Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueதிருக்குறள் காட்டும் சித்த மருத்துவத்தின் கோட்பாடுகள்
 

 

முனைவர் க.வேங்கடேசன்


தமிழ்நாட்டு மருத்துவ நெறி
மருத்துவக்கலை மனிதன்  தோன்றிய நாள்  தொட்டு என்றும்  வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு கலை,  சுவை மிகுந்த அதன் வரலாறு ஒரு தொடர்கதை. சுவையான அந்தத் தொடர்கதையின் தலைவன் மனிதன். ஒய்வின்றி அவன் ஆய்வுகளை மேற்கொள்ளுகிறான். அதன் பயனாக, மருத்துவக்கலை நாளும் வளர்ந்து செழிக்கிறது. காலந்தோறும் செழித்து வளரும் மருத்துவக் கலையின் முத்திரைகள், மொழி வாயிலாக இலக்கியத்தில் பதிவாகின்றன. எந்த ஒரு நாட்டின் மருத்துவ வரலாறும் அந்த நாட்டின் பிற துறை வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம்.

ஆராய்ச்சி நோக்கில் ஆழ்ந்து காணும்போது, இந்தியாவின் தொன்மையான மருத்துவ முறைகளாக , ஆயுர் வேதத்தையும், சித்த மருத்துவத்தையும் கருதலாம். வட இந்தியாவில் ஆயுர்வேதம் சமஸ்கிருதம் மூலம் தழைத்தது என்றால், தென்னிந்தியாவில் தமிழ் மொழி மூலம் சித்த மருத்துவம் வளர்ந்தது எனலாம். ஏறக்குறைய வடக்கிலும் தெற்கிலும் சமகால மருத்துவ முறைகளாகத் திகழ்ந்த ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் 2000 ஆண்டுகளில், கொள்கைகள், பயிற்சிகள், மருந்து செய்முறைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் பரிமாற்றங்களைக் கொண்டன என்றாலும் , அடிப்படைக் கொள்கைகளிலும் , மருத்துவ செய்முறைகளிலும் நோய்க் கணிப்பு முறைகளிலும் இன்றும் மாறுபட்டே உள்ளன.
சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டில் தோன்றிய உயரிய ஒழுக்க நூல் திருக்குறள். இந்த நூலை எழுதிய திருவள்ளுவரின் காலத்தைக் கிறித்துவிற்கு முற்பட்ட காலமாகக் கருதுவர் அறிஞர். நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ள இந்நூலில் தொண்ணூற்று ஐந்தாவது அதிகாரமாக அமைந்துள்ளது “மருந்து” எனும் அதிகாரம். பத்துக் குறள்களைக் கொண்டுள்ள இவ்வதிகாரத்தின் எட்டாவது குறளில் திருவள்ளுவர் தெளிவானதொரு மருத்துவ நெறியைக் கூறியுள்ளார். தமிழ் மருத்துவ நூல்களின் துணைக்கொண்டு இக்குறளை ஆய்வதன் மூலம், தமிழ் மருத்துவ நெறியை ஓரளவேனும் உருவாக்கலாம். அத்துடன், தமிழ் மருத்துவ நூல்கள் தரும் விளக்கங்களைத் தற்கால அறிவியல் கண் கொண்டு நிறுவுவதன் மூலம், தமிழ் மருத்துவ நெறியின் அறிவியல் அடிப்படைகளையும் புரிந்து கொள்ளலாம்.

குறள் கூறும் மருத்துவ நெறி
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்(குறள் 948)

தமிழ் மருத்துவ நெறியைக் கணிப்பதற்கு வித்தாக விளங்கும் இக்குறள், பிணியாளனிடத்து நிகழும் பிணியினை நீக்கும் அறப்பணியில், மருத்துவன் மேற்கொள்ள வேண்டிய நான்கு நிலைகளைக் குறிப்பிடுகின்றது. அவை,
1. நோய் நாடல் 
2. நோய் முதல் நாடல்
3. நோய் தணிக்கும் வழி நாடல்
4. அறிந்த வழி பிழையின்றிச் செய்தல்
1.நோய் என்பது என்ன?
உலகம் ஒர் அண்டம். மனிதன் அதில் ஒரு சிறிய பிண்டம். அண்டத்தில் இயங்கும் அத்துணைச் சக்திகளும், பிண்டத்திலும் இயங்குகின்றன. மனித உடலின் உள்ளே இயங்கி , உறுப்புகளின் வாயிலாகப் புலப்படும் சக்திகள் அண்டத்தில் இயங்கி வரும் சக்திகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக,
அ. செவ்வாய்க் கோள் அண்டத்தில் இயங்கும் மிகப் பெரிய சக்தி. இக்கோளிலிருந்து வெளியாகும் கண்ணுக்குப் புலனாகாத சில கதிர் இயக்கங்களின் தன்மை மனித உடலில் உள்ள இரத்தத்தில் காணப்படும் சில மூலப் பொருள்களின் தன்மையுடன் ஒத்துள்ளது.
ஆ. பூமியில் உள்ள உயிர்களின் இனப்பெருக்கத்திற்கும் அண்டத்திலுள்ள சுக்கிரன் என்னும் கோளிற்கும் தொடர்பு உண்டு.
இ. அண்டத்தில் இயங்கும் இயக்கத்திற்கும் மகளிரின் மாத விலக்குக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
 
இம்மேற்கோள்கள், உலகத்திற்கும், மனித உடலுக்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும், இக்கருத்து, பழந்தமிழ் மருத்துவத்தினைப் படைத்ததாகக் கருதப்படும் சித்தர்களுக்கும் உடன்பாடுடையதாகும்.
அண்டத்திலுள்ள பிண்டம்
பிண்டத்திலுள்ள அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே (சட்டமனி ஞானம்)

அண்டத்தில் இயங்கும் இச்சக்திகள் அதனதன் அளவில் இயங்கும் வரை உலகில் ஏதும் துன்பம் இல்லை. மாறாக, அவற்றின் அளவில் மாறுபடும்போது, பூகம்பம், புயல், வறட்சி, பெருமழை ஆகிய கொடுந் துயரங்கள் எழுகின்றன. அதுபோல், மனித உடலாகிய பிண்டத்தில் இயங்கும் சக்திகள் அவற்றினளவில் இயங்கும் வரை நோயற்ற வாழ்வும், மிகுதல்-குறைதல் ஏற்படும்போது நோயுற்ற வாழ்வும் அமைகின்றன.
இவ்வுலகமும், மனித உடலும் ஐம்பெரும் மூலங்களால் ஆனவை, மண், விண், நீர், தீ, காற்று என்னும் இவ்வைம் பொருள் மூலங்கள் அண்டம், பிண்டம் ஆகிய இரண்டிற்கும் மூலாதாரமாக அமைகின்றன. இதனைத் தமிழ் மருத்துவ நூலோர் “ஐம்பூதக் கொள்கையாக வகுத்து அதனை “ 96 தத்துவக் கட்டளை” எனும் தொகுப்பில் முதல் தத்துவமாகச் சேர்ப்பர்.
