Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueதமிழிந்தியக்கிறித்தவ வரலாற்றெழுதியல்- செய்தனவும் செய்ய வேண்டியனவும்
 
முனைவர் சா. சாம் கிதியோன்,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துரை,
பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி)
திருச்சிராப்பள்ளி, இந்தியா.

உலகக் கிறித்தவ வரலாற்றியல் தமிழிந்தியக்கிறித்தவற்கு ஒரு தனித்த சிறப்புண்டு. கிறித்தவம் தோன்றிய செமிடிக் பாரம்பரியமும் அது செழித்து வளர்ந்த வளமான ஐரோப்பிய பாரம்பரியமும் தனித்த திராவிடப் பாரம்பரியமும் இணைந்து, அகண்ட இந்திய துணைக் கண்டத்தில் தழைத்ததுதான் தமிழிந்தியக் கிறித்தவம்.செமிடிக் நாகரிகத்தின் அற்புத விளைபொருளாக அருளியது தான் ஒப்பற்ற விவிலியமாகும். வாழ்க்கை அனுபவம்  செறிந்த இறை மக்களின் விவிலியம் போன்ற, ஓர் அரிய பொக்கிஷம் தமிழ் இந்தியக் கிறித்துவத்திற்கும் கிடைக்க வாய்ப்புண்டு. எப்படியெனில் எகிப்தில் இறை மக்கள் அடைந்த துன்பத்தைப் பார்த்த கடவுள் மோசேயை அனுப்பி தன்னிடத்தில் சேர்த்துக் கொண்டது போல வர்ணாசிரமப் பிடியில் உழன்ற இந்தியமக்களையும் நற்செய்திப்பணியாளர்களை அனுப்பி தன் பக்கமாக வரவழைத்தார் என்பது மிகையல்ல. இதற்குப் பார்ப்பனியத்தின் சாதி, மொழி, இன பண்பாட்டு அடக்குமுறைக்கு எதிராக நிகழ்ந்த தோள்சீலைக்கலகம், துவிக்குத்தகைப் போராட்டம் போன்றவற்றில் பங்கெடுத்த நற்செய்திப்பணியாளர்கள், மக்களைச் சமூக விடுதலையை நோக்கி நெறிப்படுத்தியதே அடையாளமாகும்..
வருகின்ற சந்ததியினர் இதனைக் காலங்காலமாகப் புரிந்து வாழ்வதற்கு வேண்டிய நெறிமுறைகளைக் கோடிட்டுக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது. இதனை விவரிப்பதற்காகத் தான் தமிழிந்தியக் கிறித்தவம் என்ற வரலாற்றியல் கருத்தாக்கத்தைக் தெரிந்துகொண்டேன். இந்த வரலாற்றை எழுதுவதில் உள்ள சவால்களையும் பிரச்சினை மையங்களையும் விவாதிப்பதாக வரலாற்றெழுதியல் என்ற இக்கட்டுரை அமைகின்றது.இத்தலைப்பை வடிவமைப்பதில் ஈழத் தமிழறிஞர் கா.சிவத்தம்பியன் “தமிழ் வரலாற்றெழுதியல் “ என்ற நூல் எனக்கு உந்துதலாக அமைந்தது.
எந்த ஒரு வரலாற்று செயல்முறைக்கும் காலப்பகுப்பு அவசியமானது எந்தெந்தக் காலத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெற்றன, அதன் சமுக கலாச்சார, அரசியல், பொருளாதார பின்னணி என்ன என்பதை எல்லாம் இதற்காக விவரித்து நோக்குதல் வேண்டும்.  அந்த வகையில் தமிழிந்திய கிறித்தவத் தொடர்பான காலபகுப்பை ஐந்து நடைமுறைகளில் பொதுவாக பகுத்துப் பார்க்கலாம்.அவை தமிழிந்திய ஆதிக் கிறித்தவம், காலனியக் கிறித்தவம், சுதந்திர இந்தியக் கிறித்தவம், சமகாலக் கிறித்தவம்,எதிர்காலக் கிறித்தவம் என்பதாகும்.
செங்கற்களாக சிதறியிருந்த ஆதிக் கிறித்தவத்தை காலனியக் காலக்கட்ட சமய பணியாளர்களும் கல்வியாளர்களும் சேர்ந்து கிறித்தவ வரலாற்றுச் சுவராக எழுப்பினர்.இதில் சொல்லப்படும் முக்கியமான செய்தியாக இயேசுவின் சீடர் புனிதத் தோமையரின் வருகையையும், அதையொட்டி நிகழ்ந்த சமுக மாற்றத்தையும் குறிப்பிடுகின்றனர்.
