Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueதெணியானின் இலக்கியத் தடங்கள்(ல்)
 
 
ஒரு தனிமனிதனின் வரலாறானது சமூக இலக்கிய ஆவணமாக உருப்பெறுமாயின், எதிர் காலத்தில் பல தகவல்களை அறிந்து கொள்ள விழைகின்றவர்களுக்கு இத்தரவுகள் உதவும்.  ஒரு தனிமனிதனுக்கு விழையக்கூடிய சமூக அனுபவங்கள், ஒட்டுமொத்த சமுதாயத்தின் அடையாளங்களைக் காட்டி நிற்கின்றன. அதுவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இலக்கியவாதிகளின் அனுபவங்கள், ஒடுக்கு முறைகள், போராட்டங்கள்,  பின்புலங்கள், வாழ்நிலைகள், இலக்கிய அனுபவங்கள் நேரடியாக எழுத்துக்களாக வெளிப்படும்போது அவை விளிம்பு நிலைகயின் நசுக்கம் உணரவும் தடுத்து நிறுத்தும் விதமாக மாறவும் செய்கிறது.
அடித்தளச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தன்னம்பிக்கைப் பெற்று வளர்ந்து நிமிர்ந்து நிற்பதற்கும் ஆதாரமாக விளங்கம் வகையில் தெணியானின் ‘பூச்சியம் பூச்சியமல்ல’ எனும் தன்வரலாறின் இலக்கிய அனுபவங்கள், வாழ்பனுபவங்கள் அமைந்திருக்கிறது என்பது திண்ணம்.
‘தலித்’ என்னும் சொல்லானது மராத்தி மொழியலிருந்து உருப்பெற்றுள்ளது. தலித் என்பதற்கு மராத்தியில் நசுக்கப்படுபவர்கள், நலிந்து போனவர்கள், துன்புறுபவர்கள் என்கின்ற பொருள்தான் உள்து. அதற்கு, சாதி என்கின்ற பொருள் கிடையாது. ஆனால் இன்று ‘தலித்’ என்ற சொல் ஒடுக்கப்பட்டவர்கள் என்றுக் குறிக்காமல், தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் அட்டவனைச் சாதியினர் என்றும் அறியப் படுகின்றது.
“ஒரு மனிதரை அழிக்க அவரிடமிருந்து மொழியை, மொழியைக் கையாளும்திறத்தை, வாய்ப்பை, சூழ்நிலையைப் பிடுங்கிவிட்டால் எளிதாக அளித்து விடலாம். இந்திய வரலாற்றில் தலித்துக்களின் வாழ்வும், பெண்களின் வாழ்வும் இப்படித்தான் மொழி மூலமாக முழுமையாக அழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளன”. (தலித்துக்கள் பெண்கள் தமிழர்கள் ப:126)
சாதி, மத அடையாளங்களைச் சாட்டிலும், மனித இருப்பை மொழியே சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றது.  மேட்டிலிருந்து பள்ளத்திற்கு உருட்டிவிடப்பட்ட, மையத்திலிருந்து ஓரத்திற்கு நகர்த்தி  விடப்பட்ட விளிம்புநிலை  மக்களாகிய தலித்துக்களுக்கான இருப்பை மீட்டெடுக்க அவர்களது மொழியே சாத்தியப்பட்டிருக்கின்றது.  தங்களுக்கான விடுதலையைத் தாங்களே பேச வேண்டிருப்பதால் தலித்துக்கள் மொழியை  ஒரு ஆயுதமாக  ஏற்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அத்தகைய ஆயுதத்தை தன் கையில் எந்தியவரே தெணியான்.