அண்டத்தில் உள்ள
1.மண்-மனித உடலில், எலும்பு, சதை, நகம், தோல், மயிர் போன்ற வடிவங்களிலும்
2.விண்-வயிறு, இதயம், கழுத்து, தலை ஆகிய உறுப்புகளில் காணப்படும் இடைவெளியாகவும்
3.நீர்-பித்தம், இரத்தம், விந்து, கழிவு நீர், வியர்வை ஆகியவைகளாகவும்
4.தீ-பசி, தாகம், உறக்கம் ஆகியவைகளாகவும்
5.காற்று - கருங்கல், நெளிதல், அசைதல் ஆகிய இயக்கங்களிலும்.
    மாறி அமைகின்றன என்பது தமிழ் மருத்துவ நூலோர் கருத்து.
இவ்வாறு மாறி அமையும் இவ்வைம் பெறும் சக்திகள் , மனித உடலில் மூன்று பெரும் உயிர்ச் சக்திகளாகக் கூட்டுறவாகி இயங்கும். தமிழ் மருத்துவத்தில் இம்மூன்று பெரும் சக்திகளே உயிர்த் தாதுக்கள் (Humours) என்று அழைக்கப்படுகின்றன. அவை
1.வாதம் 2.பித்தம் 3.ஐ(கபம்)
விண்ணும் காற்றும் இணைந்தது - வாதமாகவும்
தீ - பித்தமாகவும்
மண்ணும் நீரும் இணைந்து - ஐ(கபம்) ஆகவும்
செயல்படுகின்றன. இம்மூன்றும் 1:1/2:1/4 மாத்திரை அளவு(Winking Time) என்ற விகித அளவில் தொழிற்படும்போது உடல் இயங்குதற்குரிய சக்தி Metabolic Energy தோன்றுகிறது.
வாதம் என்பது ஆக்கும் ஆற்றல் உடையது(Anabolic Force)
பித்தம் என்பது காக்கும் ஆற்றல் உடையது(Metabolic Force)
ஐ(கபம்) என்பது அழித்தல் ஆற்றல் உடையது(Catabolic Force)
நுண்ணுடலில் (Subtle body) இயங்கும் இம்மூன்று உயிர்த் தாதுக்களும்,உடலில் உள்ள பிற ஏழு தாதுக்களிலும், நுண்ணிய கண்ணறைகளிலும்(cells) இடைவிடாது செயற்படும்போதுதான் உடல் நன்னிலையில் இயங்கும். இம்மூன்றும் தம் அளவில் ஒத்து இயங்கும்போது உடலில் உள்ள தாதுக்களும், கண்ணறைகளும் இயங்கும். அப்போது உடல் துன்பமின்றி இருக்கும்.
மேற்குறிப்பிட்ட உயிர்த் தாதுக்கள் தம் நிலைமாறிச் செயற்படும்போது உடல் தாதுக்களின் செயலும், கண்ணறைகளின் இயக்கமும் பழுதடையும், உடலை இயக்கும் இவற்றின் உட்சூழல்(Internal environment) மாறுகிறது. பழுதடைந்த இச்சூழ்நிலையே “ நோய்” எனப்படும். மீண்டும் அவற்றைச் சமநிலைக்குக் கொண்டு வருவதே “மருத்துவம்  எனப்படும்.  தமிழ் மருத்துவக் கோட்பாடுகளின்படி சமநிலைப்பட்ட சூழலில் எந்தவித நோய்க் கிருமியும் உடலைப் பாதிக்காது. காலரா, அம்மை போன்ற தீவிர நோய்களினால் பாதிக்கப்படாமல் சிலர் நலமாக இருப்பதற்கு இக்கோட்பாடே காரணமாக அமைகிறது எனலாம்.
2.நோய் நாடல்
பிணியறியும் முறைமையே நோய் நாடல் எனலாம் . மருத்துவர், தன்னை நோக்கி வந்த பிணியாளரைப் பற்றி அறிய வேண்டியவற்றை அவரிடம் கேட்டும், பொறி, புலன்களால் தேர்ந்தும், அவர் ஒருகால். சொல்வதற்கியலாதவராய் இருப்பின், அவர் சுற்றத்தாரைக் கொண்டு அறியக் கூடியவற்றை அறிந்தும், பிணியைக் கணித்தலே, நோய் நாடல் நெறியாகும் தமிழ் மருத்துவத்தில் பிணியறியும் முறைகளை எண்வகைத் தேர்வுகளாகப் பகுப்பர். தமிழ் மருத்துவத்தின் தந்தையெனக் கருதப்படும் அகத்தியர் இவ் எண்வகைத் தேர்வுகளைக் குறிக்கிறார். அவை 1. நாடி 2. நல்லொலி 3. தொடு உணர்ச்சி 4.விழி 5. நா 6.மேனி 7. மலம் 8. சிறுநீர் ஆகும்.
நாடி
எண்வகை தேர்வுகளில் முதலிடம் பெறுவது நாடித் தேர்வாகும். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் மருத்துவத்திற்கே உரிய சிறப்பான தேர்வாக இருந்து வருவது நாடித் தேர்வாகும். இந்தியாவின் தொன்மையான மருத்துவமெனக் கருதப்படும் ஆயுர்வேத மருத்துவம், நாடிக் கலையைத் தமிழ் மருத்துவத்திலிருந்துதான் பெற்றது என்று கூறுவர் ஆய்வாளார். சரகர், சுசுருதர் என்னும் புகழ்பெற்ற ஆயுர்வேத பண்டிதர்கள் இயற்றியனவாகக் கூறப்படும் பண்டைய ஆயுர்வேத நூல்களில் நாடிக் கலை பற்றிய செய்திகள் காணப்படவில்லை என்று கூறும் டாக்டர் குடும்பையாவின் மேற்கோள், முற்குறித்த கருத்துக்கு அரணாகும். தனித் தன்மை வாய்ந்த நாடிக் கலையைப் பற்றிய விரிவான விளக்கங்களைப் பதினெண் சித்தர்கள் எளிய தமிழில் பாடியுள்ளதாகக் கருதப்படுகிறது. எளிய தமிழில் அமைந்துள்ள அவை தொகுக்கப்பெற்று “பதினெண் சித்தர்கள் நாடி சாஸ்திரம்” என்னும் தலைப்பில் தனி நூலாக 1934- இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் துணைக்கொண்டு நாடி பற்றிய செய்திகளை மேற்போக்காகவேனும் அறிதல் நன்மை பயக்கும்.
நாடி  என்றால் என்ன?
