Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபன்னாட்டுத் தமிழ் புதினங்கள்
- தெ. வெற்றிச்செல்வன்
 

1

நுங்கும் நுனியுமாகப் பொங்கிப் பெருகும் காவிரியாற்றுப் புதுத் தண்ணீர் வரும் காலம் விடலைகளுக்கும் விடுத்தான்களுக்கும் நல்ல கொட்டம்தான். மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் செய்தி வானொலியில் கேட்டதும் இன்று வரும் நாளை வரும் என்று ஆற்றங்கரையில் காத்துக் கிடக்கும் சிறுவர்களும் உண்டு. 'புதுத் தண்ணிலக் கொட்டம் போடதிங்கடா சளி புடிக்கும்' என்று யாரோ ஒரு பாட்டியோ தாத்தாவோ தெருக்களில் புத்திமதி சொல்லிக் கொண்டிருப்பார்கள். மலசலமும் நரகலும் சமயத்தில பொணமும்கூட அடிச்சிட்டுவரும். பத்து நாள் போவட்டும் தண்ணீ தெளிஞ்சி வர்றப்போ குளிச்சிகலாமே எனவும் அறிவுரைக்கப்படும். ஆனால் யார் கட்டுக்கடங்குவது? அதிலும் புதுமையை எதிர்கொண்டு வரவேற்கும் ஒரு தலைமுறை எப்போதும் எல்லாக் காலத்துக்கும் இருந்து கொண்டேதானிருக்கும்/ இருக்கிறது. நேர்மாறாக புதுத்தண்ணிக்குப் படையல் போடுகிறவர்களும், தொடை வரை புடவையை தூக்கிக் கட்டிக் கொண்டு கால்களின் குறுக்கே தண்ணீரில் மல்லாத்திப் பிடித்து குதூகலிக்க, சிறு குழந்தையைக் குளிப்பாட்டுகிற தாயார்களும், கணவன் வெளியில் கிளம்பியதும் ஒரு மீறலோடு வீட்டிலிருந்து விரைந்தோடி மக்கட்டுகட்டி ஆற்றில் குதித்து புதுத் தண்ணீரில் கண் சிவக்கக் குளிக்கும் மனைவிமார்களும் இருக்கத்தான் செய்தார்கள், அக்காலத்தில். சளி பிடிக்குமென்று புதுத் தண்ணீர் வந்த அன்றே சில பெரியவர்கள் ஒவ்வாமை உடையவர்கள் கரையில் நின்று மூன்று சொட்டு நீரை அள்ளி உச்சந்தலையில் தெளித்துவிட்டுப் போவார்கள். 'புதுத் தண்ணில குளிச்சவொடனே ஒருவாய் தண்ணி குடிச்சிட்டா சளி புடிக்காது' என விதிவிலக்கு கொடுக்கிறவர்களும் பரிகாரம் செய்பவர்களும் இருந்தார்கள்.
 

புதுத் தண்ணீர் மட்டுமல்ல. புது வடிவெடுக்கிற எதுவும், அது கலை இலக்கிமாயினும் வேறு எதுவாயினும் 'தொடக்க காலம் ஆர்ப்பரிப்பும் ஒவ்வாமையும் முரணிக்கொள்ள நேர்வது இயல்பு. புதினங்கள் தமிழ்ச் சூழலுக்குள் வந்தபோது, சாதக பாதகமான கூறுகளுடனும் சாங்கோபங்கமான விமர்சனங்களுடன் எதிர்கொள்ளப்பட்டன். "எல்லாம் எலெக்டிக் வேகம்! எல்லாம் பிரகாசவசியம்! அடிதடி, கொலை, கொள்ளி, அரஸ்டு, விசாரணை, ஜெயில், ஜெயிலிருந்து தப்புதல் முதலிய விஷயங்களைப் படிக்க படிக்க நீங்கள் பேராச்சரியமடைவீர்கள்!" என்று ஒரு விளம்பரம் வாக்குறுதி அளித்தது. (நாவலும் வாசிப்பும். ப. 18 ). கூடுமானவரை நாவல் தொடர் வெளியிட்ட இதழ்களும், நாவலுக்கென தனி மாதாந்திர இதழ்களும், பியித்துக் கொண்டு சந்தையில் விற்பனையான நாவல் ரகங்களும், மேடையேறிய நாவல்களும், தரமான நாவல்களுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை ராயல்டி வழங்கப்பட்டதும் நடைமுறையில் இருந்தபோதிலும், நாவல்களைப் படித்தால் பெண்கள் கெட்டு விடுவார்கள். புராணங்களைப் படிக்காமல் ஏன் புதினங்களைப் படித்துப் புத்தி பேதலிக்க வேண்டும் என்பதான வியாக்யானங்களும் சைவ அறிஞர்களாலும், தனித் தமிழ் இயக்கத்தார், காந்திய வழி நின்றோர் ஆகியோராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதையும் தொடக்க கால நாவல்கள் குறித்த ஆய்வுகள் சொல்லுகின்றன.

'நாவல் என்னும் சில கதைகளோ! அம்மம்ம! அவை படிப்பவர்களை வெறும் காமாதூரர்களாக்கி அவர்கட்குத் தீயொழுக்கத்தையுண்டு பண்ணி அரந்தைக் கடலிலமிழ்த்தி விடுகின்றன'* என்றும்,

"மிஸ் தளுக்கு சுந்தரி' என்ற மேன்மையான நூலை எழுதிய ஆசிரியரைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். சுமார் 27 தமிழ் நாவல்களை அவர் எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு நாவலுக்கும் சராசரி மூன்று பாகங்களுண்டு, அவருடைய 60 வால்யூம்களையும் அடுக்கி வைத்தால் ஒரு பெரிய அலமாரி நிறைந்து விடும்...

என்ன நாவல்கள்! எனன மேன்மையான சித்திரங்கள்! அந்த இருபத்தேழு நாவல்களையும் தராசில் வைத்து நிறுத்தால் இரண்டு மூன்று மணங்கு எடையிருக்கும்! அந்த 27 புத்தகங்களையும் அடுப்பில் போட்டு எரித்தால் ஏழெட்டு பேர் வெந்நீர் ஸ்னானம் செய்வதோடு அத்தனை பேருக்கும் சோறு கூட சமைக்கலாமே! ஒரு 'ஸெட்' புத்தகத்தை மருந்துக் கடையில் கொண்டு போய்ப் போட்டால் ஒரு வருஷத்துக்கு கடைக்காரன் பொட்டணம் கட்டிக் கொடுப்பானே! எல்லாவற்றையும்விட அந்த 27 புத்தகங்களையும் நிரப்பினால் கும்பகோணம் முனிஸிபாலிட்டி குப்பைத் தொட்டி ஒன்று பூராவாக நிரம்புமே!"* என்றும்,

சுதந்திரச் சங்கு வெளிப்படுத்திய 'நாவல் ரகசியம்' நாவலைக் கண்டித்த அறிவாளர்களின் பொதுக் கருத்தைக் காட்டுகின்றது என்று சொல்வது பொருந்தும்.

"1. புத்தகத்தின் பெயர் ஒரு ஸ்திரீயின் பெயராகத் தானிருக்க வேண்டும். பெயரிலும் ஒரு புதுமை கலந்திருக்க வேண்டும். 'மிஸ் லீலா காமினி', 'மோஸ்தர் வல்லிபாய்' - இந்த ரகங்களில் பெயர் வைக்க வேண்டும்.

2. கதைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ரெய்னால்ட், லீக்வே போன்ற ஆங்கில நாவலாசிரியரின் கதைகளைத் தழுவி எழுதிவிடலாம். கதையில் குறைந்தது ஒரு டஜன் காதலர்களும், அரை டஜன் விபசாரிகளும், பத்து டஜன் திருடர்களும், சில துப்பறிபவர்களும் இருந்தே தீர வேண்டும்.

3. கதை ஆரம்பத்தில் கொலை நடக்க வேண்டும். மத்தியில் ஆங்காங்கு திருட்டு இருக்க வேண்டும். எங்கேயாவது பற்றிக்கொண்டு எரிய வேண்டும். இவைகளெல்லாம் நவீன நாவலின் லக்ஷணங்கள்.

4. சிற்றின்ப மூட்டும் வண்ணம் கதைகளைச் சித்திரித்தால்தான் காசு. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம், ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம் - இந்த தினுசுகளில் புத்தகம் எழுதினால் ஒருபோதும் விற்பனையாகாது. உஷார்! ஸ்திரீ வாசகர்களின் மனத்தையும் கவர முடியாது. ஆகவே ஜாக்ரதை"* என்றும் தொடக்ககாலப் புதினங்கள் குறித்த எதிர் வினைகளுக்குச் சான்று காட்டுகிறார். ஆ.இரா. வேங்கடாசலபதி.

எனினும் இந்த மதிப்பீடுகளைக் கட்டறுத்துக்கொண்டு புதினங்கள் வளரத் தொடங்கியதோடு புதிய பரிசோதனை முயற்சிகளும், புதிய கதை சொல்லல் முறைகளும், வடிவ மாற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வந்த வண்ணமுள்ளன.

2

"The symphony is the antithesis of Novel. If the novel is speech without rhythm, the symphony is the rhythm without speech. To resume the three arts of dancing, music and poetry began as one their source was the rhythmical movement of human bodies engaged in collective labour. And so later there emerged out of poetry the prose romance or novel is which poetical diction has been replaced by common speech and rhythmical, integument has been shed -expect in so far as the story is cast in a balanced, harmonious form"

என்று பேரறிஞர் ஜார்ஜ் தாம்சன் சொல்லியிருப்பதைப் போல கூட்டு உழைப்பின் (Cஒல்லெcடிவெ ளபொஉர்) மூலம் உருவான நாடகத்திலிருந்து புதிய உற்பத்திமுறைகொண்ட சமூக இயங்கியலின்படி இசை தனியாகவும், வசனம் தனியாகவும், நடனம் தனியாகவும் பிரிக்கப்பட்டு தனித்தனி வடிவங்களாக வளர்ந்தன. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையில் காப்பியமாகவும், தனிப்பாடல்களாகவும் வெளிப்பட்ட இலக்கிய வடிவங்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையில் புதினமாகவும் சிறுகதைகளாகவும் வடிவங்கொண்டன.

முதலாளித்துவ (அச்சூஊடக வளர்ச்சி) உற்பத்தி கவிதையிலிருந்து இசையைப் பிரித்து, எதுகை மோனன், சந்தம் போன்ற இலக்கணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உரைநடைமற்றும் வசனகவிதை வடிவங்களை உருவாக்கி செழுமைப்படுத்தியதைப் போல, உரைநடை வகைமைகளை பெரிய அளவுக்கு வளர்த்தெடுத்தது. எனவே ஏராளமான புதினங்களும் சிறுகதைகளும் உலகெங்கிலும் தோற்றப்பாடு பெற்றன.

கதைத் தொடர் உரை (Narrative) உரையாடல் (Dialogue) வரணனை (Description) விளக்கவுரை அல்லது கருத்துரை (Commentary) பாத்திரத்தனியுரை அல்லது நனவோட்டம் (Interiour monologue) என்று வ்கைமைகளாகக் கிளைத்து உலகளாவி வளர்ந்த நாவல் தமிழில் ஆங்கிலேயர் ஆட்சியில், ஆங்கிலம் பயின்ற புத்தி ஜீவிகளால் (ஆங்கில நாவல் பரிச்சயத்தோடு ) அறிமுகப்படுத்தப்பட / எழுதப்படலானது. அந்தகால (19 ஆம் நுற்றாண்டு )ஆங்கில அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என்பன எந்த அளவுக்கு அழுத்தத்தை தமிழ் மக்கள் மீது திணீத்தனவோ அதே அளவு அழுத்தம் ஆங்கிலத்திலிருந்து பரவிய தமிழ் நாவலுக்குள்ளும் பொதிந்திருந்தது. அதாவது, பெரிதும் மேலைத் தாக்கம் கொண்டதாக விளங்கியது எனலாம்

இத்தனைக்கும் நவீன கதைவடிவம் தோன்றியதற்கு எத்தனையோ காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாடு உட்பட இந்தியாவுக்கு ஒரு கதை சொல்லும் பாரம்பரியம் இருந்திருக்கிறது. வேத, புராண, இதிகாச கதை சொல்லல் பாணிகள், கதாசரிதசாகரம், பஞ்சதந்திரம், ஜாதகக் கதை, புத்த, சமண கதை வழக்குகள், ரகுவம்சம் போன்ற மகா காவியங்கள், சிலப்பதிகாரம் உட்பட்ட காப்பியங்கள், நாடோடிக் கதைப் பாரம்பரியம்... இவ்வாறெல்லாம் செழித்து வளர்ந்த மரபு முறை அது என்றாலும், நாவல் என்கிற நவீன வசன வடிவத்தைத் தன் வயப்படுத்திக்கொள்ள சிலபல பத்தாண்டுகளை தமிழ் கடக்க வேண்டியிருந்தது.

"சொல்லுக்கு உயிரைவிட்டு சோதாவாய் - வார்த்தைகளை
மல்லுக்குநின்று மடிபிடித்திழுத்து வந்து"*

செப்படிவித்தைப் புலமை கழைக்கூத்தாடிய காலமதில் யாப்பு நீர்த்து வசனம் வேகமாகப் பரவத்தொடங்கியது. உதாரணமாக முதல் நாவலாசிரியர் வேதநாயகம் பிள்ளையின் சுகுணசுந்தரி இப்படித் தொடங்குகிறது;
 

"கடலை மேகலையாக உடுத்த பூமிதெவியின் திருமுக
மண்டலம் போன்ற புவன சேகரமென்னும் நகரத்தை
ராஜதானியாக உடைய திராவிட தேசமுழுமையும்
பரிபாலனஞ் செய்து மநுநீதி தவறாமல் அரசாக்ஷி செய்து
வந்தான்"*
இப்படியான பாணிகளில் தொடங்கி இன்று நாவலின் நடை, உத்தி, சொல்முறைமை ஆகியனவற்றில் ஏற்பட்ட பெருமளவு மாற்றங்களை நாம் வரலாற்றுக் கண்ணோட்டம் கொண்டு அவதானிக்க முடியும்.
இதில் 'தமிழில் நாவல் இன்னும் எழுதப்படவேயில்லை' என்கிற மேதாவிகளின் சவடால்களும், ஒரு நல்ல நாவலை இனிதான் எழுதவேண்டும் என்கிற அடக்கத்தை அறிவித்துக் கொள்வதான பம்மாத்துகளும் தமிழ்ச்சூழல் கிளப்பிய வாதப் பிரதிவாதங்களைக் கடந்து 'நாவல்' வளர்ந்து வருகிறது.

"சும்மாயிருந்து சுகங்கண்ட நிலப்பிரபுக்கள் இயற்கையிகந்த கற்பனைகளிலும் மகோன்னதமான பொருள்களிலும் ஊறிப்போன காவியங்களைச் சுவைத்தனர். மத்தியதர வர்க்கத்தினரோ கல்வியைக் கருவியாகக் கொண்டு கத்திக்குப் பதிலாகப் புத்தி வீச்சினால் வாழ்பவர்கள். பொருளைப் பொருளல்ல என்று கூற முடியாதவர்கள். வாழத்துடித்த அவர்கள், உலகை மாயையெனக்கொண்டிருத்தல் இயலுமோ?"**

ஆக, நிலமானிய அமைப்புச் சமுதாயத்தினது சிதைவின் விளைவாக உருவாகிய புதிய வாழ்க்கைத் தத்துவமெ நாவலிலக்கியம் தோன்றுவதற்கு வழி வகுத்தது. அதோடு துவக்ககால நாவல்கள், சரித்திரம் சம்பந்தப்பட்டதாகவும், பெருமளவு உண்மை நிகழ்வுகளுக்குதந்தாகவும் அமைந்ததைப் பரக்கக் காணமுடிகிறது. இதன் காரணமாகவே 'பிரதாப முதலியார் சரித்திரம்' , 'கமலாம்பாள் சரித்திரம்' , 'சுகுணசுந்தரி' , 'மதிபெற்ற மைனர்' , 'கோவிந்தன்' போன்ற தலைப்புகளில் நாவல்கள் வெளிவந்தன பெருமளவு.

