Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueநிலக்கிளி நாவல்
 

"மண்ணை நேசித்தல் என்பது,
மண்ணை நேசித்தல் மட்டும் அன்று..
மனிதர்களை நேசித்தல்.
மரங்களை நேசித்தல்.
மற்றெல்லா உயிர்களையும் நேசித்தல்.
சுருங்கக்கூறின் வாழ்க்கையை நேசித்தல்".

ஆம். அப்படிப்பட்ட இந்த மண்ணை - வாழ்க்கையை ஆழமாக ஆனால் எளிமையாக நேசிக்கும் கதைமாந்தர்களைச் சுமந்து படைக்கப்பட்ட அருமையானதொரு நாவல்தான் அ.பாலமனோகரன் எழுதிய ஈழத்து வன்னி மண்ணின் "நிலக்கிளி". இது ஆசிரியரின் முதல் நாவல் என்பது நம்மால் நம்பமுடியாத அளவுக்கு மிகச் சிறந்த படைப்பு என்பது மிகையன்று.

நிலக்கிளி என்ற தலைப்பு இந்நூலுக்கு எவ்வளவு பொருத்தம் என்பது நாவலைப்படித்த பின்பே முழுமையாக உணரமுடிகிறது. நிலக்கிளி என்ற அந்த ஈழத்து மண்ணுக்குரிய பறவையை நாவலில் ஆசிரியர் ஒரு குறியீடாக பயன்படுத்தியிருப்பதும் நிறைவைத் தருகின்றது. "அம்மக்களும் அந்த நிலக்கிளியைப் போன்றவர்களே. உயரப்பறக்க முடியாதவர்கள் அல்ல. உயரப்பறக்க விரும்பாதவர்கள்". அப்படிப்பட்ட எண்ணங்கொண்ட மக்கள் தம் வாழ்வில் மேலும் பறக்க ஆசைப்பட விரும்பும் போது உண்டாகும் வலியை இந்நூல் மென்சோகத்தோடு எடுத்தியம்புகிறது.

இந்நூலைப் படிக்குந்தோறும் தன் மண்ணுடன் ஒருவன் இப்படி எல்லாம் பழக முடியுமா என்ற வியப்பு மேலோங்கி நம்மை ஆட்கொள்கிறது. நம் முன்னோரின் வாழ்க்கைதான் எத்தனை எளிமையும் வடிவும் கொண்டது என பெருமிதப்படத் தோன்றுகிறது. கதையாக நோக்கும் போது கூட இது ஒரு சாதாரண முக்கோணக் காதல் கதை என்று எவரேனும் கூறுவாறெனில் அது எவ்வளவு அபத்தம் என்பது இந்நாவலை முழுமையாகச் சுவைத்தவர்களுக்குத்தான் விளங்கும். இந்நாவலை நுனிப்புல் மேய்பவர்களால் கூட மேலே சொன்னது போல (முக்கோணக் காதல் கதை) கூறிவிட முடியாத அளவுக்கு அந்த வன்னி மண்ணின் மணம் நாவல் முழுவதும் கமழ்கிறது.

இக்கதை நம் மனத்தில் ஆழமாகப் பதியக் காரணம் ஆசிரியர் கூறவந்த விவரங்களை ஒரு திரைப்படத்தைக் காட்சிப்படுத்தியது (காணொளி) போன்ற மொழிநடை. இதையும் முதல் வரியிலிருந்தே தொடங்கிவிடுகிறார் இப்படி, "கார்த்திகை மாதத்தின் கடேசி நாட்கள். அடிக்கடி பெய்த மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச் சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்து வந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது". இதைப் படிக்கும் போதே அந்த காட்சி விவரிப்புகள் மூலம் நாம் அதனூடாகவே பயணிக்க முடிகிறது என்பது இதன் தனித்துவம். இந்நூலாசிரியர் ஒரு ஓவியர் என்பதும் இதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.

