Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஇசைத்தமிழின் தொன்மையும் தொடர்ச்சியும்
 
முனைவர். சண்முக செல்வகணபதி,

மேனாள் முதல்வர்,

அரசர் கல்லூரி, திருவையாறு,

2802, நாணயக்கார செட்டித்தெரு,

தஞ்சாவூர்.


தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகட்கு மேல் தொன்மையுடையது. இன்று வரை முழுமையாகக் கிடைத்த தொன்மையான நூலாகத் தொல்காப்பியம் விளங்குகிறது. இந்நூலின் காலம் கி.மு 500க்கும் கி.மு300 இடைப்பட்டது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது ஓர் இலக்கண நூல். இயல் நூல், இயல் நூலாயினும் தமிழ்மொழியின் முத்திறப் பாகுபாடுகளாகிய இயல், இசை, நாடகம் என்கிற முக்கூறுகளையும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இந்நூலுள் காணப் பெறும் குறிப்புகள் பல இசைக்குரியனவாக உள்ளன. எனவே இசைத்தமிழ் வரலாறும் தொல்காப்பியத்திலிருந்து தொடங்கும் தொன்மை உடையது. இயல்தமிழைப் போல் இசைத்தமிழும் காலந்தோறும் புதுப்புது மலர்களைத் தந்து வருகிறது. இசைத் தமிழின் தொன்மையையும் தொடர்ச்சியையும் இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.

 

            இசைத்தமிழின் காலப் பாகுபாட்டை மு. அருணாசலம் அவர்கள் ஏழு பகுதிகளாகப் பிரித்து உரைக்கிறார். (தமிழிசை இலக்கிய வரலாறு 2009 பக்.11-13).

 

1.         பண்டைக்காலம்      (கி.மு.வில் தொடங்கி கி.பி.500வரை)

2.         பாசுரக் காலம் I (கி.பி.500 - 900)

3.         பாசுரக் காலம் II             (கி.பி.900 - 1250)

4.         அருணகிரிநாதரை ஒட்டியகாலம்      (கி.பி.1250 - 1550)

5.         தமிழ்க் கீர்த்தனைக் காலம்            (கி.பி 1550 - 1800)

6.         தியாகராச சுவாமிகள் காலம்    பத்தொன்பதாம் நூற்றாண்டு

7.         தற்காலம்       1900க்குப் பின்

இக்காலப் பாகுபாட்டைச் சில வேறுபாடுகளுடன் அப்படியே ஏற்பது நல்லது. இந்நிலையில் இசைத் தமிழின் காலமும் கி.மு.வில் தொடங்கி இன்று வரை நிலவி வருகிறது. தமிழ்மொழியின் தொன்மைச் செவ்வியல் பாங்கை இசைத்தமிழும் உறுதி செய்து வருகிறது.

 1. பண்டைக்காலம் (கி.மு.வில் தொடங்கி கி.பி.500 வரை)

            இன்றுவரை கிடைத்துள்ள நூல்களுள் தொன்மை நூல் தொல்காப்பியமாகும். இந்நூலின் காலம் கி. மு 500க்கும் கி.மு 300க்கும் இடைப்பட்டது என்று கூறுவர். (மேலது.30). இந்நூல் இயல் இலக்கண நூலாயினும் இந்நூலுள் இசைக் குறிப்புகளும் உள்ளன. இசைத்தமிழ் பற்றிய செய்திகள் சிறப்புடன் குறிப்பிடப் பெற்றுள்ளளன. நானில மக்கள் வாழ்வு பற்றிக் கூறும் பொருளதிகாரத்தில் குறிப்பிடப் பெறும் கருப்பொருள்களும் இசைத்தமிழின் பண்ணிசை நிலை யாழ் மூலமும் தாளஇசை நிலை பறை மூலமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

             தொல்காப்பியர் எழுத்ததிகார நூன் மரபின் இறுதியில் உயிரெழுத்துக்கள். மெய்யெழுத்துக்கள் தத்தமக்குரிய ஒலி அளவை (மாத்திரை)யைக் கடந்து ஒலிக்கும் முறை இசை நூற்கண்ணும் உள என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
 
                        அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

                        உளவென மொழிப இசையொடு சிவணிய

                        நரம்பின் மறைய என்மனார் புலவர்              (33)

                        இசை நூலை “நரம்பின் மறை” (கந்தருவவேதம்) என்கிறார்.
           
            தொல்காப்பியர் செய்யுளியலில் நான்கு வகைப்பாக்களைக் குறிப்பிடுகிறார். ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பாக்களாகும். இவற்றுள் கலிப்பாவும் ஒன்றாகும். இப்பாவின் உறுப்புக்கள் ஆறு. 1. தரவு, 2. தாழிசை, 3. தனிச்சொல், 4. அராகம், 5. அம்போதரங்கம், 6. சுரிதகம். இவ்வமைப்புகள் பிற்காலத்தில் தோன்றிய இசைப்பாட்டின் வடிவமைப்பிற்கு துணை புரிந்துள்ளன.

             தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி என்பது பண்ணோடு இயைந்து இசைப் பாடலாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியர் கூறும் எண்வகை வனப்புகள், இருபது வகை வண்ணங்கள், கட்டளையடி முறைகள். நாடக வழக்கு செய்யுள் வழக்குகள், மாத்திரை கணக்கீடுகள், மாத்திரை குறுக்கம், அளபெடை, பேச்சுறுப்புக்களின் செயற்பாடுகள், போன்றன இசை பற்றிய குறிப்புகளை உரைக்கின்றன. இவையல்லாமல் அகத்திணை, புறத்திணை வாழ்வியல்களில் இசைத்தமிழ்ப் பற்றிய செய்திகள் உள.
 
சங்க இலக்கியங்கள்

            பாட்டும் தொகையுமாக அமையும் சங்க இலக்கியங்களில் இசையோடு இயைந்த இயல் தமிழ்ப் பாக்களும் உள்ளன. சங்க இலக்கியங்களில்¢ இசைக் கலைஞர்களின் வாழ்வியல் முறைகள் இக்கலைஞர்களைப் புரவலர்கள் போற்றியமை, இசைத்த பாங்குகள், பண்ணமைதிகள், இசைக்கருவிகள் பற்றிய செய்திகள் போன்றன உள. இசைக்கலைஞர்களில் பாணர் பெயர் கொண்ட நிலையில் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படையும், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படையும் பாடப்பட்டுள்ளன. முறையே பேரியாழ் சீறியாழ் இசைத்த இசைக்கலைஞர்கள் பெயரால் இப்பாடல்கள் அழைக்கப்படுகின்றன. பொருநர் ஆற்றுப்படை என்கிற பாடலும் உளது. பொருநர் பாணர்களைப்போல் யாழ் இசைப்பதோடு தடாரி என்ற பறை கொட்டியும் பாடுத் திறம் மிக்கவர்களாவர். கூத்தர் என்கிற இசை, நாடகக் கலைஞர் பெயரால் கூத்தராற்றுப்படை என்கிற மலைபடுகடாம் நூல் அமைந்துள்ளது. மேலும் பெண் கலைஞரான விறலியின் பெயரால் விறலியாற்றுப்படை பாடல்கள் உள. மேலும் பாடினி, கோடியர், பறையன், துடியன், கிணைஞர் போன்ற இசைக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் உள.
 
            மேலும் இந்நூற்களில் இசைப்பாடல்கள் பற்றிய குறிப்புகளும் உள. குறி சொல்லிப்பாடும் அகவல் மகளிர் பாடல் (குறுந்.298. 6-7) குறுந் 23 ; 3 -5) வெற்றிபெற்ற மன்னர் மனம் மகிழப் பாடப்படும் உழிஞைப் பாடல் (பதிற்.46 ; 4 -7) புதல்வர் பெற்று மகிழ்ந்த நிலையைப் பாடும் தமிழச்சிப் பாடல் (பதிற்.576-10) மேலும் விறற்களப்பாடல் (திருமுருகு. 40-41), வெறியாட்டப் பாடல் (திருமுருகு. 238 - 241) துணங்கைப் பாடல் (மதுரைக் 25 -27) வள்ளைப்பாடல் (மலைபடு.342) போன்ற பாடல்களும் உள.
           
