Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueநீரற்றது கடல் நிலமற்றது தமிழ்
 
-கவிஞர் சேரனின் கவிதைகளில் உயிர்க்கும் ஈழம்
-ரவிகுமார்
முள்ளிவாய்க்கால் என்ற கடலோரக் கிராமத்தின் பெயர் தமிழ் நினைவில் கல்வெட்டாய் பதிந்துவிட்டது.ஒருவர்...இருவரல்ல - சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட இடம்.அண்மைக் கால வரலாற்றில் இவ்வளவு பெரிய இனப்படுகொலை வேறு எதுவும் நடந்ததாக நினைவு இல்லை .2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நாம் கவலையோடு தொலைக்காட்சித் திரைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். தீ நாக்குகள் மேலேறி காற்றை நக்குகின்றன. கரும் புகை சூழ்கிறது. அந்தக் காட்சி அந்த சாம்பலோடு பறந்து  செல்லும் ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவல ஓலத்தை நமக்குச் சொல்வதாக இருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது. இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. புறநானூற்றுப் பாடல்களில் வரையப்பட்ட காட்சிகள் உயிர்பெற்று நிகழ்ந்து முடிந்துவிட்டன.

புறநானூற்றில் ஒரு பாடல் வரும். உக்கிரப் பெருவழுதி என்னும் மன்னனை ஐயூர் மூலங்கிழார் என்ற புலவர் பாடிய பாடல்... " கருங்கைக் கொல்லனின் உலையில் காய்ச்சப்பட்ட இரும்பு, உறிஞ்சிக்கொணட நீரை எப்படி மீண்டும் பெற முடியாதோ... அப்படி நீ கைப்பற்றிய நாட்டையும் உன் எதிரிகளால் திரும்பப் பெற முடியாது" என்று அரசனைப் பாராட்டும் பாடல் . முள்ளிவாய்க்கால் உறிஞ்சிக்கொண்ட தமிழ் உயிர்களின் கதியும் அதுதான் . கண்ணீரோ, குருதியோ  எதுவுமே  திரும்பக் கிடைக்கப்போவது இல்லை . முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயரல்ல. கொன்றும் , உயிரோடும் புதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான  தமிழர்களின் குறியீடு அது. ஒர் இனம் அழிக்கப்பட்டதன் அடையாளம்.

முள்ளிவாய்க்கால்   படுகொலைகள் நடந்ததற்குப் பிறகு நான் மீண்டும் மீண்டும் ஈழத்துக் கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். அவற்றுள் சேரனின் கவிதைகள்தான் அதிகம். "எமது நிகழ்காலம் கொடூரமான இராணுவ அடக்குமுறைகளின் உச்சங்களையும், அவற்றுக்கெதிரான பல்வேறு வடிவங்களிலும் வெடித்தெழும் போரட்டங்களையும் வரலாறாக்குகிறது.அநீதி, துயரம், அறிவும் நியாயமும் கூடச் சுமந்து கொள்ளமுடியாத அளவுக்குப் படுகொலைகள், தங்களுடைய சொந்த மண்ணிலிருந்து வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாய் வெளியேறுகிற மக்கள், எல்லைப்புறங்களில் எரிந்து கொண்டிருக்கும் எமது வீடுகள், வயல்களிலிருந்து இன்னும் அடங்காத புகை, இன்னும் அடங்காத நெருப்பு - இவையே “சூழலின் யதார்த்தம்”  என்று 1985 இல் மரணத்துள் வாழ்வோம் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் சேரன்.இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் அந்த வரிகள் பொருத்தமுடையவையாக இருக்கின்றன.
சேரனும் நானும் தொலைபேசியிலும் மின்னஞ்சல்கள் மூலமாகவும் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம்.2009 ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று எனக்கு எழுதிய மின்னஞ்சலில் நண்பர்கள் உறவினர்கள் என எண்பதுபேர்களை இந்த யுத்தத்தில் நான் இழந்துவிட்டேன்.நிலாந்தன், கருணாகரன் முதலியவர்கள் முள்வேலி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.பலரைக் காணவில்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.நடந்து முடிந்துபோன இனப்படுகொலைக்குறித்த ஆதங்கமாக மட்டுமின்றி அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் எவை என்ற அக்கறையாகவும் எங்கள் உரையாடல் அமைந்திருந்தது.
" “கவியரசன்” என்று இலக்கிய உலகிலும், “சேரன்” என்று பரவலாகவும் அறியப்பட்டுள்ள உருத்திரமூர்த்தி சேரனின் மூன்று நெடுங்கவிதைகளும் ஏழு சிறு கவிதைகளும் ஒரு பாடலும் இந்தத் தொகுப்பில் உள்ளன.இருபத்துநான்கு வயதான சேரன், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள், பாடல்கள் எழுதியுள்ளார்.நவீன ஓவியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவரது அரசியற் கவிதைகளின் ஒரு தொகுதியே இது. விஞ்ஞானப் பட்டதாரியான சேரனால் 1978-க்கும் 1982-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன" என்ற குறிப்போடு வயல் என்ற கவிதை இதழின் வெளியீடாக 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சேரனின் இரண்டாவது சூரிய உதயம்” வெளியாயிற்று.அப்போது ஈழத்தின் குருதிபடிந்த வரலாற்றுக்கு அடித்தளமிட்ட ஜூலை கலவரம் நடக்கவில்லை.ஆனால் சேரன் அப்படியொரு பயங்கரம் நிகழப்போகிறது என்பதை தனது கவிதைகளில் பதிவு செய்திருந்தார்.அதற்கு முன்பாக ஆங்காங்கே நடைபெற்றுவந்த இனவாதத் தாக்குதல்கள் அவருக்கு அத்தைகைய முன்னுணர்வைத் தூண்டியிருக்கலாம்.
1981 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பிள்ளையான் தம்பி என்பவரைப் பற்றி அவர் எழுதிய கவிதையில் அதற்கான தடயம் தெரிகிறது:
"..............
“அடி வானத்தில் மிதந்தது புகை”
எனச் சொல்லி,
இதழ்கள் மூடும் முன்பு தொலைவிலிருந்தொரு குரல்;
கூக்குரல்,
பிறகு நெருப்பு-

