Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9
 

 தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வியலை அங்குலம் அங்குலமாய் அம்பலப்படுத்தி, அழகியலாய் நுண் அரசியல் பேசும் மிகச் சரியான படம்!

                                                                                      மு.ராமசாமி

பாலாஜி சக்திவேல் உருவாக்கத்தில் முகிழ்த்தசாமுராய்”, “காதல்”, “கல்லூரிஆகிய திரைப்படங்களைப் போலவேவழக்கு எண் 18/9” திரைப்படத்தின் கதையும், சமூகத்தில் இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியத்தின் விளிம்பிற்கு நம்மைத் தள்ளிக் கொண்டு போகிற, சமூகத்தில் எங்கோ ஒரு மூலையில் உண்மையாய் நடந்து, நமக்குச் செய்தியாய் மட்டுமே தங்கிப்போயிருக்கிற ஒரு சம்பவத்தின் மேல்தான் யதார்த்த நெசவில் நெய்யப்பட்டிருக்கிறது, மிகவும் நேர்த்தியுடன்! “திருப்பதி பிரதர்ஸ்நிறுவனத்திற்குவழக்கு எண் 18/9” எனும் பெயரில் படம் உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, அவரின்கல்லூரிபடத்தைப் பற்றி எதிர்நிலையில் நின்று நான் திரும்பவும் அவரிடம் விவாதிக்கும் சூழல் உருவானது. அப்பொழுது அவர் தரப்பு நியாயமாக மிகுந்த நேர்மையுடன் அவர் கூறியது எனக்குள் இன்னமும் பசுமையாய் இருக்கிறது. அவர் இப்படிச் சொன்னார்: “ கிளைமாக்ஸை நான் எடுக்க நெனச்சது வேறமாதிரி சார்... பல பேர் பல மாதிரிப் பயங்காட்டுனதுல நான் கொஞ்சம் கொழம்பிட்டேன்.  எனக்குள்ள இருந்த கொழப்பம்தான் படம் பாக்குறவங்களையும் கொழப்பிடுச்சி சார். அதுதான் என்னைக் கவுத்து உட்டுருச்சி.  யாருக்காகப் படம் பண்ணுனாலும், இந்தச் சித்திரவதையை ஒவ்வொருத்தரும் கடந்துதான் வர வேண்டியிருக்குது. பணம் சம்பந்தப்படுறதுனாலே, படைப்பை மீறிய இந்தப் பதட்டம், பணம் போடுற ஒவ்வொருத்தருக்கும் வந்திடுது. இதைக் குத்தமாச் சொல்லல. நியதியாகிடுச்சி. சொந்தமாப் படம் பண்ணுற தெம்பு எனக்கு வந்துடுச்சின்னா, இது எதைப் பத்தியும் நான் கவலைப்பட வேண்டியதில்லை.  ”கல்லூரிநல்லாப் போயிருந்திச்சின்னா, சொந்தமாத்தான் நான் கம்பெனி போட்ருப்பேன். பார்க்கலாம் இனுமெ! யாருக்காகவும் எந்த சமரசத்துக்கும் போகாம எனக்குச் சரின்னு படுறதைச் செய்யணுங்றதுல இப்பத் தெளிவாயிருக்கேன் சார்.  இப்ப எடுக்கப் போற படம் கண்டிப்பா ஜெயிக்கும்”. படைப்புக்கு  உண்மையாகவும் நெருக்கமாகவும் நேர்மையாகவும் இருந்தது அவரின் பேச்சு! இதைச் சொல்வதற்கே மிக விசாலமான மனசிருந்தால் மட்டுமே முடியும் என்பதாய் அப்பொழுது எனக்குப் பட்டது.  இந்த நேர்மை,  அவருக்கான வெற்றிப் படிக்கற்களை அவருக்கு நிச்சயம் உருவாக்கித் தரும் என்று அப்பொழுதே நம்பினேன். “தோற்றேன் எனநீ உரைத்திடும் வேளையில் வென்றாய்என்ற பாரதியின் வாக்கு, தோல்வியின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட இவரின் மனசில், அப்பொழுதே வெற்றியாய் மகுடம் சூட்டக் காத்திருந்தது என்பதை, இவரின் இந்தப் படைப்பின் செய்தி நமக்குக் கட்டியம் சொல்லியிருக்கிறது.  இவரின்வழக்கு எண் 18/9” திரைப்படக் கதையமைப்பின் நேர்த்தி, அதில் செலுத்தியிருக்கிற அவரின் உழைப்பு, அவருக்குத் தோள் கொடுத்த தோழமைகள் ஆகியவை அந்தத் தெளிவை நமக்குப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. “பிருமாண்டசங்கரின்எஸ்பிக்ஸர்ஸுக்கு, மிக எளியகாதல்மூலம் மிகப்பெரும் கௌரவத்தை முதலில் வழங்கிய பாலாஜி சக்திவேல்தான், இப்பொழுது திருப்பதி பிரதர்ஸுக்கும் தமிழ்த் திரைப்பட வரலாற்றுப் பதிவுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாய், “வழக்கு எண் 18/9” ஐக் கொண்டு வந்து நிறுத்தி, மிகப்பெரும் நன்மதிப்பை  அவர்களுக்கும் வழங்கியிருக்கிறார்.

