Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஎழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?
 

 முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)

கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.

9600370671, 9600820827
 
 
கடன் இருவகைத்து. ஒன்று: சொற்கடன். இது திருப்பித்தரும் இயல்பினல்லது. மற்றொன்று: பொருட்கடன். இது ஒரு சாரருக்கு நன்மையும், ஒரு சாரருக்குத் தீமையும் விளைவிக்கும் (ஞா.தேவநேயப்பாவாணர், 2009:91). இதனுடன் எழுத்துக் கடனையும் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு மொழியை முழுமையாக கொடைமொழி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிமுறையேயாம்.
இந்த எழுத்துக்கடன் ஒரு மொழி தழைத்து வளர அடிகோலுமா? அல்லது அடிச்சுவடே இல்லாது வீழ வழிவகுக்குமா? என்பது ஆராயற்பாலது. ஏனெனின் கொடை மொழிக்குரிய எழுத்துகளைக் கொள்மொழி ஏற்கும்போது, எழுத்துக்கள் மட்டும் அம்மொழியில் சென்று சேர்வது இல்லை. மாறாகச் சொற்களும் பொருட்களும் சென்று சேருகின்றன. இவ்வாறு செல்லும்போது அம்மொழிக்குரிய நிலைப்பாடு என்னவாக இருக்கும். அங்கு ஒரு நிலைப்பாடும் இராது என்பதே வெளிப்படை. அதனை இலக்கணக் கலைஞர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவ்விலக்கணக் கலைஞர்கள் விதி வகுத்திடவும் தவறவில்லை.
தொல்பழங்காலத்தில் இந்தியாவின் பெருநிலை மொழிகளாகத் தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் சமசுகிருதம் அனைத்து மொழிகளிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தியும் வருகின்றது. இத்தாக்குறவிற்குத் தமிழ் தவிர பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன தொடக்கத்திலேயே இடம் தந்தன. ஆனால் தமிழ்மொழி மட்டும் இடம் தரவில்லை. இதனை,
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே – தொல்.சொல்.397
எனும் விதி துலக்கும். இவ்விதி பேச்சு வடிவத்தை ஏற்கலாம் என்பதையும், எழுத்து வடிவத்தை ஏற்கலாகாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. ஆக, தொல்பழங்காலத்தில் இருந்த இந்நிலைப்பாடு பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்பும் மாறின. சமசுகிருதத்தின் ஆதிக்கம் தமிழ்மொழியின்பால் காலூன்றியது எனலாம் (க.ப.அறவாணன், 2006:121 – 126). ஆகவே, தமிழ்மொழிக்குரிய முதன்மை எழுத்துக்கள் முப்பது என்றமை, இன்று ஆய்தத்துடன் சேர்த்து முப்பத்தேழு (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ) எனக் கூறுமாறும் ஆகிவிட்டது. குறிப்பாக இன்று மழலையரின் தமிழ் அரிச்சுவடியிலும் இடம்பெற்றுவிட்டமை நோக்கற்பாலது. இவ்வாறு உட்புகுந்த சமசுகிருத மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல விரிந்து நின்றது. ஆகவே இன்று மாந்தர் பெயர்கள் அனைத்தும் சமசுகிருதமாகவே அமையக் காணலாம்.