இன்றைய நாளில் “நாடி” என்பது குருதி ஓட்டத்தில் காணப்படும் நாடித் துடிப்பையே குறிக்கிறது. ஆனால்  சித்தர்கள் கருதும் “நாடி” இதுவன்று; சித்தர்கள் கருத்துப்படி”நாடி என்பது நரம்பில் துடிப்பது மட்டுமன்று. வாத, பித்த, கப நிலைகளும் நாடியை உணர்த்தவல்ல கருவிகளாகும். அண்மையில் சித்த மருத்துவ அறிஞர் டாக்டர்  வேணுகோபால் அவர்கள்  சைவ சித்தாந்த அடிப்படையில் “நாடி” பற்றிய விளக்கம் தந்துள்ளார். இதன் மூலம் “நாடி” என்பது என்ன  என்பது விளக்கமுறும்.
“உயிரின் சலனமே நாடி எனப்படும், பொதுவாக , உயிர் ஐந்து நிலைகளில் இயங்குவதாகக் கருதப்படுகிறது.
1.சாக்கிரம் - நனவு நிலை
2.கனவு - மயக்க நிலை
3.உறக்கம்(அ)ஒடுக்கம்-புலன்களின் செயலற்ற உறங்கும் நிலை(மரணம்)
4.துரியம் - யோக நிலையில் உயிர் இயங்குவது
5.துரியாதீதம் - உடல், உயிர் மாயமாதல்
சாக்கிரம், கனவு ஆகிய நிலைகளில் உயிர் சலனமுறும்போது “உடல் வாழ்கிறது” என்கிறோம்.
உறக்கம் அல்லது ஒடுக்க நிலையில் “மரணம்” அல்லது உடலிலிருந்து உயிர் ஏகிவிட்டது என்கிறோம்.
துரியம், துரியாதீதம் - ஆகிய நிலைகளில் உயிர் சலனடையும்போது, உடல் உயிர் மயமாகி அருவமாகிறது எனலாம். “முக்தி” என்றும் கூறலாம்.
உறக்க நிலையை உயிர் அடைந்து விட்டால் உடல் அழிந்துவிடும். அந்த நிலையை அடையவொட்டாமல், யோக நெறி மூலம் துரியம், துரியாதீத நிலைகளில் உயிரைச் சலனபடுத்தி, உடலை உயிர்மயமாக்குவதே “ சித்தர்கள் நெறி” ஆகும். உடல் என்பது கண்ணுக்குப் புலனாகும் வடிவம்      என்னும் அறிவியல் சொல்லால் இதனைக் குறிக்கலாம். சாக்கிரம், கனவு நிலையில் உயிர் இயங்கும்போது    உருவாகிறது. உறக்க நிலையில் உடல் அழிந்து உயிர் ஒடுங்குகிறது. உறக்க நிலையில் உடல் அழிந்து உயிர் ஒடுங்குகிறது. துரியம், துரியாதீதம் நிலையில் உடல் அருவமாகி உயிருடன் இணைந்து விடுகிறது. உடலை உயிர்மயமாக்குவதே சித்தர் நெறி ஆக மாற்றுவதே “சித்தி” ஆகும்.
உயிரினம் சலனம்
உருவம்  உறக்கம் (இறப்பு) அருவம்
சாதாராணமாக , யோகநெறி அறியாதவருக்கு, உயிரின் சலனம், உறக்க நிலையோடு முடிகிறது. யோகிகட்கு, துரியம், துரியாதீத நிலைகளை எய்த முடியும் . துரிய நிலை சென்றடைந்தவர்க்கு  நோய் போன்ற துன்பங்கள் வாரா. எனவே , உடலில் உயிர், சாக்கிரம், கனவு போன்ற நிலைகளில் இயங்குகின்றதா, அல்லது உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதா என்பதை நாடிப் பார்ப்பதுதான் நாடி எனப்பட்டது. இதனையே டாக்டர் வேணுகோபால் அவர்கள் “ உயிரின் சலனமே நாடி” என்கிறார்.

உயிரின் சலனமும் நாடித் துடிப்பும்
உயிரின் சலனம் 96 கருவிகள் வாயிலாகத் தொழிற்படுகிற்து. அவற்றில் முக்கியான  கருவிகள் மூன்று அவையே வாதம், பித்தம், கபம் எனப்படும் உயிர்த் தாதுக்கள். இம்மூன்று உயிர்த் தாதுக்களும் 4:2:1 என்ற விகிதத்தில் இயங்கும்போது, உயிரின் சலனம் ஒடுக்கமின்றி , சாக்கிரம், கனவு நிலைகளில் சஞ்சரிக்கும், இம்மூன்றின் அளவுகள் பல்வேறு காரணங்களால் மாறும்போது, உயிர் ஒடுக்கம் அல்லது உறக்க நிலைக்குச் செல்ல ஆரம்பிக்கும் .ஒடுங்க ஆரம்பிக்கும் நிலையே “நோய்” எனப்படும். ஒடுங்கும் இந்நோய்  நிலையை அறிவிக்கும் முதல்  இடம் இருதயம் . இதயம் குவிந்தும் விரிந்தும் செயல்படும்போது அதனுடன் இணைந்து செயல்படும் குருதிநாளங்களும் சுருங்கி விரியும். வாதபித்த கபங்களில் நிலைக்கு  ஏற்ப இதயத்தின் செயலும் அமையும். விரிந்து சுருங்கும் இதயத்தின் இயக்கமே நாடி நடைக்குக் காரணம். இதய துடிப்பின் மாறுதல்களை நாடி நடையின் மூலம் அறியலாம். சுருங்கக் கூற வேண்டுமாயின், பல்வேறு காரணங்களால், வாத பித்த கப நிலைகள் மாற்றம் பெற்று உயிரின் சலனத்தை ஒடுக்கும், அப்போது இதயத்தில் தொழில் மாறுபடும் இதயத் தொழிலைக் குருதி நாளங்களில் காணப்படும் துடிப்பின் வாயிலாக அறிந்து, வாத, பித்த, கபங்களின் குற்றங்களை அறிதலே நாடித் தேர்வாகும்.
நாடித் துடிப்பின் அளவு
வீணையை மீட்டும்போது எவ்வாறு கம்பியில் ஒரே காலத்தில் ஏழு சுரங்கள் தொனிக்குமோ அவ்வாறே குருதி நாளங்கள் மூலமாக மூன்று உயிர்த் தாதுக்களின் இயக்கம் புலப்படும். வாத நாடி 1 மாத்திரை அளவும் , பித்த நாடி 1/2 மாத்திரை  அளவும், கபநாடி 1/4 மாத்திரி அளவும் துடிக்கும். இதனை நெல்லின் அளவாகவும் குறிப்பிடலாம். முதிர்ந்த நெல்லின் முழு உயர அளவு வாத நாடியின் அளவு அதில் பாதி நாடியின் அளவு; அதிலும் பாதி பித்த அளவு கபநாடி அளவு ஆகும்.