            நூல் பரிபாடல்கள் அனைத்தும் இசைப்பாடல்களாகும். பாவகையால் இப்பாடல்கள் பெயர் பெற்றுள. இறைவனைப் போற்றும் நிலையிலும், காமப் பொருண்மையிலும் வரும். இப்பாடல்களுள் இன்று வரை 24 பாடல்கள் கிடைத்துள. இபபாடல்களுக்குப் பண்கள் அமைக்கப் பட்டுள்ளன. கண்ணாகனார், கேசவனார், நந்நாகனார், நல்லச்சுவதனார், நன்னாகனார், நாகனார், பித்தாமத்தர், பெட்ட நாகனார், மருத்துவன் நல்லச்சுவதனார் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். இவர்களுள் பெரும்பாலோர் நாகனார் என்று அழைக்கப் பெற்றுள்ளனர்.
 
            சங்கப் பாடல்களில் இசை வளம் மிக்க பண்களின் பெயர்களுள் சில இடம் பெற்றுள.ஆம்பல்குழல் வழி சிறந்த ஆம்பல்பண் (நற்.123:10) பேய்ப்பிடி கொண்டவர்களின் வருத்தம் தீரப்பாடப்பட்ட காஞ்சிப்பண் (புறம் :281: 1 - 9) காமர்தும்பி பாடிய காமரப்பண் (சிறுபாண் :76-78) நள்ளிரவில் தோன்றும் அச்சம் நீங்கப் பாடப்பெறும் குறிஞ்சிப் பண் (மலைபடு : 359) முல்லை நிலத்தில் மாலை நேரத்தில் பாடப் பெற்ற செவ்வழிப்பண் (புறம்:147-2:5) பாலைப் பண்ணிலிருந்து கிளைத்த நைவளப் பண் (குறுந்.146) அச்சத்தைப் பெருக்கும் பஞ்சுரப்பண் (ஐங்.311:1-3) உயர்குரலில் பாடப்பெறும் படுமலைப் பண் (நற்.139:3-6) ஆகிய பண்களைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

             இசையின் ஒரு அங்கமாக விளங்கும் தூக்கு நிலையில் பதிற்றுப்பாடல்கள் அமைந்துள்ளன. செந்தூக்கு, வஞ்சித்தூக்கு என்கிற தூக்கு வகைகளும், ஒழுகு வண்ணம், சொற்சீர் வண்ணங்களில் அமைந்துள்ள பாடல்களும் உள்ளன.

             பண்ணிசைக் கருவிகளுள் யாழ், குழல் பற்றிய செய்திகள் ஏராளம் உள. யாழ் அமைப்பு, இசைக்கும் முறை, நிலப்பெயருடன் பெயர் பெற்ற யாழ்கள், யாழிசைத்தக் கலைஞர்கள், யாழிசைத்த முறை, யாழிசையின் வளம், கலைஞர்கள் போற்றப்பட்ட முறை போன்றன இடம் பெற்றுள. யாழ் நரம்பிசைக் கருவியாகும்.

             யாழுக்கு அடுத்த நிலையில் குழல் கருவி இடம் பெற்றுளது. காற்றிசைக் கருவியாகக் குழல் விளங்குகிறது. குழல் துளைக் கருவியாகும். யாழிசையின் துணைக் கருவியாக இது விளங்கியுள்ளது (பா¤.7:78-79) யாழ் குறிஞ்சி நிலத்திலிருந்து தோற்றம் பெற்றதாகவும் குழல் முல்லை நிலத்திலிருந்து தோற்றம் பெற்றதாகவும் அமைந்துள.
 
            மேலும் சங்கு (திருமுருகு 119-122) தூம்பு (பதிற்.41:4) வயிர் (குறிஞ்.219-220) தண்ணுமை (நற்.310 : 9 -10) முழவு (அகம் 72 : 11) முரசு (மதுரைக்.732 -33), பறை (அகம் 76 : 5) கிணை (புறம் 396 : 13 -14) துடி (பெரும்.124) போன்ற இசைக் கருவிகள் பற்றிய செய்திகளும் உள.
 
            சங்க காலத்தில் இருந்த இசைத்தமிழ் நூல்களுள் பல இறந்து போயின. ஓரளவிற்கு அறியப்பட்ட நூற்கள் 30 ஆகும். அவைகளுள் அகத்தியம், இசைநுணுக்கம், களரியாவிரை, குருகு, சயந்தம், செயிற்றியம், பரத சேனாபதியம், பெருங்குருகு, மகிழிசை, முதுநாரை, வியாழமாலை அகவல், ஆற்றிசை எனப்பல.

            சங்க இலக்கியங்கள் மூலம் இசைத்தமிழ் பற்றிய பல்வேறு செய்திகளை அறிந்துணர்வதோடு சங்ககாலத்தில் இசைத்தமிழ் செழித்து விளங்கியமையை அறிகிறோம்.

 சிலப்பதிகாரம்

            கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தோன்றிய நூல் சிலப்பதிகாரமாகும். சேர இளவல் இளங்கோ அடிகளால் படைக்கப் பெற்றது. இயல், இசை, நாடகம் என்றும் முத்தமிழ் நூல். ஆடல் பாடல் அழகு என்றும் மூவகைத் திறன்களும் நிறைந்த மாதவியின் மூலம் நாட்டியத்தமிழ் வளத்தை உலகு அறியச் செய்த நூல். சேர சோழ பாண்டியர்கள் மீது வரிப்பாடல் பாடி மூவரையும் ஒருங்கிணைத்த நூல். கி.பி.10 நூற்றாண்டளவில் தோன்றிய அரும்பத உரை கி.பி.12 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய அடியார்க்கு நல்லார் உரை வாயிலாக இசைத்தமிழின் வளமும் திறமும் அறிவித்த நூல்.
 
            இந்நூலுள் உள்ள 30 காதைகளுள் மூன்று வரியாலும் இரண்டு குரவையாலும் பெயர் பெற்றுள. கானல் வரி இசைத்தமிழ் வளம் உரைக்கும் காதையாகும். வேட்டுவ வரி கூத்துத் தமிழின் வளம் கூறும் காதையாகும். ஊர்சூழ் வரி இயல் தமிழின் வளம் கூறும் காதையாகும். கண்ணகியின் துயரை வருணித்துக் கூறும் காதையாக ஊர் சூழ் வரி உள்ளது.

             ஆய்ச்சியர் குரவை முல்லை நிலத்து மக்களின் இசை கூத்துப் பற்றி உரைக்கும் காதையாகவும், குன்றக்குரவை குறிஞ்சிநில மக்களின் இசை, கூத்து வளங்களை உரைக்கும் காதையாகவும் அமைந்துள.

            அரங்கேற்று காதை மாதவியின் ஆடல் அரங்கேற்றம் பற்றி உரைக்கும் காதையாகும். இப்பகுதி மூலம் ஆடலாசான் அமைதி மற்றும் இசையோன், நாட்டிய நன்னூற்புலவன், தண்ணுமை அருந்தொழில் முதல்வன், குழலோன், யாழோன், தலைக்கோல், அரங்கு அமைதிகள் கூறப்பட்டுள்ளன. அரங்கு புகுந்து ஆடும் இயல்பு, தலைக்கோலிக்கு அரசன் அளித்த வெகுமதி கூறப்பட்டுள்ளன. இக்காதையின் 175 பாடல் அடிகளுள் 12 அடிகள் தவிர 163 அடிகள் இசை, ஆடல் நிகழ்கலை இலக்கணப் பகுதிகளாக அமைந்துள்ளன. இவற்றைத் தௌ¤வு பட கற்பிப்பார் அருகியுள்ளமையால இக்காதை தவிர சிலப்பதிகாரத்தின் ஏனைய காதைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

            சிலப்பதிகாரத்தில் உள்ள ஆற்றுவரி, முகவரி, முகமில்வரி, சார்த்து வரி, திணைநிலைவரி, மயங்குதிணை நிலைவரி, முரிவரி, கந்துகவரி, அம்மானைவரி, ஊசல் வரி, போன்ற அகம்புறம் பற்றிய 116 வரிப் பாடல்கள் உள. இவை மிகவும் தொன்மையான இசைப் பாடல்களாகும். பிற்காலத்தில் தோன்றிய தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், திருப்புகழ்ப் பாடல்களின் முன்னோடிப் பாடல்களாகும். தெய்வ விருத்திப் பாடல்களின் முன்னோடிப்பாக்களாகவும், ஆடல் இலக்கிய இசைப்பாக்களாகவும் இவை உள.
                 