இன்று இந்நிகழ்வு தமிழ்ச்சூழலில் வாதபிரதிவாதங்களை ஆய்வுநோக்கிலும் புனைவாக்க நோக்கிலும் வளர்த்து வருகின்றது. வாதத்திற்குச் சான்றாக தோமையர் பற்றிய தாமஸ் மலைக் குறவஞ்சி, “தமிழகம் வந்த தோமா” “வியத்தகு இந்தியா” என்ற நூலிலுள்ள ஆதிக்கிறித்தவம் தொடர்பான பதிவுகள் முதலியவற்றைக் கூறலாம். பிரதிவாதமாக “சிலுவையின் பெயரில்” என்ற ஜெயமோகனின் நூல் அமைகின்றது.
தமிழிந்திய வரலாற்றெழுதியல் என்பது ஒரு கலைகளஞ்சியத் தொகுப்பு பணி போன்றது.இதற்கு காலனியக் காலகட்ட சமயக் கல்விப் பின்புலத்தில்  கால்கோள் நாட்டப்பட்டது இதனை ஐரோப்பிய தமிழிந்தியக் கிறித்தவ சமயப்பணியாளர்களும், கல்வியாளர்களும், தமிழிந்தியக்,கிறித்தவர்களும் கிறித்தவரல்லாதோரும் நிகழ்த்தினர்.
இவர்கள் செய்த பணிகள் அச்சு ஊடகச் செயல்பாடுகளாக, சமூக அரசியல் செயல்பாடுகளாக, கலை-இலக்கியப் படைப்புச் செயல்பாடுகளாக கல்விப்புலச் செயல்பாடுகளாக, சமயப்பரப்பல் செயல்பாடுகளாக,  பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றன.சமகாலக் கிறித்துவத்தை வளப்படுத்தி எதிர்காலக் கிறித்தவத்தை சமைப்பதற்கு  மூத்தோர் செய்த பணிகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வெண்டும். அதனை எவ்விதம் நிகழ்த்த வெண்டும் என்பதை விரிவாகக் காணலாம்.
ஐரோப்பாவில் நடந்த அச்சு ஊடகக் கண்டுபிடிப்பு நவின அறிவியல் வளர்ச்சிக்கு உலகளவில் வித்திட்டது. அதன் தாக்கம் கி.பி. 1498இல் வாஸ்கோடகாமா இந்தியா வந்ததிலிருந்து தொடங்கி, ஒருங்கிணைந்த காலனிய இந்தியாவாக வளர்ந்து, அரசியல் சுதந்திர இந்தியாவாகப் பிறப்பதற்கு எவ்விதம் வித்திட்டது என்பதும் அதற்குத் தமிழிந்தியப் பகுதி களனாக அமைந்த முறையும் இங்கு விவாதிக்கப்பட வேண்டும்.
இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சுவாகனம் ஏறியது தமிழ் மொழியேயாகும். இன்றும் உலகளவில் இணையதளங்களில் ஆங்கிலத்திற்கு அடுத்து வட்டார மொழிகளில் சிறப்பாகச் செயல்படுகின்றது இப்பாரியய வளர்ச்சி தமிழிந்திய கிறித்தவ உலகிற்கு மதிப்பு தரக்கூடியது.
கொள்கை விளக்கநூல்கள்,  இலக்கியப்படைப்பாக்கம், மொழிபெயர்ப்பு, நூல்பதிப்பு முதலியவை சமயப்பணியாற்ற வந்த கிறித்தவ அச்சுக்கூடங்களிலிருந்து வெளிவந்தன. தமிழகத்திலும் ஈழத்திலும் இருந்த அச்சுக்கூடங்களின் நூற்பதிப்புகளைத் தொகுத்தால் செம்மொழித் தமிழுக்கும்  தமிழிந்தியக் கிறித்தவத்திற்கும் ஆற்றப்பட்டுள்ள பணிகளைக் கண்டறியலாம்.
பொதுவாக சமயப் பரப்பலை மையமாக வைத்து வாதப் பிரதிவாதங்கள் கிறித்தவ சமயத்தின் உட்பிரிவுக்குள்ளும் பிற சமயங்களுக்கிடையில் நடைபெற்றன. இவற்றைக் கண்டனத் திரட்டு நூல்களாக நாம் தொகுத்துக் கொள்ளமுடியும்.மொழிபெயர்ப்புகள் தமிழிலிருந்து பிறமொழிகளுக்கும் பிறமொழியிலிருந்து தமிழுக்குமாக சிறிய பெரியளவில் நிகழ்ந்துள்ளன.ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் முன்வைத்த சமூக சேவை என்பது புதிய கல்வி முறையும் நவீன மருத்துவமுமாகும். இவை ஏற்படுத்திய தாக்கம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி சில இடங்களில் சமூகப் போரட்டங்கள் வாயிலாக சமுக மாற்றத்தையும் உண்டாக்கியுள்ளன.
