Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபாரதி-திரைப்படம் (சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்)
 

 

(வணக்கம்..... "கவிதை வெளி" தோழர்களுக்கு

நேரிலே வர இயலாத சூழல்,எழுத்தாய் என்னை அனுப்பியிருக்கிறேன்..

பாரதிபடத்தை-என்னோடு அருகில் அமர்ந்து  பார்த்து,நான் கொண்ட தவிப்பை,தன் கேள்விகளால் சீண்டி,என் கோபத்தையும் அதிலே புரண்டு வந்த பாரதி செய்திகளையும் கேட்ட வெற்றிப்பேரொளிக்கு,அதை கவிதைவெளியில்,நிலாசிந்தும் நேரத்தில் பந்திவைக்க ஆசை கிளம்பியிருக்கிறது..

என்னால் நேரில் வரமுடியாத

அவலம்!

இந்தக்கட்டுரை மிக அவசரமான ஒரு நெருக்கத்தில்,12,10- இரவு முழுக்க கண்விழித்து,ஒரு உணர்ச்சி தெறிப்பில் எழுதியது....

தமிழ் நாட்டில் எதற்கும் விமர்சனம் இல்லை விமர்சகனும் இல்லை. ஒன்று புகழ்வது,இல்லையென்றால் ஒன்றுமே இல்லையென மட்டை அடி அடிப்பனு...

காய்தால்,உவத்தல் இன்றி விமர்சனம் தமிழில் வர "தவம்" செய்ய வேண்டும் போல் இருக்கிறது "சரி சங்கதிக்கு வருகிறேன்....)

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்

-மகாகவி

"பாரதி"-படமாகிறது என்பதை கேட்டதில் இருந்தே உள்ளம் கிறுகிறுக்க ஆரம்பித்தது...

பாரதியாக தமிழே தெரியாத நடிகர் ஷிண்டே,செல்லம்மாவாக தேவையானி என்றெல்லாம் பத்திரிக்கையில் செய்திகள்,அவர்களின் ஸ்டில்கள் ஆவல் அத்தனை செல்களிலும் அடம்பிடிக்க தொடங்கியது ஆவல்!

இசை இளையராஜா- கூடுதல் எதிர்பார்ப்பு குதியாட்டம் போட்டது.

குருவாக வேண்டும் என்றே திட்டமிட்டு தமிழச்சி பெற்றபிள்ளை பாரதிஎன்கிற நம்பிக்கை எனக்கொண்டு.

எனக்கு காமம்முளைக்கத் தொடங்கிய அந்த " டீன்ஏஜ்" ஜில்தான் ஊடுபயிராக கவிதையும் விளையத் தொடங்கியது இந்த இரண்டும் செழிக்கையில் பாரதியின் கவிதை பருவ மழையாக விழுந்தது.

நான் வாங்கிய முதல்கவிதைத்  தொகுப்பு பாரதியின் கவிதைத் தொகுப்பு,ஞாபகம் இருக்கிறது,ஏதோ ஒரு அற்புதத்தை கைக்கொள்ளப் போகிறோம் என்கிற பரபரப்பில் தெற்கு வீதி அப்பாபுத்தக நிலையத்தில் பாரதி கையடக்கப் பதிப்பை வாங்கி வீட்டில் அதைப் புரட்டி,புரட்டி,புரியாமல்

மூச்சு முட்டி,வாய்விட்டுப்படித்து கிலுகிலுத்த அந்த "பால்பருவம்" ஞாபகத்தில் இருக்கிறது

பாரதியின் பித்து முழுவதும் ஏறியிருந்த அந்த வயது,இன்னும் அதில் குறைவில்லைதான்....

ஒருநாள்-

தங்கை சொன்னார்..

"டேய் உங்க பாரதி,குடிப்பாராமல்ல எங்க டீச்சர் சொன்னாங்க தெரியுமாடா" என்றவளின் கன்னத்தில் ஒங்கி அறைந்தேன்...அவளது கண்கள் ததும்பி கண்ணீர் தெளித்தது.

