Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஆவணப்படங்களின் வழி கல்வி விழிப்புணர்வு
 

 பேரா.தெ.வெற்றிச்செல்வன்

                                               அயலகத் தமிழ்த்துறை

தமிழ்ப்பல்கலைக் கழகம்

தஞ்சாவூர்-613010

செல்:94439 43988

காலம் அச்சுஊடகங்களின் தாக்கத்திலிருந்து காட்சிஊடகத் தாக்கத்தை நோக்கி அதிவேகமாக சுழன்றோடிக் கொண்டிருக்கிறது.இன்றைய யுகம் காட்சி ஊடக யுகம்.சுவடிகள் கல்வெட்டுகள் நாணயங்கள், அகழாய்வுகள் இதர தொல்லியல் தரவுகள் மூலம் கல்லில் நார் உரித்து வரலாற்று நிகழ்வுகளை ; கடந்தகால அனுபவங்களை; அரசியல் சமூகப் பொருளாதாரம் சார்ந்த படிப்பினைகளை தொகுத்துக்கொள்வதில் இடர்ப்படத் தேவையில்லை இந்த நவீன யுகத்தில்.

கணினித்தொழில் நுட்பப் புரட்சியால் குறுவட்டுகள் மீக்குறு சேமிப்பான்கள் வலைத்தளங்கள் வன்வட்டுகள் என ஆவணங்களைப் பாதுகாக்க பயன்படுத்த பரவலாக்க ஊடக வளர்ச்சி காரணமாக விளங்கி வருகிறது.அதிலும் பார்க்க கவர்ச்சிகரமாக ஈர்க்கும் படியாக எளிதில் மனதில் பதியும்படியாக காட்சிஊடக ஆவணங்கள் திகழ்கின்றன.

பெரும்பாலும் ஒருமணி நேர கால வரையரை கொண்டு ஒளி-ஒலிக்கோவை நிலக்காட்சிகள் ஆளுமைகள் ஓவியங்கள் வரைகலையாக்கம் குரல் பின்னணி இசைகோர்ப்புப் பின்னணி வல்லுனர் கோணங்கள் படக்கலவை நெறியாள்கை  எனப் பலரது கூட்டுச்செயல்பாடுகளால் ஆனவை ஆவணப்படங்கள்.

வெறுமே தகவல் தொடர்பியல் புலம் என்பதோடு நில்லாமல்  ஆவணப்படத்தின் செயல்பாடு என்பது சமூகம் அரசியல் நுகர்வியம் பண்பாடு கல்வி என்று பற்பல துறைகளில் இன்றியமையாத பங்கினை வகிக்கிறது.சர்வதேச அடிப்படையிலான ஒரு முக்கிய அண்மைக்கால உதாரணத்தையும் இங்கு குறிப்பிடலாம்.இலங்கயில் சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொன்றொழித்து இன அழிப்பில் ஈடுபட்ட கொலைக்களக் காட்சிகளை அண்மையில் சானல்-4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்தது. சானல்-4-ன் இந்த ஆவணப்படம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இலங்கை அரசின் அப்பட்டமான மனித உரிமை மீறலை ஐ. நா.அவையும் உலக நாடுகளும் அறிந்துகொண்டு பிரதிவினை ஆற்றும் வகையில் அம்பலப்படுத்தியது.அவ்வகையில் ஆவணப்படம் என்பது இன அழிப்புக்கு எதிரான சக்திமிக்க குரலாகச் செயல்பட்டுள்ளமையை சானல் 4 நிறுவிக்காட்டியுள்ளது எனலாம்.

ஆவணப்படம் என்பது ஒரு கண்ணாடி அல்ல.மாறாக அது ஒரு சுத்தியல் என்றும் சமூக அரசியல் கல்வியைப் பரப்புவதற்கு ஒரு சாதனமாக சினிமாவைப் பயன்படுத்தவேண்டும் என்றும் கிரியர்சன் வலியுறுத்துவதை மேற்கோள் காட்டி ஆ.தனஞ்செயன் ஆவணப்படங்களின் சமூகப் பங்களிப்பை முதன்மைப்படுத்துவார்.

1895 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு லூமியர் சகோதரர்கள் தொடங்கி இந்தியாவில் முதன்முதல் ஆவணப்படக்காரர் என அறியப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மருதப்ப மூப்பனார் தொட்டு இன்றுவரை எடுக்கப்படுகிற ஆவணப்படங்களின் வகைகளாக

விளக்க முறை ஆவணப்படம்

காட்சிப்படிம ஆவணப்படம்

உற்று நோக்கு ஆவணப்படம்

தற்சுட்டு ஆவணப்படம்

என நான்கைச் சுட்டுவர்.

