Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 (தொடர்ச்சி....)
 

 (தொடர்ச்சி....)

சின்னதும் பெரியதுமான ஐந்து விசாரணைகள் படத்தில் வருகின்றன. மருத்துவமனைப் படுக்கையில் வைத்து ஜோதியிடம் விசாரணை; மருத்துவமனை வராந்தாவில் வைத்து ஜோதியின் அம்மாவிடம் விசாரணை; அவள் கொடுக்கும் துப்பில் காவல்நிலையத்திற்குப் பக்குவமாய் அழைத்து வரச் சொல்லி வேலுவிடம் விசாரணை; தினேஷை விசாரிக்கச் சொல்லிக் காவல்நிலையத்திற்கே வந்து தகவல் கொடுக்கும் ஆர்த்தியிடம் விசாரணை; அவள் கொடுத்த துப்பில், காவல் நிலையத்திற்கே வரச் சொல்லி தினேஷிடம் விசாரணை; அதனூடாகக் காவல்துறையின் நடைமுறைகள்  என்று சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டியபடியே கதை நகர்கிறது. படத்தின் வெவ்வேறு காட்சிகளில், கதை நகர்வின் தேவைக்கேற்ப, கதைகளைச் சுமந்து திரியும் இவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாமலும்கூட, அவரவர்களின் கதைகளைச் சுமந்தபடி, அவரவர்களின் கதைப் போக்கிற்கேற்ப ஒருவரையொருவர் அவர்கள் கடந்து செல்வதென்பது, கதைகளின் பொதியாகவே இந்தப் பிரதி உருவாக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அம்மா மீதுள்ள பிரியத்தைக் கொட்ட இடம் தேடும் பிளாட்பார வேலுவைச் சுற்றி ஒரு கதை; ஆபத்தில் அம்மாவின் நிழல் தேடும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஆர்த்தியைச் சுற்றி ஒரு கதை; அம்மா என்கிற நெருப்பு வளையத்துள் நின்று கொண்டு ஆதரவு அற்றவர்களிடம் அன்பைப் பொழியும் ஜோதியைச் சுற்றியும் ஒரு கதை; அம்மா என்றாலே அடிவயிறு எரிய பெண்மையைத் துகிலுரியும் தினேஷைச் சுற்றியும்  ஒரு கதை; இவை அத்தனையும் கூடிக் கும்மி கொட்டும் இடமாக, அமைச்சரின் அனுக்கிரகத்தில் முன்னாள்பிம்ப்”  இந்நாள்கரஸ்பான்டெண்ட்ஜெயலட்சுமியிடம், சாதியின் பெயரால் பேரத்தைக் கமுக்கமாய் முடிக்கிற காவல் நிலைய ஆய்வாளர் குமரவேலுவைச் சுற்றியும் ஒரு கதை என்று பல்கதைக் குவியலாகவழக்கு எண் 18/9” விரிகிறது! காட்சியின் பின்னணிச் சூழலுக்கு (atmosphere) அழகு செய்ய வந்துபோகும் பெரும்பாலோரில் பலரும், இதில் கதையின் அங்கமாக வந்து காட்சிக்கு அழகு செய்திருப்பது அழகு! அதேபோல் சமூகச் சூழல்தான் ஒவ்வொரு கதைப் பாத்திரத்தின் உருவாக்கத்திற்குமான குணங்களாய் இதில் வெளிப்பட்டு, சமூகத்தின் மாதிரி வார்ப்புகளாய் அவர்களை உலவ விட்டிருப்பதும் நெஞ்சில் உறைகிற அழகு! தெருவில் நாம் கடந்து போகிற எவரும் அல்லது நம்மைக் கடந்து போகிற எவரும், அவர்கள் செய்தி ஆகிறபோதுதான் அவர்களின் கதைகள் சந்திக்கு வருகின்றன. நாமும் அவர்களைப் பேசுபொருள் ஆக்குகிறோம். வாழ்க்கையில் நம் எல்லோருக்கும் நேருகிற அனுபவமே இது! “ஆமா, நேத்து எங்கடையிலெ பென்சில் வாங்கிட்டு ரொம்ப அமெரிக்கையாப் போனானே அந்தப் பையனா? அவனுக்குள்ள இவ்வளவு கதை நடந்திருக்கா?” என்று கேட்டிருப்போமே அப்படியான அனுபவம்! வேலுவுக்கு இறுதிவரையும் தெரியுமா, தான் தள்ளிவிட்டு உதவிய காரின் உரிமையாளன்தான் தன் ஜோதியின் முகத்தைச் சீரழித்திருக்கிறவன் என்பது!  