Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issue(கண்டி சிலோன் காப்பித் தோட்டப்பாட்டு - இரண்டு பாகம் அடங்கியது)
 

திரிசிரபுரம் டி.எம்.ஜன்னபா புலவர், திருவீர மாநகர் செந்தமிழ் சேகர யாஸீன் தாஸ் ஆகியோர் இயற்றியது.சங்கீத சரபம் டி.சபாபதி முதலியார் பதிப்பித்தது.ஸ்ரீமயில் வாகனன் பிரஸ், சென்னை, 1928)

ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகள் மீது நிகழ்த்திய காலனியாதிக்கம் என்பது, ஒருபுறம் ஆசியச் சமூகத்தை நவீனப்படுத்தியதென்றாலும், மற்றொரு புறம் முதலாளித்துவ சமூக அடிப்படையிலான காலனிய சுரண்டலுக்கும் வழிவகுத்தது.காலனியாதிக்க நாடுகளின் பெரும் மூலதனத் திரட்டலுக்காக ஆசிய நாடுகளின் மரபான வேளான் முறைகள் சிடைக்கப்பட்டன.பணப்பயிர்களை பயிரிடும் முறை ஊக்குவிக்கப்பட்டது.தேயிலை, காப்பித் தோட்டங்கள் புதிதாக உருவாக்கபட்டன.இப்புதிய மலைத் தோட்டங்களில் உழைப்பதற்கு ஏழை விவசாயிகள் தங்கள் சொந்த மண்னைப் பிரிந்து அந்நிய நாடுகளில் புலம்பெயர்கின்ற அவலமும் நிகழ்ந்தது.ஆங்கிலேயரின் காலனிய ஆதிக்கத்தால் இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தமிழகத்திலிருந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏராலமான தமிழர்கள், இலங்கை, மலேசியா, பிஜி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றனர்.தென் ஆப்பிரிக்கச் சுரங்கங்களிலும், மலேசிய ரப்பர் தோட்டங்களிலும், பிஜியின் கரும்புத் தோட்டங்களிலும், இலங்கையின் தேயிலை, காப்பித் தோட்டங்களிலும் தமிழர்கள் தம் இரத்தத்தை வியர்வைத் துளிகளாகச் சிந்தினர்.கடுங்குளிரிலும் கங்காணிகளின் ஒடுக்குதலிலும், அட்டைக் கடியிலும் அவர்கள் பட்ட துயரம் சொல்லவொண்ணாது.இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களின் சோக வாழ்க்கை இலக்கியப் பதிவுகளுமாகியுள்ளன.இதற்குப் பாரதியின் “பிஜித்தீவிலே ஹிந்து ஸ்திரிகள்” கவிதை, புதுமைப்பித்தனின் “துன்பக்கேணி” சிறுகதை, அகிலனின் “பால்மரக்காட்டினிலே” நாவல் என்பன சிறந்த எடுத்துக்காட்டுக்கள்.
புதுமைபித்தனின் “துன்பக்கேணி”, தமிழகத்தில்  திருநெல்வேலி மாவட்டக் கிராமம் ஒன்றிலிருந்து புலம்பெயர்ந்து, இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று கடும் இன்னல்களுக்காளான, “மருதி” என்ற பெண்ணின் சோக வாழ்வைச் சித்தரிக்கின்றது.இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை, துன்பம் நிறைந்த கேணியாகச் சித்தரித்த, புதுமைப்பித்தனின் ஏட்டிலக்கியப் பதிவிற்கு முன்பே, நாட்டார் இலக்கிய மரபில் இயற்றப்பட்ட சிந்துப்பாடல்களின் தொகுப்புத்தான் “ தேச மக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப்பாட்டு” எனும் சிறுபிரசும் / குஜிலிப் பதிப்பு:கண்டிசிலோன் காப்பித் தோட்டப் பாட்டு என்னும் துணைத் தலைப்புக்கொண்ட இந்நூலில் இரண்டு நெடும் பாட்டுக்கள் அடங்கியுள்ளன.
