Head Image
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு
Select Issueகொண்ட்டுப்புளி
 
கவிப்பித்தன்

இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ஒத்தக்கொட்ட மணியின் வாழ்க்கை. எல்லோரும் அப்படித்தான் சொல்லிக்கொண்டனர்.
அவரது மகன் சுந்தரத்துக்குள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓயாமல் அடித்துக்கொண்டிருந்த அலை இப்போது நெஞ்சுக்குள் முட்டி முட்டிச் சிதறத் தொடங்கியது.
மனசுக்குள் முட்டிக் கொண்டிருக்கிற அந்த அலைகள் தன் இதயச் சுவர்களைக் கிழித்து விடுமோ என்ற பதட்டத்தில், நடுங்குகிற விரல்களை அடக்க உள்ளங்கைகளை அழுத்தமாய் மூடிக்கொண்டான்.நெஞ்சுக்குள் தடதடத்த பதட்டம் காதை அடைத்தது.
அவரின் மூச்சு அடங்குவதற்குள் அதைச் சொல்லிவிடவேண்டும்.இல்லையெனில் இப்போது அவர் அனுபவிக்கிற இந்த மரணப்போராட்டத்தை இனி வாழ்நாள் முழுவதும் அவன் தொடரவேண்டியதாகிவிடலாம் என பயந்தான்.
ஒரு முடிவோடு திண்ணையிலிருந்து இரங்கி வீட்டினுள் நுழைந்தான். அவனது மனைவி சாந்தி விசும்பியபடி அவனைப் பார்த்தாள். அவர்களது எட்டுவயது மகள் வினோதினி தாத்தா ஒத்தக்கொட்ட மணி படுத்திருந்த இரும்புக் கட்டிலின் கம்பியைப் பிடித்துக்கொண்டு மிரட்சியோடு நின்றிருந்தாள்.
சாப்பாடு நின்றுபோய் ஒரு வாரம் ஆகிறது. ஒட்டிப்போன வயிற்றிலிருந்து கிளம்பும் மேல் மூச்சு, மார்புக் கூட்டை தூக்கித் தூக்கிப் போட, திறந்த வாய் வழியே காற்று போவதும் போன வேகத்திலேயே திரும்புவதுமாய் இருந்தது.மீண்டும் மீண்டும் எதையோ தேடிக் கொண்டு உள்ளே போகும் காற்று, அது கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பி வருவதைப் போல, உறவுக்காரர்களும் ஊர்க்காரர்களும் வீட்டுக்குள் வருவதும், சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி வெளியே போவதுமாய் இருந்தனர்.
கோடிக்கிற உலை ஒரு கை நீர் அள்ளித் தெளித்ததும் சட்டெண்று அடங்குவதைப் போல, துடித்துக்கொண்டிருந்த ஒத்தக்கொட்ட மணியின் உடல் சுந்தரத்தைப் பார்த்ததும் சட்டென்று இளகியது.
துள்ளிக் கொண்டு ஓடிவரும் கன்றைப் பார்த்ததும் இறுக்கம் தளர்த்தி காம்புகளில் பால் சுரக்கும் பசுவைப்போல அவரின் பார்வையில் தாய்ப்பால் கசிந்தது.
அந்தக் கண்களைப் பார்த்ததும் தடுமாறினான் சுந்தரம். பார்வையைக் கீழிறக்கி எலும்புகள் துருத்திய மார்புக்கூடு மெதுவாய் உயர்ந்துத் தாழ்வதைப் பார்த்தபடியே கட்டிலின் மீது உட்கார்ந்தான்.
இத்தனை ஆண்டுகளாக இவனுக்காகவே ஓடி ஓடி உழைத்து உருக்குலைந்த அவரின் உடம்பெங்கும் முள்கிழித்து ரணமாகி காய்த்துப்போன தழும்புகள். அந்த உடம்பில் சுந்தரத்தின் சுந்தரத்தின் தேகம் படாத இடமில்லை.
அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கிற வரை தினமும் அவனைத் தோளிலேயே தூக்குச் சுமந்தவர் அவர். அதற்குப்பிறகும் நினைத்த போதெல்லாம் அந்தத்தோள் சிம்மாசனத்தில் அவனை ஏற்றிக்கொண்டு நடந்தவர்.
