Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueமாற்றி எழுதப்படும் மானுட முகவரிகள்
 

வாழ்நாளில் ஒரு முறையேனும் திடீரென்று கீழே விழுவது போன்று கனவு காண்பது ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாது என்று சில உளவியளாளர்களை மேற்கோள் காட்டி பேராசிரியர் பிரியகுமாரன் கூறுவார். நமது மூதாதையர் ஆதிமனிதராக இருந்த போது, வீடு கட்டிக்கொள்ளத்தெரியாத காலத்தில், குகைகளில் வசிப்பதற்கெல்லாம் முன்பு, வனவிலங்குகளுக்குப் பயந்து மரக்கிளைகளில் தூங்கிவந்த போது, உள்ளுறைந்த அச்சமே அவ்வாறான கனவு அவர்களுக்கு வந்து, அதன் பின்பு மரபணுக்களில் பதிந்து நமக்கு இன்று வரை அது போன்ற கனவு ஒரு முறையாவது வருவதாகக் கூறுகின்றனர்.

இன்றும் தெருச்சண்டைகளில் கற்களை எறிந்து சண்டை போடுவதை நாம் கண்ணுருகிற போது கற்கால ஆயுறமாக கற்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் தொடர்ச்சி இன்று வரை நீள்கிறது என்பதைக் காணலாம். எனவேதான் மலையாளக்கவி சச்சிதானந்தன் நினைவில் காடுள்ள மிருகத்தை அவ்வளவு எளிதில் பழக்க முடியாது என்று எழுதுகிறார் போலும். காக்கைச் சோறு குறித்தும் அப்துல் ரகுமான் இப்படியொரு செய்தியை ஊகித்துத்தருகிறார். காக்கைக்குச் சோறுவைத்து அவை உண்ட பின் நாம் உண்ணுகிற முறைக்கு இடைக்காலத்தில் பித்ருக்கள் அதாவது முன்னோர்க்கு உணவிட்டுப் பின் தாணுண்ணல் என்பது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. கிழங்கு/பழங்கள்/காய்களில் எவை விஷத்தன்மையற்றவை எனக் காண்பதற்கு ஆதிமனிதர்கள் கையாண்ட உத்தி எவற்றை, பறவைகளும் குரங்குகளும் இன்னபிற மிருகங்களும் சாப்பிடுகிறனவோ அவற்றைத் தாமும் உண்ணலாம் என கண்டறிந்ததேயாகும். ஆக இதன் தொடர்ச்சியாக உணவில் ஏதும் விஷத்தன்மையிருக்கின்றதா எனச்சோதிக்க முதலில் காக்கைக்கு வைத்துச் சோதித்து, பின்னர் உறுதிப்படுத்திக் கொண்டு தாம் உணவுண்ணும் பழக்கத்தைக் கடைபிடித்தது தான் காக்கைச்சோறு”க்கான சரியான காரணமாக இருக்கமுடியும் என்கிறார்.

 இன்றைய தேவராட்டம் எனும் கலையின் (கோடங்கிப்பட்டி கம்பளத்து நாயக்கர் எனும் சாதியரால் வழி வழி நிகழ்த்தப்பெறும் கலை) அடவுகளை உற்று நோக்கினால் புதர்களை விலக்குவது; விலங்குகளை வேட்டையாடுவது; இயற்கையை எதிர்கொண்டு போராடுவது போன்ற செயல்களின் வெளிப்பாடாக அந்த அடவுகள்(steps) அமைத்திருக்கக் காணலாம்.