முதல்பாட்டு திரிசிரபுரம் (திருச்சி) டி.எம்.ஜன்னபா புலவர் இயற்றிய “ கண்டி காப்பித் தோட்டப்பாட்டு” இரண்டாவது பாட்டு திருவீர மாநகரைச் சேர்ந்த யாசின்தாஸ் இயற்றிய “தேயிலை காப்பித் தோட்டப்பாட்டு.
"திருவாரூர் தென்தீவில் தேயிலையின் தோட்டமதில்
பெருவாரு நமதன்பர் பேதைமையால் - ஒருவாரு
பட்டதுயர் பாட்டாக பாடவருள் மாமுகனே
திட்டமுடனே பதிப்பித்தேன்"
என “விநாயகர்துதி வெண்பா” - வோடு முதற்பாட்டு தொடங்குகின்றது.இதன் பின்னர் “ஆப்பிரிக்கா கண்டத்திலே” என்ற மெட்டில் அமைந்த 12 கண்ணிகளாக இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது.இப்பாடலில் இந்தியாவிலிருந்து யார் கூலித்தொழிலாளிகளை அழைத்துச் சென்றார், எத்தரத்தார் புலம்பெயர்ந்து சென்றார், அங்கு எத்தைகைய இயற்கை இன்னல்கட்கு ஆளாயினர், கங்காணிகள் எவ்வாறு கொடுமைப்படுத்தினர் முதலான தகவல்கள் விரிவாகப் பதிவாகியுள்ளன.
"தேயிலைத் தோட்டத்திலே நம
திந்தியர் சென்று மிரண்டு மெய் மறந்து
வாயிலாப் பூச்சது போல் மனம்
வாடிக் கிடப்பது கோடிக்கு மேலுண்டு
தாயிலாப் பிள்ளைகளும், வீட்டில்
தந்தைக் கடங்காமல் வந்ததுர் மைந்தரும்
சேயிளை மார்களுடன் கூடி
சென்று பார்த்த பின்பு நின்று புலம்புறார்"
ஓயாது நாள் முழுக்க துரை ஓதும் தொழில்களைச் செய்கின்றார்; பெரும் நோயால் வாடுகின்றார்; நியாயம் என்பது அங்கில்லை.நாளும் சவுக்கடிதான்.கட்டத்துணியில்லை;உண்ண உணவில்லை; சுண்ணாம்பு அரிசிச் சாதமும், கல்லும் மண்ணும் கலந்த கஞ்சியும் அரிதாகக் கிடைக்கின்றது; இதை உண்ணுவதால் ஏழைகள் வயிறு வீங்கி வலியால் துடிக்கின்றனர்.பட்டப் பகலிலேயே பூரான், பாம்பு, பூச்சிலந்தி, வண்டு, அட்டை, நட்டுவாக்களி என்னும் விசஜந்துக்களின் கடிக்கு ஆளகித் தவிக்கின்றார்.இது மட்டுமல்லாது காசெனும் ஆசையால் மடக் கங்காணிகள் மங்கையரை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குகின்றனர்.மக்கள் உருக்குலைந்து முகம் வேறுபட்டுச் சாகின்றனர்.இவ்வாறு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சோகங்களை எடுத்துரைக்கும் சமூகத்துயரப்பாடலாக இப்பாட்டு நீண்டு செல்கின்றது.தெயிலைத் தோட்டத்திற்கு ஆள் பிடிக்க வருகின்றவர்கள் "நாரதனைப் போல் நயமாகப் பேசுகின்றார்கள்;ஆனால் மாட்டுத் தரகரைப் போல் கொஞ்சம் பணத்திற்காக மக்களை விலை பேசுகின்றார்கள்" என இரக்கமற்றவர்களாக இப்பாட்டு சித்தரிக்கின்றது.கங்காணிகளின் கொடுமையை ஆயிரம் நாவுகள் கொண்ட ஆதிசேடனாலும் சொல்லவியலாது என்கிறார், புலவர்.
தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த துன்பத்திற்கும் கங்காணிகளே காரணமாகக் காட்டப்படுகின்றனர்.ஆனால் மூலக்காரணமான வெள்ளையர் நல்லவர் போல் பாடலாசிரியரால் காட்டப்படுகின்றனர்.
"நல்ல மழையானாலும் ஏழை
நண்பர் வேலை செய்ய வம்பர் துரத்துரார்
வல்லவர் வெள்ளையர் மேல் குற்றம்
வாராது சொன்னாலும் யேராது புவியில்
சொல்லவே நாவுவல்லை பெறும்
சூதர் கங்காணி செய் வாதனையாலங்கு
அல்லல் படுவதைப் பார் அந்த
ஆதிசேடனாலும் வோதிடலாகாது"
பொது இடங்களில் இப்பாடல்கள் பாடப்பெற்றதால், வெள்ளை அரசாங்கத்திற்கு அஞ்சி இத்தகைய “நற்சான்று” வெள்ளையருக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.ஆனால் பாடலின் பத்தாவது கண்ணி, பாரத தேவியிடம் இச்சமூகத்துயருக்காய் முறையிடுவதாக அமைந்துள்ளது.
"பாரத தேவியே நீ ஏழை
பக்கத் துனைவந்து தக்க வழி தேடு
மீறியவர் நடந்தால் இந்த
மேதினியில் வொரே பேதியில் கொண்டுபோ"
துயரத்திற்குக் காரணமானவர்கள் “பேதியில் போகவேண்டும்” எனப் பேச்சுவழக்கில் வசைபாடும் புலவர், பாடலின் இறிதியில் தேயிலைத் தோட்டத்தை “மூதேவி தோட்டமெனப் பழிக்கின்றார்.பாடலாசிரியர் இசுலாமியர் என்றாலும் விநாயகருக்குத் துதிபாடுகின்றார்.மாரி, மகமாயிடம் குறை தீர்க்க வேண்டுகின்றார்.
யாஸிந்தாஸ்  இயற்றிய இரண்டாவது பாட்டு, தெம்மாங்கு மெட்டில் அமைந்துள்ளது; 21 கண்ணிகளையும், ஒரு தொகையறாவையும் ஒரு கண்ணித் தொடரையும் பெற்று இலங்குகின்றது.இப்பாடலும் கண்டி தேயிலைத் தோட்டத்தை, இந்திய தேசமக்களை நாசப்படுத்தும் தோட்டமாகச் சித்தரிக்கின்றது.தமிழகத்தில் நிகழ்ந்த ஏராலமான பஞ்சங்களே சிங்கப்பூர், பினாங்கு, கண்டி என வேற்றுப் புலப்பெயர்வுக்குக் காரனமென்று பாடலாசிரியர் குறிப்பிடுகின்றார்.மேலும் ஜன்னபா புலவரைப் போல இவரும் கங்காணியை சகலத்திற்கும் மூலகாரணமாக்குகின்றார்.கங்காணியை கொடும் பாவியாகவும், சண்டாளனாகவும், துரோகம் இழைப்பவனாகவும் கள்ளத்தனமும் ஏமாற்றுத்தனமும் பித்தலாட்டமும் நிறைந்தவனாகவும் காட்டுகின்றார்.வெள்ளை அரசாங்கத்திற்கு “நற்சான்று” பத்திரம் வழங்குகின்றார்.
