Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue



மரணத்தின் வாசனை
 

"மரணமற்ற ஒன்று உண்டெனில்
அது மரணம் தவிர
வேறொன்றுமில்லை"

உயிருள்ளவை என்று அறியப்பட்ட உயிரினங்கள் மட்டும் அல்லாது உயிரற்றவை என்று அறியப்பட்டவைகளும் ஏதோ வகையில் மரணிப்பது நிச்சயம் என்பது அறிவியலாளர்களின் கூற்று. மரணம் இயல்பானது. மரணம் தொடர்ந்து கொண்டு வருகிற வழமைதான் என்றாலும் கூட, மரணம் மிகத் துயரமானதாகவே இருக்கிறது. உறவின் நெருக்கமே துயரத்தின் அளவை நிர்ணயிக்கிறது. போர் பூமியாகிய ஈழத்தில் பிறந்த த.அகிலன் எதிர் கொள்ளும் நெருக்கமான உறவுகளுடைய மரணங்களின் வலிகளே 'மரணத்தின் வாசனை' என்ற போர் தின்ற சனங்களின் கதையாகும். "ஈழத்தின் நீட்சியாக புலம்பெயர் இலக்கியம் உருவாகியது போல் ஈழத்திலக்கியத்தின் இன்னொரு நீட்சியாக போரிலக்கியம் உருப்பெற்று செழுமைபெற்று வளர்கின்றது. ஒரு வகையில் போரிலக்கியமும் புலம்பெயர் இலக்கியமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றால் அது மிகையல்ல" என்று கி.பி. அரவிந்தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது பொருந்தும்.

இலங்கையில் இனக்கலவரம் தொடங்கிய காலகட்டத்திலிருந்து ஈழத்தமிழர்களின் வாழ்வு மரணத்துள்ளான வாழ்வாக இன்றும் தொடர்கிறது. பிறக்கின்ற அனைவருக்கும் மரணிக்கின்ற நிகழ்வு பொதுவான போதிலும், ஈழத்தமிழர்கள் மரணம் எந்த சூழலில் நிகழ்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். போர்ச் சூழலில் பிறந்த, மரணத்துள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியான அகிலன் - தன் பாட்டியை, தந்தையை, சித்தியை, நண்பனை, நண்பியை, உறவினரை இப்படி, பலரை இழக்கிறார். அவர் எதிர்கொண்ட இம்மரணங்களின் வலியின் வெளிப்பாடே மரண்த்தின் வாசனையாகும்.

இக்கதையின் நேரடியான உண்மைத் தன்மை போன்ற மொழிநடை படிப்பவர்களின் நெருங்கிய உறவுகள் இறந்தது போன்ற துயரத்தை நம் மனதுள் நிகழ்த்துகிறது. (புனைவுகள் இருப்பினும் அது எந்த வகையிலும் அதன் உண்மைத் தன்மையை பலவீனமாக்கவில்லை). கதையில் நிகழும் ஒவ்வொரு மரணத்தின் வாசனையையும் நம்மால் வலிகளோடு நுகர முடிகிறது. கதையில் மரணிக்கும் யாவருக்கும் இயற்கை மரணம் இல்லை என்பது மிகப் பெரிய அதிர்ச்சியினை நமக்கு அளிக்கிறது. ஈழத்துப் போர்ச் சூழலில் வாழும் அவர்களிடம் மரணம் பற்றிய, நிலையாமை பற்றிய உலகியல் தத்துவங்கள் உடைந்து நொறுங்கித்தான் போகின்றன.