ஆழ்ந்து எண்ணுகையில் இந்நாவலின் நடை எந்த இசங்களுக்கும் அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கண நடைகளுக்கும் கட்டுபடாத ஒருர் வெள்ளந்திநடை. அந்த அளவுக்கு மண் சார்ந்தே அந்த இயற்கை சார்ந்தே ஒவ்வொரு வரியும் எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக "எரிக்கும்பியில் முளைக்கும் தள தளவென்ற செங்கீரையின் குளிர்மை போன்ற அவளது ஸ்பரிசம்" என்று ஒரு பெண்ணின் மேனியை வர்ணிக்கும் போது கூட இயற்கைச் செடிகளையே பயன்படுத்துகிறார் ஆசிரியர். மண்சார்ந்த வாழ்வு எவ்வளவு அழகாக உளவியல் ரீதியாகக் கூட வெளிப்படுகிறது என்பது ஈண்டு விளங்கும். இன்னுமொரு அழகிய உதாரணம் வேண்டுமெனில் கதையில் வரும் உமாபதியார் தண்ணிமுறிப்பு கிராமத்திற்கு சூழல் காரணமாக வாழ வேண்டி வரும் போது ஆசிரியர் இப்படிக் குறிப்பிடுகிறர்" வேட்டை நாய்களால் துரத்தப்பட்ட குழிமுயல் பற்றைக்குள் ஒளிந்து கொள்வது போல உமாபதியாரும் ஏதோ ஒன்றால் துரத்தப்பட்டவராகத்தான் ஓடிவந்தார்". காதலிக்குப் பரிசாகக் கூட மானும் தேனும் இந்நிலத்தில் கொடுக்கப்படுகிறது என்பது இங்கு உற்றுநோக்கத்தக்கது. இது போன்று இந்நாவலில் குறிப்பிடப்பெற்றுள்ள மண் சார்ந்த இயற்கை சார்ந்த உதாரணங்களை ஈண்டு தொகுக்க வேண்டுமெனில் நாவல் முழுவதையும் எழுத வேண்டியிருந்தாலும் வியப்பில்லை.

இந்நாவலின் ஒரு இடத்தில் "கதிர்காமனுடைய ரோச் வெளிச்சத்தில் பாதையைக் குறுக்கறுத்துச் செல்லும் காட்டு விலங்குகளின் கண்கள் தீப்பந்தம் போல் ஒளிர்ந்தன. பச்சைப் பளீரென்று ஒளிவிடும் கண்கள் மான்களுக்குரியவை. பழுப்பு நிறமாக மங்கித் திரிபவை முயல், மரநாய்களுக்குச் சொந்தம்". இயற்கையினை வெளியிருந்து ஆராய்சி செய்த எந்த ஒரு அறிஞனாலும் கூட இவ்வளவு நுட்பமாக எழுதிவிட முடியாதென்றே தோன்றுகிறது. அம் மண்ணோடேயே வாழ்ந்த ஒருவனுக்கு மட்டுமே இப்படி எழுதுவது சாத்தியம். ஆசிரியரும் அப்படிப்பட்ட ஒருவரே என்பது அவரின் முன்னுறையிலும் அவரது பல்வேறு நேர்காணல்களின் மூலமும் தெரிய வருகிறது.

தனக்கு வேண்டியதனை தானே விளைவித்து, தானே சமைத்து உண்டு வாழும் சூழலை ஆசிரியர் விவரிக்கும் போது அந்த தண்ணி முறிப்புக் கிராமத்தில் நாம் வாழ்ந்து விட மாட்டோமா..? என்ற ஆவல் அதீதமாக மேலிடுகிறது.

