Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஇணையதளப் படைப்புகளும் மலேசியத் தமிழரும்
- சே. சுதா
 
 
இணையத்தமிழ் ஊடாட்டங்கள்:
      உலகம் முழுவதும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில் தான் பல்வேறு வழிகளில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டுள்ளது. தொடக்க காலத்தில் அஞ்சல் செய்திகளை அணுப்ப மட்டுமே பயன்பட்டு வந்த இணையம் தற்போது மின்வணிகம், மின்அரசாள்மை, மின்பொழுதுபோக்கு, மின்னிசை, மின்நூலகம் எனப் பல வகையில்தன் பயன்பாட்டுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது.
 
அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு பயன்பாடு ஆகியவற்றில் பெரும்பாலும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நாடுகள் இணையதளத்தை பல வழிகளில் பயன்படுத்த தொடங்கிய பின் அந்தந்த நாட்டு மொழிகள் இணையத்தில் இடம்பெறும் தேவை ஏற்பட்டது. அந்தத் துறையின் அறிவும் மக்கள் பேசும் மொழியில் இருந்தால் அது மக்களை எளிதில் சென்றடையும். மக்களால் பெரிதும் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் தமிழ் மொழி இணையத்தில் இடம்பெற வேண்டிய தேவையைக் காலம் ஏற்படுத்தித் தந்தது.    
 
பல நூற்றாண்டுகளுள் காலத்தனிமை ஒரு தகவல் தொழில் நுட்பப் புரட்சி மூலம் தகர்க்கப்படுகிறது. அது தான் இணையம்; இதற்கு அரசு சார்பு கிடையாது; யாரும் எங்கும் பயன்படுத்தக் கூடியது. உலகமயமாதல் சூழலில் எல்லோருக்கும் ஏகபோகமாகும் தகவல் தொடர்புக் கருவியாகிய இணையத்தைப் புலம்பெயர் சூழலில் தமிழர்கள் கண்டு கொண்டனர். இதுவே தான் ஆங்கிலத்திற்கு அடுத்த படியாகத் தமிழில் இணையம் உலகமயமானதன் காரணமாகும்.
 
       தமிழைக் கணினிமயப்படுத்துவதில் புலம்பெயர் சூழலில் தமிழர்கள் பெரிதும் பாடுபட்டு வெற்றிக் கண்டனர். தமிழில் தோன்றிய முதல் இணையதளம் WWW. KANIAN .COMஆகும். இத்தளத்தைச் சிங்கப்பூர்வாழ் தமிழரான மறைந்த நா.கோவிந்தசாமி தோற்றுவித்தார். இவரே தமிழ் இணையதளத்தின் தந்தை11 எனக் கருதப்படுகிறார். இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழர்கள் ஒரு அரங்கில் கூட முடிந்த்தற்கும் இணையம் ஒரு உறவுப்பாலமாகச் செயல்பட்டிருக்கிறது.
             
தமிழிலக்கியத்தில் இணையத்தின் ஊடாட்டங்களில் வாய்மொழி, சைகை, கூத்து, பாட்டு, சுவடி, அச்சு எனப் புதிய ஊடகங்கள் வழியாக இலக்கியமும், கலையும் பயணப்பட்டு வந்துள்ளன. ஒருவருக்கொருவர் என்ற ரீதியில் நிகழ்ந்த கலை, இலக்கியம் பரிவர்த்தனை புதிய ஊடகங்களின் வழியாக லட்சக்கணக்கான மக்களை விரைவில் அடையும் வகையில் மாறியது. இன்று இணையம் ஒரே நொடியில் உலகம் முழுவதும் பரிவர்த்தனை கொள்ள சதா தனது பக்கங்களைத் திறந்து வைத்துள்ளது.
 
       மலினப்பதிவுகள், திரைப்படம், தொலைக்காட்சி ஆகியன பெருந்திரளை அடைந்தன. அவை அதிகார மையத்தோடு பிணைக்கப்பட்டிருந்தன; எனவே போலிப் படைப்புகள் குவிந்தன;  ஈவு இரக்கமற்ற ஆதிக்கத்தால் மலினப்பட்டாலும் பிரதிகள் கடும் விலையேற்றம் கொண்டன. எனவே, படைப்பு வியாபாரிகளிடம் அடைக்கலம் ஆனது. இதனால் தமிழ் வாசகர்களும், குறிப்பாக புலம்பெயர் சூழலில் உள்ள   தமிழ் வாசகர்களும் துன்பப்பட்டிருந்தனர். ஆகவே, தமிழைக் கணினிமயப்படுத்த முயன்றனர்.
 
இதன் வெற்றி மதுரைத் திட்டத்தைஅளித்தது. இதில் பங்கேற்றவர்கள் தன்னார்வத்தோடு பிரதிபலன் எதிர்பாராமல் சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற படைப்புகளை இணையத்தில் ஏற்றினர். இதன் பயனாக யாரும் எங்கும் இவற்றை வாசிக்கலாம் என்னும் நிலைமை ஏற்பட்டது. இதுவே இலக்கியத்திற்கும், இணையத்திற்குமான முதல் ஊடாட்டம்12 என்று அப்பணசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.
 
       இலக்கண, இலக்கியங்களிலிருந்து இன்றைய திரைப்பட பாடல்கள் வரை அவரவர் விருப்பத்திற்கேற்ப பல துறைகளில் இந்தச் செயல்பாடு விரிவும், வேகமும் அடைந்துள்ளது. தற்கால வாசகர் வேகமும், இணையத்தின் வேக வெற்றியும் படைப்பாளிகளுக்குப் புதிய சவால்களை வைத்துள்ளன.
 
மலேசியாவில் இணையவழி தமிழ்:   
       மலேசியாவில் தமிழ்மென்பொருளை முதன் முதலில் உருவாக்கிய பெருமைபெர்லீஸ்மாநிலத்தைச் சார்ந்த திரு.மா.அங்கையாவையே சாரும். இவர் 1980களில் ஒரு தமிழ்ச்சொல் செயலாக்கியை உருவாக்கினார்.கணினி இயக்கத்திற்கு விசைப்பலகையும் உருவாக்கினார்.13 இவரை அடுத்து கால ஓட்டத்தில் தற்சமயம் மலேசியாவில் மூன்று விதமான விசைப்பலகைகள் உதயமாகி உள்ளன.
 
1)     1992 – நளினம் சொல் செயலாக்கியின் விசைப்பலகை
2)     1985 – முரசு சொல் செயலாக்கியின் விசைப்பலகை
3)     1987 - துணைவன் சொல் செயலாக்கியின் விசைப்பலகை
 
       கணினி தனக்குள் பயன்படுத்துவது 0,1 கொண்ட இருநிலை மொழி மட்டும் தான். உள்ளீடு, வெளியீடு செய்து ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் போன்ற மொழிகளுக்கான குறியீடுகளை பயன்படுத்தலாம். 
             
