Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueமாற்றுத்திரை
 

ஒளிநிழல் அருங்காட்சியும் காலத்தின் மனசாட்சியும்

-தெ. வெற்றிச்செல்வன்


        மாற்றுச்சிந்தனை என்பது காலந்தோறும் தேவைப்படுவது, சமூகப் பண்பாட்டு விழுமியங்களில் தாக்கம் செலுத்துவது. அதிகார வரம்பு மீறல்களை எதிர்நின்று முகம்கொடுத்து உரிமைநிலை நாட்டலைச் சாதிப்பது.,. பொதுமைய வெளி தாண்டியும், நுழைய முடியாத இடங்களில், சந்து பொந்துகளில் ஒற்றையடிப் பாதைகளிலும் கூட பயணிப்பது.

       எடுத்துக்காட்டாக, பெரிய வணிக இதழ்ச் சூழலில் மாற்றுச்சிந்தனையை முன்வைக்கும் சிற்றிதழ்கள் என்பனவும், பிரம்மாண்டமான ஆங்கில மருத்துவக்கூடங்களின் அரங்குகளுக்கு மாற்றாக எளிய மக்களுக்கும் பயன்படும் சித்த மருத்துவம், ஒல்லியல் மருத்துவம் (Homoepathy) போன்ற மாற்று மருத்துவம், பெரிய திரை வெள்ளித்திரை என்பனவற்றுக்கு மாற்றாக குறும்படம் மற்றும் ஆவணப்படம் போன்ற மாற்றுத்திரை முயற்சிகளும் காலங்கள் தோறும் பேணப்படுவது வளர்த்தெடுக்கப்படுவதையும் காண்கிறோம்.

       சீனாவை வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் எனப் படிக்கும் நாம் நமது வரலாற்று ஆவணப் படுத்தல்கள் குறித்து போதாமை, இழப்பு குறித்து துயர்ப்பட வேண்டியுள்ளது. வரலாறு என்பது கடந்த கால அனுபவமும் நிகழ்கால அறிவும் கூடிமுயங்கப் பிறக்கும் எதிர்காலம் என்கிற புரிதலற்று. சிந்தனையில் சீழ் ஒழுகும் மூடநம்பிக்கையின் தொற்றுப்பரவலால் வரலாற்றைப் பேணுதல் அரிய பொக்கிசங்களைப் பராமரித்தல், சிந்தனையாற்றலை காலங்கள் தோறும் கண்ணிகளின் தொடர்ச்சி அறுவாமல் கொண்டு சேர்த்தல் என்னும் நீண்ட நெடிய செயல்திட்டப் பணியை மறந்தநிலை காரணமாக 'சோம்பேறித் தமிழர்கள்' எனும் அவலநிலை குறித்து பலரும் கவலைப்பட்டாயிற்று.

       அழகிய கூட்டுமூங்கில் குழாய்களை கண்ணாடிச் சில்லுகள் கொண்டு வழுவழுப்பாக்கி, மஞ்சல் தடவிப் பாதுகாக்கப்பட்ட சுவடிகளை, அக்குழாய்களில் அடைத்து அரக்கு கொண்டு மூடிப் பாதுகாத்த மரபிருந்தும், ஆடிப்பெருக்கு போன்ற சடங்கு சார்ந்து ஆவணங்களை தொலைத்து விட்டு நிற்கிறது தமிழ்மரபு. மழை, புயல், வெள்ளம், தீ என பற்பலப் பேரிடர்களுக்குத் தப்பி வந்த ஆவணங்கள் சில அச்சேறின. அரிய வரலாற்றுப் பதிவுகள் தரும் செப்பேடுகள், கல்வெட்டுகள் பலவும் சிதைந்து போயின. பாரமரிப்பின்றிக் குன்றின. சேர, சோழ, பாண்டிய பல்லவ சாளுக்கியப் போர்கள் சைவ வைணவ பௌத்த சமண, கிறித்தவ, இசுலாமிய மோதல்கள்... ஏகாதிப்பத்திய அறிவுச்சுரண்டல் எனப் பல காரணிகள் ஆவணங்களைப் பாதுகாப்பதில் இடர்பாடுகளை ஏற்படுத்தின.

