Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueதஞ்சாவூர் கவிராயர் கவிதைகள்
 

 இறை வணக்கம் 

 
 
விரும்பியதெல்லாம்
கிடக்காதிருக்க 
வரம்தர வேண்டும்
இறைவா 
 
நான் 
விரும்பியதெல்லாம்
என்னை விரும்புமா
என்பதென் கேள்வி
இறைவா
 
நீண்டநாள் வாழ 
அருள்தர வேண்டாம் 
காலனை அனுப்பிவை
இறைவா
 
இறப்பை 
ஒத்திப்போடும் வாழ்க்கையில் 
எனக்கு
உடன் பாடில்லை இறைவா
 
நிம்மதியான வாழ்க்கையை
எனக்கு
அளித்திட வேண்டாம் இறைவா
 
நிம்மதிக்காக பலர்
ஏங்கி நிற்கையில் 
நிம்மதித் தீவினில்
நான் மட்டும் நிற்பது
நியாயமோ சொல்லுநீ
இறைவா?
 
ஏழைகள் ஆயிரம்
வரிசையில் நிற்கிறார்
உன்
தரிசனம் வேண்டியே
இறைவா
 
ஆயிரம் ரூபாய்
கட்டினால் காணலாம்
என்பதே விதி எனில்
உன்
தரிசனம் வேண்டாம்
இறைவா
 
அணிலின் அரசியல்
 
சீதையை மீட்டாயிற்று
இராவணனும்
செத்துப் போய்விட்டான்
இராமனும்
அயோத்தி திரும்பி விட்டான்
 
பரதன் இராமனிடம்
பாதுகைகளைத்
திருப்பிக் கொடுத்துவிட்டான்
லட்சுமணன்
வில்லைத் துடைத்து
பொழுது போக்குகிறான்
 
மர உரிகள்
அரண்மனை மொட்டை மாடியில்
காய்கின்றன
அநுமன், இலங்கையை 
எரித்ததால் தீப்பிடித்த வாலுக்கு
வைத்தியம் பார்க்க போய்விட்டான்
 
எங்கள் வீட்டுத் 
தென்னை மரத்தின்
அணில்கள் மட்டும் இன்னும்
வருவோர் போவோரிடமெல்லாம்
முதுகைக்காட்டி
கூச்சல் போடுவதைத்தான்
தாங்க முடியவில்லை
என்னால்
 
மிமிக்ரி கிளி
 
மிமிக்ரி பண்ணும்
கிளியொன்று வாங்கினேன்
சல்லிசான விலையில் ஒரு
நாட்டுப் புறத்தானிடம் 
வந்தமுதல் நாளே என்னோடு
ஒட்டிக்கொண்டுவிட்டது அது.
மேலும் கீழும் ஒருச்சாய்த்தும்
ஒரு டாக்டர் போல என்னை
பார்த்துக் கொண்டே இருந்தது
என்னொடு சாப்பிட்டது
ஊர் சுற்றியது
என்னொடு படுத்துக் கொண்டது
 
மறுநாள் எழுந்ததும் 
உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு என்றுகத்தி
என் மானத்தை வாங்கியது
என் குரலுக்குள் மனைவிக்குத் தெரியாமல்
ஒளிந்திருந்த என்பாசாங்குகளை பெரிதுபடுத்தி
பலமாகக் கூச்சலிட்டது
 
ஏய் சும்மா இரு என்று கையை
ஓங்கினேன் கோபத்துடன்
ஐயா வணக்கம்
ஐயா வணக்கம் என்று
என்னை மாதிரியே பொய்ப்பணிவு காட்டி
தலை வணங்கியது- அதை
 
அலுவலகம் அழைத்துச் சென்றது
தப்பாகிவிட்டது
நண்பன் ஒருவன் தலையில்
கட்டிவிட வேண்டியதுதான் இந்தக்கிளியை
என்று செல்லை அமுக்கினேன்
கிளி கத்தியது தோளில் இருந்து 
ஹலோ எங்க இருக்கீங்க?
ஹலோ எங்க இருக்கீங்க?
 
சனியனே என்று உதறினேன்
மேடம் ரொம்ப அழகா இருக்கிங்க
மேடம் ரொம்ப அழகா இருக்கீங்க
என்று கத்திக் கொண்டே
சுற்றி வந்தது வீட்டை
 
கவலை மீன்
 
கவலைமீன் வாங்கலியோ 
கவலைமீன் என்று 
தெருவோடு
விற்றுக்கொண்டு போனாள் மீன்காரி
கவலைமீன் என்ற பெயர் பிடித்தது எனக்கு
மீனைவிட
 
வறுத்து கொளம்பு வச்சி
சாப்டீங்கன்னா
வாய்க்கு ஒணக்கையா இருக்கும்
இந்த மழக்கி-என்றாள் மீன்காரி
 
கவலைகளை எல்லாம் மீனாக்கி
அப்படியே வறுத்துச் சாப்பிட்டுவிட்டால்
எப்படி இருக்கும் என்று யோசித்தேன் நான்
 
கவலைமீன் பெயர்க்காரணம் குறித்து 
எனக்குள் ஓடியது ஒரு கற்பனை
கூடைக்குள் விற்காமல் கிடந்த 
மீன்களைப் பார்த்துக் கவலைப்பட்டு
கவலைமீன் என்ற பெயரிட்டிருப்பாள்
எவளோ ஒரு மீன்காரி.
 
