Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஜெர்மானிய தமிழ் ஆய்வுகள்
 

                                                                                                            முனை.சாம் கிதியோன்,                                                                                                                   தமிழ்ப் பேராசிரியர்,

                                                                      பிஷப்ஹீபர் கல்லூரி,

                                                                      திருச்சிராப்பள்ளி.

 

ஜெர்மனியில் பல பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டுள்ளது.இப்பல்கலைக்கழகங்களில் இரண்டு மிக முக்கியமானவை.ஒன்று  கொலோன் பல்கலைக்கழகம்.மற்றொன்று  ஹைடல்பர்க் பல்கலைக்கழகம்.

ஜெர்மன் பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பித்ததோடு, தமிழ் ஆய்வுகளும் நடைபெற்று நூல்கள் பலவும் உருவாக்கப்பட்டுள்ளன.இப்பணியில் ஜெர்மானியர்களும் இந்தியாவிலிருந்து சென்று பணியாற்றிய தமிழர்களும் ஈடுபட்டனர்.

ஜெர்மானியர்களால் இதுவரை இரண்டு தமிழ் இலக்கண நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

முதல் நூல் பெர்லினில் உள்ள இன்ஸ்டிடியூட் பியூர் அவுஸ்லாண்ட்ஸ்குந்தே (institute fuer auslandskunde)   நிறுவனத்தில் விரிவுரையாளராக இருந்த Hermann Beythan எழுதி 1943 இல் வெளிவந்தது.பெய்தான் சாஸ்திரியார் என தமிழகத்தில் அழைக்கப்பட்ட இந்நூலாசிரியர் சென்னையில் சில காலம் தங்கி தமிழறிஞர் மே.வி.வேணுகோபால் அவர்களோடு செயல்பட்டவர்.

இரண்டாவது நூல் ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தாமஸ் லேமேன் எழுதிய  A Grammer of modern tamil மொழியியல் பின்னணியோடு எழுதப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல்.

தாமஸ் லேமேன் தமிழ், சமஸ்கிருதம், மொழியியல் ஆகியவற்றை பிரைபர்க், ஹைடல்பர்க், புதுச்சேரி ஆகிய இடங்களில் கற்றவர்.

புதுச்சேரி மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 1983 முதல் 1989 வரை ஆய்வு உதவியாளராகப் பணியாற்றியவர்.

தற்போது ஹைடல்பர்க் பல்கலைக்கழக தெற்காசிய நிறுவனத்தில் பணியாற்றும் தாமஸ்லேமேன் அங்கேயே சங்கத் தமிழ் இலக்கணம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

இவர் Grammatile de Alttamil(1994) என்ற நூலையும் தாமஸ் மால்ட்டனுடன் இணைந்து சங்கத் தமிழ் சொல்லடைவு(A word index of old sankam literature) நூலையும் கூட எழுதியுள்ளார்.தற்போது ஐங்குறுநூறு ஆராய்ச்சிப் பதிப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

A Grammer of modern tamil நூல் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 1989 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு மறு அச்சு செய்யப்பட்டு முழுதும் விற்கப்பட்டுவிட்டது.

387 பக்கங்கள் கொண்ட இந்நூலில் தமிழ் இலக்கணம் ஐந்து இயல்களில் விளக்கப்பட்டுள்ளது.அத்துடன் துணைநூல் பட்டியல், சொல்லடைவு ஆகியவையும் உள்ளன.

கடின உழைப்பின் வெளிப்பாடாகவும் காலகட்டத்தின் தேவையை நிறைவு செய்வதாகவும் இந்நூல் இருப்பினும் ஆங்காங்கே குறைகளும் உள்ளன.இவை நூலாசிரியரின் தமிழ்த் திறன் போதாமையின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம்.