இலங்கையில் பொலிகண்டியில் 06.08.1942 ல் நா. கந்தையா, க. சின்னம்மா ஆகியோரின் புதல்வனாக பிறந்தார் தெணியான்.  உடன் பிறந்தவர்களாக தமையனார் ஒருவர், தம்பி ஒருவன், அவர்தான் இலங்கையின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான  க.நவம்.  அவருக்கு கீழே மூன்று சகோதரிகள்.  இத்தகைய பெரும் குடும்பத்தை நிர்வகிக்கும் கந்தையா கள்ளிறக்கும் தொழிலாளி.  தன் குடும்பத்தினரில் கள்ளிறக்கும் தொழில் செய்வது தான்தான் இறுதியானவராக இருக்க வேண்டும். தன் பிள்ளைகள் இத்தொழிலுக்கு வரக்கூடாது என்று விரும்பியவர். இத்தகைய  வறுமை நிறைந்த பெரும் குடும்பத்தில் பிறந்த தெணியானின் வாழ்க்கை அனுபவங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது அன்று.  அவை முட்களால் அலங்கோலப்படுத்தப்பட்டிருப்பதை அவரது தன்வரலாறு பரைறசாற்றுகின்றது.
மனிதன் நாடு கடந்து, மொழிக் கடந்து,இனங்கடந்து, உலக வாழ்வைத் துறந்து சென்ற போதிலும், மனிதனின் அங்கங்களோடு ஒட்டித் துனையாய் வந்து அடையாளங்காட்டி நிற்பது சாதியம் மட்டுமே.  தமிழன் எங்கு புகுந்தாலும் அங்கு சாதி வந்து புகுந்துவிடும்.  தமிழ்ச் சைவன் எங்கு புகுந்தாலும் அங்கச் சாதி எழுந்து தலைவிரித்து ஆடக்கிளம்பிவிடும்.  கொழும்பிலும் இப்படியான நிகழ்வுகளே நிகழ்ந்ததை தெணியான் பதிவு செய்கிறார்.
கல்விச் சாலையில் சாதி அடக்குமுறைகள்
தேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் (இன்று தேவரையாளி இந்துக் கல்லூரி) கல்விப் பயின்ற தெணியான், “தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் சைவ சமயப் பாடம் கற்பிப்பதற்கு  எழுந்த பிரச்சினைகளாலேயே தேவரையாளி சைவ வித்தியாசாலை தோன்றியது” என்கிறார். ஆரம்பக் கல்வியிலேயே சாதி ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்தியம்பிச்செல்கிறார்.
அரசாங்கம் பாடசாலைகளின் பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கைப் பாட சாலைகள் அனைத்தும் மத நிறுவனங்கள், மத அடிப்படைவாதிகளால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டிருந்த சூழலில் கிறிஸ்துவத்துக்கு எதிராக, அதே வேளை  இந்துத்துவத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு சமூக மக்களால் தோற்றுவிக்கப்பட்டதே இப்பாடசாலை, இச்சாலையே தெணியானின் கல்வியை வளர்த்தது.
ஒடுக்கப்பட்ட  மக்களுள்  ஒரு பகுதியினரான பள்ளர் சமூகத்தவர்கள் தங்கள் சாதிப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், இந்து மத வளர்ச்சி  ஆகியவற்றிற்காக இப்பாடச் சாலையை அமைத்தனர்.  இத்தகைய கல்விச்சாலை இலங்கையில் மட்டுமில்லாது தமிழ் நாட்டிலும் வேறெங்கும் இல்லாத பெருமையினைப் பெற்றதாக அறியப்படுகின்றது.  இத்தகைய கல்விச் சாலைகளில் கல்விப் பயின்றதாலோ என்னவோ தீண்டாமை என்றச் சொல்லுக்கே எதிரானார் தெணியான்.
ஆசிரியக் கலா சாலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்களோடு அமர்ந்து உணவு உண்பது சைவன் மனதில் கொதிப்பை மூட்டியதால் தனியாக உட்கார்ந்து உணவு உண்ணுமாறு நிர்பந்திக்கப்பட்ட தனது நண்பன்,
பாட சாலையில் தன்னுடன் பயிலும் மாணவர்களின் உணவுக் குழுவில் உணவுக் கோப்பைகளை எடுத்து வைத்தபோது “நீ தொட்ளைந்ததை நாங்கள் என்னெண்டு சாப்பிடுறது?  இனி அப்படிச் செய்யக்கூடாது” என நிராகரிக்கப்பட்டது.
