Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueபொது நிலவெளியும்
வேறொரு மனவெளியும்
 

தமிழிலக்கியம் காலச்சூழலுக்கு ஏற்ப தம் போக்கில் மாற்றங்களைக் கொண்டியங்கி வருகிறது. பக்தியையும் தனி மனிதனையும் போற்றிய படைப்பிலக்கியம் பெரியாரின் இயக்கச் செயல்பாட்டிற்குப் பிறகு ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி திரும்பியது எனலாம். ஒடுக்கப்பட்ட மக்களுள் மிகப் பெரும்பான்மையைக் கொண்டவர்கள் பெண்கள். அப்பெண்களைப் பற்றி படைக்கப்பட்ட காலம் கடந்து, பெண்களே இலக்கியத்தினை படைக்கும் காலமாகி விட்டது இன்று. இது ஒரு ஆரோக்கியச் சூழலாகும். ஒரு படைப்பாக்கத்தினை அம் மொழியிலிருந்து வேறு மொழிக்கு மொழி பெயர்க்கும் பொழுது மூல மொழியின் செறிவு மொழிபெயர்ப்பில் குறைவே. அதுபோன்றே பெண்ணுரிமைப் பற்றியும், பெண் சிக்கலைப் பற்றியும் ஆண் எவ்வளவு ஈடுபாட்டோடு எழுதினாலும் அது மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான சாரத்தையே தரும். ஆனால் பெண் எழுதும் போது வலிமை கூடுகிறது. சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் 20 பேர்களது சிறுகதைகளை பாலு மணிமாறன் தொகுத்து வெளியிட்டிருக்கும் 'வேறோரு மனவெளி நூல் பற்றி ஆய்கிறது. இக்கட்டுரை தமிழ்ச் சூழலில் உருவாகும் பெண் படைப்புகளுக்கும் நிறைய வேறுபாடுகளைக் காண முடிகின்றது.

எடுத்துக்காட்டாக, சிவஸ்ரீ எழுதிய 'பொழப்பு' சிறுகதை சிங்கப்பூர் சூழலுக்கே உரித்தான ஒன்று. பொருளாதாரச் சூழல் காரணமாக தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்ணின் வாழ்வு முறையைப் படம் பிடிக்கிறது. வீட்டு வேலை செய்யும் பெண் தானே கூறுவது போன்ற கதை உத்தி நன்று. எவ்வித சாயமும் இல்லாமல் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மொழியிலேயே கதை அமைந்தது கதையின் (எதார்த்தத்தை) இயல்பைக் கூட்டுகிறது. பாவேந்தரின் 'குடும்ப விளக்கு' நூலில் குடும்பத் தலைவியின் ஒரு நாள் வேலையைப் படம் பிடித்துக் காட்டுவார். அதுபோன்று சிவஸ்ரீயும் தன் 'பொழப்பு' சிறுகதையில் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் ஒரு நாள் வேலையை அப்பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண்ணிடம் கூறுவது போல அமைத்துள்ளார்.

"காஸ் அடுப்புத் திருகுறதுலேந்து, ஆவி, எண்ணைலாம் உறிஞ்சிக்கிற மேம்பலகையத் தட்டிவிட்டுக்கனும் கிறதுலிருந்து, தொவைக்கிற மிஷின்ல எந்தத் துணியோட எந்தத் துணியைப் போடக் கூடாது. வெலக்கிக் கழுவுற மிஷின்ல சாமான, நம்மளே சுத்தமாகக் கழுவிட்டுத் தான் வைக்கனுங்கிறதெல்ல்லாம் பேசிகிட்டேத்தான் சொல்லிக் குடுப்பேன். காலைல தோச ஊத்தி, சட்னி வச்சு சின்னண்ணனுக்கும் சின்னக்காவுக்கும் ஊர்லேருந்து வந்திருந்த சின்னாகாவோட மாமனார்க்கும், குடும் கயில, மீகொரிங் கிண்டித் தம்பிக்குக் குடும்கயில, பெரியண்ணனுக்குக் கிஸ்மிஸ் போட்டு ஓட்ஸ் காச்சிக் குடுக்கயில, பெரியக்காவுக்குக் கொழுப்பெடுத்த வெண்ண தடவி உப்புப் போடாம அவிச்ச ப்ரக்கோலொய வச்சு மூடி வாட்டுன கோதும ரொட்டியக் குடுக்கையில், புள்ளைகளுக்கு ஸ்த்ராபெரி பால்ல 'கார்ன்' ப்ளேக்ஸ்போட்டு ஊடிவிட்டு, ஸ்கூல்ல கொண்டே விட்டுட்டு ஓடியாந்து விட்ட மோப்போடையிலலாம் அரக்கப்பரக்கத்தான் பேசுவேன்.

