Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueநினைவேந்தல்
 

"எல்லோரும்

அவரால் ஒரு

தொழிலை

செய்கிறார்கள்.

அவர்கள் மத்தியில்

நானும் ஒரு தொழில்

செய்கிறேன். இதனால்

அவர்களைப் போல

நானும் ஒரு

தொழிலாளி. எனக்குத்

தொழில்மருத்துவம்.

இதுதான் அடிப்படை.

இதைத்தான்டி நான்

அவர்கள்(மக்கள்)

செய்கிற

தொழிலைவிட

உயர்வாக எதையும்

செய்வதாக எனக்கு

எப்பவும் எண்ணம்

இருந்ததில்லை"

                      மரு.ப.ஆறுமுகம்

மருத்துவதையும் (ஒமியோபதி) , மார்க்சீயத்தையும் தன் வாழ்க்கை இலட்சியமாக வரித்துக் கொண்டிருந்த மருத்துவர் ப.ஆறுமுகம் அவர்கள், சொந்த ஊரான நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கன்னி கிராமத்தில் கடந்த 27-04- 2013 சனிக்கிழமையன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது அப்போது 81.

சக மனிதர்கள் மேலும், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு தன் இறுதிக்காலம் வரை உழைத்த அந்த மாமனிதர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சைக்கிளை தவிர்த்து விட்டு சாரை (மரு.ப.ஆ) நினைக்க முடியாது. போர் வீரனுக்கான குதிரையைப் போல் அது எப்போதும்  அவரோடயே அய்க்கியமாகியிருந்தது. அந்த சைக்கிளின் கேரியரில் கனமான மருந்துப்பை, அதை ஆதரவாக அனைத்தபடியிருக்கும் வெள்ளைத் துண்டு, அதில் மடித்துக் கட்டிய வேட்டியும் வெள்ளை கதர்ச்சட்டையுமாக சுற்றுவட்ட கிராமங்களில் வலம் வ்ந்த ஒரு நடமாடும் மருத்துவமனையென்றே அவரைச் சொல்லலாம்.

அப்போது கிராமத்து மண்சாலைகள் ஒரளவு பரவாயில்லை. ஆனால் கிராமங்களுக்கு இடையிலான இணைப்புச் சாலைகள் மழைக்காலத்தில் உளைச்சேறாகவும், கோடையில் அவை காய்ந்து கரடு தட்டிப் போன மேடுபள்ளங்களாகவும், அதன் ஊடே உருவாகியிருக்கும் சிறு நடைபாதையுமாக இருக்கும். அந்த ஒற்றையடிப் பாதைக்குள்ளே தான் சைக்கிளும் உருள வேண்டும். பழக்கமில்லாதவர்கள் அதில் பயணிக்கமுடியாது. இன்னும் சொல்லப்போனால் சில கிராமங்கள் பெரும் வரப்புகளால் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு வெற்றுப்பரப்பு, கருவேல மரங்கள், வெயிலின் உக்கிரம், இவற்றின் ஊடே எப்போதாவது ஒற்றையாய் கடந்துப் போகும் மனிதர்கள், கோடை பயணத்தின் வழித்துணை இவைதான். மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம் இந்த வனாந்திர சூழல்தான் சாருக்கான வேலைதளம் . இதில் சளைக்காமல் சூழன்றாடியிருந்த அந்த சைக்கிள் எளிய மக்களின் துயராற்றும் கருவியா அவரது நிழலாய் தொடர்ந்தது.

அவரது சைக்கிளில் வைக்கப்பட்டிருக்கும் துண்டு வேனிற்காலத்தில் வியர்வை துடைக்க, விசிறியாக, கால சுழற்சியில் மழைக்காலம் மலர்கிறபோது குடையாக என்று அவர் கூடவே இருக்கும் இனிய தோழனாக இருந்தது. சைக்கிளை தூரத்தியிலேயே பார்த்துவிடும் பள்ளிச்செல்லும் சிறுவர்கள் வழிமறித்து வணக்கம் சொல்வார்கள். புன்னகையோடு அவர்களை எதிர்கொள்ளும் சாரிடம் நெருங்கி வந்து இனிப்புருண்டைகளை பெற்றுக்கொண்டு மீண்டும் தங்கள் வழியில் ஒட்டம் பிடிப்பார்கள். மருந்து கலக்காத இனிப்புருண்டைகளை அந்த கிராமத்து மாணவர்களுக்கு உயர்வான சாக்லெட் மற்ற மருத்துவர்களை பார்கிறபோதல்ல, நினைக்கிற போதே அவர்கள் போடுகிற ஊசி அவர்கள் பற்றிய நினைவை அச்சமாக்கும். நெருங்கமாட்டார்கள் ஆனால் சாரோ அவர்களை

பொறுத்து “மிட்டாய் டாக்டர்” இனிப்பின் உருவகமாக அவர்களோடு இடம் பெற்று விட்டவர் அவர்.