ஜோதிக்கு இறுதிவரையும் தெரியுமா, அந்தக் காரில்தான் தான் வேலை பார்க்கும் வீட்டுப் பெண் ஆர்த்தி,  ஸ்வேதா வீட்டில்குரூப் ஸ்ட்டிஎன்று பொய் சொல்லி விட்டு, வீட்டுக்குத் தெரியாமல் தினேஷூடன் காரில், தன்னைப் பார்த்தவுடன் தலையைக் குனிந்து, தன்னை மறைத்துக்கொண்டு போனாள் என்பது!  தள்ளுவண்டிக் கடையில் உணவைப் பரிமாறிக் கொண்டிருக்கையில், அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தன்னைக் கடந்து செல்லும் ஆம்புலன்ஸில் தன் காதலி ஜோதி, தன் கண்ணுமுழி அவிந்துபோக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறாள் என்பதும் உணவை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேலுவிற்குக் கடைசிவரையும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஒருவருக்கொருவர் தெரியாமலே, வெவ்வேறு கனவுகளுடன், இவர்கள் எல்லோரும் வெவ்வேறு சமயங்களில் கடந்து செல்லும் புள்ளியாய் அந்தத் தெருதான், இவர்களின் அப்போதையக் கதைக்குச் சாட்சியாய் அமைந்திருக்கிறது. அதேபோல அடுக்குமாடிக் குடியிருப்பின் வெளியிலும் இவர்கள் நால்வருமே ஒருவருக்கொருவர் தெரியாமல் மனசுக்குள் வேறுவேறு விதமான கனவுகளுடன் கடந்து செல்வதன் சாட்சியாகவும் அந்தத் தெருதான் அமைந்திருக்கிறது. ஆர்த்தி, தினேஷைத் தவிர்க்க நினைத்தும், மனசு அவன் பிடிக்குள் வழுக்கிச் சென்று விடுவதன் சாட்சி அந்தத் தெருதான்! ஜோதி, வேலுவைத் தவிர்க்க நினைத்தும், விதி அவர்கள் இருவரையும் மோத வைத்துக் கொண்டிருப்பதன் சாட்சியும் அந்தத் தெருதான்! தெருவுக்கும் நமக்கும் மட்டுமே அவர்களின் அந்தரங்கக் கதைகள் தெரியும். கதையில் யாருக்கும் யாரும் வில்லன்களில்லை; அவரவர்களுக்கு அவர்களின் செயல்களே வில்லன்களாகிப் போய்விடுகின்றன. நேர்கோட்டில் சொல்லப்பட்டு இருந்தால், இது, மேற்சொன்ன எவரொருவரின் பயணமாய், ஒரு கதையாக மட்டுமே நின்றிருக்கும். மையக் கதைப் பாத்திரத்தின் தடம் பற்றியே மற்றையக் கதைப் பாத்திரங்கள் பயணித்திருக்கும். ஆனால் இப்பொழுது இது, பல கதைப் பொதிகளின் கதையாகி, அவற்றுக்குள் உள்ளமுங்கி ஓடும் நீதிக்கான நீரோட்டத்தை அடையாளங் காட்டி, அதனுள் ஒளிந்திருக்கும் நுண்ணரசியலை வெளிப்படுத்தி, அதன்வழி வேறு வேறுபட்ட அனுபவங்களைப் பார்வையாளருக்குத் தந்திருக்கின்றன என்பது முக்கியம். பல கதைகளின் குவிப்பின் புள்ளிதான்வழக்கு எண் 18/9” என்பதை அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கிற பாலாஜி சக்திவேல், இந்தப் புதிய சுவையனுபவத்தைத் தந்ததன் மூலம் உண்மையாக நடந்த செய்தியைப் புதுக் கதைப்பொதிக்குள் புதைத்துப் புதுமை அனுபவமாக்கி இருக்கிறார். பாரதி சொல்வதுபோல், “சொல் புதிது; சுவை புதிதுஎன்பதாய் இந்த அனுபவத்தைத்தான் நல்ல படைப்புகள் எல்லாமும் செய்கின்றன.