       அவற்றை மீறி வந்துள்ள கொஞ்சநஞ்சம் வரலாற்றுத் துணுக்குகளைக் கொண்டு; சேகரிக்கப்பட்ட வாய்மொழி வாய்மொழி வழக்காறு சார்ந்த வரலாற்றுத் துளிகளைக கொண்டு வரலாற்றுத் துளிகளைக கொண்டு வரலாற்றுக்குச் சொந்தக்காரர் ஆனோம் நாம்.

       அச்சு எந்திர வளர்ச்சிக்கும் நூல் மற்றும் இதழ்கள் (Magazines) ஊடக வடிவில் ஆவணங்களைப் பேணக்கூடிய வாய்ப்பைத் தொடர்ந்து, இன்று பல்லூடக உலகில், செவிப்புலம் மற்றும் காட்சிப்புல வடிவில் ஆவணப்படுத்தல் சாத்தியப்பட்டுள்ளது.

       எனவே ஆவணங்களை குறித்த விழிப்புணர்வு வந்துவிட்ட ஒரு காலத்தில் நாம் இப்போது வசிக்கிறோம். பழங்கால ஆவணங்களைத் தேடலும் சமகால ஆவண்ங்களை பேணுதலும் இன்றைய காலத்தின் அதி தேவையாகியுள்ளது. அந்த வகையில் ஆவண மற்றும் குறும்படங்களின் முக்கியத்துவம் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

       ஆவணம் என்பது ஒரு சாட்சி, மனித சாட்சிகளைப் போன்று கேள்விகள் கேட்டால் ஆவணமும் பேசும்.குறுக்கு விசாரணை செய்வதே வரலாற்று ஆசிரியனது முக்கியமான தொழில் என்கிறார் மார்க் ப்ளான்ச். வரலாற்று ஆசிரியன் மட்டுமல்ல ஆவணப்படக்காரர்களும் சமூகத்தை குறுக்கு விசாரணை செய்கிறவர்களாவார்கள்.

       மாற்றுத் திரையின் முதற்கட்டமாக அடையாளப்படுத்தப்படுவது ஆவணப்படம் எனலாம். மாற்றுத்திரை இருக்கட்டும், திரைப்பட உலகின் முதற் கட்டமுயற்சியே ஆவணப்படம்தான். உலகளவிலும் சரி,தமிழக அளவிலும் சரி முதல் திரை முயற்சி என்பது ஆவணப்படமே .அங்கே லூமிய சகோதரர்கள் ஆகஸ்ட் லூமிய மற்றும் லூயிஸ்லூமிய என்ற இரு பிரெஞ்க்காரர்கள் ஒரு நிமிடம் ஒடக்கூடிய கருப்பு வெள்ளை மவுனப்படங்களைத் திரையிட்டனர்(1895 டிசம்பர் 28).

       பரிசு ரெயில் நிலையத்தில் ஒரு ரெயில் வண்டி வந்து நிற்றல்... ஒரு தொழிற்சாலைக் கதவு திறக்கப்பட ஏராளமான தொழிலாளர்கள் வெளிவருதல்...
இளம்தம்பதியர் குழந்தைக்கு உணவு கொடுத்தல்...
தோட்டக்காரர் செடிகளுக்கு ரப்பர் குழாய் மூலம் நீர்ப்பாய்ச்சல்

       இவையே அன்று லூமிய சகோதர்கள் திரையிட்ட முதல் படங்கள். இந்தியாவின் முதல் மௌனப்பட மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர், தஞ்சாவூர் மருதப்பமூப்பனர் என்பவர் சென்னையில் விமானம் ஒன்று திரையிறங்குவதைப் படம்பிடித்தார்(தமிழ் சினிமாவில் ஒளிஓவியர்கள் நூலின் முன்னுரை) ஆவணப் படங்களின் தந்தை என அழைக்கப்ப்டும் ராபர்ட்ஃப்ள உறர்ட்ட்டி இரண்டாண்டு காலம் எஸ்கிமோ மக்களோடு வாழ்ந்து அவர்தம் வாழ்வியல் குறித்து நானுக் ஆப் த நார்ச் என்கிற படத்தை எடுத்து உலகில் அரங்கில் ஆவணப்படுத்துனார்.

