Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueதோனி
 

இன்றையச் சூழலில் கல்வி என்பது வரமா சாபமா? எனும் முரணாடலை

வாழ்வியல் அனுபவமாய்ச் சமூகப் பொறுப்புடன் முன்வைக்கும் திரைப்படம்!

                                                                                     - மு.ராமசாமி

முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்குமுன்,  ”விழிகள்இதழில், “தமிழிலக்கியம் தவிர்த்த பட்டப்படிப்பு மாணவன், என்ன தேவைக்காகத்தாள்-1, தமிழ் இலக்கியத்தைப் படிக்க வேண்டும்? அதற்குப் பதில், அவன் பயிலுகிற துறையறிவைத் தமிழுக்குப் பெயர்க்கிற மொழியறிவை - மொழியாளுமையை - அவனுக்கு ஊட்டுகிற வகையில்  பாடங்களை அமைப்பதுதானே சரியாயிருக்கும்.....” எனும் பொருளில், “மதுரை பாலத்து ஜோசியன்எனும் புனைப்பெயரில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். 37 ஆண்டுகள் கல்விப்பணியில் நான் ஈடுபட்டிருந்து, பணிஓய்வு பெறுகிற இப்பொழுது வரையும் அந்தக் கருத்தில் எந்த மாற்றமும்  என்னிடம் நிகழ்ந்திருக்கவில்லை; கல்வித்துறையிலும்  இதன்மேல் இதுவரையும் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. பொதுவில் கல்வி என்பது, மாணவர் விரும்பும் அறிவுத் தேட்டம் சார்ந்ததாய்-ஆர்வமுடன் பங்கேற்கும் மகிழ்ச்சிக்குரியதாய் இல்லாமல், ஆசிரியர் மற்றும் நிறுவனங்களின் பொருளியல் ஊட்டம் சார்ந்ததாய்-தேர்வு எனும் தலையெழுத்தைத் தாண்டும் கவலைக்குரியதாய் மட்டுமே அமைந்திருப்பதுதான் நம் கல்வியிலுள்ள மிகப் பெரிய குறை! முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் கோபப்பட்ட மாதிரியேதான், அல்லது அதைவிடக் கூடுதலாகவே, இப்போதைய மாணவரும், அல்லது பணிபுரிகிற ஆசிரியரும்கூட,  பாடத்திட்டத்தின்மேல், இன்றையக் கல்விமுறையின்மேல், நிறுவனங்களின் மேல், கடை விரித்திருக்கிற கல்வியின்மேல் என்று அடுக்கடுக்காய்க் கோபப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். கோபப்பட்ட நேற்றைய மாணவன்தான் இன்றைய ஆசிரியராய், மேலதிகாரியாய், அரசியல்வாதியாய், சிலவேளைகளில் கல்வித் தந்தையாய், துணைவேந்தராய், இணைவேந்தராய் என்று  சமூக அமைப்பிற்கு அனுசரணையான அடுத்தடுத்த வேடங்களைக் கட்டிக் கொண்டு, கட்டிக் கொண்ட வேடத்தின் போக்கில் அடுத்தடுத்தக் கோபதாபங்களுக்கு நகர்ந்து போய்க் கொண்டிருப்பதால்,  சமூகத்தில் இறுகிப் போயிருக்கிற குத்துக்கல் வரிசையை யாராலும் அசைத்துக்கூடப் பார்க்க முயலவில்லை. தனிப்பட்ட நபர்களால் ஆகக்கூடியது மட்டுமானதில்லை இது என்பது புரிந்து கொள்ளப்படாமலே, நாமும் தொடர்ந்து இப்படியே நபர்களை-நிறுவன்ங்களை மட்டுமே குறைசொல்லிப் பேசிக்கொண்டே இருக்கிறோம். அவர்களைப் பொருத்தவரை, நேற்றைய கோபங்கள் இன்றையக் காற்றில் கண்ணாமூச்சி ஆடப் போய்விட, இன்றைய கோபங்களின் காட்சிகளும் தேவைகளும், தான் வாழும் தேவைக்கேற்ப இன்றைய வாழ்வியல் சார்ந்து வேறொன்றாய் மாறிப் போய்விட்டிருகின்றன. சேர்ந்த இடத்தின் அச்சாய்ச் சுழலத் தொடங்கி விடுவதே இவர்கள் எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கிறது. “எறும்பு ஊறக் கல்லும் தேயும்என்பதெல்லாம்வாந்திமட்டுமே எடுக்கக் கற்றுக் கொடுக்கும்கள்ளிப்பால் கல்விக்குத் தேவையே இல்லைபோலும்! தொண்டை கிழியப் பேசிக் கொண்டிருப்பதை விடவும், எழுதிக் கொண்டிருப்பதை விடவும் மக்களின் மனசுக்குள் நெருக்கமாய்ப் போய்ச் சேர, திரைப்படம் ஒரு நல்ல ஊடகம். ஆயின் நடைமுறைக் கல்விமுறையைக் கேள்விக்கு உட்படுத்தும் திரைப்படங்களாய் என் பர்வையில் விழுந்த, நடராஜனின்ஆயிஷா”, ஞானராஜசேகரனின்ஒரு கண் ஒரு பார்வை”, ரமணியின் “1234” குறும்படங்கள்  தவிர்த்து, தமிழ்க் கல்விச் சூழலில்  மருத்துவக் கல்விமுறையை நக்கல் செய்து வந்த படமாக, “வசூல்ராஜா எம்பிபிஎஸ்” (டாக்டர் முன்னாபாய்), அதேபோல் பொறியியல் கல்விமுறையை நக்கல் செய்து வந்த படமாகநண்பன்” (3 இடியட்ஸ்) ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே, அவையும்  இந்தியிலிருந்து தமிழுக்கு வந்திருப்பதாய்த் தெரிகின்றன. “பசங்ககல்விமுறையைக் கேள்விக்குட்படுத்தவில்லை. அதன் பிரச்சினை வேறொன்றாய் இருந்தது. “நோட்ஸ்விற்கிற பேராசிரியர் காட்டப்பட்டபோதும், “கல்லூரிமுன்வைத்த பிரச்சினையும் வேறொன்றாய் இருந்தது. “வாகை சூட வாதிரைப்படம், “கிராமசேவாதிட்ட்த்தின் கீழ் வரும் எழுத்தறிவுக் கல்வியைப் பற்றிப் பேசுகிறது. கண் திறந்ததுபடம் கல்வியின் அவசியம் பற்றிப் பேசிய படமென்று ஒரு மெல்லிய ஞாபகம்! “மாணவன்”, “மாணவன் நினைத்தால்”, கல்லூரி வாசல், “நூற்றுக்கு நூறுஎல்லாவற்றிலுமே காதல்தான் பிரச்சினையாய் இருந்திருக்கிறது. ரிக்ஷா ஓட்டும் எம்ஜிஆர் பேசிய இங்கிலீஷில், உடனடியாக மயங்கிக் கதாநாயகி காதலில் நெளிவாளே அப்படித்தான் காதல் களத்திற்கான வெறும் பின்புலமாய்ப் பெரும்பான்மைப் படங்களில் கல்லூரி இருந்து வந்திருக்கிறது அவ்வளவே! பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் ராதாமோகன் நெறியாளுகையில் வந்த, டூயட் மூவிஸின்அபியும் நானும்திரைப்படத்திலும் எல்.கே.ஜி. சேர்க்கைக்கான  பெற்றோரின் பீதிகளை, அபியின் அப்பாவாய் வந்து  நக்கலாக்கியிருப்பார் பிரகாஷ்ராஜ்!. விழுந்து விழுந்து சிரிக்க வைத்த அவரே, “தோனிதிரைப்படத்தில், இன்றையக் கல்விமுறையின் குணக்கேடுகளைக் கதையின் நிகழ்வாயமைத்து, அதனின்றும் விலகிச் சென்றுவிடாமல், காத்திரமாக்கி நம்மைச் சிந்திக்க வைத்திருக்கிறார். காட்சிகள், உரையாடல்கள், கதைப்பாத்திரங்கள் எல்லாம் ஒன்று கல்விமுறையை விமர்சிக்கிற சூழலுக்குள் பயணிக்கின்றன; அல்லது கிரிக்கெட்டை இப்படியும் அப்படியுமாய் விமர்சிக்கின்றன; அல்லது நடுத்தர வர்க்க அங்கலாய்ப்பை ஏற்றி இறக்கி வெளிப்படுத்துகின்றன; அல்லது இவை அத்தனைக்குமான சாட்சியாய் நின்று, கிரியா ஊக்கியாய்ப் பிரச்சனையின் வீரியத்தை வேகப்படுத்துகின்றன. இதைத் தவிர்த்துக் காதல், கத்திரிக்காய் என்பதற்குள் எல்லாம் போய் முட்டி மோதித் திரும்பாமல், சேணம் கட்டிய குதிரையாக, எடுத்துக் கொண்ட பிரச்சினையான கல்விமுறையுடன் நேர் பாய்ச்சலில் மோதும் அழகு போற்றப்பட வேண்டியதாயிருக்கிறது. இந்தச் சூழலில்தான், நடப்புக் கல்விமுறையின்மேல் கோபம் கொள்ளவைக்கும்தோனியை மிக முக்கியமான திரைப்படமாகக் கருதவேண்டி இருக்கிறது.

