Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueமலேசிய தோட்டப்புறவியல் - உள்ளும் புறமும்
 

ஆக்கம்: சே. அபிராமி

    சோழர் காலந்தொட்டு (கி.பி846 - 1279) மலேசிய மண்ணில் தமிழரின் கால் பதிந்த வரலாற்றுத் தடங்கள் இருந்தாலும். 1786-இல் பினாங்குத் தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கிழ் வந்தபிறகே தமிழர்களைப் பெருமளவில் குடியேற்ற வாய்ப்பு ஏற்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகள், டச்சு ஆகிய நாடுகள் தமது பேராதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக கடல்கடந்து உலகின் பல நாடுகளைக் கைப்பற்றி பல காலணித்துவஆட்சியை தோற்றுவித்தன. இவ்வாறு கைப்பற்றிய நாடுகளின் இயற்கை வளங்களையும் கனிமவளங்களையும் சுரண்டவும் தமது நாடுகளுக்கு கொண்டு சொல்லவும் விவசாயப் பண்ணைகளையும் தோட்டங்களையும் சுரகங்களையும் அமைக்கத் தொடங்கினர். இதற்காக உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர். இவர்களை உழைக்கும் மக்கள் என்று சொல்வதைவிட "சுரண்டலுக்கு" ஒத்துபோகிற அடிமைகள் என்று கூட சொல்லலாம். எனவேதான் ஆப்பிரிக்க கருப்பர்களையும் இந்தியர்களையும் பலநாடுகளுக்கு குடியேற்றினர். இவகளால் காலணி நாடுகளில் காடுகள் அழிக்கப்பட்டு பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

    முக்கிய நிகழ்வாக தென்னிந்தியாவில் இருந்து பெரும்பாலான தமிழர்கள் இலங்கை, மலேசியா, மொரீசீயஸ், பர்மா, பீஜி, தென்னாப்பிரிக்கா, போன்ற பலநாடுகளுக்குப் பெயர்ந்து சென்றார்கள். இந்த நாடுகளில் ஆங்கிலேயேர் ஆட்சி இருந்ததால் இது இலகுவாயிற்று. இவ்வாறு குடியேற்றப்பட்ட மக்கள், தோட்டம், தோட்டம் சார்ந்த பகுதிகளிலே வாழவைக்கப்பட்டார்கள். இவர்கள்தான் பின்னர் பெருந்தோட்ட சழூகம் (PLANTATION SOCIETY)என உருப்பெற்றார்கள். இதனை அடைய அவர்கள் கொடுத்த உயிர்த்தியாகங்கள் விலை கணக்கில் அடங்காதது எனலாம்.

      பெருந்தோட்டம் என்பது தொழிலாளி வேலை செய்யும் இடம் மட்டுமல்ல அவனை வேறு எங்கும் போகவிடாதபடி ஒரு எல்லைக்குள் சிறைவைத்திருக்கிற ஒரு அமைப்பு. அந்த அமைப்புக்குள்ளேயே அவர்களுக்குத் தேவையான கடை, வைத்தியசாலை, வழிபாட்டுத்தலம், எனப்பலவும் இருந்தன. இதனால் இந்த மக்கள் அந்த நாட்டு தேசிய இனமக்களோடு தொடர்பே இல்லாமல் இருந்தார்கள் நம் இனத்தவர்கள். இத்தகைய நிலையே அவர்களின் துன்பமான வாழ்க்கையை வெளி உலகம் அறிய ழுடியாதவாறு அமைந்து விட்டது.

  இந்தப் பெந்தோட்ட மக்களின் சமூகவரலாறு 150 ஆண்டுகளுக்கும் மேலானதாகும். இலங்கை, மலேசியா, நாடுகளில் தான் மிகப்பெரிய தொகையில் பெருந்தோட்டங்களில் மக்கள் இருந்தார்கள். இவர்களில் பெருந்தொகையானோர் தமிழ் பேசும் மக்களே. பூமியமைப்பில் தமழகத்தொடர்பற்ற இவர்கள் கலாச்சாரம் சமூக பழக்க வாக்கங்கள் என்பவற்றில் தமழகத்தையே பின்பற்றினார்கள். பலர் தமழக நினைவோடே வாழ்ந்தார்கள்.

