Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueநாட்டார் வழக்காற்றியல்
 

 -தஞ்சை சாம்பான்.

நாட்டுப்புறவியல்/ நாட்டாரியல்/ நாட்டார் வழக்காற்றியல்/ குறித்தபார்வை நமது தமிழ்ச் சூழலில் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தால் அதில் ஏதோ ஓர் சாதிய சமூகத்தின் வழக்காறு என்ற பிம்பத்தையே உருவாக்கியுள்ளது.நாட்டார் என்ற சொல்லாடல் கள்ளர் சமூகத்தில் ஒரு பிரிவு மக்களின் வழக்காறு என்று நாட்டார் வழக்காறு குறித்த ஒரு பகுதி நமது பொது சிந்தனையில் உருவாக்கியுள்ளது.பெரும் மக்கள் திரளின் பாடுபொருள்களாக அவை வளர்ந்தமையை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.(குறிப்பாக நாட்டுப்புற ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்களைத் தவிர) இதனால் வாய்மொழி வழக்காறுகளைத்தான்  வழக்காறு அற்ற சமூகத்தின் வரலாறாக எடுத்துக் கொள்ளலாம் என ஆய்வு அறிஞர்கள் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ளலாம்.எனவே நாட்டார் வழக்காறு அதன் பரிணாமம் என்ற வகையில் இச்சிறிய கட்டுரை அமைகிறது.

            நாட்டுப்புறவியல், நாட்டாரியல், நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு சொல்லாடல்கள் குறித்த ஒத்த கருத்து உருவாகவில்லை. ஃபோக்லோர்(Folklore) என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ப் பெயர்  எது?முடிந்த முடிவு இதுகாறும் எட்டப்படவில்லை.1979-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்து முதுகலை தமிழ் மாணவர்களுக்குப் பாடமெடுக்கையில், மு.இராமசாமி நாட்டுப்புறவியல் என்றே குறிப்பிட்டுள்ளார்.1971-ல் பச்சையப்பன் கல்லூரியில் “நாட்டுப்பாடல் பண்பாடு” என்ற பாடம்தான் கல்வித்துறைக்குள் முதல் பதிவு என்று கொள்ளலாம்.

            சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் முதுகலைப் பாடத்திட்டத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் என்ற பகுதி சேர்க்கப்பட்டது.அத்துறையில் பயிலும் மாணவர்களுக்கு அது புத்துணர்ச்சியை அளித்தது. அ.மு.பரமசிவானந்தன் எழுதிய நூல் “வாய்மொழி இலக்கியம்” என்றே பெயரிடப்பட்டிருந்தது.ஆறு.அழகப்பன்,  எம்.லிட் பட்ட ஆய்வேடு “நாட்டுப்புறப் பாடல்கள் திறனாய்வு” என்பதாகும். இதனால் 1966-லேயே “நாட்டுப்புற பாடல்” என்ற சொல்லாட்சி வந்துவிட்டது.இது கல்வித்துறையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.பாடல்கள் மட்டுமின்றிக் கலைகளையும் இலக்கியங்களையும் நம்பிக்கைகளையும் பற்றி அறிந்து கொள்ளும் இயல் நாட்டுப்புறவியலாகிறது என்பர் சு.சண்முகசுந்தரம். நாட்டார் வழக்காறு என்ற சொல்லாட்சி 1974-ல் வானமாமலையால் ஆராய்ச்சி இதழில் பயன்படுத்தப்பட்டது.இதனை மெருகேற்றி தே.லூர்து “நாட்டார் வழக்காற்றியல்” (1976-ல்) என்று துறைக்குப் பெயர் வைத்து இச்சொல்லுக்கு அடையாளம் கொடுத்துள்ளார்.”நாட்டார் வழக்காற்றியல்” எனப் பாளையங்கோட்டையிலும், “நாட்டுப்புறவியல் துறை” என மதுரை, தஞ்சை, திருச்சி, கோவை, காரைக்குடிப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன.