       ஆக ஆவண படங்கள் அன்றிலிருந்து இன்றுவரை, சமூக நிகழ்வுகள் பற்றி அறிஞர் - அரசியலாளர் - படைப்பாளிகள் - கலைஞர்கள் போன்ற ஆளுமைகள் பற்றி பேரிடர்கள் திடீர் திருப்பங்கள் நிறைந்த அரசியல் சம்பவங்கள் இவை பற்றி சடங்குகள், விழாக்கள் பற்றி பழங்குடிகள் / பால்நிலை திரிந்தோர் உள்ளிட்ட விளிம்பு நிலையினர் பற்றி அறிவியல் திழில்நுட்பம், மருத்துவம், கலைகள் இவை பற்றி என தொடர்ந்து பல பொருண்மைகளில் பரவலாக்கம் கொள்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரான ஜோரில் இவான்ஸின் கருத்துகள்:

       "திரைப்பட படைப்பாற்றலைப் பொறுத்தவரை கதைப்படங்களைவிட ஆவணப்படங்கள் அதிக சுதந்திரமானவை. வெவ்வேறு காலங்களில் நிகழும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை இணைக்க புதுவடிவங்கள் பயன்படுத்தமுடியும். ஆவணப்படத்தில் பதியப் பெறும் ஒரு நடப்பு நிகழ்ச்சி எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவணம் ஆகிவிடும்."

       ஆவணப்படங்களின் பயனும் கடமையும் என்ன? மக்களின் அன்றாட வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுதல் மூலமாக ஆவணப்படங்கள் பார்வையாளர்களை உந்துகின்றன. எழுப்புகின்றன. படிப்பிக்கின்றன, பாதிக்கின்றன. அதே சமயம் அவை பொழுது போக்கிற்கும் உதவுகின்றன. தனியே ஒரு ஆவணப்படம் இவை அனைத்தையும் ஒரு சேர செய்வதில்லை. இவற்றில் சிலவற்றை நிச்சயமாகச் செய்யும்" (சொல்லப்படாத சினிமா நூல் பக். 9)

       தமிழன் மிக முக்கிய படைப்பாளுமைகள் பாரதி, பாரதிதாசன், ஜெயகாந்தன், நீலபத்மநாபன், இந்திரா பார்த்தசாரதி, தி.க.சி. என நீளும் ஆவணப் பட வரிசையொன்று படைப்பாளிகளின் வாழ்வியல் பின்னனி; அவர்தம் படைப்பு முகிழ்ப்பு ஒத்திசைவு, முரண், சமகாலப் பொருத்தப்பாடு, அவர்களுக்கு சமூகத்தில் கிடைத்த அங்கீகாரம் இவை குறித்துப் பேசிச் செல்வதை காட்சிப்படுத்துவதைப் பார்க்கிறோம்.

       கருவில் குழந்தை வளர்ச்சி பற்றி - போலிச் சாமியார்களின் மாய்மாலங்கள், தந்திரப் புரட்டுகள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்றவற்றின் பங்களிப்புடன் வந்துள்ள ஆவணப்படங்கள், பால்நிலை திரிந்தோராது (அரவாணிகள்) துயர்ப்படுகாதையாக நீளும் அச்சுப்பிழை எனும் ஆவணப்படம், மத்திய தமிழகப்பகுதிகளில் நடைபெறக்கூடிய குழந்தைத் திருமணங்கள் குறித்த விசாரணையை நிகழ்த்தும் "பலிபீடம்" எனும் ஆவணப்படம், பா. கிருஷ்ணகுமார் இயக்கிய "ராமையாவின் குடிசை" ஆகிய ஆவணப்படங்கள், பறை, தீக்கொழுந்து, சணல் என நீள்கின்றன.