கதையின் பல்வேறு திசைகளிலும் நாம் அதனுடன் பயணிக்கும்போது, கதைப் பாத்திரங்களினூடாக நாம் எதிர்கொள்ளும் சமூக அனுபவங்கள் அசாத்தியமாயிருக்கின்றன. கதை நடக்கிற காலம், வேலு பிளாட்பாரக் கடையில் வேலை பார்ப்பவனாக இருக்கிற பொழுதில்தான்! ஆயின் அப்படி மட்டுமே காட்டப்பட்டு, வேலுவின் கதையைத் தொடங்கவில்லை பாலாஜி சக்திவேல்! முன்கதையில், சமூகக் குரூரங்களால் சக்கையாக்கப்பட்ட ரத்த சாட்சியாகக் காட்டப்படுகிறான் அவன்! அவனின் முன் வாழ்க்கையை, விசாரணை என்கிற பெயரிலான அவனுடனான பயணத்திலேயே நாம் அறிவதால், அது அவன் மீதான நம் பரிவைக் கூடுதலாக்க உதவுகிறது. விவசாய நிலம் அழிக்கப்பட்டு, “ரியல் எஸ்டேட்உபயத்தால் வசந்தம் நகர் என்று புதுநாமம் சூட்டப்பட்டதால், விவசாயம் செய்ய முடியாமல் கந்துவட்டிக் கொடுமையால் வாழ்விழந்த ஒரு விவசாயியின் பையன் அவன்; கிட்னியா, பூச்சி மருந்தா என்று கலங்கி நிற்கும் பெற்றோருக்குத் தன் வாழ்க்கையைக் கைத்தடியாக்கி வழி சொன்னவன் அவன்; கல் உடைக்கும் தொழிலில் பெற்றோரும், கல்வியை இழந்து கொத்தடிமையாய் அவனும் வாழ்வைத் தொலைத்தவர்கள்; சொத்து சுகம் இல்லாமல் அனாதையானதால், பிழைக்க வழிதேடி நகரத்திற்குப் புலம் பெயர்ந்து, யாரும் யாரையும் முகத்திற்கு முகம் எதிர்கொள்ளும், ஒளிதலற்ற பிளாட்பாரத்தில், பூங்காவின் பெஞ்சில் வானம் பார்த்து வாழ்ந்து வருபவன் அவன்! தன் பசிக்குத் திரையாக, நகரத்தின் அதீதப் பசிக்கு இரையாகக் கிராமங்களிலிருந்து நகரத்திற்குப் புலம் பெயரும் எத்தனையோ இளைஞர்களின் ஒரு சித்திரம்தான் வேலு! இதன் இன்னொரு சித்திரம், கிராமியக் கலாச்சாரத்தையே நம்பி இருக்கும் அந்த மண் சார்ந்த கலைஞர்கள் நகரமயமாதலின் நாகரிகப் பசிக்கு இரையான சமூக அவலத்தால் புலம்பெயந்து, நகரத்தின் பிளாட்பார வாழ்க்கைக்குப் பொருந்திப் போகிற சின்னச்சாமி என்கிற பலவேடக் கூத்துக் கலைஞன்! வசனத்தை டப்பிங்கில் சரிபண்ணி, வடிவத்தை டோப்பாவில் சரிபண்ணி, கடைசிவரையும்தமிழரசியிடம் தன் ரவ்வூண்டுக் காதல் வசனத்தைச் சரியாகவே சொல்லி முடிக்காத, திரைப்பட நடிகர்களின் முகப் பூச்சைத்தான் காலம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது; உண்மையான