Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueவரலாற்றுக்கருவூலம்
 

   நாடு விட்டு நாடு - நூல் மதிப்புரை 

   து.ரேணுகாதேவி

    சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளக் கோவிலுக்கருகே இலுப்பைக் கிணறு என்னும் ஒரு சிறு கிராமத்திலிருந்து  தோட்டக் கூலியாக  மலேசியாவுக்குச் சென்று குடியேறிய குடும்பத்தின் கதையே ‘நாடு விட்டு நாடு’. மலேசியாவுக்குக் குடியேறியவர்களில் இரண்டாம் தலைமுறையைச் சார்ந்த  திருமதி. முத்தம்மாள் பழனிசாமி அவர்கள் ‘தன் வரலாறு ’ ஆக இதனை உணர்ச்சி ததும்பத் திறம்படக் கூறியுள்ளார்.
 
   இது குடும்ப வரலாறு மட்டுமன்று, சென்ற  நூற்றாண்டில் தமிழகத்தினின்றும்  மலாயாவுக்குக்குடியேறிய கொங்கு வேளாள சமூகத்தின் வரலாறுமாகும். குடியேறிய நாட்டில் கரைந்து விடாமல் தங்கள் தனித்தன்மையோடு வாழும் மக்களைப் பற்றி இந்நூலில் அறியமுடிகின்றது .

 
  கிராங்களில் நடைமுறையில் இருந்த வாழ்க்கை முறை, ஜாதிப் பிரச்சனை, அரசியல், வறுமை, சமுதாயப் பிரச்சனைகள் எல்லாம் ஒரு வகையில் மக்களை நாடு விட்டுச் செல்ல வழிவகுத்தன. மலேசியாவில் ஒரு கொங்கு வளநாடு அமைத்து உள்ளமையும் அங்கு, கொங்கு வேளாள சமுதாயம், கொண்டு சென்ற பண்பாட்டு மரபை இழந்து விடாமல் வாழ்வதையும் இந்தத் தன் வரலாற்று நூல் நன்றாகப் புலப்படுத்துகின்றது.
மக்கள் கடலைக் கடந்து வந்தார்கள், மலையைக் கடந்தார்கள், உடைமைகளை விட்டு ஊர்விட்டு ஊர் வந்தார்கள், ஆனாலும் அவர்களிடம் ஜாதிவெறி, கிராமத்து வாழ்க்கை முறைகள், பழைய சம்பிரதாயங்கள் எல்லாம் ஒட்டிக் கொண்டு வந்தன. நாடு கடந்து வந்தாலும் நமது மரபும், பண்பாடும் நாடு கடந்தும் வலிமைபெற்றே வந்தன எனலாம்.
கொங்கு வேளாளர்களின் மனப்போக்குகள் எல்லாம் இந்தத் தன் வரலாற்று நூலில் மக்கள் குணச் சித்திரங்களாகவும், நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளன.
 
ஏராளமான மக்கள், கட்டிய துணியுடன் பெண்டு பிள்ளைகளையும், மனைவி மக்களையும் விட்டுத் திரவியம் திரட்டும் கனவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டு செல்வம் கொழிக்கும் மலாய் நாட்டுக்குப் பயணம் செய்தனர். மலாயாவில் ரப்பர் தோட்ட்த்தில் வேலை செய்யத் தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து அதிக ஆட்களைக் கொண்டு வந்தார்கள்.
 
வெள்ளைக்காரர்களின் ஆராய்ச்சிப்படி தென்னிந்தியர்களிடம் அடக்கம், பணிவு, விசுவாசம், தன்னம்பிக்கை இல்லாமை, இப்படி அவர்களுக்குத் தேவையான எல்லாக் குணங்களும் இருப்பதாகக் கருதப்பட்டது. அதனால் கூலிகளாக தமிழர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
 
இலங்கையில் தென்னிந்தியத் தமிழர்களை வேலை வாங்கிய அனுபவங்களினால் தமிழர்களை மலாய் நாட்டுக்குக் கொண்டுவர ஆர்வம் காட்டினார்கள். 1887 ல் சர் பிரெடெரிக் வெல்டு என்பவர் தமிழர்களை, அமைதியானவர்கள், இவர்களை எளிதில் அடிமைப்படுத்திவிடலாம்; இவர்களை அதிகப்படுத்துவது நல்லது என்று வர்ணித்தார்.
 
தமிழர்களின் அமைதித்தன்மையும், கொடுத்த கூலியை மறுபேச்சின்றி வாங்கிய தன்மையுமே வெளிநாடுகளுக்குக் கூலிகளாக இறக்கியது. அவ்வாறு கப்பலில் திரை கடலோடித் திரவியம் தேடப் புறப்பட்ட சஞ்சிக்கூலிகள் ஆடுமாடுகளைப்போல் அடைந்து கிடந்தனர். இந்தப் பயணத்தின் போதுதான் நூலாசிரியரின் அய்யன் உணவு போதாமல், மறுபடியும் தட்டுடன் வரிசையில் நின்று மர அகப்பையால் அடிபட்டதாகவும், திரும்பிப் போகவும் முடியாமல் பயணத்தை வேதனையோடு அனுபவித்ததை தன்வரலாறு வாயிலாக அறியமுடிகின்றது.
 
தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளை 1926 & இல் இருந்து 1946 வரையிலும் சர்வாதிகாரம் செய்தவர் ராபர்ட் சார்லஸ் கிராண்ட் என்னும் ஆங்கிலேயர். தோட்டத்தில் கொடுங்கோல் ஆட்சி, இந்தியத் தொழிலாளிகள் யாவரும் அடிமைகள் போல் நடத்தப்பட்டனர். ஒரு சமயம் வள்ளியம்மாள் என்ற பெண் தொழிலாளி வேலை செய்யும்பொழுது, அவரது தாலி இளம் இரப்பர் நாற்றில் மாட்டி செடி ஒடிந்ததால், இந்திய பெண்கள் யாவரும் தாலிகளை கழற்றி விட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிறகு அச்சட்டம் அகற்றப்பட்டாலும் மக்களின் அடிமைத்தனத்தை எடுத்தியம்ப ஒரு சான்றாக விளங்குகிறது. அதேபோல் பச்சையப்பக் கவுண்டர் என்பவர் காலில் காலணியுடன் நடந்து சென்றதற்கு ஆங்கில துரை காலணியைக் கழற்றி கவுண்டரின் கழுத்தில் மாட்டி ஒடச் செய்த நிலையையும் இத்தகைய பலதுன்பங்களை அனுபவித்தே தம் முன்னோர் வாழ்ந்துள்ளதையும் இந்நூலின் வழி அறியலாம்.
 
திருட்டுக் குறவனை வஞ்சினம் கூறிக் கொன்றுவிட்டுக் குடும்பத்தையும் தவிக்கவிட்டு ஆயுட்காலம் முழுவதும் தலைமறைவாக வாழ்ந்த அப்பாரய்யன் வெடிக்கார குப்பண கவுண்டர், அப்பாவியாகச் சிறைவாசம் அனுபவித்த கைதியாகிய அப்புச்சி, சிறு வயதிலேயே குடும்ப பாரத்தைத் தாங்கித் தாலிகட்டாத மனைவிக்காகப் பஞ்சாயத்தார் முன் முதல் மனைவியின் தாலியைப் பறித்துக் கொண்ட, குழந்தைகளின்மேல் பாசத்தை பொழியும் அப்பா பழனிசாமிக் கவுண்டர், கட்டிய தாலியைக் கழற்றி வைத்துவிட்டு இரவோடு இரவாகத் தந்தையின் வீட்டுக்கு ஒடி வந்து முட்டாள்தனமும் முரட்டுக் குணமும் உடைய கண்வனிடமிருந்து விடுதலை பெற்றுப் பின் தாலிகட்டாத மனைவியாக வேறொருவரிடம் பெருவாழ்வு வாழ்ந்த அம்மா பழனியம்மாள், தன் கண்வனை வேறொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுத்து பொறுமை காத்த பெரியம்மா, பழிவாங்கும் உணர்ச்சியுடைய முன்கோபக்காரரான தந்தை பழனிசாமிக் கவுண்டர், குடும்ப உறவில் அழையாமலேயே மூக்கை நுழைத்துக் கலகம் செய்யும் சொந்த பந்தங்கள் ஆகிய இவர்கள் ஏதோ வகையில் கொங்கு வேளாள மரபின் பண்பாட்டுக் குணாதிசியங்களின் மாதிரிகள்.
‘நாடு விட்டு நாடு‘ என்ற இத்தன்வரலாறு வருங்கால சந்ததியினர் தங்கள் முன்னோர்கள் வாழ்க்கையில் பட்ட இன்னல்களையும், செய்த தியாகங்களையும் மனதில் நிறுத்தி தங்கள் வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொள்வர் என்பதற்காகதான் இந்நூல் இயற்றப்பட்டிருப்பதாகக் கருதலாம்.
 
இந்நூல் எளியநடையில் அமைந்து. கொங்கு வேளாளர்களின் பண்பாட்டை உணர்ந்தும் சிறந்த ஆவணம். நுட்பமான அவதானிப்புகள், துல்லியமான விவரணை, நகைச்சுவை மிளரும் மொழிநடை கொண்ட தன்வரலாற்று நூல். பல நாடுகள், இனங்களிலிருந்து வந்த மக்கள் திருமண பந்தத்தால் ஒரு குடும்பமாகச் செழித்த வண்ணமயமான வரலாறு இது. இந்நூல் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்று கருவூலம் எனலாம்.

நாடு விட்டு நாடு & [தன் வரலாறு]  முத்தம்மாள் பழனிசாமி
யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை & 14, டிச & 2007
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World