அப்புறம் வந்து டிங்கிரி மீன ஒரசி, செதிலெடுத்துச் சுத்தம் பண்ணி, அவிச்சு உதுத்து, கெழங்கோட பெசறி கட்லெட்டத் தட்டியெடுத்து, முட்டச் சம்பால்ல பாம்ப்ரெட்டு மீனப் பொறிச்சுப் போட்டு, தம்பிக்கிக் கோழிய வெள்ளப் பெப்பர் போட்டுக் கேயெப்சிக் கணக்கா வறுத்து, நெத்திலியோட வேர்க்கடலயும் பரங்கிவெதையும் மல்லிப்பொடியும் போட்டு வறுத்து, லெட்யூனஸயும் பொன்னாங்கண்ணியும் போட்டு சூப்புவச்சு, பாண்டா எலையும் வெள்ள பெருங்காயமும் வதக்கிப்போட்டு நெய்சோறு பொங்கி, பெருங்காயம் போட்டு மோரத் தாளிச்சு, பீங்கான் கிண்ணத்துல சின்னஞ்சின்னமாச் சீவுன பழங்களைப் போட்டு, அதுமேல பாலைஸ்க்ரீமக் கிள்ளி வச்சு, ஒவ்வொருத்தரா வரவரப் பரிமாறிக்கிறிமாறி, புள்ளைகளப் பள்ளிக்கொடத்துலேந்து கூட்டியாந்து ஊட்டி விட்டு, தட்டு முட்டெல்லாம் கழுவித் தொடச்சு, ஒரு மூணு மணிவாக்குல சாப்ட ஒக்காரவரைக்கிப் பசிமயக்கமும் திமுதிமுனு குமறி நிக்கிற வேர்வையும் கண்ணுமூக்கெல்லாம் பட்டுக்காந்துற மொளகாப்பொடி நெடியுமாக் கொஞ்சம் மிதமா, விட்டு விட்டுதம் பேசுவேன்.

திரும்பச் சாய்ந்திரச் கோப்பி, தே, மைலோ பிரெஞ்சுப்ரைஸ், வாழப்பூ வட, நக்கெட்ஸ், சுறாப்புட்டுன்னு தடபுடலாப் பொரியும் பேச்சு. அப்புறமாக் காஞ்ச துணிமணிய உள்ள எடுத்தாந்து அயன்பண்ணி அடுக்கையிலேயும் அப்படான்னு கால நீட்டி ஒக்காந்து ராத்திரிக்கு ரொட்டிப் பராட்டாவுக்கு மாவு பெசையயிலயும் தான் ஆறாமரக்கப் பேசுவேன்" என்று அப்பெண் கூறுவது படிப்பவர்களுக்கே மூச்சு முட்டுகிறது. வேலை மட்டுமில்லாமல் அவர்களின் மீது முதலாளிவர்க்கத்தால் நிகழ்த்தப்படும் கொடுமையும் பதிவு செய்கிறார். சின்னக்காவும் பெரியக்காவும் ஏசிகிட்டுத்தான் இருப்பாங்க, கண்ணுமண்ணு தெரியாமக் கோவம் வரையில மட்டும் ரெண்டு தட்டுத்தட்டுவாங்க... பொழைக்க வந்தவுக அதெல்லாம் பெரிசு பண்ணாக்கூடாதுலனு கேட்டேன்"என்று பிழைப்பிற்காக பொறுத்துப் போகும் மனப்பான்மையைக் காண முடிகிறது.
 

மேலும் இக்கதையில் புதிதாக வீட்டு வேலைக்கு வரும் பெண்ணுக்கும், அவ்வீட்டின் குடும்பத்தலைவனுக்கமான பாலியல் உறவால் இறுதியில் பாதிக்கப்பட்டு வேலையிழப்பது அப்பெண்ணே. தவறு இருபாலரிடமும் இருப்பின் தண்டனை ஆதிக்க வர்க்கத்துக்குக் கிடையாது. கூலியடிமையாக அதிலும் குறிப்பாக பெண்ணாக இருந்தால் அவளுக்கே உரித்தாகிறது என்பது இக்கதையின் வாயிலாக புலப்படுத்தப்படுகிறது.

