு. த.மு.எ.க.ச தோழர்கள் தாங்கள் உழைப்பில் திரையிடலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தாலும் கூட விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அருந்ததியர் விடுதலை முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, பல SC/ST தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் CPM, CPI பெரியார் திராவிடர் கழகம், கலை இலக்கியப் பெருமன்றம், CITU, AITUC எனப் பல்வேறு தலித்திய இடதுசாரி ஜனநாயக சக்திகளை அணி திரட்டி அவர்கள் மூலம் டிக்கெட் விநியோகம், பார்வையாளர்கள் அமைப்பாக்கத்ததை நெறிப்படுத்தியதையே இப்பெருவெற்றியின் ரகசியம் எனலாம்.

மறுபக்கம், இவ்வளவு சிறப்பாக ஒருங்கினைத்தாலும் படம் சரியில்லை என்றால் எல்லாம் வீண்.

இப்படி பலதரப்பட்ட மனக்கட்டமைப்புகள் உள்ள பலவிதமான பார்வையாளர்கள் அரங்கினுள் நுழைந்தாலும் எல்லொரையும் தனக்குள் கரைத்து, நெகிழ்த்தி அவர்களுக்கான பரவச/ கொண்டாட்ட வெளியாக, அவர்களது அறிவின் / புலன்களின் ஊடே அவர்கள் அறியாத உலகுக்கு அவர்களை அழைத்துச் செல்வதில் இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பதைப் பதிவு செய்ய வேண்டும்.

திரையிடலுக்கு பிறகான, உளப்பகிர்வு கூட்டத்தில் ரெட்டைமலை சீனிவாசனை, பெரியாரைக் காட்டியிருக்கலாம் என்பது போன்ற தமிழகவாத அரசியல் ஒலித்ததே ஒழிய, திரைமொழி குறித்தோ படம் எழுப்பிய உணர்வின் வசீகரங்கள்/ வீச்சுகள் பற்றியோ பெரிய விவாதங்கள் வரவில்லை என்பது தமிழ்ச்சூழலின் போதாமைகளில் ஒன்றுதான்.

நாம் படத்துக்கு வருவோம்.

அம்பேத்கர் என்கிற மாமனிதரை, அவரது அரை நூற்றாண்டு கால வாழ்வை, அவரின் எல்லைகளுக்கு அடங்காத அறிவுத்தேடலை, வீச்சை, ஒரு நபர் 140 நிமிடங்களில் ஓடும் படமாகக் காட்சிப்படுத்த முடியுமா என்பது ஒரு மிகப்பெரும் கேள்வி,

முடியும் என்பதை இப்படம் மூலம் உறுதிசெய்திருக்கிறார் ஜாபர் பட்டேல்.

அரசியல் ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும் நிறைவாக, கருத்தியல் ரீதியாகவும் கலை நுட்ப நீதியாகவும், வளமாகவும் இப்படம் வென்றிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு அம்பேத்கராகவே மாறிவிட்ட மம்முட்டி படம் முழுக்க தனது இயல்பான தேர்ந்த உடல்மொழியால் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

" ஒரு படைப்பு சாதனத்தின் வடிவ அமைதி, வெளிப்பாட்டுத்திறன், பரஸ்பர மனிதநேயம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுப்பப்படும் ரசனையே அழகியல்" எனச் சரியாகவே அடையாளப் படுத்தும் அம்ஷன்குமாரின் அழகியல் பார்வைக்கு இப்படம் மேன்மையான உதாரணமாக வெளிப்பட்டிருக்கிறது.

"பொழுதுபோக்கினை உயர்ந்த அனுபவமாக மாற்றுவது திரைப்பட மொழி. அம்மொழியின் அம்சங்களை நெறிப்படுத்துவது அழகியல்" (அம்ஷன் குமார், "பேசும் பொற்சித்திரம்").