செவ்வியல் என்பதற்கு எதிராக போக்(Folk) நிறுத்தப்படுகிறது.கோ.கேசவன் “நாட்டுப்புறவியல் ஒரு அறிமுகம்” என்ற தன் நூலில் செவ்வியல் என்பதை போக்(Folk) என்பதின் எதிராகவே பார்க்கிறார்.அதில் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்புகளில் காணப்பட்ட கலைகளை 1)செவ்வியல் கலை 2)நாட்டுப்புறக்கலை என்று இரண்டாகப் பிரிக்கலாம் என்றும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகளே இந்தப் பிரிவின் ஆதாரங்களாகும்.(கோ.கேசவன், 1986) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமரித்லால் பண்சர்வாலா சொன்னதாக பல்வந்தகார்கி பின்வருமாறு குறிப்பிடுகிறார் அவர்.இரண்டிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, செவ்வியல் என்பதானது மேல்தட்டினர்க்கானது, மற்றது மக்கள் திரளுக்கானது;இருவரும் தொடர் வண்டியில்.ஆனால் முன்னது முதல் வகுப்பு, பின்னது மூன்றாம் வகுப்புப் பயணம் என்று குறிப்பிடுகிறார்.


                 முதல் வகுப்பு

தூசியில்லை, வெப்பமில்லை,குளிரில்லை

தனித்த வசதியுண்டு.

         மூன்றாம் வகுப்பு

இரைச்சல்,ஏச்சுப்பேச்சு,சண்டைகள்

கத்தல், வேர்வை நாற்றங்கள்


 

 


எனவே இரண்டும் மாறுபட்ட பெட்டிகள்.உலகில் அனைத்து இயக்கங்களும் இருமை எதிர்வினை அடிப்படையில் அமைந்துள்ளன.வெப்பம்×குளிர்ச்சி, உள்ளூர்×வெளியூர், மேல்×கீழ், மேடு×பள்ளம், நீர்×நெருப்பு, சிலர்×பலர், வரி செலுத்துவோர்  × வரி செலுத்தாதவர், உண்டு கொழுத்தவர் ×உழைக்கும் மக்கள்.இதன் அடிப்படையில் நாட்டுப்புறக்கலை×நகர்புறக்கலை என்பதே சரியாக அமையும்.


இந்திய மரபுப்படி - பிராமணரால் நாட்டிய வேதம் உருவாக்கப்பட்டது.சிலம்பு - அடியார்க்கு நல்லார் உரையில் இருவகைக்கூத்து 1)சாந்தி 2)வினோதம் என்று கூறி (உ.வே.சா.1944-பக்.80)அதில் வினோதக் கூத்தை விளக்குகையில் “குரவை, கலிநடனம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை, தோற்பாவை நகைத்திறச்சுவை என்பதாகத் தெய்வமேறி ஆடுகின்ற அகத்திருக் கூத்துக்களையும் காட்டி ஏழென்பாருமுளார்” என்று பொருள் கூறுகிறார்.இறுதியில் முத்தாய்ப்பாக “இவ்வெழுவகைக் கூத்தும் இழிகுலத்தோரை ஆடவகுத்தனன் அகத்தியன் தானே” என்கிறார்.இங்கும் “நாட்டுப்புறத்தான் ஆடவகுத்தனன்” என்று கூறவில்லை.

உயர் குலத்தோர் ஆடற்குரிய கலைகள் இன்னின்னவை என்பதற்கு எதிர்ப்பாக இழிகுலத்தோர் ஆடற்குரிய கலைகளாக இவற்றைக் காட்டுகிறார்.உண்மையில் பார்ப்போமானால் வருணத்தின் அடிப்படையில்தான் இங்குள்ள கலைகள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டன.இன்னும் நாட்டுப்புறக்கலைகள் அனைத்தும் வட்டாரம் சார்ந்த, சாதியம் சார்ந்த கலைகளாக மட்டுமே இருக்கின்றன என்பதுதான் உண்மை.இங்கும் உயர்குலத்தோர் ஆடவகுத்தவை முதல் தரத்ததாகவும் இழிகுலத்தோர் ஆடவகுத்தவை    தரமற்றவையாகவும் ஆன கருத்து முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வருணத் தரத்தின் அடிப்படையிலேயே கலைகள் அளவிடப்பட்டுள்ளன என்பது “கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை” என்பதைப் போன்றது.

