Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueகம்பராவுத்தர்
 

கமலா இந்திரஜித்

"கோதை!" என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார் சாரி

"வந்துட்டேன் !" என்று உள்ளிருந்து குரல் மட்டும் வந்தது. கொஞ்ச  நேரத்தில் கொலுசு சப்தம் வந்தது.

"என்னே?" என்று வந்து நின்றாள் கோதை.

"ராவுத்தர் கடையில் போய் வெத்தலை, சீவல், பன்னீர்ப்  புகையிலை , வாசனை சுண்ணாம்பு - வாங்கிண்டு வா!" 

"லவங்கம், ஜாதிபத்ரி, கிராம்பு, ஏலக்காய் - இதெல்லாம் விடுபட்டு விட்டதே!" என்றாள் பாட்டி சிரித்துக் கொண்டே.

"அதெல்லாம் தான் ஸ்டாக் இருந்ததே; ஏதானும் ஸ்வீட் ஒண்ணு தான் குறைச்சல்!"

"போறது; இப்போ உடம்பு இருக்கற அழகுக்கு ஸ்வீட் ஒண்ணுதான்  குறைச்சல்!"

"ஏன் உன் உடம்பிற்கென்ன? பளபளன்னு பதிர் பேணியாட்டமா? அழகாய்த்தானே உள்ளாய்? உனக்கு எழுபது வயதென்றால் யார் நம்புவார்?சரிபாதிதான் சொல்லலாம்!"

"போதும் கோதை சிரிக்கிறா பாருங்கோ; இதை அப்படியே மூட்டை கட்டிண்டு போய் சென்னையில் அவிழ்ப்பாள்; அங்கப் பறக்கப் போறது என் மானமாத்தான் இருக்கும்!" என்றாள் பாட்டி கன்னத்தில் கை வைத்து நொடித்துக் கொண்டே.

"இப்ப நிஜமாலுமே அழகுடி சீமதி நீ! என்று மேலும் சீண்டினார்.

"அய்யோ போதுமே உங்கள் ரொமான்ஸ்!தாத்தா வேறு ஏதாவது வாங்கணும்னா இப்பவே சொல்லிடுங்கோ; திரும்ப இன்னொரு தடவை ஓடுன்னா நான் ஓடமாட்டேன்!" என்றாள் கோதை.

"ஏன் மகாராணிக்கு அப்படி என்ன தலை போற வேலை?"

"விளையாடாதேங்கோ தாத்தா; ஹோம் ஒர்க் அப்படி அப்படியே இருக்கு",

"ஏன் ராத்ரி கண் விழிச்சு எழுதிட்டாப் போச்சு; கிழவி என்ன பண்றாள்;

பிளாஸ்க்ல டீ போட்டு வை!"

"போதுமே; டீயை மூச்சு மூச்சா குடிச்சிட்டு வெத்தலை பாக்கை அறைத்து ஊதி விழித்திருந்து விட்டு, காலைல மசக்கைக் காரியாட்டம் “உவ்வே, “உவ்வே” - ன்னு வாந்தி எடுத்து ஊரைக்கூட்டணுமாக்கும், நீ போடி, போய் அந்த வெத்தலைச் சீரை வாங்கிண்டு வா".

"வெத்தலை இள, இளன்னு குழந்தைப் பிஞ்சாய் பச்சுன்னு இருக்கட்டும்!" என்றார் தாத்தா.

"அதெல்லாம் ராவுத்தர் பார்த்துப்பர்! நீ போய்ட்டு வாடி குட்டி!" என்று பேத்தியை விரட்டினாள்  ஸ்ரீமதி.