மாணவரின் தேவைக்கேற்றதாகச் சுய சிந்தனையை வளர்க்கும்படி பாடத்திட்டங்கள் அமையாமல், ஆசிரியர்கள் விளைவிக்க விரும்புகிறபடி, பதிப்பகத்தார் பதிப்பிக்கிற  நூலின் விற்பனைக்கேதுவாகப் பாடத்திட்டத்தைத் தகவமைத்துக் கொள்கிற கொடுவினைதான் இங்கு இதுவரையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. “ஆயிஷாவின் கேள்விகளாய், விடைகள் மறுக்கப்பட்டுக் காற்றுக்குள் கரைந்துபோன கேள்விகள் இங்கு ஏராளம்! வகுப்பறையில் மாணவரின் கேள்விக்குத் தடைபோட்டு, தேர்வில் ஆசிரியரின் கேள்விக்கு மட்டும் மாணவரிடம் விடை கேட்கும் விசித்திரக் கல்விதான் இங்கு வழக்கிலிருக்கிறது. “பிள்ளைங்களுக்குக் குடுக்றதுக்கு அப்பா குடுத்த சொத்தா சார் இருக்குது, படிப்புதான.... நல்ல ஸ்கூல் வேண்டாமா?” என்று பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்தால், “ஜாடிக்கு ஏத்த மூடியாய்த் தொடக்கக் கல்வியிலிருந்து உயர்கல்விவரை அத்தனையும் வியாபாரிகளின் கையில்போய் முடங்கிக் கிடக்கிறது; சமூகத்தின் சர்வ வியாபகத்திற்குள்ளும் வியாபாரம் வினையம் காட்டிக் கொண்டிருக்கிறது. சமூகம் ஊட்டி வளர்த்திருக்கிற, தனியார்மயம், தாராளமயம் இதைத்தான் செய்யும். அதன்காரணமாய், வியாபாரம் பார்க்கும் பொதுப்பரப்பாய்க் கல்வித்துறையும் ஆகிப் போயிருக்கிறது.  கல்விமுறையின் இத்தகைய இறுகிய வியாபாரத் தன்மைக்குக் காரணமாய்த் தான் கருதும் அத்தனைப் பேரையும் நேரிடையாக நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல், உணர்வுபூர்வமான ஒரு கதைப்பாத்திரத்தின்வழி, அதன் அனுபவ வாதங்களை அறிவுபூர்வமாய் நாம் யோசிக்க முன்சால் ஓட்டி, அசாதாரணப் படமாக்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்! உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவை ஊட்டி வளர்த்ததால், அதன் ஏவலாளாய், பணமுள்ளவர்கள் கைப்புள்ளையாய், மனசில் கரியைப் பூசிக் கிடக்கிற இன்றையக் கல்விமுறையின்- அதன் வளர்ப்புப் பிள்ளைகளான கல்வி நிறுவனம், கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடத்திட்டம், கலங்கி நிற்கும் பெற்றோர், மேலும் கீழுமாய்ப் பெரிதும் பிளவுபட்டு, வெந்ததைத் தின்று விதியை நினைத்து வாழ்க்கையைக் கடத்தும் சமூகம் என்று-அனைத்துப் பரப்பின் மீதான நெடிய விமர்சனங்களையும், “விளக்குமாறெடுத்துச் சாத்துகிற தொனியில்திரைமொழி விவாதங்களாய்ப் படம் முழுக்க விரித்திருக்கிற துணிச்சலுக்காகவே, இதன் மூலவித்து மராட்டியாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தபோதிலும் (விருதுக்கு வேண்டுமானால் இந்தவகை அடையாளங்கள் தேவைப்படலாம். ஆனால், விவாதத்தைக் கிளப்பும் விஷய ஞானத்துக்கு?), “தோனி”, தமிழ் நடுத்தரவர்க்க வாழ்க்கைக்கு  மிகவும் நெருக்கமாயிருக்கிறது என்பதனாலேயே இதைத் தமிழின் மிக முக்கியப் படமென்று சொல்லத் தோன்றுகிறது.

பிரகாஷ்ராஜின் நெறியாளுகையில் வந்திருக்கிற முதல் படம் இது. அனந்தநாக்-சங்கர்நாக் நாடகக்குழுவில் பெற்ற அடிப்படைப் பயிற்சியும், பாலச்சந்தர் பள்ளியில் பெற்ற அடுத்தடுத்தப் பயிற்சியும், “அழகிய தீயே”, “வெள்ளித்திரை”, “மொழி”, “அபியும் நானும்”, “இனிது இனிதுஎன்று சமூகத்தை இலக்கியமாய் நேசிக்கிற திரைப்படங்களையே தமிழ்ச் சமூகத்திற்குத் தந்திருக்கிற டூயட் மூவிஸ் அனுபவங்களும், சமூகப் பொறுப்புமிக்கப் படத் தயாரிப்பாளருக்குரிய ஆதங்கமும், நடிகர் பிரகஷ்ராஜுக்குள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் உண்மைக் கலைஞனும் ஒருசேர இதன் உருவாக்கத்திற்குத் துணை நின்றிருக்கின்றனர். திரைப்படம் பார்க்க உட்கார்ந்தால், திரைப்படத்தின் தொடக்கத்தில்தோனிஎன்கிற பெயரும் அதன் காட்சிப் படிமமானஸ்டெம்ஸ்உம் கிரிக்கெட் பந்தும் காட்டப்பட, அதனோடு இணைந்துவரும் ஒலியாக மட்டை அடியும் மக்களின் ஆரவாரமும் வரும்போது, “கிரிக்கெட்ஆட்டத்தின் பெருமை பேசும் படம் என்கிற சிந்தனை, நம் மண்டையின் மேற்பரப்பில் மெல்லிதாய்ப் படருகிறது. சுவரொட்டிகளின் வழிகாட்டலும் அவ்விதமேதான் படம் பார்க்க நம் எல்லோரையும் அழைத்து வந்திருக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆயின் அதைத்தொடர்ந்து, கரும்பலகையில் உள்ள கணிதக் குறியீடுகளின் மேல், படத்தில் பங்காற்றியோர் பெயர்கள் எழுத்தாய்ப் படரும்போதும், அதன் நடுவே, ஒவ்வொரு முறையும் +x-y என்ற குறியீடும் 17x8= என்ற வாய்ப்பாடும் தொடர்ந்து பளிச்சிடும் போதும், படம் கல்வியைப் பற்றியது என்பதும் கிரிக்கெட்டுக்கும் கணக்கிற்குமான மோதல்தான் படமாயிருக்கும் என்பதும் படம் பார்க்கும் நம் மண்டைச் சுரப்பிக்குள் மெதுவே சடுகுடு ஆடத் தொடங்குகின்றன. படம் எதைப்பற்றிப் பேசப் போகிறது என்பது விடிகாலைச் சூரியனாய் மெதுவே நம் மனசுக்குள்ளிருந்து முகம் காட்டிச் சரியாகவே வெளிக்கிளம்பத் தொடங்குகிறது. ஆனால், தொடங்கிய வேகத்திலேயே, எப்படிப் பேசப் போகிறது என்பதைத் திடீர்த் திருப்பமாய்த் தொடக்கத்துக் காட்சி இன்னொரு விதமாய்த் திசைதிருப்பி, நம்மைக்  கண்ணாமூச்சி ஆட வைத்து விடுகின்:றது.  காட்சி இதுதான்:-