“நாட்டுப்புறம்” என்பதில் இந்திய வருணாசிரம வரலாற்றுப் பதிவுகளில் ஒரு பகுதி மறைக்கப்பட்டுள்ளது.அவமானம், தாழ்வு, ஒடுக்கப்பட்டிருத்தல் ஆகியவை அடையாளப்படுத்தப்படவில்லை.நாட்டுப்புறவியல் என்பது போலி கவுரவும் நிரம்பியதாய் மட்டுமே ஒலிக்கிறது.மேட்டிமை சார்ந்த செவ்வியலின் எதிர்வாக வட்டார,இன மக்கள் சார்ந்த “நாட்டாரியல்” இருப்பதென்பதே பொருத்தமானதாகப்படுகிறது.(மு.இராமசாமி,2000.ப.22)

நாட்டாரியல் என்பது வட்டார இன மக்கள் கூட்டம் என்னும் திரள் மனநிலையை வெளிப்படுத்துகிறது.இந்த ஒற்றுமையில் வட்டார ரீதியாக வேறுபட்டுப் பன்முகமாகி நிற்பது நாட்டாரியல் சமூகப் பொருளாதார, அதிகார, பூகோள கல்வி ரீதியில் பின்தங்கி அனுபவரீதியில் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கிற மக்களைச் சார்ந்து இயங்குவது.நாட்டாரியல் உரிமைப் பாத்தியதைக் குரலும் உழைப்பின் பதிவும் நாட்டாரியலுடன் ஒட்டியே அமைந்துள்ளன.

வெளித் தொடர்புகள் - புறச்சூழல் தாக்கங்கள் அதிகாரமற்ற காலத்தில் வாழ்ந்த வாழ்வியலின் சாதிய, வட்டார ஆளுமைகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி விடுவதும் பின்புறத் தொடர்புகளால் மூழ்கிக் கிடக்கையில் புறத்தொடர்பை எதிர்கொள்ளும்போது வாழும் எல்லை விரிவு பெறப்பெற வட்டாரத்தன்மை இழப்பு மெல்ல மெல்ல நடக்கிறது.

1)பாடுபொருள்-எந்த கருத்தின் அடிப்படையில்

2)வடிவம் , அமைப்பு- சிறுகதை, கட்டுரை எந்த வடிவத்தில் “மொழிநடை” எடுத்துக்காட்டு பழமொழி, சொலவடை கதை சொல்லல் , பொது மொழியில் பலருக்குப் புரிந்த நடையில் எழுதுதல் பாத்திரங்களின் பேச்சில் வட்டார வழக்கு.சுற்றுப்புற சூழல் - மக்கள் வாழ்வியல். பெரும்பாலும் ஏழை விவசாயி - கருத்துப் புலப்பாட்டிற்கு பாத்திரப்படைப்பு எந்த வகையில் உதவுகின்றன, பாத்திரப்பேச்சு - பாத்திரச்செயல் ஒரு பாத்திரம் பற்றி பிற பாத்திரங்கள் கூற்று.கதை நடை கருத்து வெளியீட்டில் நடையின் பங்கு, புலப்பாட்டில் சொல்லாட்சி, வாக்கிய அமைப்பு, பேச்சு முறை, உலக வழக்கு குறிப்பிட வட்டார வழக்கு மற்றும் சடங்கு முறைகள் குறிப்பாக நாட்டார் பாடல்கள் சோகமானதாகவே காணப்படுகின்றன.இறுக்கமான சமூகச் சட்டங்களை எதிர்ப்பவர்கள் உயர் வர்க்கத்தினரால் கொடூரமான முறையில் அழிக்கப்பட்டுள்ளார்கள்.எனவே, இவர்களின் வீர தீரச் செயல்களை பாடும்போது அவர்களின் முடிவும் சோகமானதாக முடிந்து போனதால், நாட்டார் பாடல்களும் கடைசியில் சோகமாகவே முடிக்கப்படும்.குறிப்பாக, காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன், சின்னநாடான்  ,கௌதலமாடன் முதலியோர் சாதிய சட்டங்களை எதிர்த்தபடியால் கொலைசெய்யப்பட்டவர்கள். (நா.வானமாமலை ஆராய்ச்சி,மார்ச்,1971)

நாட்டார் வழக்காறுகள் அமைப்பில் நிலைத்த பண்பின் உள்ளடக்கங்கள் மாறினாலும் அமைப்பில் மாறாதன.புதிது புதிதாகப் பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் கதைகள், பாடல்கள் காலந்தோறும் தோன்றினாலும் அவற்றின் வடிவங்கள் மாறாதன.நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் பெரும்பாலும் தோற்றம் பற்றிய ஆய்வாகவே அமைந்தன.