ராவுத்தர் கடையில் அந்திக் கூட்டம் அலை மோதியது. எப்பொழுதுமே அவர் கடையில் கூட்டம் தான். இரண்டு பையன்கள் ஓடி, ஓடி எடுத்துக் கொடுக்க , ராவுத்தர் கல்லாவில் உட்கார்ந்திருந்தார். அவர் பக்கத்தில் ஒரு ஆள் கைகட்டி நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"சொல்லு நானும் எத்தனை தடவை நயந்து பயந்து கேட்டிருக்கேன்?நல்ல விஷயத்துக்கு வாங்கின கடன், கொடுத்தவன் அய்யோன்னு நினைத்தால் விளங்குமா?சொல்லு?பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடன்" பொண்ணுக்கும் ரெண்டு பிள்ளை பிறந்தாச்சு, எப்ப கேட்டாலும் இப்ப, அப்பன்னு சொல்றே, வாயத் திறந்தா பொய். மாடு செத்துப் போச்சுங்கறே, மாப்பிள்ளை ஆக்ஸிடென்ட்ங்கறே, ஏ, அப்பா, என்னா பொய்! அல்லா!"பொய் இல்லை உண்மை உரையிலாமையால்!" அப்படீன்டு உன்னைக் கண்டிருந்தால் கம்பர் மாற்றிப் பாடி இருப்பார்.இன்னும் ஒரு வாரம் கெடு; அதுக்குள்ள ஏற்பாடு பண்ணு; அப்புறம் வீணா அவதிப்படாதே; ஆமாம்; சொல்லிட்டேன்!" என்று அவனைக் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி அனுப்பி வைத்தார் ராவுத்தர். ஏ.அப்பா, ராவுத்தருக்கு இத்தனைக் கோபம் வந்து பார்ததில்லை கோதை. எப்போதும் சிரிப்பும் , கவிதையுமாய் இனிமையாய்ப் பேசும் ராவுத்தர்.”இத்தனை கோபப்படுகிறாரே!; என்று பயந்து நின்றாள்.

அவளைக் கண்டதும் ராவுத்தர் முகம் மாறி விட்டது. அதே பழைய சிரிப்பு  வந்துவிட்டது. தாத்தா வாங்கி வரச்சொன்ன பொருள்களைக் கூற, பொட்டலம் கட்டிக் கொடுத்தார்கள். வாங்கிக் கொண்டு புறப்பட நினைத்தவளை ராவுத்தர் விடவில்லை.

"என்னா கோதை , நீ பாட்டுக்கு போற ? நான் கேட்கறதுக்குச் சரியாய் பதில் சொல்லி விட்டாய் என்றால் லாலிபாப், என்ன? ஆரம்பிக்கலாமா?என்றார் குறும்பும் விளையாட்டுமாய்.

"ஓ!ரெடி!" என்றாள் கோதை.

"நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ,

நிறை நெடு மங்கல நாணோ........."

யாரைப் பார்த்து அல்லது வர்ணிச்சுப் பாடற பாட்டு சொல்?" என்றார் ராவுத்தர். கோதை யோசித்தாள். "சீதையைப் பார்த்து ராமன் ?" என்றாள் நம்பிக்கையுடன்.

"ம்கூம்; அயோத்தி நகரம் அத்தனை அழகுன்னு பாடப்பட்டது.வர்ணிச்சுட்டா, அழகுன்னா உடனே அது பெண்ணாய்தான் இருக்குமா? ஏன் ஊராய் இருக்கக் கூடாதா? தோத்தாங்குளி; தோத்தாங்குளி!" என்று அழகு காட்டினார் ராவுத்தர். 

"அதெல்லாம் முடியாது மாமா! ராமாயணத்துலன்னு சரியாய் கண்டு பிடிச்சுட்டேனா இல்லையா இதை உங்காந்து நூர்முகமதுட்டே கேட்டீர்களென்றால் "நம்ம மூமாவைப் பத்திக் குரான்ல பாடி இருக்காங்க!"  என்று சொல்லி இருப்பான். இம்மட்டில் நான் காவ்யத்தின் பெயரையாவது சரியாய்ச் சொன்னேனா இல்லையா?" என்றாள் கோதை. 

ராவுத்தருக்கு சிரிப்பு வந்து விட்டது. அவர் பேரன் நூர்முகம்மது கோதையின் வகுப்பில் தான் படிக்கிறான். படிப்பில் கொஞ்சம் சுமார்.அதை இந்தப் பெண் என்ன சமர்த்தாய்ப் பயன்படுத்திக் கொண்டது.

"சரியாய் பதில் சொன்னால் ஒரு லாலிபாப்; தவறாய் சொன்னதற்கு இரண்டு!"  என்று கைக்கொன்றாய் கொடுத்து அனுப்பினார். வெற்றிலை சீவலை தாத்தாவிடம் கொடுத்தாள் கோதை.

