Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueசிலுவை சுழி
- கவிப்பித்தன்
 

மசமசவென இருந்த இருட்டில் ஆற்றங்கரையில் இருந்த மரங்கள் சாணித்தாளில் வரையப்பட்ட கருப்பு ஓவியங்களைப் போல அரைகுறையாகத் தெரிந்தன ராசபாண்டிக்கு.

சர்ச் கோயிலுக்கு எதிரில் மொட்டை இலுப்பை மரத்தின் கீழிருந்த பாறாங்கல் மீது குத்துக்காலிட்டு குந்தினான். குனிந்து கீழே பார்த்தான். கால் கட்டை விரல்கள் மங்கலாகத் தெரிந்தன. நன்கு விடியட்டும் என்று காத்திருந்தான்.

வெளிச்சம் கூடக் கூட, சாணித்தாள் ஓவியம் வெள்ளைத்தாள் ஓவியமாய் பளிச்சிட ஆரம்பித்தது.

வேறு யாரேனும் வருகிறார்களா என பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை. நேற்று இந்நேரம் இந்த இடத்தில், ஆற்று மணல் மாதிரி மக்கள் கூட்டம் இருந்தது. ஒலிபெருக்கிகள் ஓயாமல்
அலறிக்கொண்டிந்தன.

"அல்லேலூயா... அல்லேலூயா... ஏசுவே... பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே'' என இடைவிடாத பிரார்த்தனைகள்.

சர்ச், பந்தல், சாலை என குவிந்த கூட்டம் ஆற்றங்கரை வரை பரவி இருந்தது. ஆற்றங்கரையோரம் சர்ச் இருந்ததால், திருவிழாவுக்கு வந்த மக்கள் பிரம்மாண்ட பந்தலும், ஆற்றங்கரைகளிலும், ஆற்றிலும் பாய்களையும், துணிகளையும் விரித்து, அமர்ந்திருந்தனர். புளியமரங்களும், இலுப்பை மரங்களும் அருமையாக நிழலைத் தந்தன.

திருவிழா நடந்த மூன்று நாட்களும் இங்கேயே சுற்றிச் சுற்றி வந்தான் ராசபாண்டி. சாலையில் இருபுறமும் போடப்பட்டிருந்த திருவிழாக்கடைகளில் இருந்த பொறி கடலை, கார வகைகள், இனிப்புகள், பழங்கள், சுடச்சுட ஆவி பறக்கும் பிரியாணி, கவாப்புகள்,
பஜ்ஜி, போண்டா எல்லாமே நாக்கில் எச்சிலை ஊற வைத்தன.

கடைகடையாய் ஆசைத்தீரப் பார்த்தான் ராசபாண்டி. இவனைப்போலவே இவனது ஊர்ப்பிள்ளைகள் எல்லோருமே கண்கள் விரிய, விழுங்கி விடுவதைப்போல பார்த்தனர். சிலர் மலிவு விலை ஐஸ்கிரிம்களையும், ஆரஞ்சுப்பழங்களையும் வாங்கி அவசர
அவசரமாய் விழுங்கினர்.

கடைகளில் மணக்கும் உணவுகளைவிட, அங்கு வந்திருந்த மக்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்து சாப்பிடும் உணவுப்பண்டங்களின் மணம் மூக்கைத் துளைத்தது. சுற்றுப்புற சேரிகளிலிருந்து குடும்பம் குடும்பமாய் வந்து உட்கார்ந்து வகைவகையாய் ருசித்துக் கொண்டிருந்தனர்.

என்னென்ன சாப்பிடுகிறார்கள் என கண்கள் விரிய பார்த்தபடி சுற்றிச்சுற்றி வந்தான் ராசபாண்டி. புளிசோறு, தக்காளிச்சோறு, மாட்டுக்கறி குழம்பு சோறு, பிரியாணி, வறுத்த கறி என விதம் விதமாய் தூக்குப் பாத்திரங்களில் கொண்டு வந்து, தட்டுகளில் பரிமாறி நாலாபுறமும் மணம் பரப்பிக்கொண்டிருந்தனர்.