இவ்வாறு உண்மைத்தன்மை தோன்ற பெருவாரியாக உற்பத்தி செய்யப்பட்ட நாவல் யந்திர உற்பத்திப் பொருளின் மற்றுமொரு பண்பையும் தவிர்க்க முடியாதபடி தொடக்கத்திற் பெற்றுக்கொண்டது. சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் மற்றப்பொருள்களைப் போலவே அச்சுத் தொழிலும் அதன விளைபொருளும் இயலெளிமை வாய்ந்தனவாக்கப்பட்டன. அதாவது ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே நுண்ணிய வேலைப்பாடுடன் செய்வது, பழைய கைபணி முறை, நவீனயந்திரம் வெவ்வேறு பொருட்களை ஒரே ' அச்சில்' இலட்சக்கணக்கான உற்பத்தி செய்து தள்ளுகிறது. இதுவே இயலெளிமைப்படுத்தல் (Streamlinin ) எனப்படும்* என்கிறார் கலாநிதி க.கைலாசபதி.

அளவு மாற்றம் மற்றும் பண்பு மாற்றம் இவற்றுக் கிடையிலான எதிர்வு மற்றும் முன்பு சொன்ன முதலாளித்துவ உற்பத்தி ஆகிய குணாம்சங்களைக் கணக்கில் கொண்டுபார்க்கும் போது, தமிழ் நாவலசிரியர் வெகுமக்கள் ரசனையைக் குறிவைப்பதாக 'சாலக்கு' செய்துகொண்டு துப்பறியும் , க்ரைம் நாவல்களை உற்பத்தி செய்து தள்ளினர். இதன் காரணமாக ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', ' கடலுக்கு நடுவே' போன்ற நாவல்கள் மற்றும் இன்னபிற கவனிப்பு பெற வேண்டிய படைப்புகள் தமிழ்ச்சூழலில் பின்தள்ளப்பட்டது; வெகுசன் ஊடகங்களிலிருந்து கவனிப்புப்பெறாமல் ஒதுக்கப்பட்டது குறித்தும் ' நாவல்' பரந்துபட்ட தளத்தில் பயணிக்கப்படாமல் போகவும், ஒருவித ' தட்டைத்தன்மை' தொடர்ந்து தமிழ்நாவலுலகில் ஏற்பட்டது குறித்தும் சாங்கோபாங்கமாக விமர்சிக்கவேண்டிய தேவை இருக்கிறது.

தமிழகத்தமிழ் நாவல், ஈழத்தமிழ் நாவல், மலேசிய / சிங்கப்பூர் தமிழ் நாவல் என்கிற அடையாளங்கள் தாண்டி தமிழ்நாவல் சர்வதேசத் தன்மை பெற்றுத் திகழ்ந்து வருவது தமிழரின் அகலுலகப் பரம்பலால் சாத்தியமாயிற்று என்று உறுதிப்பாட்டுடன் பறை சாற்றமுடிகிறது.

3

இந்த வரலாற்றுப் பின்னணி செய்திகளின் வழியே பயணம் செய்து நாம் பொ. கருணாகர மூர்த்தியின் நாவல்களுக்கு வந்து சேர்கிறோம்.

பொ. கருணாகர மூர்த்தி பேரினவாத ஈழ யுத்தம் காரணமாக வெளியேறி ஜெர்மனியில் புகலிடம் தரித்துள்ள படைப்பாளி. ஏலவே அவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்துள்ள நிலையில் ' ஒரு அகதி உருவாகும் நேரம்', 'மாற்றம்', வாழ்வு வசப்படும்' ஆகிய குறுநாவல்கள் அடங்கிய தொகுதி இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

" அண்ணர், மெத்தத்கவனமாய்க் கேளுங்கோ, இந்தக் குரூப்பில் நீங்கள் தான் எல்லாரிலும் வயதில பெரியவராயிறியள். மற்றவங்களையும் விடுப்பு விண்ணானம் பார்க்கவிடாம கவனமாய்க் கூட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கிறது உங்களுடைய பொறுப்பு"

என்று வெகு யதார்த்தமாகத் தொடங்குகிற நாவல்; சட்டநாதன் உள்ளிட்ட நான்கு ஈழ அகதிகள், மேலும் அவர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவைக்க முயலும் டிராவல் ஏஜெண்டுகளான ராதா மற்றும் ஆசிரியர் இவர்களுக்கிடையேயான கதைத் தொடர் உரை (Narrative) மற்றும் உரையாடல் (Dialogue) ஊடாக சொல்லப்படுகிற / பேசப்படுகிற, தாயக / புகலிட, அரசியல் / சமூக போக்குகள்; வாழ்வியல் சிக்கல்கள்; ஏக்கங்கள்; நம்பிக்கைகள்; இயலாமைகள்; தொழில் சாமர்த்தியங்கள்; அப்பாவித்தனங்கள் இவற்றுடன் அனாவசிய வார்த்தைச் சதைப்பிதுக்கங்கள் இன்றி அளவாக நேர்த்தியாக நேர்க்கோட்டு முறையில் இயங்கும் கதைத்தளம்.

யுத்தம் காரணமாக பல்கிப் பெருகி புதுவடிவெடுத்துள்ள டிராவல் ஏஜென்சித் தொழில் மற்றும் அதன் நுட்பங்கள் பற்றி நாம் நிறையவே உணர்ந்து கொள்ள கதை இடமளிக்கிறது.

அகதிகளின் சனத்தொகை பெருகிவருவதன் தவிர்க்கப்பட முடியாத தேவையைப் பூர்த்தி செய்யுமுகத்தான் டிராவல் ஏஜெண்டுகள் கோலோச்சுகின்றனர். ஒருபுறம் சேவையையும் பிறிதொருபுறம் வணிக லாபத்தையும் ஆக முரண்பட்ட கோணங்கள் வெட்டிக்கொள்ளும் மையப்புள்ளி கொண்டு விளங்குகிற தொழில் அது.

போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து 'கோல்மால்' வேலை செய்து எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டிய ஏஜென்சிக்காரர்கள் தேவை எந்தப் புரட்டுக்கும் உட்பட்டு எப்படியாவது யுத்தக் களத்திலிருந்து தப்பியோடி உயிர்வாழ, பெருமளவு சிதிலமடைந்த யுத்தப் பொருளாதார தேசமொன்றின் பற்றாக் குறைகளிலிருந்து வெளியேறி பொருளியியல் தேடல் என்று இரண்டு அம்சங்களின் சந்திப்புகளின் இடைவெளியில் கதை நகர்கிறது.

இந்த இடத்தில் பொ. கருணாகரமூர்த்தி தமது முன்னுரையில் கூறியிருப்பதைப் பொருத்திப் பார்த்தால் சாலச் சிறந்ததாக இருக்கும்.

'பல அடுக்குமாடித் தொடர் ஒன்றில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உயிர் காக்க வேண்டின் சிலருக்கு இன்னொருவரின் வீட்டினுள் புகுந்து பின் கதவால் வெளியேறி அங்குள்ள மாடிப்படியால் இறங்கிக் கீழ் ஓடினாலே உண்டு என்ற நிலைமை. அவ் வயல் வீட்டுக்காரரும் அங்கில்லாத நிலையிலும் கதவு திறக்கப்பட வேண்டிய அவசியம். இந்த ஏஜெண்ட் பூட்டியுள்ள அக்கதவுகளை உடைத்து உயிர்காக்க வைக்கிறான். அல்லது ஒரு தேசத்தில் புரட்சி வெடிக்கிறது. அதன் அரசே வெடிகுண்டுகளையும் இரசாயன வெடிகுண்டுகளையும் வானில் இருந்து விதைக்கிறது. நாடெங்கும் தீப்பிடித்துக்கொள்கிறது. உயிர் காக்க ஜனங்கள் அயல்நாட்டின் வேலியைத் தாண்டி நுழைகிறார்கள். மரணம் துரத்திவர வயதானவர்களும், நோயாளிகளும், சில கர்ப்பிணிப் பெண்களும் உயரமான வேலிகளைத் தாண்ட முடியாது தவிக்கும் போது... இந்த ஏஜெண்ட் அம்முள் வேலிகளை வெட்டி விடுகின்றான்"*

பிரிதொரு இடத்தில்,

"மரணம் மகத்தானது தான்
உயிர்வாழ்தல் அதைவிடவும் மகத்தானது ஆக இருக்கிறது
அன்றேல் அகதிப் பயணங்கள் ஏன் அமைகின்றன?"

என்ற ஜெயபாலனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி அவர் கேட்கும் கேள்வி இங்கு கவனத்தில் எடுக்கவேண்டியதாகிறது. எனவேதான் வாய்மையிடத்துப் புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் இங்கு டிராவல் ஏஜென்சியின் பொய்மை வாய்மையாகி விடுகிறது.

தலைமாற்றம் செய்யப்பட்ட கடவுச்சீட்டுடன் சமத்காரமாக விமானமேறி ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டுக்குச் செல்ல ஏஜென்சிக்காரர்கள் தந்திரோபாயங்கள் பலவற்றைக் கற்பித்தும் சட்டநாதன் அப்பாவியாக திரும்பிவந்து நிற்கிறார். ஒரு தடவையல்ல முன்று முறை. இதற்காக அவர்தந்த தொகை தாண்டி, [ "இல்லை சட்டநாதண்ணை நமக்கு தரப்போறது ரெண்டு லட்சம்... நாம் இவரை அனுப்பச் செலவழிக்கிறது ஆறு லட்சம்... " "பாவம் நாலு பிள்ளைகள் குடும்பத்தில் எவ்வளவு எதிர்பார்ப்பிருக்கும் " (பக்.26) ] ஏஜென்சிக்காரர்கள் தமது பரோபகாரச் சிந்தனையால் கடன்பட்டும், தங்கள் சங்கிலி முதலியன விற்றும் எப்படியும் அவரை மேலைத்தேயம் அனுப்பிவிடும் திட்டம் காரணமாகவும், அனுப்பாமல் விட்டால் சகதொழில் போட்டிக்காரர்களிடமும், பயணிகளிடமும் அந்தஸ்து இழக்கவேண்டிய நெருக்கடி காரணமாகவும் கடுமையான முயற்சிகள் எடுத்தும் சட்டநாதன் பரிதாபகரமாக தோற்றுத் திரும்பிகிறார். முதல் முறை விமான மேறுவதற்குள்ளும், இரண்டாம் முறை ஜெர்மனிவரை சென்று விமான நிலையத்தில் சூட்கேஸ் மாற்றி எடுத்த குளறுபடியால் திருப்பப்பட்டும், முன்றாம் முறை லண்டன் அனுப்ப ஏற்பாடுகள் செய்தும் தோல்வி...அப்பட்டமான தோல்வி!

அரசியல் விஷயங்கள் அங்கதத்துக்கூடாக வெளிக்கிடுக்கின்றன. ஏர்லங்காக்காரன் 'மே மொக்கதி கரன்னே ' ( இங்கு என்ன செய்கிறாய் ? ) என்று பிடிச்சுக்கொண்டு கொழும்பு ஏற்றிவிட, கொழும்பு சேர்ந்து அவர் பேசுகிற இந்த தொலைபேசி உரையாடலுடன் நாவல் முடிகிறது.
"இங்கு இந்திய அமைதிப்படை உடனே வெளியேற வேண்டுமென்று கொழும்பில் ஜே.வி.பி. காரன்கள் கலகம் செய்றான்கள்.இந்தியச் சாமான்கள் பருப்பு... உளுந்து... பயறு விற்கிற கடைகள் எல்லாம் அடிச்சி உடைக்கிறான்கள். இனக்கலவரமாய் மாறலாமோ ? என்ற பயத்தில் ராமகிருஷ்ணமிஷன் மற்றும் கொவில்கள் எல்லாம் அகதிமுகாம்களாக்கப்பட்டுத் தமிழ்ச்சனங்கள் போய் தஞ்சமடைந்தபடி இருக்கிறார்கள். நானும் ' கப்பித்தாவத்த ' பிள்ளையார் கோவிலிலதான் இருக்கிறேன். இதில் போன் பேச போஸ்ட் ஆபீஸ் வந்தனான்.பதட்ட நிலைமையாய் இருக்கிறதால நான் உடனே கொவிலுக்குத் திரும்ப வேணும்..."(பக். 30 )

இப்படி சட்டநாதனது போக்கு, மிக்க அப்பாவித்தனம், தகவமைப்பில் பொருத்தப்பாடு பெறுவதில் சிக்கலுள்ள நிலை ஆகியவை அதீத நகைச்சுவை உணர்வோடு படம்பிடிக்கப்படுகிற கதையோட்டம். இங்கு நாம் மேலொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. இது சட்டநாதனது தனிமனித குணம் மட்டுமில்லை. பிந்தங்கிய விவசாய உற்பத்தி கொண்டகீழை / ஆசியச் சமூகத்தின் பொதுக்குணமே இது.

மேலை நாட்டுப் பண்பாடுகளின் அதிரடி அணுகுமுறைகள் மாதிரியல்லாது உலகவிவகாரங்களிலிருந்து ஒதுங்கிப்போவது மற்றும் பண்பாடு ரீதியான இறுக்கம் காரணமாக தனிமைப்பட்டுப்போவது போன்ற பொதுக் குணாம்சமே இது என்று பார்க்கமுடியும்.

'மாற்றம் ' சற்றே நீட்டி எழுதப்பட்ட சிறுகதையாகவோ அல்லது சற்றே குறுகத்தரிக்கப்பட்ட நாவலாகவோ அமைகிற படைப்பு.

எவ்வளவுக்கெவ்வளவு ஒழுங்கு, கட்டுப்பாடு, அறிவுசார் அணுகுமுறை, கனவுகள்,நேர்த்தியான கலாப்பூர்வ சிந்தனைகள்,லட்சியங்கள், இவற்றுடன் உள்ள ஒரு பெண் திருமணத்தின் பின் எப்படிப்பட்ட ரசாயன மாற்றத்திற்கு உட்பட்ட நேர்கிறது என்பதை 'எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவாய் ' வார்த்தைச் செதுக்கல்களோடு 'பளிச்' சென கதை சொல்லப்படுகிறது.

ஒழுக்கம் கெட்ட ஆணாதிக்கம் என்பது எப்படி மேதைமைகள், பண்பட்ட ஆளுமை உள்ள ஒரு பெண்ணை சாரசரியாக்கியோ, அதற்கும் கீழாக்கியோ, ரசனைகளை காலில் போட்டு மிதித்துப் பல்லிளிக்கிறது என்பதை அன்றாட வாழ்வியல் போக்கினூடே சில உதாரணங்களால் சித்தரித்துக் காட்டுகிறார் பொ.கருணாகரமூர்த்தி.

உதாரணமாக "தி.ஜா.சின்னப்ப பாரதி, WW JACOB ARNOLD BENNETT, DOSTOYEWSKY, HUGE WALPOL என்று தேடி வாசித்தவளின் பயணம் திருமணத்தின்பின் கணவனின் தெரிவில், ராஜேந்திரகுமார், குரும்பூர் குப்புசாமி, திரைசித்ரா, பொம்மை"* என்று குறுக்கப்பட்டு ஆளுமை சிதைக்கப்பட்டு விடுகிறது. இது கொழுப்பேறிய 'ஆண்' பிம்பத்தை பெண்ணில் திணித்துவிடும் ரசவாதமல்லாத வேறெதைக் காட்டுகிறது?

