Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueஊதாத்தீ
 

 

- கவிஜீவன்

 

 

எப்போதும் போல்தான் தன்னைத் தருகிறது காற்று...

எப்போதும் போல் தான் விரிந்தேகிச் சிரிக்குது வானம்...

எப்போதும் போல் தான் இயற்கை தன் மடியை விரிக்கிறது...

என்றாலும் கூட கலைஞன் ஒருவன் மட்டுமே அதனைக் கண்டுணர்ந்து சட்டெனக் கூத்தாடிக் களித்தே பிறர்க்கு விண்டு வைக்க முயல்கிறான்.

   கலைகளின் ஆதி முதல்வனாயிருக்கின்ற கவியோ அதனைக் கண்டு சொல்லிவிடத் தவிக்கிறான்... துடிக்கின்றான். வினை பல புரிந்தே விளையாடிக் களிக்கின்றவைகள் அவதானிக்கவியலாத வெளியில் இருந்தும் அவனால் உலகுக்கு பிடிபடுகிறது.

   கவியின் தனித்துவம் இங்கேதான்.... இப்படித்தான் தன் உயிர் வாசம் பரப்புகிறது....! காண்கிறவைகள் அனைத்துமே கவிக்குத் தன்னைத் தருவதினால் பல்வேறான  கணங்களில் அவனால் சராசரிகளைப் போல் இருக்கவோ இயங்கவோ முடிவதில்லை.  தவித்துத் துடித்தலையும் தனது தனித்துவம் பற்றி எரிய கவியின் வெம்மைக்குள் கவிதை புகுந்து கொண்டு காளியாட்டம் ஆடுகிறது. சுற்றி நிற்கும் சூழலோ அவைகளின் சுபாவமோ. கூக்குரலோ - பசியோ - தாகமோ - காமமோ  இப்படி எவையெல்லாம் அவனை உரசிச் சிரிக்கின்றதோ அவைகள் அத்தனையுமே அவனோடு சேர்ந்து சிலிர்த்துக் கவியாகிறது. அதுவுங்கூட தனித்துவமும் தனக்கே ஆனதொரு புதிய முகமும் கூடிக் கொள்வதுவும் தவிர்க்க முடியாததும் ஆகிவிடுகிறது. கால காலமும் நிலைத்திருக்கின்ற காலந் தாண்டியும் வாழ்விக்கத் துடிக்கின்ற பேருணர்ச்சியின் வெள்ளமானது தாவித் தாவித் தாங்கி வருகின்றது. கரைகளை மீறிக் கலைகளாய்.... கவிதைகளாய்.........!

   அப்படியானதொரு பெரும் பயணத் தேடலில் நம்மால் நதியில் வந்த சுகமான சுவையானதொரு தீயின்            மிதவையாய் தென்றல் சுமந்த படகாய் அழகாய் நம்மைச் சுமந்த நாம் நம்மைப் பார்த்திடவே வந்து சேர்ந்திருக்கிறது வளையல் வம்சம் என்னும் நமது தஞ்சாவூர் கவிராயரின் கவிதைத் தொகுப்பு. ஆடம்பரமோ - படாடோபமோ ஜிகினா பொட்டு வேலைகளோ ஏதும் இல்லாது துவைத்துலர்த்தி மடித்து வைத்து அழகாயுடுத்தி உலா வரும் வசீகரமான  எளிமையோடு வந்து சேரும் தனிச்சுதந்திரம் ததும்பும் பூவின் மலர்ச்சியொடும் புதுவதாய் மனம்நிரப்பும் நகைப்பொடும் பளீரிடுகிறது தொகுப்பு.