ஆலயத்தில் பிரார்த்தனைகளும், பஜனைளும் நடக்க, சுற்றிலும் எந்நேரமும் சாப்பிடுவதும், ஜெபிப்பதுமாக இருந்தனர் அவர்கள். நாள் முழுவதும் ஜெபம். நாள் முழுவதும் சாப்பாடு.

இது மாதிரித் திருவிழா நமக்கு இல்லையே என வருத்தமாக இருந்தது ராசபாண்டிக்கு. வள்ளிமலை மாசித் தேர்த்திருவிழா கடந்த வாரம்தான் முடிந்திருந்தது. வருடந்தவறாமல் நான்கு நாள் தேரோட்டத்துக்கும் போவான் ராசபாண்டி. அங்கே இதைவிட கூட்டம் அதிகமாக இருக்கும். கடைகளும் அதிகம். ஆனால் "விரதம்' இருந்து ""முருகா... முருகா...'' என சாப்பிடாமலேயே மலையைச் சுற்றி வருவாள் இவன் அம்மா.

ஆனால் இங்கே சாப்பிட்டபடியே ஏசுவைக் கும்பிடும் இவர்களை ராசபாண்டிக்கு ரொம்பப் பிடித்துப்போனது.

அதனாலேயே ஒவ்வொரு வருடமும், இந்த அணைக்கட்டுத் திருவிழாவில் இவனும், இவன் ஊர்ப் பிள்ளைகளும் கால் வலிக்க வலிக்க, வலியே தெரியாமல் சுற்றுவார்கள். கண்கள் விரிய விரிய திண்பவர்களைப் பார்ப்பார்கள். பார்த்துப் பார்த்தே பசியாறுவார்கள்.

இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த திருவிழாவில், விழுங்கிவிடுவதைப்போல இவன் பார்ப்பதைக் கண்ட ஒரு பெண்மணி, ஒரு வாழை இலையில் கொஞ்சம் கறி சோறு போட்டு இவனுக்குக் கொடுத்தாள். தயங்கித் தயங்கி வாங்கி ஒண்டி புங்க மரத்து மறைவுக்குப்போய் வாரி வாரி சாப்பிட்டான். ருசியோ ருசி.

இரவு வீட்டுக்குப் போனதும், இவனது தகப்பன் இவனைப் பிண்ணியெடுத்துவிட்டான்.

"போயும் போயும் அவனுங்ககிட்ட வாங்கித்துண்ணுட்டு வந்து கீறியேடா நாயே'' என்று எகிறினான்.

இவன் ஊருக்கு அருகில் இந்தத் திருவிழா நடப்பதால், இரவு நேரங்களில் இவன் ஊரில் உள்ள இளைஞர்களும், பெரியவர்களும் திருவிழாவில் கெத்தாக வலம் வருவார்கள். மாட்டுக்கறி பிரியாணியை ரகசியமாக சாப்பிடுவார்கள். இவனே நிறைய்யப்பேரைப் பாத்திருக்கிறான். ஆனால் இவன் அப்பன் அடித்தப்பிறகு யாராவது இவனுக்கு ஏதேனும் தின்னக்கொடுத்தாலும்
வாங்கமாட்டான்.

இன்றைக்கு பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக புது நோட்டு வாங்கி வரச் சொல்லி இருந்தார் கணக்கு வாத்தியார்.

அப்பனிடம் ஒரு வாரமாகச் சொல்லியும் பலன் இல்லை.

