Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueமாண்புமிகு மனிதர்கள்
 

                                              து.ரேணுகாதேவி

இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்துமே அதிசயமானவை மட்டுமல்ல. மதிக்கதக்கவையுமே. மனிதனாய் பிறப்பெடுத்தும் மனிதர்களோடு  மனிதராய் வாழமுடியாமல் சமுதாயத்தினரால் ஒதுக்கப்பட்ட ஜீவன்களாக  விளங்கும்  திருநங்கைகளின் உணர்வுகளையும், இடர்ப்பாடுகளையும், துன்பங்களையும் தனது அடிப்படை  உரிமைக்காக போராடும்  போராட்டங்களையும் மக்கள் மத்தியில் அவர்கள் பற்றிய கோர, வக்ர பார்வையினையும்  மனிதராக  வாழ வழி விடுங்கள் என்ற கதறலையும், கோரிக்கைகளையும், தனக்கென குடும்பம், சமுகம் இல்லாததால் தாங்களாகவே தங்களுக்கான கலாச்சாரத்தையும், சமூகத்தையும், குடும்பங்களையும் உருவாக்கிக் கொண்டும், வாழ முடியாமல் போராடி வரும் போராட்ட வாழ்க்கைகளை முன்னிறுத்துவதே  இக்கட்டூரையின் நோக்கமாகும்.

இலக்கியங்களில் திருநங்கைகள் பற்றிய செய்திகள்:

            இலக்கியங்கள் வரலாற்றுக் கருவூலமாக திகழ்கின்றன. அத்தகைய இலக்கியங்களும் திருநங்கைகளுக்கு ஒரு தனிப்பட்ட இடத்தை வழங்கவில்லை என்பதை அறியமுடிகின்றது. இயற்கை உலகில் ஓரறிவு முதல் ஆரறிவு வரை பல உயிர்களைப் படைத்துள்ளது. எல்லா உயிர்களினும் உயர்ந்த நிலையில் மதிக்கப்படுபவது மனிதமே. அத்தகைய இயற்கையின் செயல்பாடுகளை புரிந்துக் கொள்ளாமல் இருப்பதும் மனிதர்கள் தான்.

            நம்மைப் போலவே ஐயிருமாதங்கள் கருவில் இருந்து பெற்றோர்களின் கனவுகள் மெய்ப்பட குழந்தையாக மண்ணில் தடம் பதிக்கின்றனர். ஆனால்  குரோமோசோம்களின் வினோதமான செயல்பாடுகளால் ஆண் உடலில் பெண் உணர்வும், பெண் உடலில் ஆண் உணர்வும் அமைந்து பிறந்ததால் தன் பெற்றோர்களாலும், சமுதாயத்தாலும்  அறவே வெறுத்து ஒதுக்கப்படுகின்றார்கள்.

            அறியாத வயதில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் தருவாயில் சமூகத்தில் கேலிப் பொருளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். திருநங்கையர் பற்றிய தவறான கருத்துகள் பன்நெடுங்காலந் தொட்டே வளர்ந்து வந்திருப்பதை இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

            திருநங்கையர் உணர்ச்சியற்றவர்கள் அல்லது எதற்கும் பயனற்றவர்கள் என்று கருதும் குறிப்புகள் நம் இலக்கியங்களில்  இடம் பெற்றுள்ளன.

            “ ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ

பேடியர் அற்றோ பெற்றியின் நின்றிடின்” & [3;20 & 4- -]

என்று  திருநங்கையர்களைப் பற்றி  மணிமேகலை கூறுகின்றது.

 

ஏஏ இவளோருத்தி பேடியோ” & 2

என்னும்  தொடர் இலக்கணச் சான்றுகளில் கையாளப்படுகின்றது, “அச்சமும்  பேடிமையும்என அச்சத்தோடு பேடிமைகூறப்படுகின்றது. பேடிஎன்பதற்கு அச்சம்என அகராதிகள் பொருள் கொடுக்கின்றன. சமுதாயத்தினரால் அலி, ஒன்பது, பொட்டையன், பொம்பளச்சட்டி, பேடி என்ற அவச்சொற்களால் நகைப்புக்கு உள்ளாகின்றனர், திருநங்கையர்.

            இலக்கண ஆசிரியர்களும் ,உரை ஆசிரியர்களும் திணை, பால், பகுப்பின்  போது திருநங்கையரைக் குறிக்கும் சொற்கள் விஷயத்தில் தடுமாறுகின்றனர். தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில்,

பெண்மை சுட்டின் உயர்திணை மருங்கின்

 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் & 3 [நூற்: 4--]

என்னும்  நூற்பாவில் இதனைப் பற்றி பேசும் போது;

            “ உயர்திணை மருங்கின் பால் பிரிந்திசைக்கும்

என முடிக்கிறார். அவருடைய  கருத்து திருநங்கையரை உயர்திணையாகவும், அவர்களின் இயல்புக்கு ஏற்றப்படி ஆணாகவோ, பெண்ணாகவோ குறிப்பிடலாம் என்பதுமாகும்.