“நாவிதனுக்குச் சாஹித்தியப் பரிசு கிடைத்திருக்கிறது” எனச் சாதி சொல்லி இழிவுப்படுத்தக் கேட்டது.  என கற்பம் தொடங்கி சல்விச் சாலை, சமூகம்,கோயில், குளம், தண்ணீர்,தெருக்கள் என சென்ற இடமெல்லாம் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி அல்லல் பட்ட தெணியான் சாதிமான்களை எதிர்க்கவும்,  தாக்கவும், சவுக்காய்,  ஆயுதமாய்  எழுத்தினை  கையிலெடுத்தார்.
ஆலய மறுப்பு போராட்டத்தில் தெணியான்
இளம் பிராயத்தில் தன் தந்தையுடன் சாதியக் கொடுமைக்கு எதிராகச் சாட்சியம் அளித்துவிட்டு உணவருந்தச்  சென்ற  இடத்தில, இந்தச் சாதியத்தின் மனித நாகரிகமற்ற கொடுமையினால் நிலத்தில் விரிக்கப்பட்ட சாக்கினில் தனது தந்தையாருககு அருகில் அமர்ந்து வாழையிலை போட்டு பரிமாறிய உணவை அறியாப் பருவத்தில் உண்ட தெணியான்.
வளர் பருவத்தில் சாதியத்தின் அடக்குமுறை கொடுமையினை உணர்ந்து தன் சமூகத்தின் அறியாமையை உணர்த்தி, எடுத்த முயற்சியினால் எந்த ஆலயத்தினுள் நுழையும்போது அல்லா! அல்லா!  என்பது போல்  பள்ளா........பள்ளா....பள்ளா..... என்ற  கேலிக்கும், பரிகாசத்திற்கும் ஆளாக நேரிட்டதோ, அதே  ஆலயத்திற்குள் 15.08.1972 இல் ஒடுக்கப்பட்ட  மக்கள் பிரவேசம் செய்ய செய்த பெருமைக்கு தெணியான் வித்திட்டது புலப்படுகின்றது.  
அதுமட்டுமல்லாமல் பொலிகண்டி கிராமத்தில் ஆலயத்திற்குள் செல்வதற்கு தலித் மக்களுக்கு மறுப்பு ஏற்பட்டபோது அவர்களுக்கான உரிமையை மீட்டெடுக்க  உரிமைக் குரல்களை விடுத்தவர் தெணியான்.   தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் தலைமை தாங்கிய வாத்தியாரான சைவப்பழம், தாழ்த்தப்பட்டவர்கள் இந்தக் கந்தவன ஆலயத்துக்குள் நுழைவதற்கு வந்தால்  நாங்கள் கையில்  வாளோடுதான் நிற்போம், என்ற கோஷத்தால் ஆலயமறப்பு விதிக்கப்பட்ட போது தெணியான் அவர்கள் சில இளைய தலைமுறையினரை இணைத்து பொலிகண்டி  கந்தவன ஆலயப் பிரவேச நடவடிக்கைக்குழு ஒன்றினை அமைத்து இளைஞர்களுக்கு சமத்துவ உணர்வைத் தூண்டி போராட்டங்களைக் கிளப்பச் செய்து 30 - 06 - 1974 ல்  ஆலயப் பிரவேசம் செய்து இன்று எல்லோரும் ஆலயத்துக்குள் பிரவேசிக்குமாறு சமநிலையை உண்டாக்கிய பெருமைக்குரிய செயலைச் செய்தார்.
சாதி வெறியர்களால் கரவெட்டி கலட்டிப் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்களின் வீடுகள் தீக்கு இரையாயின. சிறுவனாக இருந்தபோது  அதனை வேடிக்கைப் பார்த்த தெணியான் சாதிய அடக்கு முறைக்கு இளைஞர்களைக் கிளப்பி தன் இனத்தின் அடையாளத்தைக்  காத்தார்.
பேனா பிடித்து எழுதுவது மட்டுமே எழுத்தாளனுக்குரிய சமூகக்கடமை அல்ல, ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள்,  ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட்டு செயற்பாடில்லாத  எழுத்துக்கள் மக்களை ஏமாற்றும் போலிப்படைப்புகள் என்பதை உணர்ந்ததெணியான் எழுத்துலகின் வாயிலாக தன் இனத்தின் முகத்திரைகளை அகற்ற எண்ணினார்.  அதற்குரிய களமாக சிறுகதையைப் பயன்படுத்தினார்.