     இரண்டாம் உலகயுத்தம், சுதந்திரப் போராட்டம், இந்திய விடுதலை என காலம் ஒடியபோது இவர்கள் வாழும் நாட்டிலேயே ஒரு அந்நிய இனமாக அடையாளம் காணப்பட்டார்கள். பின்னர் இவர்களின் குடியுரிமை ஒரு கேள்விக்குரியானது. இதனையும் பின் தொடந்து 1941-இல் இரண்டாம் உலகப்போரில் ஐப்பானியரின் ஆட்சி தொடங்கிய காலக்கட்டத்திலும் நம்மவரின் குடியேற்றம் பல்வேறு வகையில் அமைந்தது. இந்தியர்கள் குடிப்பெயரத்தொடங்கினர் எனலாம். ஆய்வின் வழியாக கூறும் போது இக்காலக்கட்டத்தில் நான்கு வகையாக குடிப்பெயர்ந்தனர் எனவும், வரலாற்றின் வழியாக அறியும் போது ழூன்றுவகையாகவும் குடிப்பெயர்ந்தனர் என தெரியவந்துள்ளது. 

*  வரலாற்றுப் பேராசிரியர்கள் மலேசிய நாட்டை வளப்படுத்த கீழ்க்கண்ட ழுறையில் இந்தியர்கள் குடியேற்றப்பட்டதாக கூறியுள்ளனர். 

*  கரும்புத் தோட்டங்களிலும், பொதுப்பணித் துறைகளிலும் பணியாற்ற குடியேற்றப்பட்ட தொழிலாளர்கள்.

* கங்காணி முறையில் தமிழ்நாட்டின் கிராமங்களில் தொழிலாளர்களைத் திரட்டுவதன் மூலமாக வேலைக்கு கொண்டுவரப்பட்டவர்கள். அப்போதைய நாகப்பட்டினம் துறைமுகம் இந்தத் தொழிலாளர்களை ஏற்றவருவதற்கு பயன்படுத்தப்பட்ட இடமாகும். 

*  பிழைப்பு நாடி சுயமாக மலேசியாவிற்கு வந்தவர்கள். நாடு சற்றே வளமாகி வியாபாரம் பெருகிய நேரத்தில் செட்டியார்கள், முஸ்லிம் வணிகர்கள், சீக்கியர்கள், சிந்திக்காரர்க்ள், தெலுங்கர்கள், மலையாளிகள் என, பலரும் ஆங்கிலம் தெரிந்த யாழ்பாண்த்தமிழர்களும் குடியேறினார்கள். 

* 1802 ஆண்டில் தமிழ்நாட்டில் போர்க்கைதிகளாகப் பிடிப்பட்ட தமிழர்களை பிணாங்கு தீவை வளப்படுத்தும் நோக்குடன் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டனர்.

        H.G. Wells -ன் “ராணுவ நினைவுகள்” என்று நூலில் நாடுகடத்தல் தொடர்பான செய்திகள் அதில் விரிவாக எழுதப்படடுள்ளன. மேலும் மருது பாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளுடன் பினாங்குத்தீவுக்கு நாடுகடத்தப்பட்ட விபரங்கள் அதில் கூறப்பட்டுள்ளன. 1921- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் வழி தென்னிந்தியர்கள் சுமார் 387,509 பேர் இருந்தனராம். அதில் தமிழர் மட்டும் 39,986 பேர் ஆவர். இவர்கள் தோட்டப்புறங்களிலும் மற்றும் ரயில்வே சாலை, மின்சாரம், நிர் விநியோகத் துயையிலும் நம் தமிழர்கள் பொருமளவில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இதில் ஆங்கிலம் அறிந்த யாழ்பாணத் தமிழ்களும், மலையாளிகளும், தமிழர்களுக்கு அதிகாரிகளாகப் பணியாற்றும் நிலை உருவாகியம். தோட்டப்புறங்களில் தமிழர்கள் அதிகம் நிறைந்து வாழ்ந்தால் அங்கே தமிழ் பள்ளிகள் மட்டுமே உருவாகியது. தமிழர் வாழ்வில் எந்தவிதமான் மாற்றங்களும் இல்லாமல் அவர்கள் தங்களின் பூர்வீக தமிழ்நாட்டு கிராமங்களில் வாழ்ந்தது போலவே சாதி, சமய வேறுபாடுகளாய் பிளவுபட்டே நின்றார்கள். சரியான வ்ழிகாட்டுதல் இல்லாமல் இவகளின் வாழ்க்கை அமைந்திருந்ததால் இருண்ட காலம் எனலாம்.