பெண்பிள்ளையை எங்கள் வீட்டில் யாரும் அடிக்கக்கூடாது,பின்னி விடுவார்கள்.எனக்கிருந்த இரண்டு வெறிகள் பற்றி அவர்களுக்கு தெரியும்,ஒன்று எம்.ஜி.ஆர்,இன்னொன்று பாரதி!

"என்னடா இது... பொம்பளப்பிள்ளையைப் போயி...! என விட்டு விட்டார்கள்..

பின்னர்களில் பாரதி பற்றிய பரந்துபட்ட வாசிப்பில் பாரதிக்கு கஞ்சாப்பழக்கம் இருந்தது எனவும்,அதனால் உடல் சுண்டி மரண பயம் அலக்கழித்தது என்பதுவும், தெரிந்த போது-எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒன்றின் மீது மயக்கம் இருக்கவே செய்யும்,அதுதான் இயல்பும் கூட,அதையும் சேர்த்துதான் கணக்கில் கொள்ள வேண்டும் எனப்புரிந்தது.

பாரதியை ஒரு சிறு வெளிச்சமாக கப்பலோட்டிய தமிழனில் காட்டிய போதும்,எஸ்.வி. சுப்பையா. தான் வரித்த பாரதியை கம்பீரப்படுத்தியிருந்த விதம், அந்த காட்சிகளை ஷிண்டேவிடம் காட்டியிருக்கக்கூடும் என எண்ணுகிறேன்,ஏன் எனில் அந்த பாதிப்பு ஷிண்டேயிடம் தெரிகிறது.

சிவாஜி,சிந்துநதியின்  மிசை பாடல் காட்சியில் பாரதியாக மிகை நடிப்பை விசிறியபோதும்..

பாரதி படத்தை எடுக்கும் கனவில் அதற்கான திரைக்கதையோடு "பாரதிதாசன் பிலிம்ஸ் "என்ற படக் கம்பெனியை ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு அமர்த்தி,வைத்துக் கொண்டு,சந்திக்க வருகிற எல்லொருக்கும்,அசைவ அயிட்டங்களைப்போட்டு "மெஸ்" நடத்தி புலிவடவம் வகை வழங்கி,பின் அதே பங்களாவின் அவிட்ஹவுசில் மனம் வெதும்பி,பணக்கஷ்டம் கொத்த, பொது மருத்துவ மனையில் மன்டையைப் போட்ட பாரதி தாசனோடு,பாரதிபடக் கனவும் உடன் கட்டை ஏறிக் கொண்டது.

பாலச்சந்தர் பாரதி நூற்றாண்டு கால சீசனில்,வியாபாரமாக்கிடலாம் என்கிற ஆகையால்,வைரமுத்துவை அழைத்து பாரதி தகவல்களை சேகரிக்கச்சொல்லி வைரமுத்துவும் சேகரித்து. தமிழக அரசே படம் எடுக்கப்போகிறது என்கிற  தகவலில்,சேகரிக்க நம் படம் அவுட்டானால் என்ன செய்வது என பாரதிபடத்தை கைகழுவ..

வைரமுத்து சேகரித்த தகவல்களைக் கொண்டு "கவிராஜன் கதை" என்று ஒரு கவிஞனின் வரலாறு முதன்முதலாக புதுக்கவிதையில் என்று வரவானது.

எப்படி எப்படி

எட்டயபபுரத்தில்

அந்த தாய்க்கு மட்டும்

நெருப்பைச் சுமந்த

கருப்பை

என்று கவிதை வரலாறு சொன்னார் வைரமுத்து .

ஞான ராஜசேகரன் பாரதியாய் நடிக்க  கமலை அணுகியதாகவும்,அவர் கோடி கேட்டதாகவும் ஒரு கிசுகிசு வேறு..

