Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபெரியார் - செல்லுலாய்டில்...
 

22.05.1959, விடுதலை நாளிதழில்,"3 பேய்கள் – 5 நோய்கள் – 3 முட்டுக்கட்டைகள்" என்ற தலைப்பில், கடவுள் (மதம், சாஸ்திரங்கள்), சாதி, ஜனநாயகம் ஆகிய இந்த மூன்றையும் 'பேய்கள்'என்றும்; பார்ப்பான், பத்திரிகைகள், அரசியல் கட்சிகள், தேர்தல்கள், சினிமா என்ற ஐந்தையும்'நோய்கள்'என்றும்; முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும், முன்னோர்கள் எழுதியபடி நடக்க வேண்டும், முன்னோர்கள் நடந்தபடி நாமும் நடக்க வேண்டும் என்ற மூன்றையும்'முட்டுக்கட்டைகள்'என்று பெரியார் வரையறுக்கின்றார். எதை இந்த சமுதாயத்தை பீடித்த நோய்கள் என்று சொன்னாரோ அந்த ஐந்து கிருமிகளையும் உள்ளடக்கி சொல்லப்பட்ட “செல்லுலாய்ட் பெரியார்” என்பவர் “சொந்தபுத்தித் தேவையில்லாதவர்களால்” அவர்களின் அரசியல் தேவை கருதி சொல்லப்பட்ட  பெரியார் என்பதை மறக்காமல் இதனைத் தொடரவேண்டும்

"ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு “யோக்கியதை” இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படை யாய்க்கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத்தொண்டு செய்ப வனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்." என்று பிரகடணப்படுத்தி நம்மோடு, நம் காலத்தில், “ இரத்தமும், சதையுமாக “ வாழ்ந்த  ஒரு வரலாற்றைப் பதி்வு செய்கின்றபோது அந்தப் பதிவு நமக்குள் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தவேண்டும். அட்டன்பரோவின் “காந்தி”த் திரைப்படம் அப்படி ஒரு பாதிப்பினை, காந்தியத்தில் உடன்பாடு இல்லாத வர்களிடம்கூட ஒரு மவுன பாதிப்பினையும், காந்தியின்பேரில் ஒரு மரியாதையினையும் கூட ஏற்படுத்தியது. ஆனால் பெரியார் திரைப்படம் …?

சமகால வரலாற்றை – ஒரு இனத்தின் அடையாளத்தில் மாற்றத்தினை ஏற்படுத்திய கடந்தகால சரித்திரத்தை – அதுவும் சமூகத்தின் சகல தளங்களிலும் கலகக்குரல் எழுப்பிய ஒரு போராட்டக்காரரின் வாழ்க்கையினை நிகழ்காலத்தில் பதிவு செய்வது, எதிர்கால சமூகத்திற்கு இந்தக் கலகக்குரல் ஏன், எதற்காக, எதனால் எழுப்பப்பட்டது, அதன் சமூக விளைவு என்ன? என்று சொல்லுவதாக இருக்க வேண்டும். இங்கே பெரியாரைப் பார்க்காத, தெரியாத தலைமுறை வந்துவிட்டது. அந்த இன்றைய தலைமுறைக்குப் பெரியார் அடையாளப்படுத்தப்படவும், அறிமுகப்படுத்தப்படவும், தெரிவிக்கப்படவும் வேண்டும். அந்தப் பணியினை  திரைப்படம் என்ற ஊடகம் வெகு எளிதாக செய்து விடக்கூடியது. ஆனால் பெரியார் திரைப்படம், இன்றைய சமூக, அரசியல் சூழலில் பெரியாரின் இயக்கமும், தத்துவங்களும் எப்படி நீர்த்துப்போகச் செய்யப்பட்டு விட்டனவோ, அதைப் போலவே இந்தத் திரைப்படமும் சம்பவங்கள் இடம் பெயர்க்கப் பட்டு சரித்திரம் சிலருக்கு சவுகரியமாக செதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றை எப்படி பதிவு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு 'பாடமான படம்'என்று சொன்னால் மிகையில்லை.