பொதுவாக கிராமத்தில் நடமாடுகிறவரையில் மருத்துவத்தை நாடமாட்டார்கள். படுக்கையில் விழுந்தால் தான் மருத்தும் என்கிற சிந்தனை மேலோங்கியிருந்த காலம். உபாதைகளோடு ஏதாவது கை வைத்யம் செய்து கொண்டு தங்கள் உழைப்பின் போக்கில் போய்க் கொண்டிருப்பார்கள். ஒயாத உழைப்பு எந்த சிக்கலையும் தானே அகற்றிவிடும். அதற்கும் மீறி எந்த தொந்தரவு ஏற்ப்பட்டாலும் அந்த சிந்தனையை செழுமைப் படுத்த அதற்கும் செயல்வடிவம் தந்தவர் சார். வயலில் வேலை செய்கிறவர்கள், நாத்து நடுபவர்கள், களத்துமேட்டில் களம் புழங்குபவர்கள் என்று என்னென்ன வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவரவர் வேலைத்தளங்களிலேயே உடல் தொந்தரவுகளைச் சொல்லி மருந்து வாங்கிக்கொள்வார்கள். அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கே சென்று ஆய்வு செய்வதற்கான முகாம்  அலுவலகங்கள் போல , இந்த இடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முகாம் மருத்துவமனையாக மாறியிருக்கும். தொடக்கக் கல்விக்கு நகரத்தில் மாணவர்களுக்கு  ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டால் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களின் தங்கு விடுதிகளுக்கு சென்று மருத்துவம் பார்த்து அவர்களை நலமாக்கி படிப்பை தடையில்லாமல் தொடரச் செய்தவர் சார் அவர்கள்.

இவ்வளவு கட்டணம் என்றெல்லாம் யாரிடமும் கேட்பதில்லை. மக்கள் தான் அதை நிர்ணயம் செய்கிறவர்கள். எவ்வளவு கொடுக்கிறார்களோ அதுவே கட்டணம். இல்லையென்றாலும் பாதகமில்லை. எளியவர்களிடம் இந்த பேச்சே எழாது. துயர் தீர்க்க மருந்தளிப்பது மட்டுமே அவரது கடமை எனக் கருதியவர் அவர். மருத்துவத்திலும் அறநெறியை பின்பற்றியவர். கிராமப்புறங்களில் ஒமியோபதி மருத்துவம் பார்ப்பவர்கள் அதிக வருமானம் கருதியும், உடனே  நோய் சரியாகும் என்று சொல்லியும் ஆங்கில மருத்துவத்தையும் சேர்த்தே பார்ப்பவர்கள். ஒமியோபதியிலேயும் கலப்பு மருந்தான கம்பெனி தயாரிப்புகளை கொடுப்பார்கள்.

அதிலேயும் சார் அவ்ர்கள் ஹானிமேன் கோட்பாடின்படி “ ஒற்றை மருந்தையே” பின்பற்றியவர். ஊசி போடுவது நோயை உள்ளமுக்கி விடும் என்று கேட்பவர்களையும் விளங்கச் செய்யும் கற்பித்தல்  வேலையையும் சேர்த்தே செய்தவர் . பதினைந்து ஆண்டுகள் ஆசிரியர் பணி, அதிலும் பெரும்பகுதி உடனுறை ஆசிரியராக பணிபுரிந்தவராயிற்றே. சொல்லப் போனால் மருத்துவத்துறையை தெரிவு அடிப்படைக்கு காரணமே அந்த சூழல்தான் . அன்றைய நிலையில் இலவச மாணவர் விடுதிகளில் படிக்கிற மாணாக்கர்களுக்கு ஏதேனும் உடற்சிக்கல் அலும் 10 நாட்களுக்கு மேல் மருத்துவர பார்க்கும் படியான சிக்கல் ஏற்ப்பட்டுவிட்டால் பெற்றோர் வந்து அழைத்துப் போவார்கள். மருத்துவம் பார்த்து திரும்பகொண்டு வந்து விடுவதெல்லாம் இல்லை. உடற்சிக்கல் கல்விக்கு உளைவைத்துவிடும். இந்த நிலை சமூகத்தில் நேரக்கூடாது என்பதற்காகவே ஒமியோபதியை  பயின்றதாக சொல்வார் சார். விடுதியில் துவங்கிய அந்த அறப்பணிதான் பின்னாட்களில் வீதிகளில் மக்களுக்கு விரிவாக்கம் பெற்றது. மருத்துவத்தில் அவர் கைக்கொண்ட தனித்துவம் ஒமியோபதி துறைசார்ந்த பலரையும் ஈர்த்தது. தமிழக ஒமியோபதிகர்களிடம் பரவலாக அறியப்பட்ட மருத்துவர் இல்.தனிக்கொடி , தனக்கு முன்னோடி மருத்துவர் என சாரை பதிவு செய்துள்ளார் . (மரு.இல. தனிகொடி நேர்காணல் சுகன் திசம்பர் 2007).