பீகாரில் நடந்ததாய்ச் சொல்லப்படும் பத்திரிகைச் செய்திதான், “வழக்கு எண் 18/9” இன் உச்சக்கட்டம்! அதற்கேற்ப, சமூகத்தில் தேடி எடுத்துத் தெரிவு செய்த பல தரப்பு முகங்களையும் கதைப் பாத்திரங்களாய்க் கவனமாய்க் கண்ணி கோர்த்து, ஒன்றுடன் ஒன்று பிணைக்கும் தொடர் இணைப்பில், சமூகம் மொத்தத்தையும், அதன் அருவெறுப்புடனும் பெருவிருப்புடனும் அழகிய கோலமாய்க் கண்ணில் விரிக்கிறது திரைக்கதை! “எது ஒன்றும் பிரபஞ்சத்தில் தனித்த நிகழ்வில்லைஎனும் இயங்கியல் தத்துவம் உள்ளோடும் நீரோட்டமாய், படம் மொத்தத்தின் அடிநாதமாய் விளங்கி, படத்தைச் சமூக அலசலாக்கி உயரத்தில் நிறுத்தி விடுகிறது. “நீதியின் நெடும் பயணத்தைப் பணம்-சாதி-படுக்கை-அதிகாரம் என்று தங்கள் சக்திக்கேற்பத் திசை திருப்புகிற பல அசிங்கங்களின் இடக்கரடக்கல் தொடர்புகள் உருவாக்கும் அதிர்ச்சி தரும் உண்மையை அருவெறுப்பின்றி நுண்அழகியலுடன் பேசுகிறதுவழக்கு எண் 18/9”! இந்தக் கதை கூறும் நேர்த்தியில் ஒவ்வொரு சட்டகமும் திரைமொழியின் அழகாலும் அறிவாலும் தீர்க்கமாய்க் குழைக்கப்பட்டுப் புதிய அனுபவத்திற்குள் நம்மைத் தள்ளித் திக்குமுக்காடச் செய்கின்றன. “காதல்திரைப்படம் குறித்துப் படம் வந்தபோது நான் எழுதுகிறபோது, எனக்கேற்பட்ட ஓரனுபவத்தைச் சொல்லி அதை ஆரம்பித்திருப்பேன். அது இப்போதைக்கும் பொருத்தமாய் நினைவிற்கு வருகிறது.  அது,  வடக்கே பாரதப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டு,  தெற்கே பேருந்துகள் நின்றிருந்த நிலையில், தஞ்சையில் இரயிலின் கூட்ட நெரிசலில் சிக்கியிருந்த ஒரு அம்மாவிடம்எங்களுக்குத்தான் வேற வழியில்ல. இப்படித் தொங்கிட்டுப் போறோம். நீங்க எதுக்கும்மா இந்தக் கூட்டத்துக்குள்ளஎன்று நான் சொல்லவும், அந்த அம்மா சொன்ன பதிலானஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும்என்பதுதான்! “ஒவ்வொருத்தருக்குள்ளும் அவர்கள் பயணத்துக்கான ஒரு கதை அவர்களை உந்திச் செலுத்திக்கொண்டு இருக்கும்என்பதைத் தெறிப்பாகச் சொன்ன, முகந்தெரியாத அந்த அம்மாவின் வாக்கின் விரிவுரையாக, ஒவ்வொரு கதைப் பாத்திரத்திற்குள்ளும் வெளித்தெரியாத வெவ்வேறு கதைகள் பொதிந்து கிடப்பதாய்க் காட்டி, அவற்றின் தொடர்பில கதையானது காட்சியாய் விரியும் அழகில் வெளிப்படுகிற சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வியல், அற்புத அனுபவமாய்ப் பார்ப்பவரைத் திளைக்கவும் மலைக்கவும் வைக்கின்றன. சாதாரண நிழற்படக் கேமிராவில் எடுக்கப்பட்டு, அதற்கேற்றதான ஒருங்கிணைந்த உழைப்பால், அதை நான்கு ஆண்டுகளாய்ச் சுவைபடச் செதுக்கி, சமூகப் பொறுப்பு மிளிரும் அழகிய கவிதையாய்க் கண்முன் நிறுத்தி, தமிழ்த் திரைப்படத்தை உலகத்தரத்திற்கான வரிசைத் தொகுப்பில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற பாலாஜி சக்திவேல்தான் தமிழ்த் திரையுலக ரசிகர்களின் இன்றைய குதூகலம்!