பெரியார் திரைப்படத்தின் தொழில்நுட்பங்குறித்து ஆழ்ந்து பேசவில்லை. ஆனாலும் ஒரு செய்தியினை சொல்லிவிடவேண்டும். எந்த ஒரு வரலாற்றையும் அல்லது வரலாற்றின் போக்கினை மாற்றிய வரலாற்று பாத்திரங்களை ஊடகங்களில் காட்சிப்படுத்துகின்ற போது, அந்தப் பாத்திரங்களின் அக,புறச்சூழல்களை கவனத்தில் கொள்ளவில்லை எனில் – அல்லது அது தொடர்பான ஒளி,ஒலி, படத்தொகுப்பு, இசை, உடை, ஒப்பனை, கலை, அரங்கம், அரங்கப்பொருட்கள் போன்றவற்றில் கவனங்கொள்ளவில்லை எனில் இயக்கு னரின் போதாமையை வெளிப்படுத்திவிடுவதுடன், அந்தப்பதிவு பார்வையாளர்கள் மத்தி யில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். பெரியார் திரைப்படத்தினைப் பொருத்தவரை “இயக்குனரின் போதாமை” யினை மட்டுமல்ல “கருத்தாக்க ஆலோசனை – வீரபாண்டியன்” என்ற அரசியல் விமர்சகரின் வரலாற்றுப் போதாமையினையும் வெளிச்ச மிட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி, கி.வீரமணி, ஞானராஜசேகரக் கூட்டணியின் எதிர்பார்ப்பு அல்லது அவர்களுக்குத் தேவையான அரசியல் மட்டுமே காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. எனவே, பெரியாரின் வரலாற்றை பதிவு செய்தது பற்றியும், அதனைக் காட்சிப்படுத்திய விதம் குறித்தும் பேசலாம்.

பெரியார் பற்றிய பிம்பம் என்பது பொதுபுத்தியில்,"அவர், கடவுள் இல்லை, கும்பிடு பவனைக் காட்டுமிராண்டி என்றவர், பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்றவர். அதாவது, பாப்பானையும், பாம்பையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடி என்று சொன்னவர் - பெரியார் அப்படி சொன்னாரா என்பது வேறு செய்தி – கோவில்களை, வழிபாட்டுக்குரிய உருவச்சிலைகளை உடைத்தவர், அவற்றை செருப்பால் அடித்தவர், அரசியலில் யார் ஆட்சியில் இருப்பவர்களோ அவர்களை ஆதரிக்கக்கூடியவர், வகுப்புவாரி உரிமைக்காகப் பாடுபட்டவர், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றவர்" என்ற இப்படியான பொதுபுத்தியில் பதிவாகியுள்ள பெரியார் காட்சிப்படுத்தப்பட்டு 'அது ஏன்? அது எதனால்?'என்று சொல்லப்பட்டு,"பார், இவர்தான் பெரியார்" என்று சொல்லியிருந்தால், தோழர்கள் கி.வீரமணியும், ஞானராஜசேகரனும் ,"ஒரேஒரு சிறிய வெட்டுகூட இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டது"என்று சொல்லிக் கொண்டிருந்திருக்க முடியாது! பெரியார் திரைப்படம் ஒரு வெட்டுகூட இல்லாமல் வெளி வந்துள்ளது என்றாலே அதனால் ஆளும்வர்க்கமாகிய பார்ப்பன, பனியா ஏகாதிபத்தியத் திற்கு எந்தப் பிரச்சனையில்லை, பாதிப்பில்லை என்றுதானே பொருள், எனவே வெட்டு இல்லை. ஆனால் பெரியாரின் பிம்பமென்பது ஆளும் வர்க்கத்திற்கு அச்சம் தரக்கூடியது என்பதுதான் உண்மை. அதை நீர்த்துப்போகச் செய்தது இயக்குநரின் வெற்றி என்பதும் உண்மை!