தெணியானின் இலக்கியத் தடங்கள்
எழுத்துலகில் தன் தடத்தினை பதித்த தெணியான், மலையகத்தி;லிருந்து யாழ்ப்பாணம்  மாற்றலாகி வருவதற்கு முன் விடிவை நோக்கி என்ற நாவலை எழுதினார். இதுவே அவரது முதல் நாவல் 1973 ஜூலை மாதம் நூலாக வீரகேசரியின் பன்னிரண்டாவது வெளியீடாக வந்தது.  அந்த நாவலின் பிரதான பாத்திரம்ஆசிரியர் கோவிந்தன்.  அவன் ஒடுக்கப்பட்டவர்களை அதுவரை அனுமதிக்காத சாதிமான்களின் பாடசாலை ஒன்றுக்கு மாற்றலாகி வருகின்றான்.  அவன் வருகையை  எதிர்பார்க்கும் சாதியச்சமூகம்  பாடசாலை மதிலில் சித்திரம் ஒன்றைத்தீட்டி வைக்கின்றது.  கோவிந்தன் என்றால்  கண்ணன்.  கண்ணபிரான்  மரமேறும் சிவற்தொழிலாளியின் அணிகலன்களை அணிந்து கொண்டு பனையில் ஏறுவதனைச் சித்திரிக்கும் காட்சி அது.  இந்தக் காட்சியால் இந்நாவல் பிரசுரம் ஆகுவதில் தடையாகையால் செய்தி என்ற இதழ் இதனை நிராகரித்தது.
செங்கை ஆழியான் 18 – 08 - 2003 ல்தெணியான் மணி விழா மலர் வெளியிட்டார்.  அதைத்தொடர்ந்து 1964 - ல்  விவேகி சஞ்சிகையில் பிணைப்பு என்னும் முதல் சிறுகதை பிரசுரமாகியது.  அதைத் தொடர்ந்து 1968 ‡ ல் பெண் பாவை என்னும் சிறுகதை வெளியானது.  அவள் ஒரு மனைவி, விடிவை நோக்கி சிறுகதைகள் வெளிவந்து  ஐந்து  ஆண்டுகள் கழித்து  விடிவை நோக்கி நாவல் வெளிவந்தது.    சிந்தாமணி இதழில் பெருமூச்சு  சிறுகதை வெளிவந்தது.  சாதியம் பற்றிய இவரது முதல் சிறுகதையைச் சிந்தாமணிதான் வெளியிட்டது.  இந்த தேசத்திற்காக....... என்ற சிறுகதையில் அரசியல் கலப்புள்ளதாக பிரதியைத் திருப்பி அனுப்பிய சிந்தாமணியே அவரது படைப்புக்களைத்  தொடர்ந்து வெளியிட்டது. அதன்பின் இந்தத் தேசத்திற்காக சிறுகதையை இறுதியில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை 1971 - ல் வெளியிட்டது.
மாத்துவேட்டி சிறுகதை மல்லிகையில் வெளிவந்தது.  இலங்கை வானொலியில் விழுதுகள் வளருகின்றன,என்னும் சிறுகதையை  10 - 07 - 1973 -ல் ஒலிப்பரப்பினர்.  இதுவே வானொலியில் ஒலிப்பரப்பான  முதல் சிறுகதை.
குருகுலம் எனும் சிறுகதையை 1975 -ல்  சிரித்தான் இதழ் ஆண்டு மலரில் வெளியிட்டது.  காவல் அரணிகள் என்ற சிறுகதையை ஈழமுரசு 1985 - ல் வெளியிட்டது.   1986 - ல் மல்லிகை இதழில்  ச்வப்பு என்றச் சிறுகதை வெளியானது.  
அதைத் தொடர்ந்து இன்னுமா?  என்ற சிறுகதை எழுதினார்.  சிறுகதை மட்டுமல்லாது நாவலிலும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார்.  விடிவை நோக்கி  என்ற நாவலே இவரது முதல் நாவல் எனலாம்.   