கை நாடி காணும் முறை
நாடியின் நடையை உடலில் பத்து இடங்களில் உணரலாம். அவை, குதிச்சந்து, காமியம், உந்தி, மார்பு,  காது, மூக்கு, கண்டம், கரம், புருவம், உச்சி, இவற்றில் கரத்தில் நாடித் துடிப்புத் தெளிவாகப் புலப்படும். எனவே , மருத்துவர்கள் பொதுவாகக் கரத்தில் பார்த்துக் கணிப்பர். கைநாடி பார்க்கும்போது ஆண்களுக்கு வலக்கையும், பெண்களுக்கு இடக்கையும் பார்க்க வேண்டும். ஆரை எலும்பின் தொடக்கத்துக்கு மேல் ஒர் அங்குலம் தள்ளிக் கையைத் தொட்டுப் பார்த்தால், குருதி நாளத்தின் ஓட்டத்தில் நாடி நடை புலப்படும் . மருத்துவனின் சுட்டுவிரல் வாதத்தையும் , நடுவிரல் பித்தத்தையும் ஆழிவிரல் கபத்தையும் உணர்ந்து கொள்ளும்.
இவ்வாறு நோயாளியின் கைநாடியைப் பிடித்துப் பார்த்து நோய்களின் வன்மை, மென்மை, தீரும்நிலை, தீராத நிலை, மரணநிலை ஆகியவற்றை விளக்கும் பாடல்கள் தமிழ் மருத்துவ நூல்களில் ஏராளமாக உள்ளன. ஆனால் இவற்றை நடைமுறையில் பின்பற்றுவோர் அருகிவிட்டதால் , மெல்ல மெல்ல இவை வழக்கற்று வருகின்றன எனலாம்.
ஒலி
நோய் அறியும் முறையில் இரண்டாவதாக நோயாளியின் குரலொலியை ஆய்தல் வேண்டும். வாத நோயாளியின் குரல் பக்குவமாய் அமைதியாய் இருக்கும். பித்த நோயாளியின் குரல் உரத்தும் வலுத்தும் இருக்கும். கப நோயாளியின் குரல் கீச்சுக் குரலுடன் இருக்கும். இவையன்றி , ஒலிக் குறிப்பின் மூலம் சாதல் குறிப்பையும் “ தேரையர் யமகம்” என்ற நூல் கூறுகின்றது. வீணை, சங்கு, புல்லாங்குழல் இவைகளின் ஒசையை ஒத்திருக்கும் குரலுடைய பிணியாளர்கட்கு  ஒரு நாழிகையில் (24 நிமிடத்தில்) மரணம் ஏற்படும். மலையின் அடிவாரத்தினின்றும். கிணற்றுள் இருந்தும் பேசுவோரைப் போன்ற குரலுடைய பிணியாளர்கட்கு ஒரு சாமத்தில் (45 நிமிடத்தில்) மரணம் ஏற்படும் . இது போன்று நாள், வாரம், திங்கள் ஆகிய எல்லைகளுக்குட்பட்ட மரண அறிகுறிகளைக் குரல் ஒலி மூலம் அறியும் பல பாடல்களைத் “தேரையர் யமகம்” கூறுகின்றது.
ஸ்பரிசம்
நோயாளியைத் தொட்டுப் பார்த்து நோய் நிலையை அறிவதே “ஸ்பரிசத் தேர்வாகும்” வாத நோயாளியைத் தொட்டால் சில இடங்களில் சூடும், சில இடங்களில் குளிர்ச்சியும் காணப்படும் , பித்த  உடம்பினருக்கு உடலெங்கும் சூடாகவே இருக்கும். கப உடம்பினர்க்கு உடல் எப்போது குளிர்ந்து வியர்வை சுரந்து கொண்டிருக்கும்.
விழி
விழிகளைச் சுற்றி இலேசான கருமையுடன் ,நீர் வடிந்து கொண்டேயிருந்தால் அது வாத நோய்க்குரிய அறிகுறி என்றும், கண்கள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக இருப்பின் அது பித்த நோய்க்கறிகுறி என்றும், கண்கள் வெளுத்தும், பீளை சேர்ந்தும் இருந்தால் அது கப நோய்க்கறிகுறி என்றும் கணிக்கலாம்.
நா
நாவில் சுரக்கும் எச்சில் , அதன் நிறம் ஆகியவற்றன் தன்மைகளை ஆய்தல் நாக்குத் தேர்வாகும். உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை நாக்குச் சோதனை மூலம் நன்கறியலாம். வாத நோயாளியின் நாக்குக் கறுத்தும், சிறு புள்ளி போல முள் பாய்ந்து வெடித்தும் இருக்கும். பித்த நோயாளியின் நாக்கு வெண்மையாகி , சிவந்த நிறப் புள்ளிகளுடன் கூடி ஊறும் தன்மையதாக இருக்கும்.
மேனி
உடம்பின் நிறத்தைப் பார்த்துத் தேர்வு செய்வதே மேனித் தேர்வாகும். கறுமை நிறம் மேனியில் படிந்திருப்பின் வாத நோய் உண்டாகும். பித்த உடம்பினர்க்கு நெற்றியில் அடிக்கடி வியர்க்கும். உயிர் நீங்கும் காலத்தில் கழுத்தில் வியர்க்கும். காதல் நோயால் பீடிக்கப்பட்ட மகளிர்க்குப் பசலை என்ற நோய் வரும். இந்நோயைப் பற்றி அகப்பாடல்கள், பெரிதும் குறிப்பிடும். அப்பசலை நோயைக் கணிப்பதற்குப் பெரிதும் உதவுவது மேனி நிறமேயாகும். புலவர்களும் பசலை நோயைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் மேனி நிறத்தையே குறிப்பிடுவர்.
நுண்கொடிப் பீரத்தின் ஊழுறு பூவெனப்
பசலை ஊறும் மன்னோ
என்னும் பாடலடிகள் மூலம் “பழுத்த பீர்க்கம் பூவின்  நிறத்தை ஒத்தாயிருந்தது தலைவியின் பசலை நோய்” என்பது பெறப்படுகிறது..
மலம்
மலத்தின் நிறம், நுரை, இறுகல் - இனகல் போன்ற தன்மைகளை ஆய்வதன் மூலம் நோயைக் கணித்தல், மலச் சோதனையாககும். கருப்பு நிறமாகி, சிக்கலுடன் மலம் வெளியேறினால் வாதநோய் எனலாம். சீறுத்தும் வெம்மையாகவும், மஞ்சளாகவும், வெளியேறினால் பித்த நோய் எனலாம். சீதமாகவும்., வெண்மையாகவும் வெளியேறினால் கப நோய்க்குரிய அறிகுறி எனக் கருதலாம்.