"சிறந்த நடிப்பு, பிரித்துப் பார்க்க வியலாதவகையில் அமைந்துள்ள ஒலி-ஒளி, பல்வேறு தளங்களில் செயல்படும் ஆற்றொழுக்கான கதையாடல், ஆழ்ந்த வாழ்வியல் நோக்கு பொன்றவற்றை ஒரு சேரக் கொண்டுள்ள படம், முழுமையான சினிமாவின் பிரதான கூறுகளைக் கொண்டது" (அம்ஷன் குமார், பேசும் பொற்சித்திரம்).

உண்மையில் மேற்கூறிய அழகியல்/ரசனை பார்வையில் பிரமாதமான படமாக வந்துள்ளது "பாபாசாகேப் அம்பேத்கர் "

மம்மூட்டியின் தேர்ந்த முதிர்ச்சியான உடல்மொழி, காட்சிக்கும் கதைக்கும் உணர்வுக்கும் ஏற்ற துல்லியமான இருளும் ஒளியும் பிரக்ஞைபூர்வமாக கலக்கப்பட்ட காமிரா மொழி, கோணங்களின் மூலமே கதைமொழியே உயர்ந்த தளத்துக்கு நகர்த்தும் நுட்பம், இசையையும் மெளனத்தையும் தேர்ச்சியுடன் கையாண்டுள்ள நுட்பம், கலை இயக்கத்தில், காலத்தையே மாற்றிக் காட்டும் புனைதிரன் என சினிமா மொழியின் அடிப்படை அழகியலை, உச்சபட்சப் பயன்பாட்டோடு உருவாக்கியுள்ள படம் இது.

நேருக்குநேர் (சமக்) காட்சிகளே கிட்டத்தட்ட இல்லாமல் குறுங்கோண/ விரிகோணக் காட்சிகளே பிராதானமாக அமைக்கப்பட்ட படமாக இதை உணர முடிகிறது. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட எளிய குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர் தனது கடும் தொடர் முயற்சிகளின் வழியே ஒரு பெரும் ஆளுமையாக உருவாகும் வரை, கேமரா மேலிருந்து கீழிருக்கும் காட்சிகளைக் காட்டுகிறது. ஆளுமை உருவாக்கம் நிறைவடைந்து அம்பேத்கர் மாமனிதரான பிறகு கேமரா கீழிறங்கி அம்பேத்கரை உயர்ந்த ஸ்தானத்தில் நிறுத்திப் பிரமிப்புடன் பார்க்கிறது. இப்புதிய கோணமொழி வெறும் தொழில்நுட்பமாக இல்லாமல், கதை மொழியைக் கட்டமைக்கும் காட்சிமொழியாக அபூர்வ மாற்றம் பெறுகிறது. பிரக்ஞைபூர்வமாக கையாளப்படும் இந்நுட்பம் திரைப்படத்தை அறிவார்ந்த தளத்திற்கு உயர்த்திக்காட்டுவதாகவே நான் கருதுகிறேன்.

அதேபோல் சேய்மை அண்மைக் காட்சிகள்(long shot, closeup shot) எடுக்கப்பட்ட நுட்பமும், படகாட்சியின் எல்லைகள் காட்டும் பிம்ப நுட்பங்களும் அற்புதம்.

குறிப்பாக ஒரு காட்சி,

மத்திய சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுகிறார் அம்பேத்கர். கேமரா, long shot பிரமாண்டமான பாராளுமன்ற கட்டத்தை முழுத்திரையில் காட்டுகிறது. அம்பேத்கர் வெளியே வர வர கேமரா முன்னே முன்னே நகர்கிறது. இப்போது பிரமாண்ட பார்லிமென்ட் சிறிதாகிச் சிறிதாகி வரும்போது, அம்பேத்கர் பெரிதாகிப் பெரிதாகி, கடைசியில் அம்பேத்கர் Closeup Shot -ல் பிரமாண்டமாக நிற்க, பார்லிமென்ட் நம் காட்சிப் புலத்திலிருந்து மறைந்தே விடுகிறது.

இந்த ஒற்றைக் காட்சி பாராளுமன்ற / பதவி அரசியலிலிருந்து வெளியேறி, மக்கள் சக்தியுடன் கலக்கும்போது, பாராளுமன்ற முறைமைக்குள் அடங்கி சிறுத்துக்கிடந்த அம்பேத்கர், தனது மக்களுடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததான தோற்றத்தை, உணர்வை எனக்கு ஊட்டியது.