இன்னும் பலரின் முயற்சிகள்  அதை வேக்காட்டோடும், சசிக்க முடியாமலும், மீசை, முண்டாசு கொண்டவனெல்லாம் பாரதி என்பது போலவும், தொலைக்காட்சி கொல்லல்கள்வேறு,டாக்குமெண்டரி சூத்திரம் தெரியாமலேயே டாக்குமெண்டரி பாரதிகள்.. இவர்கள் டிஸ்கவரி செனலில் "புரோப்பைல்" எனவரும் வாழ்க்கை வரலாறுகளை பார்க்கவும்,கற்கவும் வேண்டும்.

பாரதி படம் இதோ,இதோ முடிந்தே விட்டது, என்கிற அறிவிப்புகள்,தியேட்டர்களில் பாரதி...

பாரதி பாடல் கேசட்டை வாங்கி அந்த இரவின் நடுச்சாமத்தில், எட்டு மணிக்கே தூங்கி வழியத்தொடங்கும் எம் தெருவில் எதிரொலிக்க,சத்தமாய் வைத்துக் கேட்டுப் புல்லரித்தது, இன்னுமொரு அற்புதம்.

இளையயராஜா தன் முழுத்திறமையை காட்டி அந்த மகாகவியின் வரிகளை மேன்மைப்படுத்தியிருந்தார்... உயர்தர இசையமைப்பு..

தஞ்சைக்கு படம் வரவே இல்லை.பக்கத்தில் திருச்சியில் ஓடுகிறது..

சிற்றிதழாளர் சந்திப்பு நாள் திருச்சியில்,  தியேட்டர் ஊழியரை விசாரித்தேன்.. பாரதிபடம் எப்படிப் போகிறது என்று..முதல்நாள் 20 பேர்கூட இல்லை,படத்தை எடுத்துரலாம் என்று நினைக்கையில் கூட்டம் வந்தது... ஹவுஸ்புல்லாம் ஆனது என்ற போது "தமிழ்ச் சாதிக்கு ரசனை என்றும் பொசுங்கிப் போய்விட வில்லை என கர்வம் வந்தது.

உப்புமில்லாத,சப்புமில்லாத உதலாக்கரை படங்களுக்கெல்லாம் மானியம்,வரிச்சலுக்கை வழங்கும் அரசு,பாரதி படத்துக்கு வரிச்சலுகை தரவில்லை...

"பாரதி அப்படி ஒன்றும் சலுகை தந்து மலிய வேண்டியவன் இல்லை என்று அரசு உரத்து சிந்தித்திருக்கலாம்"

பாரதி படத்தைப் பார்த்து முடித்ததும் ஒரு தவிப்பு! ஒரு ஏமாற்றம் குபுக்கென மூளையில் உட்கார்ந்து கிளைவெடித்து.

பாரதியை அவ்வளவு எளிதாக உள்வாங்கி விட முடியது என்கிற உண்மையும் இடித்தது.

வெள்ளைக்காரனிடம் நாம் கற்க வேண்டிய விசயம் இருக்கிறது..

அவன் இதுமாதிரியன படங்களை எடுத்தால் அதற்காக உழைக்கும் உழைப்பு கொஞ்சறஞ்சமல்ல,அர்ப்பனித்து 10 ஆண்டுகள்,20 ஆண்டுகள் என ஆய்வு செய்து உருவாக்கி தரும் கலைப்படைப்பில் அவன் அழைப்பின் உரம் புரியும்.

பாரதி என்கிற ஒரு கவிஞனை,அவன் வாழ்வை,செய்திகளை,தீலிரத்தை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு பாரதிப்படம் முழுமையற்றதாக தெரியும். 

பாரதி அடடா என பிள்பாட்டுப் பாடும் மந்தைக் கூட்டங்களுக்கு பேஷ் பேஷ் நன்னா வந்திருக்கு எனச் சொல்ல சப்புக் கொட்ட  வைக்கும்..

