Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபொருநராற்றுப்படை - மறுவாசிப்பு
 

  

   தமிழ்மொழி ‘செவ்வியல் தகுதிவாய்ந்தது என்ற நிலையில் கொண்டுள்ள பதினொரு தகுதிப்பாடுகளில் பண்பாட்டைப் பதிவுசெய்தலும் ஒன்று. பண்பாடு என்ற தளத்தில்,சங்கஇலக்கியங்களுள்ஒன்றான பொருநராற்றுப்படைப் பெண்ணுக்குரியதாகப் பதிவு செய்துள்ள பண்பாட்டுச்செய்திகளை உற்றுநோக்கி அவை இன்றையப் பெண் நிலைக்குப் பொருத்தமான ஒன்றாக அமைந்தனவா அல்லது அவையே வித்தாக அமைந்தனவா என்பதை ஆய்வுக்குட்படுத்தும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

  

முடத்தாமக்கண்ணியார் – பெண்பாற்புலவர்

   

 

   ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்யும்முன்பு அவ்விலக்கியம் யாரால் எந்தக்காலகட்டத்தில் இயற்றப்பட்டது என்பதையும் அறிந்து அணுகுவது அவசிம்.

      கரிகாலனின் புகழ்பாடும் பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியாரால் சங்ககாலத்தில் இயற்றப்பட்டது.பொருநரை ஆற்றுப்படுத்தும் இந்நூலைப்பாடிய பால் குறித்தான ஐயப்பாட்டை முன்வைத்த உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் தொல்காப்பிய உரையின்கண் (தொல்.சொல்.22) ஆர் விகுதி பன்மையோடு முடிதற்கு ‘முடத்தாமக்கண்ணியார் வந்தார்’ என்றெடுத்துக்காட்டப்பட்டிருந்ததால் இவர் பெயர் முடத்தாமக்கண்ணி என்பதாம் என்பர்.இனி ‘கண்ணி என்பதனைத் தலையில் சூடும் மாலையெனக் கொள்ளின் இப்பெயர் பெண்பாற்பெயர் எனக்கூறுதற்கிடனில்லை என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்.பொ.வே.சோமசுந்தரனாரின் ‘கண்ணியைச் சூடியவன் அல்லது ‘கண்ணியையுடையவர் என்ற கருத்தை ஏற்று அத்தொடரைத் தொல்காப்பிய நோக்கில் ஆய்வு செய்தால், ‘முடத்தாமக்கண்ணியனார் என்றே இருக்கவேண்டும். ‘கச்சினன். ‘கழலினன்போன்ற குறிப்புவினைச் சொற்களைப்போல் ‘கண்ணி என்றசொல் ‘கண்ணியன் என்றே ஒருக்கவேண்டும். கச்சினை உடையவன் அல்லது கச்சினை அணிந்தவன் ‘கச்சினன், கழலினை உடையவன் அல்லது கழலினை அணிந்தவன் ‘கழலினன்’  என்பதைப்போலக் கண்ணியை உடையவன் அல்லது கண்ணியை அணிந்தவன் ‘கண்ணியன். அதாவது, கண்ணி என்ற சொல் ‘அன் விகுதி பெற்றுக் ‘கண்ணியன் என நிற்றல் வேண்டும். அவ்வாறில்லாமல் புலவரின் பெயர் ‘முடத்தாமக்கண்ணி என்றிருக்கிறது. இப்பெயரை ஒத்த பிற பெண்பாற் புலவர்களும் சங்க இலக்கியத்தில் உண்டு.  ‘பொதும்பில்புல்லாளங்கண்ணியார், ‘தாயங்கண்ணியார்’, ‘வெறிபாடியக் காமக்கண்ணியார் போன்றே (பெண்பாற்புலவராகவே) இவரும் இருக்கவேண்டும் என்று  எண்ணவேண்டியிருக்கிறது. பொருநராற்றுப்படையை ஆராயப்புகின் ‘பெண்ணெழுத்துக்களைப் பெண்களே திறனாய்வு செய்யவேண்டும் என்றப் பெண்ணிலைத் திறனாய்வு நோக்கில் கட்டுரை செல்கிறது.

பொருநனை ஆற்றுப்படுத்தலும் யாழ் வர்ணணையும்

      முடத்தாமக்கண்ணியாரின் கவிக்கூற்று ஒரு ‘பொருநனை மற்றொரு ‘பொருநன்’ ஆற்றுப்படுத்தும் ஆண்குரலில் அமைகிறது.ழூலியாக் கிறிஸ்தெவ, ‘ஆண் பெண் யாராக இருந்தாலும் தீவிரமான படைப்புத்தளத்தில் ஒருவர் மற்றொருவராக மாறுவது நிகழ்கிறது என்கிறார்.