மீனைக்கண்டு படகு, கப்பல் போன்றவற்றையும், பறவைகளைக்கண்டு விமானங்கள் செய்யவும் கற்றுக்கொள்ள பல யுகாந்திரங்கள் தேவைப்பட்டன. தொடக்கநிலை அறிவியல் அறிவுகூட நம்மை வியப்பிலாழ்த்துவதாகத்தான் இருக்கிறது. ஆதிவாசிப் பழங்குடிப்பெண்கள் மாதவிலக்கு நாட்களை உடல்முழுவதும் சிவப்புச் சாயம் பூசி தான் மாதவிடாய்க் காலத்திலிருப்பதால் தன்னை உடலுறவுக்கு யாரும் அழைக்கக்கூடாது என அறிவிக்கும் பழக்கத்திலிருந்தார்கள் என்று அறிகிறோம். இனக்குழுக் காலத்தில் கம்யூன் வாழ்க்கைமுறையில் பெண் எந்த ஆணின் கையைத்தொடுகிறாளோ அந்த ஆண் அவளுடன் உடலுறவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் என்றும் இந்த உரிமை பெண்ணுக்கு முதன்மையாக இருந்ததாகவும் பெண்ணே அந்த கம்யூனை வழிநடத்தியதாகவும் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதுகிறார். சொந்தச் செலவில் பல ஆய்வுகளைச் செய்ததோடு நண்பரிடம் கடன் பெற்று இடங்களைத் தோண்டி, புதையுண்டு கிடக்கிற உண்மைகளை, அகழ்வாய்ந்தறிந்த முதல் அகழ்வாய்வாளரும் வரலாற்றாய்வாளரும் அவரே. பெண் முதன்மைப் பாத்திரம் வகித்த அந்த கம்யூன் பற்றி எழுதுகிற அவரே தமது ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் நூலில் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கையில் பலர் முன்னிலையில், பெண்ணைப் பெற்ற தகப்பன் பிறர்காலில் விழுவது என்பது ராஜபுத்திர சமூகத்தில் இழிவென்று கருதப்பட்டதால் பெண்குழந்தை பிறந்ததும் கொன்று விடும் வழக்கம் அவர்களிடையே இருந்தது என்றும் ஆண்களையோ புறவுலகையோ பார்க்க மறுக்கப்பட்டு, கனமான படுதாக்கள் மற்றும் ஏழெட்டுக் கதவுகள் தாண்டி அறைக்குள் சூரியஒளிகூடப் புகமுடியா அறைகளில் அடைக்கப்பட்டு கிடந்ததால் அந்தப் பெண்களுக்கு தோல்புற்றுநோய் உட்பட பல நோய்கள் வந்து மடிந்தனர் என்றும் எழுதுகிறார். மன்னராட்சி தந்த மகத்தான மாண்பு இது.

தோண்டப்பட்ட சிருகுழிகளில் சில காலம் கழித்து மழை பெய்தபோது கிழங்குகள்/இன்னபிற தாவரங்கள் செழித்து வளர்ந்திருப்பதைக் கண்டதன் மூலம் நிலத்தைப் பண்படுத்தி பயிர்த்தொழில் செய்யலாம் என, மோசமானவை, வக்கிரமானவை என்பதைப் புரிந்துக்கொள்ளலாம். கூராக நீட்டிக் கொண்டிருக்கும் கழுமரத்தின் கூர்முனையில் ஆசனவாயைச் செருகி இரண்டு கால்களையும் பிடித்திழுத்து கிழிக்கப்பட்டு குற்றுயுரும் கொலையுருமாக கழுவிலேற்றப்பட்டு அணு அணுவாய்ச் சாகும் மனிதனை , எறும்புகள் மொய்க்க, காக்கைக் கழுகுகள் கொத்தித்தின்ன, மரண ஓலத்துடன் நிணம் கசியும் குரூர வரலாறுகள் சமயம் சார்ந்தவை.