இயக்குநர் ஞானரஜசேகரன் சொல்கின்றார் பக்கத்தில் தோழர் கி.வீரமணியை வைத்துக் கொண்டு,"பெரியாரைப் பற்றிய வரலாற்று ஆவணமாக படத்தை நான் எடுக்கவில்லை. பெரியாரைப் பற்றி மக்களிடம் பரப்பப்பட்ட அழுத்தமான படிமங்களை உடைக்கவே அவரின் மனிதநேயச் சிந்தனைகளையும், உறவுகளையும் காட்சிப்படுத்தியிருக்கின்றேன் இது, பெரியாரைப் பற்றிய முழுமையான படமல்ல, அது என் நோக்கமுமல்ல!"(திருச்சி யில் நடைபெற்ற ஒரு பாராட்டு நிகழ்வில் 19.05.2007யில் பேசியது) 'பார்ப்பனச் சார்பு டைய ஒரு ஒண்ணரைப் பார்ப்பனனுக்குப்' பெரியாரைப் பெரியாராகப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம் எப்படி இருக்க முடியும்?. பெரியார் என்ற புரட்சிக்காரரை, சமூகக் கலகக்காரரை வெறும் சீர்திருத்தக்காரராக, வாடிய பயிரைக்கண்டபோது வாடிய வள்ளலாராக, ஏன் ஆதிசங்கரராகக்கூடக் குறுக்கி அடையாளப்படுத்த வேண்டும் என்ற பார்ப்பனபுத்தி பெரியாரைப் பற்றி மக்களிடம் பரப்பப்பட்ட அழுத்தமான படிமங்களை உடைக்கும் நோக்கம் கொண்டதாகத்தானே இருக்கமுடியும். ஆம், பெரியார் சொல்வது போல, பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது!

தோழர்கி.வீரமணியும் கூட, “ இது வெறும் ஆவணப்படத் தொகுப்பு (Documentory) போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடக்கூடும் என்பதால்தான் ஆண்டுகள் தவிர்க்கப் பட்டது” என்று உண்மையில் (ஜூலை,2007) குறிப்பிடுகின்றார். உண்மைதான், ஆண்டு கள் மட்டுமல்ல அவசியமான பல நிகழ்வுகளும் தவிர்க்கப்பட்டதுடன்  திரிக்கவும்பட்டுள் ளது. எனவே இது ஆவணப்படமாகவுமில்லாமல் கலைப்படமாகவுமில்லாமல் 'காசு பண்ணுகிற'கமர்சியல்படமாக மாறிப்போனது. அதன் விளைவுதான் பெரியார்,  குறைந்த பட்சக் குத்தாட்டம் போடுகின்ற தாசிவீட்டில் காசு கணக்குப் போட்டு “இந்தத் தொழில்லே லாபமில்ல போலிருக்கே” என்று வருத்தப்படுகின்றார். இங்கும் இயக்குனரின் “பார்ப்பனியப்புத்தி”தான் பளிச்சென தெரிகின்றது. ஆனால் இப்படி ஒரு வரலாற்று சம்பவம் தோழர் கி.வீரமணிக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் தான் தெரியும்போல!

பெரியாரின் சமூக அரசியலை, அதன் போக்கை, அதன் நோக்கை, அதன் இலக்கை படம் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது, புரிந்து கொள்ளக்கூடாது என்பதில் இயக்கு னர் மிகத் தெளிவாக இருந்திருப்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல, கலைஞர் கருணாநிதி யும், கி.வீரமணியும் அதற்கு உடன்பட்டு, தங்களை முன் நிறுத்தியே பெரியாரைச் சொல்லி இருக்கின்றார்கள். எவ்வளவு வரலாற்றுப் பிழை!

"நான் எந்தத் திரைப்படக் கொட்டகைக்கும் அண்மைக்காலத்திலே போனது கிடையாது. காந்தி வரலாறு பார்க்க ஒரு நண்பர் வற்புறுத்தி தேவி தியேட்டருக்கு அழைத்துப்போனார் அய்யா அவர்களுடைய வரலாற்றை எப்படி உருவாக்க வேண்டும் என்பதற்காக அந்தப் படத்தைப் பார்க்கப்போனேன்."(பெரியாரியல் சொற்பொழிவு பாகம் ஒன்று) என்று சொன்ன தோழர் கி.வீரமணி, அய்யாவின் வரலாற்றின் வழிநெடுக பிழைகளையும், திரிபு களையும் செய்து “வரலாற்றை உருவாக்கியுள்ளார்”. அதில் சிலவற்றை மட்டும் இங்கே வரிசைப்படுத்துகின்றோம்.  

