Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueவளர்ந்து வரும் அயலகத் தமிழ்த்துறை
 

உலகம் யாவையும் தாமுளவாக்கி, விரிந்து பரந்து கிடக்கிறது தமிழ். மொத்த தமிழ் மக்கள் தொகையில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியினர்  அயல்நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் குறித்து சிந்திப்பதும், அவர்கள் நலனில் அக்கறை கொள்வதும் தமிழ்ச் சமூகத்தின் முன்னுள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். தமிழ் இலக்கிய வரலாறு இனி உலகத்தமிழ் இலக்கிய வரலாறாக எழுதப்பட வேண்டும் என்று, காலஞ்சென்ற உலகத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி பேசியதும், உலகத்தமிழ் இலக்கிய வரலாறுகள் வெளிவந்திருப்பதும் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம். இன்று பிறநாட்டு தமிழறிஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் செம்மொழி மத்திய நிறுவனம், தமிழ்ப்பேராயம் முதலிய அமைப்புகள் உள்நாட்டில் இருந்தும் ASEAN, இயல் போன்ற அமைப்புகள் வெளிநாட்டிலிருந்தும் விருதுகளும், பரிசுகளும் வழங்கி சிறப்பித்து வருகின்றன.

ஆனால் , அயல்நாடுகளில் தமிழ் , தமிழர்குறித்து 1982 ல் சிந்தித்ததும் தமிழ்ப் பல்கலைகழகம் தொடங்கும் போதே அன்றைய முதல் துணை வேந்தர் வ.ஐ.சுப்ரமணியம் செயல்படுத்தியதும் மிக வியப்புகுரியது முக்கியத்துவம் வாய்ந்த துறையாக நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, இத்துறை. இந்தியாவில் வேறு எந்தப் பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இல்லாத , தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மட்டுமே இயங்கி வரும் ஒரு துறை அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை ஆகும். பேராசிரியர்கள் நம்பிஆருரன், இந்திரபாலா, இராஜாராம், ச.நாகராஜன், ஆ.கார்த்திகேயன் ஆகியோர் கடந்தகாலத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.தற்போது பேராசிரியர்கள் சா.உதயசூரியன், உ.பிரபாகரன், தெ.வெற்றிச்செல்வன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீசியஸ், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளிலிருந்து தமிழ் பயிலவும், ஆய்வு செய்யவும் சிறப்புவிருந்தினர்களாகவும் மாணவர்களும், ஆய்வாளர்களும், அறிஞர்களும் துறைக்கு வந்து சென்றுள்ளதோடு, துறைப் பேராசிரியர்கள் கல்விசார்பணிக்காக வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். இலங்கை, மலேசியா நாடுகளின் பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

            அயல்நாடுகளில் தமிழர், அயல்நாடுகளில் தமிழர் பண்பாடு, மொரீசியஸில் தமிழும் தமிழரும், Indians in South Africa with special reference to tamils போன்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொரீசியஸ். தென்னாப்பிரிக்கா, போலந்து, மலேசியா, சிஙகப்பூர், சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, ஊடகம் ஆகியன தொடர்பாக  M.Phil, Ph.D ஆகிய  ஆய்வுப் படிப்புகள் நடத்தப்பெற்று வருகின்றன. “தமிழக அயலக தொடர்புகள்” “ உலக அரங்கில் தமிழ்ப்பாடநூல்”, “தமிழை அயல்மொழியாக கற்பித்தல்” அயலகத் தமிழ்க் கவிதைகள், சிறுகதைகள், ஆய்வு நெறிமுறைகள்” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய நடுவண் மொழிகளின் நிறுவனம், மைசூர் நல்கையோடு திருக்குறள்-வஜ்ஜாலக்கம் (வைரப்பேழை) தமிழ் பிராகிருத ஒப்பாய்வுத் திட்டமும் UGC,  புதுடெல்லி நல்கையோடு A Study of International Tamilology  ஆய்வுத் திட்டமும் முடித்தளிக்கப் பெற்றுள்ளதோடு, தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை நல்கையோடு ஆய்வுத் திட்டங்களை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அயலக கிறித்தவ மறைபணியாளர்களின் தமிழ்ப்பணிகள் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டதோடு மறைத்தமிழ் என்னும் ஆவணப்படம் (இயக்கம்:பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன்) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்து சிங்கப்பூரில் தொழிலதிபராக உள்ள முஸ்தபா தன் பெயரில் இருபது லட்ச ரூபாய் மதிப்பில் அறக்கட்டளை நிறுவி ஆண்டு தோறும் சிறந்த மலேசிய, சிங்கப்பூர் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கவும், கருத்தரங்குகள் நடத்தவும் உதவி வருகிறார். துறையின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகத்தின் இன்றைய துணை வேந்தர் ம.திருமலை மிகவும் பங்காற்றி வருகிறார்.

உலகளாவிய தமிழை-தமிழரை குறித்து தமிழ்ச்சமூகம் கவனம் கொள்வது காலத்தின் தேவைதானே.

 
Related News
 • அயலகத் தமிழ் இதழ்கள்

 • நினைவேந்தல்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World