Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueதலித் பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தலித் இலக்கியக் குரல்கள்
 

மா.மதுரவேணி

தமிழ்ப்பல்கலைக்கழகம்,

 

தலித் இலக்கியம் என்பது, ஒடுக்கப்பட்ட, தீண்டப்படாதவர்களென ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் அவலங்களை, அவர்களது போர்க் குரல்களை இலக்கியப் பொருட்களாகக் கொள்ள வேண்டும் என்கிறது.; கிராமப் புறங்களில் சாதீயம் உள்படச் சகலவிதமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஆளாகித் தலைமுறை தலைமுறையாகத் துன்புறும் நிலமற்ற உழவர்கள் மற்றும் கூலி விவசாயிகளே தலித்துகளில் பெரும் பகுதியினராவர். தலித் என்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ்மக்கள், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மதத்தின் பெயராலும் சுரண்டப்படும் அனைவருமே தலித்துக்கள் என்று குறிக்கப்படும் கருத்து உள்ளதை அறிய முடிகிறது.

உலகில் வேறு எந்தச் சமுதாயத்திலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சாதிக் கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. நால்வருணப் படிநிலைக்குக் கீழ்வரும் அடிமைச் சாதியினர் தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும், தலித் என்றும் அறியப்படுகின்றனர். ஊர் ஓரமாக உள்ள ஒதுக்கப்பட்ட, சுகாதாரமற்ற சேரிகளிலேயே காலம் காலமாக இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகின்றனர். நாட்டுப்புற இலக்கியங்களிலும், சங்ககால இலக்கியங்களிலும், பிறகு வந்த நீதி இலக்கியங்களிலும், சோழர் காலக் காப்பியங்களிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கை குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. எனினும் பள்ளு, குறவஞ்சி, நொண்டி,நாடகம் போன்ற இலக்கியங்களிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு முழுமையாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. சான்றாக, முக்கூடற்பள்ளு இலக்கியம் பள்ளர்களின் வாழ்வை, ஆண்டைகளின் சுரண்டலை, அடிமைகளான பள்ளர்களுக்கு வழங்கிய தண்டனைகளைப் படம் பிடித்துக் காட்டுவதைக் கூறலாம்.

 

தற்காலத் தலித் இலக்கியங்கள் ஊர் ஓரம் ஒதுக்கி வைக்கப்பட்டு தூய்மையற்ற சேரித் தெருக்களில் வாழும் சேரி  மக்களின் அவல வாழ்க்கையையும், குப்பைப் பொறுக்கிகள், செருப்பு தைப்பவர்கள், பன்றி மேய்ப்பவர்கள், சேரி விபசாரப் பெண்களின் அவல நிலை, தாழ்த்தப்பட்டவர்களே ஒரு சாரார் மற்றொரு சாராரைத் தாழ்வாகக் கருதுதல், பெண் எடுக்க மறுத்தல், தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலுறவு வன்கொடுமைகள், சேரிக் குடிசைகளுக்கு தீ வைத்தல், பழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் என்று சேரி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சிறு கதைகளாய், கவிதைகளாய், நாவல்களாய், நாடகங்களாய் வெளிப்பட்டுள்ளன. இந்த வகையில் கே-டேனியலின் பஞ்சமர், தண்ணீர், அடிமைகள், பூமணியின் பிறகு, பாமாவின் கருக்கு, சங்கதி, சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி, இமையத்தின் கோவேறு கழுதைகள் போன்ற நாவல்களும், இதய வேந்தனின் நந்தனார் தெரு, தாய்மண், வதைபடும் வாழ்வு, உயிரிழை, அழகிய பெரியவனின் தீட்டு, அபிமானியின் நோக்காடு போன்ற சிறுகதைத் தொகுதிகளும், அழகிய பெரியவன், இந்திரன், பிரதிபா ஜெயச்சந்திரன், மதியழகன், மதிவண்ணன் இவர்களது கவிதைகளும், கே..குணசேகரன் பலி ஆடுகள் போன்ற நாடக படைப்புகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.