"என்னடி கைல, லாலிபாப்பா? ஏது?" என்றாள் பாட்டி. 

"ராவுத்தர் உபயமாத்தான் இருக்கும்; இல்லே குட்டி?" என்றார் சாரி.

"சரியாச் சொன்னா ஒரு லாலிபாப் தர்ரதாச் சொல்லி, ஒரு செய்யுள் சொன்னார்” என்றாள் கோதை.

"ரெண்டு இருக்கு  போலிருக்கே கையில்?"  என்றாள் பாட்டி.

"தப்பா சொல்லி இருப்பாள்; ஆமாம் தானே?" என்று சிரித்தார் சாரி.

“எத்தனை அழகா  சொல்றார் தாத்தா பாட்டெல்லாம்?  தெரியுமா? ராவுத்தர் மாமாக்கு  தெரியாததே இல்லை போலிருக்கு" என்று வியந்தாள் கோதை.


"இல்லையா பின்னே?” ஷேக் மொஹமட்” - ன்னு அவர் சொந்தப் பேர் சொல்லிக் கேளு, ஒருத்தருக்கும் தெரியாது ஊரில். அதே “கம்பராவுத்தர்” னு சொன்னா பிர்கா முழுக்க பிரசித்தமாச்சே; திருஷ்ணாப்பள்ளி மளிகை மண்டியிலிருந்து ஒருமுறை “கம்பராவுத்தர், மணக்கரை, -ன்னு மொட்டையா எழுதி அனுப்பிச்ச கடிதம், மறுநாளே இவர் கைக்கு வந்து சேர்ந்துச்சே! அந்த அளவு பிரபல்யம். நல்லஎண்ணம்; நல்ல மனது, பரோபகாரி, தமிழை அட்சர சுத்தமா உச்சரிப்பாரே! சுந்தர காண்டத்திலே ரெண்டு செய்யுள் மனப்பாடம் பண்ண நீ ரெண்டு நாளா தடவற; அவர் கம்பராமாயணம் முழுக்க கரதலப்பாடமா ஒப்பிப்பார் தெரியுமா?"

புலிவலம் பெருமாள் கோவிலுக்கு ஒருமுறை என் கூடவந்தார். அப்போது ராமாயணப் பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ண ப்ரேமி அமர்க்களமாய் பண்ணிக் கொண்டிருந்தார். இடைப்பட்ட நேரத்தில் நம்ம ராவுத்தரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். மைக்கைக் கொடுத்து “நாலு பாட்டு பாடுங்கோன்னார்”.

"மலையே மரனே மயிலே குயிலே

கலையே பிணையே களிறே பிடியே

நிலையா உயிரே நிலையேறினர் போய்

உலையா வலியா ருழைநீ ருரையீர்" - ன்னு

ஆரம்பிச்சு, ஆரண்ய காண்டத்திலிருந்து ஒரு பத்து பாட்டு பாடினார் பாரு; ராவுத்தர் குரல் கணீர்னு இருக்கும். அதுவும் ராத்திரி நிசப்தத்தில், மைக்கில் வெண்கலமா, கோவில் மணிபோல் கொஞ்சிற்று. கேட்ட கூட்டம் ஸ்தம்பிச்சு போச்சு. கிருஷ்ணபிரேமி, கண்ணால கரகரன்னு வழிய கைக்கூப்பி வணங்கினார்.

"என்ன மேதைமையய்யா உங்களுக்கு சீதாதேவி, நேர்லயே வந்து, “அய்யோ கடத்திண்டு போறானே! காப்பாத்துங்கோ” ன்னு கதறறாப்போல் என்ன ஒரு பாவனை; உச்சரிப்பில் என்ன ஒரு உயிர்ப்பு; உணர்ச்சிகளை குழைத்து வித்தை காண்பிக்கிறதையா உமது குரல். அற்புதம்; அற்புதம்!" என்று வெகுவாகப் பாராட்டினார் அம்மேதை. அவர் வாயால் இவ்வளவு சீக்கிரத்தில் பாராட்டு பெறுவது பெரிய விஷயம். அதற்குண்டான முழுத் தகுதியும் நம்ம ராவுத்தர்ட்ட இருக்கு, மேதை!" என்றார் தாத்தா. வெற்றிலையை மென்றுக் கொண்டே யோசனையில் ஆழ்ந்து விட்டார். ராவுத்தர் பற்றிய நினைவு நினைக்குந்தோறும் சுகானுபவம் தான். மிக உயர்வான ஓய்ன் நாள் ஆக ஆக ருசி கூடிக் கொண்டே போகுமாம், அதைப்போலத்தான், அய்ம்பது வருடங்களைக் கடந்த ராவுத்தரின் நட்பு தினமும் சந்தோஷத்தைக் கூட்டிக் கொண்டே போகிறது அவருக்கு.