கதையென்று ஒற்றைவரியில் சொல்வதாயிருந்தால், அது, “தானுண்டு தான் பார்க்கும் வேலையுண்டு என்று, வேலையில் குனிந்த தலை நிமிராமல், வாய் பேசாமல் அம்மாவின் நிழலுக்குள், அவளின் வசவுப் போர்வைக்குள் வசதியாய்க் குளிர் காய்ந்து கொண்டிருந்த ஜோதி, வழுவிய நீதியைத் தூக்கி நிறுத்த, தப்பைத் தட்டிக் கேட்கச் சொல்லித் தந்து, மற்றவர்களுக்காக உழைத்து உழைத்தே உயிர்விட்ட அப்பாவின் பொதுவுடைமைச் சிந்தனை தந்த வலுவால், பீகாரில் நடந்ததாய்ப் பத்திரிகையில் வந்த சம்பவத்தைத் தனக்குள் ஏற்றிக் கொண்ட தெளிவால், தன் தலையை அமைதியாய் நிமிர்த்தி, “ஆஸிட்வீச்சில் அதிகாரத்தையே அலறித் துடிக்க வைத்து, அதனால்வழக்கு எண் 18/9” இன் தீர்ப்பைத் திருத்தி எழுத வைத்ததுதான்கதை! இதையே இன்னொரு மாதிரியாகச் சொன்னால், தருமபுரிப் பக்கத்துல ஈச்சம்பள்ளம் கிராமத்துல, விவசாய நிலத்தையெல்லாம் அழிச்சிப் பிளாட் போட்டு வித்துட்டதுனால, ஊர்க்காரங்களுக்கு வேலை இல்லாமப் போய், ரோடு போட, கல் ஒடைக்கன்னு கூலி வேலைக்கு ஊர்க்காரங்க சென்னை, குண்டூர்னு புலம் பெயர்ந்து போனபோது, 13 வயதுப் பையனான இவன் படித்து முடித்தால், தங்கள் வாழ்வில் பசும்புல் தலைகாட்டும் என்று இவனைப் படிக்க வைக்கிறதுக்காக இவன் அப்பாவும் அம்மாவும் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி, ஊர்லயே ஒரு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவர, விவசாயம் பொய்த்துப்போக, வட்டி கட்ட முடியாததால் கந்துவட்டிக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு உதைக்கப்பட, கிட்னி விக்குறதத் தவிர அல்லது பூச்சி மருந்து குடிக்கிறதத் தவிர வேறு வழி தெரியாதிருந்த தன் அப்பா அம்மாவிற்காய்த் தன் படிப்புக் கனவைப் பாழிக்குள் புதைத்துவிட்டு, மூக்கில் வேர்க்கும் கழுகாய் ஊருக்குள்பைக்கில் சுற்றித் திரியும்ஏஜெண்ட்மூலம் வடநாட்டில் முறுக்கு வியாபரம் செய்யும் தமிழ்நாட்டு முறுக்கு வியாபாரியிடம் 8 ஆண்டுகள் கொத்தடிமையாய்த் தன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, ஊரில்கோரியில் வேலை செய்த தன் தாய் தந்தையையும் அந்த மண்ணே மூடக் கொடுத்துவிட்டு, சென்னை நகரப் பிளாட்பாரத் தள்ளுவண்டிக் கடையில் எடுபிடி வேலை செய்கிற, அங்கு எதிர்கொண்ட ஜோதியிடம் தன் அம்மாவின் மனசைக் கண்டு,  கனவில்உன்முகம் பார்க்கையில் கண்ணில் தாய்முகம் வருவது ஏனடிஎன்று கேட்டு அவளை