Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபெரியாரின் ரஷ்ய பயணமும் அரசியல் மாற்றமும் - இர. சாம்ராஜா
 

 முனைவர் பட்ட ஆய்வாளர், பெரியார் சிந்தனை மய்யம்,
பெரியார் மணியம்மை பல்கலைகழகம், தஞ்சாவூர்.

பெரியார் ரஷ்யப் பயணம் மேற்கொண்ட காலகட்டமானது, ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்த காலக்கட்டமாகும். சிங்காரவேலர் போன்ற சிலரால் பொதுவுடைமை இயக்கமானது மெல்லத் தலைதூக்கி வந்த காலகட்டமாகும். சிங்காரவேலருடன் பெரியார் இணைந்து செயல்படுவதை அறிந்த ஆங்கிலேய அரசு 19.12.1928-இல் "பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் இந்திய தத்துவாசிரியரான ம.வெ. சிங்காரவேலரின் எண்ணப்படி பெரியாரின் சுயமரியாதை இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில், மன்னராட்சியைக் கவிழ்க்க சோவியத் உதவியைப் பெற்றதாகக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்ய வேண்டும் என்று வைஸ்ராய்க்குக் கடிதம் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் தான் பெரியாரின் ரஷ்யப் பயணம் நடந்தது. 1. அப்பயணத்தில் ரஷ்யாவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தாயகம் திரும்பிய பின் அதன் வெளிப்பாடாக அன்றைய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ரஷ்யப் பயணம்

பயணங்கள் மனிதனுக்குப் படிப்பினைகளைக் கற்றுத் தருகின்ற பல்கலைக் கழகம் என்று இராகுல் சாங்கிருத்யாயன் குறிப்பிட்ட கருத்தினைப் போல, ரஷ்யப் பயணம் பெரியாருக்குப் பொதுவுடைமை மீதான பார்வையையும், ஈடுபாட்டினையும் அதிகப்படுத்தியது. எனவே தான் ரஷ்யா சென்று சேர்ந்தவுடன் தன்னையும், தன்னுடன் வந்த இராமநாதனையும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பம் செய்து, உறுப்பினர் கட்டணமும் செலுத்தி, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகச் சேர்த்து கொண்டார்.

ரஷ்ய நாட்டில் பெரியாரும் உடன் சென்றவர்களும், கண்டும் கேட்டும் அறிந்தது பற்றியும், அவர்களை ரஷ்ய அரசாங்கம் வரவேற்றது பற்றியும், அங்கு உரையாடியது பற்றியும் சாமி.சிதம்பரனார் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது. அதாவது, "அங்கு சமதர்ம ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது? அவ்வாட்சியால் அந்நாடு அடைந்த பயன் என்ன? அந்நாட்டு மக்களின் நிலை எவ்வாறுள்ளது? அவர்கள் தங்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? என்பவற்றைத் தெரிந்து கொள்ளவே நீண்ட நாள் தங்கி அரசாங்க விருந்தினராக இருந்து, அந்நாடு முழுவதும் - சுமார் 15,20 பிரபல நகரங்கள் உள்படச் சுற்றிப் பார்த்தனர். அரசாங்க காரியாலயங்களையெல்லாம் பார்வையிட்டனர். பெரிய தொழிற்சாலைகளுக்கெல்லாம் சென்றனர். கல்வி நிலையங்களையெல்லாம் கண்டனர்.

நாடக அரங்குகள், சுவடி நிலையங்கள், படிப்பிடங்கள் ஆகியவற்றையெல்லாம் பார்த்தனர். தொழிலாளர் சங்கங்களைப் பார்வையிட்டனர். விவசாயப் பண்ணைகளுக்கும் சென்றனர். அவைகள் விஞ்ஞான முறையில் எவ்வாறு நடைபெறுகின்றன என்று அறிந்து கொண்டார்கள். அந்நாட்டு அரசாங்கத்தின் பொறுப்புள்ள அதிகாரிகளைச் சந்தித்தனர். அவர்கள் வாயிலாகப் பல உண்மைகளையும் கேட்டறிந்தனர். இவர்கள் அந்நாட்டுப் பொது மக்களாலும், நன்கு வரவேற்கப்பட்டனர். பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன. பல பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர். அவற்றில் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பற்றிக் கூறினர். இவ்வியக்கத்தை அந்நாட்டினரும் கொண்டாடினர்.2