"உங்க தாத்தாவிற்கும் ராவுத்தருக்கும் அத்யந்த ஸ்னேகிதம்.ராவுத்தர் எல்லார்ட்டயும் கலகலப்பா பேசுவார்.அது அவர் தொழில்.ஆனால் உங்கள் தாத்தாட்ட மட்டும்தான் அந்தரங்கத்தை பகிர்ந்துப்பார்.ஒருமுறை ராவுத்தருக்கு தேடுபாடாய் போய்விட்டது. ஊரெல்லாம் காலராச் சாவு;ராவுத்தருக்கு என்ன மருந்து கொடுத்தும் நிற்கவில்லை.போயிடப் போறார்னு எல்லோரும் முடிவு பண்ணியாச்சு.உங்க தாத்தா ரொம்ப பயந்து போயிட்டார்.ஒருநாள் முழுக்க மௌனவிரதம் இருந்தார்.அன்ன ஆகாரம் எதுவும் கிடையாது.தெய்வாதீனமான ராவுத்தர் பிழைச்சு எழுந்தார்.நேரே நாகூர் தர்காவிற்கு போய் உங்க தாத்தா பாத்தியா ஓதி வந்து சர்க்கரையும், ஜாங்கிரியும் கொண்டு வந்து ராவுத்தர்ட்ட கொடுத்த கையோட திருப்பதி ஓடினார்.மொட்டைத் தலையாத் திரும்பினார்.கேட்டதற்கு ராவுத்தர் பங்கிற்கு நாகூர் ஆண்டவர், நம்ம பங்கிற்கு திருப்பதிக்கு ஏழுமலையான், “எப்படியோ அவர் குணமடைந்து விட்டார், அது போதும்” என்றார்".பாட்டி சிலாகித்துச் சொல்லச் சொல்ல,ஹோம் ஒர்க் செய்வதையும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் கோதை.

மறுநாள் தாத்தாவிற்கு வெற்றிலை வாங்க வேண்டி கடைக்குப் போயிருந்தாள் கோதை.இவள் தாத்தா சாரியின் வயது தான் ராவுத்தருக்கும்.ஆனாலும் அவரை மாமா என்றே கூப்பிட்டு பழகிவிட்டது கோதைக்கு."மாமா நேத்திக்கு முழுக்க உங்க புராணம் தான் தாத்தாவிற்கு.நீங்க அவ்வளவு நல்லவராம்;கம்பராமாயணத்தில் கரை கண்டவராம், கிருஷ்ண பிரேமிங்கிற பெரிய உபன்யாசகர் கூட உங்களை உயர்வா புகழ்ந்தாராமே?" என்று கோதை சொல்லச் சொல்ல, ராவுத்தர் கூச்சத்தால் நெளிந்தார்.