       பைசல் இயக்கிய "ஆழத்தாக்கம்" என்னும் படமொன்றில் நீரில் 'சில்லு' விட்டெறிந்து விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் விழுந்துவிட்ட நாணயத்தைத் தேட நீரில் இறங்குகிறார்கள். நீரில் மூழ்கி ஆழத்திலிருந்து பல பொருட்களை வெளியே எடுத்தெறிகிறார்கள். வந்து விழும் பல பொருட்கள் இன்றைய உலகமயமாக்கல் தந்த நுகர்வுப் பண்டங்களின் உறைகளும் சீசாக்களும். உல மயமாக்கல் எவ்வளவு ஆழமாக நம்மைத் தாக்குகிறது என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிறது.

       தமிழ்ச்சமூகத்தின் இழிந்த கோரமுகமான குறிப்பிட்ட சமூகத்துப் பெண்ணை 'பொட்டு' கட்டச் செய்து மனித உரிமை மீறலை, வன்கொடுமையை நிகழ்த்திவந்த கடந்த காலம் குறித்த பதிவு லீனாமணிமேகலையின் இயக்கத்தில் மாத்தம்மா படம், அதிலும் குறிப்பாக அருந்தியர் சமூகத்தில் இவ்வழக்கம் இருந்தது என்பதுதான் இப்படத்தின் கரு. ஆங்கில ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம் குறவர், ஒட்டர், பிரான்மலைக் கள்ளர் உள்ளிட்ட குறிப்பிட்ட சாதியர் கைரேகை ஆவணங்களைத் தருகிறது "ரேகை" எனும் படம்.

       ஆழிப்பேரலைக்குப் பின் குழந்தைகளின் மனவளம் - ஆளுமை செழுமையாக்கல் குறித்த "அலைகளை கடந்து" எனும் விவரணப்படமும், பாப்பாப்பட்டி கீரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட தேர்தல் நடந்தேறியறியதை பூரிப்போடு வருணிக்கும் ஜா. மாதவராஜ் இயக்கத்தில் வந்துள்ள "இதுவேறு இதிகாசம்" எனும் ஆவணப்படமும், தாமிரவருணிப் படுகொலை குறித்து காஞ்சனை சீனிவாசனது "நதியின் மரணம்" மற்றும் அழிந்து வரும் நதியின் நாட்கள் குறித்த "நொய்யல்" "என் பெயர் பாலாறு" போன்ற படங்களும் குறிப்பிடத்தக்கவை.

       பாண்டியன் இயக்கிய "அகவிழி" எனும் படம் மாற்றுத்திறனாளியாகவுள்ள பார்வையற்ற பனையேறி ஒருவர் தம் தொழிலில் கொண்டுள்ள பிடிப்பும் பார்வையில்லாத நிலையிலும் தன்மானத்துடன் பனை மரமேறி, ஒன்றிலிருந்து மற்றதற்குத் தாவி, தொழில் நேர்த்தியும் ஈடுபாடும் கொண்டு உழைக்கும் கதை ஆவணப்படமாக பாண்டிச்சேரி பகுதியிலிருந்து வந்துள்ளது.

ஆடோடிகள் கால்நடைகளுடன் இடம் பெயரும் ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றி பதிவாகியுள்ளது. பாம்பு பிடிக்கும் இருளர் வாழ்வை மையப்படுத்திய "நாங்க ஆதிவாசிங்க" படம், பெண்ணேஸ்வரன் இயக்கிய "The Profile of Doyen " என்கிற புரிசிஅ கண்ணப்பதம்பிரான் பற்றிய படம் என விரிவும் ஆழமும் கொண்டு செல்கிறது மாற்றுத்திரை வெற்றிகள் சார்ந்த தமிழ் ஆவணப் பட உலகு.

       பிறமொழிகளில் அநேக படங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. Super size me விரைவு உணவு குறித்த படம், Black Life- ஈராக்கில் அமெரிக்கா நிகழ்த்திய கொடூர போர் அபாய நிகழ்வுகள் குறித்த ஆவணம், சந்தியாசூரி இயக்கிய "I Love India"இடம் சார்ந்து நிலைகொள்ளாது தவிக்கும் மனப்போக்கு குறித்த படம், Operation Baby Lift என்கிற படம் (Dai Le இயக்கியது) என ஏராஅளமான படங்கள் மைக்கேல் மூர் இயக்கிய ஃபாரன்ஹீட் 9/11 சிறந்த ஆவணப்பட விருது பெற்ற படம். ஆண்டுதோறும் அமெரிக்காவில் 11,000பேர் கொல்லப்படுவதைக் கண்டிக்கும் படம் இது.