பெயர்ப் பகுதிகளை (Noun stems) விளக்கும்போது புடவன், புடவி, புடவர் ஆகிய சொற்களை மாணவன், மாணவி, மாணவர் ஆகிய சொற்களோடு எடுத்துக்காட்டுகளாகக் கொடுத்துள்ளார்.(பக்கம் 14). தற்காலத் தமிழ் இலக்கணத்தில் சங்கத் தமிழிலிருந்து எடுத்துக்காட்டுகள் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

பன்மை பற்றிய பகுதியில் கள், க்கள் ஆகிய விகுதிகள் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்(பக்கம் 19) பிற விகுதிகள் பற்றிய விளக்கம் இல்லை.குறிப்பாக “அர்” பற்றிக் குறிப்பிடவேயில்லை.தற்காலத் தமிழில் மாணவியர், செவிலியர், தோழியர், மங்கையர் எனப் பல சொற்கள் “அர்” விகுதி ஏற்றுப் பன்மையாகின்றன.

அடுத்து அஃறிணைப் பெயர்களோடு பன்மை விகுதி கட்டாயம் அல்ல (Optional) எனச் சொல்லி

அங்கு நிறைய வீடு(கள்) இருக்கின்றன.

இரண்டு நாய்கள் வந்தது.

என எடுத்துக்காட்டுகள் தந்ததோடு வினையில் ஒன்றன்பால் விகுதியும் பலவின்பால் விகுதியும் வரும் என்கிறார்.இதைக் கு.பரமசிவம் சொல்லியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார் (பக்கம் 21). உண்மையில் “கள் விகுதியில்லாமல் “அங்கு நிறைய வீடு இருக்கின்றன” எனும் வாக்கியம் தற்காலத் தமிழில் ஏற்புடைய வாக்கியம் அல்ல.

சாரியைகள் பற்றி விளக்கும் போது "இன் எல்லாப் பெயர்ச் சொற்களோடும் வரும்.அன் பதிலிப்பெயர்கள் அது, இது ஆகியவற்றோடு மட்டும் வரும்" (பக்கம் 21) என்கிறார்.இதில் மூன்று பிரச்சினைகள் உள்ளன.

1.அது, இது ஆகியவற்றோடு எது இடம்பெற வேண்டும்.

2.பெயர்ச்சொற்கள் எனப் பதிலிப் பெயர்களையும் சேர்த்தே லேமேன் பல இடங்களில் பேசுவதால் இன் பதிலிப்பெயர்கள் நீங்கலாக மற்ற எல்லாப் பெயர்ச் சொற்களோடும் வரும் எனச் சுட்ட வேண்டும்.

3.வந்ததனால், நிற்பதனால், இருக்கின்றதனால் போன்றவற்றோடும் அன் வரும்.வினையாலணையும் பெயர்களின் இறுதியில் “அது” உள்ளது என விவாதிக்க முடியும் என்றாலும் தெளிவு கருதி அவற்றையும் சொல்லியிருக்கலாம்.

அற்று சாரியை ஏற்கும்பகுதிகளாக சில, பல, இவை, அவை, எல்லாம் ஆகிய ஐந்தை மட்டும் குறிப்பிடுகிறார் (பக்கம் 15).இவற்றோடு எவை, யாவை ஆகியவையும் சேர்க்கப்பட வெண்டும்.

இன் வருமிடம் குறித்து விளக்கும்போது பெயர்ச்சொல், திரிபு பகுதி, பன்மை விகுதி ஆகியவற்றிற்குப் பின் விருப்ப அடிப்படையில் வரும் என்கிறார்.தொடர்ந்து, இருப்பினும் மேசை போன்ற பல சொற்களின் பின் இன் வருவது கட்டாயம் என்கிறார் (பக்கம் 22). மேசையின் கால் என சான்று காட்டியிருப்பதன் வழியாக மேசைக்கால் என வராது என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.இது சரியல்ல.ஒரு வேளை கூடுதல் சொற்கள் கொடுத்திருந்தால் அவருடைய கூற்றை உறுதிசெய்ய முடிந்திருக்கும்.

வேற்றுமை குறித்த பகுதியில் பெயர்ச் சொற்களோடு வேற்றுமை விகுதிகள், கட்டுப் பின்னுருபுகள்(Bound post positions), தனிப் பின்னுருபுகள்(free post positions)  என மூன்றும் சேருவதாகக் குறிப்பிடுகிறார்(பக்கம் 24).