      1929-இல் தந்தை பெரியார் மலாயா நாட்டிற்கு வருகை புரிந்த பிறகு தமிழரின் வாழ்வில் புதிய வேகமும் சிந்தனையில் மாற்றமும் உருவாகியது. மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய இலக்கியப் போக்குகள் இக்கால கட்டடத்தில் உடுவாகின என்றால் அது மிகையாகாது. நகர்ப்புற மக்களிடம் மட்டுமல்லாமல் தோட்டப்புறங்களிலும் பெரியாரின் சிந்தனைகள்-பேச்சுகள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தின. பலமொழிகள் பேசப்பட்ட இந்தியர்கள் இங்கு இருந்தாலும் பெரும்பான்மையின் தமிழர்களாக இருந்த காரணத்தால் இந்தியர்களின் பொது மொழியாக (தமிழ்) ஏற்றுக் கொள்ளப்பட்டகாலம் இது. பொரியாரின் வருகை மலேசிய தமிழர்களின் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

      அதனைத் தொடர்ந்து சஞ்சிக்கூலிகளாகத் தமிழக மண்ணிலிருந்து மலாயாவுக்கு ஆங்கிலேயர்ளால் கொண்டுவரப்பட்ட தமிழர்கள் காட்டையும் மேட்டையும் திருத்தி ரப்பரைப் பயிரிட்டு நாட்டுக்கு வளத்தைத் தேடிதந்தார்களே தவிர தம் வாழ்வில் உயர்வின்றி. மாதச்சம்ளத்திற்கும் அடிப்படை வசதிக்காகவும் போராட்டம் நடத்துபவர்களாக சற்று மாறினர். தோடிதந்தாகளே தவிர தம் வழ்வில் உயர்வின்றி. மாதச்சம்பளத்திற்கும் அடிப்படை வசதிக்காகவும் போராட்டம் நடத்துபவர்களாக சற்று மாறினர் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் (1941) உருவாகக்காரணம் முப்பதுகளில் பொருளாதார வீழ்ச்சியும், மந்தநிலையும் ஏற்பட்டது. ரப்பர் விலை குறைந்தமையால் வேலையில்லை என்ற நிலையும் காணப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிகாலம்:

            மலேசியாவின் வளர்ச்சிக்கு ஆக்க சக்திகளாக விளங்கியவர்களுக்கு முதன்மை இடத்தில் இருப்பவர்கள் தோட்டத் தொழிலாளர் ஆவர்.ஆங்கிலேயர்களின் தோட்டங்களில் அவர்களின் அடக்கு முறையில் சிக்குண்டு மிகச்சொற்பச் சம்பளத்தில் கொத்தடிமைகளாய் உழைத்து உழைத்து ஆங்கிலேய முதலாளிமாரை வளப்படுத்திவிட்டு அவர்கள் மட்டும் ஓட்டாண்டிகளாகவும் சாறு உறிஞ்சிய பின் துப்பப்பட்ட சக்கைகளாகவும் மாறி அழிந்து போயினர். தொடக்க காலத்திலிருந்தே இவர்களின் வாழ்க்கையில் தோட்டநிர்வாகத்தினரின் கெடுபிடி, அடக்குமுறை,சம்பளப் பிரச்சனை போன்றவை இவர்களின் வாழ்வைச் சிதறடித்து வந்தன. இதனால் இவர்களின் வாழ்கைத் தரம் மிகவும் பின் தங்கிய வறிய நிலையிலேயே இருந்தது.தோட்டங்களில் அடிப்படை வசதிகளற்ற சிறுவீடுகளில் விலங்குகள் போல் அடைத்து வைக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

    வறுமையும் தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையும் கிராணி கங்காணி போன்றோரின் அச்சுறுதல்களும் அவர்கள் சந்தித்து வந்த அன்றாடப் பிரச்சனைகளுள் சில.அடிப்படை வசதிகளுக்காகவும் சம்பள உயர்வுக்காகவும் தொடக்க காலத்திலிருந்தே இவர்கள் போராடி வந்துள்ளனர். ஆதிக்க சக்திகள் இவர்களின் முயற்சிகளை அதிகார வர்க்கத்தின் இரும்புக் கரங்கொண்டு முறியடித்தே வந்துள்ளன. 1911 - இல் தொடங்கிய சிலாங்கூர் மாநிலத்தில் கங்கைத் திங்கித தோட்டத தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதரத்திற்கான போராட்டம் 1941 இல் உச்சத்தை அடைந்தது எனலாம்.1941 - ஆம் ஆண்டு மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்ககையில் மறக்க முடியாத, மறக்க கூடாத ஓர் ஆண்டு எனில் மிகையில்லை.