       சேலம் சிறுமி தனத்தின் ஒரு கண்ணைப் பறித்த சாதிய இழிவு குறித்த "ஒரு கண் பார்வை" ஒரு இனத்தின் மொழி / அறிவு ஆவணங்களை அழித்தால் அந்த இனத்தையே அழிக்கலாம் என்னும் குறியீட்டு நிகழ்வாக உலகின் தலைசிறந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டதை காட்சிப்படுத்தும் சோகிதரன் இயக்கிய "எரியும் நினைவுகள்" போன்ற படங்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

       மேலும் பெரியார், கிங்மேக்கர் (காமராசர்) மற்றும் மு. இராமசாமி இயக்கிய திருவள்ளுவர், சரஸ்வதி மகால் படங்களும், அண்ணா பெருங்கடலின் சிறு துளிகள், ரவீந்திரன் இயக்கிய அதக்கோட்டாசான் போன்ற படங்களும் வந்த வண்ணமுள்ளன. ஐரோப்பியரது தமிழ்ப் பணிகள் குறித்த ஆவணப்படம் (இயக்கம் தெ. வெற்றிச்செல்வன்) லெனின், அருண்மொழி, சொர்ணவேல், ஞானராஜசேகரன் இவர்களைத் தொடர்ந்து ஏராளமான படைப்பாளிகள் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

       ஆவணமும், கூடவே சிறிது புனைவுமாக ஆவணக் குறும்படம் (Docu-Drama) எனும் புதிய வகிமையொன்றும் தோன்றி வளர்ந்து வருவதைப் பார்க்கிறோம்

       குறும்படங்களைப் பொறுத்தவரை காலத்தால் மிகக் குறுகியதாக ஒரு சிறுகதை அல்லது குறுங்கதை ஒன்றின் திரைமொழியாக வெளிப்படுவன எனலாம்.

       ஓரிரு நிமிடங்களில் நம் கண்களின் வழியாக இதயத்துக்குள் நுழைந்து அதிர்வை ஏற்படுத்திப் போகும் வல்லமை குறும்படங்களுக்கு உண்டு.

       தமிழில் "ஆயிஷா" கர்ணமோட்சம், நாக்அவுட், டெட்ரர், குட்டி, மல்லி போல குறிப்பிடத்தக்க பரவலான பார்வையும் அங்கீகாரமும் பெற்ற படங்கள் தமிழக மற்றும் இந்தியத் திரை வரலாற்றில் தவிர்க்க இயலாதவை.

       சிலம்பம் சொல்லிக் கொடுக்கிற "வாத்தியார்" ஒருவர் மைதானத்தில் மெல்ல நடந்து வருகிறார். கற்றுக் கொள்ள ஆட்களின்றி தனது சிலம்புக் கழியை எடுத்துச் சுழற்றுகிறார் மைதானத்தில், தீடீரென நான்கைந்து சிறுவர்கள் ஓடி வந்து அவரது சிலம்பங்கழியை வாங்கி மூன்றாக உடைத்து "ஸ்டம்ப்" ஆக நட்டு கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறார்கள். படம் முடிகிறது. தமிழர்தம் மரபார்ந்த வீரவிளையாட்டுகளை மேற்கத்திய கலாச்சாரம் வீழ்த்திய அரசியல் பேசப்படுகிறது.

       ஒரு இளைஞர் கடையில் ஏதோ பொருள் ஒன்றை நெகிழி உறையில் (Carry bag) வாங்கி வந்து வீட்டில் கொடுத்துவிட்டு விரைகிறார். வீட்டில் பொருளை எடுத்து விட்டு உறையை காற்றில் வீச வேகமாக பரந்து வந்து வண்டியில் செல்லும் இவர் முகத்தில் படிய எதிர்பாராத இந்த செயலால் வண்டி நிலைகுலைந்து சரிய திரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர் என்று எழுத்துக்கள் முகத்திறைகின்றன.