இந்த இரண்டு முனைகளுக்கும் செல்லாமல் நடுவில் நின்று,அட "மோசமில்லை" என்று நாஎழுந்து சொல்லவும் செய்யும்..

அதற்குண்டான சரக்கும் பாரதி படத்தில் இருக்கிறது.

சிகரங்கள்..

1          பாரதியாக நடித்த ஷிண்டே! பாரதி பற்றி எவர் எழுதிய எழுத்திலும்,ஒரு தீ யாக திகுவென தென்படுகிற பாரதியின் அந்தத்தகிப்பைச்  சற்றும் குறையாமால் தந்திருக்கிறார். சரியான காரம்.

தன்மீது விழுந்த பாரதி பிம்பத்தை சரியாகவே பிரதிபலித்த மாக்கலை ஞனாக ஷிண்டேவை உச்சி முகர முடிகிறது.

அந்த நடை, தீட்சண்ய திராவகக் துண்டு களான அந்த விழிகள் சிறுமை கண்டு சீறும் துடிப்பு.. ஏகாந்தத்தில் பித்துவிரவிக்கிடக்க இயற்கையோடு உசாவும் அந்த லாவகம்..

"சபாஷ் பாண்டியா" என பாரதி வார்த்தைகளாலேயே பாராட்ட வேண்டும்

2 இளைய ராஜாவின் "இசை" படத்தை அதன் குறைகளை எல்லாம் துடைத்து  ஜொலிக்க வைக்கிறது.

இசையமைக்கத் தேர்ந்த பாரதியின் பாடல்கள்.. குறிப்பாக "நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே"

இந்தபாரதிபாடல் நவீன கவிதையின்

உச்சம் பாரதியின் திறமையில் வெடித்த முற்றிய வரிகள்,அதை இசைக்குள் கொண்டு வந்த இளையராஜவின் இசை உள்ளத்துக்கு எதைத் தரலாம்.. எதுவும் ஈடாகாது..

பாடுவதற்கு அவர் தேர்ந்தெடுத்த ஜேசுதாஸ்,பம்பாய் ஜெயஸ்ரீ,ராஜ் குமார்பாரதி, ஹாரீஸ் ராக வேந்தர்,மது பாலகிருஷ்ணன்,பவதாரிணி,மனோ எவரும் சோடை போகவில்லை,இலர்கள் கூட இளையராஜா "நின்னைச்சரண்" என்று அற்புதமாய் தன் குரலின் அனுபவத்தை கூவியிருக்கிறார்.

மேத்தா, புலமைப்பித்தன் பாடல்கள் பாரதி பாடல்களோடு வருவதற்கு தாங்களுக்கும் தகுதி உண்டு என்று நிரூபித்த பாடல்கள்.

 

3.         தங்கர் பச்சான் ஒரு தேர்ந்த கலைருர் என்பதற்கு பல சான்றுகள் முன்பே உண்டு இந்தப்படத்தில் தன் இலக்கிய உள்ளத்தை இயைய வைத்து பல உன்னதங்ககளை ஒளிரச் செய்திருக்கிறார். எந்தக் கோணத்தில் "பாரதி" பரிமானம் பெறும் என வியர்வை சிற்தியிருப்பது

4.         தங்ளுக்குக் செல்லுலாய்டில் கவிதை செய்திருக்கிறார். புரிசிறது. கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து உருவேற்றியிருக்கிறார்கள்,கஜேந்திரன்,ஸ்ரீ காந்த், தேவயானி, நிழல்கள் ரவி இருப்படி...