இப்போது பிள்ளையார் சிலைகளை உடைத்து சிதைத்து ரம்பத்தால் அறுத்துக் கரைப்பது விநாயக பக்தர்களும் அவர்தம் வாகனமாகிய பெருச்சாளிகளுமே தவிர, கடவுள் மறுப்பாளர்கள் அல்லர். காமக்களியாட்டங்களும், சொத்து மோசடிகளும் மடாலய மர்டர்களும் செய்தவர்கள் பகுத்தறிவாளிகள் அல்லர். மடாதிபதிகளும் சாமியார்களுமே. மூடநம்பிக்கைகள் மூலம் மதமாக, சாதியாக, மனிதத்தைக் கூறுகட்டி விற்கும் சாதிமதத் தலைவர்கள் தான் மனித நேயமற்றவர்களேயொழிய, மதங்கடந்த சாதி கடந்த புரட்சியாளர்கள், முற்போக்காளர்தாம் மனிதநேயமுடையவர்கள். ஆனால் ஆதிமனிதர்கள் நிர்வாண உடல்மட்டுமல்ல, நிர்வாண மனதும்கொண்டவர்கள். சூழ்ச்சியால் உலகையழிக்கும் கொடூர அரசியல் சூழ்ச்சி அறியாதவர்கள். இயற்கையோடு இயைந்து வாழப்பழகியவர்கள். மதநிறுவனங்கள் குறிப்பாக இந்துத்துவம் கெட்டிதட்டிப்போகிறபோது பெண்ணடிமைத் தனத்தின் இருமுக்கிய ஒடுக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. ஒன்று கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறிவிட வேண்டும். கணவன் இறந்த பின் பாயில்படுக்க அனுமதி மறுப்பது- கீரைத் தண்டு போன்ற பாலுணர்வு மறக்கடிப்பதற்கான தோண்டுகழிகள் வைத்து நிலத்தைக் கீறி கிழங்கு தோண்டிய பெண்களே- வேளாண்மையைக் கண்டு பிடித்திருக்க வேண்டும் என்று எழுதுகிறார். இலங்கையைச் சேர்ந்த சாந்தி சச்சிதானந்தன். பின்னர் எப்படி அவர்கள் உற்பத்தி உறவுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டு வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கும் வழக்கம் வந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு மார்க்சியம் சொல்கிற பதில் உபரி” என்பதுதான். நிலம் பண்பட்டு, செழித்தோங்கிய பயிர்த்தொழிலால் விளைச்சல் பல்கிப்பெருகியதும் தேவைக்கு அதிகமாக உற்பத்தியானதும் உபரி உருவாக காரணமாயிற்று. ஆண் மேலாதிக்கம் உருவாகி வெளியில் சென்று பொருளீட்ட ஆண்களும், உபரியைச் சேகரித்தல் பாதுகாத்தலில் அன்றையப் பெண்கள் இப்பணிக்கு தள்ளப்பட்டு வீட்டுக்குள் முடங்கி அதை நிர்வகிக்க பாதுகாக்க பெண்களும் என வேலைப் பிரிவினை உருவாகியிருக்க வேண்டும் என்று ஊகித்தறிகிறது மார்க்சியம்.

            அறியாமையில் தொடங்கி அச்சத்தில் தொடர்ந்து, வன்முறையில் வளரும் மதங்களின் கூரிய பற்சக்கரங்களுக்கிடயே இயங்கும் மனித இறைச்சிக்கூடமாக மத நிறுவனங்கள் தொடர்ந்து வருவதைப் பார்க்கிறோம் .நா சபை வாசலில் எழுதி வைக்கப்பட்டுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் முழக்கம் பற்றி வாய்கிழியப் பேசுவோர், பக்கத்துத் தெருக்காரனைச் சேரிக்காரனாக்கி ஒதுக்கி வைக்கும் வர்ண-வர்க்க கழிசடைத் தனங்களை என்னவென்று சொல்வது எனக் கேட்கும் பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.சண்முகத்தின் கேள்வியும் ஆதங்கமும் மிக நியாயமானவையே. கழுவிலேற்றுதல் போன்ற சமயம் சார்ந்த தண்டனைகள் பாசிச அரசின் கொடூரத் தண்டனைகளை விட உணவு வழங்குவது-சகுனத்தடை- முக்கிய மங்கல நிகழ்வுகளில் குறுக்கே வராமல் தங்களை மூலைமுடுக்குகளில் புதைத்துக் கொள்வது. மடி” எனும் கொடூரங்களின் இருமடி மும்மடிப் பெருக்கங்களில் செத்துமடிவதைவிட கணவன் சிதையில் விழுந்து இறப்பது எளிது எனும் நிலை உருவாக்கி, பரவலாக்கியது - மகளுக்கு சிசு மணத்தை செய்து வைக்காத தகப்பன் அப்புதல்வியின் மாதவிடாயை இறக்கும் வரைக் குடிக்கவேண்டும் (பாகவதபுராணம்) என்று அச்சப்படுத்தி வன்முறைக்காளாக்கி மனிதத்தைக் கொன்றது.