      முடத்தாமக்கண்ணியாரின் மொழியில் ஆண்மொழியும் பெண்மனமும் மாறிமாறி இயங்குவது நிகழ்கிறது. போலவேடம் புனைந்த ஏர்க்களம்.போர்க்களம் சென்று பாடும் பலவகைப் பொருநரில் விழாக்காலம்தோறும் ஊர் ஊராகச்சென்றுப் பாடிப் பசியைப் போக்கிக் கொள்ளும் பொருநன் கரிகாலனை நோக்கி ஆற்Ruறுப்படுத்தப்படுகிறான்.ஏனெனில்,

                  “அறாஅ யாண ரகன் றலைப் பேரூர்ச்

                   சாறுகழி வழி நாட் சோறுநசை யுறாது

                   வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பா.வ.1-3)

என்று பரிசில் பெற்றுவரும் பொருநன், ‘பரிசில் பெரும் பொருட்டாக விழாக்கழிந்த நாளில் மக்கள் தரும் சுவையான உண்டியை விரும்பாது, அதானால் தன் வறுமைதீராது என உணர்ந்து வேறு புலம் பெயரும் பொருநனே’ என விளிக்கிறான்.விளித்ததன் பின்னாகப் பொருநனை இணைபிரியாது இருக்கும் பலையாழினை வர்ணிக்கிறார் கவிஞர்.‘ கொலைக்கருவிகளை ஏந்திப் பிறரை வருத்தும் மறத்தொழில் புரியும் வழக்கத்தை மேற்கொண்டிருப்போரைக் கூடப் பண்படுத்தவல்ல பாலையாழ், மானின் குளம்பு போன்ற பத்தலையும் விளக்குச் சுடரின் நிறம்போன்ற தோலினையும் சிவந்த நிறமுடைய இளம் பெண்ணின் இளஞ்சூல் கொண்ட வயிற்றின் நடுப்பகுதியில் மெல்லிதாக ஒழுங்குபட அமைந்த மயிரின் தோற்றம் போல இரண்டு தலைப்பையும் இணைத்துத்தைத்த மரத்தை மூடுவதற்கு அமைந்த உறையினையும் நண்டுக்கண்கள் போன்ற பத்தரை இணைக்கத் திறக்கத் துளை மறைய ஒடுங்கிய ஆணிகளையும் எட்டாம் நாள் திங்களின் பிறை போன்ற வாயினையும் பாம்பு படம் எடுத்ததுபோன்றத் தண்டினையும் கரிய நிறமுடைய மகளின் முன்கையில் அணியப்பட்ட வளையலைப் போன்ற இறுக்கிய பிணியினையுடைய வார்க்கட்டிகளையும் குத்திய தினையரிசி போன்ற நரம்பினையுடைய யாழ்த்தெய்வம் நிலைபெற்றிருக்கும் பாலையாழ் மணமகளை ஒப்பனைசெய்தாலொத்துக் காணப்படுகிறது என்கிறார்.