 

5.         பாடல் காட்சிகளை அமைத்த நடன இயக்குனர் மிகச் சிரமப்பட்டிருக்கிறார். பாரதி ஆடும் போது,உண்மையில் பாரதி இப்பத்தான் ஆடியிருப்பான் என்பதாக செய்து வெற்றி  சூடியிருக்கிறார். குறிப்பாய் "கேளடா மானிடவாழ்வினில் பாடல் நடன அமைப்பு" இதில் கே,, குணசேகரன் பங்கும் இருத்திருக்க வேண்டும்,அது தனித்துவ மாகத் தெரிகிறது குணசேகரனும் அந்த காட்சியில் இருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களோடு பாரதியின் அந்த ஆட்டம் பாட்டம் முழுதும் சிலிர்ப்பைத்தந்தது.

 

6.         "ராஜிவ்வின் குரல்"- பாரதியின் குரலாக ஷிண்டேயின் நடிப்புக்கு பக்க பலமாக வெகுநேர்த்தியாக வெண்கலக்குரலாக.

 

7.         இயக்குனர் என்கிற முறையில் ஞானராஜ சேகரன் தனக்கு அறிந்தவரை உழைத்திருக்கிறார். முதலில் பாரதி படல் எடுக்க துணிந்ததற்கும்,அந்த முயற்சிக்கு

தொழில்நுட்பக் கலைஞர்களை பொருத்த மாதத் தேர்வு செய்ததற்கும் அவரோடு கைகுலுக்கி முழுதாய் இல்லை என்றாலும் ஓரளவேனும் மெய்ப்பட வைத்த அவரைப் பாராட்ட வேண்டும்.

இயக்குனர் என்ற முறையில் அவருக்கு இன்னும் கூடுதல் பயிற்சி வேண்டும். அந்த முதிர்ச்சி இன்னும் படத்தில் பல இடங்களில் துருத்திக் கொண்டு தெரிகிறது,திரைக்கதை இயக்கம் என வருகையில் பள்ளதாக்குப்பக்கம் வந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

பள்ளதாக்குகள்

பாரதியை இவர்கள் காட்டமுயலும் சில இடங்கள் நம்மைச்சீற்றம் கொள்ள வைக்கின்றன.

பாரதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களில் சில திருகப்பட்டு சொல்லப்படுகிறது.

இத்தகைய திருதல்கள் டாக்கு மெண்டரிக்குத் தேவையில்லை படைப்புக்கு அவசியம்தான் என்றாலும் அப்படி திருகும் போது கவனம் வேண்டும்,அது தவறானவற்றை சுட்டிவுடக் கூடாது என சொல்வது நம் கடமை..

 

அக்கிரகாரத்து மாமி ஒருத்தியை,அவள் புருஷன் இருக்கையிலேயே ஒரு பணக்காரன் தன் வைப்பாக வைத்துக் கொள்கிறான்..

தன் வீட்டுக்கு வந்த பாரதியிடம்,அவளைச் சிற்றுண்டி பரிமாறச் சொல்லி,இவ நம்ம பராமரிப்பில் தான் என கண்சிமிட்டி கள்ளம் வேறு,

ஏன் பாரதிஉன் பொண்ணுக்கு என் பையன கல்யாணம் செஞ்சுதாயேன் என வக்கரிக்க...

பாரதி உங்க பையனுக்கு ஒரு ஆதிதிராவிடப் பெண்ணை கட்டி வைக்கிறது எனச் சொல்ல அந்த பணக்காரன் பாரதியின் நெஞ்சுக்கு நேராக ஆபேசமாய் துப்பாக்கி நீட்டுகிறான்..

இந்தக் காட்சிக்கு என்ன ஆதாரம் இந்த குரூரத்தில் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர்..

அக்கிரஹாரத்து மாமிகள் பணக்காரர்களுக்கு முந்தி விரிப்பார்கள் அதற்கு கணவன்மார்க்கள் துணைநிற்பார்கள் என்றார்.. சீ..சீ என்று வருகிறது.. இந்த மாதிரியான மலினமான காட்சி பாரதி படத்தை அசிங்கத்தில்

அதிதிராவிடர் என்கிற வார்த்தையை எல்லாம் பாரதி உச்சரித்திருக்க மாட்டான். பாரதியின் சீடன் அவரால் பூணூல் போட்டுவிடப்பட்ட  கனகலிங்கம் தன்நூலில் எழுதுகிறார்..