ஒருதலையாய் மனசுக்குள் விரும்பியதால், ஜோதியின் அம்மா சொல்லிப் போலீஸில் மாட்டி விடப்பட்டதாய்க் கருதி, “வழக்கு எண் 18/9” இல் மாட்டிக் கொண்ட வேலு என்கிற வேலுச்சாமியின் கதையும்கூட! போலீஸ் விசாரணையில் வேலு சொல்லும் இந்தக் கதையானது காட்சியாய் விரிய, நெஞ்சை உறைய வைக்கும் சமூகத்தின் பல வாழ்வியல் அவலங்களைப் படச்சட்டகங்களாய் அவை நம் நெஞ்சுக்குள் பதிக்கின்றன. மேற்சொல்லப்பட்ட வரியினுள் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே சமூக அவலத்தை அதற்குரிய வீரியத்துடன் நம் முன்வைத்து நம்மை வெட்கப்படச் செய்பவையாகும். தெருவோரப் பிளாட்பாரத் தள்ளுவண்டிக் கடையில் வேலை பார்க்கும் வேலுவைப் போன்றவர்களை, அப்பா என்கிற பிடிமானத்தை ஒளிப்படமாய் மட்டுமே வீட்டில் மாட்டி வைத்து, படிக்கிற வயதில் வீட்டு வேலைகள் செய்து பிழைக்கும் ஜோதியைப் போன்றவர்களையும் வாழ்க்கையில் நாம் நிறையவே கடந்து வந்திருக்கக் கூடும், அவர்கள் எவரின் முன்கதைகளையும் தெரியாமல்! இந்தப் படத்தில் இவர்களின் முன்கதைகள், காட்சி வடிவாகவோ ஒலி வடிவாகவோ, சொன்னது பாதி; நின்றது மீதி என்று நம் மனசுக்குள் தங்கிப் போவதால், இவர்கள் ஒவ்வொருவருமே அந்தந்தச் சமூகப் பரப்பின் மாதிரி வார்ப்புகளாய் நம் மனதில் நின்று மீதிக் கதையை அவர்களே நடத்துகின்றனர். பாத்திரங்களின் பார்வைக் கோணங்களின் வழியாகக் கதையை முழுக்கவும் நகர்த்தாமல், ஒவ்வொருவருக்கும் தெரிகிற கதைகளின் வழியாக, அதனோடு ஒட்டிச் செல்லும் கூடுதல் கிளைகளின் வழியாகவே திரைக்கதை நகருகிறது.  அதனால்தான் ஆர்த்தியின் பார்வையில் கதை நகரும்போது, அவளின் பார்வைக் கோணத்திற்கு உட்படாத, தினேஷ் அவன் அம்மாவைச் சந்திப்பதும், அவன் கூட்டாளிகளைச் சந்திப்பதும், குடியிருப்பில் தண்ணீர்க்குழாயைத் தினேஷ் அடைப்பதும்  அவள் பங்கில் வந்து விடுகின்றன. இவற்றைத் தினேஷ் வழியாகச் சொல்ல முயற்சித்திருந்தால் கதையின் விறுவிறுப்பு மட்டுப்பட்டுவிடும் என்று கருத வாய்ப்பிருக்கிறது. ஆயின் அதுதான் சரியாயிருந்திருக்கும்.  ஆயின் இதையொரு வழுவமைதியாய்க் கொள்வதில் தவறில்லை. இப்பொழுது, இவர் கதையை நகர்த்திச் சென்ற முறையால், வேலுவின் வழியாக, அவனோடு தொடர்புடைய, ஏழையின் நீதியை எடுப்பாய்ச் சொன்ன ஜோதியின் கதை, காற்றின் கவிதையாய் வந்து போகிற ரோஸியின் கதை, சிறுகதையாய்க் குறுகுறுப்பூட்டும் சின்னச்சாமியின் கதை என்று பலதும் தெரிய வருகின்றன.

