Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueசெம்போவாங் கப்பல்துறை
 

சிங்கப்பூர், இயக்குநர்-கணேஷ்விஜயகுமார்.

மாற்றுத்திரை
அயலகத் தமிழர் முயற்சிகள்
சில அறிமுகக் குறிப்புகள்

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கப்பல் கட்டும் துறைமுகம் சிங்கப்பூரின் செம்போவாங். கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர் பணிபுரியும் இத்துறைமுகத்தில் பணி நிரந்தரமற்ற காண்ட்ராக்ட் லேபர்களாக, கீழ்மட்ட வேலைசெய்யும் தமிழ் இளைஞர்களின் இருப்பை முன்வைக்கிறது இப்படம்.

அவர்கள் செய்யும் வேலையின் ஆபத்தான தன்மைகளையும், பணி நிரந்தரமற்ற சூழலையும், கடுமையான சிங்கப்பூர் அரசின் விதிமுறைகளால் அவதியுறும் அப்பாவிகளைப் பற்றியும் இப்படம் ஒரு Dஒcஉ Dரம பாணியில் அலசுகிறது.

இன்னும் விடியாத இருள் பொழுதில் எழுந்து வேலைக்கு புறப்படும் காட்சியிலிருந்து இப்படம் ஆரம்பமாகிறது.

நிறுத்தப்படாத தொலைக்காட்சிப் பெட்டியின் சினிமா பாடலொன்று, ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு சிறிய அறை அதற்கேற்றாபோல கட்டில், ரயில் வண்டியைப் போல மூன்று மூன்று அடுக்காக உள்ளது, படுக்கை.. கட்டிலோடு இணைத்து பொருத்தப்பட்ட, மினி ஃபேன், இழுத்து போர்த்திய நிலையில் அயர்ந்து உறங்குகிறார்கள் சிலர். அவர்கள் எல்லோருமே அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட ஏதோ ஒரு பார்சலைபோல இருக்கிறார்கள். திடீரென்று அமைதியைக் கலைத்து செல்போன் அலாரம் உடனே அது நிறுத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அலாரங்கள் ஒலிக்க முதல் விளக்கு எரிய தொடங்குகிறது.

அடுத்து பயங்கர வேகத்தில் பர்னர்கள் எரிகின்றன. சிலர் வேகவேகமாக பல் துலக்குகின்றனர். சிலர் கழிவறை வாசலில் காத்து நிற்கின்றனர். டிபன் கேரியர்களில் சாப்பாடுகள் அடைக்கப்படுகின்றன. ஒருவர் தனது Over all சீருடையோடு ஹெல்மெட்டை அணிந்து கண்ணாடியில் சரிபார்க்கிறார். ஒருவர் இன்னமும் டி.வி. பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு;அறையில் யாருமில்லாததுகண்டு திடுக்கிடுகிறார்.

இருளில் ஹெல்மெட்டுடன் வாசலில் வந்து நிற்கிறது ஒரு குட்டியானை போன்ற திறந்த வாகனம். அந்த அறையில் இருந்த ஊழியர்கள், இருக்கையில் இல்லாத அந்த வாகனத்தில் ஏறி நெருங்கி உட்காருகிறார்கள்

சூரியன் உதயமாக, தொலைவில் தெரிகிறது. செம்போவாங் துறைமுகத்தை வாகனம் வேகமாக நெருங்குகிறது.

இதுவரை காமராவைப் பயமுறுத்தியும், எச்சரிக்கை விடுத்துக் கொண்டும் வந்த இளைஞர்கள் இப்போது மிகவும் அமைதியாக வரிசையில் நின்று தங்களது அடையாள அட்டையை பன்ச் செய்கிறார்கள். கடைசி ஆள் உள்ளே நுழையவும் துறைமுகத்தின் வாசல் சாத்தப்படுகிறது.