 

வரலாற்றுக்காலத்தில் பெண்கள்

                பெண்கள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆகவும், பல ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைத் தளையில் சிக்குண்டு வாழ்ந்து வருகின்றனர். தொடக்கக்காலக் குழுமுறைச் சமூகத்திலும் தாய்வழிச் சமூகத்திலும் தலைமை இடத்தைப் பெற்றிருந்த பெண்கள் நிலவுடைமைச் சமுதாயத்தில் அதாவது தனிச்சொத்துரிமை காலூன்ற துவங்கிய காலத்திலேயே அடிமை விலங்கேற்கின்றனர். வருணாசிரம சாதியடுக்குப் பெண்களின் சுதந்திரவுணர்வைக் குழிதோண்டிப் புதைத்தது. தந்தைவழிச் சமூகத்தில் பெண்களை அடிமைகளாகக் கருதும் போக்கு நிலைபெற்றது. பெண்களை அடிமைப்பொருட்களாகக் கருதி விற்கும் போக்கும், வாங்கும் நிலையும் உலகெங்கும் இருந்தது போன்று தமிழகத்திலும் இருந்தது. பொதுவான அடிமை வாணிபத்தில் பெண் அடிமைகளே அதிகம் விற்கப்பட்டுள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. நால்வருணம் முக்கியத்துவம் பெற்ற காலக்கட்டத்தில் நாலாவது வருணத்தாருக்கும், அதற்கு கீழிருந்தவர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது. காலப்போக்கில் பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது பெண் அறிவு பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே, அச்சம், மடம், நாணம். பயிர்ப்பு போன்றவை பெண்களுக்கு உரிய குணங்களாகவும், பெருமை உரனும் ஆடவர்க்குரிய பண்புகளாகவும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. பெண்களுக்குக் குடும்பத்தில் கணவனின் முக்கியத்துவம் கற்பிக்கப்பட்டது. பெண்கள் குலம், சாதி, வருணம் காப்பாற்றும் கருவிகளாய் வாழக் கற்பிக்கப்பட்டனர். தனிச் சொத்துரிமையின் உடன் பிறப்பாகத் தோன்றியகற்புஎன்னும் பண்பு பெண்ணின் பெருமைக்குரிய அணிகலனாய்ப் போற்றப்பட்டது. கற்புள்ள பெண்கள் கணவனைத் தவிர பிற தெய்வங்களைத் தொழுவதில்லை என்று கூறப்பட்டது. இதனை,

 

                                ‘சிறு குடியீரே! சிறு குடியீரே!

                                வள்ளிகீழ் விழா! வரைமிசைத் தேன் தொடா

                                கொல்லை குரல் வாங்கி ஈனா மலைவாழ்நர்

                           அல்ல புரிந்து ஒழுகலான்’                       

என்ற பாடலின் மூலம் வள்ளிக் கொடியில் கிழங்கு பிடிக்கவும் தேன் கூட்டில் தேன் சேரவும், கதிர்களில் தானியங்கள் வளமாகத் தோன்றவும் பெண்கள் கற்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும், கணவனால் தோள்நலம் உண்டு கைவிடப்பட்ட பெண்கள், நீரினை ஏந்தி உண்ட பின்னர் வீசியெறிந்துவிடும் பனங்குடுக்கைகளைப் போன்றவர்கள். இன்பந் தருவரால் வந்து கூடி நலன் உண்ணப்பட்டுக் கைவிடப்பட்ட பெண்கள், குடியிருப்போர் காலி செய்துவிட்டுப் போன பின் விளங்கும் பாழ்பட்ட ஊருக்குச் சமமானவர்கள் என்று கலித்தொகைப் பாடலில் இடம்பெற்றுள்ள செய்திகள் அக்காலத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் நிலையைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. கணவன் எப்படிப்பட்டவனாக இருப்பினும் அவனுடன் வாழ்ந்து தீரவேண்டிய கட்டாயம் இருந்ததை மேற்கண்ட பாடலின் மூலம் அறியமுடிகின்றது. அதுபோல் கணவன் இறந்த பின்னர் அவனுடன் சேர்ந்து மனைவியும் உயிர் துறக்கும் நிலை (சதி) சங்க காலத்திலேயே இருந்தமைக்குப் பெருங்கோப்பெண்டின்பல்சான்றீரேஎன்ற பாடல் சான்று பகரும். நெருப்பில் விழுந்து இறக்க மறுத்தவர்கள் கைம்மை நோன்பு நோற்கும்படி செய்யப்பட்டனர். கைம்மை நோன்பிற்கான கட்டுப்பாடுகள் கொடுமையானவை. இந்தியாவில் தமிழகத்தில் நிலவிய இந்தசதி’ (உடன்கட்டை) பல உலக நாடுகளிலும் இருந்துள்ளது. கணவன் இறந்தபின்னர் அவன் பயன்படுத்திய பொருட்களோடு மனைவியையும் சேர்த்து புதைக்கும் வழக்கம் பல நாடுகளில் இருந்துள்ளது.