மா.அங்கையா, முரசு நெடுமாறன், திரு.சி.சிவகுருநாதன் ஆகிய மூவரும் மலேசியாவில் தமிழ்மொழியை இணையத்தில் இணைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். இம்மூவரும் தங்களுக்கான தனித்தனி தகவல் வலைப் பக்கங்களை உருவாக்கினர்.14 இவர்களது இப்பணி மலேசியாவில் ஆயிரக்கணக்கான தமிழர்களும், தமிழ் சார்ந்த அமைப்புகளும் தங்களுக்கென சுயமான தகவல் வலைப் பக்கங்களை உருவாக்கவும், மக்களுக்கு அரிய பல தகவல்களையும் அவ்வப்போது கொடுத்து வருகிறது.
 
இன்று இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஆதிநாள் கணினி வல்லுநர்கள் முக்கிய காரணமாகும். மலேசியாவின் பாலப்பிள்ளை,முத்து நெடுமாறன், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரிநிவாசன், ஹரோல்ட் ஹிஃப்மன் ஆகியோர் நினைவு கூறத்தக்கவர்கள்”.15
 
இன்று தமிழ் இணையத்தில் நல்ல வளம் பெற்றிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான அகப்பக்கங்கள் உருவாகியுள்ளன. இன்றும் பல நாள்தோறும், நிமிடந்தோறும் வலையில் ஏறியவாறே இருக்கின்றன.
 
மலேசியாவில் முத்துநெடுமாறன்:
       இனையத்தமிழ் மலேசியத் தமிழருக்கு எட்டாத தொலைவில் தான் இருந்த்து. கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்தும் பயனாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். இச்சூழ்நிலையில் மலேசியா கண்டெடுத்த சொத்து முத்துநெடுமாறன் கணினி செயல்படும் முரசு தமிழ்ச்செயலியை உருவாக்கி பிறகு கைபேசியில் செயல்படும் செல்லினம் தமிழ்ச் செயலியை உருவாக்கி தமிழைத் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவந்து சாதனை படைத்தவர்.
 
              கணினி, கைபேசி, இணையத்தில் வந்தால் போதாது. அடுத்து வரப்போகும் ஐபோன்(IPHONE), ஐபேட்(IPAD) தொழில்நுட்பத்திலும் தமிழை மிளிரச் செய்யும் பணிகளை அமைதியாகச் செய்து கொண்டிருப்பவர். கணினித் தொழில்நுட்பத்தில் தமிழை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வதில் முனைப்பாக இருப்பவர் முத்துநெடுமாறன். அண்மையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணையமாநாடாக நடந்த தமிழ் இணைய மாநாட்டில் முத்துநெடுமாறன் தமிழின் வள்ர்ச்சியை மேலும் பலபடிகள் உயர்த்தும் வகையில் தம்முடைய அரிய கண்டுபிடிப்பு பற்றி பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.
 
       மலேசியாவில் தமிழ் இணையம் வளர்ந்து வருவதற்கு முரசு தமிழ்ச்செயலியை உலகத்திற்கு அளித்த பெரும் மலேசியத் தமிழர் முத்துநெடுமாறனைச் சாரும். மலேசியப் பிரதமருடைய இணையத் தளமும் தமிழில் செயல்படுகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. . 
இதழ்கள்:
                மனிதன் எப்போது பூமியில் தோன்றினானோ அன்றைக்கே இதழியலும் தோன்றுவிட்டது என்று சொல்லலாம். இன்றைக்கு இருப்பது போல் பள பள காகிதம், வண்ண அச்சு வேண்டுமானால் இல்லாதிருக்கலாம். ஆனால், இதழியல் இருந்தது. இதழியலின் ஆரம்பம் மனிதன் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்க நினைத்தபோது உருவானது. மற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள நினைத்தபோது வளர்ந்தது; நாகரிகம் வளர்ந்தபோது நிலைத்தது; இன்றைக்கும் தொடர்ந்து வாழ்கிறது.
             
       அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்தின் விளைவாக இதழ்கள் அளவாலும், பரப்பாலும், இயல்பாலும், வகைகளாலும், வளர்ச்சியாலும் இன்றைய மனிதனின் பொருளாதார சமுதாய வாழ்க்கையில் தகவல் தொழிநுட்ப சாதனங்களுள் ஒன்றாக விரைந்து வளர்ந்து வருகின்றது. இதழ்கலின் பேராற்றலை மக்கள் உணரும் வகையில் பைந்தமிழ் பாவேந்தர்,
 
”காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
     பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
    பிறந்த பத்திரிகைப் பெண்ணே” 16
என்று வாழ்த்தி வரவேற்பதன் மூலம் இதழ்களின் அவசியத்தை உணரமுடிகின்றது.
 
இணைய இதழ்கள்:    
     இவ்வாறு மக்களிடையே    இரண்டறக் கலந்துவிட்ட இதழ்கள் காலத்தின் மாற்றத்தால் நாளடைவில் இணையத்தில் இணையத் தொடங்கின. அச்சுக்கூடத்தில் இருந்த இதழ்கள் 19-ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் இணையத்தில் ஏறின. இவ்வாறு ஏட்டுச்சுவடி வடிவில் வந்த காலமுறை இதழ்கள் இணையத்தின் பால் மெல்லமெல்லப்  பரவத்தொடங்கின. அச்சு இதழ்களைப்பொறுத்த வரையில் அது அந்த நாட்டிற்குள் மட்டுமே பரவும். இணைய இதழ்களை இணையத்தில் பதிவு செய்துவிட்டால் உலகம் முழுவதும் உள்ள இணைய வாசகர்களின் பார்வைக்கு கிட்டும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.
 
       இதழ்கள் என்றால் அவை காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்னும் வழக்கத்தை மாற்றி அமைத்தவை இந்த மின்னிதழ்களான இணைய இதழ்களே. காகிதம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்திய போது ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை உருவாக்குகின்றன. ஒரு முறை அச்சடித்துவிட்டால் அந்தச் செய்திகளில் மாற்றங்களைப் புகுத்த முடியாது. இந்தக் குறையை இணைய இதழ்கள் போக்குகின்றன. எந்த நொடியிலும் செய்திகளில் மாற்றங்களைப் புகுத்தலாம்.
 
இவ்விதழ்களின் மூலம் ஒரு வருட இதழ்களைக் கூடக் கையடக்க வடிவில் உள்ள சாதனங்களில் படித்துவிடலாம். எங்கு சென்றாலும், எவ்விடத்தில் வேண்டுமானாலும் நமக்குத் தேவையான செய்திகளை தேவையான போது தரவிறக்கம் செய்து பகிர்ந்து கொள்ளமுடியும்.   
 
தமிழ்ச் சமூகமானது இன்றைய அறிவியல் யுகத்திற்குள் காலூன்றித்தொடங்கியுள்ளது. அதன் விளைவே தமிழ் இணையப் பக்கங்களும், தமிழ் மின் இதழ்களும் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு இணையத்தில் தமிழ், தமிழர் சமூகம், தமிழர் பண்பாடு, தமிழ் மொழிச்சிந்தனை குறித்த எண்ணங்களும்,அதற்கான செயல்பாடுகளும்
பெருகி வருகின்றன. அதன் விளைவே இன்று பல்கிப் பெருகி நிற்கும் தமிழ் மின் இதழ்களாகும். 
 