சோரம் போதலும், பிறரைச் சோரம் போகத்தூண்டுதலும் பாவமான காரியங்கள் என்கிற பைபிளின் ஏழாவது கட்டளையை மேற்கோளாகக் கொண்டு தொடங்குகிறது 'வாழ்வு வசப்படும்' குறுநாவல்.

பெரிலின் நகரில் Kufurstendamm (குபாஸ்டன்டாம்) சாலையில் டியூலிப்ஸ் ஹோட்டலை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது கதை.

முத்துராசண்னை, அத்வைதன், திலகன், நகுலன், நிமலன், சுருவில் என்கிற கதாபாத்திரங்கள் மூலம் நிகழ்கிற கதையூடாக பல விவகாரங்கள், அரசியல், கலாச்சாரம் குறித்த விவாதங்கள், ஜெர்மனி அகதிகளை நடத்துகிறவிதம், அகதிகளின் பன்முகப்பட்ட சிந்தனைப் போக்குகள், அவர்களது வேலை நிலைமைகள், குடியிருப்பு பிரச்சினைகள், மேலைக் கலாச்சாரத்தை அப்படியே சுவீகரித்துக்கொள்கிற போக்கிற்கும், ஏற்கத் தயங்குகிற கீழைக் கலாச்சார கட்டுப்பாட்டுக்கும் இடையிலான முரண்பாட்டு மனப்போக்குகள் இவற்றை அழகாக காட்டிச்செல்கிறது கருணாகரமூர்த்தியின் படைப்பு மொழி.

மொழிவழித்தனிமை, கலாச்சாரத் தனிமை, பாலியல் தனிமை என்று தனிமையின் வகைமைகளுக்குள் சிக்கி சுழலும் அகதி வாழ்வு. அதிலும் அதீதப் பாலியல் தனிமை காரணமாக பெரும்பாலான கதாபாத்திரங்கள் பாலியல் குறித்த விடயங்களை ஏதாவதொரு விதத்தில் வெளிப்படுத்தும் கதைப்போக்கு அகதிகளின் உளவியல் தாக்கத்தைக் காட்டுகிறது.

அறைவாசிகளைப் பற்றிய சித்தரிப்புகள் அப்பட்டமான நகைச்சுவை உணர்வு கலந்து சுவாரசியமாக நீள்கின்றன. தமிழில் புதுமைப்பித்தன், எஸ்.வி.வி., சுந்தரராமசாமி, போன்றவர்களைத் தொடர்ந்து அங்கதமாடுகிற படைப்பாளிகள் வெகு குறைவு. அந்த வகையில் பொ. கருணாகரமூர்த்தி குறிப்பிடத்தக்கவராகிறார்.

உதாரணத்துக்கு:
"ஆறாவது நபர்தான் கருவில் (இடவாகுபெயர்) கருவிலின் பிரசன்னம் அறையில் இல்லாதபோது அறையினர் அவரைப் பன்றிவாள் என்றே அழைப்பர். (குணவாகுபெயர்)
ஸ்ரீமான் தூங்கினாலும் கொரட்டை முப்பது டெசிபஸ்ஸூக்குக் குறையாது (பக். 47- 48)

மேலும், அறைவாசிகளுக்கு சங்கேதப் பெயரிடுதல்களிலும், ஜெர்மனிய கலாச்சாரத்தை தமிழ்மரபின் வழியாகக் கிண்டலடிக்கையிலும் [பள்ளி செல்லும் இளசுகள் ஊபாணிலோ (சுரங்கரயில்), வீதியிலோ முத்தமிடுவதைப் பார்த்தால்,

"நாங்கள் படிக்கிறபோது சகமாணவியிடம் ஒரு நோட்ஸ் புக் கேட்பதென்றாலே உடம்பெல்லாம் கார்-ரப்-பெட் மாதிரி அடிக்கும். இங்கே என்னடா என்றால் ஒன்றை ஒன்று 'கடிச்சு' இழுத்துக் கொண்டு ஸ்கூல் போகுதுகள்"(பக்.52)]

சபீனாவின் காமலீலாவினோதத்தைக் கிண்டலடிக்கையிலும், (இன்னொரு நாள் யோகாசனம் / தியான வகுப்பு ஒன்றுக்கு இந்கிக்காரன் ஒருவனோடு வந்தவள் அத்வைதனை ஞாபகம் வைத்திருந்து 'ஹலோ' சொன்னாள். இன்றும் பிறவுன் பிள்ளை பெற்றே தீருவது என்று சபீனா மிகமுனைப்பாக நிற்பது தெரிந்தது!)

இப்படியான சித்தரிப்புகளுக்குள் / உரையாடல்களுக்குள் நையாண்டி வெகுஇயல்பாக அமைகிற கதையாடல்.

சுரண்டல் எந்த ரூபத்தில் எப்படியெல்லாம் நிகழ்த்தப்படுகிறது என்பது கோவைத் தமிழரின் 'படங்காட்டும்' வேலை மூலம் கதையுள் படம் காட்டப்படுகிறது. யுத்தம் காரணமாக அகதியாகப் போனவர்களிடமும் வீடியோவில் தமிழ்த் திரைப்படம் காட்டி வசூல் செய்யும், (நிரந்தர நல்ல வேலையில் கொழுத்த வருமானத்தில் குடும்பத்துடன் வாழும்) கோவைத் தமிழரைப் பார்த்து, 'கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடுமுன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி' வெட்கப்பட வேண்டும்.

அதோடு கதைக்குள் கதையாக கிளைக்கிற 'சபீனா' பாத்திரம் மூலம் எதெல்லாம் வணிகமாகிவிட்டது என்பதை புருவமுயர்த்த வைக்கிற அதிர்ச்சியோடு அனுபவப்பட்டதுதான் எனினும் இதன் வளர்ச்சி / தொடர்ச்சிப் போக்கு எப்படி பரிணாமித்துள்ளது என்பதை யோசிக்கும் வேளை நமக்குள் அதிர்வுகள் (பக்.58, 59)

"வேறேன்ன கோவாவில் வாங்கினீர்கள்?"
"நிறைய கஞ்சா"
"வேறு?"
"ஒரு பிள்ளை!"
"விலை கொடுத்தா? கூட்டி வருவதில் ஏராள சாட்டப் பிரச்சினைகள் இருந்திருக்குமோ?"
"நான் தான் கடத்தி வந்தேனே!"
"கடத்தலா எப்படி?"
"இதோ... வயித்தில ... கொண்டுவந்தேன்!" வயிற்றைத் தடவிக் காட்டினாள்.
அத்தைவன் விளங்காமல் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
"நத்திங் ஆக்ஸ்டென்ரல்... கற்பம் தங்கவைத்துக் கொண்டுவந்தேன்"
"இந்தியக் குழந்தையில் அப்படி என்ன விசேஷம்?"
"சொக்கோ பிறவுண் குழந்தைகளுக்கு ஏக டிமாண்ட் தெரியுமோ?" கண்ணடித்தாள்!
"இப்போ எங்கே குழந்தை?"
"போன கோடையில Sylfக்குப் போயிருந்தபோது ஒரு பணக்காரன் ஸ்வீகாரம் பண்ணிறேன் என்றான்... கொடுத்திட்டேன்... ஒன்றும் சும்மாவல்ல... அறுபதினாயிரம் டொய்ச் மார்க். இதைச் சம்பாதிக்க நான் பத்து வருஷம் மாடாய் உழைக்க வேணும் பார்... இது ஒரு சிம்பிளான பிஸினஸ்!"*


ஆச்சரியகரமான இப்படி ஒரு கதை நிலவுவதை புகலிட அனுபவத்தால் தமிழ் பெறுகிறது.

பலவிதமான சர்வதேசப் புள்ளிவிவரங்களை ஒரு ஆவணக்களரியைப் போலல்லாது அழகியலோடு தொடுத்து 'உலகளாவிய கதைப்பு' மூலம் நகரும் கதைத்தளம்.

கடைசியில் போதைப்பொருள் விற்றுப் பிழைக்கும், இரண்டு அகதிகளிடம், 13,14 வயது ஜெர்மன் பேதைப் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகித் தவிக்கிற தவிப்போடு நாவல் முடிகிறது.

'சந்தோஷம் முழுவதும் துயரத்தில் நனைத்தெடுத்தது போல்' என்று வேண்டுமானால் உவமை சொல்லலாம்.

'நிமிடத்திற்கு ஐநூறு வார்த்தைகள் லோஞ்சர் குண்டுகள் மாதிரி புறப்படப் பேசுவார் (பக். 47) என்று போகிற போக்கில் கையாளப்படுகிற உவமை யுத்தக்களத்தின் நினைவுப் பிம்பங்களின் அடியுறை உண்மையாக இருக்கிறது.

"அந்த மகேந்திரனுக்கு அடைமொழிகளும் பட்டப்பெயர்களும் இன்னும் நிறைய!" திலகன் சொன்னான்.

"சொல்லுங்கோ பாப்பம்...!"
"Abschiebug (அப்ஷிபங்க்) மகேந்திரம்...(திருப்பி அனுப்பும் உத்தரவு) யாரைப் பார்த்தாலும் எல்லாரையும் திருப்பி அனுப்பப் போறாங்களாம்... Bundesamt இலே அலுவல் நடக்கிறதாம்.. லோயரின் டை செகரட்டரி சொன்னவள் என்று மூக்கால் அழ ஆரம்பிப்பான்... ஒருவகை Pessimist "

இப்படியான சித்தரிப்பின் மூலம் அகதி வாழ்வின் நிராதரவான நிலையும், எப்போது வேண்டுமானாலும் கட்டாயமாக திருப்பி அனுப்ப உத்தரவுகள் வரலாம் என்று பயந்து பயந்து நாட்களைக் கடத்தும் போக்கும் கொண்டு புகலிட உளவியலை நாவல் வெளிப்படுத்துகிறது.

போலவே, எங்கபோனாலும் கைனஆர்பட் (வேலையில்லை) என்கிற தகவல் கிடைக்க, கிடைக்கிற ஒன்றிரண்டு வேலைகளும் 'ஹோமோ செக்சுவல் கிளப்' போல்வனவாக அமைய வேலைவாய்ப்புச் சிக்கல்கள் பேசப்படுகின்றன.

அதே நேரத்தில்,
"இனா வயது 19, பிகார் 100- 60- 93 தொழிலில் அமெற்றர் (சுற்றுக்குட்டி) பெண்மை வழியும் தோற்றம். ஒல்லியுடல்வாகு, மீக நீண்ட கேசம், உணர்ச்சிகளின் குண்டாக உங்கள் அனைத்துத் தாகங்களும் தீர்த்துவைக்க தனியார் சூழலில் காத்திருக்கிறாள். அதிமூடுள்ள உங்களில் யார் முதலில் என் மணியை அழுத்தப்போகிறீர்கள்?Linda str. 14, 1ST floor classified advertisement, Berliner zeitung 19.10.88 (ப. 76)

மற்றும் "ஏவாள் வயது 46 ஒரு பார்ட்னரைத் தேடுகிறாள். வயது ஐம்பதினுள் இருப்பது நலம். ஸ்போர்ட்ஸ் ஆர்வம், டிரிம்மான உடல்வாகு, கம்பீர தோற்றத்துடன் செக்ஸில் தீராத ஆர்வமுள்ளவர்களுக்கு முன்னுரிமை..(பக்.66)

என்பன போன்ற விளம்பரங்களையும்,
"(ஆண் குறியின் நீளத்தை அதிகரிக்கப்பண்ண அதிநவீன சத்திர சிகிச்சை - கலிபோர்னிய டாக்டர் கண்டுபிடிப்பு) 'டயானா மீண்டும் 2 மாதம் கர்ப்பம்!' - தலைப்புச் செய்தி. மறுநாள் சின்னதாக செய்தி வெளியிடுவார்கள். அவளுக்கு மாதாந்த விலக்கே 3 வாரங்கள் தள்ளிப்போனது. கர்ப்பம் இல்லை என்பதை அரண்மனை டாக்டர்கள் ஊர்ஜிதம் செய்தார்கள். (ப.65)

என்பன போன்ற செய்திகளையும் வெளியிடும் BZ போன்ற செய்தித்தாள்கள்.

மற்றபடி ஆசிரியாக்கண்டமே கடலுக்குள் மூழ்கி விட்டாலும் சின்னப் பெட்டிச் செய்தியாகத்தான் ஒரு முடுக்கில் போடுவார்கள்"

என்று அங்குள்ள ஊடகங்கள் திறந்த பாலியல் கலாச்சாரப் பரம்பலுக்கும், மேலைத் தேயங்கள் கீழைத்தேயங்களைத் தள்ளிவைக்கிற முக்கியத்துவமற்றதாக புறக்கணிக்கிற அரசியல் மேலாண்மைக்கும் உதாரணங்களாக நாவலினூடாக சித்தரிக்கப்படுகின்றன. இதுபோன்ற நிறைய விடயங்களை ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார்.

ஆக, பொ. கருணகரமூர்த்தியின் படைப்பு மொழி எளிமையானது; யதார்த்தமானது; லாவகமான திருப்பம் கொண்டு வசீகரிப்பது. உரையாடலும், நனவோடையும், விவரணைகளும் அதனூடே ஏளனங்களும், சமூக அவலங்கள் குறித்த ஆவணங்களும் விரவிக்கிடப்பது. புதிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் கொண்டு தமிழுக்குப் புதுத்திணைப் பின்புலத்தை; விணோதங்களைக் கொணர்ந்திங்கு சேர்ப்பது.

அந்த வகையில் நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள ஜெயமோகனின் வார்த்தைகளில் சொன்னால்,

"இப்படைப்புகளில் தெரிவது நானேதான். முகமறியாத ஊரின் விமான நிலையத்தில் வழிதவறிய எலி மாதிரித் தவிக்கிறேன். இடுங்கின அறையில் காமத்தில் குமைகிறேன்; அகதியாகிறேன். என்னை எனக்குக் காட்டும் இக்கதைகளை புதுப்புது வாசல்கள் திறக்க மீண்டும் மீண்டும் படிக்கமுடியும்."*

4

துடியன், பாணன், கடம்பன், பறையன், சக்கிலியன், தோட்டி, என விளிம்புக்கு வெளியே நிறுத்தப்பட்டதுபோல என்று சொல்ல முடியாவிட்டாலும், வண்ணார், நாவிதர் போன்ற சாதிகளும் சடங்கு சம்பிரதாயங்களோடு பிணைக்கப்பட்டு கீழ் நிறுத்தப்பெற்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது. விளிம்பு நிலை ஆய்வுகள், படைப்புகள், அழகியல் (Suboltan, Studies, Aesthetics etc.,) போல்வன மேற்கிளம்பியுள்ள நிலையில் இந்நூற்றாண்டின் புதிய போக்குகள் கவனம் பெறுகின்றன.


'லவகுசா' கூத்தில் வண்ணானுக்கும் வண்ணாத்திக்கும் சந்தேகம் காரணமாக நடைபெறும் குடும்பச் சண்டையின் போது அதைப் பேசி தீர்க்கும் வண்ணாத்தி சொல்வதாக ஒரு வசனம் வரும். "இப்ப உன் பொண்டாட்டி என்னா செஞ்சுட்டானு கெடந்து குதிக்கிற, அந்த ராமரே தாம் பொண்டாட்டிய ராவணங்கிட்டேருந்து கொணாந்துவச்சி வாழலயா?" இது சேவகர்கள் மூலம் ராஜாவுக்கு தெரிவிக்கப்படும். போயும் போயும் வண்ணாத்தி ஒருத்தி இப்படிச் சொன்னாளே என்கிற தொனியில் வண்ணார் சாதியின் மீது இழிவு புலப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு சீதை வனத்துக்கு அனுப்பப்படுவதும் பின்னர் தனது கற்பு நிலையை நெருப்பில் குளித்து ரூபித்ததாகவும் அமையும். ஆக இராமாயணக் காலம் தொட்டு விமல் குழந்தைவேல் காலம் வரையிலும் இந்தப் போக்குகள் நீடிப்பதை அவதானிக்கமுடிகிறது.