            தொல்காப்பியத்திற்குப் பின், பல நூற்றாண்டுகள் பின் உருவமான நன்னூல் ,

            “பெண்மைவிட்டு ஆண்அவாவுவ பேடு ஆண்பால்

            ஆணைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்

            இருமையும் அஃறிணை யன்னவும் ஆகும்” -& 4 [நூற்: 264]

என்ற நூற்பாவில் பெண்தன்மை குறைந்து, ஆண்தன்மை மிகுந்திருந்தால் பேடிஎன்கின்ற ஆண்பாலாகவும், ஆண்தன்மை குறைந்து பெண் தன்மை மிகுந்திருந்தால் அலிஎன்கின்ற பெண்ணாகவும் கூறுகிறார்.

            பொதுவாகக் கூற வேண்டுமாயின் அஃறிணை போல் வினைமுடிவு கொடுக்க வேண்டும் என்கிறார். அதாவது இருமையும் அஃறிணைஎன்பதற்கு அலிவந்தது, பேடி வந்தது என உரையாசிரியர்கள் அஃறிணையாக கருதி அழைத்ததைத் தமிழ் இலக்கணம் பதிவு செய்திருக்கின்றது.

            மனிதனாக உருவெடுத்தப் போதும் புழுவைவிட கேவலமாக நடத்தப்படுபவர்களாகத் திருநங்கையர்கள் ஆளாகின்றனர். சினிமா படங்களும், பாடல்களும் அவர்களைக் கேலிச் சித்திரங்களாகவே சித்தரித்து வருகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை நகைப்புக்குரிய பொருளாகவே கருதப்பட்டு வருகின்றனர்.

            திருநங்கையர்கள் பற்றி புத்தியில் தங்கிவிட்ட அறுவெறுப்புக்கும் அச்சத்திற்கும், இளக்காரத்திற்கும் ஆளான அடக்குமுறைகளை அறுத்து எறியவே ரேவதி என்னும் திருநங்கை தனது அவலங்களை, பிரச்சனைகளை, குடும்ப  எதிர்ப்பினை, சமுதாயத்தின் கொடூரப் பார்வையினைப் பதிவு செய்திருக்கின்றார்.

 

குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் திருநங்கைகள்:

            குழந்தைகள் நாட்டின் கண்கள் அவர்கள் சமுதாயத்தில் சிறப்பிடம் பெற வேண்டுமாயின் பெற்றோர்கள் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால், திருநங்கையர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகப் பெற்றோர்களாலும், குடும்பத்தினராலும் ஒதுக்கப்படுகின்றனர். குடும்பத்தினராலேயே அவர்கள்

நிராகரிக்கப்படுகின்றனர்.

            “நீ இப்படி அரவாணியா ஆயிட்டு எங்க வம்சத்தையும், குடும்பத்தையும் கெடுக்க வந்தியா? ” ன்னு ரெண்டு பேரும் சேர்ந்து திட்டு அடித்தார்கள்.

            “வீட்டுக்கு வர்றதுக்குள்ளே நீ செத்துப் போயிடனும்ன்னு விஷத்தக் குடுத்து என்னைக் குடிக்கச் சொல்லி கொடுமைப் படுத்தினாங்க”5 எனும் அரவாணியின் குமுறல்கள் பரிதாபத்திற்குரியது. [ ப&28] [உணர்வும், உருவமும்].

            தந்தையின் கேலிக்கு ஆளாவது கொடுமையிலும் கொடுமை. தன் குடும்பமே தன்னைக் கேவலமாக பார்ப்பது நெஞ்சைக் குதறும் செயல். ஏண்டி! என்னாடி நம்ம பையன் பொண்ணு மாதிரியே நடக்கிறான். நமக்கே எட்டுப் பொண்ணுங்க, இதோடு சேர்த்து ஒன்பது பொண்ணா? ஒன்பது மாதிரியே பண்றானே?” & 6 என்று கேலி செய்வது வேதனைக்குரிய செய்தியாக திருநங்கையரே  பதிவு செய்துள்ளனர்.[ப.26] [உ.உருவமும்]

            திருநங்கையர்கள் தனது உணர்வுகளால் தங்களை பெண்களாக உலகிற்கு காட்டிக்கொள்கின்றார்கள். இது அவர்களின் தவறு இல்லை. குரோமோசோம்களின் விளைவு. ஆனால் குடும்பமோ இவர்களை நிராகரிக்கின்றது.