இணையம் 1990ஆம் ஆண்டில் டிம் பர்னர்ஸ்ஸி(TIMBERNERS-LEE)அவர்களால் உலகம் பரவிய வலையாக (WORLD WIDE WEB)அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தில் தமிழ் 1995 ல் கனியன் (WWW.KANIAN.COM)வலையேற்றத்துடன் உலாவர ஆரம்பித்தது”.17 இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரமான தமிழ் இதழ்கள் ஒரு சிறப்பு மிக்க பகுதி. இணையத்தில் உள்ள தளங்களை பின்வருமாறு பிரிக்கலாம்.
 
 • இணையம் புகுதளங்கள்
 • சங்கம் அல்லது அமைப்பு சார் தளங்கள்
 • தனிப்பட்டோர் பக்கங்கள்
 • தகவல் தளங்கள் இணைய புத்தகங்கள்
 • இணைய பொதுச் சந்திகுழுக்கள்
 • தளத் தொகுப்புகள்
 • வலைப்பூக்கள்
 • செய்தித் தளங்கள்
 • இணைய இதழ்கள்
 
மலேசியத்தமிழ்ப்படைப்புகளும்  இணைய இதழ்களும்:
 அச்சு வடிவில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கிணற்றுத் தவளையாக இருந்த ஊடகங்கள் இணையத்தின் வழியாக இன்று உலகம் முழுவதற்கும் பயன்படத்தக்க படைப்புகளை, தகவல்களை தருகிறது. அவ்வகையில் மலேசிய இணைய தளத்தில்வெளிவரும் தமிழ் இணைய இதழ்களில் உள்ள சிறுகதைகளை ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.
 
இணைய இதழ்கள் என்பன அச்சு இதழ்களைப் போலவே பல்வேறு செய்திகள், படைப்புகள், படங்கள் முதலானவற்றைக் கொண்டு வெளிவருவன வாகும். தமிழில் பல்வேறு மின்னிதழ்கள் வெளிவருகின்றன. அவற்றில் சில இதழ்கள் இணையத்தில் மட்டும் வெளிவருகின்றன.
 
       அச்சு இதழ்களாயினும் மின்னிதழ்களான இணைய இதழ்களாயினும் அவற்றை காலமுறைப்படி தான் வெளியிடுகின்றனர். நாள், வார, மாத இதழ்கள் என இணைய இதழ்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.அவ்வாறு வெளிவரும் இணைய இதழில் உள்ள மலேசியச் சிறுகதைகளை காணலாம்.
 
திண்ணை:
      இம்மின்னிதழில் கலை, அரசியல், அறிவியல், சமூகம், கதை, கவிதை, இலக்கியம் சார்ந்த செய்திகள் எனப் பல்வகைச் செய்திகள் இடம் பெருகின்றன. இவ்விதழ் இலாப நோக்கமின்றி செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயற்படுகிறது. இதனைப் பார்வையிடுவதற்கோ, படைப்புகளை வெளியிடுவதற்கோ கட்டணம் கிடையாது. அதே போல் படைப்பாளிகளும் இவ்விதழ் எந்தவிதமான கட்டணங்களும் வழங்குவதில்லை. இம்மின்னிதழ்கள் வார இதழாக வெளிவருகிறது. இதன் இணைய முகவரி WWW.THINNAI.COM.
 
மலேசியத் தோட்டப்புறத்தில் வேலை செய்யும் தோட்டத் தொழிலார்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துவதாகசம்பள நாள்என்ற இச்சிறுகதை அமைந்துள்ளது.
 
       மலேசியத் தோட்டமான தீம்பாருக்குச் சென்று பால் எடுப்பது தமிழர்களின் அன்றாட தொழில். ஒருமாதம், ஒருநாள் முழுவதும் பால் எடுத்தாலும் கொஞ்சமாகத் தான் கிடைக்கிறது. இடையில் மழை வந்து அவர்களின் தொழிலை நிறுத்திவிடும். மாதம் முழுவதும் பால் எடுத்தாலும் கிடைக்கும் சம்பளம் 120வெள்ளி தான். 70வெள்ளி பிஞ்சாமுக்கும், 4வெள்ளி யூனியனுக்கும் சந்தாவாக கட்டியது போக, மீதமுள்ள வெள்ளி குடும்பத்திற்கு மிஞ்சும். இவ்வாறு, தமிழர்களின் வாழ்க்கை தினமும் இழுபறியாக செல்வதையும்,
 
       தோட்டத்து நிலத்தை முதலாளிகள் வாங்கிய பிறகு எந்த வசதிகளும் செய்து தராததால் பெரும்பாலான தொழிலாளர்கள் பக்கத்து தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றதையும், கால ஓட்டத்தில் ஒவ்வொருவராக இடம் பெயர்ந்து நகர்புறத்தை நோக்கி சென்றதையும் இச்சிறுகதையின் ஆசிரியர் கே.பாலமுருகன் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. 
 
        இக்கதையில் தினமும் குடித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் அடித்து கொடுமைப்படுத்துகிறான் குடும்பத் தலைவன். குழந்தைகளை பள்ளிக்குச் செல்லவிடாமல் தோட்டத்துக்கு பால் எடுத்து வர விரட்டுகிறான். பள்ளிக்குச் சென்றால் சுள்ளிக்குச்சியை எடுத்துக்கொண்டு விரட்டி அடிப்பதாலும், கொடுமை தாங்காமலும் அச்சிறுவன் வீட்டைவிட்டு ஓடி விடுகிறான். சிறுவயதில் அனுபவித்த கொடுமைகள் அவன் மனதில் பதிந்துவிட தந்தையின் மீது வெறுப்பு ஏற்படுவதையும், கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பரபரப்புடன் அவசர வாழ்க்கையாகவும், மாலை வேளையில் வேலைக்குச் செல்லும் பெரும்பாலானோர் சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வீடு திரும்பவதையும், நாகரீக வளர்ச்சியின் மாற்றங்களையும் பா.அ.சிவத்தின் வழிப்போக்கன் கதையில் கையாண்டிருப்பதை அறிய முடிகிறது.
 
       பெண்கள் வாழ்க்கை ஆண்களிடம் அடிமையாக இருக்க வேண்டும் என்பதையும், சமுதாயத்தில் மனைவி, கணவன் இருவருக்குமிடையில் ஏற்படும் தாழ்வுமனப்பான்மைகளும், எதிர்த்து எதுவும் பேசமுடியாமல் வாயில்லா பூச்சியாக வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவதையும்,
 
பெண்கள் எவ்வளவு தான் படித்திருந்தாலும் ஆண்களுக்கு அடங்கி அடிமையாக வாழவேண்டும். எதிர்த்துப் பேசினால் திமிர் பிடிச்சவ; படித்த திமிர் உனக்கு; என்னை விட அதிக சம்பளம் வாங்கும் ஆணவம் போன்ற பட்டத்திற்கு ஆளாகிறாள். இதனால் கண்வன் மனைவிக்கிடையே உள்ள குடும்ப வாழ்க்கை சிதைவதையும் க. ராஜம்ரஞ்சனியின் திமிர் பிடிச்சவசிறுகதை நடைமுறை வாழ்க்கையின் எதார்த்த நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது.
 