            அரும்பத உரை அடியார்க்கு நல்லார் உரையோடு கூடிய சிலப்பதிகாரத்தை 1892 இல் உ.வே.சா. வெளியிட்டார். இவ்வுரைகள் பண்டைய இசைத்தமிழ் வளங்களை எடுத்துரைக்கின்றன. இவை கூறும் இசை வளங்களை வெளிப்படுத்தும் நிலையில் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், விபுலானந்தரின் யாழ்நூல், க.வெள்ளைவாரணாரின் இசைத்தமிழ் நூல்¢கள் உள்ளன. இக்கட்டுரையாளரின் இசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் நூலும் இவ்வகையில் அமைந்துள.

             சிலப்பதிகாரம் இசை, நாட்டியம், நாடகத்தமிழின் உயிர்ப்பு நிலைகளை உலகறியச் செய்த நூலாக விளங்குகிறது.

             சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலை, பதிணென்கீழ்க்கணக்கு நூற்கள் ஆகியவும் இசைத்தமிழ் வளங்களைக் குறிப்பிட்டுள்ளன. இந்நூற்களிலும் இசைத் தமிழின் பண்வளம், கருவிகள்  எடுத்துரைக்கப் பெற்றுள.

பாசுரக்காலம் I சைவம் (கி.பி.500 - 900)

            பண்டைக் காலத்தைத் தொடர்ந்து பாசுரக் காலம் அமைந்துளது. இசைத்தமிழ் தெய்வத்தமிழாக இக்காலத்தில் வளர்ந்துள்ளது. அருளாளர்கள் பலர் தோன்றி இறைவனை இசைத்தமிழால் வழிபாடு செய்த காலம் பாசுரக் காலம் என்று அழைக்கப் பெறுகிறது.

             பாசுரக் காலம் I என்கிற பகுதியில் முதலில் சைவ சமய அருளாளர்கள் இடம் பெறுகின்றனர். இவர்கள் பாடிய பாடல்கள் தொகுப்பு திருமுறைகள் என்று அழைக்கப் பெறுகின்றன. இவை பன்னிரண்டு ஆகும். இவைகளில் 11 ஆம் திருமுறைகள் வரையுள்ளனவற்றே நம்பியாண்டார் நம்பி அவர்கள் தொகுத்துள்ளார். 12ஆம் திருமுறையாகச் சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம் இடம் பெற்றுளது. இசைத்தமிழில் பெரிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த இசைப்பாடல்கள் இக்காலத்தில் தோன்றின. இன்றும் இவை இசைக்கப் பெற்று வரும் பாடல்களாக உள்ளன.
           
            திருமுறை பாடிய அருளாளர்கள் 27 ஆவர். பாடிய பாடல்கள் 18326. இவர்களுள் காலத்தால் முன் வாழ்ந்தவர்களாக காரைக்கால் அம்மையாரும் திருமூலரும் உள்ளனர். காரைக்கால் அம்மையார் காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டாகும். இவ்வம்மையாரின் காலம் முதல் பாசுரக் காலம் தொடங்குகிறது. இவரே தெய்வத்தமிழிசை பாடிய முதல் இயலிசைப் புலவராக உள்ளார்.
 
            இவர் பாடிய இரண்டு பதிகங்கள் மூத்தத்திருப்பதிகங்கள் என்று பெயரிடப் பெற்றுள்ளன. 1. நட்டபாடைப் பண்ணிலும், 2. இந்தளப் பண்ணிலும் அமைந்துள. இப்பண்களே ஒன்றாம் இரண்டாம் திருமுறைகளின் தொடக்கப் பண்களாக உள. பண்ணோடு அமைந்த பாடல்களின் முன்னோடியாகவும், பதிக அமைப்பின் முன்னோடியாகவும் இவரின் திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகங்கள் உள. பண் சுமந்த பாக்கள் பாடும் மரபில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பதிகங்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன. இவர்களைத் தொடர்ந்து இன்றுவரை ஏராளமான இயலிசைப் புலவர்கள் தமிழில் தோன்றி வருகின்றனர். ஏழிசை அலகுகளின் தமிழ் பெயர்களைத் துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி என்று அம்மையார் குறிப்பிட்டுள்ளார். மேலும் சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம் என்கிற 12 இசைக் கருவிகளையும் குறிப்பிட்டுள்ளார். இவரைத் தமிழிசை உலகம் தென்னக இசையின் தாய் என்று போற்றுகிறது. தென்னக இசையின் மறுபெயர் கருநாடக இசை என்பதாகும். (இது தனி ஆய்விற்குரியது).

            திருமூலரின் திருமந்திரம் ‘பண்ணகத்தின்னிசை பாடல் உற்றோனே’ என்று இறைவனைக் குறிப்பிடுகின்றது. இந்நூலுள் இறைவன் நிகழ்த்திய திருக்கூத்துத் தரிசன நிலைf;s சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேவார மூவர்

            தேவாரம் பாடிய மூவர்களாகத் திருஞானசம்பந்தர்  (கி.பி. 635 - 651) திருநாவுக்கரசர் (கி.பி.575-656) சுந்தரர் (கி.பி.690-708) உள்ளனர். இவ்ரகள் பாடிய பாடல்கள் பண்முறையிலும் யாப்பு முறையிலும் நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப் பெற்றுள்ளன. இவையனைத்தும் பண்சுமந்த பாடல்களாகும். சம்பந்தர் பாடிய பதிகங்களுள் இன்று வரை கிடைத்துள்ளவை 386 பதிகங்களாகும். இவை 22 பண்களில் அமைந்துள. யாழ் மூரியையும் பண்ணாகச் சிலர் கணக்கிடுவர். இதனையும் சேர்ப்பின் 23 பண்களாகும். யாழ்மூரி என்பது பண் பெயரல்ல பதிகப் பெயராகும். ஞானசம்பந்தர் இப்பதிகங்களை 221 தலங்கள் மீது பாடியுள்ளார். பழைய கணக்கீட்டின் படி 384 பதிகம் 219 தலங்கள் என்பர். புதிதாகக் கிடைக்கப் பெற்ற இரு தலங்களையும் சேர்த்தால் 386 பதிகங்கள் 4180 பாடல்கள் 229 தலங்கள் என்று கணக்கிடலாம். இவை பண்முறையால் முதல் மூன்று திருமுறைகளாக அமைக்கப் பெற்றுள்ளன. நட்ட பாடையில் தொடங்கி யாழ்மூரியில் முதல் திருமுறை முடிகிறது. இந்தளப் பண்ணில் தொடங்கி செவ்வழிப் பண்ணில் இரண்டாம் திருமுறை முடிவடைகின்றது. மூன்றாம் திருமுறை காந்தார பஞ்சமப் பண்ணில் தொடங்கி அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணில் முடிகிறது. இவையனைத்தும் பாடும் முறைகளுக்கேற்ற வகையில் கட்டளைகளைப் பெற்றுள. (இவை விரிப்பின் பெருகும்).
      
            திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் 4, 5,6 திருமுறைகளாக அமைக்கப் பெற்றுள்ளன. இவை 312 பதிகங்களையும் 3066 பாடல்களையும் கொண்டுள. 126 தலங்கள் மீது பாடப் பெற்றுள. நான்காம் திருமுறையில் முதல் 21 பதிகங்கள் பண் பதிகங்களாகும். அடுத்து வரும் 58 பதிகங்கள் திருநேரிசை என்றும் அடுத்து வரும் 34 பதிகங்கள் திருவிருத்தம் என்னும் இசை யாப்பின் பிற்பட்டனவாக உள்ளன. ஆக 113 பதிகங்கள் உள. ஐந்தாம் திருமுறை திருக்குறுந்தொகை என்றும் யாப்பில் அமைந்துள்ளது. இவ்வகையில் 100 பதிகங்கள் உள. ஆறாம் திருமுறை திருத்தாண்டக எனும் யாப்பில் அமைந்துள்ளது. இவ்வகையில் 99 பதிகங்கள் உள. இவையனைத்தும் இன்றும் பண்ணமைதியோடு பாடப்பட்டு வருகின்றன.

             ஏழாம் திருமுறையாகச் சுந்தரர் பதிகங்கள் உள. இவை திருஞானசம்பந்தர் பதிகங்கள் போல் பண்சுமந்தபாக்களாகும். 100 பதிகங்களும் 1026 பாடல்களும் உள. 17 பண்களில் அமைந்துள. ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பாடாத செந்துருத்தி¢ பண்ணில் ஒரு பதிகத்தைச் சுந்தரர் பாடியுள்ளனர். இப்பண் சுமந்த இப்பதிகம் இசைத் தமிழுக்குக் கிடைத்த அரிய சொத்தாகும்.

             எட்டாம் திருமுறையாக மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருச்சிற்றம்பலக் கோவையும் உள. கோவை இயல் தமிழ் நூல். திருவாசகம் பண்ணோடு பாடப்பட்டு வரும் நூலாகும். திருவாசகம் 51 பதிகங்களையும் 656 பாடல்களையும் கொண்டுள்ளது. இவை முல்லைத்திறமாகிய மோகன இராகத்தில் பாடப் பெற்று வருகின்றன. சிலம்பில் கூறப் பெறும் வரிப்பாடல்கள் பல திருவாசகத்திலும் உள. கந்துக வரி, ஊசல் வரி, அம்மானை வரிப் பாடல்கள் உள. மகளிர் விளையாட்டொடு அமையும் திருத்தௌ¢ளேணம், திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருச்சாழல், திருவம்மானை, திருக்கோத்தும்பி போன்றனவும் உள. இதில் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைப் பூபள இராகத்திலும் திருப் பொன்னூசல் பாடல்களை ஆனந்த பைரவி இராகத்திலும் பாடி வருகின்றனர்.

             ஒன்பதாம் திருமுறை திருஇசைப்பா, திருபல்லாண்டு பாடல்களின் தொகுப்பாகும். 29 பதிகங்கள் உள்ளன. 301 பாடல்கள் உள்ளன. ஒன்பது பேர் பாடியுள்ளனர். திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் பாடியுள்ளனர். சேந்தனார் திருவிசைப் பாவுடன் திருப்பல்லாண்டு பதிகமும் பாடியுள்ளார். தில்லை, திருவீழிமிழலை, திருவாவடு துறை, திருவிடைக்கழி போன்ற தலங்கள் மீது பாடப் பெற்றுள்ளன. நட்டராகம், காந்தாரம், புறநீர்மை, பஞ்சமம், சாளபாணி ஆகிய பண்களில் அமைந்துள. மூவர் தேவாரங்களில் கிடைக்கப் பெறாத சாளா பாணி என்கிற பண் இத்திருமுறை மூலம் கிடைத்துளது.

             பதினோராம் திருமுறையில் இசைத்தமிழ்ப் பாக்களாக காரைக்கால் அம்மையார் பாடிய திருவலாங்காட்டு மூத்தத்திருப்பதிகங்கள் இரண்டுள. இவை நட்டபாடை, இந்தளப் பண்பதிகங்களாக உள்ளன.

             பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தில் ஆனாயநாயனார் புராணத்தின் மூலம் சேக்கிழார் இசைத்தமிழ் வளங்களையெல்லாம் எடுத்துரைத்துள்ளார். சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் முல்லையந்திறம் என்ற பண் வகைக்குரிய நான்கு இசை அலகுகள் கூறப்பட்டுள்ளன. இதன் ஐந்தாவது இசை அலகை ஆனாய நாயனார் புராணம் மூலம் இசைத்தமிழ் அறிஞர் டாக்டர் எஸ்.இராமநாதன் அறிந்து வெளியிட்டுள்ளார். இது முல்லையந்திறம் என்பதாகும்.  இதனை மோகன இராகம் என்று வரையறை செய்துள்ளார்¢.

 பாசுரக்காலம் I வைணவம்

            தெய்வத் தமிழாகிய இசைத்தமிழ்ப் பாக்கள் வைணவ இலக்கியத் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களிலும் இடம் பெற்றுள. இத்தொகுப்பை நாதமுனிகள் அருளியுள்ளார். இத்தொகுப்பும் திருமுறைத் தொகுப்புகளைப் போல் இசைத்தமிழ் அமைப்பில் தொகுக்கப் பட்டுள்ளன. நான்கு ஆயிரத் தொகுப்புகளில் முதல் ஆயிரம் பலர் பாடிய இசைத்மிழ்ப் பாக்களின் தொகுப்பாகும். இரண்டாவது ஆயிரம் திருமங்கையாழ்வார் பாடிய இசைப்பாத் தொகுப்பாகும். மூன்றாவது ஆயிரம் பலர் பாடிய இயல்பாத் தொகுப்பாகும். நான்காவது ஆயிரம் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி என்கிற இசைப் பாத்தொகுப்பாக அமைந்துள. நான்கு ஆயிரங்களில் மூன்று ஆயிரங்கள் இசைப் பாக்களாகவும் ஒர் ஆயிரம் மட்டும் இயல்பாத்தொகுப்பாகவும் அமைந்துள. இவை இசைத்தமிழுக்கு முன்னுரிமை தந்து தொகுக்கப் பெற்றுள என்பதனை உணர்த்துகின்றன. பண், இராகம், தாளம், ஒத்துப் பெயர்களோடு இப்பாசுரத் தொகுதிகள் பதிப்பிக்கப் பெற்று வந்துள.

             பொய்கையார், பூதத்தார், பேயர் என்னும் முதல் ஆழ்வார்கள் பாடிய திருவந்தாதிகள் இயற்பாக்களாக உள்ளன. இவை மூன்றாம் ஆயிரத்தில் இடம் பெற்றுள. திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் பாடிய பாசுரங்கள் இசைப் பாக்களாக உள. இவற்றைப் பண்களோடு சேவித்த மரபு மாறி ஓதும் மரபில் இன்று வழக்கில் உள. இவை பண்ணோடு பாடப்பட்டமையை அகச் சான்றுகள் வழி அறியமுடிகின்றன.

 பாசுரக்காலம் II (கி.பி. 900 - 1250)

            பாசுரக்காலம் II என்கிற கால எல்லையில் பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், கல்லாடம், சூளாமணி, கலிங்கத்துப்பரணி, தக்கயாகப் பரணி, யசோதரகாவியம், அரிச்சந்திர வெண்பா போன்ற நூற்களில்  இசைத்தமிழ்ப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. இசைத்தமிழின்¢வளம், நுட்பம், இசைக்கருவிகள், பண்கள், தாளங்கள் பற்றிய செய்திகள் இந்நூல்களில் உள்ளன. இவைகளில் பெரும்பாலானவை காப்பியங்களாக உள்ளன. காப்பிய நாயகர் வரலாற்றோடு இசைத்தமிழ் பற்றிய செய்திகளும் உள.