போச் சூழல் இடம்பெறாத ஒரு ஈழத்து படைப்பு என்பது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விடயம் எனலாம். போர்ச்சூழல் அற்ற வன்னியை இந்நாவலின் வழி எண்ணுங்கால் இவ்வளவு அழகானதா ஈழம்..? இப்படிப்பட்ட ஒரு மண்ணிலா போர் நடை பெற வேண்டும்? இயற்கையோடு வாழும் இம் மக்களுக்கா இப்படி அகதியாகிப் போக வேண்டிய அவலம் நிகழ வேண்டும்? என்று எண்ணுங்கால் கண்களில் நீர் நிறைகின்றது. இந்த அளவு மண்ணை நேசித்து வாழ்ந்தவர்கள் இந்த மண்ணை இழந்து தவிப்பது தன்னுடைய உடலுறுப்புகள் இழந்து தவிப்பது காட்டிலும் கொடுமையிலும் கொடுமை. நம் ஈழத்துச் சகோதரர்கள் இழந்தது விலை மதிப்பிடக்கூடிய பொருள் அல்ல என்பது திண்ணமாய் நெஞ்சில் உறைக்கிறது. இந்த ஈழத்து வன்னி மண்ணில் பிறந்து வளர்ந்த இந்நூலாசிரியர் கூட இப்போது அகதியாய் டென்மார்க்கில் வாழ்கிறார் என்பது நெஞ்சை நெகிழ்த்தும் சோகம்.

இக்கதை, நாயகியான பதஞ்சலியைச் சுற்றியே பயணித்தாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் இல்லாமல் இல்லை. குறிப்பாக கோணாமலையர் பாத்திரத்தினைச் சொல்லலாம். தேவைக்கேற்ப இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த போது அவருக்கிருக்கிற மகிழ்ச்சியும் நிம்மதியும், நாகரிக உலகின் திறவுகோல் போல அவர் பார்த்த உழவு எந்திரத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை உருவாகும் போது சிறிது சிறிதாக குறைந்து இறுதியில் அவருடைய உயிரையும் பறிக்கிறது.

கதையை விவரித்தல் மட்டும் அல்லாது முடிந்தவரை ஆங்காங்கே எதார்த்தமான சில தத்துவங்களையும் உதிர்த்துவிட்டுச் செல்கிறார் ஆசிரியர். உதாரணமாக "ஆயுதங்கள்தான் ஒரு தொழிலாளியினுடைய உற்ற நண்பர்கள்" என ஒரு இடத்திலும் மற்றொரு இடத்தில் "எளிமை நிறைந்த வாழ்விலே ஆசைகள் மிகக் குறைவு. அந்த மிகச் சிலவன ஆசைகளும் எளிமையாகவே இருப்பதனால் அவை இலகுவில் நிறைவேறிவிடுகின்றன" என்றும் புகல்கிறார்.

நாயகன் கதிர்காமன் தன் தந்தையாலே வெளியேற்றப்பட்ட பின்பு பதஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டு தனக்கொரு தனிக்குடிலை அமைக்கும் பொருட்டு வரும் காட்சிகள் வாசகர்களுக்குப் புதுமையானவை. காட்டை வெட்டி வீழ்த்தி, கழனியாக மாற்றுவது எப்படி நடந்திருக்கும் என்பதனை அற்புதமாக விவரிக்கிறார்.

நாகரிக உலகத்தின் பிரதிநிதியாக இருக்கும் சுந்தரலிங்கம் கதையின் பாதியில் வரும் போதே உண்மையான சிக்கல் தொடங்குகிறது எனலாம். வெள்ளந்தியாக இயற்கையாகவே மனம் பண்பட்டு வாழும் பதஞ்சலி அவன் கொடுக்கும் சஞ்சிகைகள் மூலம் புதிய உலகை தரிசிப்பதாக கூறப்படுகிறது. அந்த எண்ணத்தின் விளைந்த ஆசையே அவள் பாழ்படுவதற்கும் காரணமாக அமைகிறது என்பது ஈண்டு முக்கியமாக நோக்கத்தக்கது.