 

                தந்தைவழிச் சமூகமான ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண் முற்றிலும் அடிமைகளாக இருந்த நிலையைப் போலவே நிலமற்ற ஏழைகளும், நால் வருணத்தில் சேராத பஞ்சம மக்களும் மேல் சாதியினருக்கு அடிமைகளாய் ஊழியம் செய்தமைக்குச் சான்றுகள் உள்ளன. எனினும் சோழர் காலத்தில்தான் அடிமை முறைக்கான சான்றுகள் கல்வெட்டுகள் மூலமாகக் கிடைத்துள்ளன. கல்வெட்டுச் சான்றுகள் தமிழகத்தில் அடிமை முறையை உறுதி செய்துள்ளமையை அறியலாம். கோயில்கள் ஆதிக்கச் சாதிகளின் கைகளில் இருந்ததையும், அடிமைகளான தாழ்ந்த சாதியினருக்கு மதம் சார்ந்த உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்ததை வரலாறு உணர்த்துவதை அறியலாம்.

 

பெண்களின் நிலை

                பெண்களைப் பொறுத்தவரை கிராம அளவில் திட்டமிடுதல் இல்லை. தொலைநோக்கில் பிரச்சினைகள் அணுகப்படுவது இல்லை என்னும்போது, பஞ்சாயத்துத் தலைவிகள் வெறுமனே தபால் அலுவலகம் போலவோ அல்லது கமிஷன் ஏஜண்டுகள் போலவே செயல்படுவதுதான் சாத்தியம். அதிகம் படித்த, திறமை வாய்ந்த மக்கள் பணியில் ஆர்வம் கொண்ட பஞ்சாயத்து தலைவிகூட இலவச அரிசி வேண்டாம், நிலம் வேண்டாம், வேலைவாய்ப்பு உதவித்தொகை வேண்டாம், குடும்பத்தில் படித்த ஒரு பெண்ணுக்கு வேலைவாய்ப்பு என்னும கிராம அளவில் முடிவெடுத்துச் செயல்படமுடியாது. ஆகையால் பஞ்சாயத்து அளவில் பெற்ற ஒரு சதவிகித ஒதுக்கீட்டின் வழியாக பெண்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி உள்ளவர்களாக மாறுவது சாத்தியமில்லை. அரசியலில் தடம்பதித்துள்ள பெண்களில் சில பெயர்களை உச்சாpக்கும்போதே அடர்த்தியான மௌனமும், மேல் பேச்சாக பேசப்படும் வண்ணக்கலவையும் உடன் ஞாபகத்தில் நிழலாடுவது தவிர்க்கமுடியாது. ஆண்கள் சார்ந்து பெண்கள் அரசியல் அதிகாரம் பெறுவது தவிர்க்கமுடியாதது. இப்படி பெறும் அரசியல் அதிகாரத்தால் எந்தவித குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது. பெண்களுக்கு எதிராக அல்லது பெண்கள் ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட கோட்டையின் உச்சியில் அலங்காரமாகப் பெண்கள் வீற்றிருப்பது மட்டுமே பெண் உரிமையை பறைசாற்றுவது ஆகாது.