தொல்காப்பியர் தொடங்கி தண்டபாணி சுவாமிகள் வரை உள்ள இலக்கணக் கலைஞர்கள் தமிழ் மொழிக்குரிய எழுத்துக்கள் இவை என்று மட்டுமே வரையறுக்கின்றனர். ஆனால், பிறமொழிக்குரிய எழுத்துக்கள் இவை, அம்மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு வந்த எழுத்துக்கள் இவை என வரையறுக்கின்ற போக்கு நிலவவில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. ஏனெனின் சமசுகிருத மொழிச் சொற்களோ அல்லது பிறமொழிச் சொற்களோ உட்புகுந்தாலும், அதனைத் தமிழ்ப்படுத்தும் பாங்கு ஒருபுறம் நிகழ்ந்தமையேயாம். அதற்கான விதிகளையும் பின்னைய இலக்கணிகள் அமைத்துவிட்டனர். அதாவது, பிறமொழிச் சொற்களைக் கடனாளும் போது, தமிழ்மொழி இயல்புக்கு ஏற்ப மொழியாக்கம் செய்வதேயாம். குறிப்பாக, கொடைமொழிக்குரிய சிறப்பெழுத்துக்களை நீக்கி கொள்மொழிக்குரியச் சிறப்பெழுத்துகளை இட்டு வழங்குவதேயாம். இங்கு நன்னூல் விதிகள் சுட்டிக்காட்டத்தக்கன.
இடையி னான்கு மீற்றி னிரண்டும்
அல்லா வச்சை வருக்க முதலீறு
யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம்
பொது வெழுத் தொழிந்தநா லேழும் திரியும் – நன்.146
அவற்றுள், 
ஏழாமுயி ரிய்யு மிடுவுமை வருக்கத்
திடையின் மூன்று மவ்வவ் முதலும்
எட்டே யவ்வு முப்பது சயவும்
மேலொன்று சடவு மிரண்டு சதவும்
மூன்றே யகவு மைந்ததிரு கவ்வும்
ஆவீ றையு மீயீ றிகரமும் – நன்.147
ரவ்விற் கம்முத லாம்முக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்
கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே – நன்.148
இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமு நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாகும்பிற – நன்.149
றனழஎ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள
பல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே – நன்.150
இத்தன்மை பிற்காலத்தில் விரிவான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பெற்றது என்பதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கண நூல்களாகிய  முத்துவீரியமும் சுவாமிநாதமும் மெய்ப்பிக்கின்றன. காட்டாக, சுவாமிநாத விதிகளைச் சுட்டலாம்.
காணும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, க, ங, ச, ஞ
ட, ண, த, ந, ப, ம ய, ர, ல, வ, ள இவையே
சேணில்பொது எழுத்தாம், இப் பொதுவெழுத்தும் வடசொற்
சிறப்பெழுத்தும் ஈரெழுத்து மேஇயைந்து திரிந்த
வாணிபெயர் வாயுமற்றுப் பொதுவெழுத்துட் பொதுவாய்
வருதமிழின் சிறப்பெழுத்தாய்த் திரிந்துமுன் பின்னிடையிற்
பூணும்விகா ரத்துஇயைந்தும் வடமொழி தென்மொழியம்
புகன்றகூட் டெழுத்தொட்டுப் புரிந்தும் ஆர்த்திடுமே – சுவாமி.32
ஆரியத்தின் உயிரினுடை நான்கிருவில் லீற்றிரண்
டவ்வைவருக்கத் தின்இடை யின்மூன்றாதி மெய்எட்டு
ஈரெட்டோர் எழுமூன்றின் நான்கு யடவ, முப்பான்
சய, பின்னொன்று சட, விரண்டு சத, மூன்றகவாம், ஐந்தே
யேரிருகச் சவ்வாகும் ஆவிறையீயீறு இகரமாம்
அ, ஆ, வி,யை யுவ்வௌ, விரு, வார்
கூறுமிய்யே யுவ்வோ வேயை, யோவௌ, விசையுங்
குவ்வநவி நறிபின்சொற் பொருணீத்துஞ் சொலுமே – சுவாமி.33