                ஆண்குரலில் பேசும் கவிக்கூற்றில் ஆண்மொழி அல்லது ஆண்தலைமைச் சமூகத்தால் ஏற்படுத்தப்பட்ட கற்பிதங்கள் வெளிப்படுவதை உணர முடிகிறது.யாழை வர்ணிக்கப்புகும் கவிஞர் யாழின் உறை சிவந்த நிறமுடைய இளம்பெண்ணின் இள்ஞ்சூலமைந்த வயிற்றின் நடுவே மெல்லிதாக ஒழுங்குபட அமைந்திருக்கும் மயிரினது தோற்றம் போன்ற இரண்டு தலைப்பையும் இணைத்துத் தைத்த மரத்தை மூடுதற்கமைந்த உறை என்கிறார். பெண்ணின் கடமையாக வலியுறுத்தப்பட்ட ‘ஈன்று புறந்தருதல்’ என்ற பிள்ளைப்பேறு பெண்ணின் நனவிலி மனத்தில் ஆழமாகப் பதியவைக்கப்பட்டதன் வெளிப்பாடாகவே அமைகிறது மேற்கூறப்பட்ட உவமை.ஆணுக்கு வாரிசை உருவாக்கும் தலையாயக் கடப்பாடுடையவளாகப் பெண் மாற்றப்பட்டாள் என்பதே அவளை அடிமையாக்கியது. ‘தாய்மைதான் எல்லா மனித உறவுகளுக்கும் மையமாக விளங்குகிறது என்பது மட்டுமல்ல; எல்லாத்தளங்களிலும் பெண்ணை ஆண்மேலாண்மை புரிவதற்கு அடித்தளம் அமத்துக் கொடுக்கக்கூடிய ஓர் அரசியல் நிறுவனமாகவு விளங்குகிறது’ என்ற அட்ரெய்னெரிச்சின் கருத்தை இங்குச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அட்ரெய்னெரிச்சின் கருத்தை ஒத்தே, பொருநராற்றுப்படைக் கரிகால்பெருவளத்தான் தாய்வயிற்றிலிருக்கும் போதே அரசுரிமை பெற்ற இள்ஞ்சேட் சென்னியின் திருமகன் என்கிறது. கரிகாலனின் தந்தையின் மறைவுக்குப்பின் கரிகாலனின் தாய் அரசுரிமை பெறவில்லை. ஆனால் அவள் வயிற்றிலிருந்த ‘கரிகாலனே’ அரசுரிமை பெற்று ஆள்கிறான்.இங்குப் பெண் வாரிசை உருவாக்கும் ஒரு’கருவி’ அவ்வளவே.எனினும் இக்கருத்துக் கவிஞரின் குரலில் பெருமையாகவே ஒலிக்கிறது.இது ஆணாதிக்கச் சமுதாயத்தின் கற்பிதம். அடுத்ததாக யாழ்த்தெய்வம் நிலைபெற்றிருக்கும் பாலையாழ் மணமகளை ஒப்பனை செய்ததுபோலக் காணப்படுகிறது என்கிறார்.இது அடுத்தக் கற்பிதம்.மணமகனுக்கு உடைமைப் பொருளாகப் போகும் பெண் அழகைச் சுமந்தவளாக இல்லறம் புகல் வேண்டும். அதாவது ஆணுக்குப் பெண் நுகர்பொருள் என்பது பதிவு.கவிஞர் ஆண் சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்டப் பெண் நிலையை ஏற்றதன் விளைவு கவிக்கூற்று மகிழ்வுடன் வெளிப்படக் காரணமாய் அமைந்தது.

பாடினியின் புனைவு

                யாழின் வர்ணனையிலேயே ஆணால் ஏற்படுத்தப்பட்டப் பதிவுகளைக் கொண்டப் பெண்மன வெளிப்பாட்டை நாம் உணர முடிந்தது.இவரது உவமைகள் பெரும்பாலும் பெண்ணைச் சுற்றியே அமைந்திருக்கிறது.யாழின் இறுக்கிய பிணிப்பினையுடைய வார்க்கட்டுக்குக் கரிய நிறப்பெண்ணின் முன்கையில் அணியப்பட்ட வளையலை உவமைக்கூறுகிறார் கவிஞர்.இவை முடத்தாமக்கண்ணியார் பெண் என்பதற்கு மேலும் ஒரு சான்றாக அமைகின்றன.அடுத்ததாகப் பொருநனுடன் செல்லும் விறலியைக் கேசம் முதல் பாதம் வரை வர்ணிக்கிறார்.அறல் போன்ற கூந்தல்,வில்போன்ற புருவம்,முத்துக்கள் போன்ற பற்கள்,அசையும் மூங்கிலை ஒத்த பருத்த தோள்கள் எனத்தொடரும் பாடினியின் வர்ணனை மயில் போன்ற சாயலையுடைய கல்விப் பெருமைமிக்கப் பாடினி என முடிகிறது.இப்புனைவு பெண்ணுடல் அழகு பொருந்தியதாக இருக்க வேண்டும் என்பதைப் பதிவுசெய்கிறது. மேலும் பாடினியின் கழுத்து நாணத்தால் கவிழ்ந்தேயிருக்கும் என்று கூறுகிறார்.நாணத்தை உயிராகக் கொள்ளவேண்டிய பெண்ணின் பண்பாடு இங்கு வலியுறுத்தப்படுகிறது. இவற்றையெல்லாம் மீறிக் கல்விப் பெருமை மிக்கப் பாடினி எனக்கூறியிருப்பது பெண்ணின் இயல்பை ஏற்பது என்பதைவிடப் பெண் அறிவுசார்ந்தியங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்றேக கருதவேண்டியிருக்கிறது.பாடினி காட்டகத்தே  உறையும் தெய்வங்கள் மனம் மகிழும்படி முறைமைகளைச் செய்கிறாள் என்ற செய்தியை,

