Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



ராஜலெட்சுமி கவிதைகள்
 

1. தொலைத்த பொழுது

என் நினைவுகளின்
இடுக்குகளை
கிழித்தெறிந்துவிட்டு
சென்றிருக்கிறது
சில கூர் அம்புகள்
எதன்
பொருட்டும்
நிகழ்ந்திருக்கத் தேவையற்று.

உன்னையும் என்னையும்
தொடரும் என்றும்
வடுக்கள்.

வழிந்தோடும்
குருதித் துளிகளோடு
இடர் நிறை
பயணம்
விட்டுச் சென்றிருக்கிறது
வாசம் நிறைந்த
ஓரிரண்டு மலர்களையும்
கண்களுக்குள்
நிறைந்து உறுத்தும்
உடைந்து சிதறிய
பிடியளவு
கண்ணாடித் துகள்களையும்,..

2. அழைப்பு

ஒவ்வொரு ஆண்டும்
முதல் நாள் வரை
நினைவிருக்கும்
உன் பிறந்த நாள்

சுழன்றடிக்கும்
காற்றின் சீற்றமாய்
ஓய்ந்து போகிறது
வாசம்

கழிந்த பொழுதின்
எச்சம் பூசியிருக்கும்
விடியலின் சுவர்களில்,..

எதைச் சொல்வது
காரணங்களைத் தேடி அலையும்

அலைபேசியின்
அனைத்து நரம்புகளும்
செயலற்றுவிட்டதாக...

தொடர்ந்து ஒரு நாளோடும்
அதன் பொழுதுகளோடும்
நான்.


3. நிகழ்வு

தொடர்ந்து விவாதிக்கிறேன்,..
காலம் குறித்தும்
காலத்தின் சிறு துளைகள் குறித்தும்...

வேர்விட்ட பிசிருகளும்...
சுமத்தலின் ஊடாகவே
நகர்கிறது,..

பதியனிடப்படாத
சில கிளைகள்
வேலியோரம்
சரிந்து கிடக்கும்

சுவாசத்தின்
சாத்தியங்கள் ஏதுமற்று,..

நிகழ்வின்
அடையாளம் மறுதலிப்பின் ஊடாகவே
உறைந்திருக்கும்

சொல்லாமல்
தீண்டிச் செல்லும்
இதமான காற்று

 4. பயணம்

உன்னோடான
என் பயணம்
தொடர்கிறது,..

நதிகளில் குளிர்வித்தும்
காடுகளில் பாதுகாத்தும்
மலைகளில் சுவாசம் தந்தும்
அழைத்துச் செல்கிறாய்.

நிறைவு ததும்பும் வழிகளில்
மிருகங்களின் நடமாட்டம்
கூடுதலாய் நிகழ்கிறது.

மோப்பம் கொண்டு
ஆளை வீழ்த்தும்
இவை அச்சத்திற்குரியவை..

இருந்தும் தொடர்கிறது
புலர் காலைப்பொழுதின்
உதயத்தைப் போன்று
நம் பயணம்...,

 
Related News
  • தேய்ந்த இருக்கை

  •   
     

    உங்கள் பெயர் *
      தமிழில் தட்டச்சு செய்ய
    உங்கள் கருத்துக்கள் *
    மின்னஞ்சல் முகவரி *

     

    Comments
     
     
     
    Head Image
    முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

     Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

    Designed and Hosted by Info World