ஜெயந்தி சங்கர் எழுதிய 'நுடம்' சிங்கப்பூர் மட்டுமின்றி தமிழகச் சூழலுக்கும் ஒத்துப் போகிற சிக்கலை மையமாகக் கொண்டுள்ளது. இக்கதை, பொருளாதாரக் காரணத்தாலும், படித்தப் படிப்பை வீணாக்கக் கூடாது என்ற காரணத்தாலும் வேலைக்குப் போகும் திருமணமான பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் சிக்கலைச் சித்திரிக்கிறது. "பொருளியல் விடுதலை இன்றி பொன்னுக்கு முழுமையான விடுதலை சாத்தியமில்லை" என்பார் பெரியார். அதில் உண்மை இருப்பினும், இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தை பராமரிப்பு என்பது எவ்வளவு சாத்தியம் என்பது குறித்தும் சிந்திக்கத் தூண்டுகிறது. பெண் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு பொருளியல் சார்ந்த சிக்கல்கள் ஏற்படாதென்பது உண்மைதான். இருப்பினும், குழந்தைகளுக்கே உரிய அகம் சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யமுடிவதில்லை என்பதும் உண்மை. இக்கதையில் நேவறா என்ற ஆறு வயது சிறுமி, வயதுக்கு அதிகமான முரட்டுத் தனமும், பிடிவாதமும், புதுக்காலணிகளைக் கண்டால் அவற்றைக் கிழித்தெறிவதும், படம்வரையும் போது எப்பொழுதுமே தன் அம்மாவைக் காலில்லாமல் சக்கர நாற்காலியல் வைத்தோ வரைவது போன்ற குணத்தால் வருத்தப்படுகிறார். அக்குழந்தையின் தாய். நேவறாவை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். மருத்துவர் சோத்னை முடித்து காரணத்தைக் கூறுகிறார்.

'கால்ல ஷீ போட்டுகிட்டு அம்மா போனா அப்புறம் ரொம்ப நேரம் கழிச்சுத்தான் அம்மாவப் பார்க்க முடியும்னு அவ மனசுல ஆழமாப் பதிஞ்சிடிச்சி. ரெண்டு வயசிலேருந்து அவங்கம்மாவ மிஸ் பண்ணியிருக்கா. ஏங்கியிருக்கா அதனால அம்மாவோட கால்மேலையும் காலணி மேலையும் நேவறாவுக்கு வெறுப்பு. காலும் காலணியும் இல்லாம அவ அம்மாவப் பார்க்க நினைச்சு அதையே தன் மனசுல ஆழமாப் பதிச்சு வச்சிருக்கா. அதனாலேயே அம்மாவக் காலில்லாம அவ வரையறா. அப்படி வரையும் போது அவளுடைய ஏக்கத்துக்கு மருந்து கிடைக்கிது" என்ற மருத்துவர் அதற்கான தீர்வையும் கூறுகிறார். "வேலைய நீங்க விட்டுட்டு அவ கூடவே இருந்து, அவளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்க நிச்சயம் அவ மறப்பா, மாறுவா, உங்க மகள விட வேல ஒண்ணும் பெரிசுன்னு எனக்குத் தோணல" என்றார். அதனால் வேலையை விட அத்தாய் எண்ணுகிறார். இத்தகைய சூழல் ஆண்களுக்கு வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

மலர்விழி இளங்கோவன் எழுதிய 'புன்னகை என்ன விலை' தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றும் ஒருவரைப் பற்றிச் சித்திரிக்கிறது. துப்புரவுத் தொழிலாளியைச் சமமாக உறவு பாராட்டி மகிழ்வது தமிழகத்திலும் இல்லை. அதுபோலவே சிங்கப்பூரிலும் உறவு பாராட்டுவதில்லை என்பது இச்சிறுகதையின் மூலம் புலனாகிறது. துப்புரவுப் பணி என்றால் தமிழ் மற்றும் பங்களாதேச மக்களே பெரும்பான்மையாக இருப்பவர்கள் என்ற தகவலும் அறியமுடிகிறது. அத்தொழிலாளர்களிடம் ஒதுக்கத்தைப் பினபற்றுவதால் அவர்களிடம் இறுக்கம் காணப்படுவது இயல்பே, துப்புரவுத் தொழிலாளியான பாண்டியன் பூங்காவில் செடிகளைச் சமன் செய்யும் போது பூக்களையும் சேர்த்து வெட்டும் போதும், பூங்காவில் ஓட முயன்று ஒரு குழந்தை கீழே விழுந்த போதும் பதறித்துடிக்கிறது பெண் மனம், பெண்ணியல்புகளில் ஒன்றான தாய்மைப் பண்பு. இது பெண் எழுத்துக்களில் காண முடியும். பாண்டியனின் இச்செயலினை தன் கணவரிடம் சலித்துக் கொண்ட மனைவியிடம் "எல்லோரும் போல நீயும் மூக்கைப் பொத்திக்கிட்டுப் போயிருவேன்னு நெனச்சிருப்பான். குப்பை வண்டி போகும்போது மூக்கைப் பொத்தினால் கூடப் பரவாயில்லைங்கலாம், துப்புரவுப் பணியிலிருக்கும் ஆளுகளைப் பார்த்தாலே வேண்டா வெறுப்பாகத்தானே முகத்தைத் திருப்பிக்கிறோம். இத்தனை சுத்தமான சூழ்நிலையில் நாம வாழறதுக்கு இவங்கள மாதிரி உள்ளவங்க தான் காரணம்னு எப்பவாவது நெனைக்கிறோமா? என்னிக்காவது நீ பேசியிருக்கியா?" என்றவரின் கேள்வி யோசிக்க வைத்தது.

