Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueவாழ்ந்து பார்க்கலாம்
 

 

"திட்டமிட்டும் ஆராய்ந்தும் வகுக்கும் வாழ்க்கை
எப்போதும் எவருக்கும் அப்படியே நடப்பதில்லை…"
 
வாழ்க்கையை வாழ சிறந்த வழி, குழப்பமில்லாத வழி அதன் போக்கிலே சென்று, வருவதை எதிர் கொண்டு வாழ்வதுதான். இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்நாவலின் ஆசிரியர் ஜெயந்தி சங்கரும் வாழ்வினூடே எது வரினும் எதிர்ப்படினும் “வாழ்ந்து பார்க்கலாம் வா” என இந்நூல் வழியே அழைக்கிறார். இப்படித் ஒரு தன்னம்பிக்கை ஊட்டும் தலைப்பு வழியாகவே நம்மை எளிதில் கவர்ந்துவிடுகிறார் ஆசிரியர் . வாசிக்க ஆர்வமேற்படுத்தும் தலைப்பு. நாவலைப் படித்து முடித்ததும் ஒரு சுய முன்னேற்ற நூல் தரும் வாழ்வின் உறுதியைத் தன்னம்பிக்கையை உணர முடிவது இந்நூலின் கூடுதல் சிறப்பு.
 
நாம் எப்போதும் வாழ்வில் சரியான முடிவுகளை மிகவும் தாமதமாகவே ( தோல்வியின் பிறகு அனுபவம் கற்றுக் கொடுத்த பின்னர் ) எடுக்கப் பழகியிருக்கிறோம். வாழ்வில் சரியான முடிவுகளை சரியான தருணத்தில் எடுத்துவிட்டால் எவ்விதமான சிக்கலும் இல்லை. ஆனால் அப்படி நடப்பது இல்லை என்பதுதான் எதார்த்தம். இப்படிப்பட்ட யதார்த்த மனிதர்களே இக்கதையின் பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பாத்திரங்கள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட சரியான முடிவுகளை எடுக்கத் திணறுபவர்களாக அந்த சிக்கலில் உழல்பவர்களாக கட்டமைக்கப்பட்டுள்ளனர். குடும்பங்கள் பற்றியும் அதன் மறைமுகமான மற்றும் வெளிப்படையான ரணங்கள் பற்றியும்  இந்நாவல் விரிவாக ஆழமாக அலசப்பட்டுள்ளது.
 
கதை சொல்லலில் நடையில் ஆசிரியர் புதுமையைக் கையாண்டுள்ளார். மொத்தம் நாவலில் இருக்கக் கூடிய பகுதிகள் 12. அதன் ஒவ்வொரு பகுதியையும் விவரிக்க ஆசிரியர் ஒவ்வொரு முக்கியப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர் வழியாக அவர்கள் மனக்குரல்களின் மூலம் கதையைச் சொல்கிறார். அது புதுமையாகவும் சற்றே வாசிப்பவருக்கு குழப்பமூட்டும் வகையில் தொடக்கத்தில் அமைந்தாலும் போகப் போக அதுவே சுவாரஸ்யமாகவும் அமைந்து வாசிக்க மேலும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது. வாசகருக்கு அயர்ச்சியைத் தரும் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான நடை அமைப்பு (தன்கூறல்) தேவையா என எண்ணும் வேளையில் எவ்வளவு எளிமையாகச் சொல்லமுடியுமோ அவ்வளவு எளிமையாக கூறமுற்பட்டிருப்பது சற்றே ஆறுதல் தருகிறது.
 
நாவல் மொத்தம் இரண்டு பெரும் பிரிகளாக பிரிந்து இருக்கிறது. ஒன்று சிங்கப்பூரில் நடக்கிறது. மற்றொன்று இந்தியாவில் நடக்கிறது. இரண்டையும் இணைக்கும் மையப்புள்ளி திருமணம். இரண்டிலும் தமிழர்களையே பாத்திரங்களாக அமைத்திருந்தாலும் நாடு வேறுவேறு என்பதால் இரண்டுவிதமான வாழ்க்கைமுறை அனுபவங்களை காண நேரிடுகிறது. கலாச்சார அமைப்புகளில் பெரும்பாலும் வேறுபாடுகள் இரு நாட்டுத் தமிழர்களுக்கு இடையே குறைந்து காணப்படினும் வேறுபாடுகள் இல்லாமல் இல்லை.
 
நாவலில் கெட்டவர்கள் அல்லது வில்லன்கள் எனக்குறிப்பிடும்படி எவருமே இல்லை. இயற்கையான சூழலுக்குள் சிக்கித் தவித்து அதன் விளைவாக ஒரு முடிவு எடுத்து அடுத்தவர்களைக் காயப்படுத்துபவர்களே உள்ளனர்.
 