"சுவாமி!என் சகோதரர் ஒருவர்,எங்கள் சமுகத்தாரைத் திராவிடர் என்று ஆழைப்பதா?ஆதித்திராவிடர் என்று அழைப்பதா?என்று கேட்டுவரச் சொன்னார்.எது தங்களுக்கு நியாயமாகவும்,பொருத்தமாகவும் தோன்றுகிறது?என்று கேட்டேன். உடனே பாரதியார் அடேய் எனக்கு ஜாதியும் கிடையாது, சுண்டைக்காயும் கிடையாது! என்னிடம் அதிதிராவிடர் அநாதித்திராவிடர் என்ற விவாதத்தை ஏன் கொண்டு வந்தாய்? என்று வேடிக்கையாகப் பதிலளித்தார்.

நான் திருப்தி அடைய வில்லை ஏதாவது ஒரு பதில் தங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு போனால் தான் சகோதரர் சுந்தரமூர்த்தி திருப்தியடைவார் என்று பிடிவாதம் செய்தேன். அப்போது அவர் பேரில் என்ன இருக்கிறது?எப்படி அழைத்துக் கொண்டால் என்ன? பாரதியாருக்கு ஜாதி என்ற சொல்லே பிடிக்காது,திராவிடர் ஆதிதிராவிடர் ஆரியர் என்ற வேற்றுமையும்  பிடிக்காது. எல்லா மக்களும் அவருக்குச் சமம். என்று உன் சகோதரனிடம் வற்றுத்திச் சொல்லு என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.

அப்படிப்பட்ட பாரதியா உன் பையனுக்கு ஆதிதிராவிடர் பெண் பார் என சொல்லியிருப்பார்.

செல்லம்மாவுக்கும்,பாரதிக்கும் இருந்த பிணக்கை படம் பாதி சொல்கிறது.ஏன் அதை மையக்கருத்தாகக் கூட எடுத்துக் கொண்டுவிட்டது..

குடும்பவாழ்வின் வன்முறையான இதைதான் நான் குறிப்பிட்டேன் உடனே சுகனுக்கு அலர் மனைவியோடு பிரச்சினை எனப் பேசிய பலரை நான் அறிவேன்,புரிந்து கொண்ட சிலரை நான் மதித்தேன்.

நம்மைப் போன்ற நெகிழ்வு ஆசாமிகளுக்கே வீட்டில் அபாயம் இருக்கையில்,பாரதி போன்ற பழமையைப் புரட்டி அடித்தவர்களின் கதிபற்றி கேட்கவா வேண்டும்.

பாரதி மீது செல்லம்மாவுக்கு பெருமிதம் இருக்கிறது,மதிப்பு இருக்கிறது.. "நண்பர்களுக்கு உணவு கொண்டுவா என்றபோது வேத்துசாதிக்கார மனுஷாளா இருப்பா போலிருக்கே என்ற மனைவியை அறைகிறார் பாரதி" நண்பர்கள் சச்சரவு கேட்டு போய் விட்டாதாகக் காட்சி வருகிறது படத்தில்.

ஆனால் கனகலிங்கம் போன்றவர்கள்,பாரதிவீட்டில் தோசையை ருசித்து சாப்பிட்ட சம்பலங்களும்,செல்லமாவை பழக்கப்படுத்திவிட்டா பாரதியின் அருமைப்பற்றியும் காட்சிகள் இல்லை..

பாரதிக்கும் செல்லம்மாவுக்கும் இடையில் பெரிய  சுவர் இருந்ததாகவே ஒரு பிரமையை இயக்குனர் காட்டியிருப்பதாப்படுகிறது,இது இயக்குனரின் போதாமைதான்,முரண்கள் வரும் ஆனால் அது ஞானராஜ சேகரன் காட்டியிருக்கும் விதத்தில்  இல்லை!