                                “இலை மின் மராத்த எவ்வந் தாங்கி

                                 வலை வலந்தன்ன மென்னிழல் மருங்கிற்

                                 காடுறை கடவுட் கடன் கழிப்பிய பின்றையும்” என்ற வரிகள் உணர்த்துகின்றன. மேற்கண்ட வரிகள் கடவுளுக்குப் பெண் விலக்கில்லை என்ற பண்பாட்டை உணர்த்துகின்றன.இன்றயப் பெண்கள் வைதீகச் சமயங்கள் சார்ந்த கோவிலின் கருவறைக்குள் அனுமதிக்கப்படாத அவலநிலையை இங்கு ஒப்புநோக்க வேண்டியிருக்கிறது.சங்க காலத்தில் பெண் கடவுளுக்கு இணக்கமாகவே இருந்திருக்கிறாள் என்பதைத் தாய்வழிச் சமுதாயத்தின் எச்சமாகக் கொள்ளலாம்.  சங்க காலத்தின் பின்பே அவள் மறுக்கப்பட்ட விலக்கப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது நாம் அறிந்ததே.

பொருநன் பெற்ற விருந்தோம்பல்

                “சிறப்பான யாழினைத் தாங்கியக் கூத்தருக்குத் தலைவனாகியக் கூத்தனே, நீ என்னைச் சந்தித்தது முற்பிறவியின் நற்பயன்” என்று கூறிய ஆற்றுப்படுத்தும் பொருநன் கரிகாலனிடம் தான் பெற்றப் பெருவளத்தையும் அடைந்த நன்மைகளையும் கூறுகிறான்.

                அறிவிக்காமல் நுழைந்தத் தன்னை முன்பே நண்பனாய் அடைந்தது போல வரவேற்றக் கரிகாலன், கந்தலாடைகளை நீக்கி நல்ல உணவு வழங்கினான் என்று கூறுகிறான்.அதன் பின் கரிகாலனின் அரண்மனையைச் சேர்ந்த ஏவல் மகளிர் பொருநனை வரவேற்ற சிறப்புக் கூறப்படுகிறது.கூந்தலின் கருமையால் முகிலோ எனப் பார்த்தோர் மருளும்படியான கூந்தலையுடைய, மகிழ்ச்சிதரும் மேல் மாடத்தில் உறையக்கூடிய இழையணிந்த இனிய முறுவலையுடைய ஏவல் மகளிர் குற்றமற்றப் பொன்னால் செய்த வட்டிலில் பலகாலும் கள்ளினை வார்thtத்துத் தந்தனர்.வழிநடை வருத்தம் போக யாரும் பருகினோம் கரிகாலனின் அரண்மனையில் ஏவல் மகளிர் இருந்ததும் அவர்கள் வரவேற்கும் தொழிலை மேற்கொண்டிருந்ததையும் அத்தொழிலுக்கு இன்றியமையாத இன்முறுவலுடன் கள்ளினை வார்த்துக் கொடுத்தனர் என்பதையும் அறியமுடிந்தது.

      அதன் பின்பு, ‘கரிகாலன் தின்னுங்கள் என விருந்தோம்பல் செய்தபின் பல வடிவினையும் சுவையினையுமுடைய பண்ணியாரங்களைக் கொணர்ந்து உண்ணக்கொடுக்க அழகிய நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கு ஏற்றபடி ஆடப் பண்ணியாரங்களை உண்டுப் பாடினியின் பண்ணைக்கேட்டும் ஆடலைக்கண்டும் மகிழ்ந்திருந்தோம்.இவ்வாறு கழிந்த நாட்கள் பல என்கிறான் பொருநன்.பொருநனின் நாவின் நுகர்பொருளாகப் பல்சுவை  உணவும் கண்ணின் காதின் நுகர்பொருளாகப்பெண்ணும் அவள் நடனமும் பண்ணும் பரிமாறப்பட்டதை,

            “வேறு பல்லுருவின் விரகு தந்திரீ இ

             மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்

             ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க

            மகிழ்பதம் பன்னாட் கழீப்பி என்ற வரிகள் பதிவு செய்துள்ளன. முடத்தாமக்கண்ணியார் தம் காலத்து நடப்பை உள்ளவாறு கூறியிருக்கிறார்.