நீலமலைப் பழங்குடிகளின் வரலாற்றுச் சித்திரம் நாளி எனும் பெயரில் ஆவணப்படமாக வெளிவந்து கவனம் பெற்றுள்ளது.மக்களின் பார்வையிலிருந்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் என தி இந்து நாளிதழும் நாளி ஆவணப்படம் ஒரு ஓடை போலவே பெருகியோடுகிறது என தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் மதிப்புரைத்துள்ள இப்படம் நாகரிகச் சமூகம் இந்த மலைகளுக்கும் அதன் அன்பும் எளிமையும் கொண்ட குடிகளுக்கும் பேரழிவை விளைவித்து வருவதற்கு என்ன காரணம் என விடை தேடும் முயற்சி நோக்கி நீலமலைப் பாதைகளில் பயணிக்கிறது.கல் ஒட்டர்கள் எனும் பழங்குடி மக்கள் வாழ்வைச் சொல்லும் ஆவணப்படமும் உடம்பில் சாட்டையால் அடித்துக்கொண்டு ரத்தம் வழிய பிச்சையெடுக்கும் லம்பாடி இனத்தவர் பற்றிய ஸ்ரீமொழி வெங்கடேசின் நகரும் ஜன்னல் படமும் பறையர் சமூகத்தின் வாழ்வைப் பேசும் லீனா மணிமேகலையின் பறை அவரது மற்றுமொரு படமாகிய அருந்ததியர் சமூகத்தில் பெண்களைப் பொட்டு கட்டி விடும் அவல வழக்கம் குறித்த மாத்தம்மா படமும் ம.செந்தமிழன் இயக்கிய கீதாரிகள் எனும் மேய்ச்சல் சமூகத்தினரின் வாழ்வைப் பேசும் ஆடோடிகள் படமும் இனவரைவியல் சார்ந்து குறிப்பிடத்தக்கவை.

குற்றப் பரம்பரையினர் எனும் வகையில் அடக்கப்பட்ட சமூகத்தின் அவலத்தை ரேகை படமும் சாதி இழிவு வக்கிரத்தால் தண்டிக்கப்பட்டு பார்வையிழந்த சேலம் சிருமி தனம் பற்றிய ஒரு கண் ஒரு பார்வை படமும் சாதிய சமூகத்தின் கோர முகத்தை சமூக அநீதிகளைப் படம் பிடிக்கின்றன.

இடப்பெயர்வு கூலித்தொழிலாளிகள் தோட்டத்தொழிலாளிகள் பற்றிய பச்சை ரத்தம் ஆவணப்படமும் செம்பொவாங் துறைமுகம் ஆவணப்படமும் தனித்த அடையாளங்கள் கொண்டவை.யாழ் நூலகம் எரிக்கப்பட்ட துயரார்ந்த நிகழ்வை 20 வயது இளைஞன் சோமிதரன் எரியும் நினைவுகளாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

இயற்கைக்கு எதிரான எந்த ஒரு செயலும் மனிதகுலத்துக்கு எதிரானது என்ற முழக்கத்துடன் வேர்களைத் தொலைக்காதீர்கள் என்ற படம் இயற்கையோடு இயைதலைக் கோரும் அமர் நாத் இயக்கிய படமாகும்.  நம்மாழ்வார் : நிரந்தர வேளாண்மை என்கிற நம்மாழ்வார் நம்மோடு பேசும் ஆவணமாக வந்த படமும் அந்த வகையில் முக்கியமான பதிவு. பாலைவனமாகும் காவேரி டெல்டா - மீத்தேன் பேரழிவுத் திட்டத்தை விளக்கும் படத்தை எடுத்துள்ள மே 17 இயக்கத்தினர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மீத்தேன் கோரப்பிடியில் சிக்கும் அபாயம் பற்றி உரத்துப் பேசியுள்ளனர். வறண்டு அடையாளமற்று சிதைந்து சின்னாபின்னப் பட்டுவரும் பாலாற்றின் கதையை என் பெயர் பாலாறு எனு படமும் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்துவருவது குறித்த கோவைசதாசிவத்தின் படமும் இயற்கையை மீட்டுருவாக்கம் செய்யக்கோருபவை.

ஆளுமைகள் பற்றிய வகையில் தமிழில் பாரதி புரட்சிக்கவி தமிழ்த்தாத்தா ஜெயகாந்தன் ஆகியனவற்றை அடக்கலாம்.தமிழ் சினிமாவின் கதை 75 ஆண்டுகால தமிழ்த் திரைப்பட வரலாற்றைத் தொகுத்துத் தருகிறது.