       இந்த காலகட்டத்தில்தான் இந்திய விடுதலைக்காக பாடுபட்டுக் கொண்டியிருந்தவர்கள் அயல்நாடுகளுக்கும் சென்று இந்திய விடுதலை போராட்டத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டியிருந்தனர். அவ்வகையில் சிலர் அன்றைய மலாயாவுக்கு சென்று அங்கு காணப்பட்ட தோட்டத் தொழிலாளர் பிரச்சனையிலும் போராட்டத்திலும் கலந்து கொண்டனர். அவர்கள் தோட்டம் தோட்டமாகச் சென்று தங்களின் பேச்சு வன்மையால் தொழிலாளர்களைத தட்டி எழுப்பி, எழுச்சியை ஊட்டினர். இதனால் விழிப்படைந்த தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை வசதிக்காகவும் , ஊதிய உயர்வுக்காகவும் போரட்டம் நடத்த துணிந்தனர்.

   முதலில் கிள்ளான் வட்டாரத்திலுள்ள 28 தோட்டங்களில் தொடங்கிய இப்போராட்டம் பின்னர் நாட்டின் பிறபகுதிகளுக்கும் பரவி நிலைமை மோசமாகியது.1941 இல் நடந்த இப்போராட்டத்திற்காக ஆங்கிலேய முதலாளி மார்களுக்காகக் காலனித்துவ பிரிட்டிஷ் அரசு போலிஸ் பலத்தையும் ராணுவபலத்தையும் தந்து உதவியது.கிள்ளான் வட்டார இந்திய தொழில் சங்கத்தில் தலைமையேற்று நடத்திவந்தவர் ஆர்.எச்.நாதன் எவ்வித பலமும் தளமும் அற்ற தோட்டப் பாட்டாளிகளின் கோரிக்கைகளுக்கான போராட்டம் சுலபத்தில் முறியடிக்கப்பட்டது.பலர் துப்பாக்கி குண்டுக்கு இறையாயினர். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர். மேலும் அதன் தலைவரான ஆர்.எச்.நாதன் மற்றும் சங்கத்தின் பலரும் நாடு கடத்தப்பட்டனர்.1941 பிப்ரவரி திங்கள் தொடங்கிய இப்போராட்டம் அதே ஆண்டு மே திங்கள் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டத்தற்காக தோட்டங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.   

ஜப்பானியர் ஆட்சி காலம்:  

     இதனை பின் தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது மலாயா ஜப்பானியர் வசம் வீழ்ச்சிகண்டது.அதன் விளைவாக ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் மலாயாவில் ஜப்பானியர் கொடுங்கோலாட்சி நடைபெற்றது.இதனால் மலாயாவில் ஜப்பானியர் ஆட்சியில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததோடு பல்லாயிரக்கணக்கானோர் உயிர்களையும் உறவுகளையும் இழந்து பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.

        ஜப்பானியரின் கொடுமைகளுள் உச்சமாகக கருதப்படுவது சயாம் மரண ரயில்பாதை ஆகும். இப்பாதை மலாயா ,தாய்லாந்து(சயாம்) பர்மா ஆகியவற்றை இணைப்பதற்காகப்  போடப்பட்டது.இப்பாதையை அமைக்க ஜப்பானியர் தோட்டப்புறத் தமிழர்களையே மிகுதியாக கட்டாயப்படுத்திச் சயாமுக்கு இழுத்துச்சென்றார். அதுவும் ஆண் தொழிலாளர்களை கால்நடைகளை அழைத்துச் செல்வது போல் ஒட்டிச் சென்றாராம்.அங்கு சென்று அவர்கள் அனுபவித்த கொடுமைகள் அதிகம் என்றால் ஆண்துணையின்றி இருந்த பெண்கள் பட்ட இன்னல்கள் கொடுமைகள் இன்னும் அதிகம் இங்கு.

    மேலும் ஜப்பானியர் ஆட்சியில் வெள்ளைகாரத் தோட்ட முதலாளிமார்கள் நாட்டைவிட்டு இங்கிலாந்து ஓடிவிட்டபின் தோட்ட நிர்வாகத்தினர் தம் அதிகாரத்துக்கு மீறிய மோசமான அடக்குமுறைகளிலும் கெடுபிடிகளிலும் ஈடுபட்டதனால் தோட்ட மக்களின் நிலை மேலும் மோசமாகிப் போயிருந்தது.எல்லை மீறிப் போயிருந்த செயல்களைத் தட்டிக் கேட்பதற்கும் தோட்டத்து மக்கள் திரனற்று இருந்தனர். பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு இல்லாத உண்மைநிலை காணப்பட்டது மேலும் ஜப்பானியர் ஆட்சியில் ஒரே நாளில் அனைத்து மொழிப்பள்ளிகளும் (ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ்) ஜப்பானியப் பள்ளிகளாக மாற்றப்பட்டு ஜப்பானிய மொழியில் தான் அனைத்தும் கற்றுத்தர வலியுறுத்தப்பட்டன.ஆசிரியர்களுக்கு அவசர அவசரமாக குறுகிய கால ஜப்பானிய மொழி பயிற்சியம் அளிக்கப்பட்டது.