1.இடம், உடன், இருந்து, ஆக ஆகியவை அவருடைய கட்டுப் பின்னுருபுகள் பட்டியலில் உள்ளன.இவற்றுள் இடம், உடன் ஆகியன கட்டுருபன்கள் இல்லை.

(எ-டு) மனைவி உடன்வர அவர் மேடையேறினார்.

           அது என்னுடைய இடம்

2.உடைமைப் பொருள் வேற்றுமைக்கான எந்த உருபும் வேற்றுமை விகுதிகள் பட்டியலிலோ கட்டுப் பின்னுருபுகள் பட்டியலிலோ இல்லை.பக்கம் 43 இல் உடைமைப் பொருள் வேற்றுமையை விளக்கும்போது அது, இன் உடைய மூன்றில் “அது” வை மட்டும் வேற்றுமை விகுதி என்கிறார் நூலாசிரியர்.குறைந்தபட்சம் அதையாவது பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும்.

உடைமைப் பொருள் வேற்றுமை வடிவம் பின்வரும் ஐந்து வகைகளில் அமையும் என்கிறார்.

1.பெயர்திரிபு(மரத்து)

2.பெயர்+இன்

3.பெயர்+அது

4.பெயர்+இன்+அது

5.பெயர்+உடைய (பக்கம் 45, 46)

ஆனால் ஆறாவது வகையும் சாத்தியம்.

பெயர்+இன்+உடைய

(எ-டு)நாயினுடைய

மேரியினுடைய

ஏவல் வினையை விளக்கும்போது அடா, அடி, ஐயா, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா ஆகிய சொற்களை ஏவல் ஒருமையோடும் ஏவல் பன்மையோடும் சேர்த்துப் பயன்படுத்தலாம் என்கிறார்.எடுத்துக்காட்டாக வாடா, வாடி, வாய்யா ஆகியவற்றையும் வாருங்கள்டா, வாருங்கள்டிவாருங்கள்ம்மா ஆகியவற்றையும் கொடுத்துள்ளார் (பக்கம் 57).இந்த வரையறை பேச்சுத் தமிழுக்குப் பொருத்தம்.ஆனால் எழுத்துத் தமிழுக்குப் பொருந்தாது.தாமஸ் லேமேனின் இலக்கணம் தற்கால எழுத்துத் தமிழுக்கானது.எழுத்துத் தமிழில் வாருங்கள் அம்மா, வாருங்கள் ஐயா என உறவுமுறைச் சொற்களை முதல் எழுத்துக் கெடாமல்தான் சேர்க்க முடியும்.அதேபோல் பன்மையோடு டா, டி சேர்க்க முடியாது.

தமிழ் வினைகளைத் தற்கால இலக்கணக்காரர்கள் ஏழு வகையாகப் பிரிப்பர். தாமஸ் லேமேன் நான்காம் குழுவில் புகு என்ற வினையைச் சேர்த்துள்ளார்(பக்கம் 59).போடு-போட்டேன், பெறு-பெற்றேன் போல் புகு-புக்கேன் என ஆகும் என்பதால் அவ்வாறு செய்துள்ளார்.ஆனால் இலக்கணம் தற்காலத் தமிழுக்கு.எனவே குறைந்தபட்சம் “புக்கேன்” பழந்தமிழ் வழக்கு என்ற குறிப்பாவது இடம்பெற வேண்டும்.இல்லாவிட்டால் புகுந்தேன் என்பதற்குப் பதிலாகப் புக்கேன் என்று கற்போர் பயன்படுத்தக் கூடும்.

பக்கம் 60 இல் பால், எண், இட விகுதிகளின் பட்டியல் உள்ளது.இதில் பலவின்பாலுக்கு உரிய விகுதியாக “அ” கொடுக்கப்பட்டுள்ளது.அப்படியென்றால் “அன்” என்னவென்ற கேள்வி எழுகிறது.(நடந்த்-அன்-அ).இது விளக்கப்பட வேண்டும்.அதேபோல் ஒன்றன்பால் விகுதிகளுள் ஒன்றாகக் கொடுக்கப்பட்டிருக்கும் எதிர்கால விகுதி உம் இங்கேயும் தரப்படவேண்டும்.