அப்படி அவனைச் சுமந்ததற்குப் பின்னால் ஒரு பெரியக் கதையே இருந்தது.பல தலைமுறைகளோடு பின்னிப் பிணைந்த கதை அது.
ஒத்தக்கொட்டமணியின் பிறப்பே ஒரு பெரிய போராட்டம். திருமணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் கூட பிள்ளைப்பேறு இல்லாத கவலையில் துரும்பாய் இளைத்தாள் அவரது அம்மா வள்ளியம்மால்.
பசிமறந்து, உறக்கம் தொலைத்து கோயில் கோயிலாகச் சுற்றியும் எந்தப் பயனும் இல்லாமல், கடைசியாய் கெங்கையம்மனிடம் குறி கேட்ட போதுதான் அவர்கள் பரம்பரைக்கே தெய்வக்குத்தம் இருப்பது தெரிந்தது.
ஒத்தக்கொட்ட மணியின் பாட்டிக்கு பிரசவத்தி ஆண் ஒன்றும், பெண் ஒன்றும்மாய் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாம்.ஆணும் பெண்ணும் ஒன்றாகப் பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாதென்று யாரோ சொல்ல, இரண்டில் ஒன்றைக் கொன்றிவிட பெரியவர்கள் முடிவெடுத்த போது, வம்சக்கொடி விளங்கவேண்டும் என்பதால் பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு ஆண் குழந்தைஅயி வளர்த்தனராம்.
பெண் குழந்தை குலதெய்வம். லட்சுமிதேவி. வீட்டில் பிறந்த லட்சுமியைக் கொல்லலாமா? அதனால் கோபமடைந்த அவர்களின் குலதெய்வமான அங்காளம்மன் அடுத்த த்லைமுறையில் பழித் தீர்த்துக்கொண்டாள். 
அதனால்தான் ஒத்தக்கொட்ட மணியின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணமாகி இருபது ஆண்டுகள் கடந்தும் குழந்தையேயில்லாமல் தவிக்க வைத்தாள். வம்சக்கொடி விளங்க பெண்க் குழந்தையைக் கொன்றவர்களுக்கு எந்தக் குழந்தையும் இல்லாமல் போய்விடுமோ என்று அலறிக்கொண்டு குலதெய்வத்திடம் சரணடைந்தனர்.
எத்தனையோ வேண்டுதல்கள், பிரார்த்தனைகள், பரிகாரங்களுக்குப் பிறகுதான் ஒத்தகொட்ட மணி பிறந்தார் ஒத்தைக்கு ஒரே பிள்ளையாய்.
உடன் பிறந்தோர் யாருமின்றி தன் தந்தையைப் போலவே ஒரே பிள்ளையாய் வளர்ந்தது அவருக்குத் தீராத ஏக்கமாய் இருந்தது.உடன் ஓடியாடி விளையாட, செல்லமாய் அடித்துக்கொள்ள, திண்பண்டங்களைப் பிடுங்கித் திண்ண வீட்டில் யாருமில்லை.
தலை நிறைய பூக்கள் சிரிக்க, கைகள் நிறைய வளையல்கள் கொஞ்ச, புதுப்புடவை சரசரக்க, மனசு நிறைய்ய பூரிப்போடும், கண்கள் நிறைய்யத் தளும்பி நிற்கும் கண்ணீரோடும் ஆண்டுக்கு ஒரு முறை தாய்வீடு வந்து, முறுக்கோடும் பிணக்கோடும் சீர் கொண்டுபோக அக்காளுமில்லை, செல்லாமய் சிணுங்கிவிட்டுப்போக தங்கையுமில்லை.
ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்றாலும், உடன் பிறந்தானுக்கு பகை வந்தால் கோட்டைச் சுவரைப் போல பாதுகாக்க அண்ணனுமில்லை. மீசை முறுக்கி கேடயம் போல் முன்னால் நிற்க தம்பியும் இல்லை.