உழைப்பிற்கும் படைப்பிற்கும் அங்கு வேலையே இல்லை என்கிற கலைத் தொழில் அவலத்தையும் சமூக அவலமாகப் பாலாஜி சக்திவேல் போகிற போக்கில் இதில் சொல்லாமல் செல்லவில்லை. அதேபோல், உண்மையில் நகரத்தில் அடுக்குமாடிகளில் இருப்பவர்கள், கதவில் ஓட்டைக் கண்ணாடி பொருத்திக் கொண்டு, பகலிலுமே கதவைப் பூட்டிக் கொண்டு, அவரவர்களின் குச்சடிக்குள் ஒளிந்து கொள்கிற மேல் நடுத்தரக் குடும்பத்தின் சமூக அவலம், அந்தக் குடும்பத்திற்குள் நிலவுகிற அப்பாவின் கண்டிப்பு, அம்மாவுடன் ஆர்த்திக்கு உள்ள உறவு நெருக்கம், செல்பேசியின் அதிகாரக் கட்டமைப்பின் மகுடி இசைக்குள் மயங்கிக் கிடக்கும் இளைய தலைமுறை, பள்ளியில் தன்னுடன் படிக்கும் ஸ்வேதா என்கிற மார்வாடிப் பெண்ணின், “பேரண்ட்ஸ்னாலே ஓயாம அட்வைஸ்தான் பண்ணிகிட்டே இருப்பாங்க........நல்ல வசதியான பையங்றே, அப்படீன்னாலவ்பண்ணித் தொலைக்க வேண்டியதுதானே ....புடிச்சிருந்தாகண்டினியுபண்ணு; இல்லகட்பண்ணி விட்டுரு...இட் இஸ் டைம் பாஸ்யாஎன்கிற சாத்தனின் வேதம் ஆகியவை சமூக யதார்த்தமாய் காட்டப்படுகின்ற அதேவேளை, சமூகத்தின் மேலான அதிர்ச்சியையும் பயத்தையும் நமக்குள் ஏற்படுத்தி, நமக்குள்ள பொறுப்பையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது. “செக்ரடரிதவிர்த்துக் கட்டிய புருஷனைக் கண்ணிலேயே காட்டாமல், “ஏமாற்றுவதெல்லாம் உங்க எல்லார்கிட்டயிருந்தும் கத்துக்கிட்டதுதானே....வெளியில அப்படித்தானே பேசணும்என்று தன் சாதிக்கார அமைச்சர் மீதே பாசக்கார அம்பு வீசும் மேல் வீட்டு ஜெயலட்சுமி, பணமாய் மட்டுமே அவளைப் பார்த்தும், மற்றைய பெண்களைஅய்ட்டங்களாய் மட்டுமே பார்த்தும்   படிதாண்டிய பதரான அவள் மகன் தினேஷ், “ஏய்! இது வெறும் ட்ரெயிலர் தான்டா. சீக்கிரமே மெயின் பிக்சர் காட்டுவாண்டா...என்னடா மச்சி”  என்று தினேஷை உசுப்பேத்தும் ஒருசாலை நண்பர்கள் கூட்டம், அது நகர்த்தும் சமூக ஆபத்து, “இனுமெ டீலிங் எல்லாம் மினிஸ்டர் மூலம் வேண்டாம். அவரெ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நேரிடையா எங்கிட்டயே வச்சுக்கலாம்என்றுபாசக்காரப்புள்ளே”“ ஆக ஜெயலட்சுமி மேடத்திடம் காவல்துறை ஆய்வாளர் குமாரவேல்டீல்விடுவது என்று சமூக