உலகம் செல்பேசி, மின்னஞ்சல், இணையம் என விரைவாக செல்லும் போதும் தமிழரின் பண்பாடு அழியாது உயிரோடு இருப்பதை மலேசிய எழுத்தாளர் க.ராஜம்ரஞ்சனியின்காதலிக்க ஒரு விண்ணப்பம்சிறுகதையில்,தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக, தன் காதலி பங்கயச்செல்வியின் அனுமதி வேண்டி சித்தார்த் என்ற இளைஞன் நண்பனின் உதவியுடன் அப்பெண்ணுக்குக் கடிதம் எழுதி அனுப்புகிறான். அக்கடிதம் மூலம் தூய்மையான அன்பையும், நம் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் மூலம் சித்தார்த் தமிழ்மொழி மீது கொண்ட ஆழ்ந்த பற்று மலேசியாவில் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டிருப்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
 
உதிர்ந்த இலைகள் எனும் சிறுகதையில் வெங்கட் என்ற 29வயது இளைஞன் கம்புயூட்டர் மெக்கானிக். ஓய்வு நேரங்களில் மா, கொய்யா முதலான உதிர்ந்த இலைகளை எடுத்து வந்தான். இதனால், பலர் பைத்தியம் என்றும் சிறுவர்கள் மலாய் மொழியில் ஏ... கீலா...கீலா... என கூப்பிடுவதையும் கண்டு கொள்வது இல்லை.
 
கல்பனா என்ற டீச்சர் வெங்கட்டிடம் சகோதர பாசத்துடன் பழகுவதின் மூலம் கல்பனா போன்றோர்களின் நல்ல எண்ணத்தையும், பரந்த மனப்பான்மையும் அறிய முடிகிறது. ஒரு சமயம் சேர்த்து வைத்திருந்த உதிர்ந்த இலைகளை கல்பனாவிடம் கொடுக்கிறான். உதிர்ந்த இலைகள் வாழ்க்கை முடிந்து போனது; பச்சை இலைகள் மரத்தின் உயிர் என்பதை இச்சமூகத்தில் ஒரு சில மனிதர்கள் உதிர்ந்த இலைகளைப் போன்றும் , ஒரு சிலர் பச்சையிலைகளைப் போன்று வாழ்வதை வெங்கட்டின் கதாபாத்திரம் உணர்த்துகிறது.
 
வல்லினம்:
      வல்லினம் மலேசியாவில் அச்சு இதழாக வெளிவந்தாலும் 2009ல் செப்டம்பர் முதல் இணைய இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மாத இதழான வல்லினம் ஆழமான கட்டுரை, கதைகள், விமர்சனங்கள், கவிதைகள் முதலான படைப்புகளுடன் உலாவருகிறது. இதன் இணைய முகவரி WWW.VALLINAM.COM.
 
ஆர்.கணேஷ் ஐந்தாம் வகுப்பு படிக்கும் தோட்டத் தொழிலாளரின் மகன். விடுமுறை நாட்களில் அம்மா, அப்பாவுடன் தோட்டத்துக்கு சென்று கித்தா காட்டில் கித்தா மங்கில் வழியும் பாலை வழிச்சி எடுக்கும் போது உடல்களில் ஒட்டி காய்ந்து இருக்கும். அப்படியே மறுநாள் பள்ளிக்குச் செல்கின்றனர். அச்சிறுவர்களின் உடல்களில் கித்தாப்பால் திட்டுத்திட்டாக காய்ந்திருக்கும்.தோட்டத்து மக்கள் குடிதண்ணீர் எடுக்க செல்லும் போது வெகுதூரம் செல்ல வேண்டும். இரவு எவ்வளவு நேரமானாலும் தண்ணீர் எடுத்து வருவது தோட்டப்புறமக்களின் வாழ்க்கை.
 
         பள்ளிக்கூடத்தில் உள்ள சிறுவர்களை தோட்டத்து முதலாளிகள் அழைத்துச் சென்று, மலக்காட்டு தீம்பார்ல கித்தா கொட்டைகளை இரண்டு, மூன்று கோணிப் பைகளில் பொறுக்கச் சொல்வார்கள். பொறுக்கிய பிறகு ஜீப்பில் கொண்டு வந்து பள்ளியில் விட்டு விட்டு ஆளுக்கு 1வெள்ளி கொடுத்து விட்டுச் செல்கின்றனர். தோட்டப்புறத் தமிழர்களின் வாழ்க்கை நிலையின் வறுமைப் போராட்டம் இதுதான் என்பதை மண்மீதும் மலைமீதும் படர்ந்திருந்த நீலங்கள்என்ற கதை விவரிக்கிறது.
 
ஈழத்தமிழர்கள் போவதற்கு இடமில்லாமல் இராணுவ சிங்களர்களிடம் சிக்கி மடிவதையும், தமிழர்கள் சிங்களர்களின் இன வெறியாட்டத்திற்கு பலியாவதையும் பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்என்ற கதை எடுத்தியம்புகிறது.                       
                    
இக்கதையில் ஒரு தாய் தன் கணவனையும், மாமியையும் ஈழப் போரில் பறிக்கொடுக்கிறாள். தன் பிள்ளைகளுக்காக உயிர்வாழ நினைத்து  அங்கிருந்து தப்பிச் செல்ல நினைக்கிறாள். ஆனால், சுற்றிலும் அடைக்கப்பட்ட கம்பிகளில் மின்சாரம் பாய்வதாலும், இராணுவர்களின் துப்பாக்கிக்கு பயந்தும் மீண்டும் அங்கேயே அடைத்து வைக்கப்படுகிறாள். தன் குழந்தைகள் இருவரையும் சிறுவர்கள் என்று பார்க்காமல் கொன்றுவிடுவதையும், அக்கூட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்வதையும் கண்டு அவளின் கண்களில் இரத்தம் வழிகிறது.
 
தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட அவளிடம் பால் சுரக்கவில்லை. அவளே எதுவும் சாப்பிடாமல் பட்டினியில் வாடும் போது எப்படி குழந்தைக்கு பால் கொடுக்க முடியும். தன் மடியில் அமைதியாக கிடக்கும் குழந்தையை பார்த்து தூக்கி நிமிர்த்துகிறாள்; அக்குழந்தை மூச்சில்லாமல் துவண்டு விழுவகிறது. அச்சமயம் செருக்குடன் வரும் சிங்கள வெறியனின் முகத்தில் அக்குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு , அந்தத் தாய் அப்படியே சரிந்து விழுகிறாள்.
 
      அ. ரெங்கசாமியின் இக்கதை ஈழத்தமிழர்களின் வாழ்வு தினம் தினம் சாவின் பிடியில் சிக்கித் தவிப்பதையும், சிங்கள இராணுவ வெறியாட்டத்தையும் நடை முறையில் உள்ளவாறே  சித்தரிக்கிறது.
 
இந்த சமூகத்தில் திருமண வயதை எட்டியும் ஏற்றத்தாழ்வு, வசதியின்மை, சடங்கு, சம்பிரதாயம் காரணமாக பெண்களின் மணவாழ்க்கை பாதிக்கப்படுவதை செல்வராஜ் ஜெகதீசனின்குழந்தையின் தாய்சிறுகதை விவரிக்கிறது.
 