புளியம்பழம் என்றாலும் ஏழெட்டுக்கொட்டைகளோடு, சீப்பு சீப்பாய் காய்த்துத் தொங்கினால்ம் தானே மவுசு.ஒரே கொட்டையோடு பழுக்கும் புளிக்கு ஏளனம் தான் மிச்சம். அதற்குப் பேரே கொண்ட்டுப்புளி. வேர்க்கடலையிலும் ஒரே கொட்டை இருந்தால் அது கொண்ட்டுக் கலக்காய். அதனால்தான் அவருக்கு “ஒத்தக்கொட்ட மணி” என்ற பட்டப்பெயரே உருவானது. பல நேரங்களில் மணியை மறந்துவிட்டு “ ஒத்தக்கொட்ட என்றே அழைத்தது ஊர்.
ஊரெல்லாம் பங்காளியும், படையுமாய் வம்சங்கள் பெருக, ஒற்றைப்பனையாய் உடன்பிறந்த உறவுகளுக்காக ஏங்கினார் மணி.அதனாலேயே வீடு நிரைய்ய்ய்ய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வாண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆனால் அந்த தெய்வக்குற்றம் அவர் தலைமுறையிலும் தொடர்ந்ததுதா சோகம்.கல்யாணமாகி பதினேழு வருடங்களாகியும் அவர் மனைவி சரோஜா வயிற்றில் புழுவும் இல்லை.பூச்சியுமில்லை.
வள்ளிமலைக்கும், திருத்தணிக்கும் ஆடி மாதந்தோறும் காவடி தூக்கினார் மணி.ஒவ்வொரு மாசிமாதத் தேரோட்டத்தின் போதும் விரதமிருந்து, நான்கு நாட்களும் தேரோடு வள்ளிமலையைச் சுற்றி வந்து, படையலிட்டு, முருகனிடம் கதறினாள் சரோஜா.
ஏழாவது முறையாய் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்காமல் தேரோட்டத்தோடு சுற்றி வந்த பிறகுதான் சுந்தரம் பிறந்தான்.
சுந்தரம் பிறந்ததும் ஒத்தகொட்ட மணிக்கு பூரிப்புத் தாங்கவில்லை.தங்கப் புதையலே கிடைத்துவிட்டதைப் போல அவனை எந்நேரமும் தோளிலேயே தூக்கிச் சுமந்தார்.
“இன்னாயா... ஊர்ல ஒலகத்துல அதிசயமா நீதாம்புள்ளயப் பெத்துகின மாதிரி ராத்திரியும் பகலுமா தோள்லயே தூக்கிக்கினு சுத்தற?" என்று பரிகாசம் செய்தார்கள் ஊர்காரர்கள்.
ஒரு நொடி கூட அவனைத் தரையில் நடக்க விடமாட்டார். தவமாய்த் தவமிருந்து பெற்றப் பிள்ளையை கல்லிலும் முள்ளிலும் இறக்கிவிட யாருக்குத்தான் மனசு வரும்?
அவன் பிறந்தநேரம், மழை பொய்த்து பொன்னை ஆற்றில் வெள்ளம் வருவதும் பழங்கதையாகிவிட, கஞ்சி ஊற்றிய கால்காணி நிலமும் கரம்பாய் போனது.வேறுவழியின்றி வயிற்றுக்காக விறகு வெட்டி விற்கத் தொடங்கினார்.
வேகாமல் காய்த்துக் கெட்டித்துப்போன கருப்புச் செங்கல் மீது மணல் தூவி, பிளேடைப் போல கத்தியைத்தீட்டிக் கொண்டு விடியலில் ஆற்றோரம் போனால், புதர்புதராய் வளர்ந்திருக்கும் பீவேலி முள் செடிகளை வெட்டி, முள்சீவி, அடுக்கிக்கட்டி, தலைச் சுமையாய் கொண்டு போய் கோட்டநத்தம் சுப்பாரெட்டியாரின் போண்டா கடையில் போட்டால் ஒரு சுமைக்கு முப்பது ரூபாயும், ஒரு தேனீரும் கிடைக்கும்.
வீட்டுக்கு வந்து கூழ் குடித்துவிட்டு, சுந்தரத்தைத் தூக்கித் தோளில் உட்காரவைத்துக் கொஞ்சியபடி வெள்ளாட்டுக் குட்டிகளை ஓட்டிக்கொண்டு மீண்டும் ஆற்றுக்குப் போவார்.