இவ்விதமாகப் பெரியார், சுற்றிப் பார்த்து, வியந்து, பிடித்துப் போனதினால் தான், லுட்மில்லர் என்ற சோவியத் எழுத்தாளரிடம், 'சோவியத் நாட்டில் நான் கழித்த அந்த மூன்று மாதங்களே என் முழுமையான வாழ்வுக் காலமாகும்' என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி, தான் ஒரு சோவியத் குடிமகனாக வேண்டும் என்று சோவியத் குடியரசுக்கு விண்ணப்பம் போட்டுள்ளார். அதற்குப் பதிலாக உங்கள் நாட்டு மக்களை சோசலிச சமுதாய மாற்றத்துக்குத் திரட்டும் பணி உள்ளது என்று சமாதானம் செய்து அவரைத் தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.3

பெரியார் ரஷ்யாவில் இருந்த சமயம் ஸ்டாலின் ஆட்சி புரிந்து வந்தார். எனவே, அவரைச் சந்தித்துப் பேச ஒப்புதல் பெற்றிருந்தார். ஆனால், அந்த சந்திப்பு நடைபெறாமல் போயிற்று. அதற்கான காரணத்தினைப் பெரியார், வே. ஆனைமுத்துவிடம் குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறிய முடிகிறது. 'மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தின் (றெட் ஸ்ஃஉஅரெ) போர்டிக்கோவிலிருந்து மே1 பேரணியின் போது ஸ்டாலின் எல்லோருக்கும் சல்யூட் செய்தார். நாங்கள் 28.5.1932 இல் ஸ்டாலினைப் பார்த்துப் பேச நாள் குறிக்கப்பட்டிருந்தது. இத்ற்கிடையில் எஸ். இராமநாதன் அவரை டிராட்ஸ்கியவாதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அவரை எச்சரிக்கும்படியும் என்னிடம் கூறினார். நானும் அவரை எச்சரித்தேன். ஆயினும் அவர் தொடர்ந்து டிராட்ஸ்கியவாதிகளுடன் தொடர்பு கொண்டனர்.

டிராட்ஸ்கியவாதிகள் அன்றைய சோவியத்து அரசுக்கு எதிரானவர்கள். எனவே ஒரு முஸ்லிம் அதிகாரி என்னிடம் வந்து, உங்களுக்கு 28.5.32 இல் ஸ்டாலினிடம் பேச உறுதி செய்யப்பட்டிருந்த ஏற்பாடு இரத்துச் செய்யப்பட்டுவிட்டது. உங்கள் குழுவினர் 19.5.30க்குள் சோவியத் நாட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும். என்று கூறினார். 4 ஆக, பெரியாருடன் சென்ற எஸ். ராமநாதனின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளால் , பெரியார் - ஸ்டாலின் இருவருக்குமிடையே ஏற்படவிருந்த சந்திப்பு நடைபெறாமல் போனது, வரலாறுப் பிழை என்றே கூறலாம்.

அரசியல் மாற்றம்
1932-இல் தீவிரமான கம்யூனிஸ்டுகள் என்றால் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ம.சிங்காரவேலரும், ஈ.வெ.ராமசாமியும் தான் என அரசின் இரகசியக் குறிப்பு முடிவு செய்திருந்தது. எனவே தான் அவர்கள் இருவரின் செயல்பாட்டை, குறிப்பாகப் பெரியாரின் ரஷ்யப் பயணம் பற்றிய செய்திகளையும் இரகசியக் குறிப்பில் பின்வருமாறு குறித்துக் கொண்டது.

'சிங்காரவேலு அவர்கள் 'குடி அரசு' பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி வந்த காலத்தில் சுயமரியாதை இயக்கத் தலைவராகிய ஈவெ. ராமசாமி அவர்கள் மேலை நாடுகளில் சுற்றுப் பயணம் செய்வதற்குச் சென்றிருந்தார். ஈ.வெ.ரா 13.12.1931 அன்று மேல் நாட்டுப் பயணத்திற்குப் புறப்பட்டார். அவர் சென்று பார்த்த நாடுகளுக்குள் சோவியத் ஒன்றியமும் ஒன்றாகும். அவரது அயல்நாட்டுப் பயணத்தில் கனிசமான நட்களை சோவியத் நாட்டைப் பார்ப்பதில் செலவழித்தார். போஸ்வோஸ்னிக் என்று அறியப்பட்ட சோவியத் நாத்திக் சொட்சைட்டியின் விருந்தினராக இருந்தார். பகு டிப்ஜீனஸ், லெனின் கிராடு, மாஸ்கோ ஆகிய நகரங்களில் அவர் சொற்பொழிவாற்றினார். 1932 நவம்பர் அவர் இந்தியாவிரற்குத் திரும்பினார்.5

ரஷ்யா சென்று வந்ததின் பிரதிபலிப்பாக, ஈரோட்டில் சுமார் 300 பேர்களுக்கு மேலாக ஒத்துக்கொண்ட 'ஈரோட்டுத் திட்டம்' நிறைவேற்றப்பட்டது. இன்று மைய திராவிட இயக்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், மார்க்சிய லெனினிய வாதிகளும் தூக்கிப்பிடித்து நடைமுறைப்படுத்திட - சுயமரியாதை சமதர்ம வேலைத்திட்டம் கைமேல் இருக்கிறது. என்று வே. ஆனைமுத்து அத்திட்டத்தின் சிறப்பினை இன்றும் எடுத்துப் பேசும் அளவிற்கு அமைந்துள்ளது.