கம்யூனிச நிலை: 

      இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்யூனிச சித்தாந்தக் கருத்துகள் அன்றைய பிரிட்டிஷ் மலாயாவில் மெல்லப் பரவத் தொடங்கின. அதன் விளைவாக 1930 - இல் மலாயாக்கம்யூனிஸ்டுக் கட் சி(Malayan Communist Party) தோன்றியது. இக்கட்சியின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் அரசுக்கு மிரட்டலாக விளங்கவே தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அக்கட்சி தடை செய்யப்பட்டது.ஆனால் ஜப்பானியர் ஆட்சியின் போது இக்கட்சியைச் சார்ந்தோர் பலர் இனவேறுபாடற்ற நிலையில் மக்களை ஒருங்கிணைத்து ஒர் அமைப்பைத் தோற்றுவித்து ஜப்பானியரை எதிர்த்தனர். அவ்வமைப்பு மலாயா மக்களின் ஜப்பானியரை எதிர்த்தனர்.அவ்வமைப்பு மலாயா மக்களின் எதிர்ப்புப் படை என அழைக்கப்பட்டது.அதற்கு பிரிட்ஷாரின் ஆதரவும் இருந்தது.ஜப்பானியர் தோற்றோடிய பின்னர்.அவ்வமைப்பு பிரிட்ஷார் திரும்பும் முன் தற்காலிகமாக நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை ஒரு கம்யூனிச நாடாக மாற்ற முயன்றது.பிரிட்டிஷ் அதற்குத் தடையாக இருக்கவே தங்களின் இலட்சியத்தை ஆள்வதற்கு தலைமறைவாக இருந்து செயல்பட்டனர்.இவர்களே பின்னர் கம்யூனிசப் பயங்கரவாதிகள் எனப்பட்டனர்.ஜப்பானியர் ஆட்சியினால் ஏற்கனவே மிகவும் நொந்து போயிருந்த மக்கள் இந்த புதுப்பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

       கம்யூனிச பயங்கரவாதத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு 1948 , ஜூன் மாதம் அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தியது.(Emergency Period) அது பின்னர் 1960 ஜூலை மாதத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டது. சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் ஊரடங்கு வசிப்பிடக் கட்டுப்பாட்டில் துன்பப்பட்டனர்.அதுவும் நகர்ப்புற மக்களைக் காட்டிலும் தோட்டப்புற மக்களே பெரிதும் அவதிக்குள்ளாயினர். 

தோட்டத் தூண்டாடல் பிரச்சனை: 

            இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் காணப்பட்ட ஒரு சமகால வரலாறு தோட்டத்தூண்டாடல் ஆகும்.விடுதலைக்குப்பின் தோட்டப்புறச் சமுதாயத்தின் முக்கிய வாழ்வியல் பிரச்சனையாக அது அமைந்தது.சுமார் 290 தோட்டங்களில் வாழ்ந்த 22,500 தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதித்த சிக்கல் அது.நாட்டின் அவசரகாலப் பிரகடனமும்(1948) மலாயாச் சுதந்திரமும்(1957) ஆங்கிலேய முதலாளிமார்களைத் தோட்டங்களை விற்பதற்குத் தூண்டின. எளிதில் விற்றுவிட வேண்டி, தோட்டங்களை துண்டு போட்டு விற்றனர்.இதன் விளைவாகப் பல ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் வேலையை இழந்து நடுத்தெருவில் நின்றனர்.பிச்சையெடுத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.பலர் மீண்டும் முன்னோர் நாடான இந்திய நாட்டிற்கே திரும்பினர்.இன்னும் சிலர் வேலை தேடி, காடுகள் நிறைந்த சபா,சரவாக் போன்ற கிழக்கு மலேசிய மாநிலங்களை நாடிச்சென்றனர்.எனவே தோட்டப்புறச் சமுதாயத்தின் பல்வேறு துன்பங்களுக்குத் தோட்டத் தூண்டாடலே முக்கியக் காரணமாய் அமைந்தது.இந்நிலை 1980 ஆம் ஆண்டு வரை நீடித்தது. 