முதற்கோணல் முற்றும் கோணல் என்பதுபோல, ஈவெராவின் 12ஆவது வயதில் நடந்த சம்பவத்தை – ஈரோட்டுக்கடைத் தெருவில் ராமநாத அய்யர் என்ற கல்லிடைக்குறிச்சிப் பார்ப்பனரின் கடையைத் தாண்டித்தான் ஈவெரா தன் கடைக்குச் செல்லவேண்டும். அப்படிப் போகும்போது ராமநாத அய்யரை வம்பிழுக்காமல் போகமாட்டார். அப்போது நடந்த சம்பவம்தான் தலைவிதி பற்றியது. கால்கொடுத்துத் தூக்கி வைக்கப்பட்டிருக்கும் அய்யர் கடையின் முன்தட்டியினை தள்ளிவிட, அது அய்யரின் தலையில் விழ, அய்யர் கோபத்துடன் துரத்த, “தலைவிதி உன் தலையில் தட்டியைத் தள்ளிவிட்டது, என்னை ஏன் வைகிறாய்?” என்று ஈவெரா ஓட – இப்படி தமிழர் தலைவரில் சாமி.சிதம்பரனார் சுவைபட எழுதியிருப்பார். அந்த சம்பவத்தை, - “லிபர்டி கிரியேஷன்ஸ்” - ஈவெராவின் 19ஆம் வயதில் அவருக்கு நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்வாக உருவாக்கிக் காட்டுகிறது! ஒருவேளை “திறமையான திரைக்கதை”யோ என்னவோ! 19 வயது ராமசாமியின் தோற்றமா, சத்தியராஜின் தோற்றம்! பாரதியை படமாக்குகின்றபோது இளவயது பாரதி, பாரதி என்று வித்தியாசயப்படுத்திய இயக்குனர், பெரியாரில் அந்த உத்தியினை விடுத்து ஏன் சத்தியராஜை முன்னிறுத்துகின்றார்? சத்தியராஜ் அவர்கள் தந்தை பெரியாரினை செறிவாக உள்வாங்கி அந்த உணர்வுகளை சிறப்பாக வெளிப் படுத்தியிருக்கின்றார் என்பதில் இரண்டு கருத்தில்லை. ஆனால் நாம் முன்பு சொன்னது போல, வரலாற்றை பதிவு செய்கின்றபோது கவனங்கொள்கின்ற விசயமல்லவா இது?

அதைப்போலவே,

உருளைக்கிழங்குத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும்போது, “நீ இறைக்கிற தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காணமுடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிறபொழுது, இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்கமுடியுமா?” என்று பெரியார் கேட்பதாகக் காட்சி அமைத்திருப்பது, பிதிர்களுக்குப் பிண்டம் போடுகின்ற - திவசம் கொடுக்கின்ற நிகழ்வு மூடநம்பிக்கைக்குரியது என்பதை நிறுவதற்காக அல்லது பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்கின்ற உத்தி என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாமே தவிர அந்த “கர்ண பரம்பரை”க் கதையினை பெரியாருடன் தொடர்புபடுத்தி, அவரையே அதில் பங்கேற்க வைப்பது என்பது பெரியாரின் வரலாற்றையும் கர்ண பரம்பரைக்கதையாக்கி விடக்கூடா தல்லவா? இந்தத் தகவலைத் தோழர் மு.இராமசாமியிடமும், அவரின் “கலகக்காரர் தோழர் பெரியாரி”ன் போதும் சொன்னதாக நினைவு. காரணம் அவரது நாடகத்தில் உருளைக் கிழங்குத்தோட்டம், கரும்புத்தோட்டமாக சொல்லப்பட்டது. இதை இங்கே சொல்லக் காரணம் பெரியாரின் வரலாற்றில் அவர் சம்பந்தப்பட்ட இப்படியான சம்பவம் எங்கேயும் அவரால் சொல்லப்படவில்லை. ஆனால், இந்தக் கர்ணப் பரம்பரைக் கதையினை ,“ வட நாட்டில் ஒரு பெரியார் இதைச் சொன்னார்” என்று பல இடங்களில், குறிப்பாக நீத்தார் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றபோது பேசியும், ஆத்மா,மோட்சம் பற்றி எழுது கின்ற கட்டுரைகளிலும் பயன்படுத்தியுள்ளார். இதைத் தோழர் கி.வீரமணி அவர்களே, “மனித வாழ்வின் பெருமை எது?” என்ற தலைப்பில் நீத்தார் நினைவுநாள் சிந்தனைகள் என்று வெளியிட்டுள்ளார்.