கடுமையான இரைச்சல் ஒருவர் தலையில் பொருத்தப்பட்ட டார்ச் லைட் ஒளியும் துப்பாக்கி போன்ற சாதனத்தின் வாய்ப் பகுதியிருந்து வெளியேறும் நெருப்பும் மட்டுமே தெரிகிறது. எங்கும் தூசிப் படலம். மெஷின் நிறுத்தப்படுகிறது. மேலே ஐம்பதடி உயரத்தில் தெரியும் ஒரு துவாரத்தின் வழியே வானம் தெரிகிறது.

அது ஒரு Oil Tanker. ஒரு பெரிய ஹாலுக்கு இணையான ஐம்பதடி உயரம் உள்ள அந்த டேங்கரைப்பற்றிய விவரங்களைக் கூறுகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வேல்முருகன்.

கழிவுகளால் உறைந்துபோன அந்த டேங்கரின் உட்புறத்தை மணலும் காற்றும் அதிவேகமாக வெளியேற்றும் ஒரு கருவியால் சுத்தப்படுத்தும் பணி அவருக்கு.

தேங்கிய கழிவுகளால் விஷவாயுக்கள் உருவாகும் ஆபத்தானது, அந்த டேங்கர். செங்குத்தான பெரிய ஏணி வழியாக சுற்றிலும் மூடப்பட்டு தண்ணீர் லாரியைப் போல மேலே சிறிய வட்டவடிவ 1 1/2 அடி திறப்பை மட்டுமே கொண்ட அதன் வாசல் வழியாக வருகிறார்.

விண்வெளிப் பயணிபோல உடையணிந்தருந்தாலும் வெளியே வந்து காரி உமிழ்கிறார். அவரது எச்சிலை காட்டுகிறது கேமரா. கருத்து பார்ரை போன்ற திரவமாக இருக்கிறது அவரது எச்சில். அதிர்ச்சியடையச் செய்கிறது பார்ப்பவர்களை.

டேங்கரின் மேலே அமர்ந்து அந்த பணியைப் பற்றி சொல்கிறார். அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்கும் போது செம்போவாங் மிக அழகாக உள்ளது. ஏராளமான ஊழியர்களையும் காண முடிகிறது.

காலணி (Safty Shoe) பெல்ட்(Belt) கண்ணாடி (Ligh Protection Glass) (Face Mask) முகமூடி (Vespector) எனத் தனது பாதுகாப்பு சீரூடை பற்றியெல்லாம் விவரித்துவிட்டு "எல்லா பாதுகாப்பும் இருந்தாலும் இது ஆபத்தான ஒரு பணி" என்கிறார்.

நெடுநாட்களாக சுத்தம் செய்யப்படாத டேங்கர்களில் விஷவாயுக்கள் உருவாகும், டேங்கரில் இருக்கும் பிராணவாயு தன்மையை முதலில் 'Safty Instruction Group' ஆய்வு செய்த பின்னரே ஊழியர்களை உள்ளே இறக்குகிறார்கள்.

அவர்கள் கூறும் அறிவுரையின்படி கிளீனர்கள் உள்ளே அனுப்பப்படுகிறார்கள் என்று அவர் விவரிக்க, கரிபோல் இருக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் சாக்குகளில் அடைத்து கிணற்றில் நீர் இறைப்பது போல மேலே கொண்டு வரப்படும் காட்சி காண்பிக்கப்படுகிறது. அந்தப் பணியை செய்பவர்களிலும் அதிகமாக தமிழ் இளைஞர்கள், தாய்லாந்துகாரர்களும் உள்ளதாக சொல்கிறார்.

டேங்கர் கிளீன் செய்யப்பட்ட பின்னர் மணலால் டேங்கரின் உட்புறத்தை கிளீன் செய்யும் 'பிளாஷ்ஷிங்' என்கிற பணி தொடங்குகிறது.

10 Hp மோட்டர்களால் இயங்கக்கூடிய Blower fan மூலமாத்தான் தங்களுக்கு சுவாசிக்கக் காற்று கிடைப்பதையும், இரண்டடி தொலைவில் நிற்கும் ஆள்கூட தெரியாத அந்த இருண்ட டேங்கருக்குள் "திடீர்னு Blower fan நின்னுட்டா எங்க பாடு ரொம்ப கஷ்டம்" என்று அவர் சொல்லும்போது மூச்சு முட்டுகிறது.