வேறு விதமாக வேறுபலர் வாசிக்கக்கூடும் எனினும், இது போன்ற கலைத் தொழில் நுட்பம் மூலம் கதை / உணர்வுத் தளத்தை நுட்பமாக்கும் உத்திகள் படம் முழுதும் விரவிக்கிடப்பதை இப்படத்தின் வெற்றி என நான் கருதுகிறேன்.

ஹாலிவுட் பாணியிலான மிகை ஒளி / மிகை இருள் (ஷங்கர் / மணிரத்னம்) புனை வெளியைப் புறந்தள்ளி இருளும் ஒளியும் காட்சியுடன், உணர்ச்சியுடன் இணைந்து பயணிக்கும் அற்புதத்தை ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன்.

இன்னொரு அற்புதம் இசை

இசையுடன் அம்பேத்கர் ஏற்படுத்திக் கொண்ட உறவு, அம்பேத்கர் புத்தத்தில் இணைந்த பிறகு, சில புத்தமத தியான பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார் என்ற குறிப்பு இவற்றினூடே பிரவகிக்கிறது இப்படத்தின் இசை. பெருமளவு மெளனமும் சிறிதளவே இசையுமாக, தேவையான இடங்களில் தேவையான அதிர்வை மட்டுமே உருவாக்கும் தலைவலி தராத / இரைச்சல் எழுப்பாத இசையாக, இயங்கியிருக்கும் இசை சமீபத்தில் நான் வேறெந்தப்படத்திலும் நான் காணாத அதிசயம்.

மகிழ்ச்சியின்போது, தொல்குடித்தன்மை வாய்ந்த தோற்கருவிகளின் கூட்டிசையும், துயரத்தில் கரையும் போது / கரைக்கும் போது வயலின் போன்ற மேற்கத்திய நரம்பிசைக் கருவிகளின் இசையுமாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய இசைக் கோல மரபை இப்படம் விதைத்திருக்கிறது.

2 1/2 மணிநேரப் பார்த்தல் அனுபவத்துக்குப் பிறகு
" அம்பேத்கர் ஹீரோ; காந்தி வில்லன் " எனக் குழந்தைகளைக் கூட சொல்லவைத்த படமாக அமைந்த்து இப்படம். ஆம்! உண்மையில் காந்தி, பாரதி, ஹேராம் படங்களின் காந்தி அல்ல இப்படத்தின் காந்தி.

"அம்பேத்கரின் காந்தி", என ஏராள இலக்கிய நண்பர்களும், பத்திரிக்கை ந்ணபர்களும், காந்தியின் சித்தரிப்பைப் பார்த்தபிறகு, கனல் பறக்கும் இப்படத்தின் வசனங்களைக் கேட்டபிறகு, "எப்படி இப்படத்தை சென்சார் அனுமதித்தது?", என்றே கேட்டார்கள்.

" வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அம்பேத்கர் நூல்களில் பதிவு இருக்கிறது. ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரபூர்வமான தகவல்கள் யாரும் மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாது" என நான் கூறியதை நம்பினர். நானும் அவ்வாறே நம்புகிறேன்.

இந்துமத நம்பிக்கையில் ஆழ்ந்த பற்றுள்ள ஆரம்பகால வளர்ப்பின் வழிவந்த அம்பேத்கர், கசப்பான அனுபவங்களினூடே இந்துமதத்துக்கு எதிரான கருத்தியல் கோட்பாட்டளராகவும், இந்துச்சட்ட சீர்திருத்தம் கோரும் / உருவாக்கும் செயல்பாட்டாளராகவும் மாறுவதை, அதற்கு வரும் எதிர்ப்புகளால் மனமுடைந்து கடும் கோபமுற்று, தன் வாழ்வின் கடைசிப்பகுதியில் தம்மக்கள் பலலட்சம் பேருடன் பெளத்தம் தழுவும் சிந்தனையாளராக அம்பேத்கரின் ஆன்மீக பயணம் கதைமொழியிலும், காட்சிமொழியிலும் ஆற்றொழுக்கான முறையில் முன்வைக்கப்படுகிறது.