தமிழ்ச் சூழலில் இமையம் மற்றும் கோணங்கி (ஒரு சில)யின் படைப்புகளில் வண்ணார் சாதியினர் வாழ்நிலைகளும் வழக்காறுகளும் இடம்பெறுவதை இந்த இடத்தில் நினைவு கூறலாம். அதே நேரம் விமல் குழந்தைவேலின் 'வெள்ளாவி' நாவல், ஈழவட்டார எழுத்து முறைமையிலிருந்தே முற்றிலும் மாறுபட்ட புதுமையான, இதுகாறும் அறிந்திராத 'கோளாவில்', 'தீவுக்காலை' வட்டார மொழியாலும் உடைவெளுக்கும் தொழில் செய்யும் வினோத சடங்குகள் கொண்ட வண்ணாரக்குடி வாழ்முறைப் பதிவாலும் புதுமையான கதையாடல் அமையப் பெற்றுள்ளது எனலாம். அந்த வகையில் தமிழிலக்கியத்தில் விமலின் படைப்புமொழி தனிதன்மை பெறுகிறது. என்னகா, ஏன்கா என 'கா'வில் முடியும் விளி, அம்மன் கோயில் இரிக்கிற இடமிரிக்கே என்பது போன்ற சொல்திரிபுகள், 'வெட்டக்கிறங்கி வருதல்' (மயக்கம்), வெட்டுக்குத்து நாக்கள் (அறுவடை நாட்கள்), 'இப்பிடிக் கிடந்து கக்கிசப்படோணும்', 'ஆலிசப்படாம கண்ணமூடிடுவன்டா' போன்ற சொற்றொடர்கள் இப்படியாக ஒரு புது மொழி இலக்கியப் பரப்புக்குள்ளாக வந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேலும் வினோதமென்று சொன்னால், ஒரு பெண்ணின் கருவில் உயிர்க்கும் அப்பெண் பேர் தெரியாத குழந்தைக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, அக்குழந்தையின் மீது முழுக்கவனமும் பெற வேண்டி தள்ளிப்படுப்பதுமான ஒரு கதாபாத்திரமாகிய நாகமணி அந்தப் பாத்திரம் மீது எழுத்தாளர் பய்ச்சும் வெளிச்சம் முக்கியமானது. நாகமணி தமிழ் இலக்கிய, திரைப்பட கதாபாத்திரங்களிடையே முற்றிலும் தனித்துவமானவன். புரட்சி பற்றியெல்லாம், தெரிந்திராத் புரட்சிகரமானவன். நேசிப்புக்கு அர்த்தம் நாகமணி என்று அகராதிப்படுத்துமளவு நேசமே உருவானவன். ஆணாதிக்கத்தின் நெஞ்சில் போகிற போக்கில் வாள் பாய்ச்சுகிறவன்.

அடுத்தொரு வினோதமாக நாம் பார்ப்பது, கதை நிகழும் களத்தில் / வட்டாரத்தில் நடைபெறுவதான சடங்கொன்றில், பருவமெய்தும் போது தூமையை(தீட்டுத்துணியை) வெளுக்க வைத்துப் பாவம் செய்தேனே என்கிற குற்ற உணர்வுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக சடங்கு நாளில் துணி வெளுத்த வண்ணான் காலில், எப்படிப்பட்ட வசதியான குடியாயினும் பருவமெய்திய பெண் விழுந்து வணங்கி வாழ்த்துபெறுவது, இப்படி வினோதங்களால் வசீகரிக்கும் கதைத் தொழிற்பாடு வெள்ளாவியில் இருக்கிறது எனலாம்.

சிக்கலான வாழ்முறை அமையப்பெற்ற மாதவி, "கேரளாவில், பனங்காடு ஊருக்குள்ள போய் புடவையெடுத்து வெழுத்துக் குடுத்து கூலி வாங்குறாக்கள் சாதாரண வருமான முள்ளாக்ளெண்டா. கேரளாவில் பனங்காட்ட உட்டு, அக்கரப்பத்துக்கும், சோனவட்டைக்கும் போய் புடவை எடுத்து வந்து வெளுக்குறாக்கள் இன்னும் ஒள்ளம் கூட வருமான முள்ளாக்களா இரிப்பாங்க. இதஉட அக்கரப்பத்துக்குள்ளாயும் சோனகவட்டக்கேயும் றோட்டோதினைக் கட்டிடங்களில் ஒரு பகுதிய வாடகைக்கெடுத்து வண்ணான் கடை வைச்சிரிக்கிறாள்ற வருமானம் இன்னும் ஒள்ளம் கூட இரிக்கிறதால இவங்கள தீவுக்காலைக்குள்ள பணக்காரக்கள் எண்டு சொல்லுவாங்க. இந்த மூண்டு தரப்புக்குள்ளயும் மாதவி அடங்கப்படாததாலதான் அவள்ற வாழ்க்கை முறையிலைய்யும் இப்பிடியொரு தடம்புரள்வாக்கும். கேரளாவில்ல மட்டும் அதுவும் ஒரு நாலஞ் ஊட்டுலதான் போயி உடுப்பெடுத்து ஆம்பிளையப் போல மாராப்புக் கட்டி தோள்ல சுமந்து கொண்டு வந்து ஆத்துல இறங்கி நின்டு அடிச்சிக் கழுவ அவளால ஏலாது. ஊத்தை உடுப்பெடுக்க போற ஊட்டுப் பொண்டுகள் கேக்குற ஊட்டு வேலைகளச் செஞ்சி குடுத்தா அரிசி தேங்காய் எண்டு என்னவும் கிடைக்கும். அதியும் உட்டா அவளுக்கு கிடைக்கிற வருமான மெண்டா, ராவுல அவளத் தேடி வாறாக்கள் குடுக்கற தொகை தான்" இப்படி மாதவியின் வாழ்க்கைப்பாடு. தன் ஒரே மகள் பரஞ்சோதியாலும் வெறுக்கப்படும் நிலை. காரணம் நாவலாசிரியர் சொல்வது போல, "ராவு நோத்துல ஊட்டுத்த்ட்டுவேலி சரசரக்கும் அதுக்குப் புறகு படுத்துக்கிடந்த தாய் கதவைத்துறந்து கொண்டு வெளியில போறதையும் இல்லாட்டி தன்ன தூங்கச் சொல்லிப் போட்டு ஆரோ ஒருத்தன் வருவானென்டுறமாதிரி வாசலுல காத்திருக்கிறதையும் 'வேணாங்கா' எண்டு சொல்லுறதுக்கும் 'ஏங்கா, இப்பிடி செய்யுறாய்? எண்டு கேக்குறதுக்கும் பரஞ்சோதிக்கு வயசு காணாது." ஆயினும் அவளுக்கு தாயின் மீது வெறுப்பு வளர்ந்தே வருகிறது.

மாதவி எப்படி இந்த நிலைக்குத் தள்ளப்பட்டாள்? தாயில்லாத பெண் மாதவி. தந்தை பேய் வண்ணான் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான் மகளை. செம்ப வண்ணான் என்கிற அவளது மச்சானோடு கொள்கிற தொடுப்பின் காரணமாக கருவுறுகிறாள். பிரச்சினை முற்றுகிற ஓரிரவில் பேய் வண்ணான் செம்ப வண்ணானோடு சண்டைக்குப் போவதை தவிர்த்து உறவுமுறைதானே பொழுது விடிஞ்சி, பேசிக்கொள்ளலாம் என மாதவியின் அப்பாத்தாவின் சமாதானத்தால் அமைதி பெறுகிறான். பொழுது விடிகிறது. தீவுக்காலை குளத்தில் முதலைவாய்ப்பட்ட செம்ப வண்ணானின் மரணச் செய்தியோடு, செம்ப வண்ணானின் வீட்டில் மாதவியைப் புறக்கணிக்கிறார்கள். புறக்கணிப்பின் அவலத்தோடே புயல், வெள்ளம், உடல் நோவு என இவற்றோடே காலந்தள்ள உடலை பணயம் வைக்கிற சூழல். பரஞ்சோதி தாயின் மீது கொண்ட வெறுப்பினால் பள்ளிக்கும் போகாமல் வெளியிலும் வராமல் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறாள். தாயை பயங்கரமாக இழித்துப் பேசுகிறாள். தாயும் ஒரு சில வீடுகளில் அழுக்கெடுத்தும் சிறு சிறு வேலைகள் செய்து கொடுத்தும் வயிற்றைக் கழுவ போராடுகிறாள்.

இடையில், ரேஷன் கடையில் நிவாரணப் பொருள் வழங்களில் புறக்கணிக்கப்படுகிறது வண்ணாரக்குடி. படித்த இளைஞன் சதாசிவம் கொந்தளிக்கிறான்; புகார் செய்கிறான். வண்ணாரக்குடி தீவுக் காலைக்குப் போன வரலாறு நாட்டார் வழக்காற்றுக் கதையாக சொல்லப்படுகிறது.

"கோளாவில் ஊருல ஒரு பெரிய கண்ணகை அம்மன் கோயிலிரிக்கி... இப்போ கோயிலிரிக்கிற இடத்தில பெரிய குளம் அப்ப இரிந்திச்சி. இந்தக் குளத்தங்கரையிலதான் வண்ணார ஆக்கள் குடியிரிந்திரிக்காங்க." இது பொறுக்காத சிலர் வழக்காற்றுக் கதையைக்கட்டுகிறார்கள். அதாவது, "கோவலண்ட தலைவெட்டுபட்ட பிறகு, மதுரைய பத்தவச்சகையோட எங்கபோறன் ஏன் போறன் எண்டுறது தெரியாம நடந்து கொண்டுபோய் ஒரு குளத்துல குந்துன போதுதான் தான் இலங்கைக்கு வந்து சேந்திட்டனென்கிறது கண்ணகிக்குத் தெரிஞ்சிச்சாம். காரதீவுலயிருந்து கோளாவிலுக்கு வந்து வண்ணார ஆக்கள் குடியிருந்த குளத்தோதினையில குந்தியிருக்கா. அடுத்த நாள் குறட்டைவிட்டு தூங்கிய கப்புகனர் கனவில் தோன்றி, "அவன் கண்கெட்டுப் போன பாண்டியன் எண்ட புருசன கொண்டு போட்டான். அந்தக் கவலையில பைத்தியக்காரிபோல ஊர் ஊரா நடந்து நிம்மதி கிடைக்குமெண்டு இஞ்சவந்து குந்துன்னா இஞ்சையும் நிம்மதியா இரிக்க உடுறியலா? விடிய விடிய தூமைச்சிலைய கழுவுறுதும் ஊத்த உடுப்ப போட்டு கல்லுல அடிக்கிறதும் எண்டு என்ன நிம்மதியா இரிக்க உடுதுகளா? என்று கேட்க, கப்புகனார் ராவோடுராவாக ஊரைக்கூட்டி வண்ணாரக்குடியை காலி பண்ணச்செய்து, தீவுக்காலைக்கு விரட்டுகிறார்." இப்படிப்பட்ட வழக்காற்றுக்கதைகளை ஏராளமாகச் சான்று காட்டி மேலாதிக்க வரலாறு இப்படித்தான் புனையப்பட்டது என்பார் ஆ.சிசுப்பிரமணியன் அதில் ஒன்றுதான் இக்கதை.

வணிகன் ஒருவன் எருமைகள் சிலவற்றை விலைக்கு வாங்கி வந்தான். வரும் வழியில் காட்டாறு ஒன்றில் அவற்றை நீர் பருகச் செய்து ஓய்வெடுத்தவுடன் ஆற்றைக் கடந்தான். காலமல்லாத காலத்தில் மழை பெய்தமையால் காட்டாற்றில் திடீரென வெள்ளம் வந்து அவ்வெருமைகளை அடித்துச் சென்று வேறொரு ஊரில் ஒதுக்கிவிட்டது. அவ்வெள்ளத்தில் ஒதுங்கிய எருமைகளின் பிணத்திலிருந்து கிளம்பிய நாற்றத்தின் காரணமாக ஊரவர் எவரும் அவற்றை அப்புறப்படுத்த மறுத்தனர். அப்போது ஊர்ப் பெரியவர் ஒருவர் இத்தகைய சூழ்நிலையில் இன்னவர் இச்செயலைச் செய்யவேண்டுமென்பது கணக்கருடைய ஏடுகளில் இருக்கும். எனவே கணக்கனை அழைத்து விசாரிப்போம் என்றார். அதன்படி கணக்கனை அழைத்துக் கேட்டவுடன், 'நான் பழைய சுவடிகளை' எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றான். ஆண்டுதோறும் அன்பளிப்பாக வழங்கும் பொருளை அந்த ஆண்டில் கொடாத குயவரைத் தண்டிக்க இதுவே தக்க தருணம் என்று கருதி,

"காட்டெருமூட்டை (காய்ந்த சாணம்) பொறுக்கி
மட்கலஞ் சுட்ட புகையான்
மேற்கே மேகந் தோன்றி
மின்னி யிடித்து மழை பொழிந்து
யாற்றில் நீத்தம் (வெள்ளம்) பெருகி
யடித்துக் கொல்லும் எருமைகளை
ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல்
இவ்வூர்க் குயவர்க் கென்றுங் கடன்"

என்று ஒரு பழைய ஓலையில் எழுதி அதை ஏனைய ஓலைகளோடு சேர்த்துக் கட்டி எடுத்துச் சென்றான், ஊரவர்கள் கூடியுள்ள இடத்துக்குச் சென்றதும் ஓலைச் சுவடியில் தேடுவது போல் பாவனை செய்து, தான் எழுதி வைத்த ஓலையை எடுத்து உரக்கப் படித்தான். உடனே ஊரவர்கள் கூடியுள்ள மரபுப்படி குயவர்கள் தான் ஆற்று வெள்ளம் அடித்து வந்த எருமைகளை அப்புறப்படுத்தவேண்டுமென முடிவு செய்தனர். ஊரைப் பகைக்க முடியாத நிலையில் நீரில் ஊறி நாறிப்போன எருமைகளைக் குயவர்கள் அப்புறப்படுத்தினர். இவ்வாறு தனக்கு அன்பளிப்பு வழங்காத குயவர்களைக் கணக்கன் பழி தீர்த்துக்கொண்டான்". (ஆ. சிவசுப்பிரமணியன், அடித்தளமக்கள் வரலாறு)

இப்படியாகத்தான் அடித்தட்டு வரலாற்றுப் புனைவுகள் எந்தக் காலமாயினும் எந்தச் தேசமாயினும் மேலாதிக்கத்தால் சூழ்ச்சிகரமாக கட்டியெழுப்பப்படுகின்றன. இதையொத்த பல வரலாற்றுக்காட்சிகளைக் காட்டியபடி நகர்கிறது நாவல்.

பரஞ்சோதியின் மச்சான் உறவாக நாகமணி வருகிறான். நாகமணிக்கு பரஞ்சோதியை மணமுடிக்க கோருகிறார் மாதவி. ஒரு புறம் பரஞ்சோதி மறுதலிக்க, மறுபுறம் நாகமணியும் வயது குறைவு, அழகுத் தோற்றம் இவை கொண்ட பரஞ்சோதி தன்னைப் போல வயது கூடுதல் அவளுக்கு ஒத்துவராது என நேர்மையாக மறுக்கிறான்.