சிறுநீர்ச் சோதனை
சிறுநீர்ச் சோதனை நாடி, விழித் தேர்வுகளைப் போன்றே சிறப்புடைய தேர்வாகும், தேரர் நீர்குறி நெய்க்குறி" என்னும் நூல், இச்சோதனை தொடர்பான நுட்பமான செய்திகளைக் கூறுகின்றது. சிறுநீரின் நிறம், எடை, மணம், நுரை, அளவு என ஐவகை ஆய்வில் அடங்கும் இச்சோதனை, சிறுநீர் வெண்மையாகவும், குருதி நிறமாகவும் இருந்தால் வாத நோயாகும் என்றும், மஞ்சளாக இருந்தால் பித்த நோயாகும் என்றும் வெண்மையாகவும் நுரை மிகுந்தும் காணப்பட்டால் கபநோயாகும் என்றும் அறியலாம். விடியற்காலையில் சிறுநீரை ஒரு பாண்டத்தில் பிடித்து அதில் ஒரு சொட்டு எள் எண்ணெய்விட்டுப் பார்க்கும்போது தோன்றும் தோற்றங்களை கொண்டு நோய்களைக் கணிக்கும் விந்தையான செய்திகளைத் “தேரர் நீர்க்குறி - நெய்க் குறி” குறிப்பிடுகின்றது. சிறுநீரில் அவ்விதம் விடப்பட்ட எள் எண்ணெய், கோதுமை வடிவைப்போல் காட்சிஅளித்தால் வாத நோய் என்று அறியலாம். மோதிரம் போல் வட்ட வளைவாக வடிவம் காட்டினால் பித்த நோய் என்று அறியலாம். சிதறி, புள்ளியாகவோ, சக்கரம் போன்றோ தோற்றமளித்தால் குணமாக்க இயலாத நோய் என்று கணிக்கலாம். இது போன்ற சிறுநீர்ச் சோதனை முறைகளை இந்நூலில் ஏராளமான அளவில் காணலாம். “நோய் நாடல்” என்று வள்ளுவர் கூறும் மருத்துவ நெறிக்குத் தமிழ் ,மருத்துவ நூல்வழி மேற்கண்ட விளக்கங்களைச் சுருங்கக் கூறலாம். இவ் எண்வகைத் தேர்வுகள் வழி நோயைக் கணித்த பிறகே, அதன் மூல காரணத்தை அறிய வேண்டும். இதனையே வள்ளுவர் “நோய் முதல் நாடல்” என்று கருதியிருக்கக் கூடும்.
3.நோய் முதல் நாடல்
நோய் முதல் நாடல் என்பது. நோயைத் தோற்றுவிக்கும் மூல காரணங்களை அறிவது - ஆய்வது ஆகும். பொதுவாகத் தற்கால மருத்துவத்தில் கிருமிகள் காரணமாக நோய்கள் வருகின்றன என்று கருதுவர். ஆனால் தமிழ் மருத்துவத்தின்வழி நோய் வருவதற்குரிய மூல காரணங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை.
1.கோள்களின் தாக்கம்
2..நச்சுப் பொருட்கள்
3.மனநிலைக் காரணங்கள்
4.செய்வினை, தீய எண்ணங்கள், செயல்களின் தாக்கம்
5.கால்வழிக் குற்றங்கள்
கோள்களின் தாக்கம் 
வான வெளியில் இயங்கும் கோள்களில் கண்ணுக்குப் புலனாகாத சக்திகள், மனித உடலின் மேல்  நேரடியாக இயங்காமல், உடலிலுள்ள முக்கிய சத்துப் பொருள்களின் மேல் ஊடுருவி மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனையே கோள்நிலைக் கோளாறு என்று குறிப்பர். அமாவாசை அல்லது முழுநிலவுக் காலங்களில் சந்திரனின் கதிரியக்கத்தால் நோயாளிகளின் நோய் வேகம் அதிகரிக்கின்றது. வாத வலிப்பு, மூளைக் கோளாறு, காம உணர்வு அதிகமாகுதல், கால் கை வலிப்பு, கர்ப்பக் கோளாறு ஆகிய நோய்கள் இத்தகைய கோள் நிலைத் தாக்கங்களினால் அதிகரிக்கும். செவ்வாய்க் கோளின் தாக்குதலினால் பெண்களுக்கு இரத்தக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் உண்டாகும். தமிழக மக்களிடையேயும், அமாவாசை பௌர்ணமி நாட்களில் நோயாளியின் நோய்நிலை தீவிரமடையும் எனும் கருத்து நம்பிக்கையாக நிலவி வருகிறது. இந்த “நம்பிக்கை” அறிவியல் சார்ந்த உண்மை என்பதை உறுதியாக்கும் வகையில், அண்மையில் , அமெரிக்க அறிவியல் மருத்துவர் பெக்கர்" அமாவாசை - பௌர்ணமி நாட்களை - ஒட்டி மனித உடலில் “வோல்டேஜ்” மாறுபடுகிறது" என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கதாகும். தொன்றுதொட்டே சித்த மருத்துவர்களிடையேயும் இதுவேயன்றி, ஒவ்வொருவர் பிறக்கும் நேரத்திற்கு ஏற்றார்ப்போலத்தான் அவர்கட்கு உடல் நலம் அமைந்திருக்கும் என்றும் பொதுவாக கருதப்படுகிறது. “பிணியுற்றவர்கட்குப் பிறந்த நாள் ஆகாது” என்ற செய்தி தொன்றுதொட்டே நம்பப்பட்டு வருகிறது. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியமாகக் கருதப்படும் முத்தொள்ளயிரத்தில்.
பிணி கிடந்தார்க்குப் பிறந்த நாள் போல
என வரும் தொடர் இக்கருத்தினை வலியுறுத்தும். கோள் நிலைகளின் இயக்கத்தை அறிந்து மரணத்தை அறியும் திறனைச் சங்க இலக்கியப் புலவர் கூடலூர்க் கிழாரிடத்துக் காணலாம். கோச் சேரமான் யானைகட் சேய்மாந்தரன் சேரலிரும்பொறையின் மரணத்தை, ஏழு நாட்களுக்கு முன்னதாகவே கோள் நிலை இயக்கத்தின் மூலம் அறிந்து, வருந்திப் பாடிய புலவரின் பாடல் மனித வாழ்வுக்கும் - கோள் நிலைத் தாக்கத்திற்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும்.
வானிலையொட்டி கோள்களின் உச்ச, தாழ்ந்த தன்மை, அவற்றின் ஆதிக்கம் முதலியவற்றைக் கருதி, நோயாளியின் நோய் குணமாவதற்கான மருந்தினைத் தரும் முறையே “ரசமணி” மருத்துவம் என்று கருதுவர். வரலாற்றுக்கு முற்பட்ட கால முதலே, தமிழகத்தில், கோள் நிலைத் தாக்கம் பற்றிய செய்திகள் உள்ளன என்று கூறுகின்றார் அறிஞர் பூரணலிங்கம் பிள்ளை அவர்கள்.