ஆனாலும் அவர் இந்த கப்பல்துறையில் "எங்களை விடவும் பெயிண்டர்கள்தான் ரொம்பவும் பாவம்" என்று பெயிண்டர்களுக்காக இரக்கப்படுகிறார் ஏர்வாடி சாதிக்பாட்சா.

அதன்பிறகு மிகவும் உயரத்தில், அந்தரத்தில் பிடிமானங்கள் குறைவான இடங்களில் நின்று பெயிண்டர்கள் வர்ணம் பூசுகிறார்கள். வரிசையாக எந்த விவரணைகளும் இன்றி தொகுக்கப்பட்டிருக்கிறது. அக்காட்சிகளில் மயில் அகவுகிறது. அங்கெல்லாம் நிறைய தமிழ் முகங்கள். அவர்களை மேற்பார்வையிடும் சீன முகங்களையும் காண முடிகிறது. வார்த்தைகளின்றி, நிறைய வண்ணங்கள், ஊசலாட்டங்களோடு பெயிண்டர்களை அறிய முடிகிறது. அடுத்து இரைச்சல்களுக்கிடையில் கணத்த, ஒரு கப்பலின் முன்பாகங்களில் ஒரு பொருள் தூக்கி நிறுத்துகிறார்கள். அவர்களிடையே பணியாற்றும் மதுரை மாவட்டம் அசோக் எனும் இளைஞர் வழி ஒரு கப்பல் உருவாக்கத்தின் முதல் கட்ட பணியைக் காண முடிகிறது.

இருபதடி தொலைவில் வீசிக்கொண்டிருக்கும் அலைகளின் ஓரத்தில், உயரமானதொரு பீடத்தின் மீது கப்பலின் நிர்மாணம் தொடங்கும், அழகு ஆச்சர்யமளிக்கிறது.

அதிகம் கல்வியறிவு இல்லாத போதும் தான் இந்த துறைமுகத்தில் பணியாற்றும் எட்டு ஆண்டுகளில், மலாய், ஆங்கிலம், சீனம், தெலுங்கு, பர்மா, தாய் போன்ற மொழிகள் எல்லாம் பேசக் கற்றுக் கொண்டதாகவும், உலகின் எந்த ஷிப் யார்டிலும் வேலை செய்யும் "நானொரு சீனனாகவோ, வெள்ளையனாகவோ, இருந்திருந்தால் என்னோட வருமானமே வேறு" என்று அங்கலாய்க்கிறார்.

காண்டராக்டர்கள்தான் தங்களை வைத்து அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்றும் அதுவும், ஊழியர்களைவிட காண்டராக்டர்களுக்கே சாதகமான வழிமுறைகளை வைத்திருக்கிறது என்றும் சொல்கிறார். தஞ்சை ஜெயராமன்.

முதன் முறையாக அவர் சிங்கப்பூர் வந்தபோது காண்ட்ராக்டர்கள் சொன்னதுபோல, திருடர்களைப் போல பதுங்கியிருந்து, கிடைத்த வேலையை செய்துகொண்டு, வேலை கிடைக்கும்வரை பட்டினியாய் அலைந்ததையும் சொல்லுகிறார். "அப்போ மட்டும் எங்கயாவது நான் பிடிப்பட்டிருந்தா ரோத்தாதான்" என்று அவர் சொல்லவும் கேமரா இருண்டு விடுகிறது.

இப்போது விசித்திரமாக முடிவெட்டப்பட்டிருந்த ஒரு இளைஞர் நெடுநேரம் வார்த்தைகளின்றி உற்று பார்த்துகொண்டிருக்கிறார்.

மிகவும் கலங்கிய நிலையில் காண்ட்ராக்கடர்களால் ஏமாற்றப்பட்ட அவர் காவல் துறையிடம் பிடிபட்டு ரோத்தோ தண்டனை (நிர்வாணமாக்கப்பட்டு, பிருஷ்டத்தில் என்றும் அழியாத அடையாளமாக ஏற்படுத்தப்படும் ஒரு தண்டணை) - செயல்முறை குறித்து ஒளிவு மறைவின்றி அவர் சொன்ன விளக்கம் பார்வையாளரை அச்சுறுத்துகிறது.