 

இதோ ஒரு உதாரணம்.

வைரமுத்து கடவுள் நம்பிக்கை இல்லாதார். ஆனால் அவர் மனைவி ஒரு பேட்டியில் சொன்னார், அவர் சக்திபற்றி ஒரு பாடல் எழுதிய தால்தான் பலபரிசுகள் வந்தது என்று...

இன்னொரு உதாரணம்

என் மனைவிக்கும் எனக்கும் வரும் பலதகறாறுகளை வெளியில் இருந்து கேட்பவர்கள், இரண்டு பேருக்கும் டேர்ம்ஸ் சரியில்லை என கணக்கு போடக்கூடும் அது அப்படி இல்லை,இது வேறு விசயம்,ஞானராஜ சேகரனுக்கு அது புரிபடவில்லை..

7வயது சிறுமி,திருமணநாள் அன்று ஊஞ்சல் பாடலில் பாரதி பாடும் பாடல் கீர்த்தனையாக இல்லை என குமுறி  எனக்கு இப்படி ஒரு புருஷன் ஏன் வரணும் எனக் கதறுவதாகக் காட்டும் காட்சிசகிக்க முடியவில்லை...

 

 

பாரதி தன் மகள்களை எல்லோரிடமும் எப்படிப் பழக்கப்படுத்தினார் என்பதெல்லாம் வரலாறு இன்று கூட சீர்த்திருத்தம் பேசுவார் செய்ய தவறும் வரலறு அதெல்லாம் படத்தில் இல்லை

பாரதியின் கைவாளாய் புதுவையில் இருந்த பாரதிதாசனை, டீக்கடை நண்பன் போலவும், வாங்க கூத்து பார்க்கயாம் எனக்கூப்பிடுவது போலவும் டம்மியாக்கியிருப்பது வேதனை தருகிறது ஒரு காட்சியாய் இருந்தாலும் அழுத்தமாய்வைத்திருக்க வேண்டும்.

பாரதி,காந்தியைச் சந்தித்த அந்தக் காட்சியை உலகுக்கும் வெளிச்சம் போட்டவர் வரா அவர் பற்றிய அழுத்தமான பதிவும் இல்லை.

பாரதியின் இறுதிக்காட்சி பற்றிய விவரிப்பு படத்தில் நமக்கு வேகத்தை கோபத்தை வரவழைக்கிறது.

பாரதியின் இறுதி யாத்திரையில் கூட்டம் இல்லையே,அவனை யாரும் அங்கிகரிக்க வில்லையே என்கிற அபத்த கண்டுப்பிடிப்பு.

பாரதியின் இருதியாத்திரை ஏன் இப்படி கூட்டமில்லாது இருந்தது என்பதை மிக ஆழமாக பார்க்க வேண்டும்.

பாரதி நள்ளிரவில்  இறக்கிறான் பார்ப்பன சமூகத்தில் பிணத்தை வீட்டில் மணிக்கணக்கில்,நாட்கணக்கில்  வைத்திருக்க மாட்டர்கள்

கூட்டம்கூட்டி,மேளதாளம் வைத்து ஆர்ப்பாட்டம் படுத்தவும் மாட்டர்கள்..

உடனே தகனம் செய்து ஈமக்கிரியைகள் செய்வதில் குறிப்பாய் இருப்பார்கள்..

இன்றும் கூட இதைப்பார்க்கலாம் உயர்அதிகாரி பிராமணராக இருப்பார். அவர் அம்மாவோ, அப்பாவோ  செத்துவிட்டால்,ஒற்றைப்பிராமணனாக கொள்ளிக்கட்டை தூக்கி முன் செல்ல நாலு பேர் பிணவண்டி

தள்ளி தகனத்துக்கு செல்வதைப் பார்க்கலாம்.

 

ஊடக வசதியில்லாத அந்தக்காலத்தில் பாரதி இறந்ததை பலர் அறிய வாய்ப்பே இல்லை.