வெளிநாட்டு உள்நாட்டு பயணக் கதைகளை கட்டுரைகளை நாம் அனைவரும் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் படித்திருக்கிறோம். ஆனால் மரணங்களைப் பின் தொடர்கிற இடுக்கண் தருகிற ஒரு பயணத்தை இக் கதைகளின் மூலம் அறிய முடிவது இதுவரை அறிந்திராத அனுபவமாக மனதிற்குள் உள்ளிடப்படுகிறது. தன் மண்னை, தன் வீட்டை, தன் காணியை, தன் செல்ல விலங்குகளை நேசிக்கும் அந்த மரணம் தழுவும் மனிதர்கள் நம் தமிழ்ச் சகோதரர்கள் எனும் செய்தி, நம் துக்கம் அதீதமாக பீறிடக் காரணமாக அமைகிறது. போரினால் ஏற்படும் மரணத்தின் மூர்க்கமான வாய், மனிதர்களை மட்டும் அல்லது விலங்குகளையும் தாவரங்களையும் விழுங்கிச் சுவைக்கிறது என்பது நம் கண்ணீரில் மேலும் செந்நீரைச் சேர்க்கிறது. தன் மண்ணை வீட்டை எப்போதும் மனதோடு தூக்கிச் சுமக்கும் இந்த ஈழத்துச் சனங்களின் வாழ்க்கையை எப்படி மொழிந்தாலும் அதன் துயரங்களை அப்படியே வெளிப்படுத்த இயலாது என்ற போதிலும் இந்த ஆசிரியர் த. அகிலன் அந்த துயரங்களை இந்த மரணத்தின் வாசனை மூலமாக எடுத்தியம்புவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்றெ கொள்ளத் தோன்றுகிறது. ஈழத்தில் இருக்கும் சாதாரண மக்களின் பயம் மிகுந்த, புலம்பெயர்ந்து கொண்டே இருக்கும் சோக வாழ்க்கையினை தெளிவாக நமக்குப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்த நூல்.

கதைமாந்தர்களில் ஒருவராய் இருக்கும் ஆசிரியர் கையாண்டிருக்கும் நம்பகத்தன்மை உடைய தானே கதை சொல்வது போன்றதொரு மொழிநடை ஒரு வாசிப்பு அனுபவத்தையும் தாண்டி ஒரு காட்சி வடிவமாகவே நமக்குள் தோன்றுவது அவரின் மொழிநடைக்கு கிடைத்த வெற்றி என்றே கருத வேண்டும். இக் கதைகளைச் சொல்ல பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடை பல இடங்களில் ஈழத்துச் சனங்களின் வாய்மொழியாகவும், சில இடங்களில் ஒரு கவிதை நடை போலும், ஒரு சில இடங்களில் கட்டுரை நடை போலும், தேவையான இடங்களில் பூச்சு இல்லாமல் நிர்வாணத்தன்மையுடனும் விளங்குவது அதன் உண்மைத் தன்மைக்கு அருகில் கொண்டு சென்று அழகூட்டுகிறது.

பல்வேறு மரணங்களை அருகே இருந்து கண்ட ஆசிரியர் மரணத்தைப் பற்றி ஒவ்வொரு கதையிலும் கூறி இருப்பவைகள் மூலம் அவருடைய தேர்ந்த சிந்தனைத் திறனை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது. சிறுவயதில் நிகழும் மரணங்களைக் கூற சிறுவனுடைய கண்ணோட்டத்தில் பல இடங்களில் கையாளப்பெற்றிருப்பதும் கதைக்கு கனம் சேர்க்கிறது. கதையில் குறிப்பிட்ட இடங்களில் நகைச்சுவை இழையோடியிருப்பது போர்ச் சூழலுக்கு அந்த சனங்கள் பழக்கப்பட்டு போனதையும் துயரோடு புகல்கிறது.