மேலதிகமாக, ஸ்ரீமான் காஞ்சிபெரியவாள் கோயில் நுழைவுப் போராட்டத்தின் போது, செய்த சதியாலோசனையை இங்கு நினைக்காமல் இருக்க முடியாது. ரகசியமாக பூசைசெய்யச் செல்வதுபோல, பிராமண அம்மாமிகளை பூசைத்தட்டு நிறைய மிளகாய்த் தூள் எடுத்துப் போய் கோவிலில் நுழையாக்கட்திருந்த சூத்திரமக்கள் கண்களில் வீசப்பணிக்க, குழந்தை குட்டிகளுடன் அவர்கள் பரிதாபமாக ஓடிப் புகார் செய்ய, காவல் துறை தடியடி நடத்த, அதைக் காணச்சகியாது மிளகாய்ப் பொடி வீசிய அம்மாமிகள் தடியடிபட்டதற்காக சங்கராச்சாரி அழுத கதை [ஆகமவிதிப் படி அவாள் அழலாமா நீங்கள்தான் கேட்டுச் சொல்லவேண்டும்] தத்தாச்சாரி அம்பலப்படுத்துகிறார்.

கிறித்துவமும், இசுலாத்தும் ஒன்றும் இளைத்தது அல்ல பைபிளில் சொல்லப்பட்ட கருத்துக்கெதிராக கருத்து தெரித்த கண்டுபிடுப்புகள் வெளியிட்ட அறிவியளாலர்கள் கதி என்ன என நாமறிவோம். இஸ்லாத்திலும் பெண்கள் குறித்த பிற்போக்குச் சட்டங்கள்; பர்தாவுக்குள் பெண்ணைப் புதைப்பது மார்க்க வழி என்று சுதந்திர உரையாடலுக்கோ விடுபடவோ வழியில்லாமல் அடைப்பட்ட நிலையும் நாமறிவோம்.

            சடங்குகளின் போது சூத்திரங்களுக்கு பூணூல் அணிவித்து தற்காலிகமாக சமஸ்கிருத மந்திரச் சடங்குகளில் பிராமண அந்தஸ்து அளித்து சடங்கு முடிந்ததும் தண்ணீரில் மூழ்கி பூணூல் கழற்றி விடப் பணிக்கும் செயல்கண்டுதான் கழற்றிவிடுதல் என்ற சொல் உருவாகியிருக்க வேண்டும்.

ரயில் வந்ததால் தான் (கண்டவர்களும் ஏறிச் செல்வதால்) காலரா ஊருக்குள் பரவியது என்று ஜனங்களிடையே ஆங்கிலேயர் காலத்தில் மூட நம்பிக்கையைப் பரப்பியதும் தேர்தல் மறுக்கப்பட்ட பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் எழுத்தாளர் சங்கம் சார்பில் கலந்தாய்வு செய்யப்போனவர்கள் குறித்து, ஒரு வாரம் கழித்து இந்தப் பயலுவலெல்லாம் வந்தானுவோ தெருவுல பாம்பு தேளா எழையுது என்று கதை கட்டியதும் காலம் காலமாக அச்சமே கீழ்களது ஆச்சாரமாக இருந்து வருகிறது என்பதற்கான தரவுகள்.

ஆனால் ஆதிமனிதர்கள் அம்மை நோய்க்கு மருந்து கண்ட விதம் பற்றி சுவாரசியம் ததும்ப நூல் படம் பிடிக்கும் இடம் குறிப்பிடத்தக்கது. அம்மை நோய்வாய்ப்பட்ட மனிதனை வழக்கம்போல் தனித்து விட்டுவிட்டு பிரிவுத் துயரோடும் ஏக்கத்தோடும் அவ்வினக்குழு பிரிந்து சென்றுவிட, சில நாட்கள் கழித்து வேப்பமரத்திலிருந்து சொட்டிய பனித்துளி அம்மனிதன் மீது பட்டதால் தான் உயிர் பிழைத்தான் என்றறிந்து வேம்பு அம்மைநோய்க்கு மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார் ஆசிரியர்.