நஞ்சுப் பொருட்கள்
பெரும்பான்மையான நோய்கள் உடலில் சேரும் நஞ்சுப் பொருட்களால் ஏற்படுகின்றன. வாத நோய்கள், நீர்க்கோவை, கீல் வாய்வு முதலிய நோய்கள் எடுத்துக்காட்டுகளாகும். வாழும் சூழலாலும், உணவுப் பொருட்களாலும் உடலில் சேரும் நஞ்சுகள் பல பல நோய்களுக்குக் காரணமாகின்றன. வாழும் சூழலில், தூய்மையின் இன்றியமையாமையை வலியுறுத்தி வழி காட்டும் நூல் ஆசாரக் கோவை. இந்நூலிற் கூறப்பட்டுள்ள அகப்புறத் தூய்மைகளைக் கருதும் போது பண்டைத் தமிழர் நஞ்சுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்ச்சியைப் பெற்றிருந்தனர் எனக் கருத வாய்ப்புள்ளது. “அற்றது அறிந்து” என்னும் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், உணவின் நஞ்சு, பிணிக்கும் காரணமவாதைக் குறிப்பிட்டுள்ளார். தேனும் நெய்யும் அளவில் ஒத்திருக்க - அதனால் நஞ்சாகும் தன்மையை மேற்கண்ட குறளின் உரையில் அவர் குறிப்பிட்டுள்ளமை, உணவின் நஞ்சு பிணிக்குக் காரணமாவதை உறுதிப்படுத்தும்.
தற்கால அறிவியலாரும் உணவு நஞ்சினைப் பற்றியும் அதன் காரணமாய் வரும் பிணிகள் பற்றியும் ஆராய்ந்து எச்சரித்து வருவது கருதத்தக்கதாகும். 1953 ஆம்  ஜப்பானில் உள்ள மினாமித்தா கடற்கரையிலிருந்த மக்கள் அக்கடற்கரை மீன்களை உண்ட காரணத்தினாலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதும், பலர் இறந்ததும் , மூளைக் கோளாறடைந்து துயருற்ற செய்திகள் - உணவில் நஞ்சுப் பொருட்களின் விளைவைப் புலப்படுத்தும்.
சுக்குக்குப் புறணி நஞ்சு
கடுக்காய்க்கு அகணி  நஞ்சு
என்னும் பழமொழி மருந்தாகப் பயன்படும் பொருள்களிலும் நஞ்சுள்ளமையைப் புலப்படுத்தும் , எனவே, மனிதனுக்குண்டாகும் “நோய் முதல்” காரணங்களில் நஞ்சுப் பொருட்களுக்கும் குறிப்பிடத்தக்க இடமுள்ளது.
மனநிலைக் காரணங்கள்
நோய்வாய்ப்பட்ட மன நிலையே, உடல் நோய் வயப்படக் காரணமாகிறது.காதல். அச்சம், பேராசை,  முறையற்ற எண்ணங்கள் ஆகியன பல நோய்களை உண்டு பண்ணும். வெட்கம், முகம் சிவக்கச்  செய்யும். பயம், முகத்தை வெளுக்கச் செய்யும். அதிக அச்சம் வயிற்றுப் போக்கையும், அதிக கோபம் வயிற்றுப் புண்ணையும், திடுக்கிடும் உணர்வுகள் மூச்சுத் திணறல், மயக்கம் கருப்பைக் கோளாறுகள் முதலியனவற்றையும் விளைவிக்கும். மனநிலைக் காரணங்கள் உடல்நிலையைப் பாதிக்கும் என்பது தொல்காப்பியத்தில் வரும் “மெய்ப் பாட்டியலில்” குறிப்பாக உணர்த்தப்படுகிறது. பசலை நோய், உண்டி நிலையில் மாற்றம் உண்டாக்கிய காதல் நிலையாகும். மருந்தாலும் , மந்திரத்தாலும் தீர்க்க இயலாதது “காதல் நோய்” என்று கூறும் குறிஞ்சிப் பாட்டின் கருத்து மன நிலைக்கும் - உடல் நோய்க்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும்.
உடலில் காணப்படும் நோய்கள் உள்ளத்தில் உண்டான கோளாறுகளால் உண்டானவை என்பதைச் சென்ற நூற்றாண்டு வரை அறிவியில் மருத்துவத் துறையினர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயின் இந்நூற்றாண்டில் இவ்வுண்மை ஏற்கப் பெற்று, உடலைப் பற்றிய நோய்களாகக் காணப்படும் சிலவற்றை உள்ளத்தின் நிலையில் ஆவன செய்து தீர்த்து வைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மன நிலையில் ஒருதாய் தன் சேய்க்குப் பாலுட்டினால் கூடச் சேயின் மன - உடல் வளர்ச்சிகள் பாதிக்கப்படும் என்பது நம்நாட்டு மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இந்நம்பிக்கை, அறிவியல் நெறிப்படி உண்மை என்று உறுதிப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட நியூயார்க்கில் உள்ள  மனநிலை ஆய்வுக்கூட அறிக்கை, மனநிலைக் காரணங்களால் நோய் தோன்றும் மூலகாரணமாக அமைகின்றது என்கின்றது.
தீய சக்திகள் தாக்கம்
செய்வினை, இடுமருந்து, ஏவல், சூன்யம் ஆகிய தீய சக்திகளின் விளைவாகவும் நோய்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. பிற்கால இலக்கிய நூலான திருப்புகழில் இடுமருந்து பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஏவல், சூன்யம், செய்வினை ஆகிய காரணங்களால் பல கொடிய நோய்கள் தோன்றுவதற்காகப் பரவலாக நம்பப்படுகிறது, பண்டைய சித்தர் நூல்களில் இது பற்றிய விரிவான விளக்கங்களையும் குறிப்புகளையும் காணலாம். நடைமுறை வழக்கில் இன்றளவும் இவை உண்மையென்றே நம்பப்படுகின்றன, மந்திரம் ஓதியும், மனமாரப் பிரார்த்தனை செய்தும் கடவுளைத் தம் வயப்படுத்தி வேண்டியன செய்து கொள்ளலாம் என்று பாமர மக்கள் நம்புவதே ஏவல், சூனியம் ஆகியவற்றின் அடிப்படையாகும். மந்திரம், யந்திரம் போன்றவற்றின் மூலம் நோய்களை உண்டாக்கவும், குணப்படுத்தவும் கூடிய முறைகள் இன்றளவும் உலகெங்கும் உள்ளன. தமிழகத்தில் மலைச் சாதியினரான குறும்பர்கள் ஏவல் போன்ற மந்திரத்தாலும், மலையாளத்தில் உள்ள நம்பூதிரிகள் சூன்யம், பில்லி  போன்ற தீய சக்திகளை உண்டு பண்ணுவதன் மூலம் நோய்களை உண்டாக்க முடியும் என நம்பும் செய்திகள் வழக்கில் இருப்பதை அறியலாம். எனவே, “ நோய் முதல் “ காரணங்களில் தீய சக்திகளின் தாக்கத்தையும் கருத இடமுள்ளது.
ஒருவரை முடமாக்குதல், பைத்தியமாக்குதல், வயிற்றில் புண்ணை உண்டாக்கி உணவை மறுக்கச் செய்தல் போன்ற கொடிய நோய்களை இன்றளவும் இடுமருந்து போன்ற தீச்செயல்கள் மூலம் உண்டாக்குதலைக் கேட்கலாம், காணலாம்.