       இரட்டைக்கோபுரம் மெல்ல இடிந்து சரியும் காட்சி திரையில் வருகிறது. சூரிய ஒளிபடாத இருட்டறைக்குள்ளேயே காலந்தள்ளும் முதியவர் ஒருவர் ஜன்னல் வழியாக லேசாக முதல்முறையாக ஒளிக்கதிர் எட்டிப்பார்ப்பதை அறிந்து ஆர்வமாகாகக் குதுகளிக்கிறார். கோபுரம் மொத்தமும் சரிய அவற்றை அறையில் பரவும் வெளிச்சத்தில் ஆனந்தமாகக் கத்துகிறார் பெரியவர். வானளாவும் அதிகார வீழ்ச்சி மற்றொரு புறம் மகிழ்ச்சியைத் தருகிறது.

       குடிசைக்குள் சூரியன் வரவிடாமல்
மாளிகையின் நிழல்களே
மறைத்துவிடுகின்றன.

என்கிற எப்போதோ படித்த தமிழ்க் கவிதை நினைவுக்கு வர சலனமுறுகிறோம் நாம்.

       மறைபொருள், திற (Open It), தரிசு, நகரும் சன்னல், கால்களின் ஆல்பம், வீணை, சாது கால்வாய், தப்பாட்டம், நடந்த கதை, லீவு, ஒருநாள் இப்படி பற்பல படங்கள் தமிழ் மாற்றுத்திரை முயற்சியை அடையாளப்படுத்தி வருகின்றன.

       செம்மலை மற்றும் செடி இரண்டு படங்களும் குறிப்பிடத்தக்கவை. குப்பை பொறுக்கும் இளைஞர் ஒருவன் உறக்கம் கலைந்து தெருவில் குப்பை தேடலுடன் நடக்கும் காட்சி... குப்பை பொறுக்கி காகிதம் விற்று கிடைத்த சிறு தொகையில் நோயாளித் தாய்க்கு மருந்து வாங்கி வருகையில் தனது குப்பைப் பிரதேசம் நுழைந்து எப்படி காகிதம் பொறுக்க மற்றவர் வரமுடியும் என குப்பை காகிதம் பொறுக்கும் இன்னொரு இளைஞனால் தாக்கப்படுதல் - அடிபட்டு மிதிபட்டு மருந்து மாத்திரைகளோடு வீட்டுக்கு ஓடிச்சென்று தயைக்காண்கிற காட்சி... சற்று நேரத்தில் தாய் இறந்துபடுகிற காட்சி என வறுமையின் அட்ச / தீர்க்க ரேகையை வரைந்து கட்டும் படம் செம்மலை.

       வீதிக்கு விரட்டப்படும் சர்க்கஸ் கலைஞர் ஒருவரால் விபத்தில் காயப்படும் தன் மகளின் மருத்துவச் செலவுக்காக நெரிசல் மிகுந்த நகர சாலையில் மிதிவண்டி சாகசம் செய்து பணம் திரட்டும் காட்சி, செடி படத்தில் இடம் பெறுகிறது. இப்படி விளிம்பு நிலை வாழ்வியல் அவலம் பேசப்படுகிறது.

       கடின உழைப்பும், புதிய உத்தி முறைகளும், அர்ப்பணிப்பும் மிக்க கலைஞர்களின் காத்திரமான பங்கேற்பு வியப்பூட்டும் அளவுக்கு வருவதைப் பார்க்கிறோம்.

       பெரிய திரையில் சொல்லமுடியாத - அத்தகு வாய்ப்புகள் நோக்கி நகரமுடியாத பலருக்கும் குறும்படங்கள் உன்னத வாய்ப்பளித்துள்ளன. சர்வதேசப் படவிழாக்களின் அங்கீகாரம், பயிற்சிப் பட்டறைகள் என இயங்குதளம் அமைந்தாலும் மேற்கொள்ளப்படும் பொருட்செலவை ஈடுகட்ட முடியாமல் போகுமளவு படங்களை சந்தைப்படுத்தவோ பரவலாக்கவோ முடியாமல் கலைஞர்கள் தவிப்பதை இங்கு சேர்த்தே பார்க்க வேண்டும்.

