Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஈரோட்டுக்கு சென்னைக்கும்
 
 ஆ.மீ.ஜவஹர்


உனக்கு 
வெறும் வானம்
எனக்கு
சாயம் போன 
வானவில்

நில முலையில்
கடல் குடிக்கும்
பால்
உனக்கு
ஓடும் ஆறு

செருப்பில்லாமல்
புல்தரையில் நடக்க
உனக்கு
கால் மட்டும் கூசும்
எனக்கு மனசும்

குட்டையில்
தேங்கிய நீரில்
நீ உன் முகம் பார்த்து
தலை கோதுவாய்
மல்லாந்து கிடக்கும்
பரந்த ஆகாயத்தை
பார்த்து வியப்பேன் நான்

கையில் ரிமோட்டோடு
நீ சின்னத்திரை முன்பாக
இருக்கும்போது
மெழுகுவர்த்தியின் கீழ்
ஒருபேனாவோடும்
டைரியோடும்
என்னுடைய இரவு கழியும்

தீக்குச்சியின் உரசலில்
பற்றியெரியும்போது
உனக்கு நெருப்புதான் தெரியும்
என் செவியை
சுடும்
உள்ளே வெடிக்கும்
மரத்துண்டுகளின்
மரண ஓலம்

பகுதி நேரத்தில்
பொழுதைப் போக்குவது
உன்னுடையது
பகுதி நேரத்தில்
சம்பாதிப்பது என்னுடையது 

எழுதுகோலை 
மூடிவைத்தால்
உனக்கு ஓய்வு
ஓய்வு நேரத்தில்
என் எழுதுகோலை
ஓயவிடுவதில்லை நான்

ஈரோட்டுக்கும் 
சென்னைக்குமான தூரம்
400 கி.மீ என்று மிகத் 
துள்ளியமாக சொல்வாய் நீ
அது எனக்கு
400 பக்க புத்தகத்தை வாசிப்பதற்கான இடைவெளி

விமானத்தில்
பயணிக்க வேண்டுமென்பது
உனது நெடுநாளைய ஆசை
எனக்கு
இரண்டு சிறகுகள் போதும்

அதனதன் இடத்தில் 
உனது அறைப் பொருட்கள்
அப்படி என் அறை இருந்திருந்தால்
எப்பொழுதோ கிடைத்திருக்கும்
உன்னிடம் இரவல் வாங்கிய
நகவெட்டி

நாம் இருவருமே செல்கிறோம்
பழைய புத்தகக் கடைக்கு
நான் வாங்குகிறேன்
நீ விற்கிறாய்

வீட்டுக் கடனுக்காக
உன்னுடைய வருமானத்தின்
ஒரு பகுதி
வங்கிக்குச் செல்லும்
அதே அளவில் 
என்னுடைய வாடகை வீட்டின்
அலமாரியைப் புத்தகங்கள்
அலங்கரிக்கும்

சின்னத்திரையில் கூட 
நாம் வேறுபட்டு நிற்கிறோம்
நான் படைப்பாளியாகவும்
நீ பார்வையாளனாகவும்

இரவில் மின்சாரம்
தடைப்பட்டதும்
நீ வெளியே வருவாய்
காற்று வாங்க
நானும் வருவேன்
நிலவொளியில் காய
இலக்கிய நண்பர்களோடு
கருத்து பகிர்விலோ
விமர்சனக் கூட்டத்திலோ
என்னுடைய விடுமுறை கழியும்போது
சொந்த ஊரில்
நீ குடும்பத்தோடு
குலதெய்வத்திற்காக
ஆடு வெட்டிக் கொண்டிருப்பாய்

சமூகத்தின் பார்வையில்
நீ பிழைக்கத் தெரிந்தவன்
நான் பிழையானவன்

கடும் தண்டனை என்பது
சிறையில் அடைப்பதல்ல
அங்கே
நம்மிருவரையும் 
ஒன்றாக வைப்பதுதான்

பிறத்தலுக்கும் இறத்தலுக்கும்
இடையில்
இருந்துவிட்டுப் போகும்
சராசரி மனிதன் நீ
இறப்புக்குப் பிறகும்
சராசரிக்குள் சிக்காத 
யுகக் கவிஞன் நான் !
 
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World