"இந்த பாரு கோதை - உங்க தாத்தா சொல்றதெல்லாம் உண்மையில்லை; என் மேல் உள்ள பிரியத்தால் கொஞ்சம் உயர்வு நவிற்சியாய் சொல்லி விட்டார்.அன்று பரதனுக்கு வந்த கூச்சமும், குற்ற உணர்வும், உன் தாத்தா என்னைப் புகழும் போழுது வருகிறது.உண்மையில் உங்க தாத்தாவைப் பார்த்து தான் ஏகப்பட்ட விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன்.ஒரு விஷயம் தெரியுமா கொழந்தே? இன்றைக்கு நான் உயிரோட இருக்கறதுக்கு காரணம் மேலான அந்த அல்லாவோட கருணை; அவர் கருணை எனக்கு கிடைக்கக் காரணம் உன் தாத்தாவோட மன உறுதியும், வேண்டுதலும், உபவாசமும் தான். எனக்காக வேண்டி நாகூர் சென்றார் தெரியுமா? ஆ! அந்த பெரும் போக்கும் நேர்மையும் யாருக்கு வரும்? ரொம்ப உயர்ந்த மனிதரம்மா உன் பாட்டனார்!" என்று சொல்லிக் கொண்டே போனார் ராவுத்தர். குழந்தை ஒன்றும் புரியாமல் விழித்தது.அவர் என்னவென்றால் இவரை “ஆஹா” என்கிறார்.இவரானால் அவரை “ஓஹோ” என்கிறாரே என்று எண்ணியது.இந்த விஷயத்தை இதற்கு மேல் குழந்தையிடம் பேசக் கூடாது என்று எண்ணிய ராவுத்தர், வழக்கமான தன் விளையாட்டிற்குத் தாவினார்.

"மை வண்ணத்து அரக்கி போரில்,

மழை வண்ண அண்ணலே உன்

கை வண்ணம் அங்கு கண்டேன்

கால் வண்ணம் இங்கு கண்டேன்!"

- இது மிகவும் சுளுவான பாட்டு.எங்க நூர்முகமது கூட “டக்” குனு சொல்லிடுவானே; கோதை நாச்சியார் சொல்லுங்க பார்ப்போம்!"என்றார் குறும்பாய் - கோதை யோசித்தாள்.அவளுக்குத் தெரியவில்லை.இரண்டு கைகளையும் நீட்டினாள்.

“ம், இன்றைய போட்டியின்படி சரியாச் சொன்னாதான் ரெண்டு லாலிபாப். தெரியாதவங்களுக்கு ஒன்றும் கிடையாதே!" என்றார்.

"சரி மாமா!தர வேண்டாம்; ஆனா உங்களுக்காகவாவது நானும் அத்தனை பாட்டையும் படிச்சு, மனப்பாடம் பண்ணி, நீங்க கேக்கும் போது டக், டக்னு சொல்றேனா இல்லையா பாருங்க!" - கைகளை இழுத்து முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு கோதை வீராப்புடன் சொன்னாலும் அவளது இரண்டு விழிகளும் நிறைந்து விட்டன.ராவுத்தருக்குத் தாங்க முடியவில்லை.அந்தக் குழந்தையை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டார்.

"அடி என் ராசாக்குட்டி, ரோசாச் செடி, என்ன நம்பிக்கையா சொல்றே;இந்தா பிடி ரெண்டு லாலிபாப், ரெண்டு டெய்ரிமில்க். சாப்பிடடா செல்லம்; சமர்த்தா படி; உங்க தாத்தா சாரி எவ்வளவு பெரிய படிப்பாளி தெரியுமா? அட்வகேட் சாரின்னா, கோர்ட்டே கதி கலங்குமே! இங்கிலீஷ் பேச ஆரம்பிச்சா மலை மருவி தான். அப்பேர்ப்பட்ட படிப்பாளி, இந்த புளியுருண்டையோடு சினேகிதம் வச்சுக்கறது அவரது பெருந்தன்மை; என்னுடைய பாக்கியம்.

"தேவரின் கழல் சேவிக்க வந்தனென்

நாவாய் வேட்டுவன் நாயடியேன்" என்று நானும் சொல்லலை.

"முன்புள ஒரு நால்வேம் முடிவுள தெனௌன்னா

அன்புள இனிநாம் ஓர் ஐவர்கள் உளரானோம்"

என்று அவரும் சொல்லலை. ஆனா அந்தப் பாசம் கெட்டித்து வளர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. நான் குகனென்றால் உனது தாத்தா ராமன் தான் . சுட்டிக் கோதை குட்டி சீதை தான். நீ நன்கு படித்து  பெரிய ஆளாய் வரணுமம்மா இன்ஷா அல்லா!" என்று ராவுத்தார் அவள் உச்சந்தலை தொட்டு ஆசிர்வதித்தார். கோதை ஓடி விட்டாள்.