இரவு நேரம்! “சோவென்று மழை!  மங்கலினின்று படம் தெளிவாகும்போது, விளக்கை எரியவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிற ஒரு காவல் நிலையத்தின்முன், காவல்துறை ஊர்தி ஒன்று  ஒளியைச் சிந்தியபடி வந்து நிற்கிறது. ஊர்திக்குள்ளிருந்து காவல்துறை அதிகாரி முதலில் இறங்கி, “இழுத்திட்டுவா அவனெஎன்று காவல்நிலையத்திற்குள் நடக்கிறார்.  பின்னாலிருந்து இறங்கும் காவலர் ஒருவர், கண்கள் குத்திட்டு முகம் கறுத்துக் கிடக்கிற இன்னொருவரின் (பிரகாஷ்ராஜ்) சட்டைக் காலரைப் பிடித்தபடி வெளியே இழுத்துக்  (கண்கள் நிலைகுத்தி முகம் இறுகிப்போய்ப் பிரமை பிடித்தவராய் நடைப்பிணமாய்த் தெரிகிற பிரகாஷ்ராஜ், காரின் கதவைப் போகிற போக்கில் சாத்தாமல் போயிருக்கலாம் என்று மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது. நம்மை அறியாமலேகூட இப்படி நிகழ்ந்து விடுகிறது) காவல் நிலையத்திற்குள் கொண்டு செல்கிறார். ஊரே, பெய்து கொண்டிருக்கும் மழையில் குளிர்ந்து கிடக்கிறது. ஆனால் இறங்கிய ஒவ்வொருவரின் மனசும் கொதித்துக் கிடப்பது அவர்களின் நகர்விலிருந்தும் வாயிலிருந்து குதிக்கும் மொழியினின்றும் தெரிகிறது. “கண்கள் குத்திட்டு, முகம் கறுத்துக் கிடக்கிற”  பிரகாஷ்ராஜ் யார்?...... “தொரெ பேச மாட்டாராம்.....பேரு சுப்பிரமணியம்....நம்ம ஏரியாதான்......சாகுற மாதிரி அடிச்சிருக்கான்...சாவு கிராக்கி......நான் சொல்றென்...எழுதிக்க....உள்ளெ தள்ளுங்கையா அவனெஎன்பதாய்க் காவல்துறை அதிகாரிதான் அவரைப் பற்றி ஏக ஒருமையில் நமக்கு அறிமுகம் சொல்கிறார். அவரைக் கழுத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ளிக் கதவைப் பூட்டிய காவலர், “என்னசார் இப்படி இருக்கானுங்க...இவனுங்களைச் சும்மா விடக்கூடாதுசார்என்றே அதற்குத் தாளம் போடுகிறார்.  கிரிக்கெட், கணக்குப்பாடம் இரண்டையும் தாண்டி இதென்னகுற்றப் பின்னணிசார்ந்தகிரைம்படமா என்று புரியாமல் பிரகாஷ்ராஜ் மாதிரியே நாமும் விழித்தால், பிரகாஷ்ராஜ் என்கிற சுப்பிரமணியத்தின் மனசு, “நேத்துவரைக்கும் என்வாழ்க்கை இப்படி இல்லை...”. என்பதாய்த் தனக்குள் பின்னோக்கிப் பேசுகிறது! “கார்த்திக், “காவேரிஎன்று அலறும் குரலினூடே, கைவிட்டு நழுவி ஓடுகிற பாத்திரமாகத் தொடரும் பின்னோக்கிய ஒலியில், மிகப்பெரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தை மேலிருந்து காட்டியபடியே, ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளையும் அதன் தெருக்களையும் காட்டத் தொடங்கி, சுப்பிரமணியத்தின் வீட்டிற்குள் நம்மைக் கைபிடித்துக் கூட்டிப்போகத் தொடங்குகிறதுகேமரா”!.