நாட்டார் வழக்காறுகள் என்ற சொல்லை உருவாக்கிய ஜான் வில்லியம்ஸ் அது கடந்த காலம் சார்ந்த ஒன்று என்றே கருதினார்.ஆனால் அது உண்மையல்ல.நாட்டார் வழக்காறுகள் பண்டைச் சமூகத்தின் எச்சங்களைச் சுமந்து கொண்டிருக்கும் பாசில் அல்ல.மாறாக அது உயிர் துடிப்புள்ளது;புதிது புதிதாகத் தோன்றும் தன்மையுடையது.வடிவங்கள் பழமையாக இருந்தாலும் புதிய பரிணாமங்களை உள்வாங்கக் கூடியது.சான்றாக திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமத்தில் வழங்கிய குழந்தைகள் விளையாட்டுப் பாடல் ஒன்றில்,

அந்தா பாரு ரயிலு

ரயிலுக்குள்ளே குயிலு

குயில பாத்து கண்ணடிச்சா

ரெண்டு வருஷம் ஜெயிலு

ஜெயில விட்டு வெளியே வந்தா

ரஜினிகாந்து ஸ்டைலு

என்ற சொலவடைகள் இடம் பெற்றுள்ளதை காணலாம்.தேனி மாவட்டம், சுலப்புரம் கிராமத்தில் வழங்கும் நடவுப் பாடலில் புதியன எப்படி சேர்ந்தன என்பதைப் பார்க்கலாம்.கோம்பை என்ற ஊர் மக்கள் பாடும் பாடலாக இடம் பெற்றுள்ள பின்வரும் பாடலில்

கோம்பையிலே கொய்யா மரம்

கொலை கொலையாய் காய்க்கும் மரம்

செயலலிதா வெச்ச மரம்

தினமொரு பழம் பழுக்கும்

வீதிக்கெல்லாம் லைட்டும் போட்டு

வெளிச்சத்தையே உண்டு பண்ணி

குளிக்க ரூமும் கட்டினாரு

குணமுள்ள எமிச்சியாரு(எம்.ஜி.ஆர்)

என்ற வரிகள் எம்.ஜி.இராமசந்திரனின் ஆட்சியை எப்படி நாட்டார் மக்கள் உள்வாங்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை ஒப்பு நோக்கலாம்.சில நேரங்களில் சமூக மாறுதலின் காரணமாக புதிய புதிய வரவுகளால் பாடப்பட்ட பாடல்களும் மறைந்து போகும் தன்மை கொண்டது.

“நாட்டார் வழக்காறுகள்” ஆய்வுக்கும் ரசிப்பதற்கும் மட்டுமல்லாது அவை சமூக எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் கருவியாகவும் விளங்குகின்றன.எங்கெங்கு அநீதியும் ஒடுக்குமுறையும் உள்ளதோ அங்கெல்லாம் நாட்டார் எதிர்ப்புக்குரல் வெளிப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.எதிர்க்க முடியாத வலுவான ஆதிக்க சக்திக்கு எதிரான தங்களுடைய கோபத்தை பழமொழிகள், பாடல்கள் மற்றும் நகைச்சுவை மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.நாட்டார் வழக்காறுகளுக்கு ஆசிரியராக எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட முடியாததாக இவ்வழக்காறுகள் அனுமதிக்கப்படுகின்றன.இது ஒரு குழுவின் வெளிப்பாடு; தனி வெளிப்பாடு அல்ல.எனவே நாட்டார் வழக்காறுகளில் ஒரு இயல்பற்ற தன்மையையும் அந்த மக்களின் நம்பிக்கை சார்ந்த தன்மையும் தன்னியல்பாகவே கூறும் போக்கையும் அநேக இடங்களில் காணமுடியும்.எனவே, அந்த வழக்காறுகளை ஓர் ஆய்வாளர் ஆய்வு நடத்தும்போது, மிகத் துல்லியமாகவும் நுட்பமாகவும் ஆய்வுக்கு உட்படுத்துவதைப்போல் ஓர் படைப்பாளியும் மிக கவனத்தோடு செய்ய வேண்டியுள்ளது.