நாட்கள் நகர்கின்றன. மார்கழியில் திருவெம்பாவை பாடும் கூட்டத்தை, எங்கள் வண்ணாரக்குடி பெயர்கள் வாக்காளார் பட்டியலில் இருக்கோணுமென்டால் எங்கள் தெருவிலும் திருப்பள்ளி எழுச்சி பாடுங்கோ வென சதாசிவம் கோரிக்கை மனு வைக்க வேறு வழியில்லாமல் ஒரு அமைதிப் போரட்டம் வெற்றி அடைகிறது.

சதாசிவத்துக்கும் பரஞ்சோதிக்குமிடையிலான மெல்லிய இனங்காணமுடியாத நாகரீக உறவு சதாசிவத்தின் தாயால் ஏற்பாடு செய்யப்படும் சதாசிவத்தினது பண்க்கார திருமணத்தால் மாறிப்போகிறது.

மாதவி நோய்வாய்ப்படுகிறாள். ரத்தம் கலந்த எச்சில் உமிழ்ந்தபடி வேலைகளைச் செய்து சம்பாதிக்கிறாள். முடியாத போது மருத்துவமனையில் வைத்துப் பராமரிக்கிறான் நாகமணி. மாதவியோடு மிகுஒத்தாசையுடன் நடந்து கொள்ளுகிறான். தாயின் உடல்நிலை பரஞ்சோதியின் அணுகுமுறையை மாற்றிப்போடுகிறது. வேலைக்குப் போய் சம்பாதித்து தாயைப் பராமரிக்கிறாள் ஒரு கட்டத்தில்.

பரஞ்சோதி யாருடனென்றே தெரியாமல் தூக்க மயக்கத்தில் பலவந்த உடலுறவில் கருவுறுகிறாள். எழுந்து ஆள்யாரென விளங்கிக்கொள்வதற்குள் இருட்டில் ஓடிவிடுகிறான் அந்த காமுகன். பெருஞ்சிக்கல் வெடிக்கிறது. மாதவி ஒரு வழியாக, தன் மகன் பரஞ்சோதியைக் கற்பழித்து பிள்ளை கொடுத்தவன் போடியார்தான் எனக் கண்டறிகிறாள். இரவு முழுவதும் அலைக்கழிக்கும் கவலையோடு தூங்காமல் புரண்டு காலையில் மகளிடம் இவ்விபரத்தைக் கூறலாம் என எண்ணி உறங்கி விடுகிறாள். காலையிலோ மாதவி படுக்கையிலேயே இறந்து கிடக்கிறாள். தலைமுறைகளாக இப்படித் தொடர்கிற அவலம்.மாதவி... பரஞ்சோதி... இப்படி பாதிப்புகள் நீள, நீள, அடித்தட்டுப் பெண் விடுதலைக் கூறுகள் முன்னெடுக்க வேண்டியதும் இதுகாறும் பேசப்பட்டுவருகிற நடுத்தவர்க்க, படித்த புத்திஜீவி பெண் விடுதலையிலிருந்து வாழ்வியல் சிக்கல் கொண்டதும் உரத்துப்பேச வேண்டியதாகவும் ஆகிறது அடித்தட்டுப் பெண்ணியல் என்பதை உணரவைக்கிற கதா பாத்திரங்கள். பரஞ்சோதி அப்பனின் பேர் தெரியாத குழந்தையை சுமப்பது தெரிந்துவிட்டதால் நாகமணி பதறுகிறான். "யார் எனச் சொல், கையில் காலில் விழுந்து அவனுக்கு உன்னை கட்டி வைக்கிறேன்' என்று கேட்கிறான். ஆனால் கடைசி வரை பரஞ்சோதிக்கு தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் தெரியா சூழலில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்து தங்கியிருக்கும் போடியார் மறுமகன் கட்டழகன் வரதனோ என்ற குழப்ப நிலையில் ஒன்றும் பேசாதுவிட நாகமணி ஏற்றுக்கொள்கிறான். நாகமணி பாஞ்சோதி இருவரும் பாஸ்பரம் ஒருவரையொருவர் அங்கீகரிப்பது ரொம்பவும் நாசுக்காக அல்லது சொல்லாமல் சொல்லப்பட்டதாக அமைகிற படைப்பின் மகத்துவம்.

'ஒரு சுண்டு அரிசியை எடுத்துக் கழுவி, கொதிக்கிற உலைப் பானைக்குள்ள போட்டவள் தீடீரென்று எதையோ நினைச்சாப் போல இன்னுமொரு சுண்டு அரிசிய எடுத்துக் கழுவி உலைக்குள்ள போட்டாள்" (பக்.141). இந்த இடம் நாகமணியை பரஞ்சோதி ஏற்றுக்கொள்கிற இடமாக கூறாது கூறியதாக அமைகிறா இடம். இதே போல, "இனி பரஞ்சோதி குடியூட்டுப் புடவைக்கெல்லாம் சேர்த்து வெள்ளாவி அவிக்க நாளைக்கு கொஞ்சம் கூடுதலா சோடாத்துள் வாங்கோணுமெண்ட யோசினையோடேயே நித்திரையாகிப் போனாள் நாகமணி" என நாகமணி பரஞ்சோதியை ஏற்றுக் கொள்வதை எந்த சம்பிரதாயமுமற்ற; வெற்று வசனங்கள் தேவைப்படாத குறிப்பாலுணர்த்தும் பாங்கால் மேற்செல்கிறார் விமல்.

பிறகு, பரஞ்சோதிக்குக் குழந்தை பிறக்கிறது. நாகமணி மருத்துவமனையில் சேர்த்து நர்சுகளால் அவமானப்படும்படி நேர்ந்து, பரஞ்சோதியோடு அவள் படும் இன்னல்களோடு சமநிலை அடைகிறான்.

ஒரு கடதாசிக் கட்டோட வந்த ஒரு பொம்பிள (நர்ஸ்) நாகமணிய மறிச்சி, "எங்கப் போகப் போறாய்" இதுல ஒரு கையெழுத்துப் போட்டுப் போ" என்றாள்.

"ஆரு தாயி நானா?" அப்பாவி போல கேட்டான் நாகமணி.

"புறந்த புள்ளக்கி அப்பன் நீதானெண்டா நீ கையெழுத்துப் போடாம ஊருக்குள்ள இரிக்கிறவனோ வந்து போடுவான்" நேசுப் பொம்பிளர அந்த வார்த்தை பரஞ்சோதி மனதுல சாட்டை அடிபட்ட மாதிரி வலிச்சுது.

"எங்க தாயே, எந்த இடத்துல கையொப்பம் வைகோணும்?" அவள் கட்டுன இடத்துல தகப்பன் பேர் எண்டிருந்ததுக்கு நேராக நாகமணியெண்டு காகம் கிழிச்சாப் போல கையெழுத்த வைச்சிற்றுப் பரஞ்சோதியப் பார்த்தான் நாகமணி.

கதை நெடுக, பாலியல் மையப்பட்ட பரப்பு விரிந்தாலும் கொச்சைச் சொற்கள், வசவுச்சொற்கள், என எவற்றோடும் அருவெறுக்கத்தக்க செயற்கையான உறுத்தத்தக்க பாலியல் சொல்லாடல்கள் தவிர்க்கப்பட்டு வெகுயதார்த்தமாக சொற்கள் பாவிக்கப்படுகின்றன. காட்சிவருவருணனைகள் கூட அதனதன் இயல்பமைதி கெடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளன எனலாம். உதாரணமாக தூக்க மயக்கத்தில் பலவந்த உடலுறவில் ஒரு கட்டம் வரை தன்னை இழக்கும் பரஞ்சோதி பற்றிய படப்பிடிப்பு இப்படி அமைகிறது.

"சூரியனைக் கண்ட உடனேயே சில பூவுகள் விரியுது. சில பூவுகள் சூரியன் போன உடனே விரியுது. இன்னுமொண்டு சூரியன் போற பாதையெல்லாம் முகத்தத் திருப்புது. இதொண்டுமில்லாம காத்துப்பட்டாலே சிலது விரிஞ்சிருமாம். இந்தப் பூவெல்லாம் பொம்பிளையளப் போலத்தான் சில பொம்பிளைகள்ற உடல்நிலை புதுனமானது. பருவக் கோளாறுல கனவு காணக்குள்ளகூட உண்மையிலேயே உடல் உறுப்புகள் உணர்வுக் கிளர்ச்சிர உச்சநிலையக்கூட தொட்டுடுமாம். பரஞ்சோதி நிலையும் அண்டுராவு அப்பஒடித்தானிருந்திச்சி.

15 ஆண்டுகள் உருண்டு ஓடுகின்றன. இரண்டாம் அத்தியாயமாக போரும் போர் சார்ந்த களமுமாக காட்சிப்படுத்தல்கள் அமைகின்றன. கொலை வெறியூட்டும் ராணுவ பயங்கரவாத நடவடிக்கைகள் புளியமரத்தடி காட்சி விவரணைகளால் பேசப்படுகின்றன.

"மூண்டு நேரம் கேக்குற மணி ஓசையும் கோயில் பீக்கர் சத்தமும் அடங்கிப்போய் எப்பயாவுது இருந்தாப்போல ஒரு நாள்லதான் அந்தச் சத்தங்களையும் கேக்க முடியுது. எப்ப எந்தத்திக்குல இருந்து துவக்குச் சத்தமும் குண்டு வெடிக்குற சத்தமும் கேக்குமோ எண்டுற பயத்துக்கு நடுவுலதான மனிச வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கு. எந்த லைட்டுக் கட்டைல இண்டைக்கி ஆர்ர உடம்பு தொங்குதோ எண்ட கையால சோறுவாங்கித் தின்னுற மகன நாளைக்கும் ஒருதரம் பாக்கக் கிடைக்குமோ இல்லையோ எண்டு ஏங்கி நம்பிக்கயத்து ஒவ்வொரு நாளையும் கடத்துற நடைப் பிணமாய் தாய்மார். நேற்று கழுத்துல தாலி ஏறி நெத்தியில ரெட்டைப் பொட்டு வைச்சவள், இண்டைக்கு தாலியக் கழற்றிப் பொட்டிக்குள்ள வைச்சிப்போட்டு ரெட்டை பொட்டு வைச்ச நெத்தியில ஒத்தை விரல் திருநீரற்றுக் கீற்றோட திரியுற இளம் பொம்பிளைகள், இப்படி எத்தினையோ துயரமான சம்பவங்களோட தான் இண்டய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கு." (பக். 152)

உயிருக்குப்பயந்து சனங்கள் புகல்தேடி ஓடுகிறார்கள். (Internally Displaced) பெரும் திகிலுடன் வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள்.

"நாகமணி தந்தைக்குரிய கடனையெல்லாம் பரஞ்சோதியின் மகன் அரவிந்தனுக்கு பெருமிதத்தோடு, மனதில் ஒரு சின்ன கிலேசமுமின்றி செய்கிறான். சைக்கிள் அவர்களது உச்சபட்சக் கனவாகிறபோது அந்தச் கனவு பலிக்க அவர்கள் நடத்துகிற போராட்டம். மனைவியின் சிறுவாட்டைத் திருடி குழந்தைக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறான். பிறகு மிகவும் நோவு வருத்த நாகமணிக்கு மருத்துவ செலவுக்கு சைக்கிளை விற்கக் கோருகிறாள் பரஞ்சோதி. அரவிந்தன் மறுதலிக்கிறான். தாய் மகன் போரட்டத்தை தனது பெருந்தன்மையால் சமரசப்படுத்துகிறான். நாகமணி.

போடியார் பரஞ்சோதிக்குச் செய்த துரோகங்களைத் தாண்டி, நாகமணி நோயில் முடங்கியதால் களத்தில் நெல் வாங்கப்போக நேர்ந்த பரஞ்சோதியை மீண்டும் போடியார் சீண்ட கொதித்தெழுகிறாள் அவள்.

பரஞ்சோதியின் மகன் சைக்கிளை விற்ற பணத்துடன் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு இயக்கத்தில் சேரப் போகிறான்.

நாகமணியை மருத்துவமனைக்கு அழைத்துப் போக ஆயத்தமாகிறாள் பரஞ்சோதி. தன் மகன் இயக்கத்துல சேந்து போடியார் போன்ற அயோக்கியர்களைத் தண்டிப்பது போல நினைவு வந்ததும் வெடிச்சிரிப்பு சிரிக்க,

"அடி பெயித்தியக்கார பூனா.. புள்ளை போயிற்றானேயெண்டு கவலை கிவலை இல்லை. நீ பூரிப்புல இரிக்காய் என்னடி? அதட்டுகிறான் நாகமணி.

மருத்துவமனையில் தங்கவேண்டி வந்தாலும் வரலாமென்று கண்ணாடி பவுடர் எல்லாம் பன்வேயில் வைத்துக் கொண்டாள் பரஞ்சோதி என்பதோடு கதை முடிகிறது. ஆனால் ஒரு நல்ல கதை முடியாமல் முடிவதில்தான் சிறப்பு பெறுகிறது என்பது போல முடிகிறது. முடிகிறதன் பின்னான யோசனைகள் கவலைகள் பிரச்சினைகளை மனித நேயத்தின் உச்சபட்சங்கள்... ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன? இனி எப்படி எப்படியெல்லாம் நடக்குமோ என்பதான தர்க்கங்கள்... குழப்பங்கள்... என எல்லாமுமாக சேர்ந்து கொண்டு துரத்துகின்றன. வாழ்தல் போராட்டம்... என மேலும் மேலும் எடுத்துரைப்புகள் அழகியலாக விதவிதமாக காலங்காலமாக படைப்பு மொழி போராடி ஓடிக்கொண்டிருக்கிறோம்; இல்லையில்லை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெள்ளாவியில் வெந்தும் வெளியேறாத கறுப்புக் கறைகள் நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
 

5

சமகாலத் தமிழகற்சிதந்த முக்கியமான படைப்பாளர்களுள் அ. முத்துலிங்கமும் ஒருவர். நடைச் சித்திரங்கள், பத்தி, புதின - சிறுகதை நூல்கள்,தொகை நூல்கள், என நீளும் இவரது எழுத்து நேர்க்கோட்டுப் பயணமும், நுகர்வாளர் தம் மூளையைக் கசக்கிப் பிழிந்து உழைக்க வேண்டிய நிர்பந்தம் கோராத எளிய புனைவும் கொண்டவை. கனடாவின் டொரான்டாவிலிருந்து எழுதிவரும் முத்துலிங்கத்தின் பரந்தகன்ற உலகப் பரப்பின் புத்தம்புது அனுபவங்களை விளம்பும் புதினம் 'உண்மை கலந்த நாட்குறிப்பு ' எனலாம். பலமொழி - பல வட்டார - பல கலாச்சாரப் பின்புலத்தில் நகரும் கதை. எவ்வித திட்டவட்டமான பயண முன்வரைவும் இல்லாமல் இயல்பாக அமைந்த படிப்பினைகள் எதிர் கொள்ளல்களை இயல்பு நவிர்ச்சியாகச் சொல்லிச் செல்வதாக உள்ளது. ஒரு வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போல அமைந்திருந்தாலும் பல சிறுகதைகளுக்குள்ளும் தொடர்ச்சிப் போக்கெய்த வாய்ப்பளிக்கும் கண்ணுக்குத் தெரியா மாயக் கண்ணிகள் புதினமாக விரிவுபெறச் செய்து படைப்புக்குள் ஊடாடுவதைப் பார்க்க முடிகிறது.