தோட்டப்புற வாழ்வியலும் சிறுகதை உருவாக்கமும்: 

            ஆரம்பகாலத்தில் (1930-1941) சிறுகதைகள் காதல் கதைகளாகவே இருந்தன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுச் சூழலில் எழுப்பப்பட்டனவாக இருந்தது.சிறுகதையில் திருமணம் முறையும் சீர்திருத்தத் திருமணம், மதுவிலக்கு, மாதரின் முன்னேற்றம்,தொழிலாளர் துயரம், வீரத்தின் மாண்பு, நாட்டுப்பற்று ஆகியவற்றைக் கொண்ட கதைகளே அதிகம் படைக்கப்பட்டு வந்தன .ஆனாலும் அதில் சிறுகதைக்குரிய பண்பு இல்லாமல் இருந்தது.நீதியை வலியுறுத்தும் கதிகளாகவே அவை இருந்தன.

            ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் அதாவது 1942 முதல் 1945 வரை சுமார் மூன்றாண்டுகள் சிறுகதைத் துறையின் வளர்ச்சி குன்றினாலும் அது தொடர்ந்து தன் பணியைச் செய்து கொண்டிருந்தது என்பதை மறுக்க முடியாது, இச்சமயத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சிறுகதைக்கு இடமளித்தன.அக்காலத்தில் சிறுகதைகள் பொதுவாக இந்திய சுதந்திர தாகம், மதுவிலக்கு, காதல் ஆகியவற்றை முக்கியமாக கருப்பொருளாக கொண்டிருந்தாலும் காமம், சாதி ஒழிப்பு, சினிமா, இந்தியர்களின் வாழ்க்கை முறை, (வறுமை, வேலையின்மை) கற்பு போன்றவற்றையே மையமாக கொண்ட படைப்புகள் படைக்கப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டு பின்னணியே மையமாக அமைந்திருந்தது.சிறுகதையை படைத்தவர்கள் மலேசியாவைச் சார்ந்தவராகவே இருந்தபோதிலும்.

            ஜப்பானியர் காலத்திற்குப் பின்னர் வெளிவந்த சிறுகதைகளில் கருப்பொருள்களில் மாற்றம் நிகழ்ந்தன.அதில் ஜப்பானிய ஆதிக்காலத்துத் துயரங்கள், மதுவினால் ஏற்படும் தீமைகள், மலாயப் பெண்களை திருமணம் செய்வதால் காணப்பட்ட பிரச்சனை, அயல்நாடுகளில் ஆங்கில ஆசிரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் ஏற்பட்ட பண்பாட்டு சீர்குலைவு, பாரம்பரியக்கூறுகளை மீறுதல், வேலை நிறுத்தம், கம்யூனிஸ்டுகளின் பயமுறுத்தல், பயங்கரவாதிகளை ஒழித்தல் போன்றவை கதைகளின் கருப்பொருள்களாக மாறின. சிறுகதை அமைப்பு முறையிலும் அவற்றை சொல்லும் முறையிலும் கூடமாற்றங்கள் தெரிந்தன இக்காலகட்டத்தில் தோன்றிய பத்திரிககைகளில் சிறுகதைகளுக்கென சில பக்கங்களே ஒதுக்கப்பட்டன்.

            மலேசியா 1957 இல் சுதந்திரம் பெற்றது.அதன் பின்னர் உள்ள காலகட்டத்தை சிறுகதையில் ஓர் எழுச்சி மிக்க காலகட்டமாகக் கொள்ளலாம். இக்காலகட்டத்தில் மலேசியாவில் நிகழ்ந்த முக்கியான நிகழ்வுக் கேற்ப கருப்பொருள்களிலும் மாற்றம் நிகழ்ந்தன.கருப்பொருள்களாக தேசிய நிலநிலதிக் கூட்டுறவுச் சங்கம். காங்கோபோர். கோலாலம்பூர் வெள்ளம், தோட்டத் துண்டாடல், கம்யூனிஸ்டு பிரச்சனை, இந்தோனேசிய மலேசியா போராட்டம், தமிழ்பள்ளிகள் நிலைமை , விதவைமணம் நாட்டுப்பற்று சாதிப்பிரிவினை , பாலியல் பிரச்சனை மற்றும் கருப்பு பணம், மலாக்கா, கெடாவரலாற்று நிகழ்வுகள் மலேசிய எழுத்தாளர்கள் தாங்கள் கதைகளில் கருப்பொருளாக்கிக் கொண்டனர். மர்மக்கதைகளும், துப்பறியும் கதைகளும், அக்கால கட்டத்தில் சமூகம் எதிர் நோக்கிய சிக்கல்களை அடிப்படையாக கொண்டும் சிறுகதைகள் அமைந்திருந்த.