..................
நெருப்புச் சுடரும் 
அவர்களின் கைகளில் 
வாட்கள் மினுங்கும்,
தன்னந் தனியனாய்
அவர்களை எதிர்த்து
ஒற்றை இறகுடன் பறந்தாய்!

உனது 
தோள்களை வெட்டி
மண்டையைப் பிளந்து
குரல்வளை நரம்பில்
கத்தியால் கிழித்து
ஆற்றில் போட்டனர்....!
குருதியில் நனைந்தது ஆறு

“பிள்ளையான் தம்பி”

....................

இப்படி,
உனது வாழ்வு
மரணத்தில் ஆயிற்று....."
என்ற அந்தக் கவிதை வரிகளைப் படிக்கும்போது நம்முள் உருப்பெறுகிற காட்சி அன்று பேரினவாதம் எப்படி வளர்ந்துக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.1977 ஆம் ஆண்டிலேயே பேரினவாதம் தனது கோர முகத்தை வெளிக்காட்டிவிட்டது.அந்த நிலையைக் கவிஞர் எம்.ஏ.நுஃமான் தனது கவிதை ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்:
"இன்று காலை
இப்படி விடிந்தது.
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன.
குண்டுகள் பொழிந்தன.
உடலைத் துளைத்து 
உயிரைக் குடித்தன.

பஸ்நிலையம் மரணித்திருந்தது.
மனித வாடையை நகரம் இழந்தது.
கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன.
குண்டு விழுந்த கட்டடம் போல
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள்  தோறும்
டயர்கள் எரிந்து கரிந்துகிடந்தன." 1980 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிஞர் யேசுராசாவின் கவிதையும் அதைப்பற்றிப் பேசியது:

"திடீரெனத் துவக்குச் சத்தம் கேட்கும்.
சப்பாத்துகள் விரையும் ஓசையும் தொடரும்.
தெருவில் செத்து நீ
வீழ்ந்து கிடப்பாய்." என்று விவரித்து" அதற்கான எதிர்வினை எப்படி இருந்தது என்பதையும் அந்தக் கவிதை சுட்டிக்காட்டியது: "மௌனம் உறையும்;
ஆனால் மக்களின் மனங்களில், கொதிப்பு உயர்ந்து வரும்.”அப்படி மக்கள் மனதில் உயர்ந்துவந்த கொதிப்புதான் தமிழ் இளைஞர்களை வேறுவிதமான அரசியல் பாதையை நோக்கி நகர்த்தியது.அந்தச் சூழலை சேரன் மேலும் துல்லியமாகத் தனது கவிதை ஒன்றில் வரைந்துக்காட்டுகிறார்:

"அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

மணலில் கால் புதைதல் என 
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்

இம்முறை தெற்கிலே - 

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு."