இக்கதையில் சம்பிரதாயம் என்ற பெயரில் பெண்ணைப் பார்த்துவிட்டு பஜ்ஜி, காபி பலகாரம் சாப்பிட்டு செல்லும் கூட்டத்தால் பெண்களின் திருமண வாழ்க்கை கனவாகி விடுகிறது. அக்கா இருக்கும் போது தங்கைக்கு திருமணம் செய்வதால் சமூகத்தில் அவளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு, தனது கவனத்தை வேறு திசையில் செலுத்துவதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.  
 
இரப்பர் மரங்களில் பால் எடுக்கும் போது சிறுவர்களின் உடல்களில் பட்டு காய்ந்துவிடும்; பிஞ்சுக் கைகள் சிவந்து போகும். வாழ்க்கை சூழ்நிலை அம்மாவுக்கு உதவியாக குழந்தைகளும் இரப்பர் தோட்ட்த்திற்கு வந்து மரங்களில் வழியும் பாலை வாளிகளில் நிரப்பிக் கொண்டு முதலாளியிடம் கொடுத்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும். இல்லையெனில், அரிசி, பருப்பு கடன் வாங்கி வந்து தான் சமைக்க வேண்டும். இது தான் தோட்டப்புறத் தொழிலாளர்களின் நிலை.
 
பள்ளிக்கு போகும் வயதில் தோட்டப்புறத்தில் பால் எடுத்து, குடும்ப வறுமையை சமாளிப்பதை காட்டிலும், பட்டாம்பூச்சியாக பிறந்திருந்தால் சோற்றுப்பருக்கையில் பாதி போதும் நாம் இப்படி வாழ வேண்டியதில்லை;வானத்தில் சிறகடித்துப் பறக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு தோட்டப்புற மக்களின் வாழ்க்கை அமைந்திருப்பதை யுவராஜனின் சிறகுஎன்ற சிறுகதை எடுத்தியம்புகிறது.
 
உயிர்மை:
உயிர்மை இணைய வார இதழ். தமிழ் இணைய எழுத்திற்கு இன்னொரு பரிணாமம் ஆகும். வாரா வாரம் திங்களன்று வெளிவருவதாகும். கதைகள், கவிதைகள், கடித்ங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், படைப்பாளிகளின் கட்டுரைகள், சமூக ந்கழ்வுகள், இலக்கிய ந்கழ்வுகள் இடம் பெறுகின்றன. இதன் இணைய முகவரி WWW.UYIRMAI.COM.
 
வசதி வாய்ப்புகளுடன் ,செல்வாக்குடன் வாழ்ந்து கெட்ட அக்குடும்பத்தில் உள்ள ஒரு வாரிசுத் தனது உடலை விற்றுக் கிடைக்கும் வருமானத்தை தெய்வத்திற்குச் செலவிடும் நிலை ஏற்படுகிறது, குடும்பத்தின் ஒற்றுமையின்மையாலும், பிடிவாத்த்தாலும் ஏற்படும் நிலையும்,சாதி, சமய வேறுபாடுகளின் போக்கு பற்றிய செய்திகளை இக்கதையில் காணமுடிகிறது.
 
நன்றாக வசதி வாய்ப்புகளுடன் வாழும் ஒரு உயர்ந்த குடும்பம் காலத்தால் கெட்டுப் போகும் சூழ்நிலையில் , சமூகத்தில் உள்ள பல இன்னல்களுக்கும், செயல்களுக்கும் ஆளாவதை அம்பலக்கார வீடுகதை விவரிக்கிறது.
 
இன்றைய காலத்தில் பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் நலனுக்காக செயல்படுவதில்லை. மதிப்பெண் ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு செயல்படுவதை, வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளி இருப்பதோடு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை வாட்டி வதைக்கின்றனர். வீட்டுப் பாடங்கள் பைகள் நிறைட நிரம்பி வழிகின்றன. பள்ளிகளில் கொடுக்கப்படும் உடற்பயிற்சி, விளையாட்டு, நன்னெறிக்கல்வி முதலான வகுப்புகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதும் இல்லை.பெற்றோர்களுக்கும், பள்ளிகளுக்கும் ஒரே நோக்கம் அவர்கள் பெறப்போகும் மதிப்பெண்களே. இச்செயல்களால் குழந்தைகளின் இளவயது பருவத்தை கல்வியை பறித்து விடுகிறது என்பதை கோ.புண்ணியவானின் விளையாட்டுப் பருவம்இச்சிறுகதை சித்தரிக்கிறது.
 
பினாங்கில் மழை பெய்து கொண்டிருந்த நேரம் வைப்பர் தன் பேத்தி மல்லியை அழைக்க பள்ளிக்குச் செல்கிறார். அவருக்கு மல்லியுடன்,சிரித்து பேசி விளையாடுவது தான் பிடிக்கும். இது வயதானவர்களுக்கு உள்ள இயல்பாகும். மல்லியை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தாத்தா என் வயிற்றில் ஒரு எலி இருக்கு;தினமும் சாப்பாடு தரவில்லை எனில் வயிற்றைக் கடிக்கும் என்ற மல்லியின் மழலைப் பேச்சும்,கற்பனைத் திறமும் வைப்பரை ஒரு நொடி சிந்திக்க வைக்கிறது.
 
குழந்தைகள் கற்பனைத் திறம் உடையவர்கள் என்பதையும், வாழ்க்கையின் இறுதியில் வயதானவர்களின் எதிர்பார்ப்பையும் என் வயிற்றில் எலிசிறுகதை வெளிப்படுத்துகிறது.
 
புவான் வீட்டிற்கு வரும் சிவகாமி புவான் வீட்டு காம்பவுண்ட் சுவரிலும், வாசலிலும் மண்டி கிடக்கும் புல்லை வெட்டி சுத்தப்படுத்தாமல் இருப்பதை புவானிடம் கூறும் போது,சமூகத்தில் நடக்கும் இனவாத போரட்டங்களும், மனித்த் தன்மையற்ற செயல்களும் தலைத்தூக்கி விரித்தாடுகின்றன. எத்தனை காந்திகளும், பெரியார்களும் வந்தாலும் இத்தகையப் போக்கு மாறுவதில்லை புல்லைப் போல என்பதை,உண்மை தெரிந்தவர்கதையின் மூலம் அறிய முடிகிறது.
 
தமிழ் முரசு:
 சோமசேகரன் லிம் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவன் மலேசியாவில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறான். லிம் வாடகைப் பணம் வாங்க வரும் போது அவ்வீட்டில் உள்ள மின்மினியுடன் பேசாமல் போவது இல்லை. அதன் மீது லிம்மிற்கு மிகுந்த அன்பும்,ஒரு விதமான ஈர்ப்பும் உல்ளது. இதனால் தனது மனைவி, குழந்தைகளை கூட விட்டுப் பிரிந்து விட்டார். இதைக் கேட்ட சேகரனுக்கு ஆச்சரியமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. ஒரு ஜடப்பொருளான கண்ணாடி மீது இவ்வளவு அன்பு என்று வியக்கும் படியாக கதை நீள்கிறது.
 