            பெருங்கதையைக் கொங்குவேளிர் படைத்துள்ளார். இவரது காலம் கி.பி.8 ஆம் நூற்றாண்டு. இந்நூலில் பாட்டுடைத்தலைவன் உதயணன் மூலம் யாழிசை பற்றிய பல்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன. யாழிசை மூலம் இசைத்தமிழ்வளம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணி, திருத்தக்க தேவரால் பாடப்பெற்ற நூல், இந்நூலின் பாட்டுடைத் தலைவன் சீவகன் காந்தவருவததயோடு யாழிசைப் போட்டியிட்ட செய்தி மூலம் இசைத் தமிழ்வளங்கள், நுட்பங்கள் மிகச் சிறப்புடன் கூறப்பட்டுள்ளன. சுமார் பத்தாயிரம் பாடல்களைக் கொண்டுள்ள கம்பராமாயணத்தில் நாற்பெரும் பண்கள் பல்வகை. இசைச்சந்தங்கள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நூலில் காணப்பெறும் சந்தங்கள் மிகச் சிறந்தவைகளாகும்.

            கி.பி. 1050 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய நூலாகக் கல்லாடம் உள்ளது. இந்நூலின் வாயிலாக, தண்ணுமை, சல்லரி, கல்லவடத்திரள், ஒருவாய்க்கோதை போன்ற இசைக்கருவிகள் பற்றியும், இணை, கிளை, நட்பு, பகை என்னும் உறவுகொள் இசைநரம்புகள் பற்றியும் (15:14-16) பாணபத்திரனுக்காக மதுரை சொக்கநாதப் பெருமான் விறகு சுமந்து வந்து சாதாரிப் பண் பாடிய செய்தியும் (43 : 27 - 33) இசைக்கும் பொழுது ஏற்படும் இசைக் குற்றங்கள், பாட்டுக்குற்றங்கள் போன்ற அரிய செய்திகள் கிடைத்துள.

             முதல் குலோத்துங்கச் சோழன் சுமார் கி.பி.1105இல் நிகழ்த்திய வடகலிங்கப் போரின் வெற்றியைப் பாடும் முகத்தான் ஒட்டக் கூத்தரால் 585 தாழிசைப் பாக்களால் பாடப்பெற்ற கலிங்கத்துப் பரணி நூலில் இசை பற்றிய பல்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன. இம்மன்னனின் மனைவி பெயர் ஏழிசை வல்லபி என்பதாகும். இவளோடு இம்மன்னன் திருவோலக்கம் செய்த நிகழ்வைப் பாடல் எண் 272 குறிப்பிடுகின்றது. நால்வகைப் பெரும்பண் பற்றியும் பா.எண்308, தாளம் பற்றியும் பா.எண்311 குறிப்பிடுகின்றன.
 

            இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் தோன்றிய பெரிய புராணத்தில் 30 வகையான சந்தங்கள் உள. இவற்றில் 26 சந்தங்கள் தேவார மூவர் பாடிய சந்தங்களாகும். மேலும் ஆனாய நாயனார் புராணம் மூலம் இசைத்தமிழ் வளங்களையெல்லாம் சேக்கிழார் கூறியுள்ளார்.

             மேலும் புகழேந்திப் புலவர் பாடிய நளவெண்பாவிலும், ஏனைய புலவர்கள் பாடியுள்ள பல்வேறு நூற்களிலும் இசைத்தமிழ் பற்றிய செய்திகள் உள. தொன்று தொட்டு வந்த இசை மரபுகள் பற்றிய செய்திகளை அறிந்திட இந்நூற்கள் துணை புரிகின்றன.

 அருணகிரிநாதரை ஒட்டிய காலம் (கி.பி.1250 - 1550)

            அருணகிரி நாதர் காலத்தில் இசைத்தமிழ் மற்றொரு உச்ச எல்லையைத் தொட்டது. தேவார மூவர்கள் காலத்தில் நிலவிய பண்ணிசையும் கட்டளைகளும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள், திருவகுப்புப் பாடல்களை இசைத்தமிழின் உன்னத நிலையை அடைய வைததுள்ளன. திருப்புகழ்ப்பாடல்கள், மிகச் சிறந்த தாள இலக்கிய பாடல்களாக உள்ளன. இன்றுவரை வாழ்ந்து வரும் இசைப்பாடல்களில் தாள இலக்கியங்களாக இவை உள்ளன. சந்தப்பாக்களாகவும், வண்ணப் பாக்களாகவும், தொங்கல் பாடல்களாகவும் இவை உள்ளன. திருஞானசம்பந்தரின் பாடல்கள்  முன்னோடிதாள இலக்கியங்களாகவும் இவைகளைத் தொடர்ந்து அமைந்த தாள இலக்கியங்களாக அருணகிரிநாதர் திருப்புகழ், திருவகுப்புப் பாடல்கள் அமைந்துள.

            அருணகிரியார் வாழ்ந்த காலம் கி.பி.1350க்கும் 1450 க்கும் இடைப்பட்டதாகும். இசை இலக்கிய வரலாற்றில் நான்காவது காலப்பகுப்பு கி.பி.1350க்கும் 1450க்கும் இடைப்பட்டதாகும். இசை இலக்கிய வரலாற்றில் நான்காவது காலப் பகுப்பு அருணகிரியாருக்கு முன்பின் காலப் பகுப்பாக அமைந்துள்ளது. இக்காலப் பகுப்புக்குள் பெரும்பற்றபுலியூர் நம்பி பாடிய திருவி¬ளாயல் புராணமும், அருணகிரியார் படைப்புகளும், சித்தர் பாடல்களும் இடம் பெறுகின்றன.
 
            கிபி.13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய திருவாலவாயுடையார் திருவிளையாடல் உளது. இந் நூல் 1753 பாடல்களைக் கொண்ட நூலாகும். பின்பு சுமார் கி.பி 1700 ஐ ஒட்டிய காலத்தில் தோன்றிய பரஞ்சோதியாரின் திருவிளையாடல் புராணத்தின் முன்னோடி நூலாகும். நம்பி பாடிய திருவிளையாடல் புராணத்தில் 54 முதல் 57 வது அத்தியாயங்கள் இசைத்தமிழ் பற்றியன. சாதாரி பாடின திருவிளையாடல், திருமுகங்கொடுத்த திருவிளையாடல், பலகையிட்ட திருவிளையாடல், இசைவாது வென்ற திருவிளையாடல் பகுதிகள் இசை தொடர்பான வரலாறு கூறும் பகுதிகளாக உள்ளன.
 
            அருணகிரியார் பாடிய திருப்புகழ்ப் பாடல்களில் 1365 பாடல்கள் கிடைத்துள. இப்பாடல்களைப் பின்பற்றி பலர் திருப்புகழ்ப் பாடல்களையும் பாடியுள்ளார். இசுலாமிய பாடல்களும் உள. அருணகிரியார் பாடிய பாடல்கள் இன்ன பண்களில் பாடப்பெற்றன என்கிற குறிப்பு காணப் பெறவில்லை. ஆனால் பாடலின் வடிவம் இன்ன தாள அமைதியில் பாடப்பெறவேண்டும் என்கிற அமைப்பில் அமைக்கப் பெற்றுள. திருக்கோயில்களில் இசைவழிபாடு செய்து வந்த மேளக்காரர்களும், ஓதுவார்களும் இராக அமைதி அமைத்துப் பாடி வந்துள்ளனர். இன்று பல்வேறு இராகங்களில் பலரும் பாடியும் வருகின்றனர். முன் காலங்களில் பலர் இசைமேடைகளில் கன்னடம், மராட்டி, சமகிருத மொழிப்பாடல்களைப் பாடி வந்தனர். இசை நிகழ்வின் இறுதியில் பாடப்பெறும் துக்கடா பாடல்களாகத் தமிழ்ப் பாடல்கள் பாடப் பெற்றன. இவற்றில் திருப்புகழும் தொடர்ந்து இடம் பெற்று வந்தது. இந்நிலை இன்று மாறி இசைவாணர்கள் திருப்புகழ்ப் பாடல்களை முழு நிகழ்வாகப் பாடி வருகின்றனர். தேவாரப் பாடல்கள், சைவத் தலங்கள் தோறும் பாடப் பெற்றமை போல், ஆழ்வார் பாசுரங்கள் வைணவ திவ்விய தேசங்களில் பாடப் பெற்றமை போல் அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல்கள் முருகன் உறையும் தலங்கள் தோறும் சென்று பாடப்பெற்றனவாக உள்ளன.