இந்திய சமூக அமைப்பில் “குடும்பம்” என்ற கட்டமைப்பு தரும் மகிழ்ச்சியை அதிகமாக சொல்லத் துணியும் யாரும் அது தரும் ரணங்களையும் வலிகளையும் பெரும்பாலும் வெளிப்படையாகச் சொல்லத்துணிவதில்லை. ஆனால் இந்நாவல் முழுக்க முழுக்க அதைப் பற்றியே விவரிக்கிறது. பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகள் சுதந்திரத்தின் மீது அவர்கள் விரும்பாத நிலையிலும் உள்நுழைபவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்கள் மீது சில கட்டாயங்களைத் திணிக்கும் பெற்றோர்கள் அதை அவர்கள் பிள்ளைகள் மீறும் போது அதை அடக்குகிற வல்லமையும் படைத்தவர்களாக விளங்குகின்றனர். அதுவும் பெற்றோர்களுக்கு ஒரே ஒரு பிள்ளை மட்டும் அமைந்துவிட்டால் இந்தக் கட்டாயத் திணிப்புகளும் அடக்கு முறைகளும் மிக அதிகம். இக்கதையின் நாயகியும் அவளின் பெற்றோருக்கு ஒரே பிள்ளையாதலால் தன் மனம் நிறைந்தவனை தன் பெற்றோர் தரும் உளவியல் அடக்குமுறையின் காரணமாக மணமுடிக்க இயலாமல் போகிறது. “பெரியவர்களாகப் பார்த்து எது செய்தாலும் அது நன்மைக்கே” என்ற ஒரு பழமைவாதக் கருத்து இதில் தகர்க்கப்பெற்று இருக்கிறது. பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களைப் பெற்றவர்களைப் புரிந்து கொள்ளவும் இந்நாவல் வாசிப்பு உதவக்கூடும் என உறுதியாக நம்பத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு இரண்டு உறவுகளின் மன ஓட்டங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
 
இந்நூல் வழியே, அன்பே வன்முறையாகும் சூழல் நிறைந்ததுதான் நம் குடும்ப அமைப்பு என உணரும் போது இறுக்கமான பயம் பற்றிக் கொள்கிறது. அன்பு எப்படி வன்முறையாகும் என்ற சந்தேகிப்பவர்கள் கூட இந்நாவல் வாசிப்பதன் மூலம் அவர்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம். கணவன் – மனைவி, காதலன் – காதலி, பிள்ளைகள் – பெற்றோர்கள் என அன்பு வன்முறையாகும் உறவுமுறைகள் அதிகம். அதை அதீத அன்பு என்றும் விளிக்கலாம். இதில் முக்கியமாக இந்நாவலில் பிள்ளைகள் – பெற்றோர்களின் அதீதமான அன்பு வன்முறையாகும் சூழல் எடுத்தாளப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகள் தங்களைப் புரிந்து கொள்ளவில்லையே எனப் பெற்றவர்களும், தங்கள் பெற்றவர்கள் தங்களைப் புரிந்து கொள்ளவில்லையே எனப் பிள்ளைகளும் குறைப்பட்டுக் கொள்வதனை அடிக்கடிக் காண இயலும். அக்கருத்தாக்கமே இந்நாவலுக்கு உரமாக அமைந்து எழுத்துக்களாக விளைந்திருக்கிறது. 
 
நாவலில் வரும் வசந்த் தன் காதலில் தீவிரமாக இருந்த போதும் யாரோ ஒரு பெரியப்பா (கதைநாயகி உமாவின் உறவினர்) வந்து சொன்னதும் வேலையைவிட்டுவிட்டு பெங்களூரு போவதும், படித்து வேலை யில் இருக்கும் பெண், அதுவும் பின் நவீனத்துவம் பற்றிப் பேசும் சுதந்திரமான ஒருத்தி “ நானொரு விளையாட்டு பொம்மையா” எனத் தன்னைப் பெண்பார்க்க வரும் போது பாடி தன் மனக்குமுறலை வெளிப்படுத்துவது, ரவுடி ஒருவன் உமாவை விரட்டுவது போன்ற சில நிகழ்வுகள் தமிழ் சினிமாவில் காண்பது போல செயற்கைத்தனமாக இருப்பது நாவலின் உண்மைத் தன்மையை பாதிக்கும் சறுக்கல் எனலாம். 
 
கதையின் நாயகி உமா காதலித்தவனை மணமுடிக்க முடியாமல் போய் பின் வேறொருவனை மணமுடித்து எதிர்பாரதவிதமாக அவனை இழந்து விதவையாகி மீண்டும் காதலனையே கைப்பிடிப்பது – நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு பழைய புரட்சிக்கதை போன்று தோன்றினாலும், பாத்திரங்களின் மன ஓட்டம் வழியே சொல்லப்பட்ட உட்கருத்துகள் சாதாரணமானவை அல்ல. அந்த உட்கருத்துகள் உளவியல் ரீதியாக வாசகர்களை அணுகி ஒவ்வொருவரும் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என சுயமதிபீடு செய்யத் தூண்டுகிறது.
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World