முருகவேல் ஆலோசனைப்படி, திருவிழாவில் போட்டிருந்த ஒரு சோடாக்கடையில் கெஞ்சி, சோடா கலர் பெட்டியை தலைமேல் வைத்து "சோடா.... கலரே'' என்று நேற்று மதியம் வரை கூவினான். ஒரு சோடா விற்றால் நாலனா தருவதாக கடைக்காரர் சொன்னார். ஆனால் ஒன்று கூட இவனால் விற்க முடியவில்லை. கோலி சோடாவை விட பெப்சி கோலா என்று வெளிநாட்டு கலர்களைத்தான் வாங்கிக் குடித்தனர். அதை குளிரும் பெட்டியில் வைத்து கடைக்காரர்களே விற்றார்கள். பையன்களிடம் கொடுத்தால் கூலிங் குறைந்துவிடுமாம்.

இன்று கணக்கு நோட்டு வாங்க ஒரே வழிதான் இவனுக்கு இருந்தது. எல்லோருக்கும் முன்பாக ஆற்றங்கரையில் சில்லரைத் தேடினால் நோட்டு வாங்கி விடலாம் என்று நேற்று நடு இரவில் முடிவு செய்தான். இரவில் கனவெல்லாம் மணலைக் கிளறக்கிளற சில்லரைகளாகவே வந்தன.

விடிந்தும், விடியாத நேரத்தில் யாருக்கும் சொல்லாமல் இங்கே வந்து குந்திய ராசபாண்டி, பதினைந்து ரூபாய் சில்லரை தேறிவிட்டால் போதுமே என்று முருகனையும், ஏசுசாமியையும் வேண்டிக்கொண்டு, ஓரளவு விடிந்த பிறகு, உட்கார்ந்த இடத்திலிருந்து அங்குலம் அங்குலமாக மணலைப் பார்வையால் சலித்தவாறு முன்னேறினான். சில இடங்களில் கொட்டப்பட்டிருந்த மிச்சமான
சோறு கால்களில் சொத சொதவென பூசிக்கொண்டது. எலும்புத்துண்டுகள் காலில் குத்தின.

ஆற்றில் தண்ணீர் வந்த காலங்களில், மக்கள் ஆற்றிலேயே குளித்து, துவைத்து, அங்கேயே தங்கி ஏசுவை வழிபடுவார்கள். இப்போது ஆற்றில் தண்ணீர் வராததால், குழாய் போட்டு தண்ணீர் வழங்குகிறார்கள். போதாதற்கு யாரேனும் வேன்களில் தண்ணீர் பொட்டலங்களைக்கொண்டு வந்து இலவசமாகப் போடுவார்கள். ஆனால் எல்லோரும் குளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. குளித்துவிட்டுத்தான் ஜெபிக்க வேண்டும் என்றாலும், குளிக்காமல் ஜெபிக்கிற பாவத்திற்கும் சேர்த்து ஏசுவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வார்கள்.

தண்ணீர் வராததால், வெள்ளை வேட்டிகளைக் காயவைத்ததுபோல் விரிந்து கிடந்த மணல் வெளியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து, இரவும் பகலுமாக வகை வகையாய் ருசித்தபடி வழிபடுவார்கள். விடியலில் ஆற்றங்கரைகளை ஒட்டியிருக்கும் காய்ந்த வயல்களில், உள்ளே போன விதவிதமான உணவுகள் பலப்பல வடிவங்களில் கழிவுகளாகக் கிடக்கும்.

முதல் நாள் கூட்டம், இரண்டாவது நாள் ஆட்டம், மூன்றாவது நாள் ஓட்டம் என மூன்று நாட்கள் மக்கள் கூடி, குலாவி, மகிழ்ந்து பிரியும் மூன்றாவது நாளுக்குப் பிறகு, அந்தப் பிரதேசமே நாற்றத்தால் மூச்சுத்திணறும்.

அதற்கு மறுநாள் மூக்கைப் பொத்திக்கொண்டும், முக்காடு போட்டுக்கொண்டும், இவன் ஊர்சிறுசுகளும், பெருசுகளும் ஆடு, மாடுகளை மேய்க்கிற சாக்கில் எல்லா இடங்களையும் கிளறுவார்கள். அதிலும் மலம் கழித்து வைத்துள்ள பகுதிகளில் கவனமாகத் தேடுவார்கள். மலம் கழிக்க உட்காருகிறவர்களின் ஜோபிகளிலிருந்து அவர்களுக்குத் தெரியாமல் சில்லரைகள்
விழுந்து கிடக்கும்.