அவலத்தின் அதிர்ச்சிகள் பலதும் ஓரிரு காட்சிகளிலேயே மிக அழுத்தமாகக் காட்டப்பட்டு இருக்கின்றன. இவையெல்லாம் கட்டவிழ்ந்து போகிறபோது, இல்லாதவர்களுக்கு நீதி எட்டாக் கனியாகி விடுகிறபோது, கேள்வி கேட்க நாதியற்ற நிலையில், இதற்கெல்லாம் விடையாகத்தான், பொதுவுடைமைச் சிந்தனையால் புடம் போட்டு வளர்க்கப்பட்ட ஜோதியின் தீர்ப்பு  இப்படி அமைகிறது. இப்படியான சமூகச் சீரழிவுகள் அத்துமீறும்போது, நியாயங்கள் பணம் படைத்தவர்களின்  சட்டைப் பைக்குள் பதுங்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் தீர்ப்புகள் இப்படித்தான் அமையும் என்கிற எச்சரிக்கையையும் இந்தப் படம் அழகாகச் செய்திருக்கிறது. இந்த இட்த்தில் மொத்த அரங்கும் கைதட்டி ஆரவாரிப்பது எதை நமக்குச் செய்தியாய்ச் சொல்லுகிறது?  நீதிமன்ற வாசலில் ஜோதியின் அம்மாவும் சின்னச்சாமியும் பேசிக் கொண்டிருக்கையில் சின்னச்சாமி, “அழாதம்மா. நான் செய்யணும்னு நெனச்சிருந்தேன். ஒம் பொண்ணு செஞ்சிடுச்சிஎன்று ஏழையின் நீதியாய்ச் சொல்வதன் பொருள்தான் என்ன? ஏழைகள் என்பதால் அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப்படும்போது அவர்கள் எப்படித்தான் தங்களின் இருப்பை உணர்த்துவார்கள்? இது தவறாகக்கூட இருக்கலாம். ஆனல் நீதி மறுக்கப்பட்டவர்களின் பார்வையில் பார்த்தால் அதன் பதில் வேரொன்றாய்த்தான் இருக்கும். அந்தவகையில், தனி மனிதக் கோபம் சமூகக் கோபமாய் உருமாகிற இட்த்தை அழகாகத் தொட்டுக் காட்டி இருக்கிறார் பாலாஜி சக்திவேல்!  அருந்த்திராய், “மவோயிஸ்டுகள்பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையில், “கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அரசு நிற்கிறது; பூர்வகுடி மக்களுக்காக (அரசு நிற்க வேண்டிய இடத்தில்) மாவோயிஸ்டுகள் நிற்கிறார்கள். நடக்க இருக்கும் ஆபத்தை நிறுத்தியே ஆக வேண்டும்என்று எழுதியிருந்தது இந்த இடத்தில் நினைவின் மேல்தளத்திற்குத் தானாகவே வருகிறது. அந்தவகையில், “வழக்கு எண் 18/9” ஒடுக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தும் காரியத்தைத் துணிவுடன் செய்திருக்கிற ஓர் அரசியல் படமாகவே வெளிப்பட்டிருக்கிறது.                   