               

ஆண்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி காலனிய ஆதிக்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்க்கும் மனநிலை அடிமைச் சமூக மக்களின் கலக அரசியலாக அமைகிறது. விடுதலை எனும் சொல்லாடலின் பின் அமைந்துள்ள பரந்துப்பட்ட வெளியை அடிமைப்பட்டோர் உணரத் தொடங்கினர். இந்த உணர்வின் கருத்தமைவுதான் பெண்ணியம்

 

தலித் பெண்களின் நிலை

                இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் தலித்தாகவும், பெரும்பாலான தலித்துகள் பெண்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சசிதாரு குறிப்பிடுகிறார். பெண்கள் சமுதாயத்தில் அதிகாரமற்றவர்களாகவே உள்ளனர். அதோடு தலித் பெண்கள் இயக்கங்கள் பெண்ணிய இயக்கங்களோடு இணைந்து செயல்படுவதையும், பெண்ணியமும் தலித்தியமும் ஒன்று மற்றொன்றின் நீட்சியாகவே உள்ளது என்றும் குறிப்பிடப்படுவதை அறியலாம். இந்தியாவில் வறுமை, சாதி, கல்வியின்மை, மூடப்பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பாமர மக்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு எவ்வாறு சமுதாயப் பிரச்சினையாக இருந்ததோ              அது போலவே பெண்கள் மீதான மேலாதிக்கத்தினால் அவர்களின் முன்னேற்றமும் குறிப்பாக தலித் பெண்கள் மீதான அடக்குமுறையும் பெண்களின் உரிமையும் சமுதாயத் சிக்கல்களாக விளங்கின. அன்றாட வாழ்க்கையில் சாதி வர்க்கம் இவற்றின் வாயிலாக ஏற்படும் நசுக்குதலும். பெண்ணாகப் பிறப்பதால் பல கொடுமையான சூழல்களுக்கு தள்ளப்படும் நிலையுமே தலித் பெண்களின் உண்மையான நிலையாக விளங்கியது. இதற்குக் காரணம் ஆணாதிக்கம் அசைக்க முடியாத அடித்தளமாக அமைந்து இருப்பதுதான். எனவே இந்தியாவில் காணப்படும் பெண்கள் இயக்கங்களில் ஆண் ஆதிக்கத்திற்கும் சாதிக்கும் இடையே உள்ள உறவினைக் குறிக்க கருத்துக்களைத் திறனாய்வு செய்ய முனைந்தனர்;. ஜோனா லிடில் ரமா ஜோதி போன்றோர். இவர்கள் எழுதியசுதந்திரத்தின் குமாரத்திகள்என்ற நூல் ஆரியர்கள் காலத்திற்கு முன்பாக சாதி அமைப்பற்ற சமத்துவம் நிறைந்த தாய்வழிச் சமூகக் கட்டுப்பாடுகளில் ஒன்றாக நிலைப்பெறத் தொடங்கின என்றும் தலித் விடுதலை இயல் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சாதி உணர்வுதான் தலித் பெண்களை மூன்றாம் அடுக்கில் வைத்துள்ளமைக்கும் காரணமாக அமைந்தது.

 

                பெண்களைக் கீழ்மைப்படுத்துவது மிகவும் பழமையான ஒன்று இதனை ரிக் வேதப்பாடல்கள் மூலமாகத் தொpந்து கொள்ள இயலும். பெண்களைப் பால் வேறுபாட்டின் அடிப்படையில் அடிமைப்படுத்துவது ரிக்வேதத்திற்கு முந்திய காலத்திலேயே இருந்து வந்துள்ள ஒன்றாகும். சாதிய அமைப்பிற்கு ஆணாதிக்க அமைப்பே அடித்தளம். ஏற்றத்தாழ்வுகள் அதிகாரம் போன்ற தன்மைகளைக் கொண்டு அமையப்பெற்ற ஒடுக்குதல் முறையினின்று பெறப்பட்ட ஒன்றாகும் என்று கூறும்போது பெண்களை அடிமைப்படுத்தும் நிலை வர்ணம், சாதி இவைகளுக்கு முந்தியது என உணர்கிறோம். இவ்வாறு வரலாறு கூறும் வகையில் பெண்கள் அடிமைகளாகி வாழ்ந்த நிலையைக் காண்கிறோம். இவ்வகையில் தலித் பெண்கள் வாழ்க்கை நிலை ஒடுக்கப்பட்டதாகவே இருந்தது. இதனை நவீன முதலாளித்துவத்தில் பெண் மேலும் ஒடுக்கப்பட்டாள். பெண்கள் குறைந்த கூலிபெறும் தொழிலாளிகளாய் நியமனம் செய்யப்பட்டு சுரண்டப்பட்டார்கள். பலர்வீட்டு வேலை செய்பவர்களாக மாறினர். பணம் மதிப்பீடுகளை முடிவு செய்கிறபோது பெண் வெளியே சென்று வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்கும் சம்பளமில்லாததால் அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது. முதலாளித்துவச் சமுதாயம் தேவை நேர்ந்த போதெல்லாம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டது. இனவேறுபாடு போன்றே பாலின வேறுபாடுகள் முதலாளித்துவ சமூகத்திற்கு முக்கியமாய் அமைந்தது. பெண்கள் குறைந்த கூலிக்கு வரும் உழைப்பாளிகளாக்கப்பட்டு அவர்களைப் பயன்படுத்தி லாபம் பெறுவது முதலாளித்துவப் போக்காகிவிட்டது என்று தேவதத்தா கூறுகின்றார்.