            மலேசியச் சிறுகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலமாக 1969 முதல் 1979 வரையுள்ள காலகட்டத்தை சொல்லலாம். நாட்டு பொதுத்தேர்தல், அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட "மே" கலவரங்களும் " பற்றியும், சமகாலப் பிரச்சினைகளான வறுமை, குடியுரிமை , வேலை பெர்மிட், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுவான சமுதாயச் சீர்கேடுகள் , சுயநலம், பேராசை, போன்றவற்றை மற்றும் , சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றின.

            1980 க்கு பின்னர் எழுதப்பட்ட சிறுகதைகள் அதற்கு முன்பு படைக்கப்பட்ட சிறுகதைகளைவிட உத்தி முறைகளிலும் ஒரு படி உயர்ந்திருந்தன என்றும் கூட சொல்லலாம். தோட்டப்புற மக்களின் அறியாமை, அதிகார வர்க்கத்தின் அடாவடித்தனம், முதியோர் பிரச்சனைகள், பொருளாதார வீழ்ச்சி, அரசியல், சமுதாயப் பிரச்சனை, பொது தொண்டு, சமுதாயத்திற்கு சிந்தனையை தூண்டும் கருப்பொருள்களில் சிறுகதைகள் மிகுதியாக காணப்பட்டன. 

வாழ்க்கையைப் படைப்புகளாக மாற்றிய சிறுகதைகள்:

       மலேசியச் சிறுகதைகள் தமிழ்ச் சமுதாயத்தையும் தோட்டப்புறத்தையும் மையமாகக் கொண்டு இயங்கி வந்தன. ஆரம்பக் காலங்களில் பிறகு ஒவ்வொரு காலகட்டமும் அதன் தேவைக்கேற்ப இலக்கியவடிவை நிர்ணயிப்பதும் அவ்வாறு நிற்ணயித்த இலக்கியவடிவை அக்காலகட்டம் விரும்பி ஏற்பதும் காலநியதி. அவ்வாறாக அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளாக சமுதாயத்தை அலட்டிவரும் அரசியல், பொருளாதார, சமய, சமூகப்பிரச்சனை, தமிழர்களை பேய்ப்போல் ஆட்டிப்படைத்த தோட்டப்புறப் பிரச்சனை, மற்றும் பலவற்றையும், மக்களுக்கு விளங்கும் வகையில் தெரியப்படுத்தியது சிறந்த சாதனமாக சிறுகதை அமைந்தது எனலாம்.

      மலேசியத் தமிழன் வாழ்க்கை தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலாளியாக சஞ்சிக் "கூலியாகத்" தொடங்கியது. கங்காணிகள் என்னும் அரக்கன் தமிழக கிராமப்புறங்களுக்குச் சென்று தங்களுக்குத் தலைக்காசு பெருகட்டும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி வழியே தெரியாத நாட்டிற்குத் தமிழர்களை கப்பல் ஏற்றினான். இதனை "சஞ்சிக் கூலி" என்ற கதையில் ஆசிரியர் விளக்கியுள்ளார். இக்கதையில் தமிழ்ச் சமுதாயம் பட்டதுயரங்களை இதில் விளக்கியுள்ளார். தோட்டம் என்ற பெயரில் அழிக்கப்படாத காட்டில் அவர்கள் பட்ட இன்னல்கள் மலேரியா காய்ச்சல் மற்றும் காலராவுக்கும் இங்கிருந்து சென்ற பலர் பலியானர்கள். எஞ்சியவர்கள் பட்ட இன்னல்களையும் அதாவது "தொடக்க வரலாறு" பற்றியும் இரட்டைப்பூட்டு என்ற சிறுகதையில் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

     தோட்டப்புறத்தில் அடிமை வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள் ஜப்பானியர் ஆட்சி வந்த போது மேலும் விளக்கி சொல்ல முடியாத அளவில் துன்பத்தை அனுபவித்தனர். ஜப்பான் காரன் சயாம் (தாய்லாந்து) மற்றும் பர்மா வழியாக இரயில் பாதை அமைக்க வோண்டும் என்று எண்ணி அப்பாவி தமிழர்களை அதுவும் அம்மக்களை மட்டும் ஆடு மாடுகளை இழுத்துச் செல்வதுப் போல் அழைத்துச் சென்று கடுமையான வேலையில் ஈடுபடச் செய்தான் இதனை "முத்துசாமி" என்று சிறுகதையின் வழியாக விவரித்துள்ளார். 