கதைப்பாத்திரங்கள் அத்தனைப் பேரும் அன்றாடம் நாம் பார்த்துக் கடந்து செல்கிற அல்லது சந்தித்துத் திரும்பிய பல சமூகத் தரத்து மனிதர்களின் மாதிரி வார்ப்பாக, துளிர்க்கும் தளிர்போல அத்தனை இயல்பாக, மனசைப் பரவசப்படுத்துகின்றனர். அத்தனைப் பேரின் செயல்பாடுகளையும் அவர்களறியாமல் மறைமுகக் காமிராவைக் கொண்டு படம் பிடித்ததுபோல் அத்தனை இயல்பாக, இயல்பு பிசகாமல் படமாக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் யாரும் இதுவரை திரையில் முகம் காட்டியவர்களாகத் தெரியவில்லை. யாராகக் காட்டப்பட்டிருக்கிறார்களோ அவர்களாகவே இவர்கள் அமைந்து போயிருப்பது பரவசத்தைப் பலமடங்கு பெருகச் செய்கிறது. காவல்துறை ஆய்வாளர் குமாரவேல், குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்ளச் சொல்லி வேலுவைச் சம்மதிக்கச் செய்து, அதை ஒத்திகை பார்க்கிற இடம் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அதில் பங்கு கொண்டிருப்பவர்களின் உணர்ச்சிக் குமைவுகளின் இயல்பான வெளிப்பாடுகளும்  அருமை! “இயல்புஎன்பதும்நடிப்புஎன்பதும், “இயற்கை”, “செயற்கைஎன்பதுபோல் தன்னளவில் முரண் கொண்ட இருவேறு சொற்களாய் இருந்தபோதும், இரண்டையும் நேர்ப்படுத்தி, இரண்டின் இழைப்பில் திரைக்கு வேண்டப்படும்நடிப்பில் இயல்புஎன்பதைப் புதியவர்களிடம் கொண்டு வருவது என்பது மிகவும் சவாலானது; மிகப் பெரிய மெனக்கெடல் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. பாத்திரங்களை வார்த்து, அதற்கு இத்தனை இயல்பான வடிவம் கொடுத்த பாலாஜி சக்திவேலுவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  திறந்தவெளிப் பிளாட்பரத்தின் பகல், இரவு, சேரியின் பகல், காவல் நிலையம், நீதிமன்றம், குடியிருப்பு அறைக்குள்ளான பகல், இரவு ஆகியவற்றை அந்தந்த இயல்பான சூழலுக்கு ஏற்ப இதமான, இணக்கமான ஒளியமைப்பு  செய்து, படத்தின் இயல்பான தன்மையை உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்த உதவியிருக்கிற ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனையும், கலை இயக்குநர் மயில்கிருஷ்ஷையும் பாராட்டியே ஆகவேண்டும்.

 

பின்னணி இசையை, உறுத்தாமல், இயல்பான ஒலிகளின் வழியும், தேவைப்படுகிற இடங்களில் தெருவொர டிரான்ஸிஸ்டர் பாடல்களைக் கொண்டும் மிகக் குறைவான இடங்களில் ஒலிக் கோர்வைகளைக் கொண்டும் அமைத்திருப்பதற்கு இசையமைப்பா.ளருக்கு நன்றி சொல்லவேண்டும். “வானத்தையே எட்டிப் புடிப்பேன் பூமியையும் சுத்தி வருவேன்/உன் கண்ணுக்குழி அழகினில்தான் என் கற்பனையை நான் வளர்த்தேன்/ உன் நெஞ்சுக்குழி  மீது தான்டி/ என் நிம்மதியை நான் புதைச்சேன் /அடி பெண்ணே நீயும் பெண்தானோ/ இல்லை பிரம்மன் செய்த சிலைதானோ?” என்று தெருவைக் கடந்து செல்லும பார்வையற்றோரின் பாடல் வரிகள்தான் படத்தின்கருப்பொருள் இசையாய்அங்கங்கே வந்து