காயந்த, காயாத மலங்களை மிதிக்காமலிருக்க, கால்களை அகட்டி வைத்துக்கொண்டு தேடுவார்கள். கணநேர பார்வைப் பிசகலில் கால்களில் அப்பிக்கொள்ளும் மலத்தைத் தரையோடு தேய்த்துவிட்டு, அதைக் கழித்தவர்களின் வயிற்றிலும், மலவாயிலும் நெருப்பைக் கொட்டவேண்டும் என்கிற ஆத்திரத்தோடு குப்பைகளை கிளறுவார்கள்.

பெரும்பாலும் எட்டணா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள்தான் அதிகம் கிடைக்கும். சில நேரங்களில் பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுக்களும் கிடைக்கும். சிலருக்கு தங்க மோதிரங்களும், கம்மல்களும்கூட கிடைத்திருக்கின்றன. மூன்றாம் நாளான நேற்று மதியத்திற்குமேல் மக்கள் கரையத் தொடங்கி, இரவுக்குள் ஆற்றங்கரையே வெறிச்சோடிப்
போயிருந்தது. பந்தல் பிரிப்பவர்கள்கூட இனிமேல்தான் வருவார்கள்.

மக்கள் கூட்டம் அதிகம் உட்கார்ந்த பந்தலுக்குக் கீழே கவனமாகத் தேடினான் ராசபாண்டி. கண்களில் விளக்கெண்ணை விடாத குறையாகத் தேடியும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

மனம் தளராமல், பரந்து விரிந்திருந்த புளியமரத்தினடியில் தேடினான். சூரியன் லேசாகத் தலை காட்டத் தொடங்கி இருந்தான். நின்று நாலாபுறமும் பார்வையைச் சுழல விட்டான். பத்தடி தொலைவில் வெளிச்சம் பட்டு எதுவோ மின்னியது. அருகில் ஓடினான். முக்கால்பாகம் புதைந்தபடி ஒரு ஐந்து ரூபாய் நாணயம் கிடந்தது. அதன் அருகிலேயே ஒரு ரூபாய் நாணயம் ஒன்றும் இருந்தது. புதையலைக் கண்ட பூரிப்புடன் எடுத்து துடைத்து டவுசர் ஜோபியில் போட்டுக் கொண்டான்.

இவனுக்கு எப்போமே சில்லரைதான் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு வருடமும் முருகவேலுவுக்கு மட்டும் ஒரு நோட்டாவது கிடைத்துவிடும். போன வருடம் மட்டும் ஒரு பாறைக்கு அருகில் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று கிடைத்தது இவனுக்கு. தாங்கமுடியாத சந்தோசத்தோடு போய் அம்மாவிடம் காட்டினான். இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை இவனிடம் கொடுத்துவிட்டு, நோட்டை பிடுங்கிக்கொண்ட இவன் அப்பன், அன்று முழுவதும் பட்டை சாராயத்தில் மிதந்தான். சேரிக்காரங்க சோறு மட்டும் தின்னக்கூடாது, அவங்க காசு மட்டும் வேணுமா என்று ஆத்திர ஆத்திரமாக வந்தது இவனுக்கு. இன்றும் அதைப்போல ரூபாய் நோட்டு ஏதாவது கிடைத்தால் யாரிடமும் சொல்லக்கூடாது என நினைத்துக்கொண்டான்.

வெய்யில் லேசாக உரைக்கத் தொடங்கியபோது, ரங்கராட்டினம் போட்டிருந்த இடத்தில் பத்து ரூபாய் நோட்டு ஒன்று கிடைத்தது. மொத்தம் பதினாறு ரூபாய் கிடைத்துவிட்டதால் மிச்சம் இருக்கும் ஒரு ரூபாயில் முருகருக்கு கற்பூரம் கொளுத்தி விடலாம் என்று நினைத்தான் ராசபாண்டி.