சோமசேகரன் போன்றோரின் பார்வைக்கு அக்கண்ணாடி ஒரு ஜடப்பொருளாக லிம் போன்றோரின் பார்வைக்கு அக்கண்ணாடி உயிருள்ள பொருளாகவும் இருப்பது போன்று எத்தனையோ மனிதர்கள் இவ்வுலகில் இருப்பதை கமலாதேவி அரவிந்தனின் மின்மினி கதை வெளிப்படுத்துகிறது.
 
வலைப்பூக்கள்: (BLOGSPOT)
உலக அளவில் அனைத்து மொழிகளுக்கும் யூனிகோடு(UNICODE)என்னும்  பொதுவான ஓர் எழுத்துக் குறியாக்க முறை உருவாக்கப்பட்டுள்ளது. இது (ஐ.எஸ்.ஓ - 10646) 32 – பிட் குறியாக்க முறை, TAB, TAM, TSC11ஆகியவை 8-பிட் குறியாக்கம் ஆகும். உலகமொழிகள் அனைத்துக்கும் யூனிகோடில் தமிழுக்கு 128 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.18
 
       தமிழ் இணையப் பக்கங்கள் ஏராளமாக யூனிகோடில் வடிவமைக் கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்டோஸ், லினக்ஸ், மெக்சிண்டாஷ் இயக்கமுறைமைகளின் புதிய பதிப்புகள் யூனிகோடை ஏற்கின்றன. யூனிகோடின் வருகையால் தமிழில் வலைப்பூக்கள்,தேடுபொறிகள் கிடைத்திருக்கின்றன. முடக்குத் தெருக்கள், மூலை முடுக்குகள் என்று தாண்டி யூனிகோட் என்ற நெடுஞ்சாலைக்குத் தமிழ் வந்துவிட்டது. வருங்காலத்தில் தமிழ் யூனிகோடிலேயே அமையும். இதன் காரணமாக கணினியில் தமிழ் புழங்குவதில் பெரும்பாய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. 
 
உலகத்தமிழர்கள் தங்களுக்குள் செய்திகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.இப்பொழுது ஒருவர் எழுதுவதை மற்றொருவர் தடையின்றி உடனுக்குடன் படிக்க முடிகிறது.படித்தவற்றை குறித்து உடனடியாக எழுதியவருக்கே கருத்து தெரிவிக்க முடியும். எந்த வித கட்டுப்பாடும், தடையும் இல்லாமல் இலவசமாக படப்புகளை எழுதவும், படிக்கவும் முடியும். இந்த வசதியின் காரணமாக வலைப்பூக்கள் (WEBLOGS). நூற்றுக்கணக்கில் மலர்ந்திருக்கின்றன.
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் ஏறத்தாழ 700வலைப்பூக்களுக்கு மேல் மலர்ந்துள்ளன. இவற்றில் இலக்கியம் சார்ந்த படைப்புகளான கதைகள், கவிதைகள், வாசகரின் கருத்துகள், கட்டுரைகள், நாவல்மற்றும் பல்துறைசார்ந்த படைப்புகளும் எழுதப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு தடைகளைத் தகர்த்த யூனிகோட் மூலம் உருவான வலைப்பூக்கள் இன்று தமிழ்மொழி உலகெங்கும் வளர்வதற்கு பெருமளவில் துணை நிற்கின்றது.  
 
மலேசியாவில் பல்வேறு வலைப்பூக்கள் வெளிவந்தாலும் ஒரு சில வலைப்பூக்களில் மட்டுமே சிறுகதைகள் எழுதப்படுகின்றன. அவ்ற்றில் சில வலைப்பூக்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளைப் பற்றி பார்ப்போம்.
 
WWW.BALAMURUKAN BLOGSPOT.COM:
கோலாலம்பூரில் கெசினோரோலட்என்கிறசூதாட்டத்தில்நண்பர்கள் இருவர்  எல்லாப்பணத்தையும்கரைத்துவிட்டபிறகுஅப்பணத்தை சம்பாதிக்க நினைக்கும் போது சாமி சிலை ஒன்று கிடைக்கிறது, அதைக்கொண்டுபோய்கடைகடையாகவிற்பனைசெய்கின்றனர். ஒரு இடத்திலும்வேண்டாமென்கிறார்கள். ஒரு இடத்தில் வைத்துவிட்டு செல்கின்றனர். இரு நண்பர்களும் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும்போது சிலை வைத்த இடத்திற்குச் சென்று பார்க்கின்றனர்.அங்கு ஒரு கோவில் உருவாகியிருப்பதைக்கண்டு லாவே   என்றுவியக்கிறான் சீனநண்பன்.
 
பிற பொருள்கள் மீது ஆசைபடுவதால் உண்டாகும் சிக்கல்களையும், அன்றாடவாழ்க்கையிலிருந்தும்,இறுக்கங்களிருந்தும் தன்னைதப்பித்துக் கொள்ள இன்பம் அளிக்கக்கூடியசூதாட்டம், மது, மாதுபோன்றவற்றைத் தேடிச்செல்கிறான்.  மனோநிலையில் சூதாட்டம் கொடுக்கக்கூடிய சிற்றின்ப அதிசயங்களுக்கு முன்மனிதன் மண்டியிட்டுத்  தன்னை தானே தாழ்த்திக் கொள்வதைமஹாத்மனின்  ஓ..லாவேஎன்ற சிறுகதையின் மூலம் உணர்த்தப்படுகிறது.
 
சுகுமாறனுக்குப் பெற்றோர் கிடையாது தாத்தாவிடம் வளர்ந்து வரும் சிறுவன், அவன் பள்ளிக்குச் சென்றால் காசு செலாவாகும் என்று போகவிடுவதில்லை. தாத்தாவுக்குத் தெரியாமல் சுகுமார் பள்ளிக்கு ஓடிவிடுவான்.தாத்தா தேடிச் சென்று திட்டித்தீர்த்து விடுவார். நண்பர்களெல்லாம் சுகுமாரை கிண்டல் செய்வார்கள். பள்ளியில் நடக்கும் கவிதைப் போட்டியில் சுகுமார் கலந்து கொண்டாலும், தாத்தா வந்து திட்டி இழுத்துச் சென்றுவிடுவாரோ? என்று உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தான்.
 
அவன் நினைத்த்து போலவே  மூனாம் நம்பர் அறை எங்கேஇருக்கு என்று கேட்டுக்கொண்டே போட்டி நடக்கும் இடத்திற்கு வருவதை கண்ட சுகுமாருக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. ஆனால், தாத்தா வந்து சுகுமாரனை அழைத்துச் சாப்பிடுவத்ற்கு 1வெள்ளி கொடுத்து விட்டு செல்கிறார்.
 
படிக்கும் ஆசை இருந்தும் சுகுமாரைப் போன்று வசதியில்லாமல், படிக்க  வழி இல்லாமல் அவர்களின் ஆசைகள் வெறும் கனவாக மட்டும் இருப்பதை மூனாம் நம்பர் அறை எங்கே இருக்கு கதையின் மூலம் அறியமுடிகிறது.
 