ஆனால், நடுத்திராவிட மொழியாகிய தெலுங்கு எழுத்துக்களைச் சமசுகிருத, பிராகிருத மொழிகளிலிருந்து கடனாண்டுள்ளது. இதனை அம்மொழிக்குரிய தொடக்கநிலை இலக்கணக் கலைஞராகிய நன்னயா (ஆந்திர சத்த சிந்தாமணி) சுட்டிக்காட்டத் தவறவில்லை. அவரைத் தொடர்ந்து மொழிமெய்மைகளை விளக்கிய இலக்கணக் கலைஞர்களும் சுட்டிக்காட்டாமலில்லை. அதாவது, கி.பி.11 முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டுவரையும் அந்நிலைப்பாடு இருந்துள்ளமையை,
ஸம்ஸ்க்ரு”தமுநகு வர்ணமு லேப3தி3 - பா.வி.சஞ்.1
(சமசுகிருதத்துக்கு எழுத்து ஐம்பது)
ப்ராக்ரு”தமுநகு வர்ணமுலு நலுவதி3 - பா.வி.சஞ்.2
(பிராகிருதத்துக்கு எழுத்துகள் நாற்பது)
தெலுகுநகு வர்ணமுலு முப்பதி3யாறு - பா.வி.சஞ்.3
(தெலுங்குக்கு எழுத்துக்கள் முப்பத்தாறு)
ரு”ரூ”லு”லூ” விசர்க க2ச2ட2த2ப2க4ஜ2ட4த4ப4ஙஞஸ2 ஷலு ஸம்ஸ்க்ரு”த ஸமம்புலநு கூடி3 தெலுகுந வ்யவ் ஹடி3ம் - பா.வி.சஞ்.4 
(ரு”ரூ”லு”லூ” விசர்க க2ச2ட2த2ப2க4ஜ2ட4த4ப4ஙஞஸ2 ஷகள் சமசுகிருத சமமாக தெலுங்குக்கு வந்தவை)
எனவரும் சின்னயசூரியின் விதிகள் துலக்கும். இவ்விதிகள் எழுத்துக் கடனைப் பெற்றமையால் தழைக்குமா? அல்லது வீழுமா? என்பதை எவ்வாறு புலப்படுத்துகின்றன என எண்ண இடமளிக்கலாம். தெலுங்கு மொழி சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆயின், அவ்விரு மொழிகளுக்குரிய எழுத்துக்கள் அம்மொழியில் இடம்பெற்றன. எனவே, அக்கொடைமொழிக்குரிய எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தினார் சின்னயசூரி. இதற்கு ஒரு காரணம் உண்டு. அஃதியாங்கெனின் ஒரு மொழி கொடைமொழியின் ஆதிக்கத்திற்கு ஆட்படும்பொழுது, அம்மொழிக்குரிய தனித்தன்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் அம்மொழியின் இலக்கணக் கலைஞர்களுக்கு நேரிடுகின்றமையேயாம். அதனையே அவ்விதிகளும் துலக்கின. அதாவது தெலுங்கு மொழியை விளக்க முனைந்த இலக்கணக் கலைஞர் அம்மொழிக்குரிய எழுத்துக்களை மட்டும் சுட்டிச் சென்றிருக்கலாம். ஆனால் அக்கலைஞர் சமசுகிருத மொழிக்குரிய எழுத்துக்கள் ஐம்பது என்றும், பிராகிருதத்துக்குரிய எழுத்துக்கள் நாற்பது என்றும், தெலுங்கு மொழிக்குரிய எழுத்துக்கள் முப்பத்தாறு என்றும், தெலுங்குமொழிக்குச் சமசுகிருதச் சமமாக வந்த எழுத்துக்கள் இவை என்றும் கூறுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டால் அம்மொழி கடன் பெறுவதால் தழைக்கிறதா? இல்லை வீழ்கின்றதா? என்பதைப் புரிந்து கொள்ளவியலும்.
நிறைவாக, ஒரு மொழி தம்மொழியில் இல்லாத சொற்களையோ பொருளையோ கடன் பெறலாம். அதனைத் தற்சமம் அல்லது தற்பவம் வடிவங்களில் தம்மொழி இயல்பிற்குத்தக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால், தாக்கத்தை ஏற்படுத்தும் மொழியின் எழுத்துக்களைக் கடன் பெற்றால் அக்கொடைமொழியின் சொற்கள் மட்டுமே பெரிதும் கொள்மொழியில் இடம்பெறும். இது காலப்போக்கில் கொடைமொழிக்குரியதாகவே கருதப்பெறும் என்பது வெளிப்படை. இதனை,