இதில் தமிழிந்தியர்களுடன் ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் ஆட்சியாளர்கள் சான்றோர் பெருமக்கள் என்று பலரும் பல நிலைகளில் இணைந்து செயல்பட்டனர். இச்செயல்பாடுகள் பற்றிய நிறைய ஆவணங்கள், குறிப்புகள், நாட்டார்வழக்காறுகள், கதைகள், நூல்கள் என்று பலவும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. இதனைத் தமிழிந்தியக் கிறித்தவ வரலாற்றெழுதியல்  நோக்கில் தொகுக்க வேண்டியது  நாம் செய்யவேண்டிய முதன்மையான கடமையாகும். இதன்மூலம் தமிழ்ச் சமூக வரலாற்றுக்கும் இந்திய மதச்சார்பின்மை கருத்தாக்கத்திற்கும் நாம் பங்களிப்பு செய்பவர்களாக மனிதகுல சேவையில் நிலையானதொரு இடத்தை வகிக்கமுடியும்.
இதன் தொடர்பாக ஒரு சில ஆய்வுநூல்களே சமூகவியல் கண்ணோட்டத்தில் வந்துள்ளன.அவற்றில் கிறித்தவரல்லாதோரின் பங்களிப்புகளே முக்கியமான இடத்தை வகிக்கின்றன.அவர்களில் மயிலை சீனி வேங்கடசாமி, ரா.பி.சேதுப்பிள்ளை, கா.மீனாட்சிசுந்தரம், செ.வை. சண்முகம்,  ஆ.சிவசுப்ரமணியம்,ஆ. இரா. வெங்கடாசலபதி, வீ. அரசு போன்றோர் குறிப்பிடத்தகுந்தோர்.இவர்களின் விவாதங்கள் கிறித்தவர்களின் பங்களிப்புகள் என்றும் ஐரோப்பிய அறிஞர்களின் பங்களிப்புகள் என்றும் காலனிய ஆட்சியின் விளைவுகள் என்றும் பல்வேறு நிலைகளில் குறிக்கப்படுகின்றன தமிழிந்தியக் கிறித்தவ வரலாற்றெழுதியல் துறைக்கு இம்மூன்று விதமான சொல்லாட்சிகளையும் நெறிப்படுத்தி கருத்தாக்க முறையில் வரிசைப்படுத்த வேண்டிய மற்றொரு பணியும் நமக்கிருக்கின்றது.இப்பணியை மேற்கொண்டு செய்வோமாயின் மக்கள் நலன் சார்ந்த ஒரு தெளிவான வரலாற்றை உருவாக்கியவர்களாவோம்.அதற்கான தேவையும் இருக்கிறது.சான்றாக ஒரு கருத்தாக்கம் தொடர்பான விவாதச் செயல்பாட்டைக் காணலாம்.தமிழிந்திய மக்களுக்கு தாய்மொழி வழிக்கல்வியை வழங்க வேண்டுமா அல்லது காலனிய மொழியான ஆங்கிலமொழிவழிக்கல்வியை வழங்கவேண்டுமா என்பதில் சமயப்பணியாளர்களும் கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும் இருவேறு நிலைகளில் பிரிந்திருந்தனர். சமயப் பரப்பல் தொழிற்பாட்டில் தாய்மொழி முறையே சரியானது என்று தீர்மானித்த மறைப்பணியாளர்கள் சமூகச்சேவை முறைமையான கல்வி, மருத்துவம் முதலியவற்றிலும் தமிழ்வழி முறையை வளர்த்தெடுக்க முனைந்து செயல்பட்டனர்.இதற்கு சி. தியோபிலஸ் இரேனியஸ், சாமுவேல் பிஷ்கிறீன்  ஆகியோரின் அளப்பரிய பணியே எடுத்துக்காட்டாகும்.