இந்து மக்கள் கழகத்தைச் சேர்ந்த அம்பேத்கரின் நண்பர்கள் மதம் மாறுவது அவசியமானது என்பதை யோசிக்க வேண்டும். அப்படி மாறுவதாயிருந்தால் வெளிநாட்டு மதங்களுக்குச் செல்லாமல் இந்தியாவில் உருவாகி வளர்ந்த பிற மதங்களுக்குச் செல்லாமே" எனும் போது ????????

இப்படத்துக்கு வேறு எந்தத் தனிமனிதரோ / குழுவோ திரைகதை-வசனம் எழுதத் தேவையில்லாதபடி, விரிந்து கிடக்கும் அம்பேத்கரின் பிரதிப்பலிப்பிலிருந்து தேவையான பகுதிகளை எடுத்தாண்டு காட்டப்பட்டுள்ளது.

புத்தகங்கள் வழியும் / டைரிக்குறிப்புகள் வழியும் விரியும் வசனங்களும், காட்சிகளும் செறிவூட்டிப் படத்தை துல்லியமான அடர்த்திக்கு நகர்த்தியிருக்கின்றன.

" இந்துமதம் என்பது பலதளங்கள் கொண்ட ஒரு அடுக்குமாடி மாளிகை. ஆனால் அதில் கதவுகளோ, ஜன்னல்களோ இல்லை. எந்தத் தளத்தில் பிறக்கின்றானோ அந்தத்தளத்திலேயேதான் ஒரு இந்து வாழ்ந்து மடிய வேண்டும்" என்பது போன்ற வசனங்கள் கவித்துவத்தின் உச்சம் மட்டுமல்ல, களையப்பட வேண்டிய மிச்சம் கூட.

அம்பேத்கரின் மனைவி ரமாபாய் மரணப்படுக்கையில் கிடக்கிறார், "உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்" என்கிறார். "மருத்துவம் தானே ? அடுத்த முறை நான் அமெரிக்கா போகும் போது உன்னையும் அழைத்துப் போய் உயர்ந்த வைத்தியம் தருகிறேன் " என்கிறார் அம்பேத்கர். "இல்லை நான் சாகும் முன் பூரி ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும்" என்கிறார் ரமாபாய். "அவர் நம்மைப் போன்ற தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்க்க விரும்ப மாட்டார்." என்கிறார் அம்பேத்கர். "நம் மக்களைப் போலவே நானும் தூரத்திலேயே நின்று வணங்குகிறேன்" என்கிறார். ரமா. (கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதன் பின்னுள்ள அயோக்கியத்தனம் புரிகிறதா?)

அம்பேத்கர் கசப்பேறிய குரலில் வருத்தமாக சொல்கிறார்.
"உனக்கு புரியவில்லை ரமா. சாதி பார்த்து குலம் பார்த்து அருள்பாலிப்பது கடவுளே அல்ல. வெறும் கல்."

கரவொலி தியேட்டரை அதிரவைக்கிறது மனம் அதிர்கிறது.
தியேட்டர் கொண்டாட்ட வெளியாக மாறுகிறது. நம் போன்ற உணர்வுத்தளம் இயங்கும் நானூறு ஐநூறு பேரோடு ஒரே ஒத்திசைவில் படம் பார்க்கும் அனுபவம் கூத்து மரபின் தொடர்ச்சியாக மனதில் படிமம் ஆகிறது.

"நான் ஒரு இந்துவாய் பிறந்துவிட்டேன் அது என் கையில் இல்லை. ஆனால் ஒரு போதும் இந்துவாய்ச் சாகமாட்டேன்" என முழங்குகிறார். கைதட்டல் அதிர்கிறது காந்தியும் அம்பேத்கரும் உரையாடுகிறார்கள்.