"மழை இல்லை என்றால் கொடும்பாவி கட்டி இழுத்துக் கொண்டு போய்ச் சுடலையை எரிக்கும் வழக்கம் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். நாய் கடித்தால் உச்சந்தலையில் மயிரை இழுத்து மந்திரித்தால் விஷம் இறங்கிவிடும் என நம்பும் கிராமம். தலையிடி என்றாலும் ஒரே மருந்தை முலைப்பாலில் கலந்து உண்ணத்தரும் பரியாரியார் உள்ள கிராமம். வாத்தியாரிடம் சண்டை என்றால் உடனே அவர் படிப்பிக்கும் பள்ளிக் கூடத்தை நெருப்பு வைத்துக் கொளுத்தும் கிராமம்.மானம் பூ திருவிழா நடக்கும்போது அய்யர் வாழை மரத்தை வெட்டுவார். கடையிலே ஐந்து சதத்திற்கு விற்கும் அந்த வாழைப் பூவிற்காக ஐந்து பேர் வீதியிலே விழுந்து புரண்டு பத்து நிமிட நேரம் சன்டை போடுவார்கள்.அங்கேதான் நான் பிறந்து வளர்ந்து படித்து வாழ்வு முறைகளைக் கற்றுக் கொண்டேன் " என்று இயல்பான எளிமையான குக்கிராம வாழ்வுச் சூழலிலிருந்து புறப்பட்டு பணிகருதி உலகை வலம் வரும் ஒரு கிராமத்தானின் பார்வையிலிருந்து நிகழ்வுக் கோவைகளும், விவரணங்களும் இடம்பெறுகின்றன. இயல்பாகவே கிராமியர்கள் எதையும் வியப்புடனும் ஆழ்ந்தும் நோக்குவர். இதைத்தான் ' பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை முறைச்சு முறைச்சுப் பார்த்தானாம் ' என்கிற சொலவடையாகச் சொல்வார்கள். நல்லுர் கோயில்சப்பரத் திருவிழாவிற்குச் செல்லுகையில் கூட்ட நெரிசலில் தொலைந்து போய் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட அனுபவம் ; பிற்கொய்யகம் வைத்த தங்கமா டீச்சர் போல அன்றி சைடு கொய்யகம் அறிமுகப்படுத்திய சந்திரமதி டீச்சர். ( "உங்களுக்கு நல்ல வடிவாய் இருக்குது டீச்சர் " [ கொய்யகம் - கொசுவம் ] ) அக்காவுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்க நேர்ந்த தமது வீட்டினரின் அனுபவம் ; பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டது ; பாடகனானது ;குருவும் சீடனும் குறித்த பதிவு, யுவராசப் பட்டம் , சாப்பாடு தூக்கி , ஆப்பிடிக்கப் பஞ்சாயத்து , ஜெகஜாலக் கள்ளன் , சைக்கிளும் நானும் இப்படியான பல நாட்குறிப்புகள் கைதேர்ந்த புனைவாளனின் கையால் அழகொளிரத் தீட்டப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு பார்க்கலாம்.

அக்காவின் சங்கீத சிட்சைகளில் தொடங்கி அங்கதம் கொப்பளித்துப் பெருகி வழிவதை முத்துலிங்கத்தின் தனித்துவத்திற்கான அடையாளமாகக் காட்டலாம்.

" ஒரு நாள் உயரமான ,மெலிந்து எழும்பு தெரியும் ஒருத்தர் ஐயாவைப் பார்க்க வந்திருந்தார். விபூதி பூசி , பொட்டு வைத்து , கக்கத்தில் குடையை வைத்துக்கொண்டு அவர் ஒற்றைக் கையை வீசி வீசி நடந்து வந்தது விசித்திரமாக இருந்தது. அவர் தன் பாரத்திலேயே நுனியில் வளைந்துபோய் இருந்தார். அவசரமாக உட்கார்ந்தால் நடுவிலே முறிந்துவிடுமார் போலவும் பட்டது. நாங்கள் எங்களுக்குள் பந்தயம் கட்டினோம். மாட்டுத் தரகர் , சாதகம் பார்ப்பவர் , குடை திருத்துபவர் , எல்லா ஊகங்களுமே பிழைத்துவிட்டன. அவர்தான் அக்காவின் கனவுகளை நிர்மூலமாக்க ஐயாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாட்டு வாத்தியார்."

" அக்காவின் சித்திரவாதை ஸ்வர வரிசைகளில் ஆரம்பித்து , வீடு நிறைய ஸ்வரங்கள் சத்தம் போடும். காலை ,பகல் ,மாலை எல்லாம் அதே சத்தம் தான். அக்காவுக்கு சங்கீதத்தில் இயற்கையான ஈடுபாடு கிடையாது. குரலையும் ' கருக்கு மட்டைக் குரல் ' என்று அம்மா வர்ணித்திருக்கிறார். வாத்தியார் கொடுத்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கா , பாவம் கத்தினாள். நிலம் , கூரை , சுவர் எல்லாம் சங்கீதமாக அதிர்ந்தது."

"அருணாசலச் சுவிராயர் அல்லும் பகலும் பாடுபட்டு அருமையாக எழுதிய பாட்டு , அக்கா அதைச் சப்பு சப்பென்று பாடமாக்கி உருத்தெரியாமல் ஆக்கிவிட்டாள். பாட்டு வாத்தியாருக்குத் திருப்தியில்லை. 'அம்மா , இது ராமரும் சீதையும் முதன்முதலாகச் சந்திக்கும் இடம். ராமன் ஆர் என்று தெரியாமல் சீதை இரங்கிப்பாடுவது. நீ பாடும் போது குரலில் ஏக்கம் இருக்க வேண்டும் ; உருகிப்பாடம்மா ,உருகு ' என்று சொல்வார்."

"அக்கா அதைப் பிடித்துக் கொண்டு மெழுகுவர்த்தி போல உருகினாள். ' யாரோ இவர் யாரோ ' என்று அக்கா காலை, மாலை என்று பார்க்காமல் உருகுவது வீட்டிலும் , வளவிலும் , ரோட்டிலும் கேட்டது. தெருவிலே போகிற யாரோ ஒருத்தன் ஒரு நாள் பாட்டைக் கேட்டுவிட்டு ' அது நான் தான் ' என்று உரக்கக் கத்திவிட்டு மறைந்தது ஐயாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆள் யார் என்பதையும் ஐயாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றே அந்தப் பாடலுக்குத் தடை விழுந்தது. ஐயா விதித்த முதல் தடை அதுதான்."

இப்படி பாரம்பரியக் குடும்பம் என்று சொல்லிக்கொள்கிற பழமைவாத ஆணாதிக்கவாதச் சிந்தனைப் போக்குள்ளவர்களைத் தோலுரிக்கின்ற நையாண்டி கொப்பளிக்கிற எழுத்தாக நீள்கிறது.

" காரணம் கேட்டுவாடி - சகியே
காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத
காரணம் கேட்டுவாடி

பந்துவராளியில் அமைந்த இந்தக் கீர்த்தனை பந்து போல பல இடங்கள் சுற்றி அலைந்த பின் அக்காவிடம் வந்து சேர்ந்தது. அக்கா இரவும் -பகலும் சாதகம் பண்ணினார்.எல்லாம் நல்லாகவே நடந்தது. எல்லாம் நல்லாகவே நடக்கிறது. இனிமேலும் நல்லாகவே நடக்கும் என்று நம்பிக்கை பிறந்தபோது தீடிரென்று அந்தப் பாட்டுக்கும் ஐயாவிடம் இருந்து தடை வந்தது.சிதம்பரநாதன் என்று ஓர் இளம் பையன் எங்கள் கிராமத்தில் எங்கோ வசிக்கிறான் என்ற தகவல் ஐயாவுக்கு வந்த சேர்ந்திருந்தது. உடனே தடைச் சட்டத்தை ஐயா பிரயோகித்தார்."

அடுத்த கீர்த்தனையில்தான் ஐயாவுக்கும், பாட்டு வாத்தியாருக்கும் இடையிலான சச்சரவு உச்சநிலையை அடைந்தது. பாட்டுவாத்தியார் மிகவும் கவனமாகவே தனது அடுத்த பாட்டைத் தெரிவு செய்தார். கோபாலகிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனை , இது இப்படித் தொடங்கியது.

"எப்போ வருவாரோ
எந்தன் கலிதீர ஆஆஆஆ
எப்போ வருவாரோ

இதுதான் பல்லவி. அக்காவும் அனுபவித்துப் பாடினார். ஒரு மாதமாக பல்லவி அப்பியாசம் நடந்தது. பல்லவி முடிந்ததும் அநுபல்லவியை ஆரம்பித்தார். அநுபல்லவியில் ஒரு குண்டு வந்து இறங்கப்போவது ஐயாவுக்கோ , பாட்டு வாத்தியாருக்கோ தெரியாது. அக்கா பாவம் அவருக்கு என்ன தெரியும்?

எப்போ வருவாரோ
எந்தன் கலிதீர ஆஆஆஆ
எப்போ வருவாரோ
செப்பியதில்லை சிதம்பரநாதன்

ஐயாவுக்குத் தலை சுற்றியது. ஒரு மாத காலமாக அநுபல்லவியை ஒளித்து வைத்துவிட்டு இப்பொழுதுதான் வெளியே எடுத்துவிடுகிறார் என்று பாட்டுவாத்தியாரைப் பிடிபிடியென்று பிடித்துவிட்டார். 'என்ன காரணம் பிறகும் சிதம்பரநாதன் , சிதம்பரநாதன் என்று சொல்லிக் கொடுக்கிறீர்? ' என்றார் ஐயா. நான் என்ன செய்ய. எனக்குத் தெரிந்த பாடலைத்தானே நான் சொல்லிக்கொடுக்க முடியும். இது தோதுப்படாது.' அவர் சால்வையை உதறித் தோளிலே போட்டுக் கொண்டு திடிரென்று எழும்பி நின்றபோது எப்படியோ இருவரும் சமாதானமானார்கள்."

ஒரு ஆண் பெயரைச் சொல்வதில்கூட பெண்ணுக்கு இருக்கும் உரிமை குறித்த நிலைப்பாடுகள் எப்படி மோசமானவையாக இருக்கின்றன என்பதைக் காட்டும் சித்திரங்கள்.

மாரிமுத்தாப் பிள்ளையின் 'காலைத் தூக்கி நின்று' பாட்டை வாத்தியார் சொல்லிக் கொடுத்த போது ஒருவித எதிர்ப்பும் எந்தப் பக்கத்திலிருந்தும் கிளம்பவில்லை. அதிலே ஆண் பெயர்கள் இல்லை என்பதைச் சலித்துப் பார்த்து உறுதி செய்த பிறகுதான் ஐயா அனுமதித்தார். அக்காவும் தன் சக்திக்கு இயன்ற மாதிரி அந்தப் பாடலைத் திறமையாகப் பாடினார்.

கொக்குவிலிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அந்தப் பாடலின் பிரபல்யம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. அன்று தூக்கிய கால் இன்று வரை கீழே இறங்கவே இல்லை."

இன்னமும் பெண் கல்வி குறித்த சிந்தனைகள் பரவியும் கூட எத்தனை கிராமங்களில் இப்பிரச்சினை அங்கங்கே நிலவுகின்றன என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாட்குறிப்பில், Daniel Defoe என்பவர் எழுதிய 'Robinson Crusoe' நாவல் பற்றிய குறிப்பொன்றைத் தருகிறார் முத்துலிங்கம். "இந்த நாவலில் வரும் ஒரு சம்பவம் அப்பொழுது நான் அனுபவித்த தனிமைக்குப் பொருந்தமானதாக அமைந்தது. குருசோ ஓர் ஆளில்லாத தீவில் பல ஆண்டுகள் தனியாக சீவிக்கிறான். அவனுக்கு விலங்குகள், பாம்புகள், பறவைகள், பூச்சிகள் என்று எதற்கும் பயமில்லை. ஒரு நாள் கடற்கரையில் மனிதக் காலடியைக் கண்டு மிரண்டு போகிறான். பீதி பிடித்து என்ன செய்யலாம் என்று தெரியாது நடுங்குகிறான். அப்போது எனக்கு ஓர் உண்மை துலங்கியது. மனிதனுடைய உண்மையான எதிரி இன்னொரு மனிதந்தான். நாங்கள் இரண்டாயிரம் பேர் ரயிலில் போக முடியாமல் கப்பலில் போவதற்குக் காரணம் இன்னொரு மனிதனிடம் எங்களுக்கிருந்த அச்சம்தான்" என்று நீள்கிற நாட்குறிப்பு தான் அகதியாகத் துன்புற்ற அவலமும் அதுசார்ந்த செய்திகளுடனும் நகர்கின்றது. அதன் இறுதிப் பகுதி தமிழீழம் தமிழீழம் என்கிறீர்களே அது எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு கேர்னல் கிட்டுவின் ரௌத்ரம் பழகிய உரையுடன் முடிகிறது.

"இலங்கைத் தீவின் வரைப்படத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் கையிலே எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கையில் எந்தெந்தப் பகுதிகளில் பீரங்கி வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ, எந்தெந்தப் பகுதிகளில் தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தினரின் வன்முறைக்கு ஆளாகி அவலப்பட்டார்களோ, அந்தந்த இடங்களை எல்லாம் வரைபடத்தில் வண்ணம் தீட்டுங்கள். முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்தப் பகுதிதான் தமிழ் ஈழம். அதுதான் எங்கள் எல்லைகள்."

இந்த இடத்தில் நினைவுகூறத்தக்க நிகழ்வு இது. கலைஞரிடம் காங்கிரசார் சட்டமன்றத்தில் 'தமிழ்நாடு தமிழ்நாடு' என்று கேட்கிறீர்களே அது எங்கே இருக்கிறது என்று கேட்ட கேள்வி போலவே தொனிக்கிறது. காலங்கள் தோறும் உலகின் பல பகுதிகளிலும் ஆதிக்கவாதத்தின் மொழி ஒரே தொனியில்தானிருக்கிறது என நிறுவ இவை ஒத்திசைகின்றன.

புளுட்டோ கோள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டில் பிறந்து, புளுட்டோ கோள் மறைந்த ஆண்டில் இறந்த அண்ணர் பற்றிய குறிப்பினூடாக இடம்பெறும் போர் சார்ந்த செய்திகள் அதிர்ச்சிகரமானவை. பொழுதுபோக்காகக்கூட குண்டு வீசிக் கொல்லும் சமகாலப் போர் நெறிகள் குறித்து என்னவென்பது, புதினத்தில் விவரிக்கப்படும் இவ்விடத்தை நோக்கலாம்.

"அண்ணருடைய வீடு துரதிஷ்டவசமாக இலங்கை விமானப் படையின் ஆகாயப் பாதையின் கீழ் இருந்தது. குண்டு போடுவதற்காகப் புறப்பட்டு போகும் விமானங்கள் சில வேளைகளில் இலக்குகள் கிடைக்காமல் திரும்பும்போது மற்ற விமானிகளில் பரிகசிப்புக்கு ஆளாக நேரிடும். ஆகவே திரும்பும் வழியில் விமானிகள் குண்டுகளை எப்படியும் தள்ளிவிட்டுப் போவார்கள். அது அண்ணரின் கிராமத்தில் சாரியாக விழும். கடைசிக் காலத்தில் அண்ணரின் ஓய்வூதியக் காசெல்லம் வீட்டு இடிபாடுகளைத் திருத்துவதிலேயே செலவானது. ஒருநாள் அதிகாலை அண்ணார் திடீரென்று அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு வேதனையில் துடித்தபோது அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஆஸ்பத்திரி என்று பெயரே ஒழிய, அங்கே வசதிகள் குறைவு. ராணுவம் வீசிய குண்டு வீச்சில் கூரை ஒரு பகுதி உடைந்துபோய் ஓட்டையாகியது. பகல் நேரத்தில் வெள்ளை முகில் தெரியும்; இரவு நேரத்தில் நட்சத்திரம் தெரியும். மருத்துவர் எப்போதாவது வருவார். மருந்தும் இல்லை. ஒரு நாள் தாதி மட்டும் பகல் நேரத்தில் இருப்பார்.