கரிகாலனின் மேதைமை

      இவ்வாறாக இன்பம் நுகர்ந்த பொருநன் தம் நாடு செல்ல விரும்பியவுடன் கரிகாலன் பெருவதற்குரிய வளங்களை நல்குகிறான்.வள்ளன்மையில்  சிறந்தக் கரிகாலன் நீதிநெறி தவறாதவன்.இளம் வயதிலேயே முதியோன் வேடம் பூண்டு நீதி வழங்கியவன்.

            “இளையோர் வண்டலயரவு முதியோர்

               அவை புகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்

மருதநிலப்பெண்கள் நெய்தல் நிலக்குன்றில் விளையாடுகிறார்கள். ஆனால் காவிரி சூழ்ந்த நாட்டை ஆளும் கரிகாலனின் நாட்டைச் சார்ந்த மருதநில முதியோர்கள் நீதிகேட்கக் கரிகாலன் முதியோன் வேடம் புனைந்து நீதி நல்குகிறான்.இங்கு அறிவு சார்ந்த களம் ஆணுக்குரித்தாக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.மருத நிலத்துப்பெண்கள் நெய்தல் நிலத்தில் வண்டலயருகிறார்கள் என்று கூறியவர் அடுத்த வரியில் முதியோர் நீதிகேட்கக் கரிகாலன் நீதிவழங்கினான் எனக்கூறுவது பெண் ஆண் இரு எதிரிணைகளுக்கிடையேயான அறிவுசார் முரணை முன்வைப்பதாகிறது.

தொகுப்புரை

            பொருநராற்றுப்படையை உற்று நோக்கலுக்குட்படுத்தும்போது,

v      பெண் நுகர்பொருளாகவும் மக்கட்பேறை வழங்கும் கடப்பாடுடையவளாகவும் செயல்பட்டதை உணர முடிகிறது.

v      இவற்றை மீறிப் பெண் அறிவு சார்ந்தவள் என்பதைப் பாடினியின் அறிவை முன்வைப்பதன் வழி முடத்தாமக்கண்ணியார் ஏற்றிருக்கிறார் என்றாலும் கரிகாலனின் நீதிகூறும் திறனை வெளிப்படுத்தும்போது அக்காலப் பெண்களின் நிலையையும் சுட்டியிருக்கிறார்.

v      இத்தகையக் கருத்தாக்கங்கள் இன்றையப் பெண்களின் நிலையை எவ்வள்வு தொலைவு தாக்கத்திற்குள்ளாக்கியிருக்கிறது என்பதைச் சிந்தனைக்குட்படுத்துவோமானால்,

Ø       பெண் ஆணின் நுகர்பொருள் என்ற கருத்தாக்கம் இன்றைய ஊடகங்களில் பெண்ணை அரைகுறை ஆடையுடன் உலவ வைத்திருக்கிறது.சிறுபெண்குழந்தைகள் கூடப் பாலியல் வன்முறையிலிருந்துத் தப்புவதில்லை.

Ø       இரண்டாவதாகப் பெண் திருமண வாழ்வில் நுழையும்போது அழகுநிறைந்தவளாக இருக்கவேண்டும் என்றகருத்தாக்கம் வலுப்பெற்றிருக்கிறது.அதற்குமேல் அவ்ள் ‘வரன் தட்சிணை அளிக்கவேண்டியிருக்கிறது.

மேற்குறித்த கருத்தமைவுகள் திடீரென உருவாகிவிடவில்லை.இவை காலம் காலமாக ஆணாதிக்கச் சமுதாயத்தால் உருவாக்கப்பட்டவை.இதற்கான சான்றுகளே இலக்கியங்கள் என்ற அடிப்படையில் பொருநராற்றுப்படைப் பெண்குறித்தான இரண்டாம் படிநிலைச் சிந்தனைகளை முன்வைத்துள்ளது.அவற்றின் தாக்கம் இன்றையப் பெண்கள் வாழ்வினையும் ஆக்ரமித்துள்ளது என்பதை மறுக்கவியலாது.

பார்வை நூல்கள்:

1.       பொருநராற்றுப்படை .,உரை.பொ.வே.சோமசுந்தரனார்.

2.       பெண்மொழி படைப்பு .,க.பஞ்சாங்கம்.

  

 

                                                   இர.மணிமேகலை., உதவிப்பேராசிரியர்., பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., கோவை.

 

 

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World