மனக்குளத்தில் நீந்தும்
கவலை மீன்களைப் பிடிக்கும்
தூண்டில் எங்கே கிடைக்கும்?
 
கவலை மீன்களுக்குப் பஞ்சமே இல்லை
ஒவ்வொருவர் வீட்டிலும்
 
எங்கள் வீட்டிலும் கவலைமீன்கள் உண்டு 
தெருத்தெருவாய் கொண்டு போய்
விற்றுவிட்டு வருகிறாயா என்று கேட்டேன் 
அவளிடம்
 
உங்கள் கவலைமீன்களை
நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள்
என்று சொல்லிவிட்டு
சிரித்துக் கொண்டே போய்விட்டாள்
மீன்காரி
 
குழந்தை பேசட்டும்
 
அதற்குள் கற்றுக் கொடுத்துவிடாதீர்கள்
வாய்ப்பாடுகளை  குழந்தைக்கு
 
குழந்தை பேசட்டும் 
நர்சரி ரைம்களைச் சொல்லிக்கொடுத்து
மாற்றிவிடாதீர்கள் அவர்களை
நடைபாதைக் கிளிகளாக
 
குச்சி ஒன்றின் நுனியில் 
துருத்திய பிசிறைக்காட்டி 
குச்சியின் பாதம் என்று சொல்லி 
குதூகலித்தது பக்கத்து வீட்டுக் குழந்தை
 
குச்சியை வைத்துக்கொண்டு
நடக்கலாம் என்பீர்கள்
குச்சியே  நடக்க வேண்டும் என்று
ஆசைப்படுகிறது குழந்தை
 
இதனினும் பெரிய ஞானதீட்சையை
எங்கே பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?
வீட்டின் எண்ணைக் குறிப்பிட்டு
வழிகேட்ட என்னிடம்
வீட்டின் அடையாளமாய் வீட்டுக்குமேலே
ஒரு மேகம் இருக்கும் துதிக்கையுடன் 
யானைமாதிரி என்று அடையாளம் சொன்னது 
மற்றொரு குழந்தை
இதனினும் சிறந்த கவிதையை
யார் எழுதிவிடப் போகிறார்கள்?
 
குழந்தை பேசட்டும்
அதற்குள் கற்றுக்கொடுத்து விடாதீர்கள் 
வாய்பாடுகளை
குழந்தைக்கு
 
காணாமல் போன என் கவிதைகள் குறித்து 
 
காணாமல் போன என் 
கவிதைகள் குறித்து 
நான் கவலைப்படுவதே இல்லை
அவை 
காணாமல் போனவையாகவே இருக்கட்டும்
 
காணாமல் போகாத 
கவிதைகள் குறித்தே நான் 
கவலைப்படுகிறேன்
 
அவை சுற்றிவருகின்றன
என்னை எப்போதும்
 
காதைப் பிளக்கும்
கைதட்டல்களைப் 
பெற்ற அக்கவிதைகள்
விழா முடிந்த பிறகும்
வெகுநாட்கள் எனைச்சுற்றி வந்து 
கைதட்டுகின்றன
 
இலக்கிய அன்பர்கள் பலர் 
அவற்றைக் காணாமல் போகாமல்
காப்பாற்றி வருகின்றனர்
மேடைகளில் மேற்கொள் காட்டி
 
ஒரு பறவைமாதிரி 
றெக்கை முளைத்ததும்
பறந்துவிட வேண்டும் கவிதைகள் 
படைத்தவனை விட்டு
 
சரசு துணி துவைக்கிறார்
 
அக்கறை இல்லாத
அப்பாவில் சட்டையை
அடித்துப்  பிழிந்தாள்
 
வெட்டியா ஊர்சுற்றும்
அண்ணனின் பேண்ட்டை 
ஓங்கி போட்டாள் ஓ
ஒருபோடு
 
பொழுதெல்லாம் கையில் 
செல்லுடன் திரியும் தங்கையின் சுடிதாரை
கசக்கினாள் முறுக்கினாள் 
அழுக்குதொலையட்டும் என்று
 
அடுக்களையில் ஜடமாக 
பொழுதெல்லாம் வேகும் 
அம்மாவின் புடவையை
உலுக்குவது போல் கசக்கினாள்
 