 

சாரின் மருத்துவ சிகிச்சையகம் நாகை - திருத்துறைப்பூண்டி சாலையில் மேல்பிடாகையிலிருந்தது. அந்த இடம் நான்கு சாலைகள் சங்கமிக்கிற இடம். பதினைந்துக்கு பத்து என்கிற தோராயமான அளவு கொண்ட அந்த கீற்றுக்கொட்டாயில் ஒரு மேசை, நாற்காலி, மருந்துகள் அடுக்கப்பட்டிருக்கும் சிறு பீரோ இவை  இடம் பெற்றிருக்கும். ஒரு பக்கத்தில் உர மூட்டைகள் (அ) மளிகை சாமன் பைகள் என ஏதாவது இருக்கும். வாங்கி வைத்தவர் இன்னும் இருக்கும் வேலை நிமித்தமா போயிருப்பார். வாசலில், பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்களுக்கு அது ஒரு இலவச வாகன நிறுத்துமிடம். சில வேளைகளில் உள்ளூர் பிரச்சனைகளை பேசித்தீர்க்கும் நியாயசபையாக உருமாறும். கட்சிக்கூட்டங்கள், தலைவர்களின் சந்திப்பு மையம், நேரந்தவறி வந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் சிலருக்கு இரவு தங்குமிடமாகவும் இருந்ததுண்டு. இவை எல்லாவற்றையும் தாண்டி அது ஒரு மருத்துவ சிக்கிச்சையகமாக திகழ்ந்தது. மக்களுக்கு எல்லாவகையிலும் பயன் தந்தவர். உற்றுழி உதவியவர் என்பதற்கு எடுத்துக்காட்டுகளே இவையெல்லாம்.

1970 லிருந்து மார்க்சிஸ்ட் கட்சியில் () இணைந்து அதன் ஒன்றியக்குழு உறுப்பினர் வரை ஆகி கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு முன்னின்றவர் ஊராட்சி தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணிபுரிந்தவர். சென்னையிலிருந்து எப்போது ஊருக்கு சென்றாலும் ஆண்டிற்கு ஒரு முறையாவது சாரை சந்தித்து வருவது என் வழக்கம் . முன்பு மேலப்பிடாகையிலும், தொன்னூறுகளின் இறுதியிலிருந்து இரண்டாயிரத்தின்  தொடக்கம்  வரையில் சிகிச்சையாகம் நாகையில் இருந்தப்போதும் சந்தித்துக் கொண்டிருந்தேன். 2009 ஜூலையில் அவரோடு என் சந்திப்பு வேறுப்பட்ட ஒரு சூழலில் அமைந்தது.சி.பி.எம். கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் அப்போது அவர்கள் தங்கியிருந்தார்கள். நூலகமாக இருந்த ஒரு அறையை கட்சி அவருக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த்து. சொந்த வீடு, நிலங்கள் மற்றவர்களுக்கு உதவிய வாழ்க்கை , சொந்த சிகிச்சையகம் என்ற நிலையில் பொது இடம் இடம் பெயர்ந்திருந்த சூழலில் அவர்களை சந்தித்தபோது வருத்தமும் நெகிழ்வுமாயிருந்தது. ஆனாலும் அது ஒரு சிறப்புக்குரியது, எல்லோருக்கும் அமைகிற வாய்ப்பில்லை என்பதை அறிவேன்.

வாழ்க்கையின் இடைவெளிகளை என்னென்னவோ நிகழ்வுகள் எப்படியெல்லாமோ இட்டு நிரப்புகிறது என்கிற பார்வையினால் ஏற்ப்பட்ட நெகிழ்வுதான் அது. உண்மையில் இயக்கப் பணிகளுக்காக, மக்களுக்காக பட்ட பாடுகளுக்காக கிடைத்த விருதென்றே அதை சொல்ல வேண்டும். அப்போதுதான்  அவர்களின் பணிகளை, வாழ்க்கையை பதிவாக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு நீண்ட நேர்காணலாக்கினேன். டிசம்பர் 2009 இல் ஹோமியோ தோழன் இதழில் அந்த முழுமையான நேர்காணலை வெளியிட்டு அவருக்கு சிறப்பு சேர்த்தது. அதைத் தொடர்ந்து சி.அறிவுறுவோன் அவர்கள்  திருவையாற்றில் நடத்திய ஹானிமேன்  விழாவில் சாருக்கு பாராட்டும் விருதும் வழங்கி சிறப்பித்தார்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தோன்றிய எல்லா தரப்பு மக்களுக்கும் தன் ஒயாத உழைப்பினால் மருத்துவமும், மக்கள் சேவையும் ஆற்றி எல்லோர் மனதிலும் என்றென்றும்  நீக்கிமின்றி  நிறைந்திருக்கிற சார் அவர்களுக்கு  அந்த நிழலில் இளைப்பாறிய அனைவர் சார்பிலும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

 
Related News
 • அயலகத் தமிழ் இதழ்கள்

 • வளர்ந்து வரும் அயலகத் தமிழ்த்துறை

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World