            ஆதி மனிதனின் எளிய வாழ்வு குறித்த மானுடவியல் பண்பாட்டில் ஆய்வுகள் வியப்பும் உவப்பும் அளிப்பவை. இது குறித்த நூல்கள் அங்கங்கே எழுதப்பட்ட வண்ணமுள்ளன. ஏங்கல்சின் குடும்பம் தனிச்சொத்து அரசு, ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை, சிந்து முதல் கங்கை வரை, தத்தாச்சாரியின் இந்து மதம் எங்கே போகிறது? பணிக்கரின் நூல்கள், டி. கோசாம்பி தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, நா.வா, . சிவசு, தொ., ஜி.கல்யாணராவ், பக்தவச்சலபாரதி, .தனஞ்செயன், என புதிய வரலாறெழுதிகளும் இனவரைவியல் மற்றும் மானுடவியல்வாதிகளும், எழுத்தாளர்களும் புதிய திசைகளை அடையாளம் காட்டுகின்றனர்.

            சுற்றுப்பட்ட எல்லா கிராமங்களிலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு பலியாக பழங்குடி மக்களின் ஒரு பகுதி மட்டும் பாதுகாப்பாக உயிர்ச்சேதம் இன்றி இருந்ததாம். காரணம் விடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் ஒரு பெரிய மணியை அடித்துக் கொண்டேயிருந்தனராம். பின்னர் தான் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட டெசிபல் அதிர்வில் அந்த வைரஸ் கிருமி செயலற்றுவிடும். எனவே அந்த பழங்குடி மக்களிடம் வைரஸ் கிருமி தோற்றொடியது என அறிகிறோம். நமது தொல்குடிகளும், இயற்கையை அழிக்காமல் அதே நேரத்தில் இயற்கையோடியைந்து வாழ்ந்ததோடு பல புதியனவற்றை கண்டுபிடித்துள்ளமையும் மனித நாகரிக வளர்ச்சியிலும் பல படிநிலைகளை ஆக்கபூர்வமாக வடிவமைத்தனர் எனவும் அச்சத்திலிருந்து விடுபட எளிய வழியாக வழிபாடும் இயற்கையை சாந்திபடுத்த சடங்குகளும் எனத் தொடங்கிய வரலாற்றை நூலாசிரியர் மிக அழகாக கொண்டு செல்கிறார். செ. கணேசலிங்கனின் குந்தவைக்குக் கடிதங்கள், மான்விழிக்குக் கடிதங்கள் போன்ற கடிதநூல் வழி எளிய முறையில் பொதுவுடமைக் கோட்பாட்டை விளக்குவது அசுவகோசின் கடவுள் என்பது என்ன? நூல் கடவுள் தோற்றம் இவற்றைப் பற்றிய கட்டுக்கதைகள் இவற்றை சிறுமியர் சிறுவர் பயிலும் வண்ணம் எழுதியதைப் போல பல ஊகங்களின் தொடர்ச்சியில் அறிவு வளர்ச்சியாக எவ்விதம் ஆகியிருக்க வேண்டும் என பொருத்தப்பட கூறுகிறார்.

            கலையழகன் தமக்கு விருப்பார்ந்த திரைப்படத்துறையின் ஈடுபாட்டால் பலவித ஊகச்செயல்களைக் காட்சிப்படுத்தும் விதமும், நூலாகத் தொகுக்கையில் சிறந்த படத்தின் படத்தொகுப்பு போலவும் ஆதிகால இயற்கையை நூலுக்குள் அதன் வண்ணத்தோடும் பின்னணி இசையோடும் சண்டைக் காட்சிகள்- நையாண்டிகள்- பற்றுறுதிகள்(sentiments) பின்னோக்குதல்- ஒளிநிழல்கள் என ருசிகர திரைப்படம் போல நூலைக் கொண்டு செல்கிறார். கற்பனைக்கவும் அநுமானிக்கவும் கூட ஒரு அறிவுச் செயல்பாடும் தொடர் சிந்தனையும் விவாதமும் தர்க்கநியாயங்களும் தேவை என்பதையும் நூல் பரக்கப்பேசுகிறது.