அடுக்குமாடிக் குடியிருப்பில், ஊடு சுவரின் எப்பக்கமும் இருக்கும் அண்டையர்களுடனும் தொடர்பே இல்லாமல், அப்பாவும் வேலை; அம்மாவும் வேலை என்று அவதியாய்ப் பறந்து, முன்கதவைப் பூட்டியே வைத்துப் பொந்துக்குள் வாழும் ஒரு மாதிரிக் குடும்பத்தில், மேல் வீட்டில், பணம் காய்ச்சி மரத்தைப் பயிரிட்டிருக்கிறவனின் வயாகராச் சூனியத்தில் சிக்காமல் சிக்கி, செல்பேசியில் தடுமாறிப் போக இருந்து, அதிலிருந்து தப்பிப் பிழைத்துவழக்கு எண் 18/9” இல் சாட்சியாய் வந்து நின்ற கான்வென்ட் மாணவி ஆர்த்தியின் கதையும்கூடத்தான் இது! பெற்றோர்களின் வயிற்றைப் பிசையும் கதை இது!  இவரையும் நாம் பலமுறைத் தெருவில் கடந்து போயிருக்கக்கூடும், இவரின் முன்கதையும் தெரியாமல்! “பிராத்தல் கேஸில் போலீஸில் இரண்டுமுறை கைது செய்யப்பட்டு, இன்றுகல்வித்தாயாய்ப் புதிய அவதாரம் எடுத்திருக்கும்  அம்மா செயலட்சுமியின் பணத்தால் வளர்க்கப்பட்டு, பாலியல் படங்களைச் செல்பேசியில் சேகரித்தும், பெண்களை அவர்கள் அறியாமல் பலமாதிரிப் படமெடுத்தும், தறுதலையாய்சைபர்குற்றத்திலிருந்துபைசல்குற்றம்வரையும் நீக்கமற நீண்டுபோய், “வழக்கு எண் 18/9” ஐத் தன்னிடம் குவிந்து கிடக்கிறஸ்கூல் டொனேஷன்பணத்தைக் கொட்டி மூடப் பார்த்து, இறுதியில் வசமாகச் சிக்கிக் கொண்ட பள்ளி மாணவன் தினேஷ் போன்றவர்களின் கதையும்கூட! “ஒண்ணாலெ நாங்கெட்டேன்; என்னாலெ நீ கெட்டேஎன்கிறகுரூப் ஸ்டடிசேர்க்கையை, ஒளிப்படச் செல்பேசி உருப்படாதவர்களின் கைகளில் உருவாக்கும் சிக்கலைச் சமூகத்திற்குப் புரிய வைக்கும் கதை! இவர்களையும் இவர்களைப் போன்றவர்களையும் நாம் கடந்து வந்திருப்போம் அல்லது கடந்து வந்து கொண்டிருப்போம் இவர்களின் முன்கதைகளும் தெரியாமல்! ஆர்த்தியின் கதை வழியாகச் சின்ன வயசிலேயே வெம்பிப் பழுத்தத் தினேஷின் கதை, ஆர்த்தியின் தோழி வடநாட்டுப் பெண்செல்பேசிஸ்வேதாவின் சகவாசக் கதை, பரமஹம்ஸ நித்தியானந்தரின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்கும் பலான பெண் ஜெயலட்சுமியின் கதை, நூல் பிடித்தது மாதிரி ஜெயலட்சுமியையே முகர்ந்து திரிகிற முகமற்ற குஜால் அமைச்சரின் கதை, தினேஷின் நண்பர்களின் கதை (இன்ஸ்பெக்டர் தூய இருதயத்தின் பையனும், திரைப்படப் பாடகர் பையனும்கூட அடக்கம்) என்று  ”எங்கேயோ கேட்ட குரல்கள் பலதும் நமக்குத் தெரிய வருகின்றன. “அந்த முறுக்குக் கம்பெனிக்காரன் மேல எண்ணையை ஊத்தணும்னு நெனச்ச பாரு...செஞ்சிருக்கணும்டா....நானாயிருந்தா அதத்தான் செஞ்சிருப்பேன் .....நாயி... .சின்னப் பசங்கள வச்சி வேலெ வங்கியிருக்கான்என்று படம் பார்க்கும் நம்மையும் போலீஸ் பிடிக்குள் வளைத்துப் பரிவுடன் கட்டிப் போட்டு, வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றி, அதற்குள் தூண்டில் கொக்கியை ஒளித்து வைத்துக் காசுக்காய்ப் பசப்பு மொழியில் அப்புராணிகளைக் களபலியாக்கும் இன்ஸ்பெக்டர் எம்.