1981 -ல் கழுகுகள்  வட்டமிடுகின்றன என்னும் குறுநாவல் கழுகுகள் என மகுடமிட்டு வெளிவந்தது.  பரம்பரை அகதிகள் எனும் நாவலை ஈழநாடு சபா வெளியிட்டது.  அதைத் தொடர்ந்து ஈழமுரசு இதழ் பனையின் நிழல் நாவலை  01 -07 - 1984 - ல் வார இதழில் வெளியிட்டது.  முரசொலியில்  பொற்சிலையில் வாடும் புனிதர்கள்  நாவல் வெளிவந்தது.   மேலும்  கானலின் மான்  நாவல் வெளிவந்தது. 
இடையிடையே நிருத்தன் என்ற பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.   ஈழத்துத் தமிழ் இலக்கியமும் அதன் தலைமையும் அதன் தவறுகளும் என்னும் தலைப்பில் 1977 - ஏப்ரல் மாதம் மல்லிகை இதழில் ஒரு விவாதக் கட்டுரையைத் தொடங்கினர். ஒரு வருட காலம் சாதக, பாதக விவாதக் கருத்துக்களை முன்;ைவத்த விவாதம்1978 - ல் முடிவுக்கு வந்தது.  இந்த விவாதத்துக்குப் பின்பே தெணியான் பலரின் கவனத்துக்கு உள்ளானார்.  இவருடைய எழுத்துக்கள் அனைத்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வெளிக்கொணரும் நோக்கிலே எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலக்கியத்திற்காக வழங்கப்பட்ட பரிசுகளும், விருதுகளும்
மரக்கொக்கு நாவல் 1995 - ம் ஆண்டுக்குரிய ஸ்ரீலங்கா சாஹித்திய மண்டலப் பரிசையும், வடக்கு/ கிழக்கு  மாகாண அமைச்சின் பரிசையும், இலங்கை இலக்கிய பேரவையின் பரிசையும் பெற்றுத்தந்தது.  1999 - ல்  காத்திருப்பு எனும் நாவல் வடக்கு/கிழக்கு மாகாண அமைச்சின் பரிசைப்பெற்றது.  2002 -ல் இலங்கை அரசின் சாஹித்திய மண்டலப்பரிசு, இலங்கை இலக்கியப் பேரவைப்  பரிசினை கானலின் மான் நாவல் பெற்றுத்தந்தது.
23 - 08 - 2003 - ம் ஆண்டு கூட்டுறவாளர் விழாவில்  மக்கள் படைப்பாளி என்னும் விருதும் கேடயமும் வழங்கி கௌரவப்படுத்தினர்.  கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை ஜோன் டீ சில்வா அரங்கில் 22 - 01 -2005 - ல்  கலாபூஷணம் விருது வழங்கினர்.
ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வரலாறு தெணியான் இன்றிப்பேசப்பட முடியாத அளவிற்கு தன்  எழுத்தின் வாயிலாக எல்லோரிடமும் சென்றடைந்துவிட்டார் தெணியான். ஒடுக்கப்பட்டவன் என்ற அடையாளத்துடன் பிறந்து வளர்ந்த தெணியான் தன் எழுத்தின் வீச்சால்  எல்லோரையும் விட உயர்வாகிவிட்டார்.  ஒடுக்கப்படும் வகுப்பை சார்ந்தவராகையால் இவருக்குக் கிட்டிய அடிகள், வலிகள், ஆகியவற்றை இவரது தன்வரலாறு தோலுரித்துக் காட்டுகிறது.
முடிவாக  
போராடும் வர்க்கங்கள் கைகளை உயர்த்த அதிகார வர்க்கத்தின நிலையும் அடிமைப் போக்குகளும் மறைந்து போகும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்களின் பிரச்சினைகளைத் தொடர்ச்சியாக இன்றுவரை எழுதிவரும் இலங்கை எழுத்தாளர் தெணியான் ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமதி அற்ற, மதிப்பற்ற பூச்சியங்களாகவே சாதியச்சமூத்தினால் நோக்கப்பட்டு வந்திருக்;கின்றனர்.  அவர்களுள் ஒருவராகிய தெணியானின் வாழ்வின் சுவடுகளையும் இலக்கிய அனுபவங்களையும் எடுத்துச் சொல்லி அவர்கள் பூச்சியங்களல்ல என்பதைத் தன் வரலாறு புலப்படுத்துகின்றது.
 
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World