உதாரணமாக,

            அச்சத்தில் …… என்றும்

            சுட்டிக்காட்டுதலில் …… என்றும்

            சிரித்தலில் கி கா ……. என்றும்

            ஏற்றுக்கொண்டதில் ம் ……. என்றும்

            அழைப்பில் மா ம்மா வா அம்மா …… என்றும்

            ஆச்சரியத்தில் அய் ……… என்றும்

இவ்வாறு இயற்கையின் வழியாகவே பேசுவதற்கும், மொழி தோன்றுவதற்கும் ஓசைகள் உறுதுணையாய் இருந்தமையால் தான் தமிழை இயற்கை மொழி என்று சொல்லப்பட்டது. ஆகையால் தான் தமிழை கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி என்று உயர்வு நவிற்சியில் சொல்லப்படுகிறது என்றும் எழுதுகிறார். கலையழகன். ஆனால் காய்தல் உவத்தல் இன்றி ஆய்ந்தால், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பு குடிகளும் மக்கள் தொகுதியும் எதுவும் தோன்றியிருக்க முடியாது. மிகை உணர்ச்சியும் உயர்வு நவிற்சியும் சமூகத்தில் பின் தங்கவும் தேங்கவுமே செய்யும். முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லாது.

            ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகள் அப்போது அவர்களிடம் காணப்படவில்லை. புணர்ச்சியின் போது மிருகங்களைப் போலவே அவர்களும் நடந்து கொண்டார்கள். பெண்கள் புணர்ச்சிக்கு மட்டுமே உரியவர்கள் என்று தான் அவர்கள் நினைத்தார்கள். புணர்ச்சி நேரங்களில் ஒரு போதும் பெண்களின் விருப்பத்தை அறிவதில்லை வன்முறையில் அடிமையாக்கி, பெண்களை ஒரு போதைப் பொருளாகவே கற்கால ஆண் வர்க்கம் நினைத்தது. என்று எழுதும் ஆசிரியர் கருத்துக்கு நேர் மாறாக, ராகுல சாங்கிருத்தியாயனின் உடலுறவு என்பதைப் பெண் தான் தீர்மானிக்கிறாள் என்ற தகவலோடு முரண்படுகிறது.

குகைகளிலும் மரப் பொந்துகளிலும் உள்ளவர்கள் இரவில் சிறுத்தைகளுக்கு இரையாக நேர்ந்ததும், காடுகளின் அடர்த்தியால் இரவில் முழுமையான வழித்தடங்களையோ மிருகங்களின் வருகையையோ பார்க்க முடியாமல் போனதாலும் இரவைப் பெரும் துன்பமாக நினைத்ததாகவும்; மின்னல் மின்னிய போது மிருகங்கள் பயந்து ஓடியதால் மற்றும் மின்னல் மூலம் தீப்பற்றி எரிந்த காடுகளில் விழுந்த மிருகங்களின் இறைச்சி சுவை மிக்கிருந்ததாலும்; மின்னலுக்குப் பிறகானபெற்றபெரு வளத்தாலும்; ஒளிவழிபாடு நீர் வழிபாடு என்ற வகைமைகள் கிளைத்தன. சூரிய வம்சம் சூரிய குலம் போன்ற சொல்லாடல்கள் அச்சத்தின் காரணமாக, நாக வழிபாடு சார்ந்த நாககுலம், நாக வம்சம் எனும் சொல்லடால்கள் ஆகியன குறித்தும் விரிவாக யோசிக்கத்தூண்டுகிறது. மேலும் வேட்டைச் சமூகத்தில் வேட்டையாட உதவி சில நேரங்களில் இன்னுயிரையும் தியாகம் செய்யும் நாய்களுக்காக நாய் வழிபாடு பைரவர் வழிபாடாகவும், பிரம்மாண்டமும் பொறுமையும் ஒருங்கே பெற்ற யானைகள் சில வேலை இறந்துபட்ட தம் குட்டிகளை குழியில் தள்ளி மண்ணில் புதைக்கக் கூடிய வழக்கத்தைக் கற்றுத்தந்ததாலும் அறிவு, அன்பு, கருணை, பாசம், துக்கம், பிரிவு, போர்க்குணம், கூட்டுணர்ச்சி இவற்றால் மனிதர்களை ஈர்த்ததாலும், உருவாகி வளர்ந்த யானை வழிபாடு போன்ற பல வித வழிபாடுகள் பற்றிப் பேசுகிறார்.