             திருப்புகழ்ப் பாடல்கள் போல் திருவகுப்புப் பாடல்களும் இசைத்தமிழ்வளம் உரைக்கும் பாக்களாக உள்ளன. இவ்வகையில் 18 திருவகுப்புப் பாக்கள் உள. இவற்றில் ஆறாவதாக உள்ள பூதவேதாள வகுப்புப் பாடலில் இசைத்தமிழ்ச் செய்திகள் ஏராளம் உள்ளன. தாளத்தோடும் இசையோடும் பாடப்பெறும் நிலையில் உள்ளது.
         
            அருணகிரிநாதர் காலம் இசைத்தமிழின் கொடுமுடி காலமாக அமைந்துள்ளது.
 
சித்தர் பாடல்கள்

            சித்தர் பாடிய பாடல்கள் இசையோடு பாடப்பெற்று வரும் பாடல்களாக உள்ளன. மண்ணின் மணம் கமழும் நாட்டுப்புற இசையோடும் செவ்வியல் இசையோடும் அமைந்துள்ளன. நாட்டார் வழக்காற்றில் இன்றும் வாழ்ந்து வரும் இசைத்தமிழ்ப் பாக்களாக இவை உள்ளன. இப்பாடல்கள் கி.பி.14-15 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியனவாகக் கூறப்படுகின்றன. அற்புதமான சந்தப் பாக்களாக உள்ளன. மக்கள் வாழ்வோடு இணைந்த பாக்களாக உள்ளன.

            சிவவாக்கியர், பத்தரகிரியார், அகப்பேயச்சித்தர், அழுகுணிச்சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கடுவெளிச்சித்தர், குதம்பைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கருவூர்ச்சித்தர், பட்டினத்தார் பாடல்கள் இன்றும் பாடப் பெற்று வருகின்றன. இப்பாடல்களில் உள்ள எளிமையும், இனிமையும், சந்தமும், சுவையும் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றன.
 
            பட்டினத்தார் பாடிய பாடல்கள் 342 உள. பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார் பாடிய 232 கண்ணிகள் உள. பாம்பாட்டிச்சித்தர் பாடிய 129 பாடல்கள் உள. இடைக்காட்டுச் சித்தர் பாடிய 130 பாடல்கள் உள. கடுவெளிச் சித்தர் பாடிய 32 பாடல்கள் உள. குதம்பைச் சித்தர் பாடல்கள் 32 உள. அகப்பேய்ச்சித்தர் பாடல்கள் 90 கண்ணிகள் உள. கண்ணம்மாவை விளித்துப்பாடும் அழுகுணிச்சித்தர் பாடல்கள் 32 உள. மேலும் பிற்காலத்தில் தோன்றிய சித்தர் பாடல்களும் உள. இவை இசைப் பாடல்களாக அமைந்துள்ளதோடு ஆட்டப் பாடல்களாகவும் உள்ளன.

தமிழ்க்கீர்த்தனைக் காலம் : கி.பி.1550 - 1800

            கீர்த்தனை என்பது இசைப்பாடல் வகைகளுள் ஒன்றாகும். பெரும்பாலும் இறை புகழ் பாடும் இசைப்பாடல்களாக உள்ளது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்கிற நிலையில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு நிலையில் இவை அமைந்துள. கலித்தொகைப்பாடலில் உள்ள தரவு, தாழிசை, சுரிதகம் இவ்வகை முன்னோடிகளாக உள்ளன. இவ்வகையில் தமிழில் கீர்த்தனைப் பாடல்கள் சீகாழி முத்துத்தாண்டவர் காலம் முதல் தொடங்கிற்று. கி.பி.1525 - 1605 முத்துத் தாண்டவரின் காலமாகும். தமிழ்க் கீர்த்தனைக் காலம் இவரது காலம் முதல் தொடங்குகிறது.

             முத்துத்தாண்டவர் திருஞான சம்பந்தரைப் போல் சீகாழியில் பிறந்தவர். இவர் பாடிய 60 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள. இவர் தமிழ்க் கீர்த்தனையின் தந்தையாக விளங்குகிறார். நாட்டியத்திற்குரிய பதம் என்கிற இலக்கிய வகையையும் இவர் படைத்துள்ளார். தமிழ்நாட்டியப் பதத்தின் தந்தையாகவும் இவர் போற்றப்படுகிறார். இவர் பாடிய நாட்டியப் பதங்கள் 25 கிடைத்துள. இவர் தமிழ்க் கீர்த்தனை பாடிய காலம் கீர்த்தனைக் காலமாகக் கணக்கிடப் பெற்றுள்ளது.

 

            முத்துத் தாண்டவரைத் தொடர்ந்து பாபநாச முதலியார் (கி.பி.1640-1740) மிகச் சிறந்த இயலிசைப் புலவராக உள்ளார். இவர் படைத்த கும்பேசா¢க் குறவஞ்சி என்கிற குறவஞ்சி நூலைப் பாடியுள்ளார். குறவஞ்சி நூலின் முதல் நூலாக இந்நூல் திகழ்கிறது. இவரைத் தொடர்ந்து இராமநாடகக் கீர்த்னை பாடிய சீகாழி அருணாசலக் கவிராயர் உள்ளார். கம்பராமாணயத்தை இசை நாடகக் கீர்த்தனையாக இவர் இயற்றியுள்ளார். இவர் இசை நாடகக் கீர்த்தனை பாடிய முதன்மையராக உள்ளார். இவரைத் தொடர்ந்து தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை (1712 - 1787) உள்ளார். பழிப்பதுபோல் புகழ்ந்து பாடும் நிந்தாஸ்துதியில் அமைந்த தமிழ்க் கீர்த்தனை பாடிய முன்னோடியாக இவர் உள்ளார். இவர் பாடிய 25 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள. முத்துத்தாண்டவர்,  அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை மூவரையும் சீர்காழி மூவர் என்றும் தமிழ்க் கீர்த்தனை பாடிய மூவர் என்றும் அழைப்பர். இவர்கள் பெயரால் சீர்காழியில் மணிமண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது. தமிழக அரசு சீர்காழி மூவர் விழாவையும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

             இம்மூவர்களையும் தொடர்ந்து “தாயே யசோதா” என்று தொடங்கும் தோடி இராகக் கீர்த்தனை பாடிய ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (1715 - 1775) உள்ளார். இவர் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் முன்னவரான தியாகராஜருக்கு மூத்தவர்¢. இவர் பாடிய 11 க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் இன்று வழக்கில் உள்ளன. இவரைத் தொடர்ந்து திருவண்ணாமலை இறைவன் மீது அருணாசலக் கீர்த்தனை பாடிய வீரணப் புலவர் (1720 - 1810) உள்ளார். இவர் பாடிய 398 இசைப்பாடல்கள் உள.

            இக்காலத்தில் பள்ளு நாடகம், நொண்டி நாடகம், குறவஞ்சி என்கிற இசை நாடக இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. குறவஞ்சியில் மட்டும் சுமார் 130 நூற்கள் உள. கும்பேசர் குறவஞ்சி, குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி விராலிமலைக்குறவஞ்சி, தியாகேசர்குறவஞ்சி என்கிற நாட்டிய நாடகங்கள் தோற்றம் பெற்றன.