தென்னிந்தியத் திராவிட மொழிகளில் தமிழ் தனக்கென ஒரு மரபைக் கொண்டுள்ளது. சமஸ்கிருதம் பகுப்பாய்வு முறைகளைச் சிலபோது கையாண்டாலும் அது தமிழ் இலக்கணத்தை விளக்குவதில் தன்னிறைவு பெற்றதாக உள்ளது. பிற திராவிட மொழிகள் குறித்து முற்காலத்தே எழுதப்பட்ட இலக்கண நூல்களில் அவை சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்ததாகக் கூறப்பட்டுள்ளன. தமிழில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக சமஸ்கிருத, பிராகிருதச் சொற்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் காணப்படுவதும், சமஸ்கிருத ஒலியமைப்போடு கூடிய அவற்றின் நெடுங்கணக்கு முறையும் இத்தகைய கருத்துக்கான உந்து சக்திகளாகக் கூடும் (2007:93)
தமிழெழுத்து மாற்றம் தேவையில்லை. மாற்றின் தமிழின் தனி நிலைமையே மாறிவிடும் (இரா. இளங்குமரன் [தொகுப்.], 2009:152)
எழுத்து மாற்றத்திற்கு இடந்தரவே கூடாது. அது பிற்காலத்தில் தமிழ்க் கேட்டுக்கே வழிகாட்டும் (இரா. இளங்குமரன்[தொகுப்.], 2009: 289)
தமிழ்மொழி அயலொலியாற் கெடுமேயன்றி அயல்வரியாற் கெடாது. அயல் ஒலியைப் பயன்படுத்தும் வரையில் அதைக் குறிக்கும் வரி எது வந்தாலும் ஒன்றுதான்.
ஆய்த ஒலியைத் தவறான வழியிற் பயன்படுத்துவதனால் அதன் இயல்பான ஒலியும் கெடுகின்றது. கஃசு என்பதை Kஅக்சு என்றொலிப்பதா? கஷூ (Kஅக்சு) என்றொலிப்பதா? (இரா. இளங்குமரன்[தொகுப்.], 2009: 216) 
எனவரும் கருத்துகள் உறுதிப் படுத்துகின்றன. ஆக, எழுத்துக்கடன் கொள்மொழியின் அடிச்சுவடே இல்லாது ஆக்கிவிடும் என்பதை நன்கு உணர்ந்த தெலுங்கு இலக்கணக் கலைஞர்கள் தம்மொழிக்கும் பிறமொழிக்கும் உள்ள சிறப்பெழுத்துக்களைச் சுட்டிக் காட்டுவதின்வழி அறிய முடிகின்றது.
துணைநின்றன
1. அக்னி புத்திரன் எல்.கே., 2009, தமிழ்மொழி வரலாறும் திராவிட மொழி ஒப்பிலக்கணமும், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
2. அறவாணன் க.ப., 2006, தமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம், தமிழ்க் கோட்டம், சென்னை.
3. இளங்குமரன் இரா. (தொகுப்.), 2009, பாவாணர் கடிதங்கள் – பாடல்கள், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
4. இளவழகன் கோ. (பதிப்.), 2003, தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
5. சின்னயசூரி பரவத்து, 2002, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.
6. சுந்தரம் இராம., 2007, திராவிடச் சான்று, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
7. சுப்பிரமணியன் ச.வே. (பதிப்), 2009, தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
8. தாமோதரன் அ. (பதிப்.), 1998, நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
9. தேவநேயப் பாவாணர் ஞா., 2009, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? தமிழ் கடன் கொண்டு தழைக்குமா?, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
 

 

 
Related News
 • போரும் இலக்கியமும் 2

 • தலித் பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தலித் இலக்கியக் குரல்கள்

 • எல்லீசர் தமிழாய்வு முன்னோடி

 • நீரற்றது கடல் நிலமற்றது தமிழ்

 • போரும் இலக்கியமும் 1
 •   
    
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World