என மிகத் தெளிவாக இனவாதச் சூழலை அடையாளப் படுத்துகிறார். பேரினவாதிகள் தமிழர்கள்மீது கூட்டுவன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்து; பேரினவாத வன்முறையும் அரச பயங்கரவாதமும் கூட்டுசேர்ந்து தாக்கத் தொடங்கியபோது தாமும் ஆயுதம் ஏந்துவது தவிர தமிழர்களுக்கு வேறு வழி இல்லாதுபோயிற்று.அத்தைகைய போராட்டத்தை முன்னெடுப்பதற்கான குழுக்கள் தமிழர்களிடையே உருவாயின.அதை நம்பிக்கையோடு பார்த்தவர் சேரன்,  அதனால்தான் இளைஞர்களை நோக்கி அவர் அறைகூவல் விடுக்கிறார்:

"கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காக காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது 
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக."

................................................................

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற இனப்படுகொலை ஈழத் தமிழர்களின் வரலாற்றைத் தீர்மானிக்கும் புள்ளியாக அமைந்தது.இன்றைய இளைஞர்களுக்கு அந்தக் குருதி தோய்ந்த வரலாறு தெரியாது."நெருப்பையும், குருதியையும், அவலக் குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது வன்முறையின் சித்திரம் அல்லது கலவரம் ஒன்றின் தோற்றம் எப்போதும் மனதில் விரிகிறது...எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?" என்ற ஈழத்து எழுத்தாளர் கருணாகரனின் கேள்வியை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
எப்படி நடந்தது அந்த வன்முறை? 1983 ஜூலை 23ஆம் தேதி மாலை யாழ்பாணத்துக்கு வெளியே ராணுவ ஜீப் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.அந்த ஜீப்புக்கு பின்னால் வந்த ராணுவ டிரக்கிலிருந்து வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள்.நாலாபுறமிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் தாக்குதலின் முடிவில் பதினைந்து சிப்பாய்களின் சடலங்கள் இரைந்து கிடக்கின்றன.கொல்லப்பட்ட சிப்பாய்கள் அனைவரும் சிங்களவர்கள்.அவர்களைக் கொன்றதோ தமிழர்களின் விடுதலைப்புலிகள்.
கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் கலவரம் வெடிக்கக்கூடும் என அஞ்சிய இலங்கை அரசாங்கம் அவர்கள் எல்லோரது உடல்களையும் கொழும்புவில் அடக்கம் செய்வதென்று முடிவு செய்தது.ஜூலை 24 ஆம் தேதி கொழும்புவில் சிப்பாய்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது அங்கே கூடிய சிங்களவர்களின் கும்பல் கொழும்பு நகருக்குள் புகுந்து தமிழர்களின் வீடுகளைத் தேடி கண்டுபிடித்துத் தாக்கத் தொடங்கியது.தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள்.வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.வீடுகள் எரிக்கப்பட்டன.தமிழ் மக்களில் பலர் தப்பித்து ஓடி இரக்கமுள்ள சிங்களவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தபோதிலும் கலவரம் அடங்குவதாக இல்லை.
கொழும்புவில் ஆரம்பித்த கலவரம் தமிழர்கள் வசித்த கண்டி, மாத்தளை, நாவல்பிட்டியா, பாதுல்லா, நுவாரா, எலியா முதலான பகுதிகளுக்கும் பரவியது.சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியிருந்த தமிழர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள்.இதுகுறித்து ஆர்.சம்பந்தன் எழுதியிருப்பது நமக்கு நல்ல விளக்கமாக இருக்கிறது. "இந்த வன்முறையின் போது குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள்.முதலில் இலங்கை ராணுவத்தினர் தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள்.அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லி தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள்.தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்தி களேபரம் செய்வார்கள்.அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள்.அவர்கள் போன சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும்.தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும்.அதன்பிறகு வீடுகளுக்கு தீ மூட்டும்.ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்."தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள் சிங்களவர்களிடம் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன்.
முதலில் அரசாங்க அலுவலகங்களைக் குறி வைத்துத்தான் வன்முறை ஏவப்பட்டது.அதன்பிறகு தான் அது தமிழர்களுக்கு எதிரானதாக மாறியது.தெருச்சந்திகளில் கையில் பெட்ரோல் கேன்களோடு வாகனங்களை வழி மறித்த கும்பல் டிரைவரும், வாகனத்தில் பயணம் செய்பவரும் தமிழரா என்று விசாரித்து அவர்கள் தமிழர்கள் எனத் தெரிந்தால் பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியது.அப்படியொரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையொன்றில் இப்படி விவரிக்கிறார்:

"இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக் 
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
அன்றாட வாழ்க்கையிலும்   
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாக மறந்து விடுகிறேன் 
மறப்பதில் எனக்கிருக்கும் திறமை பற்றி எவருக்குமே
ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலுபேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படி தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் அந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை.
குதூகலம் கொப்பளிக்கின்ற  மனநிலையில்
ஒரு சில கேள்விகள்
செய்வதைப் பிழையற செய்யவிரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்ற வைப்பது போன்ற விஷயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
கதவுகளைத் திறந்தான்.
அழுது அடம்பிடித்துப் பெற்றோரை விட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக் கூடும்
துரிதமாக செயல்பட்ட இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்து கொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சம் பேர்
கலைந்து போனார்கள் ஒருசிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீப்பற்றி விட்டிருந்தது
குனிந்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பார்க்காமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவது போல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த சப்தத்தை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகராட்சி அதனை அகற்றக்கூடும் 
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி"

ஒரு சிங்களவரே அளித்த ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது இந்தக் கவிதை.வீதிகளிலும், வீடுகளிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது  மட்டுமின்றி சிறையில் இருந்தவர்களும் குரூரமாகக் கொல்லப்பட்டனர்.வெலிக்கடை சிறையில் ஜூலை 25 ஆம் தேதி முப்பத்தேழு தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.மூன்று நாள் கழித்து மீண்டும் பதினைந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கவே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றனர்.அது உண்மையல்ல.தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது.இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே இனவொதுக்கல் கொள்கையும் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது.1983 இல் -ஜயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அது புதிய பரிமாணத்தை எட்டியது.அந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரிகோணமலை காவல் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்தார்.எந்தவித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அவரது உடம்பிலிருந்த காயங்கள் காட்டின.அது தமிழ் மக்களிடம் கொந்தளிப்பைக் கூட்டியது.1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி அரசாங்கம் ஆணையொன்றைப் பிறப்பித்தது.அந்த அவசர ஆணையின்படி போலீஸார் எவ்வித விசாரணையோ, போஸ்ட்மார்ட்டமோ இன்றி எந்தவொரு சடலத்தையும் புதைக்கலாம் என அறிவிக்கப்பட்டது.அதற்கு முன்பே தமிழர்களின்மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடங்கி விட்டன.இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே "இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.அவர்களது உயிர்களோ கருத்துகளோ எங்களுக்கு பொருட்டல்ல.தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்" என லண்டனிலிருந்து வெளியான பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.ஆக, ஜூலை கலவரத்துக்கான தயாரிப்பை நீண்டநெடுங்காலமாகவே சிங்களவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.1977 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரமும், 1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் தயாரிப்பில் சில மைல் கற்கள்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டதை இனப்படுகொலை எனச் சொல்வது சரியா? என்று சிலர் கேட்கலாம்.இனப்படுகொலை என்பதற்கான வரையறை என்ன என்பதை பவுல் ஆர்.ப்ராஸ் என்ற அமெரிக்க சிந்தனையாளர் தனது விளக்கியிருக்கிறார்."மக்களில் ஒரு ஆதிக்கம் செய்வது;அதற்கு வன்முறையை கருவியாகப் பயன்படுத்துவது;அரசியலை இனவாதத்தின் செல்வாக்குக்குள் கொண்டு வருவது;சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறையை ஏவுகிறவர் அரசியலில் தலைமை ஏற்பது;தங்களது சந்தோஷத்துக்காகவும், கேளிக்கைக்காகவும் எதிராளிகள் மீது வன்முறையை ஏவுவது;மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து செல்ல நிர்பந்தப்படுத்தும் விதமாகத் தாக்குதல் தொடுப்பது;இனச் சுத்திகரிப்புக்கு வன்முறையை வழியாகக் கொள்வது;காவல்துறை, ராணுவம் முதலானவற்றின் ஒரு சார்பான அணுகுமுறை " - இப்படி இனஅழித்தொழிப்பு மனோபாவத்தின் அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார்.இவை எல்லாமே 1983 ஜூலை கலவரத்துக்கும் பொருந்துகின்றன முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் பொருந்துகின்றன.
ஜூலைக் கலவரங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதை ஒன்று எப்படி சாதாரண சிங்கள மக்களும் இனக்கலவரத்தின் பங்காளிகளாக மாறினார்கள் என்பதை சேரன் விவரிக்கிறார்:

"எல்லாவற்றையும் மறந்து விடலாம்;
இந்தப் பாழும் உயிரை
அநாதரவாக இழப்பதை வெறுத்து
ஒருகணப் பொறியில் தெறித்த 
நம்பிக்கையோடு
காலி வீதியில்
திசைகளும், திசைகளோடு இதயமும்
குலுங்க விரைந்தபோது,

கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் 
வெளியே தெரிந்த தொடை எலும்பை,
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில்
எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து
இறுகிப்போன ஒரு விழியை,
விழியே இல்லாமல், விழியின் குழிக்குள்
உறைந்திருந்த குருதியை,
“டிக்மண்ட்ஸ்” ரோட்டில்
தலைக் கறுப்புகளுக்குப் பதில்
இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த
ஆறு மனிதர்களை,
தீயில் கருகத் தவறிய
ஒரு சேலைத்துண்டை,
துணையிழந்து,
மணிக்கூடும் இல்லாமல்
தனித்துப்போய் கிடந்த
ஒரு இடது கையை,
எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து
தொட்டில் ஒன்றைச்
சுமக்க முடியாமல் சுமந்துபோன
ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை,

எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால் - 

உன் குழந்தைகளை ஒளித்துவைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளிந்தபடி காத்திருந்தபோது 
பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி 
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க...?"
இந்தக் கவிதையில் தீட்டப்பட்டிருக்கும் காட்சி பாஸில் ஃபர்னாண்டோவின் கவிதை ஏற்படுத்தியதைவிடவும் மிகுந்த அதிர்ச்சியை நம்முள் ஏற்படுத்துகிறது.
எண்பதுகளின் பிற்பகுதி முழுவதும் ஈழத்திலிருந்து எழுதப்பட்ட ஆற்றல் மிக்க அரசியல் கவிதைகளால் தமிழ்நாடு ஆட்கொள்ளப்பட்டிருந்தது.தமிழ் அரசியல் கவிதைகளின் போக்கே அதனால் மாற்றி அமைக்கப்பட்டது ஒரு காலத்தில் பாரதிதாசனாலும் , வானம்பாடிகளாலும் தாக்கம் பெற்று கவிதை எழுதிக்கொண்டிருந்த ஈழக் கவிஞர்கள் தமக்கான தனித்துவ அடையாளங்களோடு கவிதைகளைப் படைத்தார்கள்.அது தமிழ் இலக்கிய உலகை வெகுவாகப் பாதித்தது.இடதுசாரிகளும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உருவாக்கி வைத்திருந்த அரசியல் கவிதை மரபு மிகவும் பலவீனமாக இருந்ததால் அவற்றை எழுத்து வழியில் வந்த இலக்கியமே குறியாகக் கொண்ட கவிஞர்களும் விமர்சகர்களும் மிக எளிதாகத் தமது இடது கையால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.அந்த நிலையை ஈழக் கவிதைகளின் வருகைதான் மாற்றியமைத்தது.
இதனிடையே ஈழத்தில் பலவிதமான அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.மிக விரைவிலேயே தமிழ் கொரில்லாக் குழுக்கள் தம்மைக் கிரமமான ராணுவங்களாகக் கட்டியமைத்துக்கொண்டன.சமரச அரசியல் பேசிக்கொண்டிருந்தவர்கள் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டு அதிகாரமானது போராளிக் குழுக்களிடம் வந்து சேர்ந்தது.அந்தக் குழுக்களிடையே மோதல்கள் நிகழ்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பு போட்டி ஏதுமில்லாத உச்சத்தை அடைந்தது.
அதிகாரம் தமது கைகளுக்கு வந்தபிறகு போராளிக் குழுக்கள் அரசுக்கான அத்தனை அம்சங்களையும் ஏற்படுத்திக்கொண்டன.சிங்கள அரசுக்கு இணையாக ஒரு தமிழ் அரசு உருவாக்கப்பட்டது.அது அரசு என்பதன் அத்தனை குறைபாடுகளையும் தவிர்க்கமுடியாமல் சுமந்துக்கொண்டிருந்தது.அதனை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் கவிஞர்கள் அதற்கு மௌன சாட்சிகளாக இருக்க மறுத்தார்கள்.அப்படியான குரல்களை அடக்குவதன்மூலம் தமக்கான சிறு எதிர்ப்பும் வந்துவிடாமல் புதிய ஆட்சியாளர்கள் பார்த்துக் கொண்டனர்.சிலர் கொல்லப்பட்டனர்.பலர் புலம் பெயர்ந்தனர்.கவிஞர் சேரனும் புலப்பெயர்வுக்கு ஆளாகி கனடாவுக்குப் போய் சேர்ந்தார்.