பதஞ்சலியின் மனத்தையும் இயற்கையையும் அழகாக தொடர்புபடுத்தி எழுதியிருப்பது உற்றுநோக்கையில் விளங்கும். அவள் கள்ளம் கபடமற்று இருக்கும் போது காடு குளம் முதலான இயற்கைச் செல்வங்கள் மழை பெய்து செழிப்பாகவும், அவள் மனம் குழப்படைந்து தவறு செய்ய நேரும்போது சூறாவளியும், பாழ்பட்டு போய்விட்ட மனநிலையில் அவை வாடியும் வற்றியும், இயற்கை தன்னை வருத்திக் கொண்டு இருப்பது போலவும் மீண்டும் அதில் இருந்து மீண்டு பழைய பதஞ்சலியாக நிலக்கிளியாக மாறும் போது அங்கு மழை, பழைய செழிப்புடன் இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்ளுவது போலவும் காட்டப்பெற்றிப்பது அழகு. பதஞ்சலி 'கற்பு' குறித்த கருத்தாக்கங்களை அறியாத பொழுது அவளின் மகிழ்ச்சியான வாழ்வு, அக்கருத்தாக்கங்களை தன் மனத்தில் ஏற்றுக்கொள்ளும் பொழுது அவள் வாழ்வில் அடையும் துன்பமும் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும்.

காட்டில் இயற்கையோடு இயற்கையாய் வாழும் மனிதர்கள் நாகரிகமற்றவர்கள் என்று யாரேனும் எண்ணினால் அது அவர்களின் அறியாமையே அன்றி வேறேதுவும் இல்லை என்று இந்நாவல் மூலம் உணரமுடிகிறது. இதை ஆசிரியர் கூற்றாகவே கூற வேண்டுமெனில் "நிலக்கிளிகள் நிலத்தில் வாழ்பவைதான். உயரே பறக்க விரும்பாதவைதான். இலகுவில் பிறரிடம் அகப்பட்டுக் கொள்பவைதான். ஆனால் அவை எளிமையானவை அழகானவை! தன் சின்னச் சொந்த வாழ்க்கை வட்டத்துள்ளே உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையானது!.

இந்நாவல் மூலம் அறிய வரும் இயற்கையோடு இயந்த வாழ்வை நாம் எவ்வளவு தூரம் இழந்திருக்கிறோம் என்பதை எண்ணுங்கால் நெஞ்சு கணக்கிறது. ஏக்கம் வலுக்கிறது. நூலைப் படித்து முடித்த பின்னும் அந்த வன்னி மண்ணில் வாழ்வது போன்ற ஒரு உணர்வு நம்மைக் கவ்விக் கொள்கிறது. பதஞ்சலி, கதிராமன், கோண்மலையார், உமாபதியார், பாலியார் போன்ற மிகச் சிறந்த பாத்திரங்கள் நம் கண் முன்னே நிழலாடிக்கொண்டே இருக்கிறார்களோ என்ற சந்தேகம் பீறிடுகிறது. இந்நாவலாசிரியர் அ. பாலமனோகரன் ஒரு நேர்காணலில் இப்படிச் சொல்லுகிறர்-"ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு மெசேஜ், அதாவது ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதாவது வாசி, யோசி, நேசி என்பேன். அவ்வாறு வாசிக்கும்பொது ஒரு செய்தியை வாசகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு படைப்பானது அமைய வேண்டும் என்பது என் கருத்து. ஒரு விஷயத்தை சிந்தித்து, அதை எழுதி, அதன் வழியாக பிறரை நேசிக்கச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையைவளர்க்க வேண்டும்". இந்தக் கருத்துகள் இந்த நாவலில் எண்ணிக்கையற்றுக் காணப்படுகின்றன. இந்நாவல் 1973ம் ஆண்டின் சிறந்த தமிழ் நாவலுக்கான இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசைப் பெற்றிருப்பதில் ஆச்சர்யமில்லை. இந்நாவாலை எழுதி சிறப்புப் பெற்றமையால் இந்நாவலாசிரியர் கூட நிலக்கிளி பாலமனோகரன் என்றே அழைக்கப்படுகிறார் என்பது சிறப்பு. 

 
Related News
 • மரணத்தின் வாசனை

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
   
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World