கதைப்பாத்திரங்களை ஒவ்வொருவராக நம்மிடம் அறிமுகம் செய்விக்கிற திரைக்கதையாசிரியரின் அழகும் அவர்கள் ஒவ்வொருவரின் மன இயல்புகளை அவர்கள் வடித்துக் கொட்டும் வார்த்தைகளிலிருந்து அள்ளிச் சரம் தொடுக்கும் வசனகர்த்தாவின் அருமையும் நம்மை மலைக்க வைக்கின்றன.  சுப்பிரமணியம் பார்வையில் பின்னோக்கிப் பயணிக்கிற கதையில், அவரின் ஒவ்வொருநாளும், பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி, வழக்கமாய்க் குடும்பத்தில், அலுவலகத்தில், குடியிருப்போர் சங்கக் கச்சேரியில் என்று பொழுதுகள் அவருக்கு எவ்விதம் கழிகின்றன; சந்திக்கிற கதைப்பாத்திரங்கள் யார், எவர் என்பதை அழகிய காட்சிகளாய்க் கல்லின் சித்திரமாய் அடுக்கிக் காட்டுகிறார். கந்துவட்டிக்கான்பாய்தவிர்த்து, சுப்பிரமணியத்துடன்  அன்றாட உறவிலிருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களும் நமக்குக் காட்சிவடிவாய், சுப்பிரமணியத்தின் குணச்சித்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருநாள் நிகழ்விலேயே நமக்கு அறிமுகப்பட்டு விடுகின்றனர். “காவேரிஎன்று அழைத்தபடியே நகரும் கேமராவில், வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கிற ஸ்கூட்டர், வீட்டினுள் கிரிக்கெட் வீரர்கள் படங்களால் அலங்கரிக்கப் பெற்றிருக்கிற ஒரு வானொலிப் பெட்டி, பூஜைக்குரிய சாமிப்படங்களால் நிரவியிருக்கும் ஒரு அடுக்குமாரி, மேஜையில் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற ஊறுகாய்ப் பாட்டில்கள், ஜாடிகள், அதைத் தொடர்ந்து யூனிபார்ம் உடுத்தியிருக்கிற- புத்தகங்களைப் பையில் பொறுப்பாய் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிற- பெண்காவேரிஎன்று ஒவ்வொரு அறையாகக் கேமரா நம் கைப்பிடித்துக் கூட்டிப் போகிறது. அதைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள் படங்கள் ஒட்டியிருக்கிற குளியல் அறைக்குள்ளிருந்து  வரும் கார்த்திக்கின் கிரிக்கெட் காமெண்டரி, அதைத் தொடர்ந்து அடுத்த அறைக்குள் கேமரா நகர, அடுப்பங்கரையில் இட்லி உப்புமா தயாரித்துக் கொண்டிருக்கிற பிரகாஷ்ராஜ் என்று அந்த வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களின் துறுதுறுக் காலையின் பரபரப்பைக் காட்டுகிறது கேமரா.  ”இன்னும் குளிக்கிறான்என்று சாப்பிடத் தயாராகி நிற்கும் காவேரிக்குத் திருநீறு பூசியபடியே, “பாத்தியாடி அவனெ, எழுந்ததே லேட்டு. ஒருமணி நேரமா பாத்ரூமுக்குள்ள இருக்கான்...தடிமாடு...காலேல எழுந்ததுலயிருந்து தூங்கப் போறது வரைக்கும் கிரிக்கெட் ....கிரிக்கெட்....இப்படியொரு வாலப் பெத்துக் குடுத்திட்டு நீ மட்டும் சிரிச்சுகிட்டே இருடிஎன்று உயரத்தில் படமாகி நிறுத்தப்பட்டிருக்கும் தன் மனைவியிடம் செல்லமாய்ப் பிணாத்தியபடி, தன் பையன் கார்த்திக்குக்கு, “வரலேன்னா டிபன் கட்என்று செல்லக் கண்டிப்பு காட்டி, “வெரைட்டியாச் சாப்பிடுறதுன்னா அம்பானி வீட்லதான் பொறக்கணும்என்றுஇட்லி உப்புமாவில்ஃப்ரைடு இட்லியின் குணத்தைக் கண்டு குதூகலிக்கும் அந்தக் குடும்பம் அப்படியானதுதான்! அந்தக் குடும்பத்தின் மொத்தச் சூழலும் காட்சிகளின்வழி மெதுவே நமக்குப் புரிபடத் தொடங்குகிறது. சின்னப் பெண் பொறுப்புடன் தன் காரியங்களைச் செய்து கொள்ள, அண்ணன் ஆணுக்கு அத்தனை அர்ச்சனைகள் தேவைப்படுகின்றன. கிரிக்கெட் என்பதையே தன் உலகமாய்க் குறுக்கிக் கொண்டு, விளையாட்டு வீரர்தோனியைத் தன் ஆதர்சமாய்க் கொண்டு, குளியலறையிலிருந்து வெளிவரும்போதே, கண்களில் கிரிக்கெட் குதூகலத்துடனும், குரலில், “காவேரி...யூனிபார்ம்என்று தங்கையிடம் உரிமை கலந்த அதிகாரத்துடனும் வரும் கார்த்திக்-அவன் தந்தை சுப்பிரமணியத்தின் உறவு, கிண்டலும், சீண்டலும், பாசமும், பரிதவிப்பும் நிறைந்தது. “நீங்க அம்பானி ஆனதுக்கப்பறம் எங்களெப் பெத்திருக்கணும்என்று வாயாடும் கார்த்திக்கை, “இட்லி உப்புமாத் தட்டும் கையுமாய்ச் செல்லமாய் அடிக்க வரும் அப்பாவின் வேகம், “ஷூகிழிந்ததால் அடிபட்ட காலைப் பிடித்தபடி, “அம்மாஎன்று அலறி ஓடி அமரும் கார்த்திக்கிடம், “டேடே என்னடா ஆச்சு?”.....”பாத்து வெளையாட வேண்டியதுதானெ....கிரிக்கெட் ஆடும்போது கண்ணுமண்ணு தெரியாது ஒனக்குஎன்று அலறித் துடிக்கும் அப்பாவிடம், “எப்பா ...ஆரம்பிக்காதீங்கப்பா...ப்ளீஸ்என்று அப்பாவின் வழக்கமான பல்லவியை முடக்கிப் போடும் கார்த்திக்....... சட்டையை மாட்டிக் கொண்டபடியே, தனக்குள் புலம்பியபடி, “ஷூ வாங்கி ரெண்டு மாசங்கூட ஆகலெ...அதுக்குள்ள கிழிச்சிட்டு வந்து நிக்குறான். ..(அவனுக்குக் கேட்கும்படி) இனுமெ இரும்புலதாண்டா ஷூ வாங்கணும் ஒங்களுக்குஎன்கிற அப்பாவின் பொருமல், “அப்பா! கோச் தெனமும் ரெண்டு முட்டெ சாப்பிடச் சொல்லியிருக்காருஎன்கிற கார்த்திக்கின் கலாய்ப்பு, “அதான் நெறைய வாங்குறியே பரிச்சையில....அதெச் சாப்பிடுஎன்கிற அப்பாவின் எதிர்க் கலாய்ப்பு என்று அத்தனைப் பரபரப்பிற்குள்ளும் காட்டப்பட்ட கதைப்பாத்திரங்களின் மனநிலைகள் நமக்குப் பரிச்சயமாகி விடுகின்றன. வீட்டை விட்டுப் பையும் கையுமாய் மூவரும் வெளியே தெருவிற்கு வந்தால், இன்னொரு உலகமான குடியிருப்போர் சங்கத்தின் பொறுப்பாளர் லெட்சுமணன் சார் மூலம், இவரின் ஊறுகாய் வியாபரமும்,  இரவில்  நடைபெறும் அவர்களின்கச்சேரிஉறவும் மெல்லக் கோடி காட்டப் பெறுகிறது. வீட்டைப் பூட்டி வருகிற பொறுப்பும் காவேரியிடம்தான்! ஸ்கூட்டரில்உக்கார எங்கெ எடமிருக்கு? நின்னுட்டியான்னு கேளுங்கஎன்கிற கார்த்திக்கின் குறும்புடன், மூவரையும் சுமந்து கொண்டு ஸ்கூட்டர் புறப்பட, பள்ளியில் காவேரியும் கார்த்திக்கும் இறங்கிக் கொள்ள, கார்த்திக்கின் பார்வையில் வகுப்பறைக்கும் அவனுக்குமான உறவு கோடி காட்டப்பட, ஸ்கூட்டர், சார்- பதிவாளர் அலுவலகம் போகிறது.  அலுவலகத்தில், பாலச்சந்தர் படப்பாணியில் வெவ்வேறு குணாதிசயத்தில் மனிதர்கள்! மனைவி இறந்தும் மறுமாப்பிள்ளை ஆக நினைக்காத ஒருத்தர் (சுப்பிரமணியம்), மனைவி இருந்தும் மறுடீல்களுக்கு செல்பேசிவழி ஆளாய்ப் பறக்கும் ஒருத்தர் (டெஸ்பேச்சர்), மனைவி பாக்கியமே மறுஜென்மத்தில்தான் கூடும் என்கிற ரீதியில் ஒருவர் (சார்-பதிவாளர்) ஆகிய இவர்களுக்கிடையிலான உலகத்தில் கதையும் ஊடுபாவாய் மெல்ல வளர்கிறது. வீட்டுக்குத் திரும்புகிற வழியில் மைதானத்தில் பயிற்சியிலிருக்கும் கார்த்திக்குக்குப் புதுஷூ”,   கிரிக்கெட் கோச்சிடம் (நாசர்) கார்த்திக்குக்குப் படிப்பிலும் கவனம் செலுத்த அறிவுரை கூற வேண்டல், வீட்டிற்குத் திரும்பும் வழியில் குடியிருப்பில் காய்கறி விற்கும் காய்கறிக்காரனிடம் தகராறு, ஒரு ரூபாய்ப் பேப்பரைப் படித்தே, “இந்தியாவுக்கு மூணுபக்கம் கடல்; நாலு பக்கம் கடன்என்று உலக அரசியல்வரை பேசும் சமூக சேவகர் சம்பந்தம் பேசுவதை வாய்பிளந்துக் கேட்டல், மழைவரும் அறிகுறியில் காயப்போட்ட துணியை எடுக்க விரைதல், கடக்கிறபோதெல்லாம் கண்ணாடியில் தன் வாளிப்பைக் கண்டு மனங்குளிரும் நளினியுடனான அசடு வழியும் சந்திப்பு, இரவில், நட்பு வட்டமாய்க் கலாய்க்கும் கச்சேரி நண்பர்கள் என்று சுப்பிரமணியத்தின் ஒருநாள் பொழுது நம் கண்முன் ஒவ்வொரு அங்குலமாய்க் காட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நடுத்தரவர்க்க மனச்சாட்சியாய், “வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே சம்பந்தமில்லெ.....பட்டப் படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்லெஎன்று பரபரப்பு மிகுந்த சுப்பிரமணியத்தின் அன்றாட வாழ்வினூடாக, பரபரப்பேயின்றி பாடி ஆடி, “ஒறவு நெறைய இருக்கு... அது செலவுதானே நமக்கு.....சேத்துவச்சச் சொத்து.... அது நட்புதானடாஎன்று படம் பார்க்கும் நமக்கு அறிவுறுத்துவது அழகு! சார்-பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்க்கிற, நான்கு ஆண்டுகளுக்குமுன் மனைவியைக் காலனின் கையில் கொடுத்துவிட்டு, மகளுக்கும் மகனுக்குமாய்த் தன் வாழ்க்கையைச் செருப்பாய்த் தேய்க்கிற சுப்பு என்கிற சுப்பிரமணியத்தின் பார்வையிலேயே மொத்தக் கதையும் காட்சியாய் நகரத் தொடங்குகிறது.