அடுத்து, “பெரியார் பற்றிய சில புரட்டுகளும் உண்மை தகவல்களும்” என்ற நூல் எழுதிய தோழர் கி.வீரமணியே, பெரியாரின் மிக முக்கியமான கடவுள் மறுப்பு வாசக வரலாற்றினை எப்படி திரிக்கின்றார் பாருங்கள். கடலூரில் ஒரு முட்டு சந்தில் கேவலம் ஒரு ஜோடி செருப்புக்காக பெரியார் கடவுள் மறுப்பு வாசங்களை சொல்லுவதுபோல காட்சி அமைக்கப்பட்டு - பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவத்தினை இதைவிட வேறு யாரும் இப்படிக் கேவலப்படுத்திவிட முடியாது. கடலூர், கெடிலம் பாலத்துக்கருகில் தந்தை பெரியார் மீது செருப்பு, பாம்பு வீசப்பட்டது 29.07.1944ஆம் ஆண்டு. அதே இடத்தில் பெரியாருக்கு 13.08.1972 யில் சிலை வைக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் சாட்சியாக இருந்து மறைந்த கவிஞர் கருணானந்தம் அவர்கள், “செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்” என்று கவிதை எழுதினார். இந்த சம்பவம் குறித்துப் பெரியார்  இப்படி எழுதுகின்றார்,

“ ஒரு சமயம் கடலூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு ரிக்‌ஷாவில் திரும்பிக் கொண்டிருந்தேன். இன்றுபோல கார் வைத்துக்கொள்ளாத காலம் அது, இருட்டு அதிகம் இருந்த இடத்திலிருந்து ஒருவன் என் மீது செருப்பினை வீசினான்; அது எனது ரிக்‌ஷா வின் முன் விழுந்தது. அதனை எடுக்கச்சொல்லிக் கொஞ்சம் தூரம் போனேன். பிறகு யோசனை வந்தது. செருப்பு நல்லதாக இருக்கின்றது; ஒற்றையாக இருந்தால் என்ன பிரயோசனம்! திருப்பிவிடு அந்த இடத்திற்கு இன்னொன்றையும் வீசுவான், அதையும் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிக்‌ஷாக்காரனிடம் கூறினேன். அவனும் ரிக்‌ஷாவைத் திருப்பிவிட்டான். குறிப்பிட்ட அந்த இடம் போனதும் இன்னொரு செருப்பையும் வீசினான். மிக்க நன்றி! இரண்டு செருப்பையும் வீசியமைக்கு என்று சொல்லிவிட்டு ஜாகைக்குத் திரும்பினேன்.” (விடுதலை-24.03.1973) இப்போது திரைப்படத்தில் அந்தக் காட்சியைப் பாருங்கள். சரி, கடவுள் மறுப்பு வாசகம் பெரியாரால் முதன்முதலில் எங்கு, எப்போது கூறப்பட்டது. அதையும் “கடலூரை சொந்த ஊரா”கக் கொண்ட தோழர் கி.வீரமணி அவர்களிடமிருந்தே தெரிந்து கொள்வோமே!

“ தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளிலே பல்வேறு காலகட்டங்களில் சொல்லிவந்த கடவுள் மறுப்புக் கருத்துக்களை ஒருங்கிணைத்து ஆழ்ந்த விஞ்ஞான குறிப்புகளை உள்ளடக்கி, கடவுள் இல்லை, கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்ப்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்ற வாசங்களை திருவாரூக்குப் பக்கத்திலே விடையபுரம் என்ற ஊரிலே இந்த வாசகங்களைக் கூறினார்கள். அங்கே இருக்கக் கூடிய ஒரு பெருநிலக்கிழார் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் இன்னும் கேட்டால் ஆழ்ந்த வைணவ சம்பிரதாயத்திலே இருக்கக் கூடிய ஆத்திகர்! …… 1967லே அந்த விடையபுரம் கிராமத்திலேதான் …. அந்த பெருநிலக் கிழார் இல்லத்திலேதான்  …..  அங்கு நடைபெற்ற பயிற்சிமுகாமிலேதான் …..  அந்த பெருநிலக்கிழாரே நெற்றியில் நாமம் போட்டிருப்பார். அந்த இடத்திலே இருந்து கொண்டுதான் தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தையே சொன்னார்கள்! எனவே, அந்த விடையபுரம் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்புக்குரிய இடம். எனவே, அந்த விடையபுரத்திலே இந்த வரலாற்றுக் குறிப்புக்காக ஒரு பெரிய நினைவுச்சின்னம் எழுப்பு வதற்கு நமது இயக்கம் பூர்வாங்கமாக துவக்கப்பணிகளை, வேலையைத் தொடங்கியி ருக்கிறது, நிலத்தை வாங்கியிருக்கிறது” (பெரியாரியல், பாகம் ஒன்று) என்று சொன்ன தோழர் கி.வீரமணி, வரலாற்றுக் குறிப்புக்காக அந்த இடத்தையே வாங்கி வரலாற்று சின்னம் எழுப்பப் பூர்வாங்க வேலையைத் தொடங்கியவர் ஏன் பெரியார் திரைப்படத்தில், திரைக்கதையினை மாற்றினார்? பெரியார் வரலாற்றை ஏன் திரித்தார்? அந்த வரலாற்றை யும் தெரிந்து கொள்ளுங்கள். தந்தை பெரியாரிடம் ஈடுபாடு கொண்ட திருவாரூர், விடைய புரம் பண்ணைக்குச் சொந்தக்காரர், பெரியவர் வாசுதேவ நாயுடு அவர்கள் பண்ணையில் 1967ஆம் ஆண்டு, மேமாதம், 24,25 தேதிகளில்  நடத்தப்பட்ட சுயமரியாதைப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகளில்தான் கடவுள் மறுப்பு தத்துவ வாசகம், தந்தை பெரியாரால் சொல்லப்பட்டு அது, பெரியார் அறிக்கை என்று 07.06.1967 விடுதலை நாளிதழில் முதன்முதலாக அச்சானது. (அது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்ட இடம் வாங்கப்பட்டதா என்றால் இல்லை. ஆனால் அந்தப் பண்ணக்குச் சொந்தமான, அருகில் உள்ள இடம் வாங்கப்பட்டது. நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டதா என்றால் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டு அதுவும் இன்று கருவை மரங்களால் சூழப்பட்டு மறைந்துள்ளது.)  

வரலாற்றுப் பிழைகளோடு,  திரிக்கப்பட்டு,  மறைக்கப்பட்டு, திணிக்கப்பட்டக் கருத்துக் களுடன் தவறான அரசியல் லாபத்திற்காகவே ஒரு மாபெரும் தலைவரின் வரலாறு சொல்லப்படவில்லை, சிதைக்கப்பட்டுள்ளது. அவர் காலத்தில் அவரோடு வாழ்ந்து, அவரின் பேச்சுக்களைக் கேட்டு, அவரின் எழுத்துக்களை ஆழமாகப் படித்து இன்னும் பலர், இன்றும் சிலர் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே வரலாறு தவறாகச் சொல்லப்படுகிறதென்றால் – அதுவும் அவரின் “ஆயுட்கால வாரிசா”லும், அவரது “குருகுலத்து மாணவரா”லும் என்றால் – பெரியாரை படித்துத் தெரிந்துகொள்ளவும், சொல்லிப் புரிந்துகொள்ளும் நிலையில் உள்ள இந்தத் தலைமுறை எப்படி புரிந்துகொள்ளும், தெரிந்து கொள்ளும்? இதுமட்டுமல்ல,

தோழர் நாகம்மையார் மரணத்தையும், அதற்குப் பின்னால் பெரியாரின் நிகழ்வினையும் இவர்கள் காட்சிப்படுத்தியுள்ள “அழகு” இருக்கின்றதே, எப்படி இவர்களால் “அந்தக் கலகக் காரனின்” தெளிந்த வரலாற்றை இப்படி ஈனத்தனமாகக் கேவலப்படுத்த முடிந்தது. 

“ எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933ந் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

….. நாகம்மாள் உயிர்வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன்.

….. நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

…. செத்தால் சிரிக்க வேண்டும்; பிறந்தால் அழ வேண்டும் என்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல், அதை ஒரு மகிழ்ச்சியாகவும், இலாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப் படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.

….. நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!” (குடிஅரசு – 14.5.1933) என்று இலக்கியமாய் தன் இரங்கலை பதிவு செய்த பெரியாரை - ( இன்றுவரை அதற்கு ஈடான இரங்கல் எழுத்தினை எந்த இலக்கியக் கொம்பனாலும் கொடுக்க முடியவில்லை , இந்த மூன்று பக்க இரங்கல் அறிக்கை குறித்தே முனைவர் பட்ட ஆய்வு செய்யலாம் ) -1933களில் நடந்த நிகழ்வை, திருப்பத்தூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் 20.12.1956யில் விவரிக்கின்றார், “ நாகம்மாள் இறந்தபோதும் – அவருக்குக் காய்ச்சலாக ஆஸ்பத்திரியில் தடபுடலாக இருந்தது. வியாழக்கிழமை நாளில் வெளியூருக்குப் புறப்பட்டுப்போனேன். வெள்ளிக்கிழமை இறந்துவிட்டதாக ஆள்வந்தது. வெள்ளிக்கிழமை இரவு 4 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். காரியத்தை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு திருச்சியில் ஒரு திருமணம் நடத்திவைக்கப் போய்விட்டேன்.

அது கிறித்தவர்கள் திருமணம். பாதிரிமார்கள் ரகளை செய்தார்கள். முதலில் குறிப்பிட்ட இடத்தைக் கொடுக்கமாட்டேன் என்றதால் வேறு இடத்தில் திருமணம் நடத்தி முடித்து விட்டு இரவு சாப்பிடும்போது போலீசார் வந்து என்னை கைது செய்திருப்பதாகச் சொன்னார்கள். மணமக்களையும் கைது செய்தார்கள். மறுநாள் பேப்பரில் நான் கைதான செய்தியும், நாகம்மையார் இறந்த செய்தியும் ஒன்றாக வெளிவந்தது.” என்று தெளிவாக சம்பவங்களை தனி வாழ்க்கையில் கூட எவ்வித ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்ந்த ஒரு வரலாற்றை, ஒரு சராசரி மனிதனைப் போல மனைவி இறந்த துக்கம் தாளாமல் துணி மூட்டையைத் தோலில் போட்டுக்கொண்டு காடு, மேடெல்லாம் சுற்றவைத்து, பாட்டுப் பாடவைத்து, வெறுங்காலுடன் ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு நடக்கவைத்து உச்சகட்டக் கேனத்தனமாய் வரலாற்று அறிவு நாணயமில்லாமல் அந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக் கின்றது.

இப்படி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்கொண்டே போகலாம். கலைஞர் கருணாநிதி யையும், தோழர் கி.வீரமணி அவர்களையும் முன் நிறுத்துவதற்காக பெரியார் திரிபுகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது அப்பட்டமாகத் தெரிகின்றது. தந்தை பெரியார் இறப்பதற்கு முன்னால் இறுதியாக உரையாற்றியது “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு” என்பதா கக் காட்டப்படுகின்றது. இது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி! அது மட்டுமல்ல, அந்த மாநாட்டு உரையில்,“ ……. இருந்தாலும் என் நெஞ்சில் ஒரு முள் தைத்துள்ளது. அது என்னான்னா….  நாளைக்கு சாகப்போகிறேன். சூத்திரனாக விட்டுவிட்டுத்தானே சாகிறேன். அப்பறம் என்ன என்னுடையத் தொண்டு…..” என்று பெரியார் பேசுகின்றார். இதில் “ நெஞ்சில் ஒரு முள் தைத்துள்ளது ” என்பது கலைஞர் கருணாநிதியின் வசன வாசகம்! ஆம், பெரியார் இறந்தபோது அவர் எழுதிய இரங்கலுரையில் உள்ளது. இப்போது தெரிகிறதா பெரியார் கதை, வசனம் யார் என்று!