................................................................................................................

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு என்பது ஏனைய புலப்பெயர்வுகளைப் போன்றதல்ல.அதன் தனித்தன்மைகளை அண்மையில் டெல்லியில் ஆற்றிய உரை ஒன்றில் சேரன் விளக்கியிருக்கிறார்."வலிந்து புலம் பெயர்க்கப்பட்டவர்களை “வலசை மாந்தர்” என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.மற்ற வகையினரைப் “புலம் பெயர் மாக்கள்” என அவை சுட்டுகின்றன.சமுதாயம், மானுடவியல், அரசியல், அலைவியல் அல்லது அலைந்துழல்வியல் போன்ற துறைகளில்   ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் சிலர், புலம் பெயர் நிலையை இவ்வாறு இருவகைப்பட்டதாக அணுகமுடியாது எனவும் எல்லாப் புலப்பெயர்வுகளுக்குப் பின்னாலும் நேரடியாகவோ அல்லது உள்ளார்ந்தோ பொருளியல் காரணங்கள் இருக்கின்றன எனவும் வாதிடுகிறார்கள்.எனினும் இத்தகைய பிரிப்பு, கோட்பாடு சார்ந்தும் அரசியல் சர்ந்தும் நமது கவனிப்புக்கு உரியது என நான் கருதுகிறேன்.குறிப்பாக பல்வேறுபட்ட தமிழர்கள் பல்வேறுக் காரணங்களுக்காக புலம் பெயர்கிற போதுலும் ஈழத் தமிழர்களின் வலி சுமந்த அலைந்துழல்வு தனியான கவனத்தை வேண்டி நிற்கிறது."என்று சேரன் வலியுறுத்துவதில் நியாயம் இருக்கிறது.புலப் பெயர்வில் வலியை அவர் தனது கவிதைகள் பலவற்றில் பதிவு செய்திருக்கிறார்.அவற்றுள் மிகவும் முக்கியமானது கேள் என்ற தலைப்பிலான கவிதை:

"கேள் 
எப்படிப் புணர்வது என்பதைப்
பாம்புகளிடம்.எப்படிப் புலர்வது என்பதைக்
காலையிடம். பொறுமை என்பது என்ன
என்பதை மரங்களிடம். கனவுகளுக்கு வண்ணங்கள் உண்டா என்பதைத்
தூக்கத்தில்
நடப்பவர்களிடம்.கண்ணீர்த் துளிகள் சிறைக்கூடங்களாக
மாறியது எப்படி என்பதை
அகதிகளிடம்....."
என நீளும் அந்தக் கவிதையைப் படிக்கும்போது நாமே அனாதரவாய் நிற்பதுபோல உணர்வோம்.புலம்பெயர்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்ட நிலையிலும் கனடா நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் சூழலிலும்  அவர் இருந்துவிடவில்லை.அமைதியாலும் யுத்தத்தாலும் மாறி மாறிச் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்த ஈழத்தில்தான் அவரது இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது.தொண்ணூறுகளுக்குப் பிறகு மிகவும் ஆற்றல் மிக்கக் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கும் அனார், வினோதினி, ஆகர்ஷியா உள்ளிட்ட பல்வேறு பெண்கவிஞர்களும் அவருடைய முயற்சியினால்தான் உரிய கவனத்தைப் பெற்றார்கள்.ஒருபுறம்  பேரினவாதத்தை எதிர்த்தக் கருத்துப் பிரச்சாரம், மறுபுறம் போராளிகளின் ஜனநாயக மறுப்பை விமர்சித்த போராட்டம் என எப்போதும் தம்மை ஆபத்துகளின் நடுவில் நிறுத்திக்கொள்வதே சேரனின் சுபாவமாக இருக்கிறது.போராளிகளின் வன்முறைப் போக்கை விமர்சித்து அவர் எழுதிய கவிதைகளில் வீரர்கள் துயிலும் நிலம் என்ற கவிதை முக்கியமானது.தொண்ணூறுகளின் இறுதியில் அவர் எழுதிய இன்னொரு முக்கியமான கவிதைதான் “ஊழி” என்பதாகும்.