அன்று கடை கட்டி விட்டு வீட்டிற்கு வந்த ராவுத்தர் சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி முன் உட்கார்ந்தார்.  முக்கியச் செய்தியே மும்பை ரயில் குண்டு வெடிப்புதான்.  மனித உடல்களும் ரயில் பெட்டிகளும் எரிவதைப் பார்த்துக்கொண்டிருந்த ராவுத்தர் தேம்பித் தேம்பி அழுதார். தன் உச்சந்தலையில் உயிரோடு யாரோ கொள்ளி வைப்பது போல் இருந்தது அவருக்கு. இந்த கிராமத்தில் இருக்கும் ஒரே முஸ்லிம் வீடு இவருடையது மட்டும் தான். அத்தனை ஹிந்துக்கள்  முகத்திலும் எப்படி விழிப்பது? முக்கியமாய் ரிட்டையர்ட் லாயர் சாரி முகத்தில்.  இத்தனை வருட பழக்கத்தில் இருவரிடையே மதம் எந்தக் காரணத்திற்காகவும் புகுந்ததே இல்லை. எவ்வளவு உயர்வான மனிதர் சாரி. தான் சொல்லும் ராமாயணப் பாடல்களை எத்தனை ஈடுபாட்டுடன் ரசிப்பார்? தான் படித்த படிப்பு எவ்வளவோ இருக்க, அதையெல்லாம் மூடி மறைத்துக் கொண்டு, தன் நண்பர்களிடமெல்லாம் இவரது இந்த ஒரு திறமையை மட்டும் என்னமாய் உச்சாணிக் கொம்பிற்கு தூக்கி அறிமுகப்படுத்துவார்? இவருக்கு வரும் பெருமைகளை தனக்கே கிடைத்தது போல எத்தனை சந்தோஷப்படுவார்? சாரி சிறந்த ராம பக்தர். அவர் வீட்டு பூஜை அறையில் ராம விக்ரகம் இருப்பது ராவுத்தருக்கு தெரியும். ஒரு வருடம், நாளைக்கு ஒரு காண்டம் வீதம் ஆரம்பித்து, ராமநவமி அன்று

அரிஅணை அநுமன் தாங்க அங்கதன் உடைவாள் வாங்கப் 

பரதன் வெண்குடைகவிப்ப..................என்ற

பட்டாபிஷேகப் பாடல் பாடி முடிக்க, தீபாராதனையும் வினியோகமும் நடக்க ....... எத்தனை சந்தோஷமான நாட்கள். அப்பேர்பட்ட உயர்வான மனிதர், படுபாதகச் செயலை செய்து விட்ட  ஒரு மதத்தின்  பிரதிநிதியாகத்தானே தன்னையும் எண்ணுவார்! அவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பது?" என்று என்னென்னவோ எண்ணி அழுதார். தானும் கூட இருந்து குண்டு வைத்தது போல் ஒரு குற்ற உணர்வு பொசுக்கிற்று ராவுத்தரை.

அதற்குத் தகுந்தாற்போல் நான்கு நாட்களாய் சாரியைக் காணவில்லை கடைபக்கம். அவரது பேத்தி கோதையும் கடைக்கு வரவில்லை. ராவுத்தருக்கு தான் பயந்தது பலித்து விட்டதாய் தோன்றியது. அதற்கு மேல் அவரால் பொறுக்க முடியவில்லை.கடைப்பையனை விட்டு சினேகிதர் வீட்டிற்கு சென்று பார்த்து வரச் சொன்னார். போனவன் வந்த பிறகு, கடையைப் பூட்டிக் கொண்டு  புறப்பட்டார். வீட்டிற்கு வந்து தன் மனைவியையும் அழைத்துக் கொண்டார். இருவரும் சாரி வீட்டிற்குச் சென்றனர். வேப்பலை செருகிய வாசல் தான் வரவேற்றது. அப்பொழுது வீட்டில் அவர் மனைவி ஸ்ரீமதி இல்லை. தன் நண்பரையும், அவரது பேத்தியையும் பார்த்த பிறகு தான், உயிர் வந்தது ராவுத்தருக்கு. ஒருவாரத்துக் கதையையும் மூச்சு விடாமல் ஒப்பித்தார். தான் பயந்ததை, இந்த உறவு முறிந்து விட்டதோ என எண்ணிக்  கலங்கியதை என்று எல்லாவற்றையும் சொன்னார். வெகுநேரம் கழித்து ஸ்ரீமதி வீட்டிற்குள் நுழையும் பொழுது அறை உள்ளிருந்து பாட்டு சப்தம் கேட்டது.