மாணவரின் தேடலுக்கும் வாழ்க்கைக்கும் விடைகூறும் தன்னம்பிக்கை வரமாகக் கல்வி இல்லாமல், ஆசிரியரின்  பிழைப்பிற்கும் சலிப்பிற்கும் விடைகூறும்  சாபமாய்க் கல்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இன்றையக் கல்வியைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திக் குறுக்குவாதம் செய்கிற மகேஷ் மஞ்ச்ரேகரின் அழுத்தமான கதைக்கு, மயிலிறகின் சித்திரமாய் அடுக்கடுக்காய் அழகுகாட்டும் திரைக்கதையைப் பிரகாஷ்ராஜும், .செ. ஞானவேலும் சேர்ந்து உருவாக்க, பின்னவரின் அர்த்தம் பொதிந்த முரணிய வசன அடுக்குகளால் பார்ப்பவர் மனசுக்குள் பல புதிய கேள்விகளை விதைத்திருக்கிறது இந்தப் படம்! ஒரு நடுத்தர வர்க்க ஊழியரின் மன உளைச்சலின் ஊற்றுக் கண்ணாய் விளங்குகிற இன்றையக் கல்விசார் சமூக அவலங்களை, நடுத்தரவர்க்கத்திற்கே உரிய வாழ்க்கைத் துடிப்புகளுடன் கருத்தியல் (thesis), எதிர்க் கருத்தியல் (anti thesis) என்பதாய் மொத்த விவாதங்களையும் சட்டகக் கூண்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி, அதிலிருந்து முகிழ்க்கும் ஆக்கபூர்வ இழைவுக் கருத்தியலை (synthesis), நாடகியமாய்த் திரைமொழியில்  சொன்னதன் மூலம் திரைப்படத்தின் சமூகப் பொறுப்புக்கு மிகவும் நேர்மையாயிருக்கிறது இந்தப் படம். எல்லா நடுத்தரக் குடும்பத்து அப்பாக்களையும்போல், தன் பிள்ளை வாழ்க்கையில் தோற்றுவிடக்கூடாது என்பதற்காகப்படிப்பு, படிப்புஎன்று அவன் தலையில் வம்படியாய் இறக்கும் மதிப்பெண் வன்முறையில் நிலைதடுமாறி, அதன்வழி தான் கற்றுக் கொண்ட புதிய பாடத்தைச் சமூக ஆதங்கமாய்ச் சம்மட்டி கொண்டுத் துவைத்துத் தீர்க்கிற, சுப்பிரமணியம் என்கிற, சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும்- லஞ்சம் வாங்காத- ஒரு எழுத்தரின் மன அசைவுதான் கதை! “எனக்கு மேத்ஸ் வராதுப்பா; கிரிக்கெட்தான் தெரியும்என்கிற அவரின் 14 வயதுப் பையன்கார்த்திக்கின் கதை! இன்றையக் கல்விமுறையினால் உருக்குலைந்துபோன இளைய சமூகத்தின் ஒருமாதிரி வார்ப்புஅவன்! அவன் அப்பா சுப்பிரமணியமும் இன்றையக் கல்விமுறையினால் உளம் சிதைந்த நடுத்தர வர்க்கத்தின்  ”மாதிரிவார்ப்புதான்! இந்தச் சமூகத்தின்மாதிரி வார்ப்பாய் விளங்கும் சுப்பிரமணியம் குடும்பத்திற்குள் நடக்கும் கதை! என் ஒருவனுக்கான கதை மட்டுமேயில்லை, எல்லோருக்கும் நடக்கிற பொதுக்கதைதான் இது என்பதைத்தான், தன் சொந்த வலியைப் பெரிதாய்க் காட்டி, அதைத் துடைக்க ஒரு வழி தேடுகிறார் சுப்பிரமணியம் என்கிற பிரகாஷ்ராஜ்!

நான்கு ஆண்டுகளுக்குமுன்நல்ல நாடகக்காரர்.....நல்ல ஆசிரியர்என்று நான் எழுதியிருந்த ஒரு கட்டுரையில், “ வரலாற்றுச் சம்பவங்களின் ஆழங்களுக்குள் நுழையவிடாமல், ஆண்டுகளை மட்டும்  மனப்பாடம் செய்து, புள்ளிவிவரங்களை நினைவில் கொண்டால்தான் அது வரலாற்றுப் பாடம் என்றாகி விட்டதால், வரலாற்றுச் சம்பவங்கள்நிகழ்வுகள்-நம்மை அதிகம் நிகழ்காலத்துடன் முடிச்சுப்போட விடுவதில்லை. நிகழ்வுகளின் வரலாறுகள் நமக்குச் சொல்லித் தரப்படுவதில்லை. இது அறிவியலுக்கும் பொருந்தி வரக்கூடியது. சோதனைகளின் நிரூபணம் அறிவியலாய் இருந்தாலுமேகூட, ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் பின்னே இருக்கிறஅறிவியல் வரலாறு” (History of Science) நிச்சயம் கற்றுத்தரப்பட வேண்டும். அதுதான் புதிய வரலாற்றை உருவாக்க மனசைத் தூண்டிக் கொண்டே இருக்கும். அல்லது புதிய கண்டுபிடிப்புகளைத் தந்தவர்களிடம் நிச்சயம் இந்தக் குணம் இருந்துகொண்டே இருக்கும். வரலாறு என்பது கதையாய்ப் பேசப்படுகிற உண்மை. அவற்றை நிகழ்த்திக் காட்டுகையில் ஆர்வமுள்ள மாணவர்கள் அதன் ஆழத்தைத் தேடிக் கண்டடைவார்கள். அந்த ஆர்வத்தைத் தூண்ட வேண்டியது ஆசிரியரின் கடன்! இதுபோன்ற செயல்முறைக் கல்விக்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பாடத்தில் கரை கண்டவர்களும் கலையில் துறை போனவர்களுமே வகுப்பறையை நாடகவரங்காக்க முடியும். அல்லது அவர்களின் வகுப்பு நாடகமாய் மிளிரும்”  என்று வகுப்பறை நாடகவரங்காக வேண்டிய அவசியத்தை எழுதியிருந்தேன். அதில் பெஞ்சுமேல் ஏறி நிற்பதற்கான வேலையே இருக்காது. இதனோடு தொடர்புடையதான கருத்தில், பையன் கார்த்திக்கின்கோமாவால் மனம் குழம்பிப் போயிருந்த- சமூக அறிவியல் ஆசிரியை பற்றி பள்ளிக் காவலாளி ;போட்டுக் கொடுத்த்தில்மனம் குமைந்து போயிருந்த- கார்த்திக் லாக்கரிலிருந்து கீழே விழும் கிரிக்கெட் பந்து எழுப்பும் ஒவ்வொரு சப்தமும் கோச்சின் வார்த்தைகளாய்த் தலையில் சம்மட்டிக் கொண்டு தாக்கியதுபோல் நிலைதடுமாற வைத்திருந்த-குற்ற உணர்வினால் கல்விமுறையின் மீதே கொலை வெறியிலிருந்த-ஒரு தந்தையின் மனநிலையில், பிரகாஷ்ராஜ் அவருக்கேயுரிய தொனியில், “ஹிஸ்டரிங்றது எப்ப நடந்தது இல்லெ. ஏன் நடந்ததுங்றதுதான். ஒரு தேதியெ மனப்பாடம் பண்ணிச் சொல்லிட்டா அது போதுமா?....நீங்க ஹிஸ்டரி டிச்சர்தானே?.....இந்தியா பாகிஸ்தான் எப்பப் பிரிஞ்சதுங்ற தேதி உங்களுக்குத் தெரியும்..... ஆனா எதுக்காகப் பிரிஞ்சது....அப்ப என்ன நடந்ததுன்னு சொல்லுங்க பாப்போம். இத்தனெ வருஷ்ம் பசங்களுக்குச் சொல்லிக் குடுத்து மனப்பாடம் ஆயிருக்கும்ல.... சொல்லுங்க. ஏன் நடந்தது? சொல்லுங்க....சொல்லுங்க....ஏன் நடந்தது? தெரியலேல்ல.... பதில் தெரியலேல்ல.... அப்ப, பெஞ்சு மேல போயி நில்லுங்க....நில்லுங்க பெஞ்சு மேலெ”  என்று தமிழ்ச் சமூகத்தின் அத்தனை ஆசிரியர்களுக்கும் உறைக்கும் குரலில் வெடிப்பதும், தார்க்குச்சி வார்த்தைகளில் நோவேற்படுத்தும் மூர்க்கமான ஆசிரியர்களுக்கு மத்தியில், “வர்ற கிரிக்கெட்ட விட்டுட்டு வராத பாடத்தைப் போயிப் படி...படின்னா? எப்படிஎன்கிற கிரிக்கெட் கோச் மாதிரியான மனசை நேசிக்கும் ஆசிரியர்களின் முரணாடல்களைக் காட்டியிருப்பதற்கும், இரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல், அகப்பட்டவர்களிடம் காசை உறிஞ்சும் கந்துவட்டிக்காரன்கான்பாயிடம் இருப்பதாய்க் காட்டும் சீரான குடும்ப உறவும்,  பிறத்தியார் கஷ்டத்தில் இரங்குகிற நெகிழ்ச்சியும், காசுக்காக உடலை விற்றுப் பெயர் மாற்றிப் பிழைத்துத் திரியும் மேல் வீட்டுக்காரி நளினி என்கிற ரோஸியிடம் இருப்பதாய்க் காட்டும் குடும்பப் பொறுப்பும் பரிவும் பச்சாதாபமும்கூட, “சரஸ்வதியின் பெயரால் காசைக் கறக்கப்பொலிகேட்கும் கல்வி நிறுவனங்களிடம்- அங்குள்ள ஆசிரியர்களிடம்- இல்லாதிருப்பதாய்க் காட்டி, அவர்களைக் கூனிக் குறுகிப் போகச் செய்ததும் நான் இந்தப் படத்தை இன்னும் நெருக்கமாக நேசிப்பதற்குக் காரணம்.