   “ரொப்பு லேக்கேண்ட வேஸ்த்தும்மா...." என்று கூறியபடியே வாழ்ந்து தொலைந்த வளையல் கார நாயுடுவை நம் விட்டு வாசல் தாண்டி உயிரின் உள் கூடத்துக்குள் கொண்டு வந்து சேர்ப்பித்திருக்கின்ற விதமும் மேலும் அவரின் ஒவ்வொடு கவிதைத் தலைப்புக்குள்ளேயும் உள்ளடங்கிய கவிஞரின் கவியுலகப் புதுப்பொலிவையும் விரிந்தேகுகின்ற தத்துவப் பின் புலமும் விசாரமும் தாய்மையின் தாளாத் தனிச் சுகமும் பிறப்பின் வழியூடாக அவர் கண்டுணரத் துடிக்கின்ற பெருஞானக் கேள்விகளோடும், தம்மையே கரைத்து அதனை அத்துணை உட்கூடுகளிலும் ஒளிர்ந்தும் பறந்தும் உய்ப்பதும் துய்ப்பதுமானதொரு மென்னுயிர் வழிந்தோடுகின்ற சொந்தத்தனிச் சுகத்தின் ஓர்மைத்தண்மையும் தவ விளைச்சலுமாக ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று புற வயத்தினொடு பொருந்திட வழியேயிலாது பொழுதுகள் எல்லாவற்றிலும் முட்டியும் மோதியும் சாய்ந்து விடுகின்ற ஆற்றொணாக் கொடுமையினையும் இயற்கையின் சகலவிதமான விவரணங்களோடும் நிலாப் பொழிவிலும் உன்னத ஒளிக் கீற்றின் அகக்குளியலிலும் ஓடியோடிச் சலிக்காது அலைகளோடு முயங்கியும் இயங்கியும் தம்மைச் செலுத்தி விடுகிற தன்மையினையும், இழப்பின் வலிகளையும் தாங்கிப் பிடித்துக் கொண்டாடுகின்ற கலைஞனுக்கே உரிய கம்பீரத்திலும் தீர்க்கத் திர்க்கத் தீர்ந்திடவே  தீர்ந்திடாத அவனுடைய அழகான திமிரையும் பிரவாகமெடுக்கிற  பனியின் அகயிருளையும் அவதியாய் ஆகாயம் தூண்டில் பிடிக்கின்ற பறவையினங்களின் கானகச் சுகத்தினையும் பேசிப் பேசியும் பேச ஆளற்றுப்போன பின்னருங் கூட பேசவே பேச்சற்ற பெருஞ்சுக மெளனத்திற் வசீகரமான அலையடித்துக் கரை உடைக்கத் துடிக்கின்றதோரு அற்புதமான அகவயப் பிரபஞ்சத்தின் தானே தன்னை எரித்து எரித்துத் தம்மையே கண்டடையத் துடிக்கிற சித்திரச் சொல் அகத்தினையும் இயற்கையின் சகல மூலைகளில் இருந்தும்  தம்மைப் பொதிந்து கொள்ள விழைவனவுமாக  விடுகின்ற கவிஞரின் கனவும் நினைவும்  கலந்தொரு தனி மயக்கத்தின் விஷயார்த்தர்களுக்கே உரிய முடிவற்ற மோனச் சுழலுக்குள் பெற்ற தகப்பணின்  ஸ்பரிசத்தையும் பின்னர் வழியூடாக விளைந்த பேரன் பேத்திகள் கமல வாய் திறந்து வெளிவந்து மனம் நிரப்பும் பிஞ்சுகளின்  சொற்களின் வழியே நித்தமும் புதிதாய் பிறப்பெடுப்பதும் சகிப்பதும் சுவாரசியமான முதுமையின் நுனி தொட்ட மறு கணமே மனதைக் கவ்விப் பிடிக்கும் கடந்து போய் விட்ட பருவங்களின் கனவுச் சுகங்களும் ஆஹா.... ஆஹா... என்கிற குரல் எழும்ப அப்பாவோடும் தன்னோடும் கூடவே நம் எல்லோரையும் ஒரு சேர நனைந்து குளிப்பாட்டி விடுகிற தோடு யாளிகள் கற்பனையில் அவர்களின் குதிரை ஆனந்தமாக சவாரி செய்து கொண்டு கூழாங்கற்களின் உள்ளாழங்களோடும் அவரின் உயர் சேமிப்புகளோடும் நம்மை உள் செலுத்துகிறது.

