Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueகோ. கலியமூர்த்தி கவிதைகள்
 

 

நமது காலத்தின் கதை

அறுபடும் கோழிகளின்
அலறல்களோடு தொடங்குகின்றன
முன் நாட்களில் சேவல்கூவி விடிந்த அதிகாலைகள்
 
விலுக் விலுக் எனத்துடிக்கும் உடல்களை
செய்தித்தாளில் மேய்ந்தபடி
பருகுகிறோம் கோப்பைகளில் பதட்டமின்றி
சூடான ரத்தத்தை.
 
தொலைக்காட்சித் தொடர்களால்
காயடிக்கப்பட்டுவிட்ட கண்ணீர்ச்சுரப்பிகள்முன்
வீரியமிழந்து துவள்கிறது
வெங்காயம்.
 
கணினித்திரைகளின் முன்
குழந்தைகள்
பட்டென்று முதிர்கிறார்கள்
சட்டென்று உதிர்கிறார்கள்
 
வடைதிருடும் காக்கைகள்
மரம்தேடி அலைய
கதை சொன்ன பாட்டிகள்
காப்பகங்களில் முடங்க 
நரிகள் மட்டுமே ஊளையிட்டலைவதே
நமது காலத்தின் கதையா?
கொதிக்கும் குழம்பின் நறுமணத்தில்
கோழியின் அலறலை மறந்துவிட்டதா
வயிற்றிடம் தோற்ற மனம்?
 
அறத்தைப்புசிக்கும் பிழைப்பின் அலகுகள்
சொல்லத் துவங்கிவிட்டேன் நானும்
சிட்டுகுருவியினம் அழிந்ததற்கும்
செல்போன் டவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றும்
அணுஉலைகளால் ஆபத்தே இல்லை என்றும்
பலலட்சம் பேருக்கு அவை
வாழ்வளிக்கும் என்றும்.
 
சிங்கங்களின் பசிதீர்க்கவே
மான்கள்
கடவுளால் படைக்கப்பட்டன எனவும்,
வலியதே வாழும்
அதுவே இயற்கையின் நியதி எனவும்
 
தடிப்பேற்றியிருக்கிறது தோலில்
குழந்தைமையின் புன்னகையை
உதிரவைத்த காலம்,
 
தந்திரமே அறிவாய்
மாறிவிட்ட வெளியில்
அறத்தைப் புசிக்கும் பிழைக்கும் அலகுகள்
கடைசித்துளி கருணையையும்
உறிஞ்சிவிட்டது
நகரம் பரிசளித்த நம்பிக்கை வறட்சி
 
குற்றவுணர்ச்சி
கொல்லவரும்போது
ஒளிந்துகொள்கிறேன் ஓடி
ஒரு கனவுக்குள்
அல்லது கவிதைக்குள்
 
கனவும்கவிதையும்
கனலாய்க் கொதிக்க
வெளியேறுகிறேன் தலைகுனிந்து
எனக்குள்ளிருந்து.
 
உலகு
கூண்டோ வானமோ
கிடைத்துவிடுகிறது
பறவைகளுக்குத் தீனி
 
காடோ காட்சிசாலையோ
விலங்குகளுக்கும்
கிடைத்து விடுகிறது இரை
 
மழைக்கால எறும்புகளுக்கும்
கோடைக்கால எலிகளுக்கும்
சேமிப்பில் இருக்கிறது உணவு
 
கல்லுக்குள் தேரைக்கும்
கடவுள் அளிப்பாராம்.
 
பசிபசி என அலைகிறது
பசித்த மானுடம்.
 
ரசாயன மாற்றம்
 
புனிதமாய்தான் இருந்தது
புறப்பட்டபோது
நம்மோடு சேர்ந்தபின் தான்
நாசமாய்ப் போயிற்று 
நதி.
 
ஞானபூமி
வெட்டப்பட்ட ஏகலைவனின் கட்டைவிரல்
மதுரைவீரனின் மாறுகால் மாறுகை 
கழுவேற்றப்பட்ட காத்தவராயனின் பிதுங்கிய விழிகள்
மலம் திணிக்கப்பட்ட திண்ணியத்தின் வாய்
மூத்திரம் பீய்ச்சப்பட்ட முகம்
மலமள்ளுவோரின் மரத்துப்போன மூக்கு
சவுக்கடி பட்ட முதுகு
சாணிப்பால் புகட்டப்பட்ட தொண்டை
நந்தனை எரித்த ஆதிநெருப்பில்
வெந்து கருகிய வெண்மணி உடல்கள்
 
காணாதது போல
கண்மூடி செவிமூடி
அஹம் பிரம்மாஸ்மி
அன்பே சிவம் என
உளறிக்கொண்டிருக்கிறது
அழுகிய மூளை.
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World