       இப்படங்களின் ஒளி ஓவியங்கள் - கோப்பு காட்சிகள் சேர்க்கை - தணிக்கை, பின்னணி இசை என நுட்பங்கள் கூடிய பல நிலைகளில் கடும் உழைப்பு மிகுந்த கால அளவு, பொருட்செலவு ஆகியனவும் தேவைப்படுகிறது.

       இன்னொருபுறம் விருது வழங்கும் நிறுவனங்களல்லாது பிற பொதுமக்கள் அரங்குகளை எட்ட முடியாத நிலையில் படங்கள் முடங்கி விடுவதைப் பார்க்கிறோம். குறும்படங்களுக்கான நுகர்வுத் தளத்தை விரிவுபடுத்த வேண்டிய கடமை சமூகத்துக்கு உண்டு.

       பொதுப் பார்வைக்குப் புலப்படாத ஒளிநிழல் அருங்காட்சிகளை சம காலத்தின் மனசாட்சியோடு கலையாக்கம் செய்யும் முயற்சிகள் தொடர வேண்டும்.

 

கட்டுரை எழுத உதவிய ஆவணப்படங்கள்

1. நதியின் மரணம்               -       ஆர். ஆர்.சீனிவாசன்

2. எரியும் நினைவுகள்       -       சோகிதரன்

3. ராமையாவின் குடிசை  -       பாரதிகிருஷ்ணகுமார்

4. பறை                                    -       லீனாமணிமேகலை

5. மாத்தம்மா                        -       லீனாமணிமேகலை

6. ஒருகண் ஒரு பார்வை -       ஞானராஜசேகரன்

7. நொய்யல்                          -       பாலமுருகன்

8. சுப்பிரமணிய பாரதியார் -   அம்ஷன்குமார்

9. Nanook of the North             -    ராபர்ட் ப்ளெஹார்டி

10. புரட்சிக்கவி                      -     காளீஸ்வரன்

11. 21 சுடலைமாடன்வீதி, திருநெல்வேலி டவுன் - ராஜகுமாரன்

 

கட்டுரை எழுத உதவிய குறும்படங்கள்

1. நாக் அவுட்                   - பீ. லெனின்

2. ஆயிஷா                       - சிவகுமார்

3. செடி                               - சுப்பாராஜ்

4. கர்ணமோட்சம்         - முரளிமனோகர்

5. பென்சில்                      - வெற்றிவீரன்

6. இன்று                           - தி.ஜா. பாண்டியன்ராஜா

7. செம்மலை                 - வேலு அரசப்பன்

8. வீணை                         - கு. டிம்பிள்

9. மறைபொருள்          - பொன்சுதா

10. அமெரிக்கா             - சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்கள் 

11. ஆழத்தாக்கம்         - பைசல்

12. திற                             - பிரின்சு என்னாரெசுபெரியார்

13. நடந்த கதை           - பொன்சுதா

14. பாரன்ஹீட் 9 / 11 - மைக்கேல்மூர்

15. Bicycle thieves        - விக்டோரியாடி சிகா

16. நகரும் ஜன்னல் - ஸ்ரீ மொழி வெங்கடேஷ்

17. சாது வாய்க்கால் - செல்வகணேஷ்

18. சியர்ஸ்                   - மணிகண்டன்

19. என்று விடியுமோ - பாரிதிவாசன் 

20. மாறுதடம்               - சங்கர்குமார்

 

கட்டுரை எழுத உதவிய துணை நூல்கள்:

1. சொல்லப்படாத சினிமா

2. மாற்றுகளம்

3. பெலபெலஸ் 

4. சினிமா கோட்பாடு.

 
Related News
 • காட்சிமொழியில் ஒரு கலக வரலாறு

 • செம்போவாங் கப்பல்துறை

 • தமிழில் வில்லன்களும் சமீப இனவரைவு படங்களும்- ஒருபார்வை

 • திரையின்றி அமையாது உலகு

 • திரையில் விரியும் நிகழ் தளம்
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World