நாட்டுப்புறக் கதைகளை, பாடல்களை, பழமொழிகளை, விடுகதைகளை, சொலவடைகளை, கதைப் பாடல்களை ஆராயும் கலைப் பார்வையினர் தங்களது ஆய்வின் பெரும் பகுதியை இவ்வழக்காறுகளில் வெளிப்படும் அழகுகளை வியந்து பாராட்டுவதிலும் எழுத்து இலக்கியம் போலவே வழக்காறுகளையும் இலக்கியங்களாகவே அங்கீகரிக்க வேண்டுமென்று குரல் எழுப்புவதிலுமே செலவிட்டார்கள்.இதன் மூலம் தமிழில் எழுத்திலக்கியம் தோற்றம் பெற்றுள்ளது.இவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காத மானிடவியல் ஆய்வாளர்கள் பண்பாட்டு உருவாக்கத்தில் வழக்காறுகள் புறக்கணிக்கப்படுவது குறித்த தங்களது கோபத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தினர்.இந்தியாவில் மதவாத சக்திகள் இந்தியாவின் பண்பாடு ஒரே பண்பாடு, ஒற்றைப் பண்பாடு என்றுக் கூறுவதை ஏற்க முடியாது.பல்வேறு இனம், அவர்கள் பேசும்மொழி பல்வேறு வகையில் இருக்கும்போது எப்படி ஒற்றைப் பண்பாடாக இருக்க முடியும்?என்ற கேள்வி எழும்போதுதான் ஒற்றைப் பண்பாடு என்று பேசுவதற்கு எதிராக வழக்காறுகள் வெளிப்படுத்தும் பன்மைப் பண்பாடு என்ற அரசியல் நிலைப்பாட்டை முன்வைக்கத் தொடங்கினர்.நாட்டார் பண்பாடே மக்கள் பண்பாடு என்று வாதம் செய்யத் தொடங்கினர்.

கள ஆய்வாளனாகச் செல்வது முதல் ஆய்வேட்டை முடிக்கும் தருணம் வரையிலும் சாதியின் பெயரால் ஆய்வாளர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்.ஆய்வாளர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்று தெரிந்ததும் உயர் சாதியினர் தொடர்ந்து பேச மறுக்கும் அவமானங்கள் பலருக்கு உண்டு என்பதை மிகச் சரியாக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் (டி.தர்மராசன், நாட்டுப்புறவியல் துறை) குறிப்பிட்டுள்ளார்.ஒரு தலித் தன் சொந்த சமூகத்தில் மட்டுமே ஆய்வு செய்ய முடியுமென்ற எதார்த்தத்தை யாராலும் மறுக்க முடியாது.இதற்கு வலு சேர்க்கும் வகையில் இக்கட்டுரை ஆசிரியர் ஒரு கிராமத்தில் சென்று ஒரு கதைக்கான களப்பணியில் ஈடுபட்டபோது நடந்த சில நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டலாம்.

அப்புச்சிக் கோயில் என்ற ஒரு கோயில்.அதன் முழுப் பெயர் மொட்டைப் பழனி அப்புச்சிக் கோயில்.இதில் அப்புச்சி யார்? இந்த மொட்டை பழனி யார்? என்று சொல்ல மறுக்கிறார்கள்.மொட்டை பழனிக்கும் அப்புச்சிக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வியோடு அந்த கிராமத்தினுள் சென்று ஒரு சில  பெரியவர்களிடம் கேட்ட போது, கட்டுரை ஆசிரியரின் பெயரைக் கேட்ட அளவில் அப்பெரியவர்கள் “தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குப் போ” என்று அவமானமாக பேசுகிறார்கள்.இது இக்கட்டுரை ஆசிரியரைத் துணுக்குறச் செய்தது.அவர்களிடம் தொடர்ந்து உங்கள் ஊரின் கலெக்டருக்கு அந்த மக்கள் தான் சிலை வைத்துள்ளார்கள்.அந்த கலெக்டரைப் பற்றி வாழ்வியல் ரீதியாக செய்துள்ள பல நல்ல விஷயங்களை மறக்காமல் இருக்கவே அவருக்கு சிலை வைத்துள்ளார்கள் என்று அவர்கள் கூறிய சம்பவங்களையே தான் கதையாக எழுதியுள்ளதாகக் கூறியும் உதாசீனமாகவே பேசிச் சென்றனர்.ஆனால் ஒரு டீக்கடைக்காரர் மொட்டைப்பழனி யார் என்றும் அவர் எப்படித் தெய்வமானார் எனக் கூறியதும் தலித் மக்கள் கூறியதும் இரண்டும் சரியாகவே இருந்தது.ஆனால் எப்படியோ மொட்டைப்பழனி தெய்வமான கதையைத் தலித் மக்கள் கொண்டாடினாலும் மேல் சமூகத்தினரும் அப்புச்சி கோவிலை வழிபடாமல் இருப்பதில்லை.