   தத்துவப் படிகள் வழியேறிக் உள்படர்ந்த மழலையின் சுகத்தினையும், சொல்லொணாச் சுகத்தினையும் புல்புல்தாராவோடு பேசியபடியே மழலைகள் கேள்விகள் வழியாகத் தூறும் ஒரு மழையாகி அணில்களையும், காக்காய்களையும், தவளைகளையும், கிளிகளையும் தூரத்தே தெரிகிற மொட்டை மாடிப் பெண்ணின் வழியே வந்து விடுகின்ற ஆற்றலையும் கட்புலனுக்கு அப்பாலே வெறுமனே கண்டு கொள்ளாத சாலைகளின் ஓரம் தேமே என்று நின்று கொண்டிருக்கின்ற (லாரியினூடாக) வாகனத்தினூடாக எழும்புகின்ற தம்முடைய வாழ்வின் விசாரத்தையும் படிமமாக்கலின், கள்ளங்களையும், தேவையற்றப் பொய்மைக் கற்பிதங்களையும் தூர எறியச் சொல்லி விடுகிற கவிஞர் குரலாக எளிமையின் இயல்பான தனிச் சுதந்திரத்தையும் தனது ஒவ்வொரு கவிதையினூடாக வெவ்வேறு விதமான படிநிலைகளைக் கடந்தும் புது உயரத்திற்குச் செல்வதோடு வாசிப்பவரின் உள் வெளியில் வெகு அனாயஸமாகப் பதிந்து கொண்டு எழது...எழது....எழது...எழது....எழது..என்று எழதுத்துண்றும் தன்முனைப்பையும் ஓயாத உந்துதலையும் தரவே தருகிறது.

   கடித இலக்கியர் / கதை சொல்லி / கட்டுரையாளர் / சிறுகதை ஆசிரியர் / தேர்ந்த படிப்பாளி / செறிவான படைப்பாளி / அபாரமான  ரசிகர் / இதழாசிரியர் / கவிஞர் / பெருஞ்கலைஞர் / நடிகர் என தஞசாவூர்க் கவிராயர் அவர்கள் தனது வாழ்வைப் பழக்குவதல்லாது அவர்களின் வாழ்வதனையே கலையாக்கித் தருகிறார். அவர் தெர்ந்தெடுத்திருக்கின்ற மாயக் கோணம் அவர்களின் மனம் போலே சுகம் வழங்கிச் சோடிக்கிறது. அவர் விழிவழி ஒளிர்கிற சீறாய் குளிர்விக்கிற அற்புதமான எளிமையின் அலங்காரமும் அதனுள்ளே கணன்றெரியும் பெருஞாணப் நெருப்பையும் குன்றாத குதூகலத்தோடு கொண்டாடிக் கொண்டுவந்து தருவதிலே குழந்தைகளின் தன்மையினையும் காணத் தருகிறார்.

 படைப்பாளி தனக்குப் பட்டதை அப்படியே வாசகருக்குப் புரியும்படி தந்துவிட வேண்டும் என்கிற நெறியில் வாசகரின் குரல்களுக்கும்  நவீன படைப்பாளிகளுக்கும் ஏககாலத்தில் பொருந்துகிற பெரும் படைப்பாளின் சொல்லா உள்ளத்தையும், தமது எழுத்தின் மூலமாக கொண்டு வந்து சேர்ப்பித்திற்குகிற விதத்தில் தமிழ்ச்கழலில் தனது இயல்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு  இருக்கின்றார்.

   என்னையும் எளியார் போன்ற என் ஹ்ருதயர்களையும் இன்னும் தேட வைக்கிறார். தீயென விரிந்தேகி விசும்பின் மேலுறவும் நிலலொடும் அச்சங்கேத் தங்கும் சூரியளோடும் ப்ரபஞ்சமாகி விரிந்துக் எல்லா விதத்தினையும் வாழ்ந்து  கொண்டாடுகிற ஆச்சரியங்கள் உறைந்த இதே இடத்தினூடாக அவரின்  அந்தராத்மா பதிந்துறைந்து உலவிக் கொண்டிருக்கிற காற்றின் அத்தனை திக்கிலும் பொதிந்து / பொறித்தெடுக்கப்பட்டிருக்கிறது வளையல் வம்சம்.

 

வளையல் வம்சம், தஞ்சாவூர் கவிராயர், அனன்யா வெளியீடு, நிர்மலா நகர்,  தஞ்சாவூர்.

 

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World