"சிரசினில் முத்தையம்மா மதற்காத்து நீயிறக்கும் 

முகத்தினில் முத்தையம்மா முன்னதாய் நீயிறக்கும் 

கழுத்தினில் முத்தையம்மா கட்டழகி நீயிறக்கும்

மார்பினில் முத்தையம்மா மாதாவே நீயிறக்கும்......."

மாரியம்மன் தாலாட்டை ராவுத்தர் ராகத்தோடு பாடப்பாட, அவர் மனைவி ஆயிஷா பேகம் வேப்பிலையால் அம்மை கண்டிருந்த குழந்தை கோதையின் உடம்பில் ஒவ்வொரு அங்கமாக வருடி விட்டுக் கொண்டிருந்தாலள். சாரி பக்கத்திலேயே கண்மூடி, கைகுவித்து உட்கார்ந்திருந்தார். 

உள்ளே சென்ற ஸ்ரீமதி நிமிஷமாய் காப்பி போட்டு எடுத்து வந்தாள். “ராவுத்தர் என்னென்ன வாங்கிண்டு வந்திருக்கார் பார்; மலைப்பழம், வெள்ளரிப் பிஞ்சு, சீட்லெஸ் திராட்சை, ஆரஞ்சு பழம்; அதோ பார் ஒரு மூட்டை இளநீர், பக்கத்துலயே பனை நுங்கு..... ராவுத்தருக்கு எதையும் கொஞசமா செய்யத் தெருயாது. இவர் கொண்டு வந்த சீரைப் பார்த்தால், அடிக்கடி இப்படி படுத்துக்கலாம் போலிருக்கு!" என்று சாரி விளையாட்டாய் சொல்லவும், "போதும் வாயை மூடட்டும் "முந்தா நாளிலிருந்து தான் இவருக்கு இறங்க ஆரம்பிச்சுது, அடுத்து அவபடுத்துண்டுட்டா;  இதையெல்லாமாச்சும் தாங்கிக்கலாம், நாலு நாளா இவரது புலம்பலை சகிக்க முடியவில்லை.வடக்க எங்கயோ முஸ்லீம் மக்களை ஹிந்துக்கள் குத்திக் கொல்றாளாம். நியூஸ்ல சொன்னான். அதை கேட்டுட்டு, அந்தப் பாவத்தை இவரே பண்ணினாப் போல, அய்யோ, நான் ராவுத்தர் முகத்தில் எப்படி முழிப்பேன், நம்ம மதம் இப்படி என் முகத்தில் கரியை பூசிடுத்தே “ன்னு ஒரே புலம்பல். நான் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை, நீங்கள் இன்று வந்தீர்கள்" என்று ஸ்ரீமதி ராவுத்தரிடம் சொல்ல, ராவுத்தர் தன் மனைவியைப் பார்த்து சிரித்தார்.

"சிரிக்காதீர்கள். அம்மா, நீங்கள் சொன்ன இதே கதை தான் அங்கே எங்கள் வீட்டிலும். அய்யோ ரயிலுக்கு குண்டு வச்சுட்டாங்களே; அப்பாவி மக்களை எரிச்சுட்டாங்களே; நான் எப்படி என் சினேகிதர் முகத்தில் முழிப்பேன் என்று சொல்லி ஒரே அழுகை. நீங்களே சொல்லுங்கம்மா, ஒவ்வொரு மதத்திலும் நாலு அயோக்கியன்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அவர்கள் செய்யற பாதகத்துக்கெல்லாம் நாமளோ, மதமோ பொறுப்பேத்துக்க முடியுமா?" என்று ராவுத்தர் மனைவி “பிலு பிலு “ என்று பிடித்துக் கொண்டாள்.

இப்போதானையா மனசு நிறைஞ்சிருக்கு. இந்த நேரத்தில் ஒரு பாட்டு சொல்லுங்களேன்  என்றார் சாரி.

"ஏழை சோபனம் ஏந்திழை சோபனம்

வாழி சோபனம் மங்கல சோபனம்.........."

*****

 
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World