"மிஸ்டர் அம்பேத்கர்! உங்களைப் போலவே இந்துமதத்தில் சிற்சில மாற்றங்கள் தேவையென நானும் கருதுகிறேன்" என்கிறார், காந்தி முகத்தில் கோபம் பொங்குகிறது. நடுங்கும் கைகளை நீட்டி நான்கு விரல்களைக் காட்டுகிறார் அம்பேத்கர்.

"மாற்றம்? எப்படிப்பட்ட மாற்றம்?" கேட்டபடி சொல்கிறார் நான்கு விரல்களைக் காட்டி, மேலிருந்து கீழாக "இது பிராமணன், இது சத்திரியன், இது வைசியன் இது சூத்திரன்" என்று கூறி "இப்படி மாற்றிவிடலாமா?" எனக் கேட்டு விரல்களை தலைகீழாக மாறிக் காட்டுகிறார். காந்தி தலைகுனிகிறார். அரங்கம் அதிர்கிறது. உண்ணாவிரதம் மிரட்டல் மூலம் புனே விநியோகஸ்தர்களின் இடஒதுக் கீட்டை வீழ்த்தி புனே ஒப்பந்தத்துக்கு இனங்கமறுக்கும் காந்தி அம்பேத்கர் சொல்கிறார்.
"Mr. காந்தி, இந்த உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தை அடிக்கடி எடுக்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை. நாட்டுக்கும் நல்லதில்லை" அரங்கம் அதிர்கிறது. நாமும் கோபத்தில் ஆவேசத்தில் துயரத்தில், வலியில் அவமானத்தில் அதிர்வதிர்வாய் சிதைந்த பார்வையாளரின் கைகள்
"காந்தி சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். என்ற வானொலிச் செய்தி ஒலிபரப்பு ஆகும் போது கைதட்டுகிறது. அம்பேத்கர் துயர் அடைந்தாலும் கூட இப்படி அம்பேத்கரின் வாழ்வின் மையத்தை, கருத்தியலின் மையத்தை வளமிகுந்த தருணங்களை, சாதனங்களை சோதனைகளை துல்லியமான காட்சிமொழியால் திரைப்படச் சாதனங்களின் கலாபூர்வமான பயன்பாட்டுத் திறனோடு பயன்படுத்தி வெளிவந்துள்ள இப்படத்துக்கு காலம் கடந்தேனும், பல சக்திகளின் வற்புறுத்தலுக்குப் பிறகேனும் தமிழாக்கம் செய்ய 10 இலட்சம் கொடுத்த தமிழக அரசை, டப்பிங் படம் என்ற உணர்வே வராமல் டப்பிங் செய்ய தொழில்நுட்ப குழுவை, விநியோகஸ்தர்களின் ஆதரவில்லாமலே மக்களிடம் கொண்டு சேர்க்க உழைத்த தமுஎகச உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை நன்றியோடு பாராட்டுவோம், இன்றும் வீதிவீதியாக கிராமம்கிராமமாக கொண்டு செல்வோம். மற்றுப் பண்பாட்டு வெளியை உருவாக்குவோம்.

"அரசியல் சட்ட மேதை தாழ்த்தப்பட்டோரின் தலைவர்"
-என்ற பிம்பத்துக்குள் மட்டுமே அடைபட்டு விட்ட அம்பேத்கரை,
"அறிவை விடுதலையை நேசிப்பவர்களின் ஆசான்
புரட்சியாளர்"
-எனப்
புதிய புரிதல்களுக்குள் புதிய திறப்புகளுக்கும் ஏங்கித் தரிசாய் கிடக்கிறது.
வெகுஜன மனவெளி
பொழியட்டும் மழை. வீதைக்கப்படட்டும் வீரிய விதைகள்
அரிவாளோடு அறுவடைக்கும்
அறிவு வாளோடு போராட்டக்களத்துக்கும் செல்வோம்
மாற்றங்கள் வரும். வரவேண்டும்தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா!

 
Related News
 • செம்போவாங் கப்பல்துறை

 • தமிழில் வில்லன்களும் சமீப இனவரைவு படங்களும்- ஒருபார்வை

 • திரையின்றி அமையாது உலகு

 • திரையில் விரியும் நிகழ் தளம்

 • மாற்றுத்திரை
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World