'சுயமரியாதை சமதர்ம கட்சி' என்ற ஓர் கட்சியை ஏற்படுத்தி, அதன் உறுப்பினர்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் காலம் "சுயமரியாதை சமதர்ம பிரச்சாரம் சூறாவளிப்பிரச்சாரமாய் நாட்டில் நடந்த காலம். இந்தப் பிரச்சாரத்தில் மக்கள் உணர்ச்சி கலக்கி மறிக்கப்பட்டது. சமதர்மப் பிரச்சாரம் என்றால் பட்டணத்திலாயினும் சரி, பட்டி தொட்டியிலாயினும் சரி, ஆயிரமாயிரமாக மக்கள் வந்து குவிந்து பலாப்பழத்தில் ஈக்கள் மொய்ப்பது மாதிரி மொய்த்துக் கிடந்த காலம். அதிகார வர்க்கத்திற்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்த காலமும், ஆட்சியாளர்களின் அடக்குமுறைப் பேய், கோரப்பற்களையும், கொடிய நகங்களையும் நீட்டி, சமதர்மிகள் மீது பாய்ந்த காலமும் இந்தக் காலம் தான்.6

1933 - ஆம் ஆண்டு தான் பெரியார் பொருளாதாரத்திற்கு முதன்மை தந்து பேசினார். பொதுவுடைமை பற்றி, சமதர்மம் பற்றி, ஏழை - பணக்காரன் பற்றி, உழைப்பின் பயன் பற்றி தொழிலாளி-முதலாளி பற்றி, பொதுவுடைமையும் நாத்திகமும் பற்றி, பொதுவுடைமையும் சாதியும் பற்றி எனப் பல நிலைகளில் பொதுவுடைமை சார்ந்த கருத்துகளைத் தீவிரமாகப் பேசியும் எழுதியும் உள்ளார். எனவே, அன்றைய ஆங்கிலேய அரசும், நிலைபிரபுக்களும் கதிகலங்கி என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துள்ளனர். பெரியாரிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் நீடித்தால், ஆங்கிலேய அரசின் அதிகாரத்துவம் பறிபோய்விடும் என்பதை உணர்ந்து நீதிக் கட்சியினரின் மூலமாகப் பெரியாரின் தீவிர சிந்தனைகள் தடுக்கப்பட்டு பெரியாருக்கும் சிங்காரவேலர் மற்றும் ஜீவாவுக்கும் இடையே உறுப்பினர்களுடன் விரிசலை ஏற்படுத்தி, சுயமரியாதையையும், சமதர்மத்தையும் / தனித்தனியாகப் பிரித்து, அவற்றின் பலத்தை இழக்கச் செய்து வெற்றி கண்டது ஆங்கிலேய அரசு. அந்நிலை நீடித்திருந்தால் தென்னிந்திய அரசியலில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

இருப்பினும் இன்குலாவுப் குறிப்பிட்டதைப் போல

நோக்குவதற்கு நமக்குத் துணிவிருந்தால்
வெண்தாடி
ஜெர்மானிய வெண்தாடியைக் காட்டும்
ஏற்கும் துணிவிருந்தால்
ஈரோடு நம்மை
லெனினிடம் சேர்க்கும்

Foot notes:
1. பா. திருமா வேலன், இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?
2. சாமி. சிதம்பரனார், தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு பாகம் - 1
3. டி. செல்வராஜ் ஜீவானந்தம் ப.38
4. வே.ஆனைமுத்து, முன்னுரை பெரியாரின் அயல்நாட்டுப் பயணக் குறிப்புகள்
5. உதவி செயலாளர், பாதுகாப்பு 896, தமிழ்நாடு ஆவணக் காப்பகம்
6. ஜீவாவின் பாடல்கள்

 
Related News
 • பச்சை இரத்தம்
  விவரணப் படம்

 • இணையதளப் படைப்புகளும் மலேசியத் தமிழரும்
  - சே. சுதா

 • பன்னாட்டுத் தமிழ் புதினங்கள்
  - தெ. வெற்றிச்செல்வன்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World