பாரதியின் சீடன்  கனகலிங்கம் கூட அன்று சென்னையில் தானிருந்திருக்கிறார் மாலை சுதேசமித்திரனை பேப்பர் கருப்பையன் வாசக சாலையில் போட,அதில் பாரதியார் மறைவு செய்தி கொட்டை எழுத்தில் இருந்ததாம், தகனம் செய்யப்பட்டு விட்டதாகவும் போட்டிருந்ததாம்

பாரதிதான் வாழும் காலத்திலேயே அங்கிகரிக்கப்பட்டவர்.. இல்லை யென்றால் அவரைப் பத்திரிகை ஆசிரியராக சமூகம் அங்கிகரித்திருக்காது,தனக்கென்று ஒரு பெரிய்ய ரசிகர் பட்டாளமே கொண்டிருந்தவர்..

 அப்படியிருக்க அவர் இறுதியாத்திரை ஏதோ அவலமாய் நடந்ததாக சித்தரிப்பது சரியில்லை .

இறுதியாத்திரையில் கலந்து கொண்டவர்களும் சாமனியப்பட்டவர்கள் அல்ல,அன்றைய பிரபலங்கள் செல்வாக்கு மிக்க மனிதர்கள் சத்தியமூர்த்தி,சர்க்கரை செட்டியார்,சிங்கராவேலர்,ஆரியா போன்றவர்கள்..

விசயம் எட்டதால் தான் கூட்டம் இல்லையே  தவிர பாரதியை ஒதுக்கி  அல்ல இதுச் சமூகத்தை அவமானப்படுத்தும் குற்றச்சாட்டு...

படத்தில் முடிவான "பாரதி போன்றோரை பின்பற்றாவிட்டாலும் அவரைப் போன்றோர்களை அங்கிகரியுங்கள்"  என்ற வரிகள் பாரதியை புரிந்துக் கொண்ட லட்சணத்தை நமக்குப் புரிய வைக்கிறது.

பாரதியைப் பின்  பற்றிய எண்ணற்ற அக்கினிக்குஞ்சுகள் இங்கு அதிகம்.

பாரதி என்கிற மந்திரச் சொல்லே எங்களை உற்சாகப் படுத்தியும்,அவனது வாழ்க்கையை படித்தே இலட்சியம் வளர்த்தோம் என்பதும் தான் உண்மை.

அறிவிலே தெளிவு

நெஞ்சிலே உறுதி

கொண்டு பாரதி படை ஒன்று தமிழகத்தில் இருகிறது

என்னை போன்றோரின் முதுகெலும்புக்கு மெருகு போட்டவன் பாரதி,எதிலும் சமரசம் செய்,அட்ஜஸ் செய்யப்பா" என்கிற வணிக வாழ்வின் வேகத்தை எரித்து ரெளத்தரம் பழகவும் ,சிறுமைக் கண்டு பொங்கவும் வைத்தவன் பாரதி...

இதை இங்கு பதிவு செய்து கடமை ,பட முடிவில் ஞானராஜ சேகரரின் இந்த பாரதி போன்றோரை அங்கிகரியுங்கள் என்கிற பிதற்றல்கள் நம்மை நகைக்க வைக்கிறது.

பாரதி போன்றவர்கள்தான் புதுப்புது விசயங்களை புதுமைகளைத் தோற்றுவிப்பார்கள்,அதற்கான அங்கீகாரம் பெற்று தரும் மூல ஜோதிகள்.

ஞானராஜ சேகரன் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாரதியின் வரலாற்றை இன்னும் துல்லியமாக படமாக்கும் கடமை இருக்கிறது.அதை நாம் தரவேண்டும்,தருவோம்....... 

 

 
Related News
 • பெரியார் - செல்லுலாய்டில்...

 • பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9

 • பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 (தொடர்ச்சி....)

 • தோனி

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World