கால்வழிக் குற்றங்கள்
சிலவகை நோய்களுக்குக் கால்வழிக் குற்றங்கள் காரணமாகின்றன. “மாதா பிதா செய்தவை மக்களுக்க்கு” என்ற பழமொழி கால்வழிக் குற்றங்கள் வழி நோய்கள் பரவும் வகையைக் குறிப்பதாக இருக்கின்றது. இதுவேயன்றி அறநெறி பிறழ்வதால் சிலவகை நோய்கள் வரும் என்றும் சித்தர்கள் கூறுவர். திருமூலர், அறச் செயல்களைச் செய்யாத காரணத்தால் தொண்டைப் புண், ஈளை போன்ற நோய்கள் வரும் என்று எச்சரிக்கிறார். கால்வழிக் குற்றங்களால் நோய்கள் வரும் என்பது தற்கால அறிவியலாரும் ஏற்றுக் கொண்ட உண்மைகளாகும். பலகோடி ரூபாய்களைச் செலவழித்து ஆய்வு செய்யப்பட்டு வரும் கொடிய புற்று நோய்க்குரிய காரணமாக இக்கால்வழிக் குற்றங்களால் வரும் நோய்களைத் தீர்க்க முடியாதவை என்று  கூறிக் “கர்ம காண்டம்” என்ற பிரிவில் அந்நோய்களைப் பகுத்தழைப்பர் தமிழ் மருத்துவர். காலச் சக்கரத்தில் அறிய முடியாத காரணங்களால், பெற்றோர்க்குச்  சில உடல் கோளாறுகள் ஏற்பட்டு, அவை, குழந்தைகளை நாளடைவில் பாதிக்கும். இவ்விதமான நோய்கள் எப்பொழுது ஆரம்பமாகுமென்பதை ஒருவராலும் சொல்ல முடியாது.

வள்ளுவர் கூறும் நோய் முதல் நாடல் என்னும் இரண்டாவது நெறிக்குரிய விளக்கத்தினை மேற்கண்ட தமிழ் மருத்துவ நூல் வழி ஒரளவு அறிய முடிகிறது.
4. நோய் தணிக்கும் வழி நாடல்
மூன்றாம் நிலையில், மருத்துவன் நோய் தணிக்க மேற்கொள்ள வேண்டிய கடமையை உணர்த்துவதே நோய் தணிக்கும் வழி நாடல் எனப்படும். நோயை அறிந்து, அதன் மூல காரணத்தை அறிந்தபின் மருத்துவன் , நோய் நிலையை அறிய வேண்டும். தீரும் நிலை தீராத நிலையைக் கணிக்க வேண்டும். இதற்கு அடிப்படையாக உதவுபவை சோதிடம் மற்றும் நாடி  நிலைத் தேர்வுகளாகும். மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவனுக்கு மருத்துவம் செய்வது பலன் தராது என்பர். “சாப்பிணி மருந்தேற்காது” என்னும் பழமொழி இதனை உறுதிப்படுத்தும். மரண அறிகுறியைப்  பெற்றுவிட்ட நோயாளிக்கு மருந்து தரக்கூடாது என்பது தமிழ்  மருத்துவ விதி, மரண அறிகுறியைச் சோதிடம் மூலமும், நாடி மூலமும் அறியலாம். சோதிடம் மூலம் மரணத்தை அறியும் விதத்தினைக் கூடலூர் கிழார் பாடல் புலப்படுத்துவதை ஏற்கனவே கண்டோம். நாடி மூலம் மரணத்தை அறியும் விதத்தைத் தமிழ் மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
பித்தமது அடங்கினால் பேசாதே போய்விடு
எத்திய ஐயம் எழும்பிடில் கிட்டாதே - எத்திய
வாதம் எழும்பிடில் மருந்து செய்.
பித்த நாடி அடங்கினாலே , கபநாடி எழுப்பினாலோ, அது மரண அறிகுறி என்றும், வாத நாடி எழும்புது மட்டுமே நோய் தீரும் அறிகுறி என்றும், அந்நிலையில் மருத்துவம் செய்வதால் பலனுண்டு என்றும் மருத்துவனுக்கு நோய் தணிக்கும் வழியைக் காட்டுகிறது இப்பாடல்.
மரண அபாயமற்ற நோய், தணியும் நிலையுடைய நோயாளிக்கு இரு அடிப்படைகளில் மருத்துவம் செய்யலாம்.
1.மன இயல் அடிப்படை 2. மருந்தியல் அடிப்படை
மன இயல் அடிப்படை
வாழ்க்கைப் போராட்டங்களால் மனம் துயருறும் போது உணர்வுகளும் உடலும் சோர்வடைந்து செயலிழந்து நிற்கும். அப்போது இயல்பாகவே உடல் இயக்கம் சரிவர இருக்காது. உள்ளம் நன்றாக இயங்காத நேரத்தில் உடல் பாதிக்கப்பட்டால் அதற்குச் சரியான மன இயல் அடிப்படையில் தரும் மருத்துவமே உகந்த மருத்துவமாகும். பண்டைக்காலத்தில் மனக் கோளாறு காரணமாக வரும் பைத்தியம், பிதற்றல், தூக்க நோய் ஆகியவற்றிற்கு மனதைச் செம்மைப் படுத்தும் மந்திரம் , வழிபாடு, யாத்திரை போன்ற முறைகளைப் பயன்படுத்தினர்.
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா" என்ற தொடர், மனச் செம்மைக்கு மந்திரம் உறுதுணையாவது என்பதைப் புலப்படுத்தும். நம்பிக்கையின் அடிப்படையில் விளையும் இத்தகைய மருத்துவ முறைகள் இன்றளவும் வழக்கில் இருப்பதைக் காணலாம். எனவே , மருந்தால் தீர்க்க இயலாத நோய்களை மன இயல் அடிப்படையில் தீர்ப்பது, நோய் தணிக்கும் வழி நாடலில் முதல் வகையாகும்.
மனச் செம்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் தியான முறைகளால் சில நோய்கள் குணமாகின்றன என்பது அண்மைக்கால அறிவியல் சான்றுகள் மூலம் தெரிய வருகிறது.
மருந்தியல் அடிப்படை
மனம் மூல காரணமாகாது, மற்றவை காரணமாய் வரும் நோய்களை அவற்றின் தீரும் நிலை அறிந்தபின் மருந்துகள் மூலம் தணிப்பதே மருந்தியல் அடிப்படை  மருந்தாகும். மருந்தியல் அடிப்படை மூன்று வகையாகும்.