துள்ளிக்கொண்டு ஓடும் ஆட்டுக்குட்டிகள், மணலே தெரியாமல் ஆற்றில் படர்ந்திருக்கும் நாணல் புதர்களுக்குள் மறைய, இலுப்பை மர நிழலில் வேட்டியை விரித்து அதன்மீது படுத்துக்கொள்வார்.அவரின் மார்பு, வயிறு, முதுகு என புரண்டு, குதித்து விளையாடுவான் சுந்தரம். விறகு வெட்டிக் களைத்த உடலுக்கு அவனது மெத்மெத்தென்ற ஸ்பரிசம் ஒத்தடம் தருவதுபோல் ஆனந்தமாய் இருக்கும்.
அவன் வளர்ந்து, அவனைப் பள்ளியில் சேர்க்க நேர்ந்த போது, ஊரில் உள்ள அரசாங்கப் பள்ளியைத் தவிர்த்து, சரோஜா தடுத்தும் கேட்காமல், வள்ளிமலையில் உள்ள கான்வென்டில் சேர்த்தார்.
வசதியான ஊர்ப்பிள்ளைகள் ஆங்கிலம் படிக்க பொன்னைக்கும், ராணிப்பேட்டைக்கும் வேன்களிலும், பேருந்துகளிலும் போவதைப் பார்த்து இவன் ஏங்கிவிடக் கூடாதே என்று கான்வென்டில் சேர்த்துவிட்டு, பீஸ் கட்ட முடியாமல் திணறினார்.
காலையில் ஒரு சுமைக்கு பதில் இரண்டு சுமை விறகு வெட்டி, ஒன்றின் மேல் ஒன்றாய் சுமந்து போனார். ஆடுகளை மேயவிட்டு, கொளுத்துகிற வெய்யிலிலும் விறகு வெட்டினார்.
அப்படியும் வேனுக்குப் பீஸ் கட்ட வருவாய் போதாமல், விறகு வெட்டிக் கடையில் போட்டபின், வீட்டுக்கும் பள்ளிக்கும் சுந்தரத்தை தோளில் சுமந்து நடக்கத் தொடங்கினார்.
கான்வென்டுக்கு நேரமாகி விடுமே என்ற அவசரத்தில் புதர்களுக்குள் புகுந்து, உடம்பெங்கும் ஊசிகளைச் சொருகி வைத்ததைப் போல வாசிவாசியான முட்களோடு நிற்கும் பீவேலிச் செடிகளை வெட்டி இழுத்து, முள்ளைக் கழித்து, துண்டு போடுவதற்குள் தலை, முகம், கை, கால்கள் என உடம்பெங்கும் முள் அடித்து ரத்தம் கசியும்.
இடது கையில் கேடயம் போல இடுக்கிக் கொம்பைப் பிடித்து வலது கையால் வெட்டிச்சாய்க்கும்போது, நாலாபுறமும் பல கைகளை விரித்தபடி மளமளவென சரியும் கிளைகளில் எப்படியும் ஒன்றிரண்டு முட்கள் மேலே அடித்துவிடும்.உடம்பில் அடித்தால் ரத்தக் கசிவோடு போகும்.விரல்களிலோ, கை நரம்புகளிலோ, எலும்புகளிலோ முள் அடித்தால் தேள் கொட்டியது போல ஜிவ்ஜிவ்வென வலியும், வீக்கமும் உயிர் போகும். மறுநாள் கத்தியைப் பிடிக்கவோ, விரலை நீட்டி மடக்கவோ முடியாது.அதற்காக விறகே வெட்டாமல் ஒரு நாளும் இருக்கமாட்டார் மணி.
அத்தனை வலிக்கும் ஒரே மருந்து... வாழைத்தண்டு கை, கால்களும், கொத்தவரைப் பிஞ்சு விரல்களுமாய் அவர் மீது புரளும் சுந்தரத்தின் மெத்தென்ற ஸ்பரிசம்தான்.