வேறெந்த முறையிலும் தனது நினைவுகளை அல்லது சமூக நினைவுகளை பாதுகாத்தறியாத சமூகத்தில் நிகழ்ந்து முடிந்த மரணங்களின் துணையோடு தனது கடந்த காலத்தை, வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டிருக்கிறது. வாய்மொழியை மட்டுமே தனது மொழியாகக் கொண்டிருக்கும் சமூகம் தெய்வங்களைக் கண்டுகொள்ளும் செயல்பாட்டை இந்த அளவிலேயே நாம் புரிந்து கொள்ள வெண்டும்.கதைப் பாடல்கள் மூலம் உருவாகும் நாட்டார் தெய்வம் எனும் மனோபாவம் இந்த அளவில் கடந்த காலத்தைக் காட்டுவதன் மூலம் நிகழ்காலத்தை  ஒழுங்குப்படுத்துகிற வாய்மொழிப் பண்பாட்டின் செயல்பாடாகும்.எனவேதான், மேல் சாதியினரால் கொலையுண்ட மொட்டைப் பழனியை அவரின் பெயரால் அனைவரும் அழைப்பது மரியாதை இல்லாத செயலாகவே கருதிய மக்கள், பொதுப்பெயரில் அப்புச்சிக்கோயில் என்றே அழைப்பதைக் காணலாம்.(அப்பாவைப் பெற்ற தாத்தாவை அப்புச்சி என்றே அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளது.)தெய்வங்களை  உற்பத்தி செய்வதன் மூலம் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திற்கும் தனக்கு முந்தைய காலத்திற்குமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு ஒரே சமயத்தில் முந்தய காலத்தையும் நிகழ்காலத்தையும் வடிவமைக்கிற இயக்கவியல் பெரும்பாலும் வாய்மொழிப் பண்பாட்டிலேயே காணப்படுகிறது என்பதை, புது விசையில் வெளிவந்த சிறுகதையான அப்புச்சிகோயில் மொட்டைப் பழனியில் காணலாம்.இதுபோன்ற சாவுகளுக்குக் காரணமானவர் ஒரு அச்ச உணர்வோடு கொலையுண்டவர் தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏதேனும் செய்து விடுவார்களோ என்ற அச்ச உணர்விலேயே கொலை செய்யப்பட்ட நபரை வழிபடும் போக்கை அப்புச்சிக் கோயில் வழிபாட்டில் காணலாம்.மேல்சாதிக் குடும்பத்தார், தலித் மக்கள் நடத்தும் இந்த விழாவை தங்கள் குடும்ப விழாவைப் போல் நடத்துவது, இல்லையேல் வெளியிடங்களில் இருந்து வரவியலாத சூழலில் விழா நடத்தும் செலவை தாமே ஏற்பது போன்ற நிகழ்வுகள் இன்றும் நாட்டார் தெய்வ வழிபாட்டில் காணக் கிடைக்கின்றன.