பாலஸ்தீனியர் , ஒரு முழு நாடு அழிந்து போனலும் உலகம் கண்டுகொள்ளப் போவதில்லை என்று சொன்னார். ஒரு குடுப்பத்துக்காகத் தன் முழு ஆயுளையும் கொடுத்து உழைத்து மறைந்துபோன ஒருவரை யாராவது நினைவில் வைத்திருப்பார்களா ? ஒருவரும் அதை எழுதி சரித்திரமாக்கப் போவதில்லை. அவருடைய சந்ததி சங்கிலியும் அவருடன் முடிவுக்கு வந்தது " என்று சர்வ சாதாரணமாக மனித வாழ்க்கையின் அரும் பண்புகள் குறித்த சுவடுகள் போர்க்கலத்தில் எவ்வாறு துடைத்து ஒழிக்கப்பட்டுவிடுகின்றன என்பதை முத்துலிங்கம் அழுத்தமாக பதிவு செய்கிறார்.

சித்திரம் வரைய மட்டுமல்ல மொழி வளரவும் சுவர் எப்படி பயன்பட முடியும் என்பதை மிக அழகாகச் சொல்லிச் செல்லும் ஆசிரியர் அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் போகிற போக்கில் சொல்வது அவலம் கூடிப்போகச் செய்கிறது.

முடி திருத்தும் கடைசியில் ஒரு மனிதர். கனடாவுக்கு இடம் பெயர்ந்த ஈராக்கியர். பொறியியல் படித்து விட்டு ஏன் முடி திருத்துபவராக இருக்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு , எனது சொந்த மொழியில் பொறியியல் படித்துவிட்டு போரச்சம் காரணமாய் இங்கு வந்தால் இன்னொரு முறை ஆங்கிலத்தில் பொறியியல் படிக்க வேண்டுமென்கிறார்கள். எனவே முடி திருத்துவதும் ஒரு பொறியியல்தான் என்று பேசுகிறார்.

அப்போது அங்கு வந்த பெண் இவரை ஈராக்கியர் என்று நினத்து அரபு மொழியில் பேச இவர் எனக்கு அரபு தெரியாது என ஆங்கிலத்தில் சொல்ல எரிச்சலுடன் நகர்கிறாள் அவள். பிறகுதான் இவரது தாய்மொழி அரபு அல்ல. அராமிக்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் இவர் என்று தெரியவருகிறது. அம்மொழி ' அழியும் ஆபத்திலிருக்கும் மொழி ' என அறிவிக்கப்பட்டதாகவும் , இந்த நாட்டில் அவரும் அவர் மனைவியும் மட்டுமே. மனைவியும் இறந்துவிட்டதால் நான் தினமும் இரண்டு மணி நேரம் சுவரோடு பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இல்லாவிட்டால் என் தாய் மொழி அழிந்துவிடுமே என்கிற கவலையில் காப்பாற்றத் துடிக்கிறேன். நான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் என் மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

"நண்பரே , அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒரு மொழியை நிறுத்த தனி மனிதர் ஒன்றுமே செய்ய முடியாது. இன்றிரவு சுவருடன் உங்கள் உரையாடல் இனிமையாக அமையட்டும்."

"ஏன் அப்படிச் சொல்லி விட்டீர்கள். ஒரு மொழியை அழிய விட்டுவிடுவோமா ? "

இப்படி அந்த உரையாடல் முடிகிறது. மொழி குறித்தும் அதைப் பேணிக் காக்கும் தீவிரம் குறித்தும் ஒரு முடித் திருத்தும் கலைஞரது கருத்துக்கள் அவரை முடித் திருத்துபவராக மட்டுமல்லாது சமூகம் திருத்தும் கலைஞராகவும் பரிமளிக்க வைக்கின்றன.

பல நாட்குறிப்புகளை ஒன்றாக்கி நாவலாக்கும் ரசவாதம் முத்துலிங்கத்துக்கு வாய்த்திருக்கிறது. எங்கும் பகட்டில்லை ; படாடோபம் இல்லை. எளிமை , மிக எளிமை. இந்த எளிமைதான் ஈர்க்கும்படியாக அவரது எழுத்தை மின்னச்செய்கிறது.

கடைசியில் , ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் ஒரு நிமிடம் நாலு வினாடி பின்னுக்குத் தள்ளிக் கொண்டே போகிறது என்கிற குறிப்புடன் முடிவது குறியீட்டுத் தொனியிலும் அமைந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மொழி - மொழிச் சமூகம் , அறிவு எதுவும் பின் தள்ளப்படக்கூடாது என்கிற தொனியாகவும் அது இருக்கக் கூடும்.

6

இ. தியாகலிங்கத்தின் 'பரதேசி ' நாவல் - யாழ் - நார்வே - கனடா - என்று புகலிடமும் புகலிடம் சார்ந்தும் திணைப் பின்புலத்தைக் கொண்டு வெகு சாதாரணமாக - தமிழ்ச் சூழலில் எழுதப்படுகிற சராசரி நாவல்கள் போலவே காதல் - திருமணம் - குடும்பச் சிக்கல் - மீண்டும் காதல் - மறுதிருமணம் என்று சுற்றிச் சுழல்கிறது. வழுவான கதைப் பின்னலோ - கதைத் தளமோ இல்லையெனினும் சராசரித் தமிழ்ப் பெண் நிலையிலிருந்து சகித்துக் கொண்டு வாழாமல் ' புனிதம் ' குறித்துக் கவளைக்கொள்ளாமல் ' மாற்று ' தேடும் சிந்தனைக்கு ஆட்படும் பாத்திரப் படைப்பால் சற்றே நிமிர்ந்து நிற்கிறது எனலாம்.

" எப்படி இருக்குது கனடா? உங்கட நோர்வேயா இல்லாட்டி கனடாவா பெற்றர்?"

"கனடா ஆல்வேஸ் பெற்றர். அதென்ன உங்க நோர்வே ? நான் ஒண்டும் நோர்வேயச் சொந்தமாக வேண்டல்ல. அலைஞ்சு திரியிற எங்களுக்கு இப்ப உலகமே சொந்தமான மாதிரி ஒரு மயக்கம். எந்த நாட்டுக் காரனும் எங்களைச் சொந்த நாட்டுக் காரனாய் ஏற்றுக்கொள்ளாததுதான் உண்மையானயதார்த்தம் , இல்லையே ?"*

சுடுகிற யதார்த்தத்தை இன்னும் கூர்மையாகவும் புதிய கதைப்பு உத்திகளுடனும் நெஞ்சை நெகிழ்த்தவும் , குரூர - வக்கிர அரியலுக்கெதிராகக் கிளர்ந்தெழவும் செய்யமுடியும் என்பதும் ; தவறு , அது எங்கு நடந்தாலும் விமர்சிக்க முடியும். வேண்டும் என்பதுவுமாக வேறு சில புனைவுகளைப் பார்க்கலாம்.

7

புகலிடத் தமிழ்ப் புதினங்களில் குறிப்பிடத்தக்க இரண்டு புதினங்கள் ' ம் ', 'கொரில்லா ' ஆகியனவாகும். புகலிடத் தமிழ்ச் சிறுகதைகளில் பின்னவீனத்துவக் கதையாடல் மூலம் தனக்கெனத் தனித்த தடம் பதித்த ஷோபாசக்தி தமிழ்ப் புதின உலகில் தமது புடைப்புகள் மூலம் ஒரு அசைவியக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் எனலாம்.

" எல்லாப் புனைவுகளும் இருப்பியற் பிரச்சனைகளை அவற்றினூடாக மனிதச் சுயத்தைப் புரிந்துகொள்ளும் நிறைவேறாத முயற்சிகள்தான். இருப்பியற் பிரச்சனைகளை வரலாறுதான் தீர்மானிக்கிறது. வெலிக்கடை சிறைப் படுகொலை , மட்டக் களப்புச் சிறை உடைப்பு , இயக்கப் படுகொலைகள் என்கிற வரலாற்றுப் பின்னணியில் மனித இருப்பைப் புரிந்துகொள்ள முயலும் சிக்கலான பணியை வேகம் குன்றாமல் செய்கிறது ஷோபாசக்தியின் இப்புதினம் " என்கிற அறிமுகத்துடன் ' ம் ' நாவல் நமக்கு முன் விரிகிறது.

புத்தகத்தின் காணிக்கைப் பகுதி இப்படி அமைந்துள்ளது. இதுகூட ஒரு வித்தியாசமான சொல்லல் முறைதான். " முப்பது வருடங்களாக கொடிய யுத்தம் ! ஒரு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் , அம்பதினாயிரம் வீரர்கள் , இருபதாயிரம் விதவைகள் , பத்தாயிரம் பேருக்குப் பைத்தியம் , பூசா , மகசின் , களுத்துறை , பாரிய இடப்பெயர்கள் , புலப்பெயர்வுகள் , இயக்கங்கள் ,மாவீரர்கள் , தமிழீழ ஒழிப்புச் சட்டம் , தமிழீழச் சிரை , துரோகிகள் பேச்சுவார்த்தை , மானுட ஒன்று கூடல் , பொங்கு தமிழ் கதைகளும் , பெருங்கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.எல்லாக் கதைகளையும் கேட்டுக் கொட்டு ' ம் ' சொல்லிக் கொண்டேயிருக்கும் - சனங்களுக்கு " என காணிக்கையாக்கப்பட்டிருக்கிறது. வாழ்வுநெடுக் அந்தக் காலம் முதல் ஏழு கடல் தாண்டி , ஏழு மலை தாண்டி , கதைகள் - நல்லதங்காள் கதைகள் எனக்கென்னத் தெரியும் நாஞ்செல்லத் ' தங்கச்சி ' கதைகள் , ' அத்திருபாட்சா கொழுக்கட்டை ' கதைகள் , ராமாயணம் , மகாபாரதம் , 64 நாயன்மார்கள் , கிரிமினல் கேஸ் கதைகள் , கம்பரசக் கதைகள் , சிறுதெய்வக் கதைகள் , குட்டிக் கதைகள் , புட்டிக் கதைகள் , ஆரியமயமாக்கல் கதைகள் , பெண்ணியத் தலித்தியக் கதைகள் என எத்தனைக் கதைகளைக் கேட்டு ' ம் ' கொட்டுகிறோம். ஏதாவது அசைவு ? சொல்லப்பட்ட கதைகளின் நீதி எதிர்பார்த்த அளவைவிட வேகத்தைவிட மெதுவாகவே உலகை விழிக்க வைக்கப் பாடுபடுகின்றன என்று பார்க்க முடியும். கதைகள் சொல்லப்படுவது வெறுமனே ' ம் ' போட்டுவிட்டுப் போவதற்குத் தானா ? 2500 வருட தமிழிலக்கிய - செம்மொழித் தகுதிப் பாட்டுக்குரிய மரபும் தொன்மையும் கொண்ட சூழலில் எவ்வளவு கதையாடல்கள் ? எவ்வளவு ' ம் ' கள்... சாதி - மதம் - இழி குணம் , சடங்கு சம்பிரதாய வழக்குகள் சுமந்து திரியும் தலைமுறைகளை அவ்வளவு எளிதில் ஏன் மாற்றமுடியவில்லை.பதுங்கு குழிக்குள் எவ்வாறு சாதி , பதுங்கி குண்டுவீச்சில் தப்பி ஈழத்தமிழரைப் பிளக்க முடிந்திருக்கிறது ? புலம்பெயர்ந்தால் ' சீதனத்தையும் ' கூட எடுத்துச் செல்ல வேண்டுமா என்ன ? மண்ணில் நல்ல வண்ணம் ஏன் வாழ முடியாமல் போனது ? போன்ற கேள்விகளை ' கொரில்லா ' , ' ம் ' நாவல்கள் எழுப்புகின்றன. ' விவிலிய ' எடுத்துரைப்பு போல அதாவது ஏரேமியா , எசேக்கியேல் , யாக்கோபு , யோவான் என்ற பகுப்பு போல இங்கும் டானியல் , ஜெயக்குமார் , கலைச்செல்வன் , சிறிகாந்தமலர் என்கிற பகுப்புக்குள் எடுத்துரைப்பு விவரணம் நீள்வதும் ' கொரில்லா ' நாவல் 1 , 2 , 3 என்று அத்தியாயங்களுக்குள் வரிசை எண்களால் பகுக்கப்பட்டு சொல்லப்படுகிற பிளவுண்ட வாழ்வும் , தமிழ்ப் புதின வரலாற்றில் முற்றிலும் புதியபாணி எனலாம்.

கொரில்லா நாவல் பாரீஸ் நகரிலிருக்கிற யாக்கோபு அந்தோணிதாசன் அரசியல் தஞ்சம் கோரும் மேல்முறையீட்டு விண்ணப்பக் கடிதத்துடன் தொடங்குகிறது. தான் தாயகப்போர்ச் சூழலில் பட்டப்பாடுகள் - பேரினவாதக் கொடூரங்கள் , இயக்க வாழ்வு , அனுபவங்கள் , எதிரெதிர் முகாம்களில் சிக்கிச் சீரழிந்து , புகலிடமொன்றில் ஒண்டுவதற்காக தேச எல்லைகளினூடாக மேற்கொண்ட கொடும் பயணங்கள்... அகதி வாழ்வின் பிளவுண்ட மனநிலைகள் இவற்றினூடான நவீன தமிழியல் படைப்பு முயற்சி என மதிப்புரை குறிப்பிடுவது உண்மையான மதிப்பீடெனலாம்.

" அதைக் கேட்டவுடனேயே இராணுவத்தினர் என்னை பலமாகத் தாக்கினார்கள்.அப்போதுதான் இலேசாக மாறிக்கொண்டிருந்த காயங்களின் மேல் துவக்குப் பின்புறத்தால் தாக்கினார்கள். கைவிலங்கிடப்பட்ட நிலையில் மேசை மீது எனது கைகள் வைக்கப்பட்டு விரல்கள் மீது தடியால் தாக்கியதால் எனது வலது கையின் நாலாவது விரல் முறிந்தது. நடுவிரலும் சிதைக்கப்பட்டது. பின் எனது கால் விரல்களை சிறு குறடு ஒன்றினால் பிடித்து மடக்கி சித்திரவதை செய்தார்கள். பொலித்தீன் பையை நெருப்பில் உருக்கி எனது ஆணுடம்பின் மீது ஊற்றினார்கள். எனது இடது கையில் மெல்லிய கத்தியால் மூன்று தடவைகள் கீறி மிளகாய்த் தூள் போட்டார்கள். நான் மயங்கி விட்டேன்."*

போர்ச் சுழலில் இருந்து குழுக்களாக பிளவு பட்டிருக்கிற ஐக்கியமின்மை காரணமாக மற்ற குழுவினரைக் காட்டிக் கொடுப்பதும் அதன் காரணமாக இம்மாதிரி தாக்கப்படவும் சில வேளை இராணுவத்தினரால் அப்பாவிகளும் , நிரபராதிகளும் தண்டிக்கப்படவும் நேர்கிற அவலம் வடுக்களும் பச்சைப் புண்ணுமாய் மாறி மாறி அழைக்கழிக்க காலம் சீழ் பிடித்து புரையோடிப்போய்விடுமோ என்னும் அச்சத்திலேயே உயிர் பிழைத்து ஓட வேண்டிய நெருக்கடி புதினத்தின் நெடுக்கிலும் சுட்டப்படுகிறது. கிட்டத்தட்ட எல்லாப் புகலிடப் படைப்புகளுமே துவக்கத்திலிருந்து புகலிடம் தேடி அலையும் காரணங்களின் வரலாற்றுப் பதிவை தொடர்ந்து செய்து வருவதாகவேபடுகிறது. எல்லா மொழிப் புகலிடப் படைப்புகளுக்கும் கூட இதைப் பொதுமைப்படுத்தி பார்க்க முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் தாண்டி புகலிட நாட்டின் திணைப் பின்புலம் குறித்தும் அச்சுழலை மையப்படுத்தியும் புதினங்கலின் திசை வழி திரும்பிவிட Nostalgiaயாவின் தாக்கம் கதைகளில் குறைந்து போகவும் கூடும்.