தோனிதிரைப்படத்தின் இறுதியில், சுப்பிரமணியம் பொதுஇடத்தில் வைத்து நாட்டின் முதல்வரைச் சந்தித்துப் பேசும்போது, இன்றையக் கல்விமுறையால், மனசளவில் நொடிந்துபோக வைத்தத் தன் சொந்தப் பிரச்சனையின் வலியைச் சமூகம் மொத்தத்துக்குமான வலியாக்கிச் சமூகத்தின் கைகளில் அப்படியே தன்னைக் கொட்டிக் கொடுத்து விடுகிறார்.  அதனால்தான், “ஒங்களப் பத்திக் கேள்விப்பட்ருக்கேன். ஆனா ஒங்கப் பிரச்சனை இவ்ளவு சீரியஸ்னு எனக்குத் தெரியலெ. டோண்ட் ஒரி. ஒங்க வேலெயும், ஒங்கெ பையன் ஆப்ரேஷனுக்கான லோனும் ஒடனெ கெடைக்க ஏற்பாடு பண்றேன். போதுமா?” என்று முதல்வர் கதைப்பாத்திரம் சுப்பிரமணியத்திடம் கூறும்போது (பெரும்பாலும் இந்த இடத்தில் தமிழ்ப் படங்கள்ரொம்ப நன்றி சார்என்று சுப்பிரமணியத்தைக் கண்ணீர் ததும்பச் சொல்ல வைத்துக் குதூகலப்பட்டுவிடும். கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் வந்துவிட்ட மாதிரி கனவில் களிம்பு தடவப் பார்க்கும். ஆனால் இந்தப் படத்தில் தனிமனிதப் பிரச்சனை என்பதிலிருந்து அதைச் சமூகம் மொத்தத்திற்குமான குரலாகப் பதிவு செய்திருப்பதென்பது ரொம்பவும் முக்கியமானது.), சுப்பிரமணியம், “போதாதுசார்.... ...பாதிக்கப்பட்டது நான் மட்டுமில்லெ சார்....என்னெய மாதிரி எத்தனையோ பெத்தவங்கக் குற்றவாளியா நிக்குறாங்க...படிப்பு கொழந்தைங்களுக்குத் தண்டனையா மாறிடுச்சி சார். படிப்பால ஒவ்வொரு வீட்லெயும் கொழந்தைங்க பாரமாகிக்கிட்டே போறாங்க சார்....பேப்பர்ல ஒவ்வொரு வருஷமும் எக்ஸாம் ரிசல்ட் வரும்போது ஸ்டூடன்ஸ் தற்கொலை பண்ணிக்கிட்ட நியூஸ் படிச்சுகிட்டே, இன்னொரு பக்கம் 100% ரிசல்ட் 100% ரிசல்டுன்னு விளம்பரம் பண்ணிக்கிட்ருக்கோம். பாவம் சார் கொழந்தைங்கஎன்று சமூகப் போராளியாய்க் கொதித்துக் குமுறுவதில், யதர்த்தத்திற்கும் கனவிற்கும் ஈடுகொடுக்கக்கூடிய, புள்ளியைக் கேள்வியாக்கி, அதைச் சமூகம் மொத்தத்துக்குமாய் மாற்றிக் காட்டக்கூடிய ஒரு புதிய மேடையாகியிருக்கிறது திரைப்படம் என்பது முக்கியமாய்ப்படுகிறது.

இதேமாதிரி, தொலைக்காட்சிவழி வீட்டிற்குள் வந்து நடுவீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து, நம் வாழ்க்கையில் கும்மி கொட்டிக் கொண்டிருக்கிறகிரிக்கெட் பித்தும் இன்னொரு தடாலடி விமர்சனத்தால் தாக்கப்படுகிறது. கோமாவில் கிடக்கும் தன் பையனை நினைத்துச் சுதியுடன் கச்சேரி நண்பர்களிடம் சுப்பிரமணியம் மனசைக் கொட்டுவது, பார்வையாளர்கள், கருத்தியல், எதிர்க் கருத்தியல் இரண்டின் நல்லது கெட்டதிலிருந்து, சரியான ஆக்கபூர்வ இழைவுக் கருத்தியலை நாம் பெறுவதற்கான சூட்சமமாய் அமைந்திருக்கிறது. “இந்த...தோனி....டெண்டுல்கர்....இவனுங்க எல்லாரையும் ban பண்ணி எங்கெயாவது அனுப்பிடணும்யா. ஒரு ஜெனரேஷனையே நாசம் பண்ணிட்டாங்க இவனுங்க.....அதையெல்லாம் எப்படிப் பாக்குறீங்க.... நாளெல்லாம் உக்காந்து கிரிக்கெட்டு....வேற வேல இல்லெ ஒங்களுக்கு?....இவனுங்க கிரிக்கெட் வெளயாடலெ....நம்மளோட வாழ்க்கையிலெ வெளயாடிட்டு இருக்கானுங்க.....எப்பப் பாரு....கிரிக்கெட்டு....கிரிக்கெட்டு....பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்றதுக்குள்ளெ ரெத்தம் சுண்டிப் போகுது....எங்கெயிருந்து வருதுய்யா பணம்?.....எம்பையனோட ஸ்கூல் ஃபீஸ், பேக் ....இதுக்கெல்லாம் எங்கயிருந்து வருதுய்யா பணம்?...தோனி அனுப்பல....அவுங்க அப்பன் வெங்கட ரமண சுப்ரமணியம்...நான் குடுக்றேன்....ஒவ்வொரு காசும் என் ரெத்தம்....என் வேர்வை......அவுங்களுக்கென்ன.....போடுற பனியன், ஷூ....முன்னாடி, பின்னாடி விளம்பரம்....எவனோ காசு சம்பாதிக்கிறான்....நம்ம புள்ளைங்களோட வாழ்க்கை நாசமாப் போவுது இங்கெ.” என்று எல்லா அப்பாக்களின் மனசாயும் குமுறுவதும், நிதானத்தில் தோனியின்ஹெலிகாப்டர் ஷாட்பற்றி பிரக்ஞை இழந்திருக்கிற பையனிடம் தானாய்ப் பேசித் தீர்ப்பதும் பேதலித்துப் புலம்பிக் கிடக்கிற ஒரு அப்பாவைப் பார்த்து நண்பர்கள் தங்களுக்குள் புழுங்குவதும் அழகய் அமைந்திருக்கிறது.   .