இதயத்தைத் தொட்டுச் செல்கிறது. இறுதியில் நம்மை அதிர வைக்கும், “பிரம்மன் செய்த ஜோதியின் கண்ணுக்குழிக்  காட்சியை அசைவின்றி நிறுத்தி, அதன் ஒலியாய் இதுவே நெஞ்சுக்குள் வாள் கொண்டு அறுப்பதாய் திரையரங்கு முழுக்க நிறைந்து, புதுமையான காதல் கதையாய் நெஞ்சில் நிற்பதும் அருமை! கூடுதலாகச் சொல்வதென்றால், சான்றுக்கு, கொத்தடிமை வாழ்க்கைக்கு அப்பா அம்மா அழுது வழியனுப்ப, “தம்பி சீக்கிரம் வாடா ட்ரெயினைப் புடிக்கணும்என்று ஏஜெண்ட், வேலுவை அழைக்க, கிராமத்தின் பள்ளிக்கூட மணிச்சத்தம் பின்னணியில் ஒலிக்க, ஏஜெண்டுடன் பைக்கில் வேலு பள்ளியைக் கடக்கையில், பள்ளிச் சிறுவர்களின்  ஒப்புவிப்பில்தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்து வணங்குவோம் வாரீர்என்ற கோரஸ் ஒலிப்பதும், அதைத் தொடர்ந்து, ஒப்புக்காய்ப் பள்ளிச் சுவரில் எழுதப்பட்டிருக்கும்பள்ளி செல்வோம்; பயன் பெறுவோம்என்கிற வாசகத்தைக் காட்டி, (“விழியுள்ள கனவான் விழாக்கொடி ஏற்ற, கைதட்டி மகிழ்ந்தனர் சுற்றி நின்ற கண்ணற்றவர்என்ற கலாப்ரியாவின்குருடர் பள்ளியில் கொடியேற்றம்கவிதை நினைவில் நிழலாடுகிறது.) அதனருகே கட்டிப் போடப்பட்டு இருக்கும் எருமைமாட்டின் கத்தலில், 13 வயது வேலுவை அது பள்ளிக்குத் திரும்ப அழைப்பதாய் அருமையாய் அதை வெளிப்படுத்துவதும், ( குழந்தைத் தொழிலாளர் முறைக்கு என்ன மாற்று என்பதைஅனைவருக்கும் கல்வியைக் கூறும் அரசாங்கம்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை நாமும்பாரத தேசமென்று தோள் தட்டுவோம்”!)  யதார்த்தம் இதை எதையும் காதில் வாங்காமல் தன் போக்கில் பைக்கின் சத்தத்தில் ஏஜெண்டின் தைரியத்துடன், புரியாமல் சென்று கொண்டே, வடநாட்டு ஏஜெண்டுடன் வேலு பயணிப்பது ஆகியவற்றைக் கண்ணை மூடிக் கொண்டும் உணர வைத்திருக்கும் பின்னணி ஒலியின் அபரிமிதமான அர்த்தப் பொதிவைச் சொல்லலாம். தொடக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து ஆம்புலன்ஸ் வெளியேறுவதை மேலிருந்து காட்டி, அதற்கொரு பரபரப்பூட்டும் இசையை அளித்துக் கூடுதல் பரபரப்பை உண்டாக்கி, அதைக் கடைசி வரையும் தொய்வில்லாமல் கொண்டுசெல்லும் திரைக்கதையின் விறுவிறுப்பைக் கூடுதலாய் மெருகுபடுத்தித் தந்திருக்கிற தொகுப்பாளர் கோபிகிருஷ்ணானும் பாராட்டப்பட வேண்டியவர். எல்லாவற்றிற்கும் மேல், பாலாஜி சக்திவேல் செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய இந்த அரசியல் படத்தைத் தயாரிக்க, பாலாஜி சக்திவேலுவுக்கு முன்கை கொடுத்த லிங்குசாமிக்கும் பாராட்டுகள்!

 
Related News
 • பெரியார் - செல்லுலாய்டில்...

 • பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9

 • தோனி

 • பாரதி-திரைப்படம் (சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்)

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World