தும்பைப்பூ நிற வெள்ளைச் சீருடையும், பவுடர் வாசைனையுமாய் மணக்கும் சுந்தரத்தைத் தூக்கி இடதுத் தோளில் உட்காரவைத்து, புத்த்கப் பையை வலது தோளில் மாட்டியபடி வள்ளிமலையை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினால் உலகமே மறந்துவிடும்.
ராஜ கதை, மந்திரிமார் கதை, சிங்கம் கதை, நரிக்கதை எனச் சொல்லிக் கொண்டே ஆற்று மணலைக் கடந்து, மேற்குக் கால்வாயில் இறங்கி, பொன்னியம்மன் கோயிலைக் கும்பிட்டு, ஒட்டர் குடிசையை மிதித்தால் இரண்டு மைல் தூரம் நடந்ததே தெரியாமல் வள்ளிமலை வந்துவிடும்.
அம்மாவோடும், பாட்டியோடும் இருந்த நேரத்தைவிட, சுந்தரம் அவரோடு இருந்த நேரங்கள் தான் அதிகம்.
“நைனா நீ இன்னாவ ஆவப் போர நைனா என்று கேட்பார் மணி.
"நானா? கலக்டரு ஆவப்போறேங் நைனா" என்று சிரிப்பான் சுந்தரம்.
அதைக் கேட்டதும் மேனி சிலிர்க்கும் அவருக்கு.
“நைனா நோட்டு வாங்கிகினு வா நைனா” என்று சுந்தரம் கேட்டால், “நாளிக்கிக் காலைல வெறக கடயில போட்டுட்டு வாங்கிகினு வர்றங் நைனா” என்று அவன் கன்னத்தில் முத்தமிடுவார்.
அவன் “நைனா” என்று கூப்பிடும் போதெல்லாம் அவருக்கு நெஞ்சு நெகிழும்.
“யோவ்... ரெண்டுபேருமே நைனா நைனான்னு கூப்ட்டுக்கீறிங்களே... யாருக்கு யாரு நைனா?" என்று ஒருநாள் கிண்டலடித்தார் நாராயண ரெட்டியார்.
“இவனுக்கு நானு நைனா... எனுக்கு இவன் நைனா” என்று சுந்தரத்தை அணைத்துக்கொண்டார் மணி.
ஆனால் கான்வென்டுக்குப் போன பிறகு அவன் நைனா எனக் கூப்பிடாமல் “ டாடி “ என்ற போது சரோஜாவுக்கு உச்சி குளிர்ந்தது.ஆனால் மணிக்குதான் எதையோ தொலைத்ததுபோல ஏக்கமாக இருந்தது.
மணிக்கு சற்றுக் குள்ளமான உருவம் தான். காட்டுப்பன்றியின் முடிகளை தலையில் நட்டுவைத்தைதைப் போல ஊசிஊசியாய் குத்திட்டு நிற்கும் முடிகள். முட்டிக்குக் கீழே தொங்கும் டவுசர்.கை நீண்ட வெள்ளை பனியன். கால்களை விட நீளமான பிளாஸ்டிக் செருப்பு. நடக்கும்போது அதை “சர்ரக் சர்ரக்" என தேய்த்துத் தேய்த்து நடப்பார்.நடையில் லேசான பெண் சாயல் எட்டிப்பார்க்கும்.சுந்தரத்தைத் தூக்குக் கொண்டு, “சர்ரக் சர்ரக்” என்று தேய்த்தபடி அவர் நடக்கத் தொடங்கினால், “வெள்ளிமல தேரு கெளம்பிருச்சி” என்று தெருவெங்கும் நமுட்டுச் சிரிப்புகள் முளைக்கும்.
ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு ஆங்கிலம் படிக்க இராணிபேட்டைதான் போக வேண்டும்.செலவை சமாளிக்க முடியாது என்பதால் மனதை கல்லாக்கிக் கொண்டு ஊரில் உள்ள அரசாங்கப் பள்ளியிலேயே ஆறாவது சேர்ந்தார்.