ஏசு சாமி கோயில் திருவிழாவில் கிடைத்த பணத்துக்கு, முருகருக்கு கற்பூரம் கொளுத்துவது அநியாயமாகத் தெரிந்தது அவனுக்கு. விடுவிடுவென சர்ச்சுக்குள் போனான். உள்ளே யாருமே இல்லை. ஆலய பணியாளர்கள், அய்யர் எல்லாம் பின்புறம் உள்ள கட்டடத்தில் களைத்து தூங்கிக்கொண்டு இருக்கலாம்.

உள்ளே இருந்த சிலுவைக்கு முன்பு தலை குனிந்து நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டான். ஏசுவுக்கு நன்றி சொல்லி விட்டு, சிலுவைக்குக்கீழே இருந்த உண்டியலில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டு, கையெடுத்துக் கும்பிட்டான். "கிளிங்' என்று உள்ளே விழுந்தது நாணயம். திருவிழாவில் உண்டியல் நிறைய்ய காணிக்கை விழுந்திருக்கும்.

அது பெரிய உண்டியல். மார்பு உயரத்துக்கு சிமெண்டால் கட்டப்பட்டு, பெரிய பூட்டு போடப்பட்டு இருந்தது. திருவிழா நாட்கள் தவிரவும் மற்ற நேரங்களிலும் மக்கள் அதில் காணிக்கை போடுவார்கள்.

இவர்கள் தினமும் பள்ளிக்கு இந்த வழியாகத்தான் செல்வார்கள். சர்ச்சில் யாரும் இல்லாத நேரங்களில், வேப்பமரத்திலிருந்து பெரிய குச்சியை ஒடித்து வந்து உண்டியலின் வாய்வழியே உள்ளே நுழைத்து ஆட்டுவான் ரமேசு. உள்ளே சில்லரைகள் சிதறும். உள்ளே எவ்வளவு பணம் இருக்கும் என்று ஆளுக்கொரு கணக்கு சொல்லியபடி பள்ளிக்குப் போவார்கள்.

குச்சியில் காந்தம் வைத்துக் கட்டி உள்ளே நுழைத்து பைசா எடுக்கலாம் என்று மணிகண்டன் ஒருநாள் யோசனை சொன்னான். ஆனால் அப்படிச் செய்ய யாருக்கும் தைரியம் வரவில்லை. ஏசு சாமி கால்களை முடமாக்கி விடுவார் என்று
பயந்தார்கள்.

சர்ச்சில் வேலை செய்யும் ஒருவர், குச்சியின் முனையில் தார் உருண்டையை வைத்து, அதை உள்ளே நுழைத்து அதில் ஒட்டி ஒட்டி காசு எடுக்கும்போது யாரோ பார்த்துவிட, தர்ம அடி விழுந்ததாகவும், சில நாட்களிலேயே அவருக்கு கைகால் விளங்காமல் ஏசு சாமி செய்து விட்டதாகவும் இவன் வகுப்பு ஆபிரகாம் சொன்னான்.

பயபக்தியோடு சர்ச்சிலிருந்து வெளியே வந்த ராசபாண்டி, அரை குறையாகக் தரையைப் பார்த்தபடியே ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் ஆடுகள் குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தன. அவற்றின் மத்தியில் குனிந்து குச்சியால் கிளறிக் கொண்டிருந்தார் பேட்டை மாணிக்கம்.