மரணத்தின் வாசனை நூலில் முதல் கதையாக வரும் 'ஓர் ஊரில் ஒரு கிழவி' கதை மூலமாக போர்ச்சூழலில் தன் ஊரை விட்டு புலம்பெரும் ஆசிரியரின் குடும்பம் மூலமாகவே ஈழத்து அத்தனைக் குடும்பங்களின் வலியைப் புரிந்து கொள்ள முடிகிறது. இக்கதையில் தன் பாட்டியின் மரணத்தை வேதனையோடு விவரிக்கிறார். அந்த மூதாட்டியின் தன் - மண் மீதான மூன்றாம் கதையின் தலைப்பே துக்கத்தை தருகிறது. ஒரு மரணம் எப்படி
ஒரு செய்தியாக
ஒரு துயரமாக
ஒரு அரசியலாக ....... மாறிப்போகிறது என்பதை உணர்த்தும் நோக்கத்துக்காகவே இந்த கதைக்குத் தலைப்பாகவும் 'செய்தியாக - துயரமாக - அரசியலாக...' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கக்கூடும். இக்கதை ஒரே குடும்பத்தில் நிகழ்ந்த 5 மரணங்களைப் பற்றியது. சீறீலங்கா வான்படை தாக்கி மரணமடைந்த குடும்பங்களில் இதுவும் ஒன்று. மரணம் எவ்வவளவு இலகுவாக மாறிப்போய் இருக்கிறது ஈழத்தில் என்பது, 'மரணம் கிரிக்கட் ஸ்கோரைப்போல அறிவிக்கப் பட்டது' என்ற வலி மிகுந்த வரிகள் மூலம் அறியலாம். மரணம் தாங்கிய அந்த குண்டுகளுக்கும் அவர்களும் என்ன பகை?! ஆனாலும் உயிரை மீதமில்லாமல் குடித்துவிடுகிறது.

நான்காம் கதை - ஒருத்தீ... அந்த தீ என்று சுட்டப்பட்டிருக்கும் ஒருத்தி - ஒரு விடுதலைப் போராளியாய் இருந்தவள். எப்போதும் துப்பாக்கியை ஏந்தி அலைகிற அவளுக்குள் எவ்வளவு அன்புள்ளம் விரவிக்கிடக்கிறது என்பது இந்த கதை முழுவதும் வியாபித்து நிறைந்திருக்கிறது. தன் பால்யத்தில் பூக்களை அதிகம் நேசிக்கும் இளகிய மனம் படைத்த அந்த ஈழவேணி துப்பாக்கியைத் தூக்கியது ஆசிரியருக்கு மட்டும் அல்ல, நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

பூப்பறித்தாலே
மனசு நோகிற உனக்கு
மரம் தறிக்கிற தெளிவு
யார் கொடுத்தது...?

அதனாலே இப்படி ஒரு கவிதை மூலம் தன் ஐயத்தை வெளிப்படுத்துகிறார். இன்னும் உன்னிப்பாக நோக்க, அவர்கள் போராட்ட வாழ்க்கை அன்புள்ளம் கொண்டவர்களையும் துப்பாக்கியை தூக்க வைக்கிற அவசியத்தினை இந்த கதை மறைமுகமாக உணர்த்துகிறது எனலாம்.

"மந்திரக்காரண்டி அம்மான்டி" என்ற ஐந்தாவது கதையில் ஆசிரியருடைய இளம் வயது நண்பனின் இழப்பை வலியோடு பகிர்ந்து கொள்கிறார். அதில் சிறுவயதில் பலபேருடன் நடந்த சண்டைகளை அதனை நியாயப்படுத்தும் விதமாக கூறுமிடத்தில் போகிற போக்கில் பொருள் நிறைந்த தத்துவங்களை எளிமையாகச் சொல்லவும் புரியவைக்கவும் செய்வது அருமை. "வன்முறை எப்படிப் பிறக்கிறது நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறபோது" என்ற வரிகள் சண்டையை சிறுவர்கள் மட்டும் முன்வைத்து சொல்லப்பட்டதில்லை என்று தோன்றுகிறது.

அடுத்த கதையான 'சித்தி' யில் ஆசிரியருடைய சித்தி பாம்பு கடித்து அல்லது 'ஏதோ விச ஜந்து கடித்து, தன் அப்பாவைப் போலவே மருந்து கிடைக்காமல் சாகிறாள். ஆசிரியரின் பால்ய வயதில் அப்பாவை பறிகொடுத்த அந்தக் கொடுமை அவருடைய இளவயது வரை தொடர்கிற சோகத்தை கண்ணீரின்றி படிக்கமுடிவதில்லை. புலம் பெயர்வின் மூலமாக காடுகளில் கூட மனிதர்கள் வசிக்க வேண்டியுள்ளதையும் அறியத் தருகிறது, இந்தக் கதை. அதனால் விலங்குகள் கோபங்கொண்டு மக்களைத் தாக்குவது சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சின்ன கிராமம் மக்கள் படை எடுப்பால் திடீரென நகரமாய் மாறும் போது குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற சுகாதார வசதிகள் குறைந்திருப்பதையும் இக் கதையின் வழி காண முடிகிறது. அவலங்களே அன்றாடக் காட்சிகளாய் மாறிப் போயிருக்கிறது என்பது துயரிலும் துயரம்.