அவர் தரப்பில் எவ்விதமான குற்றமும் இல்லாத அந்த அப்பாவி இளைஞரின் நிலை பயங்கரமானது. "என்னை ஏன் ஏமாத்தினீங்க? உங்களைப் பத்தி நான் போலீஸ்ல சொல்லுவேன்" என்று சொன்ன அவருக்கு "நீ ஏற்கனவே எங்கிட்டேர்ந்து ஓடிப்போயிட்டேன்னு ரிப்போர்ட் குடுத்திடுவேன்" என்று பதிலுக்கு காண்ட்ராக்டர் மிரட்டியதாக அவர் சொல்வதை கேட்டு, அவர்களின் பாதுகாப்பின்மை பரிதாபப்படக் கூடியதாய் இருக்கிறது.

அடுத்து ஒரு கப்பல் கட்டப்படும் பல்வேறு நிலையில் உள்ள காட்சிகள் அசோக்கின் குரலில் அதைப்பற்றிய விவரணை. தகடுகளால் பொருத்தப்படுகிறது, கப்பல், பிறகு அதற்கு வர்ணம் பூசும் புகைப்படங்கள் இறுதியாக கப்பல் கடலுக்குள் இறங்கும் பாதையில் மரச்சாலையில் தமிழ் இளைஞர்கள் கிரீஸ் தடவுகிறார்கள்.

முழுமையடைந்த அந்த கப்பலை பெரிய ஹைட்ராலிக் இயந்திரம் தள்ளுகிறது. பூர்த்தியடைந்த அந்த கப்பல் முதன்முறையாக கிரீஸ் தடவிய அந்த மரச்சாலையில் வழுக்கி ஓடி கடலுக்குள் இறக்குகிறது. ஊழியழ்ர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

இப்போது களைத்த நிலையில் இரவில் அழுக்கு ஆடைகளுடனும் களைத்த முகத்துடனும் எதுவும் பேசாமல் அயர்ந்து அதே குட்டியானை வாகனத்தில் வீடுதிரும்புகிறார்கள், நம் இளைஞர்கள்.

இரவின் நிசப்தத்தில் மீண்டும் அணைக்கப்படாத அதே தொலைக்காட்சியில் இப்போது செய்தி, ஹாங்கரில் அழுக்கான ஆடைகள், கதவோரம் புழுதி ஷீக்கள், சமையலறையில் கழுவப்படாத பாத்திரங்கள்.

படத்தின் ஆரம்பகாட்சியைப் போலவே ஏதோ ஒரு பார்சலைப்போல அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென அவர்கள் அனைவரும் காணாமல் போகிறார்கள்.

உலகப்பொருளாதார வீழ்ச்சியால் சிங்கப்பூரிலிருந்து... ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றம் என்கிற டைட்டில் அதன்மீது விழுகிறது.

இப்போது ஒரு படுக்கையை நோக்கி காமெரா முன் நகர அதன் தலையணையின் கீழே படபடக்கிறது, தவறவிடப்பட்ட வரவு செலவு நோட்டின் ஒரு தாளில்,

வாடகை - 100 வெள்ளி
சாப்பாடு - 120 வெள்ளி
வட்டிக்காசு - 110 வெள்ளி
போன் - 20 வெள்ளி
பஸ், ஆட்டோ - 30 வெள்ளி
இதரசெலவு - 30 வெள்ளி
-----------------
மீதம்..............
------------------
என்று வெறுமையாக உள்ள வரவு செலவு எழுதிய ஒரு குறிப்புகளோடு முடிவடைகிறது.
 

 
Related News
 • காட்சிமொழியில் ஒரு கலக வரலாறு

 • தமிழில் வில்லன்களும் சமீப இனவரைவு படங்களும்- ஒருபார்வை

 • திரையின்றி அமையாது உலகு

 • திரையில் விரியும் நிகழ் தளம்

 • மாற்றுத்திரை
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World