 

பெண்கள் மீதான வன்கொடுமைகள்

                பெண் உரிமை வாய்ந்தவளாகவும் மதிப்பு வாய்ந்தவளாகவும் கருதப்பட்ட வசந்த காலம் மாறி, உபரி உற்பத்திப் பெருக்கக் காலத்தில் ஆண் சேமித்துவரும் சொத்துக்களுக்கு வாரிசு உருவாக்கித்தரும் பணியை பெண் ஏற்கும் நிலை உருவாக்கப்பட்டது. உற்பத்திச் சக்திகள் பெருகிய காலத்தில் சமுதாய நிறுவனமாகத் தனிச்சொத்து உருவாகியது என மார்க்சியலார் கருதுகின்றனர். அதனையடுத்து அத் தனிச்சொத்தைப் பெருக்கி, சந்ததியினரிடம் ஒப்படைக்கும் சமூக நிறுவனங்களாக ஒருதாரமணமும் அதன் அடிப்படையில் குடும்ப முறையும் உருவாகின. இதனால் தாய்வழிச் சமூகத்தின் எச்சங்கள் துடைத்தெறியப்பட்டன. அதன்பின் பெண்களின் கடமைகள், ஆண்களின் ஆசைகளை நிறைவேற்றுவதும், குழந்தைகளைப் பெற்றுவளர்ப்பதும் என்பது சமூக நியதியாகிவிட்டது. பெண்கள் கவரப்பட்டு அடிமைபடுத்தப்படுவர். இதைத்தான் ஏங்கல்சு பெண்ணிணத்திற்கு ஏற்பட்ட உலகளாவிய வரலாற்று ரீதியான தோல்வி என்கிறார். பெண்களை ஒடுக்கியது ஒருதார மணமும், அதன் குடும்ப அமைப்பும் ஆகும். இதனால் சமூக அளவிலான உற்பத்தியிலும் பெண்களும் ஆண்களைச் சார்ந்து அவர்களின் தலைமையை ஏற்று வாழும் நிலை உருவாகியது. தந்தைவழிச் சமூக அதிகாரம் பெண்ணை உடைமைப் பொருளாக்கி அடக்கி வந்துள்ளது.

இதைப் பெண்களின் மீதான ஒடுக்குமுறைகள் தந்தைவழிச் சமூகத்திலிருந்து உண்டானது எனப் போர்கௌஸ்கி மற்றும் பலர் கருதுகின்றனர். தந்தைவழிச் சமூக அமைப்பு, கருத்தியல் ஆகிய இரண்டு மூலக்கூறுகளைக் கொண்டு சமூக உறவுகள், சமூக நிறுவனங்கள் ஆகியவற்றை இயக்கிவருகிறது. இதுதனி மனிதனின் மீதும்  குழு (புசழரி) மற்றும் வர்க்கம்  மீதும் தனது அதிகாரத்தை முன்னுரிமையை தலைமைத்துவத்தை  நிலைப்படுத்தி வருகிறது.