தன்னுடைய ஆடைகளை மட்டும் 
ஓங்கி அடித்தாள் துவைகல்லில் 
ஊருக்குப் போய் லெட்டர் போடாதவர்களின்
முகங்களாய் நினைத்து 
ஆம்
சரசு துணி துவைக்கிறாள்
 
குழந்தைகள் பள்ளி
 
குழதைகள் பள்ளிக்கு 
சுவர்கள் கூடாது
மரங்களே போதும்
 
ரோஜாப்பாத்திகளை 
வகுப்பறையாக
வையுங்கள்
 
தூங்குகிற குழந்தைகளை 
தண்டிக்காதீர்கள்
அவர்களின் கனவில் வருவதை
நீங்கள் 
கற்றுத்தரவே முடியாது
 
ஒரு செடியில் எத்தனைப் 
பூக்கள் உள்ளன
என்பதுதான் 
எண்ணிக்கைப் 
பயிற்சியாக 
இருக்க வேண்டும்
 
காக்கைகளும் குருவிகளும்
கத்துவதை கவனிப்பதுதான்
வகுப்பறை
 
கவனம்
வனத்தின் கீழ் உள்ளோம்
என்ற உணர்வை
குழந்தைகளுக்கு எவ்வாறேனும்
வரவழைத்துவிட்டால்
பள்ளியைவிட்டு வெளியேறுதல்
என்ற கேள்வியே
எழாது
 
ஆக மொத்தம்
பயில்வது
குழந்தைக்குத் தெரியாதபடி
பார்த்துக்கொள்ளுங்கள்
 
பார்க்காமல் செல்லாதீர்
 
நெடுஞ்சாலையைக் கடக்க முடியாமல்
நின்று கொண்டிருக்கிறார் ஒரு
கண் தெரியாதவர்
கையில் அலுமினியக் குச்சியுடன்
 
அழைத்துச் சென்று விட்டுவிடுங்கள் 
பத்திரமாக மறுபுறம்
 
நேரமாகிவிட்டால்
துரத்தி வரும் அங்கேயும் அந்த
அலுமினியக் குச்சி
 
விரையும் வாகனங்களுடன் கூடிய 
அந்த ஆபத்தான இடைவெளியை
எப்படிக் கடந்தாரோ என்ற
நினைவொன்று உங்களை நிலைகுலைக்கும்
 
விட்டு வந்தேனே, விட்டு வந்தேனே
என்ற அடித்துக் கொள்ளும் மனசு
பார்ப்பவர்கள் உதவுவார்கள் என்று நிற்கும் 
அவரைப்
பார்க்காமல் வந்து விட்டோமே
என்று பதறுவான்  உங்களுக்குள் இருக்கும்
அந்த பரோபகாரி
 
வேண்டாம் இந்த அவஸ்தை எல்லாம்
விட்டு விடுங்கள் அவரை 
நெடுஞ்சாலையின் மறுபுறத்தில்
 
இன்று முழுவதும் 
நீங்கள் செய்த இந்த எளிய உதவியால்
உங்கள் மனத்தை 
நிறைந்திருக்கப் பண்ணிவிட்டு
மெல்லச்
செல்லட்டும் அவர்
 
அன்பு மகளே 
 
அன்பு மகளே
இப்படிதான் இருக்கும் 
வாழ்க்கை
சோர்ந்துவிடாதே
யாரும் கேட்காவிட்டலும்
கொடுத்துக் கொண்டே இரு அன்பை
 
அள்ள அள்ளக் 
குறையாதது அதுமட்டும் தான் 
கிடைத்ததைக் கொண்டு
மகிழ்வாயாக
 
கிடைத்துக் கொண்டே இருக்கும்
உற்சாகம்தான் உனக்கு உணவு
 
கற்பதை என்றும்
கைவிட்டு விடாதே
ஆபரணமும் அதுதான்
ஆயுதமும் அதுதான்
 
தடைகளை
உடையாக்கி அணிந்து 
கொள்
 
அநுபவம் சேகரி 
 
தேடிச்செல்
எளியோரிடமும் முதியோரிடம்
 
பற்றிக்கொள் அவர்களின்
நடுங்கும் கைகளை
 
ஆதுரத்துடன்
நினைத்துக்கொள் 
வாழ்கையை ஒரு
நீண்ட ரயில் பயணம் என
 
நிற்பவருக்கு இடம் கொடு
பகிர்ந்து கொள் சிற்றுண்டியை
பக்கத்தில் இருப்பவரோடு
 
பாதுகாத்துக்கொள்
உன் உடைமைகளை
பத்திரமாக
 
அதே வேளையில்
ரயிலின்
சாளரச் சதுரங்கள்
வழியே விரையும்
வாழ்கையைத்
தவற
விட்டுவிடாதே.
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World