            “அண்ணன் வாசல் கதவைத் தாழ்ப்பாள் போட்டு விட்டுக் கிரிக்கெட் பேட் எடுத்து வந்து என்னைத் திட்டியபடி அடித்தான். ஒன்பதுங்க கூடச் சேருவியா, பொடவ கட்டுவியா, டான்ஸ் ஆடுவியா, இப்படிச் சொல்லிக்காம ஓடி ஓடிப் போற. உன்ன அடிச்சே சாவடிக்கின்றேன்என்றுக் கூறிக் கண்மண் தெரியாம  பலமா அடித்தான்”&7 திருநங்கையர்களின் நிலை இன்று இதுதான். வேதனையைக்குரியவர்களாக, குடும்பத்தினராலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றனர். [பக்&48] [உ.உருவமும்]

 

சமுதாயத்தினரால் நிராகரிக்கப்படும் திருநங்கையர்கள்:

            திருநங்கையர் குழந்தைப் பருவத்திலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆட்படுகின்றார்கள், என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அதுவும் பள்ளிப் பருவத்திலே தான் ஒரு திருநங்கை என்று கூட தெரியாத பருவத்தில், பள்ளி தலைமையாசிரியர் திருநங்கை என்பதை அறிந்து பாலியல் தொந்தரவு தருவது நெஞ்சை அழுத்தும் தகவலாகும்.

            மாணவர்களின் மத்தியில் திருநங்கை என்ற ஒரு காரணத்திற்காக தெய்வத்திற்கு நிகரான குருவே நீ உலோகம் இல்லடா அலோகம்” & 8 என்று மாணவர்களின் நகைப்புக்கும் கேலிக்கும் ஆளாக்கிவிடுவதை பதிவு செய்துள்ளனர். [ப.21] [உணர்வும்,உருவமும்]

            சமுதாயத்தின் கேலிப்பார்வையாலும், வேலைகள் மறுக்கப்படுவதனாலும் வாழவழியின்றி பாலியல் தொழிலிலும், கடை, கடையாக பிச்சைக்கேட்பதிலும் தனது வாழ்க்கையை  ஓட்டுகின்றனர். பாலியல் தொழிலிலும் பலரின் ஏமாற்றத்தையும் அசிங்கத்தையும், காவல் துறையின் வன்முறைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. வாழ வழியில்லாததால், உழைத்து வாழவும் முடியாமல் வியாபாரம் ஏதேனும் செய்து பிழைக்கலாம் என்றாலும்,

            “ஏய்...உஸ்..உஸ்.. என்று மூட்டை தூக்குறவங்க முதல் கொண்டு கேலி பண்ணுவாங்கஎங்களை எல்லோரும் வித்தியாசமாக தான் பார்க்கிறார்கள்என்ற செய்தியை பதிவு செய்துள்ளனர். &9

            அதுமட்டுமல்லாமல் கடைக்கேட்க [பிச்சை] போகுமிடத்தில் தீண்டுவது, அழுகிய தக்காளி, முட்டை போன்ற பொருள்களை வீசியடிப்பது போன்ற செயல்களுக்கும் ஆளாகின்றனர்.

திருநங்கையர்களுக்கு இழைக்கப்படும் அவலங்கள்:

            திருநங்கையர்களின் மனதை வாட்டும் வேதனை, வலி, ஆதங்கம், சோகம், கோபம், உணர்ச்சி போன்றவை வெளிக்காட்ட முடியாத அவலநிலையே. Êசாலையில் நடந்து சென்றால் கேலி செய்வதும், காவல்துறையினரின் சித்ரவதைகளும், கழிப்பிடங்களுக்குச் சென்றால் கண்டுபிடித்து அவமானப் படுத்தப்படுவதும், கடைத் தெருக்களில் அழுகிய தக்காளியை வீசி அவமதிப்பதும், பெற்றோர் முதல் காதலனாக, கணவனாக, தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் பணத்திற்காகவும், பாலியல் சுரண்டலுக்காகவும் ஏமாற்றுவதுமாக தாங்கமுடியாத துக்கங்களை அனுபவித்து வருகின்றனர்.

            ஆணாகப் பிறந்து, பெண் உணர்வால் வாழ முடியாமல் தன் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்காக அறுவை  சிகிச்சை என்னும் அவலத்தில் சிக்கி தனது ஆணுறுப்பை அகற்றி பெண்ணாக மாறுவதற்காக அவர்கள் படும் வேதனை சொல்லவும் முடியாதுநாயினும் கீழாக நடத்தப்படுவதோடு எவருடைய ஆதரவும் இன்றி அல்லல்படுத்தப்படுவதையும் பதிவு செய்துள்ளனர்.