மலேசியத் தோட்ட மாளிகைக்கு செல்வதற்காக பேருந்தில் தட்டுத் தடுமாறி ஏறிய மாரிமுத்துவுக்கு மலாய் மொழி தெரியாத காரணத்தால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் கிழவா என்று கேலியும், கிண்டலும் செய்து வேடிக்கை பார்த்தனர். டிரைவர் இத்து பங்குனான் லாடாங்’ (தோட்ட மாளிகை) கில் இறக்கிவிட்டார். அங்கு எஸ்.பி.எம் என்பதை எதிர்த்து தேர்வில் தமிழ் எழுத முடியாது என்பதற்காக  நடந்த போராட்டத்தில்  மாரிமுத்துவும் கலந்து கொண்டு தமிழுக்காக போராடுவதை கடைசி பயணி மாரிமுத்துகதையில்,
 
வயதான காலத்திலும் தமிழ் மீது கொண்ட பற்றினால் தமிழுக்காகப் போராடும் மாரிமுத்து போன்றோர்கள் தமிழ்மொழிக்காக போராடி தமிழ்மொழியை நிலைநிறுத்த வேண்டியதையும், முதுமை நிலையில்லாத்து என்ற கருத்தையும் இச்சிறுகதை வலியுறுத்துகிறது.
 
GRAGAM.VIGNESBABU.BLOGSPOT.COM:
இன்று உலகை கணினி யுகத்திற்கு கொண்டு செல்லும் தொழில்நுட்ப வளர்ச்சி உலகை தனக்குள் வைத்து ஆட்சி செய்வதை குரங்குஎன்ற கதையில்,
 
விஜயராஜ் கிரகத்திற்கு வேலைக்குச் சென்ற இடத்தில் ரோபோக்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கின்றான். மனிதர்களைப் போலவே உருவமும், பேச்சும் இருப்பதும், வாசலில் நின்றிருந்த பெண் ரோபோ விஜயராஜை பார்த்து கண்ணடிப்பதும் ,சிரிப்பதும் அவனை வியக்க வைக்கிறது. யுவராஜினை குரங்கு இனத்திலிருந்து தோன்றியவன் என்று சொல்லி ரோபோக்கள் விஜயராஜிடம் விசாரணை செய்யும் விதத்தின் மூலம்  தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறியமுடிகிறது.
 
வேலை பார்க்குமிடங்களில் முதலாளிகள் தனக்கு கீழ் வேலை பார்க்கும் தொழிலாளிகளை எடுபடியாகவே வைத்திருப்பதை, மலாயாவில் உள்ள ஹைடெக் சிட்டி சைபர் பெர்ல் அலுவலகத்தில் சுவீர் வேலைப்பார்க்கிறான். அந்த அலுவலகத்தில் உள்ள மேனேஜர் டாங்கிற்கும், கெமராஜ்க்கும் எடுபடியாக சுவீர் அதிகமாக பயன்படுவான். நாம் தமக்கு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள தெரியாத்தை தெரிந்த மாதிரி மற்றவர்களிடம் காட்டிக்கொண்டு சமாளிப்பதும் வினாவிற்கான பதிலையும் தெரிந்து கொள்ளும் திறனை டாங்கியின் மூலமாகவும், நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் உடுத்தும் உடைகளினால் ஆண்களின் மனம் சலனப்பட்டு அதனால், ஏற்படும் சிக்கல்களையும்சுவீர் சிறுகதை எடுத்துரைக்கிறது.
 
500குவாச்ச நோட்டுக்களை கொடுத்து ராட்வெய்லர் என்ற நாய் ஒன்றை தொழிற்சாலையின் திருட்டை தவிர்க்க மேனேஜரின் சகோதரர் வாங்கி வந்த டைசனை   தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. டைசனை பார்த்துக் கொள்ள டொமினிக் என்பவரை அழைத்து வந்தனர். டைசனை டொமின் வெளியில் அழத்துச் சென்று டொமின்னுக்கு வேண்டியதையெல்லாம் செய்து நன்றாக பார்த்துக் கொண்டார்.
 
இருவரும் நன்றாக பழகியதால் டைசன் டொமினை தவிர வேறு யாரையும் தன்னிடம் நெருங்கவிடுவதில்லை. டொமின் வராத போது டைசனை பார்த்து பயந்து அதனருகில் வருவதில்லை. நாள் முழுவதும் அடைத்து வைத்திருந்தனர். இதனை கண்ட ஓம்பலுக்கு வருத்தமாக இருந்த்து. டசனை சமாளிக்க முடியாத்தால் மானேஜர் அதனை விற்றுவிடுகிறார்.
 
டைசனைப் போன்ற உயிருள்ள ஜீவன் என்று பார்க்காமல்வாயில்லாப் பிராணிகளை சமூகத்தில் சுதந்திரம் இல்லாமல் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படுவதையும், ஒம்பல், டொமின் போன்ற மனிதாபிமானம் உள்ளவர்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு இருப்பதையும்அவை ஆபத்தானவைஎன்றகதை வெளிப்படுத்துகிறது.
 
OLAICHUVADI.BLOG SPOT.COM:
ராஜம்ரஞ்சனியின் துளசிப்பாட்டி என்ற சிறுகதையில் துளசிப் பாட்டியின் பிள்ளைகள் காலமாற்றத்தால் தொழில்தேடி வெளியூர்களில் சென்று வாழ்கின்றனர். பாட்டிக்கு அவ்விடத்தை விட்டுச் செல்ல மனம் வராததால், கணவர் இறந்த பிறகும் பிள்ளைகள் இருந்தும் தனிமையில் வாழும் துயரத்தையும்,
 
தீம்பாருக்குச் சென்று மரம் சீவி விட்டு, வீட்டுக்கு வந்து மாலையில் கொல்லைக்கு வேலைக்குச் செல்வதையும்,சுயமாக உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும்துளசிப்பாட்டிஎன்ற கதையில் துளசிப் பாட்டியின் கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது.
 
       நரசிம்மனின் கொட்டும் மழையில்கதையில் ஆபத்தில் சிக்கிய பாதிரியாரை குள்ளன் காப்பற்றி பாதிரியாரின் மூலம் ஏசுவின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதும், சாதி,மத தாக்கத்தையும், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டையும்  குள்ளன் கதாபாத்திரம் மூலம் எடுத்துரைக்கிறது.
 
கிருஷ்ணமூர்த்தியைச் சந்திக்க ஏர்போட்டுக்கு சென்ற கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி விரும்பி தன்னுடன் அழைத்து வந்திருந்த சோமாலியா நாட்டு பெண் ஆமினோ கருப்பாக இருந்தாலும், அந்த அழகு பார்த்தவுடன் அவனுள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆமினோவின் செயல், பேச்சுத்திறனால் விரும்புகிறான். இதனால், கிருஷ்ணமூர்த்திக்கும், கார்த்திக்கும் இடையே இருந்த நட்பு முறுகிறது.  ஒரு கட்டத்தில் உண்மைத் தெரிந்து தனது தவறைப் புரிந்துக் கொள்கிறான்.
      
பிறருக்கு சொந்தமான பொருளை அபகரிக்க நினைப்பதால் ஏற்படும் விளைவுகளை நடைமுறையில் உள்ளவாறேபிறர்மனை நோக்கா என்ற சிறுகதை சித்தரிக்கிறது.
 