1. ஒப்புறை : நோயின் தன்மைக்கு - வேகத்துக்கு இணையாகச் செயல்படும், சமத்துவ குணமுடைய மருந்து - ஒப்புறையாகும்
2.எதிருறை - நோய்க்கு எதிரான குணமுடைய மருந்து எதிருறை மருந்தாகும்
3.கலப்புறை: மேற்சொன்ன இருவித குணமுடைய மருந்துகள் ஒன்றுபடுவது கலப்புறையாகும்
இவற்றில் எது நோயாளிக்கு பொருத்தமுடையாது என முதலில் தேர்ந்து, அம் மருந்தையும் நோயின் தன்மை, நோயாளியிடத்திலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி, மருந்தின் குணம் ஆகியவற்றிக் கருத்தில் கொண்டு மருந்து கொடுக்க வேண்டும். தமிழ் மருத்துவத்தில் அகத்தியர் கூறியதாகக் கருதப்படும் பாடல் ஒன்று, மருந்தினைக் கையாளும் விதியை நுட்பமாகப் புலப்படுத்துகிறது.
வேர்பார், தழைபார், மிஞ்சினக்கல்
மெல்ல மெல்ல
பற்ப செந்தூரம் பார்.
என்று வழி நடத்துகிறது. வேரும் , தழையும் இயற்கை அளிக்கும் இனிய மருந்து. எனவே நோய் தணிக்கும் நெறியில் முதலில் இயற்கை அளித்த மூலிகைகளின் வேர், தழைகளைக் கொடுத்து அவை நோய் தணிக்கும் ஆற்றலுக்கேற்ப மருத்துவன் செயல்பட வேண்டும். வேர், தழை ஆகியவற்றிற்கு நோய் கட்டுப்படவில்லை எனில், அதற்கேற்ப வேகமாகச் செயல்பட்டு குணமளிக்கவல்ல பற்ப செந்தூரங்களைக் கொடுப்பதே முறையான மருத்துவம். இவ்வாறு மருந்தியல் அடிப்படையாக அமையும் மருத்துவம் தமிழில் இருவகைப்படும் 1.அக மருந்து 2. புற மருந்து.
அக மருந்து
இது உள் மருந்தாகும். 32 வகையான உள் மருந்துகள் தமிழ் மருத்துவத்தில் உள்ளன. அவை சுரசும், சாறு, குடிநீர், கற்கம், உட்கலி,அடை, சூரணம், பிட்டு, வடகம், வெண்ணெய், மணப்பாகு, நெய், சுவைப்பு, இளகம், எண்ணெய், மாத்திரை, கடுகு, பக்குவம், தேன் ஊறல், தீநீர், மெழுகு, குழம்பு இரசாயனம், இதர பதங்கம், செந்தூரம், நீறு, கட்டு, உருக்கு, சுண்ணம், களங்கு, கற்பம், சத்து, குளிகை எனப் பெயர் பெறும். இவற்றில் சரிபாதி பல்வேறு காரணங்களால் இன்று வழக்கற்றுப் போயின.
புற மருந்து
உடலுக்குப் புறத்தே மேற்கொள்ளப்படும் மருந்து புறமருந்து எனப்படும். இதுவும் 32வகைப்படும்.அவை: கட்டு,பற்று,ஒற்றடம்,பூச்சு,வேது,பொட்டலம்,புகை,மை,பொடி,திமர்தல்,கலிக்கம், நசியம், ஊதல், நாசிகாபரணம், களிம்பு, சீலை, நீர், வர்த்தி, சுட்டிகை சலாகை, பசை, களி, பொடி, முறிச்சல், கீறல், காரம், அட்டை விடல், அறுசுவை, கொம்புச் சட்டம், உறிஞ்சுதல், குருதி வாங்கல், பீச்சு எனப் பெயர் பெறும். இவற்றில் முக்கால் பங்கு இன்று வழக்கில் இல்லை. புறமருந்து செய்வதற்குதவும் இருபத்தாறு வகையான அறுவைக் கருவிகள் பற்றிய விரிவான செய்திகளை “அகத்தியர் சத்திராயுத விதி” என்னும் நூல் கூறுகின்றது.
மருந்தியல் அடிப்படையில் 64 வகையாக அமையும் மருந்துகளில் எவ்வகை மருந்து ஏற்கும் என்பதனை மருத்துவன் தேர்ந்து தெளிதல் வேண்டும். வள்ளுவர் கூறும் “ நோய் தணிக்கும் வழி நாடலுக்குச் சித்த மருத்துவ நூல் வழி மேற்கண்ட விளக்கம் கூறலாம்.
5.அறிந்த வழி பிழையின்றிச் செய்தல்
நோய் தணிக்கும் வழியைத் தெளிவாக அறிந்தபின் அவ்வழியில் விழிப்புடன் செயல்பட வேண்டும். நோய் உற்றவனின் மனநிலை, நோய் படிப்படியாகத் தணியும் நிலை, மருந்தின் அளவு, காலச் சூழல், பத்தியம் ஆகியவற்றை விழிப்புடன் கவனித்துச் செயல்பட வேண்டும். தமிழ் மருத்துவத்தில் மருந்துண்ணும் காலத்து, உணவுக் கட்டுப்பாடு மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டியதொன்றாகும். எனவேதான், தமிழ் மருத்துவர்கள் நோயைப் பற்றி எச்சரிப்பதை விட, உணவுக் கட்டுப்பாடு பற்றி மிகையாக எச்சரிப்பார்கள்.- நற் 136
என்று கூறும் நற்றிணைப் பாடல், மருத்துவன் பிழையின்றி எவ்வாறு மருந்து ஆய்ந்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. இத்தகைய  கண்டிப்புகளைத் தேவைக்கேற்ப மருத்துவன் நோயாளியிடத்து வலியுறுத்துவதே பிழையின்றிச் செய்யும் மருத்துவமாகும்.
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (குறள் 949)
என்னும் குறளில் வள்ளுவர் கூறும் கருத்து, இந்நெறிக்கு விளக்கமாக அமைந்துள்ளது எனலாம். “மருத்துவன் , தான் கற்ற உபாயத்தினைச் செய்யுங்கால், ஆதூரம் அளவினையும், அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும், தன் செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி அவற்றோடு பொருந்திச் செய்க” என்று பரிமேலழகர் கூறும் உரை பிழையின்றி மருத்துவம் செய்வதற்குரிய வழியாகும்.
இவ்வாறு திருவள்ளுவர் கூறும் 948 ஆவது வேராகக் கொண்டும், அவர் காலத்துச் சித்தர்களின் மருத்துவ விளக்க்கங்களைத் துணையாகக் கொண்டும், சித்த மருத்துவத்தின் கோட்பாட்டினை வரையறை செய்யலாம்.
அவரின் இந்த திருக்குறள் ஒன்றே முக்காலத்துக்குமுரிய மருத்துவக்கல்வியின் முத்தான கொள்கையாக விளங்கத்தக்கதெனில் - மறுப்பர் எவரும் இலர். 

 

 
Related News
 • தமிழிந்தியக்கிறித்தவ வரலாற்றெழுதியல்- செய்தனவும் செய்ய வேண்டியனவும்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World