ஊழி

எங்களுடைய காலத்தில்தான்
ஊழி நிகழ்ந்தது  
ஆவிக் கூத்தில் நிலம் நடுங்கிப்
பேய் மழையில் உடல் பிளந்து
உள்ளும் வெளியும் தீ மூள
இருளில் அலறல்
குழந்தைகளை மனிதர்களை
வெள்ளம் இழுத்துவந்து
தீயில் எறிகிறது

அகாலத்தில் கொலையுண்டோம்
சூழவரப் பார்த்து நின்றவர்களின்
நிராதரவின் மீது
ஒரு உயிரற்ற கடைக்கண் வீச்சை
எறிந்துவிட்டு
புகைந்து புகைந்து முகிலாக
மேற் கிளம்பினோம்

காஃப்காவுக்குத்தான் தன்னுடைய எழுத்துகளைத்
தீயிலிட வாய்க்கவில்லை
ஆனால் சிவரமணி எரிந்துவிட்டாள்
அந்தர வெளியில் கவிதை அழிகிறது
மற்றவர்களுடைய புனைவுகள்
உயிர்பெற மறுக்கின்றன

எல்லோரும் போய்விட்டோம்
கதைசொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாகப் பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை
இக்கவிதையில் வெளிப்படும் கூர்மையான விமர்சனத்தை அன்று எவரும் பொருட்படுத்தவில்லை.கவிஞர் சிவரமணியின் மரணம் அங்கு ஒரு செய்தியாகக் கூட பதிவாகவில்லை.1991 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்துகொண்டார் சிவரமணி.அப்பொதுதான் உருப்பெறத்தொடங்கியிருந்த ஈழத்துப் பெண் கவிஞர்களின் குரல்களுக்குள் வலுவாகவும் தீர்க்கமாகவும் ஒலித்த குரல் அவருடையது.தான் சாவதற்குமுன் தன் கவிதைகளை எல்லாம் அவர் எரித்துவிட்டார்.”என்னுடைய நாட்களை  / நீங்கள் பறித்துக்கொள்ள முடியாது /.கண்களைப் பொத்திக்கொள்ளும்  / உங்கள் விரல்களிடையே / தன்னைக் கீழிறக்கிக்கொள்ளும் / ஒரு குட்டி நட்சத்திரம் போன்று/ எனது இருத்தல் உறுதிபெற்றது என்று எழுதிய சிவரமணி சுதந்திரத்தை மறுத்த அதிகாரத்துவத்துக்குத் தனது மரணத்தின் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளக்கூடிய பொறுமை போராளிகளுக்கு அன்று இருக்கவில்லை.அதனால் தமதுக் கருத்துகளைச் சொல்ல முயன்றவர்கள் அங்கே “அகாலத்தில் கொலையுண்டார்கள்”.சூழவரப் பார்த்து நின்றவர்கள் எதையும் செய்யக்கூடியவர்களாயில்லாதபோது” “அந்தரவெளியில் கவிதை அழிய, மற்றவர்களுடைய புனைவுகளோ உயிர்பெற மறுத்துவிட்டன”.அப்படி மௌனமானவர்களின் நீண்ட பட்டியல் ஈழத்தில் உண்டு.
நுண்ணுணர்வு கொண்டவர்கள் ஒரு இடத்தில் இருக்கும்போது அங்கே சுதந்திரம் மதிப்பு பெறுகிறது..அவர்களெல்லோரும் வாய்மூடி மௌனமாகிவிடும் இடத்தில் எப்படிக் கவிதை உருவாகும்? ஈழத்திலிருந்து முன்புப்போலக் காத்திரமான கவிதைக் குரல்கள் ஒலிக்காமல் போனதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு சேரனின் கவிதையில் பதில் இருக்கிறது; “எல்லோரும் போய்விட்டோம் / கதைசொல்ல யாரும் இல்லை...” என்ற வரிகளிலும் அவற்றைத் தொடர்ந்து “இப்பொழுது இருக்கிறது / காயம்பட்ட ஒரு பெருநிலம் / அதற்கு மேலாக பறந்து செல்ல / எந்தப் பறவையாலும் முடியவில்லை / நாங்கள் திரும்பி வரும் வரை என்ற வரிகளிலும் அந்தப் பதிலை நாம் உணரலாம்.

..................................................................................