"கரைகளிற்கிடையே" என்ற அடுத்த கதையில் தன் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அண்டை நாடு ஆதரவு தரும் என்ற ஆறுதல் தேடி வருபவர்கள் கடலினால் திண்ணப்படும் அவலத்தைப் பகிர்கிறது.

"குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்" என்ற கதியில் தன் தோட்டத்தினை நேசித்த கௌரமான விவசாயி ஒருவன் போரினால் அதனை விட்டு புலம்பெயரும்போது அவனது வலியை மரணத்தை எடுத்தியம்புகிறது. ஆசிரியரின் புனைநடை மிளகாய்க் கண்டுகள் வழி அழகாய் வெளிப்படுகிறது.

"நீ போய்விட்ட பிறகு" என்ற கதையில் கவிதை நடைகள் விரவிக்கிடக்கின்றன. தன் காதலியைப் பற்றிய கதையாக வருவதினால் இயல்பாகவே அது ஏற்பட்டதெனக் கருதலாம். அன்பும் கோபமும் கவிதை நடை வாயிலாகவே நமக்கு புரிய வைக்கப்படுகிறது. பொருத்தமாகவும் இருக்கிறது.

"நரைத்த கண்ணீர்" கதை மகனை இழந்தது தெரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் வாழும் பெற்றோர்களின் துயரத்தைப் பகிர்கிறது.

"சலனங்கள் அற்றவனின் கடைசிநாள்" கதை வழி வகுப்பறைகூட போர்ச் சூழலுக்கு பாதுகாப்பற்றது என்ற உண்மையை முகத்தில் அறகிறது.

"தோற்ற மயக்கங்களோ" கதை தன் செல்ல விலங்குகளை அதீதமாக நேசித்தவனை மனநலம் பாதித்தவனாக புலம்பெயர்வுவாழ்வு ஆக்கியிருப்பது தாங்க முடியா சோகம். போர் மக்களை மட்டுமல்லாமல், பிற உயிரினங்களையும் பாதிக்கின்ற நிலையும் இக்கதை பகிர்கின்றது.

இப்படி நாவலா? கட்டுரையா? சிறுகதையா? இது என்ன மாதிரியான இலக்கியம் என்று குழப்பமான மனநிலையிலே படிக்கப்பட்டாலும் அது தன் இலக்கை அடைந்து வெற்றியே பெறுகிறது. இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம் என்று பல திரைப்படங்களைப் பற்றி சொல்லக் கேட்டுப் பார்த்ததுண்டு. ஆனால் சில நேரங்களில் இந்த கதைகளை இளகிய மனம் படைத்தவர்கள் படிக்க வேண்டாம் என்று கூறத் தோன்றுகிறது. அந்த அளவு மரணங்களும் அதன் ஓலங்களும் வீரியமுடன் இந்தகதைகளில் அலைந்து கொண்டிருக்கின்றன. சில இடங்களில் உடல்கள் கூட எலும்புக் கூடுகளாகத்தான் கிடைக்கின்றன. இருந்தும் நமக்குள் ஏற்படுத்தும் அதன் பாதிப்பை நிச்சயம் சாதாரணாமானதாகக் கருத இயலாது. மரணம் நம் நாட்டுச் சூழலில் நமக்கு வேறுவகையானது. ஆனால் நம் ஈழத்துச் சகோதரர்களுக்கு அது அன்றாட நிகழ்வுகளாகிப் போனதையே இந்நூல் நம்முன் சோகதோடும் வலியோடும் பகிர்ந்து கொள்கிறது. படித்து முடித்ததும் ஒன்று சொல்ல வேண்டுமானால் இவ்வாசிரியரின் மொழியாக - மரணம் நாசமாய்ப் போக.

 
Related News
 • நிலக்கிளி நாவல்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World