அப்பெண் துப்புரவுத் தொழிலாளி பாண்டியனிடம் தம்பி என அன்பாக பேசி தன்னை அக்கா என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டதிலிருந்து அவரைக் காணும் போதெல்லாம் பாண்டியனின் முகத்தில் புன்னகை மலருகிறது. எந்த வேலை செய்தாலும், அவர்களை சக மனிதர்களாக மதிக்க வேண்டிய மனித நேயத்தை அக்கதை காட்டுகிறது.

பீரம்மாள் பீர்முகம்மது எழுதிய 'உல்லாசக் கடிதம்' என்ற சிறுகதை நுகர்பொருள் கலாச்சாரத்தினால் மக்கள் அடையும் இழப்புகளைப் பற்றி கூறுகிறது.

நுகர்பொருள் வணிகர்களின் நவீன வலை 'கிரடிட் கார்டு' எனப்படும் கடன்பற்று அட்டை. இக்கடன் அட்டையை வைத்திருப்பது இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெருமையான ஒன்றாக இருக்கிறது. "உல்லாசக் கடைகளில் விலை மதிப்புள்ள வைரம், தங்கம், ரோலக்ஸ் வாட்ச் போன்ற தரம் வாய்ந்த பொருட்களை வாங்கிவிட்டு, தங்கள் பணப்பையிலிருந்து இதுபோன்ற தங்க நிறக் கடன்பற்று அட்டையை எடுத்துக்கொடுக்கும் போது கடைக்காரர்கள் அந்த நபர்களை நிமிர்ந்து பார்த்துப் பெருமிதம் கொள்வது உண்மைதான். அவர்களுக்குத் தனி மரியாதை கிடைக்கிறது" என்கிறார். கடன் அட்டையைக் கொண்டு பொருள் வாங்குவது பெருமையான மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தாலும் அந்த மகிழ்ச்சி சில நிமிடம் தான். ஏனெனில் பொருட்களை வாங்கிய சில தினங்களில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்திலிருந்து உடனே கட்டணத்தைச் செலுத்துமாறு கடிதம் வந்துவிடுகிறது. அவர்கள் கொடுக்கும் தேதிக்குள் நாம் காசோலையை அனுப்பிக் கடனை அடைத்து விட வேண்டும். கடனை அடைக்கத் தாமதித்தால் மாதம் இருபது வெள்ளி வட்டியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பொருள் கால் பங்கு, கூலி முக்கால் பங்கு என்ற கதைதான். அதுமட்டுமா? அந்தக் கடன் பற்று அட்டையைப் ப்யன்படுத்திக் கொள்ள வருடத்திற்கு நூற்றைம்பது வெள்ளியை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இதில் என்ன இலாபம் என்று சலிப்பைந்தாள் அமுதா. அத்தோடு மட்டுமல்லாமல் அட்டையைத் தொலைத்து, உணர்ந்து அந்நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கடன்பற்று அட்டை தொலைந்த செதியைக் கூறி அது செயல்படுத்தப்படாமல் தடுத்தால் தப்பிக்கலாம். அவ்வாறில்லாமல், தொலைத்ததை நினைவில்லாமல் விட்டுவிட்டால், அட்டையை எடுத்தவர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி விடுவர். அத்தொகைக்கான கடிதம் அட்டையின் உரிமையாரை அடையும்.