வி.குமாரவேலுக்குவழக்கு எண் 18/9”  காசையும் அள்ளிக் கொடுத்து அவரையே களபலியும் ஆக்கிய கதை என்றும்கூட இதைச் சொல்லலாம். அமைச்சர்,சாதி,பெண்,அதிகாரம் என்று ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பிணைந்து, ஏழைகளுக்குப் பாதுகாப்பின்றி, ஊழலுக்குத் துணைநிற்கும் காவல்துறை விசாரணை பற்றிய கவலையைப் பார்ப்பவர் மனசுக்குள் ஊட்டும் படம் இது! இதுவும் நாம் நம் பயணத்தில் கடந்து வந்திருக்கிற ஒன்றாகவே இருக்கக்கூடும்.  கிராமத்தில் இளைஞர்கள் கூத்தைக் கைகழுவி விட்டதால், வயிற்றுப்பாட்டைத் தேடி நகரத்திற்குப் புலம் பெயர்ந்து, பிளாட்பாரத் தள்ளுவண்டிக்  கடையில் வேலுவுக்கு எடுபிடியாய், அவனால் ஊட்டப்பட்ட, திரைப்படக் கனவு விசிறியை மனசுக்குள் மெல்லிதாய்ச் சுழற்றி மகிழும் அற்புதக் கூத்துக் கலைஞன் சின்னச்சாமியும், பசித்த சமூகத்திற்குத் தன் உடம்பையும், வேலுவின் பசித்த வயிற்றுக்கு இட்லியையும், அத்தோடு தன் வாடிக்கையாளரிடம் வேலையையும் வாங்கிக் கொடுத்து, பிற்பாடு வேலுவால்பூவிற்கப் புறப்பட்ட ரோஸியும்கூட அந்தந்தச் சமூகத்தின் மாதிரி வார்ப்புகள்தான்!  இவர்கள் எல்லோருக்குள்ளும் இயங்கும் கதையைவழக்கு எண் 18/9” விசாரணை என்கிற பொதுப் புள்ளியில் சந்திக்க வைத்த நேர்த்தியில்தான், நாம் பயணிக்கும் பாதையில் நம்மைக் கடந்து செல்லும் மனிதர்களின் கதைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இதில் எந்தக் கதையை எடுத்துக் கொண்டு நேர்கோட்டில் பயணித்திருந்தாலும், இத்தனை மனிதக் கதைப்பொதிகளின் அனுபவம் நம் எவருக்குள்ளும் தங்கியிருக்காது. இதுதான் கதையாயிருந்திருக்கும்: “தன் வலையிலிருந்து தப்பி ஓடிய ஆர்த்திக்கு வைக்கப்பட்ட குறி, சிறு பிசகால் மாறிப்போய், அது ஜோதிக்கு வினையாய்ப் போக, காவல்துறையைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அதில் ஜோதியை நேசித்தது தவிர வேறெதுவும் செய்திராத அப்பாவி, ஏழை வேலுவைத் தன் பணத்தைக் கொண்டே, குற்றவாளியாய் ஒப்புக் கொள்ள வைத்துக் கடைசியில்  நீதியின் பிடியில் மாட்டிக் கொண்ட தினேஷின் கதையாக மட்டுமே நின்றிருக்கும்! அல்லது எந்தக் கதைப் பாத்திரத்தை முன்னிறுத்துகிறோமோ அதன் கதையாக மட்டுமே நின்றிருக்கும். அதற்கு மாற்றாக, இந்த விசாரணை முறைக் கதை நகர்வு, கதைப் பொதிகளின் கதை அவிழ்ப்பாய்த் திரைக்கதைக்கு அற்புதமாய்க் கைகொடுத்திருக்கிறது. அதை அற்புதமாய்க் கையாண்டிருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

தொடரும்...

 
Related News
 • பெரியார் - செல்லுலாய்டில்...

 • பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 (தொடர்ச்சி....)

 • தோனி

 • பாரதி-திரைப்படம் (சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்)

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World