 

முதல்வரிடம் சுப்பிரமணியம் முன்வைக்கும் கல்விமுறை மீதான எதிர்க் கருத்தியல் மிக முக்கியமானது. “ஏதாவது உருப்படியா இருந்தா கேளுங்க சொல்றேன்என்கிற முதல்வரிடம், கொலைக்குற்றப்  பாதிப்பிற்குள்ளான சுப்பிரமணியம் தன் பிரச்சனைகளைக் கேள்விகளாக்கி முன்வைக்கிறார். அவரின் கேள்விகள் இப்படி அமைகின்றன: “இருக்கு சார். நெறைய கேள்விகள் இருக்கு சார். எல்லாருக்கும் எல்லாம் தெரியவேண்டிய அவசியமில்லேன்னு சொல்றீங்களே! அப்பக் கொழந்தைங்க மட்டும் தமிழு, இங்கிலீஷ், மேத்ஸ், ஹிஸ்டரி, ஜாகிரஃபி, கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிசிக்ஸ்ன்னு ஏன் சார் எல்லாம் தெரிஞ்சுக்கணும்? எல்.கே.ஜி. படிக்கிற கொழந்தைக்கி ஏன் சார் எண்ட்ரன்ஸ்? என் புள்ள படிக்றதுக்கு நான் ஏன் டெஸ்ட் எழுதணும்? 17x8 க்குப் பதில் தெரியலேன்னா எம் பையன் என்ன முட்டாளா? உதவாக்கரையா? ஒரு சப்ஜெக்ட்ல பெயிலாயிட்டா அந்தக் கொழந்தெ வேற எதுக்கும் லாயக்கில்லையா? ஐஐடி அப்ளிகேஷன் ஆன்லைன்ல வாங்கமுடியுது. எல்.கே.ஜி. படிக்கக் கொழந்தைகளுக்குச் சீட் வாங்க ஏன் சார் பெத்தவுங்க மூணுநாள் க்யூவிலெ நிக்கணும்? இப்படி நெறைய கேள்விகள் இருக்கு சார். புள்ளைங்களுக்குப் படி, படிங்ற டென்ஷன்; பெத்தவுங்களுக்குப் ஃபீஸ் கட்டணுங்ற டென்ஷன்; ஸ்கூல் நடத்துறவுங்களுக்கு 100% வாங்கணுங்ற டென்ஷன். ஏன் சார் படிப்பு இவ்வளவு துன்பமாயிடுச்சி. இதையெல்லாம் யார் சார் சரிபண்ணுவாங்க...நீங்கதானே!...ஒரு அப்பனா எம் புள்ளைக்குச் சொத்துச் சேர்க்க முடியலெ. படிப்பாவது கொடுக்கணும்னு நெனச்சது தப்பா சார்” – என்று கேட்கும் கேள்விகள் அத்தனை இலகுவில் ஒதுக்கிவிட முடியாதவை.

 

இன்றையக் கல்விமுறையின் மாற்றத்திற்காக முதல்வரிடம் சுப்பிரமணியம் வைக்கும் வேண்டுகோள், சார்லி சாப்ளினின்கிரேட் டிக்டேட்டர்படத்தின் இறுதியில், சாதாரண முடிதிருத்துபவராக வரும் சார்லி சாப்ளின் விடுக்கும் மனிதகுல விடுதலை பற்றிய அறிவிக்கைக்கு இணையானது. அது சார்லியின் கனவு! சமூக ஒழுக்கம் சார்ந்த சாப்ளினின் விருப்பம்! இன்னமும் எல்லோர் மனசுக்குள்ளேயும் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் சார்லி சாப்ளினின் கருத்தியல் அது! அது, இப்படிப்போகும்:

 

The good earth is rich and can provide for everyone:     

The way of life can be free and beautiful,                     

But we have lost the way.
Greed has poisoned men”s souls,
Has barricaded the world with hate,
Has goose - stepped us into misery and bloodshed.
We have developed speed,
But we have shut ourselves in.
Machinery that gives abundance has left us in want.
Our knowledge has made us cynical.
Our cleverness, hard and unkind.
We think too much and feel too little.
More than machinery we need humanity.
To those who can hear me, I say, Do not despair!
The misery that has come upon us is but the passing of greed,
The bitterness of men who fear the way of human progress.
The hate of men will pass, and dictators die,
And the power they took from the people will return to the people.
And so long as men die, liberty will never perish.

இதற்கு ஒப்பாகவே, கல்விமுறை பற்றிய தன் கனவுகளை, அதன் ஒழுக்கம் சார்ந்த தன் விருப்பத்தை முதல்வரிடம் வேண்டுகிற தொனியில், காவலர்களால் தள்ளப்பட்ட நிலையிலும், சுற்றிலும் பலூன்களைப் பிடித்தபடி முதல்வரை வரவேற்க நிற்கிற பள்ளிக் குழந்தைகளின் பின்னணியில், ஊடகங்களின்வழி சுப்பிரமணியம் இந்த உலகிற்கே வேண்டுகோளாய் முன்வைக்கிறார்.  ”இட் ஸ் காம்ப்படிடிவ் வொர்ல்ட். வேற வழியில்ல. என் வீட்லயும் பசங்க இப்படிக் கஷ்டப்பட்டுத்தான் படிக்கிறாங்கஎன்கிற முதல்வரிடம், சுப்பிரமணியம் வைக்கிற, ஒரு சிறிய, ஆனால் பெரிய மாற்றத்திற்கான வேண்டுகோள், உலகிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவானது. கல்வி கற்கும் குழந்தைகளின் விடுதலையைப் பேசுகிறது. அது இப்படிப் போகிறது:

கஷ்டப்படக்கூடாது சார். எந்தக் கொழந்தையும் கஷ்டப்பட வேண்டாம்....படிப்பு வரலேன்னா என்ன?...வேற ஏதாவது தெறமை இருக்கும்லா...தேடிப் பார்க்கலாம்லா....சார்! எம் பையனுக்கு மேத்ஸ் வராது சார்....பிஸிக்ஸ்லெ ரொம்ப வீக்குதான் சார்.....ஆனா கிரிக்கெட் வரும் சார்....நல்லா ஆடுவான் சார்...அதுக்கு மார்க் போட்டா, ஸ்டேட்லெயே பர்ஸ்ட் வருவான் சார்...அறிவாளிக் கொழந்தை உதவாக்கரெ கொழந்தைன்னு யாரும் இல்லெ சார். எல்லாக் கொழந்தைகளுக்குள்ளயும் ஏதோ ஒரு தெறமை இருக்கு சார்...அதைத் தேடி, கண்டுபுடிச்சி, வளர்க்க வேண்டியதுதானே பேரண்ட்ஸ், ஸ்கூல், டீச்சர், அதிகாரிங்க, அரசாங்கத்தோட பொறுப்பு.....அதைச் செய்யாம, கொழந்தைங்களெ முட்டாள், மக்குன்னு சொல்லுறது தப்பு சார்.....பெரிய பாவம் சார்! கொஞ்சங்கூடக் கூச்சம் இல்லாமெ அதைச் செய்துகிட்ருக்கோம் சார்....ஒங்களுடைய ஒரு கையெழுத்து, தலைமுறையினுடைய தலையெழுத்தையே மாத்திடும் சார்.  ஒங்களெ மாதிரிப் பெரியவங்க எல்லாம் மனசு வச்சா இது முடியும் சார்.....ஏதாவது செய்யுங்க சார்.... ப்ளீஸ்....ஏதாவது செய்யுங்க” – இதைத்தான் ஒரு திரைப்படம் செய்யமுடியும். இதுதான் ஒரு திரைப்பட்த்தின் பெரும் பயனுங்கூட! அதை மிகச் சரியாகச் செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்!  