            குமரகுருபரர் (1615 - 1688), பரஞ்சோதி முனிவர் (1675 - 1725), அவிநாசி நாதர் (1725 - 1785), தொட்டியக்கலை சுப்பிரமணிய முனிவர் (கி.பி.1740-1810) போன்றோர் தோன்றி  நூற்களைப் படைத்துள்ளனர். இந்நூற்களில் இசைபற்றிய செய்திகள் உள.

 தியாகராசர் காலம்

            சங்கீத முமமூர்த்திகளாக தியாகராசர் (1767- 1847) சியாமாசாஸ்திரி (1762-1827), முத்துசாமி தீட்சதர் (1775- 1835) மூவரும் கருதப்படுகின்றனர். இம்மூவரும் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்களில் தியாகராசர் தெலுங்கு மொழியிலும், சியாமா சாஸ்திரி சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும், முத்துசாமி தீட்சிதர் சமஸ்கிருத மொழியிலும் இசைப்பாடல்களைப் படைத்துள்ளனர். இவர்களது பாடல்கள் பிறமொழிகளில் இருப்பினும் இவர்களின் இசைமரபு பண்டைய இசைத்தமிழ் மரபேயாகும். சியாமாசாஸ்திரி “சந்ததமும் என்னை ரட்சிப்பாய்” என்கிற பரசு இராகக் கீர்த்தனையும் “ஸ்ரீ காமாட்சி” என்கிற “வசந்தா” இராகக் கீர்த்தனையும் தமிழில் பாடியுள்ளார். தீட்சிதர் கீர்த்தனைகளில் உள்ள எதுகை அமைப்புகள் தமிழ் யாப்பு முறையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன. இவர் தேவார இசை மரபுகளையும் அறிந்துள்ளார். சுந்தரர் மீது மாயாமாளவ கௌளை இராகத்தில் ஒரு கீர்த்தனமும் பாடியுள்ளார். இம்மூவருக்கும் இசை அஞ்சலி வழிபாடுகள் திருவாயாறு, திருவாரூர்த் தலங்களில் இன்றும் நடைபெற்று வருகின்றன. நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும் இதர கீர்த்தனைகளையும் பாடிய கோபால கிருஷ்ணபாரதியார் (1790-1885) இசைத்தமிழ் உலகிற்குப் பெரிதும் சேவை புரிந்தவராக உள்ளார்.

             இவரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனை மிகச் சிறந்த இசை நாடக நூலாகும். இவரின் ஏனைய கீர்த்தனைகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவரையும் சேர்த்து தமிழ்க் கீர்த்தனை நால்வர் என்று கூறும் வழக்காறும் நிலவுகிறது.

             18, 19 நூற்றாண்டுகளில் இசைத்தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகளைத் பலர் தந்துள்ளனர். இராமகவி (1750-1810) என்பார் தஞ்சையிலிருந்து சென்னைக்குச் சென்றவர். இவர் பாடிய 9 பதங்கள் அச்சில் வந்துள. பாலகவி செண்பக மன்னார் (1789 - 1840) பார்வதி திருக்கல்யாண நாடகம், சிவராத்திரி நாடகங்களை எழுதியுள்ளார். ஆனைஐயா (1798 - 1824) தஞ்சை இரண்டாம் சரபோஜி அவையில் இருந்தார். இவரும் இவரின் சகோதரர் ஐயாவையர் சிறந்த இசைவிற்பன்னர்களாக இருந்தனர். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இசைப் பாடல்களைப் பாடியுள்ளனர். 26 தமிழ்க் கீர்த்தனங்கள் வழக்கில் உள. வைத்தீசுவரன் கோயில் சுப்பராமையர் (1800-1850) வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமாரசாமி மீது 76 பதங்கள் பாடியுள்ளார். இவை குஜ்லி பதிப்பில் வெளிவந்துள்ளன. கனம் கிருஷ்ணய்யர் (1825-1880) கன இராகங்களில் பாடுவதில் வல்லவர். இவர் கவித்தலம் இராமபத்திர மூப்பனார் மீது குறவஞ்சி பாடியுள்ளார். இவர் பாடிய 57 கீர்த்தனைகளை. உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்துள்ளார்.

             இசைத்தமிழ் அறிஞர்களுள் நீலகண்ட சிவனும் (1839-1900) ஒருவராவார். இவர் பாடிய இசைப் பாடல்கள் திருநீலகண்ட போதம் என்கிற பெயரால் 1895 இல் அச்சில் வந்துள. தேவாரம், திருவாசகம், தாயுமானவர்  பாடல்கள் போல் இவை உள. இவர் 4446 பாடல்கள் வெளிவந்துள்ளன. தஞ்சை கரந்தையைச் சார்ந்த ஆறுமுக உபாத்தியாயர் (1820-1890) பாடிய கீர்த்தனங்கள் சிவ சுப்பிரமணிய சுவாமி கீர்த்தனம் என்கிற பெயரில் அச்சில் வந்துள.

            மரக்கத்தூர் ஆறுமுக சுவாமிகள் (1827-1888) போலீஸ்காரராக இருந்தவர். கிளிக் கண்ணி பாடியுள்ளார். தஞ்சை வாசுதேவ கவிபாடிய 76 பதங்கள் தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையம் மூலம் வெளிவந்துள்ளன. இவர்களைப் போல் பலர் இசைத்தமிழ்ப் பாடல்களைப் படைத்துள்ளனர். இவைகளைத் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை என்பது மிகவும் வருந்துதற்குரிய ஒன்றாகும்.

 19 ஆம் நூற்றாண்டு

            19 ஆம் நூற்றாண்டில் அருட்பிரகாச இராமலிங்க அடிகளார், வேதநாயகம் பிள்ளை, கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள், மாம்பழக் கவி, காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார், குணங்குடி மசுதான் சாகிப் போன்றோர் இசைத்தமிழ் வளர்த்த சான்றோர்களாக உள்ளனர்.

             இராமலிங்க அடிகளார் (1823 - 1874) படைத்த திருவருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. இவை 5818 பாடல்களைக் கொண்டுள. இவைகளில் 1011 பாடல்கள் இசைப் பாடல்களாக உள்ளன. இவை இன்றைய இசை அரங்குகளில் பாடப் பெற்று வருகின்றன.

             மாயூரம் வேத நாயகம் பிள்ளை (1826 - 1889) பாடிய சர்வ சமய சமரசக் கீர்த்தனை என்கிற இசைப்பாடல்கள் இன்றைய இசை அரங்குகளில் பாடப்பெற்று வருகின்றன. 192 இசை உருப்படிகள் உள. கிளிக்கண்ணி என்கிற இசை வகை உருப்படிகளைப் பாடிய கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள் (1820 - 1890) காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்தவர். இவர் பாடிய 102 கிளிக்கண்ணிப் பாடல்கள் உள. இவரைப் பின்பற்றி பாரதியார் கிளிக் கண்ணிப் பாடல்களைப் பாடியுள்ளார் பலரும் பாடி வருகின்றனர்.

             மாம்பழச் சிங்க நாவலர் (1836 - 1884) பழனியில் பிறந்தவர் மூன்றாவது வயதில் ஏற்பட்ட அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார். இவர் பாடிய பாடல்கள் கீதாமிர்தசாரம் என்கிற பெயரில் வெளிவந்துள்ளது. இந்நூலில் 56 கீர்த்தனைகள் உள.

             காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) பாடிய காவடிச்சிந்துப் பாடல்கள் கிளிக் கண்ணியைப் போல் இசைத்தமிழ் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உளது. இப்பாடல்களில் அமைந்துள்ள இசையமைதி அப்துல்காதர் என்கிற இசுலாமியரையும் பாரதியாரையும் ஈர்த்தது. இவர்களைப் போல் பலரும் காவடிச் சிந்துப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

             குணங்குடி மஸ்தான் சாகிபு (1825 - 1875) பாடிய பாடல்கள் இசைத்தமிழுக்கு வளம் சேர்த்துள்ளன.