 பாரதி கிருக்ஷ்ணகுமார் இயக்கிய ராமையாவின் குடிசை 60 களில் கீழவெண்மணியில் வருண - வர்க்கப் போராட்டத்தில் பலியான 44 உயிர்களின் சித்திரமாகி மனசாட்சியைக் குத்திக்கிழிக்கிறது.அவரது பள்ளிக்கூடம் படம் கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் கோரத்தை சமூக செல்தடம் புரண்டுகிடப்பதை படம்பிடித்துக் காட்டுகிறது.

பால் நிலைதிரிந்தோரின் துக்கம் நிறைந்த பொதுவெளிச் சமூகம் பார்க்கத்தவறுகிற கோணங்கள் காட்டி மனசாட்சியைத் தட்டியெழுப்பும் அச்சுப்பிழைகள் அஃறிணைகள் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

மூன்றாம் உலக நாடுகளில் பிணம்தேடி அலயும் கழுகாக அமெரிக்கா விளங்குவதை போர்களின் குரூரத்தை அதன் தழும்புகளை அணுத்திமிர் அடங்காப்பிடாரித்தனத்தை பகடிசெய்து ஒரெ ஒரு பாடல் காட்சி மூலம் மனம் கணக்கச்செய்யும் அமெரிக்கா படம் ஒரு தனிச் சிறப்பான படம் எனலாம்.

ஊயயெனலையn உhடைனசநn கரனெ ரூ சுழழவள அமைப்பினரால் சிறந்த ஆவணப்பட விருது பெற்றுள்ள தெ.வெற்றிச்செல்வன் இயக்கி வெளிவந்துள்ள பெண்ணென்றால் ஆவணப்படம் 4 நிமிடத்தில் நூறு நூறு ஆண்டுகளின் பெண்ணடிமைக் கொத்தடிமைத்தனத்தை தோலுரிக்கும் படமாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள மற்றொரு படம் அயலகக் கிறித்தவ மறைப்பணியாளர்களின் தமிழியற்பணிகளை விளக்கும் மறைத்தமிழ் ஆவணப்படம் சீகன்பால்கு வீரமாமுனிவர் ரேனியஸ் அன்ரிக்கு அடிகள் ஜி.யு.போப் கால்டுவெல் ஆகியோர் வழிக் காட்சிப்படுத்தும் படமாக விளங்குகிறது.

அகமணமுறையிலேயே சாதி தக்கவைக்கப்படுகிறது என்பார் அம்பேத்கர்.அந்த கருத்தியலுக்கு மருத்துவ அறிவியல் விளக்கம் தந்து துலக்கம் காட்டும் தீ வரைவு படம் நெருங்கிய உறவில் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதகங்களை அச்சத்தோடு முன் வைக்கிறது.

ஆக தொகுத்தும் பகுத்தும் பார்த்தால்

சாதி இழிவு இயற்கை அழிப்பு சமூக அநீதி ஆளுமைச்சித்திரங்கள் புலப்பெயர்வு பால் நிலை பேரினவாதம் வரலாறு காலனியம் என விரிவு பெறும் தளங்களில் சமூக விழிப்புணர்வுக்கான கல்விபுகட்டலை மனதை வருடும் ஃ மனதை நெருடும் அழுத்தமான காட்சிச்சித்திரங்களை எழுப்பிக்காட்டி கோணலாகவும் திருகலாகவும் இருக்கும் சமூகத்தை சமப்படுத்த முயற்சிக்கும் எத்தனிப்பை ஆவணப்படம் எனும் ஊடகம் சக்திவாய்ந்த ஊடகமாக சர்வதேச அளவில் உடனடிப்பரவலாக்கத்தையும் எழுச்சியையும் தரவல்லதாக இருக்கிறது என்று சொன்னால் மிகையானதல்ல.

கற்பி ஒன்று சேர் போராடு என்பது அம்பேத்கரின் முழக்கம்.அம் முழக்கத்தின் முதல் பகுதியாகிய கற்பி என்பதை முதன்மையாக முன்னெடுக்கும் ஆவணப்படங்கள் மக்களை ஒன்றுசேர்க்கவும் போராடவும் செய்வதன் மூலம் விழிப்புணர்வுக் கல்விமூலம் சமூகத்தைப் புத்துயிர்க்கச் செய்கின்றன.

 

 
Related News
 • யாழ்ப்பாணத்து ஓவியங்களின் சமகால வெளிப்பாடு

 • தமிழ் இலக்கிய, ஓவியத் துறைகளுக்கிடையே நடந்த ஊடாட்டங்கள்

 • இசைத்தமிழின் தொன்மையும் தொடர்ச்சியும்

 • நாட்டியத் தமிழின் திட்டமும் நுட்பமும்

 • ஓவியக்கலைக் கோட்பாடுகளும் சோழர் ஓவியமும்
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World