"உற்றுணர்ந்து பார்த்த பின்பு வுண்மை
விளங்குதடி
குற்றமில்லை கவர்மெண்டின் மேல்
கனகரத்தினமே - அங்கு
கொடியவர் கங்காணிகள் தான் திலகரத்தினமே
மன்னாதி மன்னர் புகழ் மகிமையுள்ள
ஆங்கிலேயர்
கண்ணான இந்தியரை கனகரத்தினமே வீண்
கண் கலங்க செய்யமாட்டார் திலகரத்தினமே"
பாடலின் இறுதிப்பகுதியில் “காருண்ய சாதுமகான்” என்ற மெட்டில் அமையும் இரண்டு கண்ணிகள், கப்பலில் கடல் கடந்து இந்தியர் செல்லும் செயலை நிந்திக்கின்றன;சுதேசிய உணர்வை வலியுறுத்துகின்றன.
"கடலைக் கடந்து கப்பலில் போகலாமா
கண்ராவி சும்மா
கண்ணிய விரதத் திண்ணிய ரோஷன்
எண்ணிய பரத இந்து சுதேசன்"
இதே பொன்று தொகையறாவிலும் புலப்பெயர்வினால் நன்மையும் பெருமையுமில்லை என்றே உரைக்கின்றார்.பாடலாசிரியர்,
"பிரதேச சஞ்சாரஞ் செய்வதாலிந்தியர்
பெருமை பெறுவதுண்டோ
திரமேவு மேனியை நம்மவர் பாழாக்கி
சிந்திப்ப தாகுமன்றோ"
பாடலின் இறுதியிலமையும் கண்ணித் தொடரும் இதே கருத்தினைக் கொண்டமைகின்றது.அதில் சிங்கப்பூர் ரப்பர் தோட்டக் கூலி வேலையும் வீணானது.அங்கு தெருவை சுற்றிக் கொண்டு உருக்குலைந்து கோடி மக்கள் அலைவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.முதற்பாடலை இயற்றிய ஜன்னபா புலவரே இப்பாடலை தெம்மாங்கு அலங்காரமாக பாடி வருவதாக பாடலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
இலங்கை மலையக மக்கள் வாழ்வு குறித்த இத்தகைய பதிவுகள் இலங்கையில் மலையக இலக்கியமாக மலர்ந்துள்ளது.இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கண்ணீர் வரலாறு 1824 ஆம் ஆண்டு சென்ற 16 இந்திய தமிழர்களின் குடியேற்றத் துயரத்தை வாய்மொழி பாடலாக பாடி வந்துள்ளனர்.இத்தகைய பாடல்களை முனியாண்டி என்னும் ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஜோன் கெப்பர் 1869 ஆம் ஆண்டில் சேகரித்துள்ளனர்.(அந்தனி ஜீவா: மலையகமும் இலக்கியமும்: 1995) அப்பாடல்களில் தாயகத்தின் மீதான ஏக்கமும் உறவுகளின் பிரிவுத் துயரமும் கங்காணியர் கொடுமையும் ஆழமாக வெளிபட்டுள்ளன.
"ஊரான ஊரிழந்தேன்
ஒத்த பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயே நா மறந்தேன்"
"கோண கோண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே 
ஒத்த பழம் தப்பிச் சின்னு
ஒதைச் சானையா சின்னத்துரை"
இதே போன்ற சிந்துப் பாடல்களை தொழில் முறையாக இயற்றி பொது விழாக்களில் “ அருள் வாக்கி அப்துல் காதர் புலவர் (1866 - 1918) பாடியுள்ளார்.இதே பாடகர் வரிசையில் பாவலர் வேல்சாமி தாசனும் மலையகத்தில் வலம் வந்துள்ளார்."தேச பக்தன்" கோ.நடேசய்யர் மலையக வாழ்வை ஏட்டிலக்கியத்தில் பதிவு செய்தவர்களுள் முன்னோடியானவர்.நடேசய்யருக்கு பின் நாவல்களாகவும், சிறுகதைகளாகவும், புதுக்கவிதைகளாகவும் ஹைக்கூக்களாகவும் மலையக இலக்கியம் தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றது.அவர்கள் “விம்மி விம்மி அழும் குரல்” இன்றும் தாய்த் தமிழகத்தில் எதிரொலித்துகொண்டுதான் இருக்கின்றது.
 
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World