 20 ஆம் நூற்றாண்டு

            19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இசைத்தமிழ்த்துறையில் மிகச் சிறந்த மறுமலர்ச்சி தோன்றியது. ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகளார், வெள்ளை வாரணார், குடந்தை ப.சுந்தரேசனார், முனைவர். வீ.ப.கா.சுந்தரம் போன்றோர் பெரும் சேவை செய்துள்ளனர். பிறமொழிப் பாடல்களைப் பாடுவதனையே தொழிலாகக் கொண்ட இசை உலகிற்கு எதிராகத் தமிழிசை இயக்கம் தோன்றியது. இரசிக மணி டி.கே.சி., கல்கி, அண்ணாமலை அரசர் போன்றோர் தமிழிசை இயக்கத்தினைத் தோற்றுவித்தனர். இசைத்தமிழ்ப் பாடல்கள் இசை அலகுடன் பாடு துறைக்கு ஏற்ப வெளியிடப் பெற்றன. பண்ணராய்ச்சிக் கூட்டங்கள் நிகழ்த்தப் பெற்றன. இசைத்தமிழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்றன. தமிழிசை இயக்கங்கள் மூலம் தமிழிசைப் பாடல் போட்டிகள் ஊக்குவிக்கப் பெற்றன. சென்னை, மதுரை, திருவையாறு போன்ற ஊர்களில் ஆண்டுதோறும் தமிழிசை விழாக்கள் நிகழ்த்தப் பெற்று வருகின்றன.

இசைத்தமிழின் தாய் ஊற்றாக விளங்கிய நாட்டுப்புற இசைக்கு ஏற்றம் கொடுக்கப்பட்டது. நாட்டுப்புறக்கலைகள் போற்றப் பட்டன. நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆதரிக்கப் பெற்றன. நாட்டுப்புறக் கலைகள், பாடல்கள், இசையமைதிகள் திரை இசையில் செல்வாக்குப் பெற்றன. திரை இசையில் செவ்வியல் இசைப் பாடல்கள் மெல்லிசைப் பாடல்களாக ஆக்கம் பெற்றன. இளையராஜா, கங்கை அமரன் போன்ற திரை இசை இயக்குநர்களால் நாட்டுப் புற இசை திரை இசை உலகில் செல்வாக்குப் பெற்றது.

 இலக்குமணப்பிள்ளை (1854-1950), கோடீசுவர ஐயர் (1869-1938), தேசிக விநாயகம் பிள்ளை (1876 - 1954), சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) தஞ்சை பொன்னையா பிள்ளை (1888- 1945) பாபநாசம் சிவன் (1890 - 1973) நாமக்கல் கவிஞர் (1888 - 1972) மதுரை பாஸ்கரதாஸ் (1892 - 1952) போன்றோர்கள் இசைத்தமிழ்ப்பாக்களைப் படைத்தனர். இவை இசை அரங்குகளில் பாடப்பெற்று வருகின்றன.

 நாடகத் துறையும் திரை இசைத்துறையும் இசைத்தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்கு பெற்றன. தவத்திரு சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் இராசமாணிக்கம் பிள்ளை, தி.க.சண்முகம் குழுவினர், கன்னையா குழுவினர், பாலாமணி அம்மையார், கொடுமுடி பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, இசையரசு தண்டபாணி தேசிகர், எம்.கே.தியாகராச பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் இசைத்தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டனர்.

 

திரை இசைத்துறையில் மருதகாசி, பட்டுக்கோடடை கல்யாண சுந்தரம், உடுமலை நாராயணக்கவி, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, வைரமுத்து போன்றோர் பெரும் பணியாற்றினர்.

 பண்ணிசை வித்தகர்களான சுப்பராய ஓதுவார், சொக்கலிங்க ஓதுவார், சுந்தரமூர்த்தி ஓதுவார், வேதாரண்யம் கணபதி தேசிகர், அருணாசல தேசிகர், அடங்கன் முறை அருணாசலம் ஐயா, எம்.எம்.தண்டபாணி தேசிகர், திருவிடைமருதூர் இராமலிங்கம் பிள்ளை, வேலாயுத ஓதுவார், தருமபுரம் சுவாமிநாதன், இலால்குடி சுவாமிநாதன், திருத்தணி சுவாமிநாதன், முத்துக்குமாரசாமி, பழனி சண்முக சுந்தர தேசிகர், வெங்கடேசன் போன்றோர் பெரும்பணி ஆற்றியுள்ளனர். திருவிடைமருதூரில் நவம்பர் 2013 10,11,12 ஆம் நாட்களில் திருமுறை மாநாடு நடைபெற்றது. 108 ஓதுவார்கள் குழுவிசை மூலம் சிறுபுராணம் பாடினர்.

 இசைத்தமிழ் நூற்கள் தொடர்ந்து வெளியிடப் பெற்று வரகின்றன. தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்தசாகரம் இரு தொகுதிகள், கருணாமிர்த சாகரத் திரட்டு, விபுலானத் அடிகளாரின் யாழ் நூல், குடந்தை ப. சுந்தரேசனார் முதல் ஐந்திசைப் பண்கள், வீ.ப.கா.சுந்தரனார் தமிழிசைக் கலைக் களஞ்சிய தொகுதிகள், மு. அருணாசலம் எழுதிய தமிழ் இசை இலக்கண வரலாறு, இலக்கிய வரலாறு இரு தொகுதிகள். சென்னை தமிழிசைச் சங்கம் மூலம் வெளிவரும் பண்ணாராய்ச்சிக் கூட்ட ஆண்டுமலர்கள் இக்கட்டுரையாளரும் இவர்தம் மகளார் முனைவர் செ. கற்பகமும் இணைந்து வெளியிட்ட இசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் நூல், இசைத்தமிழ் அறிஞர்கள் தொகுதி I, குடந்தை ப.சுந்தரேசனாரின் வாழ்வும் வாக்கும், அருணகிரி நாதரின் அருந்தமிழ் ஆளுமைகள் போன்ற நூற்கள் வெளி வந்துள்ளன.

 இக்கட்டுரை இசைத்தமிழின் தொன்மையும் தொடர்ச்சியும் பற்றிய அறிமுகமாக அமைக்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் காணப்பெறும் செய்திகள் தனித்தனி ஆய்விற்குரியன. இசைத்தமிழ் வளம், பண்ணிசை வளம், பண்ணும் கட்டளையும், இசைக் கருவிகள், இசைத்தமிழ் நுட்பங்கள் போன்ற பகுதிகளை பற்றிய கட்டுரைகளை இதழ்கள் மூலம் தொடர்ந்து இக்கட்டுரையாளர் வெளியிட்டு வருகிறார். மேன்மேலும் இப்பொருள் அமைதிகள் ஆராயப்பட் வேண்டியவை. வெளி உலகிற்குத் தெரிவிக்க வேண்டியவைகளாக உள்ளன.

 

துணை நின்ற நூற்கள்

க. வெள்ளை வாரணார், பன்னிரு திருமுறை வரலாறு

மு. அருணாசலம் தமிழிசை இலக்கிய வரலாறு

மு. அருணாசலம் தமிழிசை இலக்கிய வரலாறு

டாக்டர் ஏ.என். பெருமாள், தமிழர் இசை

வீ.ப.கா.சுந்தரம், தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதிகள் I - IV

முனைவர் சண்முக. செல்வகணபதி இசைத்தமிழ் அறிஞர்கள் தொகுதி I

 

*******
 

 

 
Related News
 • யாழ்ப்பாணத்து ஓவியங்களின் சமகால வெளிப்பாடு

 • தமிழ் இலக்கிய, ஓவியத் துறைகளுக்கிடையே நடந்த ஊடாட்டங்கள்

 • ஆவணப்படங்களின் வழி கல்வி விழிப்புணர்வு

 • நாட்டியத் தமிழின் திட்டமும் நுட்பமும்

 • ஓவியக்கலைக் கோட்பாடுகளும் சோழர் ஓவியமும்
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World