தந்தை பெரியார் இறப்பதற்கு முன்பு பங்கேற்ற நான்கு முக்கிய சொற்பொழிவுகள். திருச்சி, சிந்தனையாளர் கழகம், நாள் 04.11.1973. இந்தக் கூட்டத்தில்தான், “நாளைக்கு சாகப் போகிறேன். சூத்திரனாக விட்டுவிட்டுத்தானே சாகிறேன். அப்பறம் என்ன என்னுடையத் தொண்டு…..” என்று பெரியார் பேசுகின்றார். அடுத்து, தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு, சென்னையில், 08-09.12.1973. இந்த மாநாட்டுக்குப் பின்தான் இறப்பதாகக் காட்டப்படுகின்றது. 19.12.1973யில் குடந்தை சொற்பொழிவு. சென்னை, தியகராயநகரில் இறுதிச் சொற்பொழிவு. இங்குதான் உடல்நிலை பாதிக்கப்பட்டு, திடலுக்குப்போய் 21.12.1973 சென்னை அரசினர் பொது மருத்துவமணையில் அனுமதிக் கப்பட்டு, அங்கிருந்து 22.12.1973 அன்று வேலூர் சி.எம்.சி மருத்துவமணையில் அனுமதிக் கப்பட்டு 24.12.1973 அன்று இயற்கை எய்தினார் என்பதுதான் வரலாறு. இப்படியாக எல்லோருக்கும் தெரிந்த பெரியாரின் நிகழ்வுகளையே மாற்றிச் சொன்னவர்கள், சொல்லாமல் விட்ட செய்திகள் ஏராளம், ஏராளம். எல்லாவற்றையும் சொல்ல இடமிருக்காது என்பதால் சிலவற்றை மட்டும்,

இந்தத் திரைப்படத்தில் பெரியார் எங்கேயும் தவறிக்கூட “பார்ப்பனர்” என்ற வார்த்தை யைப் பயன்படுத்தவில்லை.

தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை போகிறபோக்கில் சொன்னவர்கள், பெரியாரின் இறுதி இலட்சியமான “தமிழ்நாடு தமிழருக்கே”வைச் சொல்லவில்லை.

ஈ.வெ.ராமசாமி, “பெரியார்” ஆன பெண்கள் மாநாடு சொல்லப்படவில்லை.

அய்யாவுடன் துணையாக வாழ்ந்து, அவரது குடிஅரசு பத்திரிகைக்குப் பொறுப்பேற்று பலமுறை சிறைசென்ற அவரது சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியும் காட்சிப்படுத்தப்பட வில்லை. அவரது மகன் ஈ.வெ.கி.சம்பத்தும் அப்படியே!

கள்ளுக்கடை மறியல் போராட்டங்களைக் காட்சியாக்கியவர்கள், முதல் இந்திய அரசியல் சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்த போராட்டங்களையும், கடவுளர்களை உடைத்து, செருப்பாலடித்த போராட்டங்களையும் சொல்லவில்லை.

 இவர்கள் சொன்னது அதாவது உண்மை பத்து விழுக்காடு; சொல்லாதது அதாவது திரிபு தொன்னூறு விழுக்காடு.

19.08.1973 அன்று தஞ்சையில், தந்தை பெரியாருக்கு வழங்கப்பட்ட TNO 9595 வேன்,  1967களில் பெரியாரோடு வலம் வருகின்றது.

பெரியாராக நடிக்கும்போது சத்தியராஜ் அவர்களின் விரலில் இல்லாத பச்சைக்கல் மோதிரம் பெரியார் திரைப்படம் வெளிவந்த பின்னால் அவர் விரலில் மின்னுகிறது. இப்படியாக ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.

திரு எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது செய்தித்துறை “பெரியார் ஒலி-ஒளிக் காட்சியினை நிகழ்த்தியது. அதில் இருந்த பிரம்மிப்பும், உண்மையும் இதில் இல்லை. தோழர் ஞாநியின் சின்னத்திரை “அய்யா”வில் இருந்த நாணயமும், நேர்மையும் இதில் இல்லவே இல்லை. தோழர் மு.இராமசாமியின், “கலகக்காரர் தோழர் பெரியாரில்” இருந்த சிந்தனையும், தெளிவும் இதில் இல்லை, இல்லவே இல்லை.  ஆகவே மொத்தத்தில் இந்த செல்லுலாய்டில் பெரியாருமில்லை, ஒரு வெங்காயமுமில்லை…!   

*****

 
Related News
 • பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9

 • பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 (தொடர்ச்சி....)

 • தோனி

 • பாரதி-திரைப்படம் (சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்)

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World