 

பெண்களின் மீதான ஒடுக்குமுறை

                சமூகப்பண்பாடு, அரசு நிறுவனம் ஆகியவற்றில் பெண்கள் அடக்கப்படுவதைப் பெண்களின் மீதான ஒடுக்குமுறை என்று பெண்ணியலாளர்கள் கூறுகின்றார்கள். அதாவது பெண் வீட்டிலிருந்து கொண்டு குடும்பப்பணி ஏற்பதும், குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதுமாகப் பெண்களை ஒடுக்கப்படுவதைக் காணமுடியும்.

 

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டல்

                பொருளாதார ரீதியில் பெண்களின் உழைப்பிற்கு ஊதியம் தராமல் ஒடுக்குதலை பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டல் என்று கூறலாம். ஆண்களின் சுயலாப ஆதிக்கத்தை இச்சொல் குறிப்பிட்டு நிற்கிறது. எனவே ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகிய இரண்டும் ஆண்களின் அரசுடைமையாக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் பெண்களைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது. தொழிற்சக்தியில் பெண்களின் உழைப்பைச் சுரண்டுதலும் குடும்ப பணியில் ஊதியமளிக்காது உழைப்பைச் சுரண்டுதலும் தந்தைவழிச் சமுதாயத்தின் கருத்தியலாக இருந்துவருகிறது. எனவே பெண்களின்மீதான வன்கொடுமைகள் உற்பத்தி மூலமும்  மனித மறுஉற்பத்தி  மூலமும் ஒடுக்குமுறைகளாகத் தொடர்கின்றன. பெண் மீதான வன்கொடுமை, குடும்ப அமைப்பின் மூலமாக உருவெடுப்பதால் பெண் குடும்பத்திற்குள் அந்நியப் படுத்தப்படுகிறாள். குடும்பத்திலிருந்து சமூகத்திற்குத் தள்ளப்படுவதால் குடும்பம், சமூகம் ஆகிய இரண்டு நிறுவனங்களில் பெண்களின் மீதான வன்கொடுமைகள் தொடர் உறவு கொள்கின்றன. குடும்பம், சமூகம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பெண்கள் மீது வன்கொடுமைகள்  செலுத்துவதற்குப் பாலியல் வன்கொடுமைகள்  அடிப்படையாக இருந்து வருகிறது. இதில் 1. குடும்ப வன்கொடுமை  2. சமூகவன்கொடுமை  3. பாலியல் வன்கொடுமைகள்  ஆகிய மூன்று உட்கூறுகளை உள்ளடக்கியது. குடும்ப வன்கொடுமையில் 1) மனைவியை அடித்தல் 2) மன அழுத்தம் 3)பழி கூறல் 4. மனித மறு உற்பத்தியும் வன்கொடுமையும் ஆகியவைகளைச் சுட்டிக்காட்டலாம். சமூக வன்கொடுமை நிகழ்வுகளாக, (1) பாலியல் பலாத்காரம் (கயிந) (2)பெண் சிசுக்கொலை (3) குழந்தைத் தொழிலாளர் மீதான வன்கொடுமை  (4) பெண் தொழிலாளர்கள் மீது தொடரும் வன்கொடுமை   ஆகியவற்றைக் கூறலாம்.   பாலியல்  வன்கொடுமையில் (1) கணவனின்  பாலியல் உறவும் அதிகாரமும்  (2) வர்க்கமும் பாலியல் வன்கொடுமையும் ஆகியன அடங்கும்.

 

                இவை அனைத்தும் வன்கொடுமை நிகழ்வுகளாகக் கருதப்படுகின்ற போதிலும் குடும்ப, சமூக நிறுவனங்களின் மூலம் தொடர்வதாக கூறிச் செல்ல இயலும். ஏனெனில் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் குடும்ப வன்கொடுமையாகவும், சமூக வன்கொடுமையாகவும் இருப்பதை அறிய முடிகிறது. குடும்ப வன்கொடுமை, சமூக வன்கொடுமை, பாலியல் வன்கொடுமையை அடித்தளமாகக் கொண்டு உள்ளதை அறியலாம். 

 
Related News
 • போரும் இலக்கியமும் 2

 • எல்லீசர் தமிழாய்வு முன்னோடி

 • எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

 • நீரற்றது கடல் நிலமற்றது தமிழ்

 • போரும் இலக்கியமும் 1
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World