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு அதுகுறித்து வெளியான ஈழக் கவிதைகளில் ஆற்றல் வாய்ந்தவற்றைத் தேடித் தொகுக்கும் பணியில் நான் ஈடுப்பட்டேன்.பல புதிய கவிஞர்கள் நிறைய கவிதைகளை எழுதியிருக்கிறார்கள் என்றாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி இப்போதும் மிகச் சிறந்த கவிதைக் குரலாக  சேரனின் குரலே ஒலிக்கிறது.நான் நடத்திவரும் மணற்கேணி இதழுக்கென அவர் 2010 ஜனவரி மாதம் 11 ஆம் தேதி ஆறு கவிதைகளை அனுப்பிவைத்தார்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய இரண்டாவது சூரிய உதயம் தொகுப்பைப் படித்துவிட்டு என்னமாதிரியான மனநிலைக்கு ஆளானேனோ அதேவிதமான தாக்கத்தை அந்த ஆறு கவிதைகளும் எனக்குள் ஏற்படுத்தின.அந்தக் கவிதைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்:

1.கொலைக்காட்சி

பொய்மையும் வன்மம் சூழ் மாயக் காட்சிகளும்
அவர்களுடைய படையெடுப்பில் 
புகையுடன் சேர்ந்து மேலெழுந்தபோது

சொல் பிறழ்ந்தது
படிமங்கள் உடைந்தன
வாழ்க்கை குருதி இழந்தது

எறிகணை பட்டுத் தெறிக்கக்
காயம் பட்ட
இரண்டரை வயதுக் குழந்தையின் கைகளை
மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன்
இக்கணம் கடவுள்
நீரற்ற விழிகளுடன் அலறும் தாய்
ஒரு பிசாசு.

2.அஞ்சலி

புதையுண்டவர்கள்
எரியுண்டவர்கள்
கடலோடு போனவர்கள்
  -எல்லோரதும் தெளிவான, திருத்தமான தகவல்கள்
   உலகப் பணிமனையின்
   நிலத்தடி ஆவணக் காப்பகங்களுக்குப் போய் விட்டன
எங்கள் எல்லோருடைய ஒற்றைப் புதைகுழி மீது
படைத்தளபதியின் கோவணத்தை
தேசியக் கொடியாக ஏற்றுகிறார்கள்

எங்கள் கண்ணீர் எழுப்பிய நினைவுச் சின்னத்தில்
ஒருவர் வெற்று வார்த்தைகளை எழுதுகிறார்

பலர் கனவுகளைப் பின்னுகிறார்கள்

மௌனம் கலையாமல்
அவன் கவிதையை எழுதுகிறான்.

3.தலைமுறை

ஒரு தலைமுறைக்கு முன்
நாடு கடந்தார்கள்
அடுத்த தலைமுறை மெல்ல மெல்ல மொழி இழக்கும்
தருணத்தில்
தீராப்பெருவலி எழுந்து எம்மை இணைக்கிறது

பனி உதிர்ந்து காற்றுறையும் இரவுப் பெரும் பொழுதிலும்
சினத்துடன் எழுந்து தெருவை நிறைத்த
பல்லாயிரம் மக்களிடையே
குரல் வற்றிய ஒரு பெண்ணைக் கண்டேன்

கண்ணீரின் சுவடுகளால் முகக் கோலம் அழிந்தாலும்
இன்னொரு முகம் பன்முகமாக விரியக் கண்டேன்.

4.உடல்

கடலோரம் தலை பிளந்து கிடந்த 
உடல்.

இறப்பிலும் மூட மறுத்த கண்களின் 
நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது;
எதிர்ப்பு, ஆச்சர்யம், தவிப்பு, தத்தளிப்பு, கொதிப்பு, ஆற்றாமை,
முடிவற்ற ஒரு பெருங்கனவு.

5.காணிநிலம்

இந்தக் காணி நிலத்தில் என்னுடைய கதை பிறந்தது
அங்கு கடல் கொண்ட பெருமரங்களின்
வேரடிமண் இப்போது வெளித் தெரிகிறது
கோடை காலத்திலும் ஈர மனிதர்
உலவித் திரிந்த நிலம்
ஒரு சில நாட்களில்
மொழி பெயர் தேயமாக மாறுகிறது

இந்தக் காணி நிலத்தில் தென்னைகள் இல்லை
குடிசைகள் இல்லை
கிளைக் கதைகள் சிறைப்பட்டுப் போனபிற்பாடும்

முடிவற்ற கதை இது என்று சொல்கிறது
குரல்.

6.
நீரற்றது கடல்
நிலமற்றது தமிழ்
பேரற்றது உறவு

(27.01.2011 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
 
 
Related News
 • போரும் இலக்கியமும் 2

 • தலித் பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தலித் இலக்கியக் குரல்கள்

 • எல்லீசர் தமிழாய்வு முன்னோடி

 • எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

 • போரும் இலக்கியமும் 1
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World