இவற்றோடு, .சிவசு வீட்டுச்சாமி கும்பிடுதலில் தென் தமிழகத்தில் உள்ள அரசியலை அம்பலமாக்குகிறார். அதாவது சமூக நெருக்கடி காரணமாக பெண்கள் பல வந்தப் படுத்தப்பட்டால் நிலப்பிரபு போன்றவர்கள் இரையாக்கிய இளம் பெண்களை குதிருக்குள் போட்டு மூடி மூச்சுமுட்டிச் சாகவைக்கப்பட்டதன் பாப விமோசனமாகவே இன்றும் வீட்டுக்குப்படைத்தல் நடைபெறுகிறது என்கிறார்.

இவ்விடத்தில் அச்சமும் அறியாமையும் கொண்ட சமூகத்தின் வழிபாட்டு முறை அச்சமின்மையும் அறிவும் கொண்ட சமூகத்தில் கூட எப்படித் தொடர முடியும் என்ற கேள்விக்கு நாம் மார்க்சியவாதத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. மாற்றங்களுக்கு உட்படாத கெட்டிதட்டிப் போன சமூகத்தில் உண்மையான முழுமையான வளர்ச்சியைப் பெறமுடியாது. யானை வழிபாடு கணபதி வழிபாட்டோடு சேர்த்து சமூகத்தில் குழப்பப் படுகிறது. ஆனால் கணபதி வழிபாடு என்பது கணம் என்றால் கூட்டம் பதி என்றால் தலைவன் என்னும் பொருள் விரிவில் ஒரு இனக்குழுக் கூட்டத்தின் வல்லமை பொருந்திய தலைவனை வழிபடுவதைக் குறிக்கும் என்கிறார் எஸ்..டாங்கே.

            நாடோடிகள் தங்கள் பயணத்தின் போது, தாங்கள் செல்லும் திசையைத் தன் சககூட்டத்திற்குத் தெரிவிக்க வேண்டி போட்ட குறியீடே ஓவியத்தின் முதல் படி. குறியீடு ஓவியக்கலையாக விரிவடைந்தது. எந்ததெந்த விலங்கினம் எங்கெங்குள்ளது என்று அறிவிக்கும் நோக்கோடு தான் நாடோடிகள் அந்த குறியீட்டைத் தொடங்கினர். விலங்கினங்கள், வேட்டைக் காட்சிகள், மனித உருவங்கள், சண்டைக் காட்சிகள் என்று வளர்ந்து கொண்டே போன ஓவியம் தான் சிற்பக் கலைக்கும் அடிப்படையாக அமைந்தது. களிமண்ணில் புடைப்புச் சிற்பங்கள் தொடங்கி அதன் பின்பு கோவில்கள் என்று கலை வடிவங்கள் வளர்ந்தன.

திருமால் ஐந்து தலை நாகத்தில் படுத்திருக்கும் காட்சி, திருமகள் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் காட்சி, மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்கள் பாற்கடலைக் கடைந்த காட்சி என, கடைந்தெடுத்த கட்டுக் கதைகளுக்கு ஏற்ப புராணிகர்கள் வெளிப்படுத்தக்கூடிய கற்பனைக் காட்சியைக் காட்சியைச் சொல்லிச் செல்கிறார். அதே சமயம் சொர்க்கம், நரகம், மேல், கீழ் உலகங்கள் இந்திரன், சந்திரன், எமன் என்று புராணிகர்களின் கற்பனையை நிஜமென்று காட்டி, மக்களின் மூளை மழுங்கி வேலைக்கு உதவியவர்கள் செயலை, அறுசுவை விருந்தில் நரகலை வைப்பதைப் போல என்று கண்டிக்கின்றார். மக்களை ஒன்று படுத்த; எண்ணத்தை எழுச்சியுற; அறிவுப் பாதையில் அழைத்துச் செல்ல; என்பனவற்றுக்கெல்லாம் மாறாக மூடநம்பிக்கை, உயர்ந்தோர், தாழ்ந்தோர், சாதிப் பிரிவினை, மறுபிறப்பு, ஆன்மா என்று கூறும் அஞ்ஞானிகளுக்கு ஒரு படைப்பாளன் துணைபோவதை ஒருக்காலும் எந்த அறிவுள்ள மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எழுதிச்செல்கிறார் ஆசிரியர்.