மேற்சொன்ன அன் குறித்த விளக்கம் பக்கம் 64 இல் உள்ளது.அன் என்பது சாரியை(Inflectional increment) என்று கூறுகிறார்.ஆனால் மூன்றாம் பிரிவு வினைகளோடு மட்டும் இது வராது என்கிறார்.அதாவது பேசு, தூங்கு, வாங்கு போன்ற சொற்களில் இது வராது என்கிறார்.

பார்-த்த்-அன்-அ --->பார்த்தன

பேசு-இன்-அ      ---->பேசின

இதை முன்பே சொல்லியிருக்கலாம்.

தமிழ்ப் பணியாற்றிய ஜெர்மானியர் முன்னோடிகளுள் நடுவர் மதப்பணியாளர்Hilko wiardo schomerus.இவர் ஒரு இறையியல் பேராசிரியர்.இவர் விநாயக புராணம், சிதம்பர மகாத்மியம் ஆகிய நூல்களை மொழிபெயர்த்தார்.இவை இன்னும் வெளிவரவில்லை.

1960-களின் நடுவில் கோலோன் பல்கலைக்கழக இந்தியவியல் தமிழ்த்துறையில் சேர்த்தார் பேராசிரியர்K.L.Janert.இவருடைய முயற்சியால் மேரி மாசிலாமணி , கி. நாச்சிமுத்து, ப.ரா.சுப்பிரமணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்து சென்று இத்துறையில் சேர்ந்தனர்.இங்கு மூன்று முக்கிய பணிகள் நிறைவேற்றப்பட்ட.அவை வருமாறு,

1.தமிழில் ஆங்கிலக் கடன் சொல் அகராதி உருவாக்கம்(Dictionary of English loan words in tamil).

2.19 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட வின்ஸ்லோவின் தமிழ் ஆங்கில அகராதி மறு அச்சு செய்யப்பட்டது.

3.2000 பக்க அளவில் தட்டச்சு செய்யப்பட்ட தற்காலத் தமிழ் வினைகள் தொகுப்பு.இதில் மாதிரி வாக்கியங்களும் இடம்பெற்றுள்ளன.

இத்துறையில் உல்ரிக் நிக்கலஸ் முத்தொள்ளாயிரம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.தமிழ்ச் செவ்விலக்கியங்களுக்கான அடைவு நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.

1992 இல் பேராசிரியர்  kapp இத்துறைக்குப் பொறுப்பேற்றார்.இதனால் தற்காலத் தமிழ் இலக்கியம் மீது கவனம் திரும்பியது.அங்கு முதுகலை கற்ற மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக கா.ந.சுப்பிரமணியம், மௌனி, உ.வே.சா போன்றவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தனர்.

ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தில் 1965 ஐயொட்டி பேராசிரியர் இந்தியவியல் துறைக்குப் பொறுப்பேற்றார்.பிறகு அ.தாமோதரன் அங்கே பணியில் சேர்ந்தார்.இவர் தமிழ் அகராதிகள் குறித்த அடைவு நூல் ஒன்றைத் தயாரித்தார்.இதில் 600 பதிவுகள் உள்ளன.

இத்துறையில் மூன்று பேர் தமிழாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

1.தாமஸ் மால்ட்டன் இரட்டைக் கிளவி குறித்து ஆய்வு செய்தார்.

2.தாமஸ் லேமேன்சங்கத் தமிழ் இலக்கணம் குறித்து ஆய்வு செய்தார்.

3.Jacques Designer வினையெச்சம் (Verbal participle and infinite) குறித்து ஆய்வு செய்தார்.

இவ்வாறாக, தமிழ்சுழலுக்கு வெளியே தமிழ்ப்பரவலாக்க வளர்ச்சி சார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவது புதிய நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது.

 

துணை நூல்கள்:

1. Thomas Lehmann, 1989.A Grammer of Modern Tamil, pandicherry institute of Linquistics and culture, pandicherry.

2. Thomas Matten, Tamil studies in germany, Tamil nation.org.

 

 

 

 

 

 

 

 

 
Related News
 • நாட்டார் வழக்காற்றியல்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World