            சொத்துரிமை மறுக்கப்படுவது வங்கிக் கடன் நிராகரிக்கப்படுவது, ஓட்டுரிமை, ஓட்டுனர் உரிமம் போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

            பெற்றோர்களால் புறக்கணிக்கப்படுவதும், சமுதாயத்தினரால் அங்கிகரிக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுவதும், சட்டத்தால் தண்டிக்கப்படுவதும் வாழ வழியின்றி தவிக்கும் இவர்கள் இறுதியாக கடை, கடையாய்  பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் செய்வதும் உரிமையாக்கப்பட்டு விட்டது.

 

 

திருநங்கையர்களின் உறவுமுறைப் பண்பாடு:

            திருநங்கையர்களுள் சாதி, மதம், கடவுள் என்ற பாகுபாடுகள் இல்லை. சாதி வித்தியாசம் இல்லாமல் வாழ்கின்ற ஒரே இனம் திருநங்கையர் இனம் தான். குடும்பத்தினரும், சமுதாயத்தினரும் ஒதுக்கியதால் திருநங்கையர்கள் தங்களுக்குள்ளவே உறவுமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.

 

 

            படுதாதி & ஆயாவின் குரு அம்மாச்சி

            தாதாகுரு & பாட்டியின் குரு ஆயா

            நானாகுரு & குருவின் குரு பாட்டி

            குரு     & அம்மா

            காலா குரு & குருவின் சகோதரிகள்

            குருபாய் & சகோதரிகள்

            படாகுருபாய் & பெரிய சகோதரி

            சோட்டா குருபாய் & சிறிய சகோதரி

            சேலா & மகன்

            நாத்தி சேலா & பேத்தி

            சந்தி சேலா & கொள்ளுப்பேத்தி

            சடக்நாத்தி & கொள்ளுப்பேத்தியின் மகள்

இது போன்ற உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்து இதில் பெரியவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்வதோடு, அவர்களுக்கு மரியாதையும் கொடுக்க வேண்டும். பெரியவர்கள் எதிரில் வந்தால் பாவ்படுத்திசொல்ல வேண்டும். அவர்களின் மீது நாம் கட்டி இருக்கும் துணி படக்கூடாது. சொம்பில் தண்ணீர் கொடுத்தாலும் மரியாதையுடன் கொடுக்க வேண்டும். மூக்குத்தி, தோடு, கொலுசு, வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது. தலைமுடியை வெட்டக் கூடாது. முகத்தில் முடியை ஷேவிங் செய்யக்கூடாது. கடைக்கேட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் குருவுக்கும், நானிக்கும் பணம் கொடுக்க வேண்டும். அவர்களே தேவையானதை வாங்கிக் கொடுப்பார்கள்”. &10 இவ்வாறு அவர்களுக்குள்ளாகவே உறவுமுறைகளையும், பண்பாடுகளையும்  உருவாக்கி குடும்பமாக  வாழ்கின்றனர். விருப்பம் இல்லாதவர்கள் தனியாகவும் வாழலாம், என்ற செய்தியினையும் பதிவு செய்துள்ளனர்.[ப & 57].

திருநங்கைகளின் கோரிக்கைகள்:

                        திருநங்கையர்கள் தங்களுக்கென வசதியாக வாழ மாளிகைகள், வைரங்கள், வைடூரியங்கள் கேட்கப் போராடுவது இல்லை. இயற்கையாகவே வந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் எங்களையும் ஒரு பெண்ணாக அங்கீகரித்து ஒரு பெண்ணுக்கு உண்டான ஆணுக்கு உண்டான உரிமைகளைக் கொடுங்கள்என்று தான் கேட்கின்றனர்.

                        திருநங்கைகளும் நம் நாட்டின் குடிமக்கள் தானே. அவர்களுக்கான ஓட்டுரிமை, சொத்துரிமை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே மனிதராக வாழ முடியும். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு, குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்தல், திருமணம் செய்து கொள்ளும் உரிமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே போராடி வருகின்றனர்.

முடிவுரை:

            வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருப்பது வாடிக்கையானதே; ஆனால் வாழ்க்கையே போராட்டமாக அமைவது திருநங்கையருக்கே. அவர்களையும் மனிதராக மதித்து அவர்களுக்கான உரிமைகளை அளிப்பதனால் அவர்களாலும் சமுதாயத்தில்  தலை நிமிர்ந்து நடக்க முடியும். Êசமுதாயத்தில் மதிப்பிற்குரியவர்கள் தான் திருநங்கைகளும் என்கிற புரிதலுக்கு பொதுப்புத்திச் சமூகம் வர வேண்டும். அதுவே சிறந்த அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

 

 

 

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World