            இவ்வாறே கோசல நாட்டை ஆண்ட மன்னன் அரிச்சந்திரன் பற்றிப் பேசுகிறபோது, ஒருவனை கொடுமைப்படுத்த அவனை ஒரு தொழுநோயாளியாகவோ, ஊனமுற்றவனாகவோ, கண் தெரியாதவனாகவோ, வாய்பேசமுடியாதவனாகவோ படைக்காமல் வெட்டியானக படைத்துக்காட்டுவதை அம்பலப்படுத்துகிறார்.

            இப்படிப் புதிய கேள்விகள் மேற்கிளம்புகின்ற காலத்தில் புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. நமது பண்பாட்டில் திருமணம், விதைப்பு, திருவிழா, மரணம் என சடங்கு முறைகள் எல்லாவற்றிலும் நவதானியங்களை முளைக்கச்செய்து [முளைப்பாரி] படைத்தல் நடைபெறும் சில இனக்குழுக்கள் பாதுகாப்பின் பொருட்டும் அச்சத்தின் பொருட்டும் நெருப்பை வணங்கத் தொடங்கியதன் தொடர்ச்சியாகவும் யாகம் வளர்த்தல் சடங்கு ஆசிரியர்களால் புகுத்தப்பட்டது என்பர். ஆக உற்பத்திச் சமூகத்தில் [திராவிடச்சமூகம்] முளைப்பாரிச் சடங்கு மேய்ச்சல் சமூகத்தில் [ஆரியச்சமூகம்] யாகச்சடங்காக மாற்றம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து, சித்தர்களின் கலகக்குரல் குறித்தும் இந்துத்துவத்தின் கோரமுகம் குறித்தும் பெரியார் செய்த புரட்சி குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார், கலையழகன். அனுமானங்களில் இருந்து அறிவு நோக்கிய ஆதிமனித முயற்சிகளை அழகுபட எடுத்துரைக்கும் பாங்கு மிகுந்த பாராட்டுக்குரியது.

இறுதியாக, மலையாளக் கவிகுஞ்ஞுண்ணி எழுதியதைப் போல,

            கடவுள் ஆறாம் நாள்

            மனிதனைப் படைத்தார்

            மனிதன் ஏழாம் நாள்

            கடவுளைப் படைத்தான்

என்று விரிவான தரவுகள் வாயிலாக அழகு ததும்பும் உரை வீச்சில் நூலாசியர் படைத்துள்ள இந்த நூல் சாதிவெறி என்னும் தொழுநோய் போக்க அறிவுச் சுனையில் நீராடுங்கள். மானுடத்தின் முகவரியை மாற்றி எழுதுங்கள். மனிதத் தொண்டுக்கு மனம் திரும்புங்கள். மனிதநேயம் மலர மனித சங்கிலி அமையுங்கள் என்று விழைவைத் தெரிவித்து நிறைவு பெறுவிறது நூல். மனிதச் சங்கிலி மனிதக் கைகளால் ஆனது அல்ல. மனித மனங்களால் ஆனதாக அமையட்டும். பகுத்தறிவும் சமத்துவமும் தழைத்தோங்கட்டும். கலையழகும் அறிவியலாய்வும் சமூகத்திற்கு உரமாகட்டும் புதியதோர் உலகம் புலரட்டும்.

  • பெருவெளி, கலையழகன், தஞ்சாவூர் 2011.

 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World