    அதனைத் தொடர்ந்து தமிழர்களின் வாழ்க்கையையே துன்யமாக்கிய மற்றொரு நிகழ்வாக அனைந்தது "தோட்டத் துண்டாடல்" ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஆசிய நாடுகள் பல சுதந்திரம் பெற போராட ஆரம்பித்தன. அச்சமயம் ஜரோப்பிய முதலாளிமார்கள் தங்கள் சொத்துகளை விற்றுவிட்டுச் செல்லத் தொடங்கினர். இந்த நிலை மலேசியா சுதந்திரம் அடைந்தப்பிறகு தீவிரமானது. பெரிய தோட்டங்களை விற்க முயன்றனர். அதனை முழுதுமாக வாங்க வசதியில்லாமல் இருந்தனர். பின்னர் அந்த தோட்டங்களை துண்டாக்கப்பட்டு விற்க்ப்பட்டன. அந்தத் தோட்டத்தில் வேலைசெய்த உழைக்கும் வர்க்கமான நம் தமிழன் வேலையிழந்து, வீடு வாசல் உடைமைகள் என அனைத்தையும் இழந்தான். இச்சூழ்ந்லையை விளக்கும் வகையில் துண்டாடல் கொடுமை என்ற கதையில் விவரித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து நம் தமிழன் சிக்கிக்கொண்ட மற்றொரு பிரச்சனை குடியுரிமை பிரச்சினையாகும். சுதந்திரம் கிடைத்த வேளையில் விருப்பத்தின் அடிப்படையில் குடியுரிமை கொடுத்த அரசாங்கம் அதனை விட்டுவிட்டத் தமிழர்கள், பின்னாளில் குடியுரிமை இல்லாதவர்கள் இந்நாட்டில் வேலை செய்ய முடியாது என்ற சட்டம் வந்தது. பலர் இதனால் தவித்துப் போனார்கள். பின்னர் இச்சட்டம் சற்றுமாறுதலடைந்து "வேலை பெர்மிட்" என்ற ஒன்று உருவாகியது. ஆனால் அதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்ட. இதனால் மக்கள் முதலாளி வர்க்கத்திற்கு அடிமையாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை உணர்த்தும் வகையில் "இரைகள்" என்ற கதையில் கூறியுள்ளார். இதில் தன்மானத்துடன் வாழநினைக்கும் இளம் விதவையை முதலாளி விலை பேசுவது என்ற சூழ்நிலையில் கதை அமைந்துள்ளது.

      "இதுதான் வாழ்க்கை" என்ற கதையில் சிவப்பு அடையாள கார்டு உள்ளவர்களை (தொழிலாளார்கள்) முதலாளிவர்க்கத்தினரின் உடைமைகளாகவே எண்ணினார்கள். அதிகாரத்தில் உள்ளவன் தன்னுடைய மகளின் கற்பிற்குப் பங்கம் விளைவிக்கிறான். ஆனால் ஆத்திரமுற்ற தந்தை எதிர்த்து கேட்க முடியாத சூடிலுக்கு ஆளாகின்றான். இதனை கதை மூலமாக ஆசிரியர் வெளிபடுத்தியுள்ளார்.

      நம் தமிழ்ச் சமூகம் வேலைபெர்மிட், குடியுரிமை, தோட்டத் துண்டாடல் என்ற பிரச்சனையில் இருந்து கொண்டு வெளிவர தவித்துக் கொண்டிருந்த போது மற்றொரு பிரச்சனை தலைத்தூக்கியது. மேம்பாட்டுத் திட்டம் என்ற நடவடிக்கையில் தோட்டப்புற்ங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் தமிழர்கள் வேலையிழந்து வீதிக்குத் தள்ளப்பட்டனர். நம்மக்கள் நகர்புறங்களை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலக்குடியிருப்புகளில் தங்களுடைய வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்தனர். இவர்கள் கூலிக்காரர்களாகவும், சாலை பணியாளராகவும் புதிய தொழிலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட மற்றொரு பிரச்சனை அவர்கள் வீடுகள் இடிபட்டது. அங்கேயும் அவர்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதனை "வீடும் விழுதுகளும்" என்ற கதை வழியே உணர முடிகிறது.

       மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் படைப்பாளனின் வடிவத்தை வெறும் கலைவடிவமாக மட்டும் காட்டாமல் படைப்பால் சமூகத்தின் கட்டமைப்பு உள்ள செல்லரித்துப்போன பிரச்சனைகளை தம் கருத்துக்களாக படைத்துள்ளான். அதே சமயத்தில் படைப்பாளன் அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை ஒளி மறைவின்றி படம்பிடித்து காட்டியுள்ளனர் எனலாம். 

 
Related News
 • சொல்ல மறந்தது சினிமா!

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World