ANJADY.BLOGSPOT.COM:
குமாருக்கு தினமும் வேலைக்கு போகாமல் சம்சு குடித்துவிட்டு வந்து அம்மாவை போட்டு அடிப்பதாலும், தம்பியையும், அவனையும் அடிப்பதால் அப்பாவை பிடிக்காது. குமாரின் அம்மா தீம்பாருக்குச் சென்று பால் எடுத்து வ்ந்து குடும்பத்தை ஓட்டுவது வேதனையாக இருக்கும். விடுமுறை நாள்களில் குமாரும் தீம்பாருக்குச் சென்று அம்மாவுக்கு உதவலாம் என்றால் வேண்டாமென்று மறுத்துவிடுவாள்.
 
 A வெட்டில் இருக்கும் அம்மாவுக்கு குமாரு சாப்பாடு எடுத்துச் செல்லும் போது, டி.வியில் வரும் அல்ட்ராமேன் மாதிரி நமக்கு உதவுறதுக்கு யாரும் இல்லை என்று சொல்லும் தம்பிக்கு, நாபிலெமா வாங்கித் தர 10காசு கூட இல்லை. அம்மா கடைசி பத்தியில் கோட்டுப்பாலை கட்டிப்பாலிருந்து பிரித்து எடுப்பதை கண்டு, குமாரின் கண்களில் கண்ணீர் பெருகியது.
 
குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் குடும்பத்தலைவன் குடித்துவிட்டு வருவதால் ஏற்படும் நிலையையும், குழந்தைக்காக தன் வாழ்வின் இன்பங்களை அர்ப்பணிக்கும் ஒரு தாயின் நிலையையும் அல்ட்ராமேன் சிறுகதை வெளிப்படுகிறது
 
இரப்பர் தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இலையுதிர் காலம் வந்தால் தான் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இலையுதிர் காலமுடிவில் தான் இலைகள் துளிர்ப்பதால் மரங்களிலும் பால் அதிகமாக வடியும். தீம்பாருக்கு வேலைக்குச் செல்லும் போது பாம்பு கடித்து இறந்து விடுகிறாள் பெரியண்ணன் மனைவி. பலர் வற்புறுத்தியும் மறுமணம் செய்து கொள்ளாமல் இரப்பர் மரங்களை சீவி பால் எடுத்து தன் மகனுக்காகவே வாழ்ந்து இறந்துவிடுகிறார் பெரியண்ணன்.
 
 தீம்பாருக்கு வேலைக்குச் செல்பவர்கள் பூச்சி, பாம்பு கடித்து இறந்துவிடுவதயும், இரப்பர் மரம் நிறைந்த தோட்டங்களே அங்கு வாழும் தோட்டப்புற மக்களுக்கு   உலகம் என்பதையும் துளிர் சிறுகதையின் மூலம் நம்மால் அறியமுடிகிறது.
 
WWW.THIRUTHTAMIL.BLOGSPOT.COM:
       தோட்டப்புறத்தில் வேலை செய்பவர்களுக்குத் தமிழ்ப்பட சினிமா பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. மாதம் முழுவதும் வேலை செய்தாலும் சம்பளம் வாங்கும் நாள்களில் தான் அவர்கள் முகத்தில் சிரிப்பு தோன்றும். அப்பணம் மாதக்கடைசி வரைக்கும் வருவதில்லை. கடன்வாங்கி மீதம் உள்ள நாட்களை ஓட்டுகின்ற நிலை தான் இவர்கள் வாழ்க்கையாக உள்ளதைதெரியாத நிலா பாதிஎன்ற கதையில் காணமுடிகிறது.
       தமிழர்கள் தங்கள் தாய் நாட்டை விட்டு மலேசியாவிற்கு வந்தாலும் தங்களின் பண்பாட்டை மறக்காது வாழ்ந்ததை ருக்மணி கதாபாத்திரம் விவரிக்கிறது.
 
புலம்பெயர்ந்த தமிழர்கள் மலேசியாவிற்கு குடிபெயர்ந்து தோட்டப்புறங்களில் பெரிய துரைகளுக்கும், கங்காணிகளுக்கும் கட்டுப்பட்டு அடிமையாக வாழவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். கூலிக்கு வேலைப் பார்க்கும் தொழிலாளிகள் தோட்டமுதலாளிகளையும், கங்காணிகளையும் பார்த்தால் தலையில் கட்டியிருக்கும் துண்டை கழட்டி இடுப்பில் கட்டி வணங்கவேண்டும். சைக்கிளில் சென்றால் கீழே இறங்கி மரியாதை கொடுக்க வேண்டும். இல்லையெனில், வேலையிலிருந்து விரட்டி விடுவார்கள். 
      
இவ்வாறு தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து மீளவும், தங்களின் உரிமைகளை கேட்டும் , குழந்தைகளை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பவேண்டும் முதலான கோரிக்கைகளை முன்வைத்து ஓரளவு கல்வியறிவு பெற்றவர்கள்  போராட்டங்கள் செய்ததை,
 
நாயுடு வாத்தியார், தொப்புளான் வாத்தியாரின் முயற்சியும்,போரடி உரிமைகளை பெறவேண்டும் என்ற எண்ணத்தை தோட்டப்புற மக்களுக்கு ஏற்படுத்தியதையும் மதகுகளின் முதுகில் உறங்கிய மீன்கள்சிறுகதை, சமூகத்தில் தோட்டப்புற மக்களின் உண்மைச் சம்பவங்களை வெளிப்படுத்துகிறது.
 
தோட்டப்புறங்களில் வாழும் மக்களுக்கு தனித்தனி வீடுகள் கிடையாது.ஒரே வீட்டில் இடையில் சுவர்கள் தவிர்க்கப்பட்டு ஏழெட்டு குடும்பங்கள் இருப்பார்கள். இப்படி அமைந்த குடும்பங்களின் வீடுகளுக்குநடுவில் நடைபாதையோரத்தில் தண்ணீர்ப் குழாய் இருக்கும். சில நாள்கள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதுண்டு. அச்ச்ம்யங்களில் தண்ணீருக்காகச் செம்பனைக்காடுகளைக் கடந்து மூன்று மைல்களுக்கப்பாலுள்ள  ஆற்றில் தண்ணீர் எடுக்கவேண்டும் என்பதை,  இரண்டாம் சுருள் சிறுகதை தோட்டப்புற மக்களுக்கு ஏற்படுகின்ற இத்தண்ணீர் பிரச்சனையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதையாகும்.
 
      இவ்வாறாக மலேசியத் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகளாகவுள்ள தமிழ்ச் சிறுகதைகள், இணைய ஊடகத்தின் வழியாக உலகெங்கிலுமுள்ள தமிழரிடம் பரவலாகக் கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லை எனலாம். 
____________________________________________________________________________________________
 
Related News
 • பச்சை இரத்தம்
  விவரணப் படம்

 • பன்னாட்டுத் தமிழ் புதினங்கள்
  - தெ. வெற்றிச்செல்வன்

 • பெரியாரின் ரஷ்ய பயணமும் அரசியல் மாற்றமும் - இர. சாம்ராஜா

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
    Name shalini  
    Comments
  Good.
   
    Email Id shalini@yahoo.com  
    International Tamilology.com Thank You for Your Comments....  
       
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World