அவர் மனசுக்குள் சுமந்த கலக்டர் கனவு அப்போதே கலைந்தாலும் அவனைத் தோளில் சுமக்கும் சுகத்தை மட்டும் அவர் தொடர்ந்தார். டாடியை மறந்து மீண்டும் “நைனா” என் அவன் அழைக்கத் தொடங்கியதும் தொலைந்துவிட்டப் புதையல் மீண்டும் கிடைதுவிட்டதைப் போல குதூகலமாயிருந்தது. ஊரில் எட்டாவது வரை படித்து,. பொன்னை அரசாங்கப் பள்ளியில் பனிரெண்டாவதை கடந்து வேலூர் அரசு கல்லூரியில் அவன் பி.ஏ முடித்த பிறகும் அவர் விறகு வெட்டுவதை நிறுத்தவில்லை.
பட்டம் வாங்கியப் பிறகு ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைகளிலும், ரசாயன, இரும்பு தொழிற்சாலைகளிலும் வேலைகேட்டு நடையாய் நடந்தான் சுந்தரம். பத்தாவதுவரை படித்தவர்களுக்கு தோல் கம்பனிகளில் உடனே வேலை கிடைத்தது.
 “ டிகிரி படிச்சவங்கள சேத்தா வேல வாங்க முடியுமா ? உனுக்கு ஒடம்பு வளையாதுப்பா “ என்றனர் ஷூ கம்பனிகளில்.
கலெக்டர் கனவோடு  கம்பனி வேலையும் புஸ்வானம் ஆக, மனமுடைந்தான் சுந்தரம். அப்போதும் முகம் சுழிக்காமல் விறகு வெட்டினார் மணி.
வெய்யிலில் காய்ந்தும், வியர்வையில் நனைந்தும் கரும்பாறாங்கல்லை போல இறுகிப்போன அவரின் உடலுக்கு ஓய்வுக் கொடுக்க முடியாமல் துடித்தவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மாமாங்கமாய் கழிந்தது. கடைசியில் பத்தாவது வரை மட்டுமே படித்துள்ளதாகப் பொய் சொல்லி, ஒரு ஷூ கம்பனியில் அவன் வேலைக்குச் சேர்ந்து, உடன் வேலை செய்த சாந்தியை மணந்து, வினோதினிப் பிறந்த பின்பும் விறகு வெட்டுவதை நிறுத்தவில்லை மணி. இப்போது பேத்தி வினோதினிக்காக வெட்டினார். 
நேற்றுப் பிறந்த பிள்ளைகள் கூட குடியும், சிகரெட்டுமாய் அலைய, மணிக்கு எந்த பழக்கமுமில்லை. குடியில்லை, பீடி இல்லை, பெண்கள் சகவாசம் இல்லை, உதட்டுக்கு அடியில் ஹான்ஸ் அடக்குவதில்லை, பான்பராக் குதப்புவதில்லை, வெற்றிலைப்பாக்கு, புகையிலை பழக்கமுமில்லை.
இப்படி ஒரு யோக்கியமான அப்பாவுக்குப் பிள்ளையாகப் பிறந்ததற்காக சுந்தரம் பெருமைப்படாத நாளில்லை. சாந்தியிடம் அவரைப் பற்றி புகழ்ந்து பேசாத நேரமில்லை. 
ஆனால் கொதிக்கிற சோற்று உலையில் ஒரு கை மண்ணள்ளிப் போட்டு விட்டதைப் போல, அந்தப் பெருமைக்கும் மூன்றாண்டுகளுக்கு முன் உலை வைத்துவிட்டுப் போய் சேர்ந்துவிட்டாள் அவனது அம்மா சரோஜா. கைக்கால்கள் வீங்கி சாகக் கிடந்த கடைசி நாட்களில், ஒரு நாள் அவனைத் தனியாய் அழைத்து, திடீரென அவன் கால்களில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
“டே நைனா... எங்கண்ணு மூடறதுக்குள்ள இதச் சொல்லலன்னா இந்த உடம்பு வேகாதுடா. அப்பனும் புள்ளையும் நீங்க இவ்ளோ பாசமா கீறதப் பார்க்கப் பார்க்க எனுக்கு ஈரலு பதறுதுரா நைனா. ஊரு ஒலகத்துல உன்னவுடப் பெரிசு எதுவுமே இல்லன்னு ஒங்கப்பன் நெனச்சிக்கினு கீதுறா. ஆனா நானு அதுக்கு துரோகம் பண்ணிட்டேன்டா... நீ அவுருக்குப் பொறக்கலடா” என்றுக் கதறினாள்.