இம்மறைப் பணியாளர்கள் பலரும் அவர்கள் வந்திருந்த நாட்டின் நற்செய்தி நிறுவனப் பணித்தளங்களிலேயே செயல்பட்டனர். வாய்ப்பிருக்கும்போது தேவை கருதி பிறருடன் இணைந்தும் செயல்பட்டனர்.இந்நிறுவனங்களை மிஷன் என்றழைப்பர்.பல்வேறு மிஷன் நிறுவனங்களிலும் வெவ்வேறு கருத்து நிலைகளில் செயல்பட்டவர்களை சமகாலத் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய பிறிதொரு சமகாலத் தேவையும் நமக்கிருக்கின்றது.இந்நோக்கத்தின் அடிப்படையில் இலக்கியப்படைப்பு, சமூகவியல் ஆய்வுநூல்கள் மிகச்சிலவே தமிழிந்தியக் கிறித்தவர்களிடமிருந்து வந்துள்ளன.அந்தளவில் ஈழத்தைச் சார்ந்த யாழ்ப்பாண  பேராயர்கள் சிலர் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.அவர்களில் சபாபதி குலேந்திரன், கலாநிதி எஸ். ஜெபநேசன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.விவிலியத் தமிழ் மொழிப்பெயர்ப்பை குறித்த ஆய்வு நூலொன்றை சபாபதி குலேந்திரன் வழங்க அவர் வழி வந்த ஜெபநேசன் அமெரிக்க மிஷன் தமிழ்ச்சமூக ஊடாட்டம் தொடர்பாக மூன்று ஆய்வு நூல்களைத் தமிழிலும் வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டில் டேவிட் பாக்கியமுத்து - சரோஜினி தம்பதியினர் இத்தகைய அரிய பணியைத்தொடங்கி சில நூல்களை எழுதியுள்ளனர்.ஆனால், அவை முற்றுப்பெறவில்லை.அவருடைய திருநெல்வேலிக்கு கிறித்தவம் வந்தது என்ற நூல் இவ்வரிசையில் முக்கியமானது.தென் திருவிதாங்கூர் பகுதியிலிருந்தும் சமூகப் போரட்டங்கள், மிஷன் வரலாறுகள் குறித்து சில நூல்கள் தனிப்பட்ட முறையில் வெளிவந்துள்ளன.ஜாய் ஞானதாசன் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்.இவையன்றி தமிழ்நாடு இறையியல் கல்லூரி, கிறித்தவ இலக்கிய சங்க நூல்கள் போன்ற பல நிறுவனங்களின் பணிகளையும் நாம் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையில் இருக்கின்றோம்.இவை மட்டுமின்றி அனைத்து திருமண்டலங்களிலும் தனிப்பட்டோர் எழுதிய நூல்கள்,நிறுவனம் சார்ந்து வெளியான நூல்கள் எல்லாவற்றையும்  தொகுத்து தமிழிந்திய வரலாற்றெழுதியலுக்கு வலு சேர்க்க வேண்டும்.

கத்தோலிக்க, சீர்திருத்த திருச்சபை பிரிவிலிருந்து, சமகாலத் தமிழ்கிறித்தவம் மேலும் பிரிந்து தனிப்பட்ட பெந்தகொஸ்தே சபைகளாக பல்வேறு வகைகளில் பெருகிவிட்டன.நற்செய்திக் கூட்டங்களும் இறையருள் பெற்றுள்ளோர் என்று சொல்லப்படுபவர்களால்  புதுப்புது முறைகளில் நடத்தப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு வாரமும் சபையினுள்ளும் நடத்தபெறும் சிறார் ஊழியங்கள் இளைஞர் ஊழியங்கள்,  ஒவ்வொரு வாரமும் நடைபெறும் வழிபாட்டு முறைமைகள் அதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள இறைவேண்டல் பாடல்கள், பாடநூல்கள்,  பயிற்சி நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்து அதில் வெளிப்படும் இறைகொள்கைகள் அனைத்தையும் மதிப்பீடு செய்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
சிறைச்சாலை, மருத்துவமனை ஊழியங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வீட்டு சந்திப்புகள், துண்டுப் பிரசுர ஊழியங்கள் இவைகளைச் செய்யும்போது ஏற்படும் அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள் இவைகளைப் பற்றியப் பதிவுகள் ஆகியவை இன்றைய சமூகத்திற்கு தேவைப்படுகின்றன.ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்கென்று தனிபட்ட முறையில் வார, மாத இதழ்களை நடத்துகின்றன.ஆனால் அனைத்துத்தரப்பினரும் பங்கெடுத்துக்கொண்டு ஜனநாயக முறையில் செயல்படும் தினசரி, வார, மாத  இதழ்களோ, சிறப்பு வெளியீட்டு அமைப்போ வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளோ இல்லை.இவைகளை மதசார்பின்மை நோக்கில் பொதுநல அக்கறையோடு திறம்பட செயல்படுத்தும் சித்தாந்த நோக்குடையவர்கள் தேவைப்படுகின்றனர்.
 
Related News
 • திருக்குறள் காட்டும் சித்த மருத்துவத்தின் கோட்பாடுகள்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World