 

இன்றைய வாழ்நிலையின் மேற்தோலாய்ப் போர்த்திக் கிடக்கிற ஊடகத்தில், நம் அறிவை மேம்படுத்தும்  அக்கபூர்வமான விவாதத்தளத்தையும், நேர்மையை முகவரியாய்க் கொண்ட ஊடகத்தவர்களின் மனிதத் துடிப்பையும்கூட அழகாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்! ஊடகத்தின் ஆக்கபூர்வமான செயலும்கூட அழுத்தமான கதைப்பாத்திரங்களாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதுதோனியில்! “இன்றையக் கல்விமுறை வரமா சாபமாஎன்று  விஜய் டி.வி.யில் கோபிநாத் நடத்தும்நீயா நானாநிகழ்ச்சி, இந்தப் படத்திற்காகவே அளவெடுத்துத் தைத்த சட்டையைப் போல் அத்தனைப் பாந்தமாய்ப் படத்தின் கதை நகர்வுக்கு உதவியிருக்கிறது. அதில் பங்கேற்றுக் கல்விமுறையின் சீர்கேடுகளை- நாளிதழ் வாங்க ஒரு ரூபாய்கூடச் செலவு செய்யத் தயங்கும் ஒரு தந்தையாய் இருந்தும்- தன் அனுபவத் தெறிப்புகளைக் கொண்டு அதை விளாசித் தள்ளியதால், ஊரே சுப்பிரமணியத்தைசூப்பர் மேன்ஆகக் கொண்டாடுகிறது. சுப்பிரமணியமும் இப்படித்தான், அவர் குடியிருப்பில் வசிக்கும், தொலைக்காட்சியில் நாட்டு நடப்புகளை அலசும் சம்பந்தம் என்பவரையும்சூப்பர் மேன்ஆகத்தான் பார்க்கிறார். ஊடகம் இப்படித்தான் ஒரே இரவில் உச்சாணிக் கொப்பிலே கொண்டுபோய் ஒருவரை நிற்கவும் வைக்கும். ஊரின் அத்தனைக் கண்களும் அவரையே கொத்திக் குலவையிட்டுச் சுற்றிச் சுற்றி வரும். அதன் இன்னொரு பரிமாணமாய், எதிரிகளுக்கும் முகத்தை இலகுவில் அடையாளப்படுத்திக் கொடுத்துவிடும். இதிலும் அப்படியும் நடக்கிறது. சுப்பிரமணியத்தின் முதுகெலும்பில் சுளுக்கேற்படுத்தஒருலட்ச ரூபாகூலி கொடுத்துக் கல்வி நிறுவனங்கள் அடியாட்களை அனுப்பி அவரை அடித்து உதைத்து, அவரின் குடும்பத்திற்கே ஆதரவாய் இருந்த ஸ்கூட்டரைக் கொளுத்த வைக்கிறது. அரசாங்க ஊழியராய் இருந்து கொண்டு ஊடகத்தில் அரசின் கல்விமுறையை விமர்சித்துப் பேசியதால், ம்கனின் மருத்துவச் செலவிற்கான லோனைக் கொடுக்க மறுக்கிறது அரசு; இருபது ஆண்டுகளாய், சம்பளம் போதாமல், குடும்பம் நடத்தக் கூடுதலாய் ஊறுகாய்ப் போட்டு விற்பது தவிர்த்து, அலுவலகத்தில் லஞ்சம் வாங்காமல் தன் பையன் கர்த்திக்கின் கல்விக் கனவை மட்டுமே சுமந்து திரிந்த சுப்பிரமணியத்தின் வேலையைக் காவு வாங்குகிறது அரசு! இறுதியில், சுப்பிரமணியம் கதறலுக்குச் செவி கொடுக்காத முதல்வர், ஓர் ஊடகக்காரரின், “இவரு டெர்ரிஸ்டில்ல சார்; ஹி இஸ் அன் இந்தியன் சிடிசென். எனக்கு நல்லாவே தெரியும் சார்; அஞ்சி நிமிஷம் டைம் கொடுங்க சார்.....ப்ளீஸ் சார்...அவர் ஏதோ பேச விரும்புறாருஎன்று கதறுவதைக் கேட்டு மட்டுமே,  காவலர்களைப் பார்த்து, “ வாண்ட் டு டாக் டு ஹிம்...... டூ சே”  என்று முதல்வர் இறங்கி வருவதன்மூலமும், “விடுங்க...விடுங்கய்யா....சி.எம். அவரைக் கூப்பிடுறாருஎன்று நேரிடையாகக் களத்தில் இறங்கிக் காவலர்களிடமிருந்து சுப்பிரமணியத்தை விடுவிக்கும்போதும், “கம்...கம்...கைஸ்....கவர் இட்என்று தன் நண்பர்களுக்கு உத்தரவிட்டு அதைப் பதிவு செய்யும்போதும், இறுதியில்நம்ம தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயர் வேணும்என்று சொல்லுகிற முதல்வரைப் பார்த்து, “சூப்பர்....சூப்பர் சார்...சார் ஒரே ஒரு ஸ்டில் சார்என்று ஊடகக்காரர் உலகத்தின் குரலாய் எழுப்பும் ஆரவாரம், அதைத் தொடரும் மக்களின் ஆரவாரம் இவற்றிலெல்லாம் ஊடகத்தின் சமூகப் பொறுப்பும் துடிப்பும் அதன் அவசியமும் மிக இயல்பாகவும் அழுத்தமாகவுமேதோனியில் பதிவாகியிருக்கிறது.

அழுத்தமான கதை, அச்சுப் பிசகாத திரைக்கதை, அசலான மனசைக் கொட்டும் வசனம், இவர்களோடு இளையராஜாவும் சேர்ந்தால் அதன் சேர்மானக் குண வியாபகத்தை யார்தான் வியக்காமலிருக்க முடியும்? காட்சிகளின் அர்த்தத்தைக் கண்ணுக்குள் உருத்தாமல் பதிக்கிற குகனின் ஒளிப்பதிவு, ஒரு வாழ்க்கையின் போக்கைப் பிசிறில்லாமல் பின்தொடர வைக்கிற கதிரின் கலை இயக்கம், வாழ்வின் விளக்கமாயமையும் முத்துக்குமாரின் பாடல் வரிகள், அழகுகளை அள்ளிக் கோர்த்திருக்கும் தொகுப்பாளர், கதைப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிற பக்குவப்பட்ட நடிகர்கள், பிரகாஷ்ராஜ் என்கிற நடிகர்-நெறியாளுநர்-தயாரிப்பாளர் என்று புத்திசாலிக் கலைஞர்கள் பலரும் வரிசையாகக்  கைகோர்த்திருக்கிற அழகில், படம் எழுப்பும் கேள்வியானது, பார்ப்பவரின் மனசின் ஆழத்திற்குள் பதியம்போடத் தொடங்கி விடுகிறது. இன்றைக்குப் புற்றீசலாய்ப் பூதாகாரமாய் எழுந்து நின்று, எதிர்காலச் சமூகத்தையே அச்சப்படுத்தி நிற்கும், காசு மட்டுமே பார்க்கும் கல்விமுறையை எதிர்த்து இத்தனை அசலாகப் படங்கள் எதுவும் தமிழில் வந்ததாய்த் தெரியவில்லை. ஆனால் அதற்கேற்ப, “தோனிபார்வையாளர்களால் கூவிக் கொண்டாடப்பட்டதாகவும் தெரியவில்லை. இதுமாதிரியான படத்திற்கு அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சமேற்படுத்தும் காரியங்கள்கூட நடக்கலாம். ஆனால் கலைஞன் தன் கருத்திற்கு மட்டுமே எப்பொழுதும் உண்மையாய் இருக்க முடியும். மற்றவர்களுக்குப் பிடிக்கிற காரியத்தைவிட தனக்குப் பிடிக்கிற காரியத்தைச் செய்யக்கூடியவனே கலைஞன். எலியை எறிந்த வேலல்ல; யானையைக் குறிபார்த்து எறிந்த வேல் இது! வரலாறு எப்பொழுதும் இதை நினைவிற்கொள்ளும்! இதனால் கல்வித்துறையில் நாளைக்கே மாற்றங்கள் வந்துவிடப் போவதில்லை என்று நம்புகிற அதேநேரத்தில், மாற்றங்களே வராமலும் இருந்துவிடும் என்பதையும் நாம் நம்பவில்லை. அது இயங்கியலுக்கு எதிரானது. மக்களின் மனசுக்குள் மெதுவாகவேணும்  உண்மை ஒளிபாய்ச்சத் தொடங்கும் என்று நம்புவோம்! ஆனால் திரைப்படத்தைச் சமூக ஆயுதமாகப் பயன்படுத்தத் தோள் கொடுத்திருக்கிற பிரகாஷ்ராஜுக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லுவோம்!

 

 

 
Related News
 • பெரியார் - செல்லுலாய்டில்...

 • பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9

 • பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 (தொடர்ச்சி....)

 • பாரதி-திரைப்படம் (சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்)

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World