எரிகிற தீவட்டியை வாய்க்குள் நுழைத்து, நெஞ்சுக்குள் சுட்டு விட்டதைப் போல அதிர்ந்தான் சுந்தரம்.
“எனுக்குக் கல்யாணமாயி ரொம்ப காலமா புள்ளப் பொறக்காம கோயிலு... கொளம்... தேருன்னு சுத்திதாங் நீ பொறந்ததா எல்லோரும் நெனச்சிக்கினுகீறாங்க. ஆனா நீ அப்டிப் பொறக்கல. வேறு ஒருத்தனுக்கு முந்தான விரிச்சிதாங் நீ பொறந்த. ஒடம்பு நமச்சலு எடுத்தோ, ஆம்பள சொகத்துக்கு ஆசப்பட்டோ நாம் போவல. அப்போ எனுக்கு வேற தெச தெரியலடா.
அன்னைக்கி ஒரே நாளுதாங். அதுக்கப்பறம் எவனையும் நிமுந்து கூட நானு பாத்ததில்ல.இதெல்லாம் அந்த ஆளயும் என்னயும் தவர வேற யாருக்குமே தெரியாது.அந்த ஆளு யாருன்னு நீ கேக்காத.இந்த ரகசியத்த உங்கிட்டச் சொல்லாமயே நாஞ்செத்திருக்கலாங்.பெத்தவங்களுக்குக் கஞ்சி ஊத்தாத இந்தக்காலத்துப் புள்ளைங்களாட்டம் நீயும் ஆயிடக்கூடாதுனு தாஞ் சொல்றேங்.
உன்னயே உயிருன்னு நெனைச்சிக்கினு கீற அவர நீ தெய்வமா நெனைக்கணும்டா நைனா.அவுரு உன்னப்பெத்த அப்பனில்லன்னாலும் அது தெரியாமலே உன்ன உள்ளங்கையில வெச்சி தாங்கிக்கினு கீறாரு.அவரு சாவற வரைக்கும் அவர நீ காப்பாத்தணும்டா நைனா" என்று அவனது கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.
எதிர்பாராமல் மலத்தின் மீது கால்கள் பட்டுவிட்டதைப் போல ஒரு கணம் உடல் கூசியது.சட்டென்று நகர்ந்து நின்றான்.
அதற்குப் பிறகு சாகிறவரை அவளுடன் பேசவேயில்லை.அதைச் சொல்லாமலே செத்திருக்கலாமோ என்று உள்ளுக்குள் மருகி மருகியே அவள் போய் சேர்ந்துவிட்டாள்.
தனக்குப் பிறக்காத பிள்ளைக்காக வாழ்நாளெல்லாம் விறகு வெட்டி, தலையில் சுமந்து, எவனுக்கோ பிறந்தவனை நாளெல்லாம் தோளில் சுமந்து... நினைக்க நினைக்க சுந்தரத்தின் நெஞ்சுக்குள் பெரும் அலையடிக்கத் தொடங்கியது.
அதன்பிறகு அவரைப் பார்க்கப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த உண்மை அவருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? அதற்குப்பின் தன்னிடம் பேசுவாரா? பேத்தியைத் தொடுவாரா?
அய்யோ அவர் வெட்டிச் சாய்த்த பீவேலி மரங்களெல்லாம் வளர்ந்திருந்தால் வானாந்திரம் வானாந்திரமாய் மாறி இந்த ஊரே முள் தேசமாய் மாறி இருக்குமே.
வனாந்திரங்களையெல்லாம் ஒற்றை ஆளாய் அழித்த ஒரு மாபெரும் மனிதனை இந்த ஒற்றைச் சொல் அழித்துவிடுமே! கூடாது.இது அவருக்குத் தெரியவேக் கூடாது.அவர் உயிர் போகும் வரை, தன் உயிர் போகும் வரை இந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாமலே மடிய வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
ஆனால் சதாசர்வ நேரமும் அவனது மண்டைக்குள் விடாமல் மிதித்தது அது. யானையின் காலில் மிதிபடும் மெல்லிய பூவைப்போல அவனது மூளை அந்த ரகசியத்தின் காலில் மிதிபட்டது.யாரிடமாவது சொன்னாலும், சொல்லாவிட்டாலும் கபாலம் வெடித்துச் சிதறிவிடும் என்று யாரோ சாபமிட்டுவிட்டதாய் உள்ளுக்குள்ளேயே அலறினான். மனைவி, குழந்தையிடம் கூட இயல்பாய் இருக்க முடியாமல் திணறினான்.