ஆலயத்துக்கு வலது புறம் பிரியாணி கடை போட்டிருந்த இடத்தில் பிளாஸ்டிக் கிளாஸ்களும், வாழை இலைகளும் குவிந்து கிடந்தன. நாற்றம் குடலைப்புரட்டியது. மூக்கைப் பிடித்துக்கொண்டு மேம்போக்காகப் பார்த்தான் ராசபாண்டி. சற்றுத் தள்ளி, பந்தல் கம்பு நட வெட்டியிருந்த பள்ளத்துக்கு அருகில், குவிக்கப்பட்டிருந்த மண் குவியலுக்கு பக்கத்தில் ரூபாய் நோட்டு ஒன்று மடிந்த வாக்கில் கிடந்தது. நம்பிக்கையில்லாமல் குனிந்து எடுத்தான். அது நூறு ரூபாய் நோட்டு. கைகள் நடுங்க அதைப் பிரித்தான்.

மொத்தம் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் அதில் இருந்தன. குப்பென்று வேர்த்து விட்டது ராசபாண்டிக்கு.

சுற்றும் முற்றும் பார்த்தான். ரொம்ப தூரத்தில் பேட்டை மாணிக்கமும், இன்னும் தள்ளி இரண்டு பையன்களும் குனிந்து கிளறிக்கொண்டிருந்தனர். இவனை யாரும் கவனிக்கவில்லை. பணத்தை டவுசர் ஜோபியில் வைத்துக்கொண்டான்.

பணத்தை என்ன செய்வது என்று யோசித்தபடியே ஊரை நோக்கி ஓடத் தொடங்கினான். அம்மாவிடம் கொடுத்துவிடலாமா? அப்பாவிடமே கொடுத்து விடலாமா? குடித்து ஒழித்து விட்டால்? குழப்பத்தோடு வீட்டுக்குள் நுழைந்தான்.

"எங்கடா போயித் தொலைஞ்ச... இஸ்கூலுக்கு போலியா'' என்றாள் அம்மா.

அடுப்புக்கரித்துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு, நற நற வென்று மென்று, பற்களில் தேய்த்தான். வாய் கொப்பளித்து, முகம் கழுவி விட்டு, ராத்திரி மிச்சமான பழங் களியையும், கருவாட்டுக் குழம்பையும் விழுங்கிவிட்டு, பள்ளிப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினான்.

டவுசர் ஜோபியில் பத்திரமாய் இருந்தது பணம். அதை என்ன செய்வது என்று புரியவில்லை. அதை யார் தொலைத்திருப்பார்களோ, பாவம் அவர்கள் என்று நினைத்தவன், அது யாருடையது என்று தெரிந்தால் கொடுத்து விடலாம் என்று நினைத்துக்கொண்டான்.

"அது யாருதுன்னு ஏசு சாமிக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா ஏசு சாமிக்குத் தெர்ஞ்சி இன்னா பன்றது, நமுக்குத் தெரிலியே' என்று சொல்லிக்கொண்டான். யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

"யாருக்கும் தெரியாமல் ஏசு சாமி உண்டியலில் அந்தப் பணத்தை போட்டு விடலாம். ஏசு சாமி அதை சொந்தக்காரர்களிடம் எப்படியாவது சேர்த்து விடட்டும்' என்ற முடிவோடு சர்ச்சை நோக்கிப் போனான்.

சர்ச்சுக்குப் பக்கவாட்டில் ஒரு போர்வெல் இருந்தது. அதற்கு பக்கத்தில் ஒரு வயதான பிச்சைக்காரர் உட்கார்ந்திருந்தார். இவனைப் பார்த்ததும் கையசைத்துக் கூப்பிட்டார்.

அவருக்கு ஒரு கால் கிடையாது. ஊன்றுக் கட்டைகளை அருகில் வைத்துவிட்டு உடகார்ந்திருந்தார். ஒரு சொம்பை இவனிடம் கொடுத்து தண்ணீர் அடித்துத் தரும்படி பரிதாபமாகக் கேட்டார்.