" பாப்பா உன் பேர் என்ன ?"

" பிரின்ஸி சேர் "

"ஃபாதர் பேரு ?"

"ஏசுராசன் "

" வயசு ?"

"ஃபிப்டீன் சேர் "

" சரி இதில் கையெழுத்துப் போடு "

" பிரின்ஸி கையெழுத்துப் போடுவதற்காக மேசையின் அருகில் வந்து மேஜரின் முன்னால் மேசையில் குனிந்து பேனவையெடுத்தாள். அவளின் மார்புகள் மேஜரின் முகத்தைக் குத்துவது போல் நெருக்கமாய் நின்றன.

மேஜர் ஒரு இளிப்புடன் கொஞ்சம் கீழே சாய்ந்து கண்களால் பிரின்ஸியின் மார்புகளைச் சுட்டி பிரின்ஸியின் முகத்தைப் பார்த்து மெதுவாய் கேட்டான்.

"இங்கே என்னா பாம் வைச்சிருக்கேயா ?"

பிரின்ஸி பேனாவைக் கிழே போட்டுவிட்டு நிமிர்ந்தாள். மேஜர் இமைப் பொழுதில் எழுந்து இடுப்புத் துப்பாக்கியை உருவப் போக இவள் மேஜையில் ஏறி விழுந்து மேஜர் கல்யாண சுந்தரத்தைக் கட்டிப் பிடித்தாள்.


அவள் உதடுகள் ' இயேசுவே இரட்சியும் ' என்று சொன்னதும் அவளின் மார்பிலே பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன."*

' அமைதி ' காக்கும் பணியின் அற்புதங்களும் , பெண்ணின் சுயமரியாதை வெட்டிச்சரிப்பதும் எதிர்கொள்கையில் இயக்கங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் இவ்வண்ணம் அமைகின்றன என்கிறது படைப்பு.

எந்த நேரம் எங்கு குண்டு வெடிக்கும் , மரணத்தின் நெடி சுவாசத்தில் எப்போது கலக்கும் என்னும் பதட்டம் கதையின் வார்த்தையாடல் நெடுகிலும்  கொப்பளிக்கிறது.

" இராணுவத்தினரது வாகனத்துக்குள் தூக்கியெறியப்பட்டு விழுந்த என்னை ஒரு இராணுவத்தினன் மிகுந்த ஆதரவோடு தூக்கி இருக்கையில் உட்கார வைத்தான். நான் இரத்தத்தால் தோய்ந்த ஒரு இருக்கையில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். என் அருகே இரத்தத்தில் தோய்ந்த ஒரு பெரிய சட்டிப் பனங்காய் அளவான பொதி இருப்பதையும் கண்டேன். என்னை ஆதரவோடு தூக்கிய அந்த இராணுவத்தினன் அந்தப் பொதியை எடுத்து என் மடியில் வைத்திருக்குமாறு இளித்துக் கொண்டே சொன்னான்.

மெள்ள பொதியை எடுத்து மடியில் வைக்கும்போதுதான் அது ஒரு உரச்சாக்கிலே பொதியப்பட்டிருக்கும் மனிதத் தலை என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்காகவும் இவர்கள் ஒரு உரச்சாக்கை வைத்திருக்கிறார்கள் என நம்பத் தொடங்கினேன்."

இப்படி அதிர்ச்சிகள் நிரம்பிய அன்றாட வாழ்வியல் சூழல் படைப்புக்குள் வருகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படுகிற அடிக்குறிப்புகள் , இது புதின அமைப்பா ? ஆய்வுக் கட்டுரையா ? என்னும் எண்ணத்தை எழுப்பினாலும் படைப்பாக்க நுட்பமும் , துயர் செறிந்த போர்ச்சூழல் உள்ளடக்கமும் தனக்குள் வாசகரை இழுத்துப் போடவும் , நெகிழ வைக்கவும் தவறவில்லை எனலாம்.

இறுதியாக , "...நான் ஓடி வந்து பார்க்கும்போது அவரின் கன்னத்திலிருந்து இரத்தம் வடிகிறது. அந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டே ' என்னப்பா நடந்தது ? ' என்று கேட்கிறேன். ஆனால் அவரிடமிருந்து ஒரு பதிலுமில்லை.அப்படியே மெதுவாக முழங்காலிலிருந்து தலையை நிலத்தோடு சரித்து ஒரு சில நிமிடங்களில் அவரின் உயிர் போய் விட்டது. எமது தாய் நாட்டில் இருக்க முடியாத காரணத்தால் தான் நாம் அந்நிய நாட்டிற்கு வந்தோம். அந்நிய நாட்டில் கூட நம்மவர்கள் அவருடைய உயிரை அநியாயமாகப் பறித்து விட்டார்கள். நானும் பிள்ளையும் அவரை இழந்து தவிக்கின்றோம். இந்நிலை எந்தவொரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது "* என்கிற விழைவை முன்வைத்துவிட்டு நகர்கிறது படைப்பு. மிகக்காத்திரமாக ஜனநாயக வெளியில் பேரினவாதம் - தன்னினப் போராளிக்குழுக்களின் பாசிசம் இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்க்கிற படைப்பாக்கமாகத் திகழ்கிறது எனலாம்.

" காற்றிலே உப்புக் கலந்திருந்தது ; ஒளியிலே உப்புக் கவிந்திருந்தது ; உலகமே உப்புப் பரலத்துக்குள்ளும் சில கைதிகளுக்குள்ளும் இராணுவச் சீருடைகளுக்குள்ளும் துப்பாக்கிகளுக்குள்ளும் ' பொறு கியண்ட எப்பா ' என்ற ஒற்றை உத்தரவுக்குள்ளும் அடங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் சுவர்களிலே பிணைக்கப்பட்டிருந்தேன். என் தேகம் மூடி உப்புப் படிந்த ஒரு சிதைக்கப்பட்ட உப்புச் சொரூபம் போல நான் ஆனையிறவு உப்பள இராணுவ முகாமில் வீழ்ந்து கிடந்தேன். அவர்கள் சதா காலமும் என்னைப் பேச வைத்தார்கள். பெற்றோலால் நிரப்பப்பட்ட பொலிதீன் பைகளுக்குள் என் உதடுகள் காற்று விலக்கித் தள்ள நாவு சுழன்றது. அவர்கள் என்னிடம் திருப்பதியற்றவர்களாகவே காணப்பட்டார்கள். லெபனானில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி பெறும் தமிழ்ப் போராளிகளைக் குறித்து என்னிடம் விசாரணை செய்தார்கள். நமது போராளிகள் லெபனானில் பயிற்சி பெறுகிறார்கள் என்ற செய்தியைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. இந்த பென்னம் பெரிய இராணுவ முகாமை வீழ்த்த அவர்களில் பத்துப் பேரே போதுமானவர்கள் என நினைத்துக்கொண்டேன். செவித்த வாரத்துக்குள் பென்ஸிலை நுழைத்து மரண அடி அடிக்கும் கொலை நுட்பத்தை இராணுவத்தினர் எனக்குத் தெள்ளத்தெளிவாக விவரித்துக் கொண்டேயிருந்தார்கள். முதலில் மேசையில் எனது தலையைச் சாய்ந்து வைப்பார்களாம். பின் செவித்துவாரத்துள் முழுப் பென்ஸிலை நிறுத்துவார்களாம். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒவ்வொரு பொய்க்கும் ஒரு சென்றி மீற்றர் ஆழத்துக்கு பென்ஸிலைச் சுத்தியலால் தட்டி காதுக்குள் இறக்குவார்களாம். அதிக பட்சம் நான்கு பொய்கள் வரை கூறலாமாம். அய்ந்தாவது பொய் சொல்வதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேனாம். அகில இலங்கை ரீதியில் இந்த பென்ஸில் அடிக்கு உடுகம்பொல என்ற இராணுவ அதிகாரியே பிரபலமானவராம். இந்தக் கதைப் புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களில் நான் உடுகம்பொலவைச் சந்திக்க நேரிடலாமாம் "* என்றும் ,

" சிறிகாந்தமலர் என்றொரு பெண்ணாம்.

அவள் தலைமறைவு இயக்கத்துடன் தொடர்புடையவளாம்.

அவளைக் கைது செய்த சி. அய். டி. பொலிசார் அவளைச் சித்திரவாதை செய்தார்களாம். அவளின் பெண்குறிக்குள் எரியும் சிகரட்டை நுழைத்தார்களாம்.

அவள் தாகத்தால் தவித்த போது சாக்கடை நீரைக் குடிக்க வைத்தார்களாம். அவளைத் தங்கள் முன் மூத்திரம் பெய்யச் சொல்லி பார்த்து சிரித்தார்களாம்.

இறுதியில் அவளைக் கொன்று சடலத்தை பொலிஸ் நிலையத்தில் அவளின் சேலையிலேயே கட்டித் தொங்கவிட்டுத் தற்கொலை என்று சொல்லி சடலத்தை அவளின் சொந்தக் காரர்களிடம் ஒப்படைத்தார்களாம்.

அவளுடன் தொடர்புடைய இன்னொரு போராளியும் பல்கலைக்கழக மாணவனுமான கலைச்செல்வன் என்பவனைத் தேடி பொலிசார் அவளின் வீட்டுக்குச் சென்றபோது கலைச்செல்வன் ஒரு பொலிசுக்காரனைச் சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டானாம்.

தன் வீட்டுக்குத் தன்னைத் தேடி வந்து முற்றம் மிதித்த மிகுதிப் பொலிசுக்காரனையும் பழிதீர்க்கப் போவதாக அவன் சபதம் செய்திருக்கிறானாம்.
நான் கதையைக் கேட்டு ' ம் ' கொட்டினேன். கிட்டத்தட்ட மூன்று கிழமைகளின் பின்னதாக நானும் , மானிப்பாய் தேர்தல் தொகுதி அயக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரின் மீது கொலை முயற்சி மேற்கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டிருந்த குண்டு பிரேமும் சிங்கள நாட்டிலுள்ள பெரும் இராணுவ முகாமான பனாகொட முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டோம் "* என்றும் பாரதக் கதையின் கிளைக் கதைகள் போல ஒடுக்குமுறையின் இரத்தக் கவிச்சி அடிக்கும் கிளைக் கதைகள் சொல்லப்பட்டவாறு நகர்ந்தும் , விரிந்தும் செல்கிறது துயர வரலாறு.

புதினத்தினிடையே சிறையின் வரைபடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எப்போது நாம் நிகழில் இருக்கிறோம் , எப்போது புனைவுக்குள் கொண்டுவரப்படுகிறோம் , இது நிகழ்விடம்தானா ? அல்லது புனைவிடமா ? என்ற மயக்கமும் சில வேளைகளில் இரண்டும் ஒன்றாகிற தருணமும் அமைகின்றன.

"ஆனையிறவிலும் பனாகொடயிலும் பெரியவன் தான் அடிப்பான். இங்கே வருகிறவன் போகிறவன் எல்லாம் என்னில் நொட்டிவிட்டுப் போகிறான். இதைத்தான் சுவாமி அதிகாரத்தைப் பரவலாக்குவது என்று சொல்வது. இப்படி பக்கிரி என்னிடம் அந்த நரகத்தில் நின்றும் பகிடி விட்டார். அவர்கள் திடீரென இரவில் வந்து ஒரு கைதியை நடத்திக் கூட்டிச் செல்வார்கள். அப்படிக் கூட்டிச் சென்ற எந்தக் கைதியும் திரும்பி வரும்போது நடந்த வருவது கிடையாது. தவழ்ந்து வருவான். அல்லது அவனைக் கூட்டி அள்ளிக் கொண்டு வந்து கொட்டுவார்கள்.

எங்களிடையே ராதா , ஆனந்தன் என்று இரண்டு கைதிகள் இருந்தார்கள். அவர்கள் இருவரின் கால்களும் ஒரே சங்கிலியால் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தன. அவர்கள் இருவரும் கொழும்புத் தமிழர்கள். அவர்கள் சி. அய். டியினர் என்ற சந்தேகத்தில் இங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டிருந்தன. நாளின் ஒவ்வொரு மணி நேரமும் அவர்கள் சித்தரவாதை செய்யப்பட்டார்கள். அவர்களின் கையில் ஒரு சோடாப் போத்தல் கொடுக்கப்பட்டிருந்தது.அவர்கள் அந்தப் போத்தல் நிறைய ஈக்களைப் பிடித்துச் சேர்க்க வேண்டும். போத்தல் நிறையும் அன்று அவர்கள் விடுவிக்கப்படுவார்களாம். அந்த இருவரும் கால்களில் விலங்குகளோடு ஈக்களை விரட்டித் திரிந்தார்கள். இதுவரை அவர்கள் ஆறேழு ஈக்களைச் சேகரித்திருந்தார்கள்."*

இவ்வாறு ஆதிக்க வெறிக்குப் பொழுதுபொக்கும் கேலிக்கையுமாக அடிமையாக நடத்தப்படுகிற போராளிகளின் உயிரோடு விளையாடுவது ; அதன் குரூரத்தை ரசிப்பது என்றாகிவிட்ட சிறை வாழ்வு படைப்புக்குள் வருகிறது. இந்நிலையில் மரணம் பற்றிய உளவியல் சித்திரிப்பு இவ்வாறு அமைகிறது.

" இதே பனித் தேசங்களில் ஒரு கிழவன் வாழ்ந்தான். அவன் ஒரு நாள் ஒரு துர்நாற்றம் வீசும் உருக்குலைந்த பிரேத மொன்றைக் கண்டுபிடித்தான். அந்தக் கிழவன் அந்த உருக்குலைந்த பிரேதத்தைத் தன் தலையில் காவித் திரிந்தான். அவன் அந்தப் பிரேத்தை வைத்துக் குழந்தைகளுக்கு விளையாட்டுகள் காட்டினான். அந்தப் பிரேதத்தையும் அதனோடு திரியும் அந்தக் கிழவனையும் கண்ட பெண்கள் வியாகூலத்தோடு கண்ணீர் விட்டார்கள். கிழவனின் வளர்ப்பு மிருகங்கள் பசியால் கிழவனைப் பிறாண்டியபோது அவன் அந்தப் பிரேதத்தின் சில பகுதிகளைப் பிய்த்து மிருகங்களுக்குப் போட்டான். இப்போது கிழவன் சிறுகச் சிறுகச் தானும் அப்பிரேதத்தைப் புசிக்க ஆரம்பித்தான். பிரேதம் வர வரச் சிறுத்துக்கொண்டே போனது. இப்போது அந்தப் பிரேதம் ஒரு சிசுவின் பிரேதம் போல சிறுத்துப் போயிற்று."**

ஆக மரணம் , பழகிய மரணமாகிவிட்டது என்று இலக்கியப் பனுவலாக எழுதிவிடலாம்தான். இச்சூழலில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நிணமும் மஜ்ஜையும் கருக , கொட்டப்பட்டுக் கிடக்கும் குருதியில் வழுக்கி விழுந்து உயிருக்குப் போராடும் வார்த்தைகள் விடுதலையைச் சுவாசிக்கத் தவிக்கின்றன. அத்தவிப்பு படைப்புகளுக்குள் எழுத்து வடிவில் துடித்துக்கொண்டிருப்பதை ' இனம் ' காண முடிகிறது.
 

 
Related News
 • பச்சை இரத்தம்
  விவரணப் படம்

 • இணையதளப் படைப்புகளும் மலேசியத் தமிழரும்
  - சே. சுதா

 • பெரியாரின் ரஷ்ய பயணமும் அரசியல் மாற்றமும் - இர. சாம்ராஜா

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World