இதைப்போலவே, பெண் தெய்வ வழிபாட்டில் தலித் மக்கள் கொண்டாடும், காத்தாயி அம்மன், பேச்சியாயி அம்மன் போன்ற தெய்வங்களின் பல கதைகளைப் புனைவாக கூறும் இவர்கள், மாரியம்மனின் சகோதரிதான் காத்தாயி அம்மன் என்று கூறும் இவர்கள் வடுவச்சி அம்மனுக்கும் வேறு ஒரு கதையைச் சொல்லுவர்.ஆனால், பேச்சியம்மனைப் பொறுத்தமட்டில் அது தாழ்த்தப்பட்டோரின் குல தெய்வம் என்பதைத் தவிர வேறு கதைகள் தெரியவில்லை.ஆனால் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு ஆளுமை பேரா.தே.லூர்து அவர்களின் ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் பேச்சியம்மன் யார் என்பது புலனாகும்.பொச்சியம்மன் என்ற ஒரு தலித் பெண்ணோடு உறவுக் கொண்ட ஓர் மேல் சாதியைச் சார்ந்த இளைஞன், சமூக இறுக்கத்தில் தாங்கள் சேர்ந்து வாழ முடியாது என்ற சூழலில், அவர்கள் இருவரும் உடன்போக்கு சென்றுவிடவே, மேல்சாதி இளைஞனின் சகோதரர்கள் பல மாதங்கள் தேடியும் காணக் கிடைக்காதச் சூழலில் ஓர் ஆடு மேய்க்கும் இடையரால் அவர்கள் காட்டிக் கொடுக்கப்படுகின்றனர்.அப்போது பொச்சியம்மன் நிறைமாத கர்ப்பிணி.பொச்சியம்மனோடு ஓடிப்போன தங்கள் தம்பியை அவரது அண்ணன்மார்கள் அழைத்த போது தம்பி பொச்சியம்மனை விட்டுவர இயலாது என்று கூறுகின்றான்.மேல்சாதிக்காரர்கள் பொச்சியம்மனை கொலை செய்தபோது, அதைத் தடுக்கச் சென்ற தம்பியையும் கொலை செய்கின்றனர் சாதி வெறியர்கள்.இந்த கொலையில் ஒரு தலித் பெண் என்ற வகையில் நிறைமாத  கர்ப்பிணி என்ற காரணத்தால் ஊரில் ஏதேனும் கெடுதல் உண்டாகுமோ என்று இந்தப் பெண்ணைத் தெய்வமாகப் பாவித்து வழிபடத் துவங்கினார்கள்.எனவே நாளடைவில் பொச்சியம்மன் என்ற பெயர் மருவி பேச்சியம்மன் என்று வந்திருக்கலாம் என்று தே.லூர்து கூறுகிறார்.மேலும் இந்த மக்கள் வழிபாட்டில் பலியும் நடக்கும்.பலியிடப்படும் ஆடு சினை (கர்ப்பிணி) ஆடாகவே உள்ளது.பொச்சியம்மன் பேச்சியம்மனாக மருவியதும், பலியிடப்படும் ஆடு சினையாடு என்பதும், பொச்சியம்மனின் நீட்சி தான் பேச்சியம்மன் என்பதும் இந்த அடிப்படையில்தான்  என்று ஊகிக்கமுடிகிறது.

பெண் தெய்வ வழிபாடு தொடர்பாக, தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் ஆறு இராமநாதன் அவர்கள் கூறுவதை மேற்கோளாக எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இறந்த பெண்களைத் தெய்வங்களாக வழிப்படுகின்றார்கள்.காலப்போக்கில் இவர்கள் மாரியுடனோ, காளியுடனோ இணைக்கப்பட்டு விடுவார்கள்.அவ்வாறு அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ரோசமாக இருப்பார்கள் என்ற நிலையில் தரவுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிடுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

நாட்டார் கலைகள் பெரும்பாலும் சாதி சார்ந்தவைகளாகத்தான் உள்ளன என்று மேலே சொன்னது போல, பெரும்பான்மையான கூத்துக் கலைகள் தலித் மக்களிடம்தான் உள்ளன.கரக ஆட்டம், கோலாட்டம், தப்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற பல்வேறு ஆட்டக்கலைகள் நமது தொன்மம் சார்ந்து இருப்பினும் அரசு இவற்றைப் பற்றி பெரிய ஆதரவு காட்டுவதாக இல்லை.வாழையடி வாழையாக இந்தக் கலைகளை இந்தக் கலைஞர்கள் தமது இளைய சந்ததியர்களுக்கு கடத்துவதால் இந்த கலை ஓரளவேணும் காப்பாற்றப்பட்டு கொண்டிருக்கிறது என்பது திண்ணம்.


துணை நூல்கள்

1. நாட்டுப்புறவியல் குறிப்புகள் - நாடகத்துறை பேராசிரியர் கு.முருகேசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - தமிழ்நாட்டுப்புற நடனங்கள் தொகுதி 2, பிப்ரவரி, 2000.

2. நாட்டார் வழக்காறு, நாட்டார் வழக்காற்றியல் - நாட்டார் வழக்காற்றியல் துறை பேராசிரியர் தே.லூர்து, தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை - செப்டம்பர், 1981.

3.  நாட்டார் வழக்காற்றியல் – அரசியல், ஆ.சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி. - டிசம்பர், 2005.

4. நாட்டுப்புறவியல் - டி.தர்மராசன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. ஜூலை, 2011.

5. பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆராய்ச்சி இதழ் கட்டுரைகள்.

 

6.  பேராசிரியர் ஆறு இராமநாதன் அவர்களின் வாழ்வும் வாக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். - ஏப்ரல், 2011.

 
Related News
 • ஜெர்மானிய தமிழ் ஆய்வுகள்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World