சொம்பை வாங்கி போரில் தண்ணீர் அடித்துக் கொடுத்தான். வாங்கி மடக்மடக்கென குடித்தார். காலையில் அவர் இங்கு இல்லை. இரவு ஆற்றங்கரையில் ஏதேனும் மரத்தடியில் படுத்திருந்துவிட்டு, இப்போது எழுந்து வந்திருக்கலாம். அவருக்கு அருகில் ஒரு அலுமினியத் தூக்கு இருந்தது. ஒரு அழுக்கு மூட்டையும் அதற்குப் பக்கத்திலேயே கிடந்தது.

சில்லரை நாணயங்களும், ஒன்றிரண்டு பத்து ரூபாய் நோட்டுகளும் அலுமினியத் தூக்கில் இருந்தன. திருவிழாவில் பிச்சை எடுத்தப் பணமாக இருக்கும்.

அந்த சில்லரை இருக்கும் வரை இவருக்கு "சாப்பாட்டுக்கு பயமில்லை' என நினைத்துக் கொண்டான் ராசபாண்டி. பாவம் இவர், அதற்குப்பிறகு என்ன செய்வாரோ? ஐநூறு, ஆயிரம் என பிச்சை சேர்ந்திருந்தால் கொஞ்ச காலத்துக்கு பயமில்லாமல் இருக்கலாம் என நினைத்த ராசபாண்டிக்கு திடீரென அந்த நினைப்பு வந்தது.

ஏசு சாமி உண்டியலில் போடுவதற்குப் பதில், இந்தப் பணத்தை இவருக்கு போட்டு விடலாமா என்ற யோசித்தான். ஏசு சாமி நமக்கு கை, கால் விளங்காமல் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் வந்தது.

சாமி உண்டியலில் ஏற்கெனவே நிறைய்ய பேர் காசு போட்டிருப்பார்கள். அதில் இந்தப் பணத்தைப் போட்டாலும், சர்ச்காரர்கள் எடுத்து, திருவிழா செலவுக்குத்தானே வைத்துக் கொள்வார்கள்.

என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது அவனுக்கு. தன் அழுக்கு மூட்டையைக் குடைந்து கொண்டிருந்தார் பெரியவர். சர்ச்சைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, திரும்பி பிச்சைகாரரைப் பார்த்தான். முந்தாநாள் திருவிழாவில் காட்டிய படத்தில் தாடியோடு சிலுவையை இழுத்துக்கொண்டு நடந்த ஏசுவைப் போலவே இருந்தார் பிச்சைக்காரர்.சட்டென்று டவுசர்
பையிலிருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து, பெரியவர் பார்க்காதவாறு அவரின் அலுமினியத் தூக்கில் போட்ட ராசபாண்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் பள்ளியை நோக்கி ஓடத் தொடங்கினான். இன்னொரு ஜோபியில் கணக்கு நோட்டுக்கான காசு பத்திரமாக இருந்தது.

நாயர் கடையில் பதினைந்து ரூபாய்க்கு கணக்கு நோட்டு வாங்கிக்கொண்டு போய் வகுப்பில் உட்கார்ந்த ராசபாண்டி, நோட்டைத் திறந்து முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழி போட்டான். கொஞ்சம் யோசித்தவன் பிள்ளையார் சுழிக்கு பக்கத்திலேயே கூட்டல் குறியைப்போல ஒரு சிலுவையை வரைந்தான். பிறகு அதன் கீழே தன் பெயரை கொட்டை எழுத்தில் எழுதினான்.

இப்போது சந்தோசம் தாங்க முடியவில்லை அவனுக்கு.

 
Related News
 • கி.பி. 3000
  (நுண்கதை)
  - ஸ்ரீ மொழி வெங்கடேஷ்

 •   
   

  உங்கள் பெயர் *
    தமிழில் தட்டச்சு செய்ய
  உங்கள் கருத்துக்கள் *
  மின்னஞ்சல் முகவரி *

   

  Comments
    Name Karthi  
    Comments
  Very Nice Story
   
    Email Id kartthi@yahoo.co.in  
       
   
   
  Head Image
  முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

   Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

  Designed and Hosted by Info World