இவ்வாறு கடன் அட்டையைப் பெற்றவர்கள் பணத்தைச் செலுத்த முடியாமல் நடுத்தெருவிற்கு வந்த குடும்பங்கள், இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளிலும் நடப்பதை இக்கதை முலம் அறிய முடிகிறது. அமுதா- பாண்டியன் இருவரும் குடும்பத்தினைச் சிக்கனமாக நடத்தி வருகின்றனர். பாண்டியன் பெற்ற கடன் அட்டை காணாமல் போனதைத் தெரிந்து கொள்ளாததால், அவ்வட்டையை எடுத்தவர்கள் வாங்கிய பொருட்களின் தொகைக்கான கடிதம் வந்த பிறகே தெரிந்து கொள்கின்றனர். அதர்ச்சி அடைகின்றனர். வாங்காதப் பொருளுக்கான கட்டணத்தைச் செலுத்து நிலைக்கு வருந்துகின்றனர்.

செளமியா எழுதிய "நான் என்னைக் காதலிக்கிறேன்" கடித வடிவிலான இக்கதை தன் தோழிக்கு எழுதுவதாக உள்ளது. தமிழகத்திலிருந்து திருமணத்தின் பொருட்டு சிங்கப்பூர் செல்லும் பெண்ணின் வாழ்நிலையைக் கூறுகிறது. "ஆண் இனம் , மொழி, வர்க்கம் போன்றவற்றால் பாரபட்சமாக நடத்தப்பட்டால் பெண் கூடுதலான ஒன்றால் பாரபட்சப்படுத்தப்படுகிறாள்.அது பால்(Gஎன்டெர்)" என்று கூறுவார் 'இரண்டாம் பாலினம்' என்ற பிரஞ்சு நூலின் ஆசிரியர் திருமணத்தின் மூலம் பெண்களுக்கு தனது தியாகத்தின் மூலம் வாழ்வளிப்பதாக ஆண்கள் எண்ணுகின்றனர்.

"உனக்கு ரொம்பத்தான் சுதந்திரம் கொடுத்திட்டேன்" அதான் இப்படிப் பைத்தியம் பிடித்து அலைகிறாய் என்று மனைவியிடம் கூறுகிறாள். "உரிமை என்பது பிறர்கொடுப்பதும் அன்று, பிறரிடமிருந்து பெறுவதுமன்று" என்பார் திரு. வி.க பெண் தன்னிச்சையாகச் செயல்பட்டால் ஆண்களால் இவை போன்ற சொற்கள் சொல்லப்படும். "என் சுதந்திரத்தை நானாகவே வரையறை செய்திருக்கப்படாதாம். திருமணம் என்ற தன் அஸ்திவாரத்தையே நான் உடைத்துவிட்டேனாம்...திருமணம் என்பது மனைவியின் இலக்குகளைச் சிதைத்து அவளது சுதந்திரத்தை உடைத்துவிடுவதா திருமணம்? என்று கேள்வி எழுப்புகிறார். ஆசிரியர், "பெண் தான் அடிமையாக இருப்பதை உணரத்தொடங்கினால் குடும்பம் என்ற அமைப்பு சிதறிவிடும் என்று கூறுவார் எங்கெல்சு. இதுவே இன்றைய நிலை என்பதை சிறுகதை உணர்த்துகிறது.

தமிழக பெண் எழுத்துக்களிலிருந்து, சிங்கப்பூர் பெண் எழுத்துக்கள் வாழிடம் மற்றும் சுற்றுபுறச் சூழல் மட்டுமே மாறுபடுகின்றவாய் உள்ளன என்பதை இத்தொகுப்பு மூலம் அறிய முடிகிறது.

ஆணாதிக்கப் பொது நிலவெளியிலிருந்து தனித்து அடையாளப்படும் (பெண்களின்) வேறொரு மனவெளி நமக்கு  இக்கதைகளின் ஊடாக காட்சிப்படுகிறது.
__________________________________________________________________________________________

வேறொரு மனவெளி, சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்கள், பாலுமணிமாறன், தங்கமீன் பதிப்பகம், சென்னை.

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
  Name A.R.GANESAN, SIVAGIRI.  
  Comments
VANAKKAM VETRISELVAN AYYA.UNGALIN UADAGA TAMIL ULAGAM ELLAM PARAVATTUM.MEGAVUM ARUMAI,PANNATTU TAMIL ULAGAM UNGAL KAIGALIL SULALKIRATHU, UNGALIN MUYARSIKKU ENGALIN MANAPPOORVAMANA VALTHUKKAL, VALATTUM TAMIL UNGALODU KAIKORTHU, MUKAPPU PAKKATHIL NENKAL ENAKKU KODUTHA NULIL PIN ATTAIYIL ULLAATHU THANA.VISITOR 1030. THANK YOU.
 
  Email Id keepaatamil@yahoo.co.in  
     
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World