அதற்குப்பிறகு அவரை “நைனா” என்று ழைக்கவே அவனால் முடியவில்லை.இந்த மூன்றாண்டுகளில் ஒருமுறை கூட அவரை நைனா என்று அழைக்கவில்லையே என்று நினைத்ததும் மனசு கனத்தது.
இதோ மரணப் போராட்டத்தைக் கூட மறைத்துக்கொண்டு, வலியையெல்லாம் விழுங்கி விட்டு, முடிந்தவரை அவனை கண்களால் விழுங்கியபடி, தீராத பசி கொண்டவன் ஒரு யுகாந்திரத்துக்குத் தேவையானதையெல்லாம் ஒரே நேரத்தில் விழுங்கத் துடிப்பதைப் போல அவனையே பார்க்கும் அவரிடம் எப்படி மறைப்பது? அல்லது எப்படிச் சொல்வது?
அவனது தவிப்பைப் பார்த்தவர் லேசாக புன்னகைக்க முயன்றார்.அவரால் முடியவில்லை.
“இன்னா நைனா?” என்றார் முனகலோடு. அந்த நைனாவில் பேரண்டங்களுக்கெல்லாம் பகிர்ந்தாலும் தீராத பாசம் வழிந்தது.
அதற்கு மேல் அவனால் அடக்க முடியவில்லை.கடலுக்கடியிலிருந்து கிளம்பும் ஆழிப்பேரலையின் கொந்தளிப்போடு குலுங்கியது அவன் உடல்.
அவன் அழட்டும் என்று நினைத்த அவனது மனைவி சாந்தி, வினோதினியை இழுத்துக்கொண்டு வெளியே போனாள்.
“என்னால சொல்லாம இருக்க முடியல... இப்பவாவது சொல்லலனா... நானு செத்தப் பொணமா ஆயிடுவேங்...” என்று திணறினான்.
என்ன என்பதைப்போல அவனை உற்றுப் பார்த்தார் அவர்.
“நானு... உனுக்குப் பொறந்த புள்ள இல்ல” என்று திக்கித்திக்கிச் சொன்னான்.
அதைக் கேட்டதும் அவனை ஆழமாகப் பார்த்தார் மணி.அவரின் கன்கள் அவன் கண்களுக்குள் ஊடுருவி நிலைத்து நின்றன. பின் மெல்ல அசைந்தன.
“நீ பொறந்ததுமே அது எனுக்குத் தெரியும்” என்றார் சலனமில்லாமல்.
அவ்வளவுதான்.இத்தனை விழட்டுமா அழட்டுமா என்று தலைக்கு மேல் இடித்துக்கொண்டிருந்த இடி அப்போது நேராய் அவன் மண்டைக்குள்ளே இறங்கியது.
தெரிந்த பின்னும் என்னைத் தோளில் சுமக்க எப்படி முடிந்தது?இத்தனைப் பேரன்பைப் பொழிய அவரால் எப்படி முடிந்தது?
அவனுக்குள் அடைக்கப்பட்டிருந்த ஒரு ஊற்று திடீரென பீறிட்டுக்கொண்டு கிளம்பியது.
தொபீரென்று அவர் காலில் விழுந்து, பாதங்களைப் பற்றிக் கொண்டு “நைனா” என்றுக் கதறத் தொடங்கினான்.
 
 
Related News
  
 

உங்கள் பெயர் *
  தமிழில் தட்டச்சு செய்ய
உங்கள் கருத்துக்கள் *
மின்னஞ்சல் முகவரி *

 

Comments
 
 
 
Head Image
முகப்பு கவிதை சிறுகதை கட்டுரை மதிப்புரை தொடர்புக்கு

 Copyright  2009 All Rights Reserved by  www.internationaltamilology.com

Designed and Hosted by Info World